சு.ராவும் நானும்

42790911_2276456832382190_5899855742537564160_n

அன்புள்ள ஜெ..

சாரு தனது பழுபபு நிறப் பக்கஙகள் நூலில் சமகால எழுத்தாளர்களை அறிமுகம் செய்வதில் முதன்மையானவராக உங்களை குறிப்பிடுகிறார்.. அது எனக்கு உடன்பாடுதான்..  ஆனால் அவரது இன்னொரு கருத்து எனக்கு பிடிபடவில்லை..

சுந்தர ராமசாமியின் வாரிசு என உங்களை குறிப்பிடுகிறார்…  அதை ஒரு பாராட்டாக அவர் குறிப்பிட்டாலும் என்னால் ஏற்க முடியவில்லை..  காரணம் உங்களுக்கும் சுராவுக்கும் எந்த பொதுமைப் பண்பையும் என்னால் காண முடியவில்லை..

எனக்கு உங்கள் எழுத்து அறிமுகமானது விஷ்ணுபுரத்தில் இருந்துதான்..  தற்செயலாக அந்த நூலை வாங்கினேன்..   வாங்கி வைப்போம் என்றாவது படிக்கலாம் என நினைத்தபடி பேருந்தில் லேசாக புரட்டினேன்..  இதை எப்படி இத்தனை நாள் படிக்க தவறினேன் என்ற எண்ணம் முதல் சில பக்கங்களிலேயே தோன்றியது…  அப்போது தொடர் விடுமுறை இருந்ததால் நான் ஸ்டாப்பாக ஒரே மூச்சில் படித்தேன்… அதுவும் (கூட்டமற்ற ) மாநகர பேருந்துகளில் பயணித்தபடியே படித்த நூல் அது.. படிப்பதற்காகவே வெவ்வேறு பேருந்துகளில் பயணித்தேன்..அந்த அளவுக்கு நான் படித்த உங்கள் முதல் நூலே என்னை ஈர்த்தது

..

இநத ஈர்ப்பு எனக்கு சுரா நூல்களில் கிடைத்தது இல்லை…  அவர் எழுத்துகள் பெரும்பானவற்றை படித்துள்ளேன்..  அவரது கடிதங்கள்.. அவர் நடத்தி வந்த இலக்கிய சந்திபபுகள் குறித்த பதிவுகள் என பலவற்றை படித்தாலும்கூட அவருககும் உங்களுக்கும் எநத பொதுமையும் எனக்கு தென்படவில்லை…உங்கள் நூல்கள் சிலவற்றில் அவர் குறித்து உயர்வாக எழுதியிருபபதை பார்த்த பின்புதான் அவருடானான உஙகள் உறவு எனக்கு தெரிந்தது

அவரது முதன்மை மாணவர் என்பதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் ?

அன்புடன்
பிச்சைக்காரன்

***

அன்புள்ள பிச்சைக்காரன்

இலக்கியவாசகன் இருவகை. முதல்வகை வாசகன் தன் சொந்தவாழ்க்கை சார்ந்து எழும் வினாக்களுக்காகவும், தன் சொந்த ரசனைக்காகவும் வாசிப்பவன். அவன் தன் தேடலை அந்தரங்கமாக முன்னெடுக்கலாம். அவனுக்கு எது நிறைவளிக்கிறதோ, மகிழ்வளிக்கிறதோ அதை ஏற்கலாம். அல்லாதவற்றைப் பொருட்படுத்தவும் தேவையில்லை. ஆனால் அத்தகைய வாசகன் கருத்துச் சொல்லும்போது தன் அறிதலையும் ரசனையையும் மட்டுமே முன்வைக்கவேண்டும்

இன்னொரு வகை வாசகன் இலக்கியத்தை ஓர் அறிவுக்களமாகக் கண்டு அதை முழுமையாக அறியமுயல்பவன். அவன் ஒட்டுமொத்தமாக இலக்கியத்தைப் பார்ப்பான். இலக்கியத்தின் எல்லா கூறுகளையும் புரிந்துகொள்ள முயல்வான். ஒவ்வொன்றுக்கும் அதனதன் இடத்தை அளிப்பான். இலக்கியம் ஓர் அறிவியக்கம், ஓர் ஆன்மிகச்செயல்பாடு, ஒரு கலைநிகழ்வு என்னும் வகையில் ஒவ்வொன்றும் முக்கியமானவையே என்றும் ஒன்று இன்னொன்றை நிறைவுபடுத்துகிறது என்றும் புரிந்துகொள்வான்

சுந்தர ராமசாமி சென்ற காலகட்டத்தைச் சேர்ந்த படைப்பாளி. சென்றகாலகட்டத்தை நாம் நவீனத்துவகாலம் என்கிறோம். அதன் இயல்புகள் சில உண்டு. சொல்லடக்கம், வடிவக்கச்சிதம், பூடகத்தன்மை ஆகியவை அந்தக் காலகட்ட இலக்கியத்தின் தன்மைகள். எந்நிலையிலும் மாறாத அறிவார்ந்த தன்மை, தர்க்கபூர்வத்தன்மை, தன்னுணர்வை எப்போதுமே படைப்பின் கடிவாளமாகக் கொள்ளுதல் ஆகியவை அக்காலகட்ட இலக்கியவாதியின் ஆளுமைகள்.

