இமையத்தைக் காணுதல் – சுபஸ்ரீ

2017_0910_16325300

அன்புநிறை ஜெ,

மீண்டும் இமையம் சென்று வந்தேன் – இம்முறை நண்பர் கணேஷும் உடன்வந்தார். சென்றமுறை இமாசலப் பிரதேசம். இம்முறை உத்தராகண்ட்.

பெங்களூரிலிருந்து விமானப் பயணமாக தெஹராதூன் சென்று, ரிஷிகேஷ் அடைந்தோம்.

முதல் முறையாக கங்கையின் தரிசனம். அந்தி வேளையில் வான் நிகழ்த்தும் மகாதீப ஆராதனைக்கு முன் சிற்சில தீபங்கள் கங்கையில் மிதந்து சென்றன. மிகப் பெரிய குடும்பத்தின் மூத்த அன்னையென கங்கை. அவளது கரையில், அவளது மடியில், அவளை சாட்சியாக்கி, கடந்து, கரைந்து, கரைத்து, ஆசி பெற்று, கசடுகள் களைந்து, ஏதேதோ நடந்து கொண்டிருக்க, அந்தி மஞ்சள் பூசி அனைத்தையும் ஏந்திச் சென்று கொண்டே இருக்கிறாள். அவளது அருகில் அமர்ந்தது பல யுகங்களைத் தீண்டிய உணர்வு.

மறுநாள் காலை ரிஷிகேசத்திலிருந்து கிளம்பி ‘சாரி’ எனும் கிராமம் நோக்கி காரில் பயணமானோம். வழியெங்கும் மலையை வெட்டி எடுத்து சாலை அகலப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. உருண்டு விழும் பெரும் கற்களை அகற்றிய பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதுபோல ஆறேழு இடங்களில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நிற்க நேர்ந்தது. இத்தகைய இடங்களில் நடக்கும் பணிகள் ஒரு தேசத்தைக் கட்டுவதைக் கண்முன் காண்பது போன்ற பெருமிதத்தை ஏற்படுத்துகின்றன.

ரிஷிகேசத்திலிருந்தே பிரயாகை நூலில் துருபதன் சென்ற வழியில் பயணம். மிக ஆழத்தில் பாகீரதி, அலகநந்தையை சந்தித்து கங்கையாய் கடக்கும் தேவபிரயாகை. ஆர்ப்பரிக்கும் பாகீரதியும், அமைதியாய் நடை சேரும் அலகநந்தையும் ரகுநாதன் ஆலயமும், பிரயாகை அத்தியாயங்களை கண் முன் கொணர்ந்தது. துருபதன் எழுப்பும் பெருநெருப்பு நினைவில் வந்தது. கங்கையும் புனலுருவ அனல்தானே. கனற்கண்ணனின் சிரமணைந்தெழும் வேகவதி. சிவமென உறைந்திருக்கும் பனிக்குள் முதற்சலனம் தீயென உருகிவரத்தொடங்கிய பெருக்கு.

20180326_065411

அங்கிருந்து அலகநந்தை கரையோரமாகவே பயணம் தொடர்ந்தது. ருத்ரபிரயாகையில் மந்தாகினி வந்திணைகிறாள். இரண்டாவது சங்கமம். பாதை மந்தாகினியின் பாதையைத் தொடர்ந்தது. பத்ரிநாத் கேதார்நாத்கான பாதைகள் பிரியுமிடத்தில் கருமேகங்கள் சூழத் தொடங்கின. ஒரு புழுதிப் புயல் சுழன்று கடந்து சென்றது. பின்மதிய ஒளி சட்டென்று மறைந்து, சூழ எங்கும் அந்திக் கருக்கலின் கரிய நிறம் கொண்டது. வானில் கிளை விரித்தெழுந்தது பெருமின்னல். சடசடவென மழை காற்றோடு வீசத் தொடங்கியது. பெருமழை தொடங்கிவிட்டால் மலையேற்றம் தடைப்படுமோ என்று தோன்றியது.

