காம அம்பும், கரிய நிழலும்

anal

அனல்காற்று வாங்க 

அன்பு ஜெயமோகன்,

அனல்காற்று நாவலைச் சென்ற வாரத்தில்தான் படிக்கும் வாய்ப்பு அமைந்தது. பாலுமகேந்திராவுக்காக எழுதிய கதை என்று சொல்லி இருந்தீர்கள். அக்கதையை அவர் எப்படி படமாக்கி இருப்பாரோ எனும் உங்கள் எதிர்பார்ப்பு நீர்த்துப்போனதில் எனக்கும் வருத்தம்தான். எனினும், பாலுமகேந்திராவின் வீடு, சந்தியா ராகம் போன்ற சில படங்களைக் கவனத்தில் கொண்டு சொல்கிறேன். அனல் காற்றின் சூட்டுக்குப் பங்கம் வராத  வகையில் அவர் அதைத் திரைச்சித்திரமாக்கி இருப்பார் என்றே நிச்சயிக்கிறேன்.

ஈரோடு வெண்முரசு சந்திப்பில் பாலுமகேந்திரா பற்றி நீங்கள் பேசினீர்கள். அப்போது, அவர் கடைசிவரை படமே எடுக்கவில்லை என்பதுபோல ஒரு கருத்தும் தெரிவித்தீர்கள். என்வகையில், அவரின் சந்தியா ராகம் படம் சிறப்பான ஒன்று; அக்காலத்தில் துணிச்சலான முயற்சியும் கூட. ஈரோடு சந்திப்புக்குப் பிறகு, மீண்டும் அப்படத்தைப் பார்த்தேன்(இணைப்பு : https://www.youtube.com/watch?v=uzA1yVwCsxw); எவ்வகையிலும் குறைவில்லாத படமாகவே பட்டது. பெரியவர் சொக்கலிங்கம் நிறைவான தேர்வு. அவ்வனுபவத்திலிருந்து சொல்கிறேன். அனல்காற்று ஓரளவு சிறப்பான திரைப்பிரதியாக உருவாகி இருக்கக்கூடும். வாய்க்கவில்லை எனச் சொல்லிக் கொள்வோம்.

”கூர்மை என்பது எப்போதும் குளிர்ந்தது. குளிர்ந்தவை எல்லாம் ஏனோ மெளனமாக இருக்கின்றன” என்று அருண் யோசிக்கும் புள்ளியிலிருந்து நாவல் விரியத் துவங்கும். கொதிகாற்றைத் தகிக்க முடியாத பாலைநில வழிப்போக்கன் ஒருவனுக்குக் கிட்டிய பறவையின் நிழல் மாதிரியாகவே அக்குளிர்ச்சி எனக்குள் மிளிர்ந்தது. அருணின் கோணத்தில் ஊர்ந்து செல்லும் நாவலில் சூடு மிக அதிகம். சூடே ஒருவனைப் பரபரப்பாக வைத்திருக்கிறது. சித்த மருத்துவத்தில் சூட்டைப் பித்தம் என்பார்கள். வாத, பித்த, கபங்களில் வாதம் ஆக்கும் சக்தியாகவும், பித்தம் காக்கும் சக்தியாகவும், கபம் ஒடுக்கும் சக்தியாகவும் சொல்லப்படுகின்றன. காக்கும் அல்லது நம்மை நிலைநிறுத்தும் சக்திதான் சூடு அல்லது பித்தம்.

உடலுக்குப் பித்தம் என்றால் மனதுக்குக் காமம். உடலின் பித்தம் கூடினாலோ குறைந்தாலோ உடல் காட்டிக் கொடுத்து விடும்; அதன் குறிகளைக் கொண்டு பித்தத்தைச் சீர்படுத்திவிடலாம். மனதின் காமத்தை அப்படி கட்டுக்குள் வைத்திருக்க முடியுமா? அனல்காற்றின் மாந்தர்கள் வழி அக்கேள்வியே சம்பவங்களாக விரிந்திருக்கின்றன. புறநானூற்றுப் பாடலொன்றின் உவமை நாவலில் போகிறபோக்கில் வரும். ”அம்பு நேராகச் செல்ல, அம்பின் நிழல் காடு மேடு குப்பையெல்லாம் விழுந்து புரண்டு போகும்!” எனும் அவ்வுவமையில் காமத்தை அம்பாகவும், அதன் தகிப்பால் நமக்குள் கொப்பளிக்கும் உணர்வுகளை நிழலாகவும் கொண்டதும்.. நாவலின் சரடு வாசிப்புக்குச் சிக்கத் துவங்கியது. ”தன்னைக் காதலாக, கனிவாக, கடமையாக, ரசனையாக உருமாற்றிக் கொள்கிறது  காமம். வெறுப்பாகவும் அருவருப்பாகவும் மாறிக்கொள்கிறது. ஏன், காமத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியாகவும், கண்காணிக்கும் கண்ணாகவும் கூட காமமே மாறிக் கொள்கிறது” எனும் வாக்கியத்தின் வழி நாவலின் மையமே பிடிபட்டது.

