‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-67

bowகளத்தில் பீமசேனர் வெறிகொண்டு போரிட்டுக்கொண்டிருந்தார். கௌரவர்கள் அன்றேனும் அவரை வீழ்த்திவிட வேண்டுமென்று முடிவு கொண்டவர்கள்போல் பெரும் சீற்றத்துடன் போர்புரிந்தனர். தேரில் அம்புகளைத் தொடுத்தபடி விரைந்து சென்று, அவ்விரைவழியாமலேயே கழையூன்றி எழுந்து சென்று தேர்களை கதையால் அறைந்து சிதறடித்து, புரவிகளை வீழ்த்தி, நிலத்தமைந்து கதை சுழற்றி தனிப்போரில் சுழன்றறைந்து துள்ளி மீண்டும் தேருக்கு மீண்டு பீமசேனர் போரிட்டார். அவர் மீளுமிடத்திற்கு விசோகன் முன்னரே தேருடன் சென்று நின்றிருந்தான். தேரும் பீமசேனரும் இரு வண்டுகள் வானில் சுழன்று விளையாடுவதுபோல களத்தில் நின்றிருந்தனர்.

அந்தப் போரில் அன்று போருக்கெழுந்ததுபோல பீமசேனர் விசைகொண்டிருந்தார். ஒவ்வொருநாளும் போருக்குப்பின் எழும் பெரும்சலிப்பிலிருந்தும் சோர்விலிருந்தும் சினத்தை திரட்டி அதை பெருக்கி மறுநாள் மேலும் விசைகூட்டிக்கொள்வது அவர் வழக்கம் என்று விசோகன் அறிந்திருந்தான். கொல்பவர்கள் மேல் அவருக்கு தனிப்பட்ட சினமேதும் இல்லை என்று அவனுக்கு இரண்டாம்நாளே தெரிந்தது. ஏனென்றால் அவர் எவரையும் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. தன்னை ஒரு பொருட்டாக நினைக்காத உளநிலையின் நீட்சி அது. கௌரவர்கள்மீதுகூட அவருக்கு வஞ்சம் இல்லை என்றே அவனுக்கு தோன்றியது. அவருடைய வெறியாட்டும் நகைப்பும் எல்லாம் களத்தில் தன்னை வெறியூட்டிக்கொள்வதற்கான நடிப்புகளே. எவரும் ஒரு பொருட்டல்ல என்பதனால் எக்கொலையும் அவர் உள்ளெழுந்த சினத்தை அணைக்கவில்லை. சினம் உருமாறி கசப்பாக ஆகும்போது அந்திமுரசு உறுமத்தொடங்கும்.

பீமசேனர் களத்தில் காறி உமிழ்ந்தபடியே இருப்பதை அவன் முதல்நாள் முதல் நோக்கியிருந்தான். குருதித்துளிகள் வாயில்படுவதனால் பலரும் உமிழ்வதை அவன் கண்டிருந்தான். ஆனால் அவர் தொடர்ந்து தன் உடல்நீர் முழுமையையும் வெளியேற்றிவிடுபவர்போல, மிக எதிரில் மாறாமல் நின்றிருக்கும் எவரையோ சிறுமைசெய்பவர்போல உமிழ்ந்துகொண்டிருந்தார். போர் முடிந்த பின்னரும் உமிழ்ந்தார். அவன் அவரை தனிக்குடிலில் சென்று நோக்கியபோதும் நிலையழிந்து நடந்தபடி காறி உமிழ்ந்துகொண்டிருந்தார். உள்ளிருந்து எழும் கசப்பை எவரும் உமிழ்ந்து அகற்றிவிடமுடியாது என எண்ணிக்கொண்டான். அவரை அப்பால் நின்று நோக்கிக்கொண்டிருந்தபோது ஒவ்வாதது ஊட்டிவிடப்பட்ட பேருடல்கொண்ட குழவி என்று தோன்றி அவன் புன்னகைத்துக்கொண்டான்.

களத்தில் பீமசேனர் துரோணரை எதிர்கொண்டார். துரோணரின் அம்புகள் முன் அவரால் நிற்கமுடியாதென்று அறிந்திருந்த விசோகன் தேரை எப்போதும் அம்புகளின் முழுவிசையின் எல்லைக்கு அப்பால் நிறுத்தினான். பீமசேனரின் அம்புகளும் துரோணரை சென்றடையவில்லை. “செல்க! அணுகுக!” என்று பீமசேனர் கூவிக்கொண்டிருந்தார். பலமுறை காலால் அவனை உதைத்தார். துரோணர் வில்லேந்தியிருந்தமையால் கழையிலேறி கதையுடன் பாய்ந்து செல்லவில்லை. விசோகன் தேரை முன்செலுத்துவதுபோல ஒவ்வொருமுறையும் பக்கவாட்டில் வளைத்து கொண்டுசென்றான். எப்போதுமே அவன் கண்கள் அவருடைய அம்புகளின் எல்லையை அளந்துகொண்டே இருந்தன.