உலகமெங்கும் சுந்தர ராமசாமி போன்ற படைப்பாளிகள் உள்ளனர். மலையாளத்தில் ஓ.வி.விஜயன். கன்னடத்தில் யூ.ஆர்.அனந்தமூர்த்தி. இந்தியில் அக்யேயா [சச்சிதானந்த வாத்ஸ்யாயன்] போன்றவர்களை மிக அணுக்கமானவர்களாகச் சொல்லலாம். அவர்கள் அதற்கு முன்பிருந்த கற்பனாவாத காலகட்டத்தின் எதிர்நிலையாக எழுந்து வந்தவர்கள். அந்தக் கற்பனாவாதக் காலகட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து அதிலிருந்து விலகி வளர்ந்தவர்கள்.

முந்தைய கற்பனாவாதம் இரண்டு கூறுகள் கொண்டது, ஒன்று லட்சியவாதப் பார்வை. இரண்டு உணர்ச்சிகரமான வெளிப்பாடு. கற்பனாவாதம் உலகை மாற்றிவிடும் கனவுகளைக் கொண்டது. அந்தப்பெருங்கனவுகளை சமூகத்தில் நிலைநாட்ட இலக்கியத்தைக் கருவியாகப் பயன்படுத்தியது. அதன் வெளிப்பாட்டுமுறை பெருகியெழும் உணர்ச்சிகளால் ஆனது. அதற்குரிய கட்டற்ற மொழியை அது உருவாக்கிக் கொண்டது. நம் கற்பனாவாதக் காலகட்டம் பாரதியில் தொடங்குகிறது

அந்த இலட்சியங்கள், மிகையான உணர்ச்சிவெளிப்பாடுகள் ஆகியவற்றின் மீதான ஐயமும் விலக்கமுமே நவீனத்துவ எழுத்தின் இயல்புகள். இலட்சியவாதங்களை நடைமுறைநோக்கில் நின்று, வலுவான தர்க்கங்கள் வழியாக அது நிராகரித்தது. உணர்ச்சிகளை அது பிரக்ஞ்ஞையால் கட்டுப்படுத்தியது. எது புறவயமானதோ அதுவே உண்மை என நம்பியது. ஆகவே கனவுத்தன்மையை, நெகிழ்ச்சிகளை, பித்துநிலைகளை விலக்கியது. அறிவியலுக்கு மேலும் அணுக்கமாக மாறியது. எப்போதும் அதில் ஒரு ஆய்வுநோக்கும் எள்ளலும் இருந்தது.

கற்பனாவாதத்தில் இருந்த இடைவெளிகளை நவீனத்துவம் நிரப்பியது. சுந்தர ராமசாமி போன்ற ஓர் எழுத்தாளர் இந்திய –தமிழ் பின்புலத்தில் ஏன் முக்கியமானவர் என்று வரலாற்றுரீதியாகவே பார்க்கலாம். நமக்கு எல்லாமே மிகையுணர்ச்சிதான். யதார்த்தம் என்பதற்கே நம் வாழ்க்கையில் இடமில்லை. தொன்மங்களிலும் கனவுகளிலும் வாழ்பவர்கள் நாம். நம் அன்றாடவாழ்க்கையில் அரசியலில் கூட நமக்கு புறவயமான தர்க்கநோக்கு கிடையாது. அந்த மிகப்பெரிய இடைவெளியை சுட்டிக்காட்டி, அதை நிரப்ப முயன்ற அறிவியக்கம் நவீனத்துவம்

எல்லா துறைகளிலும் நவீனத்துவத்தின் பங்களிப்பு என்பது இதுதான். டி.ஆர்.நாகராஜ் நான் அவரை எடுத்த பேட்டியில் ஈ.வே.ரா அவர்கள் ஒரு நவீனத்துவர் என்கிறார். பகுத்தறிவு என அவர் சொன்னது தனிமனிதனின் தர்க்கபூர்வமான சிந்தனையைத்தான் என விளக்குகிறார். சுந்தர ராமசாமியின் நாவல்களும் கதைகளும் மண்ணில் நிற்கின்றன. எந்த மயக்கங்களும் நெகிழ்ச்சிகளும் இல்லாமல் வாழ்க்கையை பார்க்கின்றன. எல்லா வகையான மிகைக்கற்பனைகளையும் அவை இரக்கமில்லாமல் கிழித்துப்பார்க்கின்றன. நம் சிந்தனையை வடிவமைத்ததில் இம்முன்னோடிகளின் பங்கு மிகப்பெரியது.

