அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெ. வணக்கம்.
நலமாயிருக்கிறீர்களா? நாடோடி மன்னன் படத்தை 3 மணி நேரத்துக்கு மேல் பொறுமையாக எப்படி உட்கார்ந்து ரசித்தேன் என்று எழுதியிருந்த கட்டுரையை மிகவும் ரசித்தேன். எம்.ஜி.ஆரின் அழகும், அந்தச் சிரிப்பும் கொள்ளை போகும். அவரின் இயல்பே அ லட்டிக் கொள்ளாத நடிப்புதான். நடிப்பு மாதிரியே தெரியாத நடிப்பு அது. அதைத்தான் அவர் கடைசிவரை செய்து கொண்டிருந்தார். அது தமி்ழ் மக்களிடம் எடுபட்டது. கலர்ப்படங்களி்ல் அவர் பண்ணிய கொனஷ்டைகளும், அசட்டுத்தனமும் பார்க்க சகிக்காது. கருப்பு வெள்ளைப் படங்களோடு ஓய்ந்தது அவர் பற்றிய ரசனை. எங்க வீட்டுப் பிள்ளை படத்திலேயே அந்த பயந்த எம்.ஜி.ஆர் வேஷத்தை ரொம்பவும் சிறுபிள்ளைத்தனமாகச் செய்திருப்பார். அதுதானே லட்சணம் என்பார்கள் அவர் ரசிகர்கள். அவர் எது செய்தாலும் எடுபட்டது…அல்லது கண்களை மூடி ரசித்தார்கள் என்பதுதான் உண்மை. கிடக்கட்டும். போதும் ஆராய்ச்சி.
இலக்கியவேல் என்றொரு மாத இதழ் கடந்த நான்காண்டு காலமாக வந்து கொண்டிருக்கிறது. ஐந்தாவது ஆண்டில் இப்போது அடியெடுத்து வைத்திருக்கிறது. திரு சந்தர் சுப்ரமணியன் என்பவர் அதனை நடத்தி வருகிறார். தரமான இதழ். இதுபற்றி நீங்கள் அறிவீர்களா என்றொரு சந்தேகம். அதனால் தங்களுக்கு அறிமுகப்படுத்தும் நிமித்தம் இதனை எழுதுகிறேன். அதில் நான் சில கதைகள் எழுதினேன். இப்போது கட்டுரைகள் எழுதலாம் என்று ஆரம்பித்திருக்கிறேன். எழுத்தாளர்களின் மொத்தத் தொகுப்பை எடுத்துக் கொண்டு அதில் ஒன்றிரண்டு கதைகளைப் பற்றி விரிவாகச் சொல்லி அந்தப் புத்தகத்தின் முக்கியத்துவத்தை இயம்புவது என்று ஆரம்பித்திருக்கிறேன். அதன் ஆசிரியர்தான் யோசனை சொன்னார். மார்ச் இதழில் இ.பா. அவர்களின் தொகுதி பற்றிச் சொல்லி ஒரு கதைபற்றியும் விளக்கி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். உங்களின் மே லான பார்வைக்காக. உங்கள் அபிப்பிராயம் தெரிந்தால் இதழை ஆசிரியரிடம் சொல்லி அனுப்பி வைக்கச் சொல்லலாம் என்ற ஆவல். நீங்கள் படிப்பதும் ரெண்டு வரி அதுபற்றிச் சொல்வதும் அந்த இதழுக்குப் பெருமையாக அமையும்.
நன்றி.
உஷாதீபன்