ஒரு கட்டத்தில் துரோணரின் தேர் முழுவீச்சுடன் எழுந்து முன்னால் வந்தது. சினம்கொண்ட யானைபோல காதுகள் விடைக்க தலைகுலுக்கி துதிசுழற்றி அது வருவதாக அவனுக்கு தோன்றியது. அவன் தேரை பின்னெடுக்க முயல்வதற்குள் அவர் மிக அருகே வந்துவிட்டார். அவருடைய அம்புகள் பீமசேனரின் மேல் வந்து அறையத்தொடங்கின. எடைமிக்க கவசங்களில் பட்டு அவை உதிர்ந்தன. துரோணர் முசலம் என்னும் மிகப் பெரிய அம்பை எடுப்பதைக் கண்டு அவன் தேரை பின்னுக்கு கொண்டுசென்றான். பீமசேனர் எடுத்த பேரம்பால் அந்த அம்பை தடுக்க இயலவில்லை. அது வந்து அறைந்து பீமசேனரின் நெஞ்சக்கவசம் உடைந்தது. அவர் அமர்ந்து தன் கவசத்தை மாற்ற இடமளிக்காமல் துரோணர் அம்புகளால் அறைந்துகொண்டே இருந்தார்.

பீமசேனரின் உடலில் இரண்டு அம்புகளேனும் புதைந்துவிட்டன என்று விசோகன் உணர்ந்தான். தேரை பின்னிழுக்கவியலாது என்று அவனுக்கு தெரிந்தது. எண்ணித்துணிந்து முழுவிசையுடன் தேரை முன்னால் செலுத்தினான். அதை எதிர்பாராத துரோணரின் பாகன் தேரை சற்றே பின்னடையச் செய்ய அவர்களுக்கிடையே அம்புகள் உருவாக்கியிருந்த வெற்றிடத்தின் வழியாக தன் தேரை விரைந்து ஓட்டி வளைத்து துரோணரின் முன்னாலிருந்து விலகிச்சென்றான் விசோகன். துரோணர் “மந்தா, நில்! கௌரவர்களைக் கொன்ற உன் கையை காட்டு!” என்று கூவினார். கௌரவர்கள் இளிவரலோசை எழுப்பி கூச்சலிட்டார்கள். பீமசேனர் “நிறுத்து, அவரை நோக்கி செல். பார்த்துவிடுவோம்… செல்க! முன்செல்க!” என்று கூச்சலிட்டார். ஆனால் விசோகன் குதிரைகளை சவுக்கால் மாறிமாறி அறைந்து விசையுடன் முன்செலுத்தி அப்பால் சென்றான்.

விராடப் படைகள் இருபுறத்திலிருந்தும் எழுந்து சென்று துரோணரை சூழ்ந்தன. பீமசேனர் படைகளின் நடுவே புதைந்ததும் விசோகன் தேரை நிறுத்தினான். “அறிவிலி! என் ஆணைகளை மீறிய உன்னை இக்கணமே கொல்வேன்!” என்று கூவிய பீமசேனர் கைகளை ஓங்கியபடி அவனை நோக்கி வந்தார். அவன் வெற்றுவிழிகளால் அவரை நோக்கி அமர்ந்திருந்தான். பீமசேனர் தணிந்து “எனக்கு இழிவை உருவாக்கிவிட்டாய்… உயிர்தப்பி ஓடச்செய்துவிட்டாய்!” என்று கூச்சலிட்டார். “அவரை கொல்லும்பொருட்டு பிறந்தவர் திருஷ்டத்யும்னர். அவர் நடத்தட்டும் போரை… உங்கள் பணி கௌரவர்களை எதிர்கொள்வதே” என்றான் விசோகன். “எனக்கு எவர்மேலும் அச்சமில்லை… துரோணரிடம் செல்க!” என்றார் பீமசேனர்.

“ஆம், ஆணை!” என்று சொல்லி விசோகன் தேரை செலுத்தினான். ஆனால் செவிகளால் கௌரவர் இருக்குமிடத்தை உணர்ந்துகொண்டான். பன்னிருகளம் திரும்பிவரும் விசையில் கௌரவர்களின் முனை எங்கே வந்து நின்றிருக்கும் என கணித்து அங்கே தன் தேருடன் சென்று நின்றான். கௌரவப் படையில் பீமசேனர் தப்பியோடிய செய்தி முழங்கிக்கொண்டிருந்தது. துச்சலனும் துர்மதனும் தொலைவிலேயே பீமசேனரைக் கண்டதும் கைநீட்டி இளிவரல் உரைத்தபடி தேரை விரைவுபடுத்தி அவரை நோக்கி வந்தனர். “இழிமக்கள்… கீழுயிர்கள்… இன்று இவர்களின் குருதி குடிப்பேன்…” என்று பீமசேனர் கூவினார். “செல்க! செல்க!” என்று ஆணையிட்டார். “சர்வதனும் சுதசோமனும் தந்தையை துணையுங்கள். அவருக்கு இருபுறமும் காத்து நில்லுங்கள்!” என்று திருஷ்டத்யும்னனின் ஆணை முழவோசையாக எழுந்துகொண்டிருந்தது.