அப்போது சட்டென்று வானில் ஒரு திரை விலகியது போல சிறு சாளரம் ஒன்றின் வழியாக வெள்ளிச் சிகரம் வானில் அந்தரத்தில் தெரிந்தது. அது மேகமா பனிமுகடா என்று மனம் திகைத்த வேலையில் உடன் வந்த வழிகாட்டி அது கேதார் சிகரம் என்றார். இருள் மேகங்களுக்கு இடையில் கதிர் அந்த மலையுச்சியில் ஒளிபாய்ச்ச வெள்ளி பொன்னான ரசவாதம் நிகழ்ந்தது. பேரமைதியன்றி வேறெவ்வகையிலும் அதை எதிர்கொள்ள முடியவில்லை.

அதன் பிறகு உயரம் பெற்று மேலே மேலே பாதை ஏறிச் சென்று மாலை ஐந்தரை மணியளவில் ‘சாரி’ சென்றடைந்தோம். சில வீடுகளே உள்ள அழகிய மலை சிற்றூர். அங்கிருந்து தொடங்கியது மூன்று நாள் மலைநடைப் பயணம். சாரியில் இருந்து ‘தேவரியா தால்’ எனும் கான் குளத்தருகே வரை 3 கி.மீ மலையேற்றப் பயணம். தூரம் அதிகமில்லை எனினும் துரிதமாக நிகழ்ந்த உயர ஏற்றம் பழகுவதற்கு சற்று நேரம் பிடித்தது. ‘தேவரியா தால்’ – யக்ஷ குளத்தில் நீரருந்தி உயிரிழக்கும் பாண்டவ இளையோரை யுதிஷ்டிரர் யக்ஷனுக்கு பதிலிறுத்து உயிர்ப்பித்த குளம் அது என்பது அப்பகுதியின் தொன்மம். இதுவல்ல, அது கந்தக நீர் நிறைந்து நாரைகளால் சூழப்பட்ட குளம் என்றே மனம் நம்புகிறது. மறுநாள் காலையில் ‘பகா’ என்று குரலெழுப்பிய கான் பறவையொன்று இதுவே அவ்விடம் என்று சொல்லிச் சென்றது.

குளக்கரை சென்று சேர மாலை ஏழரை மணி. முற்றிருள், மூன்றாவது கண் போல நெற்றியில் சுடர்ந்த சிறு விளக்கின் ஒளியில் அந்தக் குளக்கரையை சென்றடைந்தோம். விண்மீன்கள் மற்றும் ஒன்பதாம் நாள் நிலவின் ஒளியில் நீர்ப்படலம் மிக மங்கலாகப் புலனாகியது. சுற்றிலும் முழுமையான இருளுள் கூடாரங்கள் புலனாகி வந்தன. ஆறு டிகிரிக்குக் கீழே இறங்கியது குளிர். நாம் மேலே நோக்காத போது இன்னும் இறங்கி வந்து வானம் தன் பல்லாயிரம் ஒளிக்கண்களால் குனிந்து நோக்குவது போன்ற ஒரு உளச்சித்திரம் தோன்றியது. காதுகள் அமைதியை செவிக்கொள்ள பழகின. பிறகு கானகத்தின் பிற ஒலிகள் துலங்கின. இரவில் காட்டு விலங்குகள் நரிகள், கரடிகள் உலவக் கூடிய இடம், இயற்கை அழைப்புகளுக்குச் செல்லும் போது கவனம் தேவை என்று அறிவுறுத்தினர். இருள் குளிரால் மேலுமிருகி தழுவிக் கொண்டது.

