ஜெமோ,
சமீபத்தில் இளையராஜா அவர்கள் ஒரு கல்லூரியில் நிகழ்த்திய கலந்துரையாடல் உங்களின் படைப்பாற்றலை ஞாபகப்படுத்தியது . அதிலும் குறிப்பாக “இசை படைக்கப்படும்வரை என் அறிதலில் அது இல்லை” என்ற வார்த்தைகள்.
சமீபகாலமாக நீங்கள் கல்லூரிகளுக்குச் செல்வதை தவிர்த்துவிடுவதாக கூறியிருந்தீர்கள். இளையராஜா மற்றும் உங்களைப்போன்ற படைப்பூக்கமிக்க ஆசிரியர்கள் குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒருமுறையாவது கல்லூரிகளுக்குச் செல்வது அவர்களில் சிலரையாவது படைப்பூக்கத்துடன் வைத்திருக்குமென்றே தோன்றுகிறது.
https://muthusitharal.com/2018/09/05/படைப்பும்-கல்வியும்/
அன்புடன்
முத்து
அன்புள்ள முத்து
கல்லூரிக்குச் சென்ற எல்லா அனுபவங்களுமே சோர்வூட்டுபவை. இதுவரை நான் கல்லூரிகளில் ஒரே ஒரு செவியுள்ள மாணவரை மட்டுமே சந்தித்திருக்கிறேன். மார்த்தாண்டம் கிறிஸ்தவக் கல்லூரியில் ஒரு மாணவி. மற்றபடி அத்தனைபேரும் விழி மட்டுமே கொண்ட சிலைகள். அங்கே எந்தச் சொல்லுக்கும் ஒரு மதிப்பும் இல்லை
அத்தனை அறிவியக்கங்கள் மீதும் ஆழமான புறக்கணிப்பு கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்கியிருக்கிறது நம் கல்வியமைப்பு. நண்பர்களுக்காகத்தான் சிலசமயம் கல்லூரிகளுக்குச் செல்கிறேன். முற்றிலும் பயனற்றது என்று தெரிந்தே
கல்லூரியின் ‘சராசரி’ மாணவன் எந்தவகையான அறிவியக்கத்தையும் தொடரும் அக்கறை அற்றவன். கெட்ட’ மாணவன் அப்பட்டமான கேடி. ‘நல்ல’ மாணவன் அறிவுக்கு எதிரான முறைமை ஒன்றால் முழுமையாகவே மழுங்கடிக்கப்பட்டவன். கல்விநிலையத்தின் ‘தரம்’ மேலே செல்லச்செல்ல மேலும் மழுங்கியவர்களையே காணலாம். சென்னை ஐஐடி போன்றவற்றில் நாலுலட்சம் கிலோமீட்டர் ஓடிய டயர் போலிருப்பார்கள் மாணவர்கள். கூடவே அறிவுஜீவிகள் என்னும் தன்னம்பிக்கைவேறு. ‘இவர்களிடம் ஒருவார்த்தைகூட கொண்டுசேர்க்க முடியாது.
உதாரணமாக, தமிழகத்தில் அத்தனை கல்லூரிகளிலும் பெரும்பொருட்செலவில் இலக்கியம் மற்றும் பிற அறிவுத்துறைகள் சார்ந்த ஏராளமான கருத்தரங்குகள் நிகழ்கின்றன. பல அறிஞர்கள் வந்து பேசுகிறார்கள். இவர்களில் பலர் உண்மையான சாதனையாளர்கள், அறிஞர்கள். இன்றுவரை எந்தக் கல்லூரியிலிருந்தாவது எந்த மாணவனாவது அந்த அறிஞர் அதே ஊரில் வேறொரு நிகழ்ச்சியில் பேசினால் சென்று அமர்ந்து கேட்டதுண்டா? நான் எந்த இலக்கிய – கலாச்சார நிகழ்ச்சியிலும் மாணவர்களைப் பார்த்ததில்லை.
கோவை ஒரு கல்விமையம். ஆனால் இன்றுவரை விஷ்ணுபுரம் விழாவுக்கு கோவையின் எந்தக்கல்லூரியிலிருந்தும் மாணவர்கள் வந்ததில்லை. வரவழைக்கவும் முடியாது. சரி, தமிழ் எழுத்தாளர்களை விடுங்கள். எங்கள் நிகழ்ச்சியில் எச்.எஸ்.சிவப்பிரகாஷ், ஜெனிஸ் பரியத் போன்ற ஆங்கில எழுத்தாளர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். இவர்களின் நூல்கள் இங்கே பல கல்லூரிகளில் ஆங்கில இலக்கியக் கல்விக்கு பரிந்துரைக்கப்பட்டவை. எந்த ஆங்கிலப்பேராசிரியரும், எந்த மாணவரும் அந்தப்பக்கம் தலைகாட்டியதில்லை.
உண்மையில் கல்லூரி என்ற அந்த மாபெரும் தொழிற்சாலையிலிருந்து தப்பி வெளிவந்து தானாகவே எதையாவது வாசிக்க ஆரம்பிப்பவர்களிடம் மட்டுமே நாம் பேசவேண்டும். அவர்கள் மிகச்சிலர்தான். அவர்களிடம் பேசுவது மட்டுமே பயனுள்ளது. மற்றபடி பேசவேண்டுமென்றால் பேசுபவர் நல்ல ஊதியம்பெறவேண்டும். ஊதியம் அதைவாங்குபவருக்கு பயனுள்ளதுதானே?
ஆனால் நம் கல்லூரிகளில் பேச அழைப்பவர்கள் எழுத்தாளர்கள் இலவசமாகப் பேசவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அங்கே வரும் அத்தனைபேராசிரியர்களுக்கும் பல்லாயிரம் ரூபாய் ஊதியம் அளிக்கப்படும். எழுத்தாளர்களைக் கல்விநிலையங்கள் அழைப்பது ஒரே நோக்கத்துடன் மட்டுமே, இலவசமாக வந்து பேச ஓர் ஆத்மா. தனக்கும் பயனில்லாமல், கேட்பவருக்கும் பயனில்லாமல் பேசிவிட்டுத்திரும்பும் அந்த ஆத்மாவுக்கு ஏதோ ஒருவகை திருப்தி அதில் கிடைக்கிறது, நம்மையும் நாலுபேர் கவனிக்கிறார்களே என்று
ஜெ