சர்வதனும் சுதசோமனும் வருவதற்குள்ளாகவே பீமசேனரும் கௌரவர்களும் கடும்போரில் இறங்கிவிட்டிருந்தார்கள். துச்சலனும் துர்மதனும் இருபுறமும் நின்று அம்புகளால் தாக்க துச்சகனும் சுபாகுவும் நேர்எதிரில் நின்று போரிட்டனர். பீமசேனரின் இருபக்கங்களையும் பாஞ்சாலப் படையின் பரிவில்லவர் காத்தனர். அம்புகள் உரசிச்செல்லும் உலோகக் கிழிபடலோசை செவிகூச ஒலித்தது. அம்புமுனைகள் முட்டிய பொறிகள் கண்முன் வெடித்து வெடித்து சிதறின. பரிவில்லவர்கள் இருபுறமும் அலறி விழுந்துகொண்டிருந்தனர். அவ்விடத்தை நிரப்பிய பரிவில்லவர்கள் குளிர்நீரில் குதிக்கும் இளையோர்போல உரக்க கூச்சலிட்டனர். இரும்பின் ஓசைகளாக சூழ்ந்திருந்தது காற்று. அம்புகளின் ஓசை, கவசங்களின் ஓசை, சகடங்களின் ஓசை. அங்கே ஒரு மாபெரும் கொல்லப்பட்டறை செயல்படுவதுபோல தோன்றியது.

கௌரவர்கள் மிகுந்த எச்சரிக்கை கொண்டிருந்தனர். வழக்கமாக அவர்கள் போர் தொடங்கியதுமே உளம்கொந்தளித்து ஒற்றைத்திரளென்று ஆகி சூழ்ந்துகொண்டு எந்த ஒழுங்கும் இல்லாது போர்புரிவார்கள். அவர்களில் சிலர் இறந்த பின்னர் அந்தச் சீற்றம் மேலும் வெறியை கிளப்பியது. ஆனால் அன்று அவர்கள் அனைவருமே மிகமிகக் கருதி எண்ணி போரிட்டனர். அவர்களின் தேர்களால் ஆன அரைவட்டம் பறக்கும் கொக்குகளின் சூழ்கைபோல நெளிந்தாலும் வடிவிழக்காமல் முன்னால் வந்தது. அவர்களில் சில தேர்வலர் அம்புகள் பட்டு விழுந்தாலும் அது அறுபடவே இல்லை. அவர்களின் அம்புகள் ஒற்றை அலையென எழுந்து வந்தன. ஒன்றுக்குள் ஒன்றென எழுந்த அரைவட்டங்களாக அவை வந்து அறைய பீமசேனர் மேலும் மேலும் பின்னடைந்துகொண்டிருந்தார்.

விசோகன் தேரை அவர்களின் அம்புவளையத்திலிருந்து பின்னடையச் செய்தபடி சர்வதனையும் சுதசோமனையும் எதிர்பார்த்தான். அவர்கள் இருபக்கமும் இணைந்துகொண்டு நிகரான அரைவட்டத்தை அமைத்துக்கொண்டால் எழுந்து சென்று தாக்கமுடியும். ஆனால் அவர்கள் அத்தனை முழுமையான வட்டத்தை அமைத்திருக்கும் நிலையில் தன் வட்டத்தை உடைத்து பீமசேனர் முன்னெழுவது அவர்களால் சூழ்ந்துகொள்ளப்படுவதற்கே வழிகோலும். சர்வதனும் சுதசோமனும் சேர்ந்தே இருபக்கமும் வந்தணைந்தனர். வில்லவர்கள் அவர்களின் தலைமையில் பிறைவடிவ பின்காப்பை உருவாக்க பீமசேனர் முன்னேறிச்செல்லத் தொடங்கினார்.

ஆனால் மறுபக்கம் சகுனியின் ஆணைப்படி கௌரவர்கள் மேலும் மேலும் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களின் வளையம் விரிந்து இருமடங்காகியது. அதில் வங்கமன்னர்கள் சமுத்ரசேனரும் சந்திரசேனரும் வந்து இணைந்துகொண்டார்கள். அவர்களின் அம்புகளின் ஒத்திசைவு மேலும் மேலும் இறுகியது. பாண்டவப் படை மேலும் பின்னடைந்தது. துர்மதன் “ஊன்குன்றே, இன்று உன் குருதியை அள்ளி உடலில் பூசி களிப்போம்! நில்! எங்கு ஓடுகிறாய், அடுமனைக்கா?” என்று கூவினான். கௌரவர்கள் உரக்க நகைத்தனர். “துரோணரிடமிருந்து ஓடி தப்பினாய். இங்கிருந்து ஓடினாலும் எங்கள் அம்புகள் தேடிவரும்!” என்றான் துச்சகன்.