அருண் எனும் கதைசொல்லிக்கும் சிவகாமி, சந்திரா, சுசி என்ற மூன்று பெண்களுக்குமான உறவு முடிச்சுக்களை நெருக்கமாய்த் தொட்டுக்காட்டும் நாவலே அனல்காற்று. அருணின் தாயார் சிவகாமி, அவருடன் பணியாற்றுபவள் சந்திரா, மாமன் மகள் சுசி. நாவலின் அத்தியாயங்களைச் சுருக்கக்கதையாகச் சொல்வது எனது நோக்கமும், வேலையும் அல்ல என்பதால் வாசிப்பனுபவத்துக்கு நகர்கிறேன்.

”ஒவ்வொரு கணமும் அவன் அஞ்சியது அவனால் புரிந்து கொள்ள முடியாத ஒருவன் அவனிலிருந்து வெளிப்படும் தருணங்களையே” என ஓரிடத்தில் குறிப்பிட்டு இருப்பீர்கள். அருணின் மனஅமைப்பைப் புரிந்து கொள்ள அக்குறிப்பு முக்கியம் என நினைக்கிறேன். நாவல் முழுக்க தடுமாறிக் கொண்டே இருக்கிறான் அவன். அவனிலிருந்து கிளைக்கும் ’அவன்கள்’ தரும் குற்றவுணர்வைச் சகிக்க முடியாமல் தவித்தபடியும் இருக்கிறான். அது ஆணாக அவனின் சுய அடையாளம்.

கதைசொல்லியாக அருணையே நியமித்திருக்கிறீர்கள். என்றாலும், அக்கதைக்குள் கதைசொல்லிகளாக சிவகாமியும், சந்திராவும், சுசியும் மறைமுகமாக இருக்கிறார்கள். மூவருமே பெண்கள் என்பதும், மூவரின் தளங்களும் வேறு வேறானவை என்பதும் கவனிக்கப்பட வேண்டியவை. மூவருக்கும் அருண் எனும் ஆண் தேவைப்படுகிறான். ஆனால், அந்த அருண் ’பல ஆட்களாக’ இருந்துவிடக்கூடாது என்பதில் மூவரும் உறுதியாக இருக்கின்றனர். பெண்களாக, அது அவர்களின் சமூக அடையாளம்.

முதலில் சிவகாமி. தன் கணவனைப் போல மகன் இருந்துவிடக்கூடாது என்பது மட்டுமே அவள் இலட்சியம். இங்கு அருண் ‘இலட்சிய மகன்’ பொறுப்பேற்க வேண்டிய நிலை. இரண்டாவது சந்திரா. அவளிடம் ‘அந்தரங்கத் தோழன்’ எனபதான பாத்திரம். மூன்றாவது சுசி. அவளிடம் ‘வாழ்க்கைத் துணைவன்’ என்பதான அடையாளம் பூண வேண்டிய நிலை. அருண் மூன்று அடையாளங்களையுமே விரும்புகிறான். ஆனால், அவற்றை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வதில் ’பொதுப்புத்திச் சிக்கல்’ குறுக்கிடுகிறது அல்லது மூவரும் தன்னை ஒதுக்கி விடுவார்களோ எனும் குற்றவுணர்ச்சி எழுந்து விடுகிறது. ஒருகட்டத்தில், அவன் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டி இருக்கிறது. அப்படியான தருணத்தில், மூன்று பெண்களும் தங்கள் நிலைப்பாடுகளில் தெளிவாக இருப்பதையும் அருண் புரிந்து கொள்கிறான். இங்குதான் ஆண் என்பவன் யார், பெண் என்பவள் யார் போன்ற கேள்விகள் தீவிரமாக முளைக்கின்றன.

ஆண், பெண்ணுக்குச் செல்வதற்கு முன்னால மனிதன் எனும் அடையாளத்திலிருந்து துவங்கலாம் என நினைக்கிறேன். ஒரு மனிதனுக்கு இரண்டு விதமான அடையாளங்கள் இருக்கின்றன. ஒன்று சமூக அடையாளம்; மற்றொன்று சுய அடையாளம். இரண்டு அடையாளங்களும் இல்லாத மனிதனைப் பார்க்கவே முடியாது. சுய அடையாளத்தை வாழ்வு என நம்பும் மனிதனை ஆண் என்பவனாகவும், சமூக அடையாளத்தை வாழ்வு என நம்பும் மனிதனை பெண் என்பவளாகவும் பொதுவெளி வரையறுத்திருப்பதாக நினைக்கிறேன். சுய அடையாளத்தைச் சமூக அடையாளமாக மாற்ற ஆணும், சமூக அடையாளத்தைச் சுய அடையாளமாக மாற்றப் பெண்ணும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். அப்போராட்டம் வெற்றி பெறுமா எனத் தெரியவில்லை. என்றாலும், போராட்டம் தொடர்ந்தபடி இருக்கிறது. அப்போராட்டத்தின் முதன்மைப் படைக்கருவியாக காமம் முன்நிற்கிறது.