அதிகாலை ஐந்து மணியளவில் கூடாரம் விட்டு வெளியே வந்தேன். குளத்து நீரும் பனிச்சிகரங்களும் எங்கிருந்தென்று அறியவியலாத ஒளி கொள்ளத் தொடங்கின. ஒரு உயரமான நோக்கு கோபுரத்திலேறி அப்பகுதி முழுமையையும் நோக்க, கார்வால் தொடரின் சிகரங்கள் அனைத்தும் விழிக்குப் புலனாகின. கேதார், மந்தா, சௌகும்பா என அனைத்துப் பனிச்சிகரங்களும் கூர் மின்னத் தொடங்கின. பல முறை நீங்கள் எழுதிய அத்தருணம், கண் முன் நீல மலரிதழ்கள் ஒளி மிகத் தொடங்கின. அணுகமுடியாமையின் பேரழகு.

20180327_093845

14 கி.மீ கானகப் பாதையில் அன்று நடை பயணம். சில மலைகளை ஏறியும் இறங்கியும் சுற்றியும் ஊசியிலை மரங்கள், மலர்வனங்கள், அடர் காடுகள் ஊடாக நடை தொடர்ந்தது. கரடிகளும், பனிச்சிறுத்தையும், காட்டுப் பன்றியும் வாழும் காடு என்றார் வழிகாட்டி. கானக் கிடைத்தது பலவகைப் பறவைகளும் பட்டாம்பூச்சிகளுமே. இடையில் பனியுருகி வழிந்தோடும் கானோடையில் கால் நனைக்க நீருள் வாழும் தீ சுட்டது.

மலைமுடி அமைதி என்பது அணுகமுடியாமையின் சிவனது உறைநிலை. சலனமோ சக்தியின் மண்ணிறங்கி வரும் கருணை. குழந்தைகளோடு மழலை பிதற்றும் அன்னையின் கருணையோடு சிகரங்கள் விட் டிறங்கி சலசலத்து நடக்கிறாள் கங்கை அன்னை. ஆனால் அவளது ஒவ்வொரு அணுவிலும் அவனது தீ ஒளிந்திருக்கிறது.

மாலை இருள் தொடங்கும் முன் ‘சோப்டா’ என்ற இடத்தை அடைந்து இரவு முகாமிட்டோம். டென்சிங் எனும் பௌத்தர் ஒருவர் ஒவ்வொரு வேளையும் சூடான உணவு செய்து எங்களுக்காகக் காத்திருந்தார். நெடும் பயணத்துக்குப் பின் வரும் உணவு அமுதம். அதுவும் உறைபனியில் கிடைத்த சூடான உணவு பிரம்மமே!

அடுத்த நாள் துங்கநாத்-சந்திரஷீலா மலையேற்றம். பஞ்ச் கேதார் தலங்களுள் ஒன்றான துங்கநாத் உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த சிவாலயம். கோவிலுக்கு மேலே ஒரு கி.மீ தொலைவில் சந்திரஷீலா (சந்திரசைலமாக இருக்கலாம்) சிகரம் பனி சூடி நின்றது.

அதிகாலை நான்கு மணிக்கு மலையேற்றம் தொடங்கியது. கடும்குளிர். புலரியின் முதலொளியை மலை மீது காணும் எண்ணம். கற்களால் நிரவப்பட்ட சீரானபாதை. இருளில் சூழல் எதுவும் தெரியவில்லை.நெற்றியில் அணிந்த விளக்கொளி அர்ஜுனன் குறியென கால் எடுத்து வைக்க வேண்டிய அடுத்த அடியின் ஒரு சிறு வட்டத்தை மட்டுமே காட்டியது. அதனால்தான் அந்தப் பயணம் சாத்தியமாகியது. அந்தந்த வினாடி ஆச்சரியங்களால் ஆன வாழ்வு போல ஏறிக் கடக்க வேண்டிய தொலைவு விழிக்குப் புலனாகாத காரணத்தால் மனம் அந்தந்த அடியை மட்டுமே நோக்கியது.
சிந்தனைகள் ஏதுமில்லாத ஒரு நிலை, மலையேற்றம்.