பீமசேனர் சினந்தெழுவார் என்று விசோகன் எதிர்பார்த்தான். ஆனால் “மெல்ல மெல்ல பின்னடைக!” என்று அவர் கை காட்டினார். அம்புகளால் கௌரவர்களை எதிர்த்து நிறுத்தியபடி மெல்ல மெல்ல பின்னடைந்துகொண்டிருந்தார் பீமசேனர். சர்வதனும் சுதசோமனும் பின்னடைந்தனர். சர்வதனின் கவசங்கள் உடைந்தன. சுதசோமனின் தேர்வலன் அம்புபட்டு சரிந்து விழுந்தான். பரிவில்லவர் பன்னிருவரும் தேர்வில்லவர் எழுவரும் களம்பட்டார்கள். கௌரவப் படை மேலும் விசைகொண்டது. ஒருவரை ஒருவர் சொற்களைக் கூவியபடி அவர்கள் அணுகிவந்தனர். மலைச்சரிவு பிளந்து சரியும் சேற்றுவளையம் இறங்கி அணுகுவதுபோல ஒற்றை அலைவளையமென அவர்கள் தெரிந்தாலும் வேறொரு நோக்கில் அதில் பாறைகளும் கற்களும் தெரிவதுபோல ஒவ்வொருவரையும் தனித்தனியாக காணமுடிந்தது.

அவர்கள் அணுகும் விசை மிகுந்து சிலர் மிக அருகே வந்துவிட்டனர். எண்ணியிராக் கணத்தில் பீமசேனர் கழையூன்றிப் பாய்ந்தெழுந்து கௌரவனாகிய நந்தனை கதையால் அறைந்து கொன்றார். அவனருகே நின்றிருந்த உபநந்தன் கூச்சலிட அவனை கொக்கிக்கயிற்றை வீசி கோழிக்குஞ்சை பருந்து எடுப்பதுபோல் இழுத்தெடுத்து கதையால் அறைந்தார். அவன் உடல் உடைந்து திறந்து குருதிச்சிதறல்கள் வெடித்துப்பரவின. மணிமாலை அறுந்ததுபோல கௌரவர்களின் அணி உடைந்து சிதறியது. ஒவ்வொருவரும் வெறிகொண்டு கூச்சலிட்டபடி அவரை தாக்கினர். துர்மதனும் துச்சலனும் “அணிகொள்க! அணிசிதையாதமைக!” என்று கூவினாலும் அவர்கள் அதை செவிகொள்ளவில்லை.

பீமசேனர் அவர்களை ஒவ்வொருவராக தாக்கினார். சித்ரபாணனை கதையால் நெஞ்சிலறைந்து கொன்றார். கழையை ஊன்றி எழுந்துசென்று இறங்கி அங்கே வாளுடன் வந்த தனுர்த்தரனை அறைந்து கவசத்துடன் தலையை உடைத்தார். கௌரவர்கள் கூக்குரலிட்டனர். ஒருவரோடொருவர் மாறி மாறி கூவி ஆணைகளை இட்டனர். அந்தக் கூச்சலே அவர்களின் உள்ளங்களைக் குழப்பி விழிகளை அலையடிக்கச் செய்து எதையும் கணிக்கமுடியாதவர்களாக ஆக்கியது. பீமசேனர் எழுந்து பறந்து அமைந்து மீண்டும் எழுந்து அவர்களை கொன்றார். அனூதரன் தலையுடைந்து விழுந்தான். அவரை அவர்கள் சூழ்ந்துகொள்ள கழையிலெழுந்து மீண்டும் தேருக்கு வந்தார். அவர்கள் தங்கள் தேரை நோக்கி ஓட நீள்வேலை எடுத்து அதை ஊன்றிப் பறந்தெழுந்து திருடவர்மாவின் நெஞ்சில் ஊன்றி அவனை மண்ணுடன் தைத்தார். உருவி எழுந்து சுழற்றி திருதஹஸ்தனை கொன்றார்.

மான்கூட்டங்களை வேட்டையாடும் சிம்மம் தரையில் அறைந்து பேரொலி எழுப்பி அவற்றை சிதறடித்தபின் பாய்வதைப் போலிருந்தது. அச்சத்தில் அவர்கள் ஒவ்வொருவரும் முற்றிலும் தனித்தவர்களாக, எதையும் செவிவிழிகொள்ள இயலாதவர்களாக ஆனார்கள். அவர்களை வரப்பு வெட்டும்போது சிதறியோடும் எலிகளை கூர்க்கம்பியால் குத்திக் கோத்தெடுக்கும் உழவர்களைப்போல பீமசேனர் கொன்றார். வாலகியும் சித்ரவர்மனும் சலனும் சித்ரனும் நெஞ்சில் குத்துபட்டு விழுந்து துடித்து இறந்தனர். துர்மதன் வெறிக்கூச்சலிட்டபடி பீமசேனரை தாக்க துச்சலனும் துர்முகனும் துச்சகனும் அவனுடன் சேர்ந்துகொண்டனர். நான்கு கதைகளை அவருடைய ஒற்றைக் கதை தடுத்தது. தந்தையரை துணைக்கச்சென்ற மௌரவ மைந்தர் ஷத்ரஜித்தையும் தர்மியையும் வியாஹ்ரனையும் சர்வதன் அம்பெய்து வீழ்த்தினான்.

