அமிஷ் நாவல்கள் -கடிதங்கள்

Meluha

அமிஷ் நாவல்கள்

 

அன்புள்ள ஜெ

 

சமீபத்தில் இதே நாவலை நண்பன் ஒருவன்  கண்டிப்பாக எல்லாரும் படிக்கவேண்டிய நூல் என்றான்.. அவனிடம் “இது வெறும் கால் சென்டர் மொழியில் எழுதப்பட்ட்து.. இதை  விட 100 மடங்கு செறிவுடன் தமிழிலேயே எழுதப்பட்டு வரும் வெண்முரசு நாவல் படித்தாயா” என்று கேட்டேன்.. “கால் சென்டர்” மொழியில் என் எழுத கூடாது.. கடினமான மொழியில் தான் இலக்கியம் படைக்க வேண்டுமா”  என்பது அவன் வாதம்..

 

அவனிடம் இப்படி கேட்டேன்.. இப்போது ஒருவர் பூஜை செய்தால் ‘ஊதுபத்தி, கற்பூறம்” ஏற்றி பூஜை செய்தார் என்று எழுதி விடலாம்.. ஆனால், 5000 வருடங்களுக்கு முன்பு ஊதுபத்தியும், கற்பூரமும் இருந்ததா.. இருந்திருந்தால் என்ன வடிவில்பெயரில், எந்த பெயரில்  இருந்தது.. இல்லையென்றால், அதற்கு மாற்றாக என்ன இருந்தது..

இந்திய முழுக்கக் கொண்டாடப் படும் ஒரு நாவல், இதைக் கூட  முயற்சி எடுத்து நமக்கு சொல்லவில்லை என்றால், அது ஒரு ஏமாற்று வேலை.. இந்த சோம்பேறிகளுக்கு இது போதும் என்ற ஒப்பேற்றும் மனப்பாங்கு என்றேன் …

 

ஒரு வட இந்திய பெண்ணிடமும் இந்த நாவல் அப்படி ஒன்றும் அப்பாடக்கர் நாவல் அல்ல என்று விவாதித்திருக்கிறேன் … ஏற்றுக் கொண்டார்களோ இல்லையோ, ஒரு சராசரி வணிக நாவலை இலக்கிய வரிசையில் யார் வைத்தாலும் மண்டையில் ஒரு குட்டு குட்டுவதில் எனக்கு ஒரு திருப்தி..

 

நன்றி

ரத்தன்

 

 

அன்புள்ள ஜெ

 

அமிஷ் நாவல்கள் போன்றவற்றைப் பற்றிய உங்கள் பதிவை வாசித்தேன். இந்திய ஆங்கிலக் கல்விதான் இத்தகைய படைப்புகளை உருவாக்குகிறது. இங்கே இந்தியாவின் இலக்கியமரபு, இந்தியப் பண்பாடு பற்றி எதுவுமே தெரியாமல் ஆங்கிலத்தில் மேலோட்டமான அறிவு மட்டுமே கொண்ட ஒரு வாசிக்கும் தலைமுறையை சென்ற முப்பதாண்டுகளில் ஆங்கிலவழிக் கல்வி வழியாக உருவாக்கியிருக்கிறோம். அவர்களால் ஆங்கிலத்திலுள்ள உலக இலக்கியங்களையும் வாசிக்கமுடியவில்லை. இந்தியமொழிகளிலும் வாசிக்கமுடியவில்லை.

 

என்ன வருத்தம் என்றால் இன்று இந்தியாவிலுள்ள ஆங்கில இலக்கியம் பயிற்றுவிக்கும் பெரும்பாலான கல்லூரிகளில் இந்தவகையான மேலோட்டமான இந்திய ஆங்கில எழுத்துக்களைத்தான் பாடமாகச் சொல்லிக்கொடுக்கிறார்கள். இந்த ஆங்கில எழுத்துக்கள் மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவே தெரிகின்றன. பழைய பிரிட்டிஷ் இலக்கியங்களின் மொழி ஆங்கில மாணவர்களுக்கே கடினமானதாக இருக்கிறது. ஏனென்றால் இன்றைய ஆங்கில இலக்கியக் கல்வி என்பதே பழைய இலக்கியத்தை ஒதுக்கிவிட்டு பயனுறு ஆங்கிலம் மட்டும் கற்பதாக ஆகிவிட்டிருக்கிறது. அதற்கு இந்த ஆங்கில நூல்கள்தான் உதவியானவையாக உள்ளன

 

ராமச்சந்திரன்

முந்தைய கட்டுரைஇந்தத் தொலைக்காட்சிப் பேச்சாளர்கள்… கடிதம்
அடுத்த கட்டுரைநேர்கோடற்ற எழுத்து தமிழில்..