சிவகாமியின் காமத்தைக் கண்டுகொள்ளாமல் அல்லது அதில் சலித்துப் போய் நகர்ந்து விட்டவர் அருணின் அப்பா. சிவகாமி எங்கும் இதைச் சொல்லாவிட்டாலும், அருணின் அப்பா மீது அவள் காட்டும் கோபத்திலிருந்து அவள் சீற்றம் புரிபடுகிறது. அதனால் சிவகாமிக்கு மூண்ட கோபத்திற்கு வடிகாலாக அவள் அருணைத் ’தீர்மானிக்க’ எத்தனிக்கிறாள். ஏனென்றால், அவன் அப்பாவின் துளிதான் அருண். அவனை நெறிப்படுத்துவது         என்பது அவளின் கோணத்தில் அவன் அப்பாவை நெறிப்படுத்துவது அல்லது ஒழுங்குபடுத்துவது. கூடவே, அவர் விட்டுப்போனதில் அவளின் சமூக அடையாளத்துக்கு ஆபத்து வந்து விட்டது. அதுவும் அவளுக்கு ஆகப்பெரும் கோபம்.

சந்திராவின் காமத்தைப் பொதுவெளி ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது. எனினும், புலி உடலின் வரிகள் போன்று நிதர்சனமானது. பத்துவயது மகனோடு வாழ்ந்துவரும் நாற்பதைத் தொடாத பெண் என்பதால், அவளின் காமம் சமூக அடையாளத்துக்காகப் பொத்தி வைக்கப்பட்டிருக்கும் என்பதே சரி. பொத்தி வைத்த காமத்தை அருண் ஒத்திக் கொடுக்க அது வெளிப்பட்டு விடுகிறது. ”அவள் என் கண்முன் மெல்ல மெல்ல வெறும் உடம்பாக ஆகிக்கொண்டிருந்தாள்” எனும் விவரணை முக்கியமானது. ”என் எல்லாக் கவசங்களையும் கழற்றி வைத்து விட்டு அவள் மட்டுமே கோலோச்சும் ஒரு வெட்ட வெளியில் என்னை நிற்க வைத்து விட்டாள் என்று உணர்ந்தேன்” எனும் கதைசொல்லியின் மனநிலையே சந்திராவின் வார்ப்பு.

சுசியின் காமம் அதிஇளமையானது, வெகு புனிதமானது. சுசியை முதன்முறையாகப் பார்க்கும்போதே அவனை ஈர்த்து விடுகிறாள். அவனையறியாமல் அவனின் கண்கள் அவள் முலைகளை நோக்கிய குவிகின்றன. சுசியும் அதைக் கண்டுகொள்கிறாள். எனினும், ஒரு ‘சமூக அடையாளம்’ வழியாகவே அவ்வுறவை மேலெடுத்துச் செல்ல விரும்புகிறாள். கூடுதலாக, அருண் தனக்கு மட்டுமே உரியவனாக, ‘புனிதனாக’ இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறாள்.

”பெண்கள் மட்டுமே அந்த உச்சகட்ட குரூரத்தின் தருணங்களை அடையாளம் காண்கிறார்கள். அவர்கள் எப்போதும் எதிரில்லாமல் வென்றபடியேசெல்கிறார்கள்” எனும் கதைசொல்லியின் கூற்றைத் தவறவிடாமல் வாசித்தால் மூன்று பெண்களின் மையத்தையும் ஓரளவு நெருங்கிவிட முடியும். கதைசொல்லி ஆண் என்பதால், ஆணாதிக்கப்பார்வை என்பதான மொக்கை விமர்சகர்கள் கிளம்ப வாய்ப்பிருக்கிறது. இங்குதான் ஒரு வாசகன் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