சுந்தர ராமசாமியின் சிறுகதைகளில் பல மிகக்கச்சிதமாக உருவாக்கப்பட்ட நவீனத்துவ ஆக்கங்கள். அவற்றின் அழகியலை நாம் புரிந்துகொண்டால் அவர் அதில் ஒரு சாதனையாளர் என புரிந்துகொள்ளலாம். பிரசாதம்,தண்ணீர், வாழ்வும் வசந்தமும், ரத்னாபாயின் ஆங்கிலம், கோயில்காளையும் உழவுமாடும், லவ்வுல்லா, பல்லக்குத்தூக்கிகள், செங்கமலமும் ஒரு சோப்பும், திரைகள் ஆயிரம், வாசனை போன்ற கதைகளை வெவ்வேறுவகையில் தமிழ்நவீனத்துவத்தின் உச்ச சாதனைகள் என்று சொல்லலாம்

ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே.சிலகுறிப்புகள் என்னும் இருநாவல்களுமே இருவகைகளில் நவீனத்துவம் உருவாக்கிய மிகச்சிறந்த ஆக்கங்கள். ஒரு புளியமரத்தின் கதை சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் அறவியல் வீழ்ச்சியை உருவகமாகச் சொல்லும் படைப்பு. ஜே.ஜே.சிலகுறிப்புகள் நம் காலகட்டத்து அறிவியக்கத்தின் பல்வேறு நிலைமாற்றங்கள் மற்றும் பாவனைகளினூடாகச் செல்லும் ஓரு அங்கதப் பார்வை.

ஒருபடைப்பாளியாக அவர் முழுவீச்சில் இயங்கவில்லை என்றுதான் படுகிறது. குறைவாக எழுதவேண்டும் என்னும் அவருடைய எண்ணம் நல்லகதைகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டது. ஒப்புநோக்க நிறைய எழுதிய அழகிரிசாமி, ஜானகிராமன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் போன்றவர்கள் அவரைவிட கூடுதலான எண்ணிக்கையில் நல்ல கதைகளை எழுதியிருக்கிறார்கள். இலக்கியத்திற்குத் தேவை முழுமூச்சான தற்கொடை. எதையும் எண்ணாமல் பாய்ந்துவிடுதல். அவரிலிருந்த தர்க்கபூர்வப் பார்வை அதற்குத் தயங்கச் செய்தது. ஒரு விலக்கம் எப்போதும் இலக்கியத்துடன் அவருக்கு இருந்தது.

இன்னும் நிறைய எழுதியிருக்கலாம் என்று சுந்தர ராமசாமி குறித்து சொல்லலாம். ஆனால் எழுதிய நல்ல கதைகளின் அடிப்படையில் அவர் தமிழிலக்கியத்தின் ஒரு காலகட்டத்தின் பெரும்படைப்பாளி. அந்த இலக்கிய இயக்கத்தை பல்வேறுவகையில் முன்னெடுத்தவர் என்னும் முறையில் பேராளுமை.

நான் அவருடைய மாணவன் என்பதில் எனக்குப் பெருமையே. இலக்கியத்தின் அடிப்படைகளை அவரிடமிருந்தே கற்றுக்கொண்டேன். இலக்கியம் என்னும் அறிவியக்கம் மீதான நம்பிக்கையை அவரே எனக்கு அளித்தார். உலக இலக்கியத்தின் ஒரு பெரிய தோற்றத்தை அறிமுகம் செய்தார். தர்க்கபூர்வமாகச் சிந்திக்கும் பயிற்சியை அவருடைய உரையாடல்கள் வழியாக அடைந்தேன்

ஆனால் நான் அடுத்த காலகட்டத்தின் படைப்பாளி. நவீனத்துவம் முடிந்துகொண்டிருந்தபோது இலக்கியத்தில் நுழைந்தவன். அவரும் அவர் காலகட்டத்தினரும் கொண்டாடிய காஃப்காவோ காம்யூவோ என்னைக் கவரவில்லை. என் தேடல்கள் வேறுதிசையில் இருந்தன. அதாவது நவீனத்துவத்தின் எல்லைகளைக் கடக்க, அதன் இடைவெளிகளை நிரப்ப நான் முயன்றேன். உலகமெங்கும் எங்கள் தலைமுறையின் இயல்பு அதுவாக இருந்தது