ஒரு மணி நேரம் ஏறிய பின்னர் பாதையோரங்களில் பனி செறிந்திருந்தது. பனியின் நீல ஒளியில் சூழ்ந்திருந்த சிகரங்கள் வானிலிருந்து பிரிந்து உருவாகி வந்தன. கேதார் சிகர முடி முதலொளியைத் தனதாக்கிக் கொண்டது. அடுத்தடுத்து மந்தா, சௌகும்பா சிகரங்கள் சூரியத் திலகம் இட்டுக் கொண்டன. ஏழு மணியளவில் துங்கநாத் கோவில் அருகில் வந்தோம். கோவில் நடை சாத்தியிருந்தது. ஏப்ரல் பின்பகுதியில்தான கோடைகாலத்துக்குத் திறக்கப்படும்.

கோவிலின் பின்புறம் பனியினூடாக பாதை மலையேறியது. குஜராத்திலிருந்து வந்திருந்த ஒருவர் எதிரில் வந்தார். “மேலே போக முடியாது, முற்றிலும் பனி, துணிவிருந்தால் செல்லுங்கள், நான் போகவில்லை” என்றார். உள்ளுக்குள் ஒளிந்திருந்த அச்சம் அவருருவில் வந்து சொன்னது போலிருந்தது. துங்கநாத்தோடுதிரும்பிவிடலாமா என்றொரு சஞ்சலம். ஆனால் ஏதோ ஒன்று தொடர்ந்து செல்ல உந்தியது.

புதிதாகப் பனி விழுந்து மலையை முக்காற் பங்கு மூடியிருக்க, காய்ந்த சிறு சிறு செடிகளின் நுனிகள் மற்றும் பாறை முகங்கள் ஆங்காங்கே தெரிந்தன. பனி மணற்பருக்களாக இருந்த இடங்களில் காலூன்ற முடிந்தது. உருகத் தொடங்கிவிட்ட பனியில் பாதம் வைத்தால் கால் வழுக்கி விழச் செய்தது. பலமுறை தடுக்கியும், சறுக்கியும், ஒவ்வொரு முறையும் இத்துடன் போதும் திரும்பிவிடலாம் என இதயம் படபடத்தது. ஒரு புறம் கீழ் நோக்கி சரியும் மலைச் சரிவு. மறு புறம் தலைக்கு மேல் உயர்ந்து நிற்கும் சிகரமுடி. இறங்குவதும் அதைவிட அபாயகரமானதக் தோன்றியது. இயலாமையின் ஒவ்வொரு கணத்திலும் தோல்விக்கு ஒப்புக் கொள்ள மறுக்கும் மனதின் போராட்டம் கண்ணீராய் வழிந்தது. உடன்வந்த வழிகாட்டி ஏதோ உடல் உபாதையென எண்ணிப் பதைத்தார். உள்ளே நிகழும் போராட்டத்தை ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத்து உரைப்பேன்!

அப்போது வழியில், பனிமனிதர்கள் போல பல குளிராடைகள் அணிந்து சென்று கொண்டிருந்த பலரது மத்தியில், மிகச் சாதாரண காலணி அணிந்து, இந்திய பருத்தி ஆடை அணிந்த இளம் வெளிநாட்டுத் தம்பதியர் எதிரில் வந்தனர். “ஏறிச் செல்லுங்கள், தவறவிடக்கூடாத பேரழகு மலையுச்சியில் காத்திருக்கிறது” என்று கூறிச் சென்றனர். அதன் பிறகு திரும்பிப் பார்க்கவில்லை. ஒரு மணி நேரம் ஒவ்வொரு அடியையும் கணித்து வைத்து மலைமுடியை சென்றடைந்தோம் – 4000 மீ/13000 அடி.

