அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். இந்த கடிதத்தை எழுதுவதற்கு இரண்டு நோக்கங்கள்.
- உங்களைபல சந்திப்புகளில் பார்த்திருந்தும் உங்களிடம் என்னை சரியாக அறிமுகம் செய்துகொண்டதில்லை பொது சந்திப்புகளில் நான் பேசுவதற்கு தயங்குபவன்.
- என்திரையுலக பயணத்தின் ஆரம்பத்தில் இருக்கிறேன். நான் தயாரித்து-இயக்கிய குறும்படம்”தொப்பி” பற்றியும் உங்களிடம் சொல்ல நினைத்தேன்.
பன்னிரண்டு வருடங்கள் finance consulting company ஒன்றில் வேலை செய்துவிட்டு போன வருடம் வெளியே வந்தேன். கடந்த ஒரு வருடமாக independent filmmaker / travel photographer ஆக ஜீவித்து கொண்டிருக்கிறேன். என்னை மிகவும் பாதித்த, என் சிந்தனையில் பெரும் செல்வாக்கை செலுத்திய எழுத்துக்கள், உங்களுடையவை. தமிழ் இலக்கியத்தினுள் நான் முப்பது வயதில் தான் நுழைந்தேன், ஏழாம் உலகம் வழியாக. ஏறத்தாழ அதே சமயத்தில் தான் தமிழில் படிக்க ஆரம்பித்திருந்தேன். இந்த ஏழு வருடங்களாக உங்களுடைய தீவிர வாசகனாக இருந்திருக்கிறேன். வெண்முரசை மெதுவாக (சற்று பிந்தியே) வாசித்து வருகிறேன். மாமலரில் இப்பொழுது. புனைவுகளுக்கு அப்பால், உங்களின் அரசியல் நோக்கு, வரலாறு/மதம் பற்றிய கட்டுரைகள், மற்றும் பயணக்கட்டுரைகள் என்னை மிகவும் பாதித்திருக்கின்றன. உங்கள் எழுத்துக்கள் என் மேல் கொண்ட தாக்கம் ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் உங்களிடம் ஒரு soul-godfather தன்மையை உணர்கிறேன். காரணங்கள் –
- நான் குழந்தையாக இருந்ததிலிருந்து மகாபாரதத்தின் மேல் ஒரு பெறும் ஈர்ப்பு இருந்திருக்கிறது. தொடர்ந்து அதன் ஆக்கங்களை படித்துக்கொண்டிருக்கும் பொழுதுதான் நீங்கள் வெண்முரசை அறிவித்தீர்கள். மகாபாரதத்தை அணுகும் முறையில், வெண்முரசு எனக்கு ஒரு மாபெறும் திறப்பை அளித்திருக்கிறது.
- சிற்றிளமையிலிருந்தே இந்தியாவில் பயணம் செய்து வருகிறேன். இன்நாட்டின் முனைகளில் பயணிப்பதை போல எனக்கு நிறைவளித்த அனுபவங்கள் இல்லை. என் பயண முறைகள் பற்றிய பெருமிதமும் என்னிடம் உண்டு. உங்கள் பயணக்கட்டுரைகள் மற்றும் இந்திய வரலாறு/மதம் பற்றிய எழுத்துக்கள், என்னை என் இந்தியப் பயணங்களை புதிய நோக்கில் பார்க்க வைத்திருக்கின்றன.
- இளமையிலிருந்து என் மதம் பற்றிய குழப்பமும் புரிதலின்மையும் எனக்கு இருந்திருக்கிறது. கடவுள்வழிபாட்டை, இந்து மதத்தை, புரிந்து கொள்ளாமல் முற்றாக நிராகரித்தே பழகினேன். ஓர் அளவிற்கேனும் தெளிவை உங்கள் எழுத்துக்கள் எனக்கு கொடுத்திருக்கின்றன.
இந்த காரணங்களினால், உங்களின் எழுத்துக்களின் ஆறிமுகம் எனக்கு கிடைத்தது என் அடையாளத்தை நொக்கி நான் சென்றுகொண்டிருந்த பாதையில் ஒரு முக்கியமான நிகழ்வென்று தோன்றுகிறது. ஊழுக்கு என் வணக்கங்கள், நன்றிகள் – வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை.
சென்ற வருடம் Joseph Campbell-இன் Hero with a thousand faces படித்துக்கொண்டிருக்கும் பொழுது, அதில் அவர் குறிப்பிட்டிருந்த ஒரு ஆப்பிரிக்க பழங்குடி தொன்மம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த பழங்குடி மூலக்கதையை சற்று மாற்றி அமைத்து “தொப்பி” என்று ஒரு 14 நிமிட குறும்படத்தை எழுதி இயக்கினேன்.
அதில் நான் முன்வைக்கும் தரிசனம் (தரிசனம் என்று சொல்லக்கூடுமெனில்), உங்களை படிக்காமல் இருந்திருந்தால் எனக்கு கிடைத்திருக்காது.
உங்கள் வாசகன்,
விஜய்