எண்பதுகளில் இலங்கைத் தமிழிலக்கியத்தில் சட்டென்று கவனம் பெற்ற இருவர் ரஞ்சகுமார், சட்டநாதன். இருவருமே தீவிரத்துடன் தொடர்ந்து எழுதமுடியவில்லை. இலக்கியவாசிப்பு விவாதத்துக்கான சூழல் அன்றிருக்கவில்லை. தனிவாழ்க்கையிலும் அவர்களுக்கு அலைக்கழிப்புக்கள்
சட்டநாதனின் கதைகள் வண்ணதாசனின் உலகுக்குரிய நுண்ணிய உறவுச்சிக்கல்களைப் பேசுபவை. உணர்வுசார்ந்தவை, ஆனால் மிகை அற்றவை
சட்டநாதனைப்பற்றி ஜிஃப்ரி ஹசன் எழுதிய நல்ல கட்டுரை. பிரான்ஸிலிருந்து வெளிவரும் நடு என்னும் இணைய இதழில்
சட்டநாதன் சிறுகதைகள்-கட்டுரை-ஜிஃப்ரி ஹாஸன்
அவரது காலம் தேசிய இனப்பிரச்சினை எழுச்சியடைந்த காலம். இலக்கியம் அதன் பிரதிநிதியாக மாறிய காலம். இதனால் சட்டநாதன் அதன் பிரதிநிதியாக மாறினார். ஆனால் முழுமையாக அவர் அந்தத் தளத்திலேயே இயங்கிக்கொண்டு போகவுமில்லை. மானுட உறவுகள், ஆண்-பெண் உறவுகளில் காணப்படும் அசமநிலை மற்றும் அதற்கெதிரான குரல், போரினுள் அகப்பட்டு மடியும் மானுடத் துயர் என பல நிலைகளில் வெளிப்படும் கதைகளை அவர் எழுதினார்.