உச்சியில் கங்கையின் சிறு ஆலயம். அம்மலைமுடி சந்திரனுடையதெனத் தொன்மம். துங்கநாத் அமர்ந்த சிவத்தின் தலையில் எழும் நிலவும் கங்கையும். கண்முன் தெரிந்த அம்மலையே சிவம், இமையமே சிவம். விரிசடை முழுவதும் இமையத்து மலைகள். அன்றாடம் நிலவெழும் முகடுகள், குன்றாத குளிர்நீரெழும் சடைமுடித் தலையன். ஆங்காங்கே நெருப்புமிழும் கந்தக நீரூற்றுகள் அவனது மூன்றாவது கண். கண்களிலிருந்து வழிந்த நீர் பனியில் வெயில் படர்ந்தெழும் கூச்சத்தினால் மட்டுமல்ல.

சந்திரசைல உச்சியிலிருந்து நந்தாதேவி, சிவலிங், மற்றும் ஹாத்திகோடா சிகரங்கள் மறுபுறம் தெரிந்தன. இடையில் பல பள்ளத்தாக்குகளை பால் கிண்ணமென நிறைத்திருந்ததன மேகங்கள்.

வழுக்கியும் சறுக்கியும் துங்கநாத் வந்து சேர்ந்து ஆலயத்தில் அமர்நதோம். கூம்பென உயர்ந்த பழமையான கல் கோபுரம். வெயில் ஏறிவிட பனியில் கண் கூசியது. மூன்று நாள் தொடர் நடையின் விளைவாக மலை இறங்குவது சற்றுத் தாமதப்பட்டது. இடையில் ஓரிடத்தில் அமர்ந்து நீரருந்தத் தலை நிமிர்கையில், சௌகும்பா சிகரத்தில் காற்றும் மேகமும் நிகழ்த்திய ஒளி விளையாட்டில் சிகரம், சற்றே தலை திருப்பிய நந்தி போல முகம் காட்டியது. மேலும் சற்று நேரம் மௌனமாகக் கடந்தது. மேகம் வேகமாக உருமாறிக் கடந்து சென்றது.

மறுநிமிடம் அதே சிகரம் இரு கைகளையும் இரு புறம் தூக்கிய சிவ தரிசனம் போல ஒரு கணம், தோன்றியது; பின் உருமாறியது. இயற்கையாக நிகழ்ந்தவற்றின் தற்செயல் நிகழ்தகவுகளில் ஒன்றாக இருக்கலாம், மனித இருப்பே அத்தகைய ஒரு நிகழ்தகவுதானே!!

மண்ணிறங்கியதும் வீடு திரும்பியதும் எழுதும் அளவுக்கு பெரிய நிகழ்வுகளில்லை.

உன்னைப் போக வேண்டாமென்று யார் தடுத்தார்கள், அதற்கு சிங்கப்பூரில் இருப்பது ஒரு தடையல்ல என்று முதல் சந்திப்பில் கூறினீர்கள். ஆம், அன்றிலிருந்து எதுவுமே தடையாயில்லை.

மிக்க அன்புடன்,
சுபஸ்ரீ

கம்போடியா- நிறைவுப்பகுதி, சுபஸ்ரீ

கம்போடியா- சியாம் ரீப்,மற்றும்… சுபஸ்ரீ

கம்போடியா: அங்கோர் தாம், பிற கோவில்கள்-சுபஸ்ரீ

அசோகமித்திரனின் இருநாவல்கள்- சுபஸ்ரீ

கம்போடியா- பாயோன் – சுபஸ்ரீ

கம்போடியா – ஒரு கடிதம், சுபஸ்ரீ

வனக்காட்சி – சுபஸ்ரீ

ஊட்டி – சுபஸ்ரீ

மின்னல் மலர்த்திடும் தாழை

பதினேழாம் நூற்றாண்டின் இந்தியா

முந்தைய கட்டுரைபாட்டும் தொகையும் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபதிப்புரிமையும் ராஜாவும்