மூன்று பெண்கள் வழியாக மூண்டிருக்கும் காமமெனும் அனல்காற்றை எதிர்கொள்ள இயலாமல் அருண் தவித்தபடி இருக்கிறான். அவனுக்கும் மூன்று பெண்களின் அண்மையும் தேவைப்படுகிறது. ஏனென்றால், அவனின் சுய அடையாளமே அவனுக்குப் பிரதானம். அதைச் சமூக அடையாளமாக மாற்றுவதற்கு அவன் போராடுகிறான். என்றாலும், அப்போராட்டம் அவனுக்கு அதிக அலைக்கழிப்பையே கொடுக்கிறது. “பெண்மையின் முடிவிலா ஜாலங்களில் சிக்கி அழிவதையே ஆணுக்கு இன்பமென வைத்திருக்கிறான் உலகியற்றிய முட்டாள்” என ஒருவரி நாவலில் வரும். அதன் தீட்சண்யத்தை விளங்கிக் கொள்ள அறிவுஜீவிகளால் முடியாது என்றே கருதுகிறேன். ஏனென்றால், நீங்கள் சொல்லி இருப்பதைப் போன்று.. அறிவுஜீவிகள் எதையும் திட்டவட்டமாகப் புரிந்து கொள்ள முயல்பவர்கள்; எல்லாவற்றையும் திட்டவட்டமாக ஆக்கிக்கொள்ள முடியாதென்பதையே அறியாதவர்கள்.

இங்குதான் காமத்தைக் காத்திரமாகவும் பேசியாக வேண்டி இருக்கிறது. ஆண்-பெண் உடல்களின் சேர்க்கையாகவே காமத்தைப் பொதுப்புத்தி வரையறுத்திருக்கிறது. அச்சிக்கலில் இருந்து முதலில் மீள வேண்டும். ஒரு மனிதன் தனது அடையாளங்களைத் தக்க வைத்துக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் காமமே. தனது ஆன்மீக அடையாளாத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஒரு மடாதிபதி மேற்கொள்ளும் முயற்சியை உச்சபட்சக் காமம் என உரக்கச் சொல்ல முடியும்(இவ்விடத்தில் மடம் சிறுகதையின் கனபாடிகள் நினைவுக்கு வருகிறார்). பிரபஞ்ச இயக்கமே காமத்தின் மீதுதான் நிற்கிறது. மனிதனிடம் என்ன சிக்கல் என்றால்.. அவன் காமத்தைத் தனது வசதிக்கேற்ப மதிப்பீடுகளாகவும், விழுமியங்களாகவும் மாற்றிக் கொண்டான். அதுவே அவனை அலைக்கழிக்கிறது; அலைக்கழித்தபடிதான் இருக்கும். ஏனென்றால், அவன் வாழ்வை அவனே உருவாக்கி இருக்கிறான். அதுவே அவனின் வரமும், சாபமும். இங்குதான் ”உடல் நம் மனம் போல புத்தி போல ஆன்மா போல நம்முடையது அல்ல. அது இந்தப் பிரபஞ்சத்தின் சிறுதுளி. பிரபஞ்சத்தின் மாற்றமில்லாப் பெருநியதிகளுக்குக் கட்டுப்பட்டது. பிரபஞ்சத்தைப் புரிந்து கொண்டால் ஒழிய உடலைப் புரிந்து கொள்ள முடிவதில்லை” எனும் வரிகள் துலக்கம் பெறுகின்றன.

ஒரு ஆணையோ, பெண்ணையோ நல்லவன்-கெட்டவன் சிமிழுக்குள் திணிக்க கதைசொல்லி முயலவில்லை. இருதரப்பிலுமான உணர்வுகளின் விசித்திரத்தையே அவன் பகிர்ந்து கொண்டிருக்கிறான். “மனுஷனும் ஒரு மிருகம்தான். வெறும் மிருகம் கிடையாது. கண்ணீர் விட்டு அழக்கூடிய மிருகம். ஆனாலும் மிருகம்தான்” என்று அருண் ஓரிடத்தில் குறிப்பிடுவான். அனல்காற்று வாசிப்பனுபவத்துக்குப் பிறகு.. ஆணும், பெண்ணும் எனக்குள் விசித்திர மிருகங்களாக உலவத் துவங்கி இருக்கின்றனர்.

உயிர்நலத்தை விரும்பும்,

சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்.

அனல்காற்று விமர்சனம் -கடிதம்
அனல்காற்று விமர்சனம் .
அனல்காற்று , சினிமா- கடிதம்
அனல்காற்று எழும் காமம்
அனல்காற்று, பின்தொடரும் நிழலின்குரல்- கடிதங்கள்
அனல்காற்று-கடிதம்
அனல்காற்று-இருகடிதங்கள்
அனல்காற்று,ஒரு விமரிசனம்
அனல்காற்று கடிதங்கள்,அனுபவங்கள்
அனல்காற்று:கடிதங்கள்
அனல்காற்று மேலும் கடிதங்கள்
அனல்காற்று:கடிதங்கள்
அனல்காற்று:கடிதங்கள்
முந்தைய கட்டுரைசெவ்வல்லி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநெல்லை உரை, கிருஷ்ணாபுரம் ஆழ்வார் திருநகரி பயணம்