நவீனத்துவம் ஆசிரியனை ஓர் உறுதியான ஆளுமையாக நிறுத்தி அவனிலிருந்து புனைவைத் தொடங்குகிறது. நான் ஆசிரியனை வரலாற்றுப்புலத்தில் வைத்து மேலும் விரித்தேன். எந்த ஒன்றுக்கும் நீண்ட காலவெளியில், பண்பாட்டுப்புலத்தில் என்ன பொருள் என்று பார்த்தேன். நவீனத்துவத்தில் இருந்த வரலாற்றுமறுப்புநோக்கு எனக்கு உடன்பாடானதாக இருக்கவில்லை. அதேசமயம் புறவயமான வரலாற்றை நான் எடுத்துக்கொள்ளவில்லை. ஆசிரியனின் ஆழுள்ளத்தை கட்டமைத்துள்ள அகவய வரலாற்றை எழுத முயன்றேன். ஆகவே தொன்மங்களை, ஆழ்படிமங்களைத் தேடிச்சென்றேன்.

நவீனத்துவம் எல்லாநிலையிலும் தர்க்கத்தையும் தன்னுணர்வையும் தக்கவைத்துக்கொண்டது. அது உன்னதங்களை [sublime] தன்னெழுச்சியான கவித்துவத்தை அடையமுடியாமல் தடுக்கிறது என்பது என் எண்ணம். கச்சிதமான வடிவமும் கட்டுப்படுத்தப்பட்ட மொழியும் உண்மையில் தர்க்கத்தின், விழிப்புள்ளத்தின் வெளிப்பாடுகள். இலக்கியத்தில் வெளிப்படவேண்டியது ஆழுள்ளம்தான். மொழியினூடாகக் காணும் கனவே இலக்கியம். இது என் காலகட்டத்தின் நம்பிக்கையாக இருந்தது.

ஆகவே நான் சுந்தர ராமசாமியிலிருந்து விலகிச்சென்றேன். விஷ்ணுபுரம் ஒரு அகவய வரலாற்றை உருவாக்கி அதில்வைத்து அனைத்தையும் அணுகுகிறது. கட்டற்ற மொழிப்பாய்ச்சல் கொண்டுள்ளது. படிமங்கள், ஆழ்படிமங்கள், தொன்மங்கள் வழியாகச் செயல்படுகிறது.  கச்சிதமான வடிவத்துக்கு மாறாக ஒன்றுக்குள் ஒன்றுக்குள் சுழலும் கதைகளின் வடிவைக் கொண்டிருக்கிறது. நவீனத்துவத்தில் எப்போதுமே மரபு எதிர்ப்பு இருந்தது. என் எழுத்து மரபை அறிய, மறுவரையறைசெய்ய முயல்கிறது

இது முற்றிலும் மாறான எழுத்து. அடுத்தகட்ட எழுத்து. இலக்கியம் இப்படித்தான் செயல்பட முடியும். அவரிடமிருந்து நான் எழுந்தேன். ஆகவே அவருடைய மாணவன். ஆனால் அவருடைய நீட்சி அல்ல, அவருக்கான மறுப்பு நான். என் வாசகனுக்கு அவருடைய எழுத்து கட்டுப்பாடான, செய்யப்பட்ட , செயற்கைப்பூடகம் கொண்ட எழுத்தாகத் தோன்றலாம். அவர்காலகட்டத்தில் உள்ளம் நின்றிருப்பவர்களுக்கு என் எழுத்து கட்டற்றதாக, விரிந்து பரந்து நிகர்வரலாறாகவே மாறுவதாகத் தோன்றலாம். அவர்கள் என் எழுத்தை சுருக்கவேண்டும் என்று சொல்வார்கள்

இருவகையான எழுத்துக்கள். இரண்டும் ஒன்றை ஒன்று நிரப்புகின்றன. இரண்டும் ஆற்றும்பணிகள் வேறு. நாளை இன்னொரு நோக்கு எழுந்து வரக்கூடும். இத்தகைய வெவ்வேறு எழுத்துமுறைகள், இலக்கியநோக்குகள் ஒன்றாகச் சேர்ந்த பெருவெளியே இலக்கியம் எனப்படுகிறது.

ஜெ

முந்தைய கட்டுரைஉற்சாகமான பார்வையாளன்-(லண்டனில் சிலுவைராஜ்)-பிரபு மயிலாடுதுறை
அடுத்த கட்டுரைபக்ஷிராஜன்