சுதசோமன் தந்தையைப்போலவே கழையிலெழுந்திறங்கி கௌரவ மைந்தர்களான மனோனுகனையும் தும்ரகேசனையும் கதையால் அறைந்துகொன்றான். அவனைச் சூழ்ந்துகொண்ட க்ரோதனையும் ஊர்த்துவபாகுவையும் கொன்றபின் மீண்டும் பாய்ந்து தன் தேரிலேறிக்கொண்டான். அவனைத் தொடர்ந்து ஓடிவந்த கௌரவ மைந்தர் ரக்தநேத்ரனையும் சுலோசனனையும் மகாசேனனையும் உக்ரசேனனையும் விப்ரசேனனையும் சர்வதன் அம்பெய்து வீழ்த்தினான். சகுனியின் ஆணை ஒலித்துக்கொண்டே இருந்தது. பகதத்தரும் பால்ஹிகரும் வருகிறார்கள் என்று விசோகன் கூவினான்.

பீமசேனர் துர்மதனை அறைந்து அப்பாலிட்டார். தொடை உடைந்து அவன் எழமுயல துச்சலனின் தோளை அறைந்தார். உடைந்த கவசத்துடன் அவன் பின்னடைய அவர் பாய்ந்து வந்து தன் தேரிலேறிக்கொண்டார். அதற்குள் சகுனியின் ஆணைக்கேற்ப பகதத்தர் தன்னுடைய பெருங்களிறான சுப்ரதீகத்தின் மேலேறி வலப்பக்கம் தோன்றினார். இடப்பக்கம் பால்ஹிகர் அங்காரகன் மேலமர்ந்து வந்தார். சர்வதனும் சுதசோமனும் அம்புகளால் கௌரவ மைந்தர்களை தடுத்து நிறுத்த பீமசேனர் தேரை பின்னடையச் செய்யும்படி ஆணையிட்டார். சர்வதனின் அம்புகள் பட்டு கௌரவ மைந்தர் ஜடிலனும் வேணுமானும் நிலம்பட்டனர். சுதசோமனால் கௌரவ மைந்தர்களான அனந்தனும் சானுவும் உதாரனும் கிருதியும் கொல்லப்பட்டார்கள்.

பாண்டவப் படை உருவழிந்து பின்னடைந்து மையப்படைக்குள் புகுந்துகொள்ள கேடயங்களேந்திய யானைகள் வந்து பகதத்தரையும் பால்ஹிகரையும் தடுத்தன. அவர்களின் யானைகள் பிளிறியபடி கேடயயானைகளை அறைந்தன. விசோகன் பெருமூச்சுவிட்டு உடல் தளர்ந்தான். பீமசேனர் “மறுபக்கம் எழுக! நாம் எதிர்கொள்ளவேண்டியவர்கள் துரியோதனனும் துச்சாதனனும்” என்று ஆணையிட்டார். விசோகன் தேரை படைகளின் நடுவில் செலுத்தியபோது முன்னணியில் சிகண்டி அப்பால் நின்றிருந்த சல்யரை எதிர்கொள்வதை கண்டான். சல்யருக்குத் துணையாக புளிந்த நாட்டு இளவரசர்களான விமலனும் ஆகிருதியும் அந்தகனும் தார்விகநாட்டு படைத்தலைவன் துரந்தனும் நின்றிருந்தனர். சிகண்டிக்குத் துணையாக குனிந்தநாட்டுப் படைகளும் சேதிநாட்டுப் படைகளும் நின்றிருந்தன. சேதியின் மன்னன் திருஷ்டகேது சிகண்டிக்கு நிகரென நின்று போரிட்டுக்கொண்டிருந்தான்.

சிகண்டியின் அம்புகளுக்கு முன் நிற்கவியலாமல் சல்யர் பின்னடைந்து கொண்டிருந்தார். சிகண்டியின் மெல்லிய உடலில் கைகள் இரு சவுக்குகள்போல சுழன்றுகொண்டிருந்தன. பீமசேனர் “செல்க, அவர்களுக்கு நம் துணை தேவையில்லை” என்றார். அவர்களின் தேர் படைமுகப்புக்குச் சென்றபோது பன்னிருமுனைச் சகடம் திரும்பி அவர்களுக்கு முன் ஜயத்ரதன் தோன்றினான். “வீணனே, என்னை எதிர்கொள்க! படைக்கலம் பழகாத கௌரவர்களிடம் போரிட்டு நின்றிருப்பது ஆண்மையல்ல!” என்று ஜயத்ரதன் பீமசேனரை நோக்கி கூச்சலிட்டான். “எனில் உன் குருதியில் நீராடுகிறேன் இன்று!” என்றபடி பீமசேனர் தேரை அவனை நோக்கி செலுத்தினார். இருவரும் அம்புகளால் கோத்துக்கொண்டார்கள்.

ஜயத்ரதனின் வில்திறனை விசோகன் அறிந்திருந்தான். அவன் எண்ணிய கணமே எண்ணியதை முரசுகள் அறிவித்தன. “ஜயத்ரதரை எதிர்கொள்ளும் பீமசேனரை சுருதகீர்த்தியும் சுருதசேனனும் துணைக்கட்டும்.” அவர்கள் வரும்வரை ஜயத்ரதனை எதிர்கொள்வதற்குரிய வழிகளை விசோகன் எண்ணினான். ஜயத்ரதனின் ஆற்றல் அம்புகளின் எழுதொலைவில் இல்லை என்றும் அவை எழும்விரைவிலேயே உள்ளது என்றும் அவன் அறிந்திருந்தான். ஆகவே தேரை மேலும் அணுகச்செய்து ஆனால் ஒருகணமும் நிலைக்கச் செய்யாமல் கொண்டுசென்றான். பீமசேனரின் வில் உடைந்தது. கவசங்கள் சிதறின. ஆனால் அவர் வெறியுடன் கூவிக்கொண்டே போரிட்டார்.

சுருதகீர்த்தி தோன்றியதும் விசோகன் ஆறுதல்கொண்டான். சுருதகீர்த்தியைக் கண்டதும் விரைந்து முன்னெழுந்துகொண்டிருந்த ஜயத்ரதன் எச்சரிக்கைகொண்டு விரைவு குறைந்தான். ஏளனத்துடன் பீமசேனரை நோக்கி “அச்சமிருந்தால் என்னிடம் சொல்லியிருக்கலாமே, மந்தா. இளையோன் மைந்தனால் காக்கப்படும் கைக்குழவி என உன்னை நான் அறிந்திருக்கவில்லையே” என்றான். “உன் உதடுகளைக் கிழித்த பின் இதற்கு மறுமொழி சொல்கிறேன்” என்று கூவியபடி பீமசேனர் அம்புகளை தொடுத்தார். அவர்களுடன் சுருதசேனனும் இணைந்துகொண்டதும் ஜயத்ரதன் பின்னடையலானான்.

அப்பால் சிகண்டி சல்யரை மிகப் பின்னால் கொண்டுசென்றுவிட்டிருப்பதை விசோகன் கண்டான். வங்கத்து இளவரசர்களான ஹோஷனும் புரஞ்சயனும் சிகண்டியால் கொல்லப்பட்டதை முரசுகள் அறிவித்தன. மத்ரநாட்டு படைத்தலைவர்களாகிய உக்ரேஷ்டனும் சத்யகனும் சிகண்டியால் கொல்லப்பட்டார்கள். சிகண்டியைச் சூழ்ந்துகொள்ளும்படி சகுனி ஆணையிட்டுக்கொண்டே இருக்க புளிந்த நாட்டு இளவரசர்களான விமலனும் ஆகிருதியும் அந்தகனும் கொல்லப்பட்டார்கள். தார்விகநாட்டு படைத்தலைவன் துரந்தன் கொல்லப்பட்டதும் அவனுடைய படைகள் சிதறி பின்னடைந்தன. சல்யர் தனித்துவிடப்பட்டார். அவரை சிகண்டி அம்புகளால் அறைந்தபடி துரத்திச்செல்ல அவர் நெஞ்சிலும் விலாவிலும் அம்பு தைத்து தேர்த்தட்டில் விழுந்தார்.

அப்போது பன்னிருமுனைச் சகடம் திரும்பி பீஷ்மர் படைமுகப்பில் தோன்றி தேரில் அணுகி வந்தார். நாணொலியுடன் அவர் எழுந்தபோது சல்யரை துரத்திச்சென்ற சிகண்டி நேர் எதிரில் தோன்றினார். பீஷ்மர் திகைத்தவர்போல இரு கைகளிலும் அம்பும் வில்லும் அசைவற்று நிற்க செயலிழந்தார். அவருடைய வில் தாழ்ந்தது. தேரை திருப்பும்படி அவர் ஆணையிட பாகன் தேரை மறுதிசை நோக்கி கொண்டுசென்றான். தன்னைச் சூழ்ந்து பறக்கும் அம்புகளின் நடுவே பீஷ்மரை கூர்ந்து நோக்கியபடி சிகண்டியும் அசைவிலாது நின்றார்.

bowஅந்திமுரசு ஒலிக்கத் தொடங்கியதும் பீமசேனர் தன் வில்லை கீழே வைத்துவிட்டு இரு கைகளையும் மரக்கட்டை ஒலியுடன் உரசிக்கொண்டார். விசோகன் தேரை திருப்ப அவர் ஒன்றும் சொல்லாமல் பாய்ந்து கீழே இறங்கி அருகே நின்றிருந்த புரவிமேல் ஏறி படைகளின் நடுவே பாய்ந்து அப்பால் சென்றார். விசோகன் தான் கண்ட காட்சியை மீண்டும் நினைவுகூர்ந்தான். அது மெய்யா விழிமயக்கா? ஆனால் வேறு பலரும் கண்டிருக்கவேண்டும். அவர்கள் கண்டார்களா என்பது சற்றுநேரத்திலேயே தெரிந்துவிடும். படைவீரர்கள் குருதி வழியும் உடலுடன் படைக்கலங்களையே ஊன்றுகோலாக்கி தளர்ந்து திரும்பிக்கொண்டிருந்தார்கள்.

விசோகனை அணுகிய தேர்வலன் ஒருவன் “இன்றும் பேரழிவே… நம் தரப்பின் கிராதப்படை முழுமையாகவே அழிந்துவிட்டது. பீஷ்மர் இன்றும் கொலையாடினார். ஒவ்வொருநாளும் அவர் உருவாக்கும் அழிவு மிகுந்துகொண்டே செல்கிறது” என்றான். விசோகன் தலையசைத்தான். “இன்று அழிவைக் கண்டு சினந்து இளைய யாதவர் தன் படையாழியுடன் பீஷ்மரை கொல்ல எழுந்தார் என்றார்கள்” என்று அவன் சொன்னான். “அது முன்னரே நிகழ்ந்தது” என்றான் விசோகன். “இன்றும் நிகழ்ந்ததாகச் சொன்னார்கள்” என்றான் தேர்வலன். பின்னர் “ஆனால் அவரே பீஷ்மரை கொன்றால்தான் உண்டு. வேறு எவராலும் இயலாது என்று தெளிவாகிவிட்டது. இன்றேல் நாம் அவர் கையால் அழிவோம்” என்றான். விசோகன் ஒன்றும் சொல்லவில்லை.

இன்னொரு பரிவீரன் அருகணைந்து “இளைய யாதவர் பொறுமையிழந்துவிட்டார். இன்று முதல்முறையாக அவர் முகத்தில் கடுஞ்சினத்தை நான் கண்டேன்” என்றான். அவர்கள் எவரேனும் சிகண்டிமுன் அவர் வில்தாழ்த்தியதை சொல்கிறார்களா என்று விசோகன் செவிகூர்ந்தான். “இன்று நம் வீரர்கள் முற்றாகவே உளம்தளர்ந்துவிட்டனர். போர்முடிவில் இப்படி ஒரு சொல்கூட இன்றி அவர்கள் திரும்பிச்செல்வது இதுவரை நிகழ்ந்ததில்லை” என்றான் தேர்வலன். “தங்களை ஊக்கப்படுத்திக் கொள்ளும் பொருட்டும் ஒரு முறைமை என்ற வகையிலும் அவர்கள் வெற்றிக்கூச்சலிடுவது என்றுமுள்ள வழக்கம். நாளுக்குநாள் அக்குரல் தளர்ந்துதான் வந்தது. ஆனால் இன்று முற்றமைதி நிலவுகிறது.”

பரிவீரன் “ஆம், ஆனால் மறுபக்கத்திலும் எந்த ஓசையும் இல்லை. அவர்களும் வெறுமையுடன்தான் திரும்புகிறார்கள் போலும்” என்றான். அதன்பின்னர்தான் குருக்ஷேத்ரப் போர்க்களமே அமைதியாக இருப்பதைப்போல விசோகன் உணர்ந்தான். திரும்பும் படைகளின் காலடிஓசைகள், விலங்குகளின் குரல்கள், சகடஒலிகள், வலியிலும் துயரிலும் கதறுபவர்களின் குரல்கள் என முழக்கம் நிறைந்திருந்தாலும் அதை அமைதி என்றே உள்ளம் உணர்ந்தது. தேரை திருப்பி தன் இடத்திற்கு கொண்டுசென்றான். தேரை நிலையில் நிறுத்திவிட்டு புரவிகளை நுகத்திலிருந்து அவிழ்த்தான். அவை கால்களை உதறிக்கொண்டு மூச்சொலியுடன் விலகி நின்றன. ஒரு புரவி கீழே கிடந்த இலை ஒன்றை எடுத்து நாவால் சப்பிவிட்டு கீழே போட்டது.

விசோகன் புரவிகளின் கவசங்களை அவிழ்த்து அகற்றினான். இரண்டு புரவிகளின் உடலில் ஆழமாகவே அம்புகள் பாய்ந்திருந்தன. குருதி உலர்ந்து கவசம் தோலுடன் ஒட்டியிருந்தது. பிற புரவிகளின் உடல்களில் பெரிய அளவில் புண் ஏதும் இருக்கவில்லை. அவன் ஏழு புரவிகளையும் தனித்தனியாக தறிகளில் கட்டினான். அவை உடல்சிலிர்த்துக்கொண்டும் பெருமூச்சுகள்விட்டுக்கொண்டும் நின்றன. ஒரு புரவி இன்னொன்றின் விலாவை முகர்ந்து அதிலிருந்த குருதியின் வீச்சத்தால் மூக்கு சுளித்து தும்மலோசை எழுப்பியது. உடலில் வலியிருந்தமையால் அவை கால்மாற்றி வைத்து அசைந்து அசைந்து நின்றன.

விசோகன் குடிலுக்குச் சென்று கவசங்களை கழற்றிவிட்டு நீர் அருந்தினான். பரிவலன் புரவிகளுக்கு நீர் வைத்தான். அவை முகம் முக்கி உறிஞ்சி குடம்நிறையும் ஒலியுடன் குடித்தன. முகமுடிகள் நீர்த்துளியுடன் நின்றிருக்க நிமிர்ந்து விழியிமைகளை சுருக்கிக்கொண்டன. மீண்டும் மூழ்கி அருந்தி பெருமூச்சுவிட்டன. அவற்றின் விலா குளிர்ந்து மெய்ப்புகொண்டு விதிர்த்து அசைந்தது. இரு புரவிகள் சிறுநீர் கழித்தன. கால்களை மாற்றி ஊன்றிக்கொண்டு மீண்டும் நீர் அருந்தின. அவை சாணியுருளைகளை உதிர்க்கும் ஓசை கேட்டு விசோகன் திரும்பி நோக்கினான். குதிரையின் சாணியுடன் சிறுநீர் கலக்கும் மணம் அவன் உள்ளத்திற்கு அணுக்கமானது.

கையுறைகளை கழற்றியபோது உலர்ந்த குருதியுடன் கருகியதசைபோல உரிந்து வந்தது. கையுறைகளை நீரில் நனைத்து ஊறவைத்துவிட்டு மரவுரியுடன் அவன் புரவிகளை அணுகினான். பரிஏவலன் மத்தன் மரத்தொட்டியை கொண்டுவந்து வைத்தான். அதிலிருந்த கந்தகம் கலந்த நீரிலிருந்து சிறிய கொப்புளங்கள் வெடித்துக்கொண்டிருந்தன. மத்தன் “நீங்கள் ஓய்வெடுங்கள் தேர்வலரே, நானே இவற்றை செய்வேன்” என்றான். “இல்லை, நான் செய்யாவிடில் நிறைவிருக்காது” என்றபின் விசோகன் மரவுரியை கந்தகநீரில் முக்கி பிழிந்து புரவிகளின் உடலை நனைத்து இழுத்து உருவிவிட்டான். அவற்றின் தோலின் மென்மயிர்ப்பரப்பிலிருந்து குருதி கரைந்து வந்தது. பரிஏவலன் இன்னொரு புரவியின் உடலை நீவத்தொடங்கினான்.

உறைந்த குருதி கரைந்து அகன்றபோதுதான் தோலுக்கு அடியிலிருந்த புண்கள் தெரியத் தொடங்கின. அவன் மெல்ல விரல்களால் தொட்டு அந்தப் புண்களின் மீதிருந்த குருதிப்பொருக்குகளை அகற்றினான். செவ்வூன் மீது கந்தகம் பட்டபோது புரவிகள் வலியுடன் கால்மாற்றி வைத்து நின்றன. அவனுக்கு புரவிகளின் உடலை நீவி சலிப்பதேயில்லை. மீண்டும் மீண்டும் மரவுரியை முக்கி உழிந்து கொண்டிருந்தான். “குறைவாகவே புண்கள் உள்ளன இன்று” என்றான் மத்தன். “ஆம்” என்றான் விசோகன். “தங்கள் உடலில் புண்கள் சற்று பெரிதாகவே உள்ளன, தேர்வலரே” என்றான் ஏவலன். “ஆம், மருந்திடவேண்டும். இப்பணி முடியட்டும்” என்றான் விசோகன்.

புரவிகளின் உடல்களை தூய்மைசெய்து முடித்ததும் வேம்பெண்ணையில் மஞ்சளுடன் சேர்த்துக்குழைத்த மருந்துவிழுதை மரக்குடுவையிலிருந்து அள்ளி புண்கள் மேல் பூசினான். உப்புநீர் தெளித்து சிறிதாக வெட்டப்பட்ட புல்கற்றைகளை ஏவலர்கள் வண்டிகளில் கொண்டுவந்து புரவிகளுக்கு முன் போட்டனர். அவை ஆவலுடன் குனிந்து புல்லை அள்ளி தாடையிறுகி அசைய, தலைகுலுக்கி செவிகளை அடித்துக்கொண்டு மென்று தின்னத் தொடங்கின. களைப்புடன் கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தபோது விசோகன் மெல்லிய பாடலோசையை கேட்டான். “என்ன அது?” என்றான். “பாடுகிறார்கள்” என்றான் ஏவலன். “பாடுகிறார்களா? யார்?” என்றான் விசோகன். “வீரர்கள்தான்… நான் வரும்போதே சில இடங்களில் பாடிக்கொண்டிருந்தார்கள்” என்று ஏவலன் சொன்னான்.

விசோகன் வியப்புடன் பரிநிலையிலிருந்து வெளியே சென்று பார்த்தான். உணவுக்காக சிறுசிறு குழுக்களாக அமர்ந்திருந்த வீரர்கள் கைகளை தட்டிக்கொண்டு பாடினர். அவன் நோக்கியபடியே நடந்தான். படையின் ஒரு மூலையிலிருந்து தொடங்கிய களிப்பு பாடலாகவும் சிரிப்பாகவும் பரவி படைமுழுக்க சென்றுகொண்டிருந்தது. அவன் காவல்மாடம் வரை சென்றான். “என்ன நிகழ்கிறது?” என்று காவலரிடம் கேட்டான். “என்னவென்று தெரியவில்லை. எவனோ எங்கோ சிரிக்கத் தொடங்கிவிட்டிருக்கிறான். அனைவரும் சிரிக்கிறார்கள்” என்றான் காவலன். விசோகன் படிகளில் ஏறி காவல்மாடத்திற்குமேல் சென்றான். அங்கே வில்லுடன் நின்றிருந்த வீரர்களும் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அந்திவிளக்குகளின் ஒளியில் கண்ட படை முழுக்க சிரித்து நகையாடி பாடி ஆடிக்கொண்டிருந்தது.

முந்தைய கட்டுரைநேர்கோடற்ற எழுத்து தமிழில்..
அடுத்த கட்டுரைரயிலில் கடிதங்கள் -2