செவ்வல்லியின் நாள்

a

முன்பொருமுறை சுந்தர ராமசாமியிடம் பேசும்போது “தமிழில் பெரும்பாலான எழுத்தாளர்களின் ஆக்கங்களில் இயற்கைவர்ணனையே இருப்பதில்லையே, ஏன்?” என்று கேட்டேன். சிரிப்புடன் “வர்ணிக்க இயற்கை இருக்கணுமில்லியா?” என்றார். அது குமரிமாவட்டத்துக்காரரின் பெருமிதம்.

குமரிமாவட்டம் எப்போதுமே பசுமையானது. இரண்டு பெரிய மழைக்காலங்கள். குட்டிக்குட்டி மழைகள் மேலதிகமாக. இரண்டு மழைக்காலங்களுமே அழகானவை. ஜூன், ஜூலையில் தொடங்கும் முதல்மழைக்காலம் சீரான தொடர்மழை கொண்டது. அதன்பின் ஆடிச்சாரல் இருபதுநாள். பின்னர் வானம் தெளிந்து ஓணம்.

b

அக்டோபரிலேயே தொடங்கும் இரண்டாவது மழைக்காலத்தில் இடிகுறைவு. மழை தனித்தனியான மழைகளாக நின்று பெருகியிறங்கும். இரவு முழுக்க மழை.பெய்தாலும் பகலில் பெரும்பாலும் எங்கும் நீர் தேங்கியிருப்பதை காணமுடியாது. நிறைய மழைபெய்யும் ஊர்களில் நீர் தன் வழியை தானே கண்டடைந்திருக்கும்

மழைமணல் வரிகளால் ஆகியிருக்கும் முற்றங்களும் சாலைகளும். வெள்ளிரேகையில் வானவில் சூடியபடி நத்தைகள் சென்றுகொண்டிருக்கும். குளிர்காற்றில் தென்னையோலைகள் சுழன்றுகொண்டிருக்கும் ஓசை. இந்த மழைக்காலத்தின் வண்ணம் வேறு. ஜூன்மாத மழைக்கு கொஞ்சம் வெளிச்சம் குறைவு. எப்போதுமே இருட்டு. இது அவ்வப்போது எழும் இளவெயிலில் நீர் ஒளிகொள்ளும் பருவம். நீரே ஒளிதானோ என உளம் மயங்கும் காலம்.

c

காலையில் எழுந்ததும் மழை பெய்துகொண்டிருந்தது. எண்ணிக்கொண்டதுபோல நின்றுவிட்டது. உடனே குடையை எடுத்துக்கொண்டு நடக்கக் கிளம்பினேன். சாரதா நகரின் நுழைவில் ஒரு சிறிய அல்லிக்குளம். அதில் இம்முறை முழுக்கமுழுக்க செவ்வல்லி. சிவப்பு என்று சொல்லமுடியாது, சற்றே நீலம்கலந்த சிவப்பு. மலர்நிறைந்த குளத்தில் இலைகளுக்குமேல் பல்லாயிரம் நீர்முத்துக்கள் சுடர்கொண்டிருந்தன

மணல்படிந்த சாலையினூடாக சென்றேன். மழைத்திரை இழுக்கப்பட்டு மலைகள் வெளிவந்திருந்தன. காற்று நன்றாகக் கழுவப்பட்டிருந்தமையால் மலைகளை மிக அருகே காணமுடிந்தது. மரங்களைக்கூட பார்க்கமுடியுமென தோன்றியது. மழை மலையின் மேல் நூற்றுக்கணக்கான வெள்ளிச்சரடுகளைத் தொங்கவிட்டிருந்தது

d

வயல்பணிகள் தொடங்கிவிட்டிருந்தன. பல இடங்களில் பூமயிர்ப்பரப்பென நாற்றடிகள் ஒருங்கியிருந்தன.நீர் நிறைந்த வயல்களில் வானம் இறங்கியிருந்தது. ஒருவர் வானத்தை கலக்கி பரப்பிக்கொண்டிருந்தார். ஒரு பெண்மணி வானத்தில் நாற்றுநட்டுக்கொண்டிருந்தார்

பனைகளின் கன்னங்கருமை. தென்னைகள் முற்றாக நனைவதில்லை. பாதியுடல் நனைந்திருப்பதே வழக்கம்.ஆனால் இத்தகைய பெருமழை அவற்றையும் முழுக்க நனைத்துவிட்டிருந்தது. அரசமரமும் ஆலமரமும் கிளைகளை உதறி இலைக்கொந்தளிப்புடன் நின்றன

e

பேச்சிப்பாறை கால்வாயில் மழைநீரே நிறைந்து சுழிந்த்து சென்றுகொண்டிருந்தது. அதன் அனைத்து துணைவழிகளையும் மதகுதிறந்துவிட்டிருந்தனர். அவை அருவிகளுக்குரிய ஓசையுடன் பொழிந்தோடின. நீர் சுழிக்கும் ஓடை பெரிய செம்பட்டை பிடித்து வகைவகையாக முறுக்குவதுபோல புரண்டு சென்றது.

தாமரைக்குளத்தில் மலர்கள் இல்லை. கோடையில் மலர்கள் மட்டுமே தெரியும். இப்போது நீர்த்துளிகள் நலுங்கும் இலைப்பரப்பு மட்டுமே. ஒவ்வொரு மணியும் ஒரு துளி வானம்.

i

மானுட விழிக்குத் தேவைக்குமேல் ஒளி விண்ணிலிருந்து வழிகிறது. காட்சிகளை ஒளியே மறைத்துவிடுகிறது. மழை மாபெரும் திரைச்சீலையால் உலகை மூடிவிடுகிறது. அதன்பின் தேவையான மெல்லொளியை தானே உருவாக்குகிறது

வெயிலில் ஒவ்வொரு பொருளும் வெம்மையால் காட்சியாகின்றன. மழையில் அவை தண்மையால் காட்சியாகின்றன. செல்லும் வழியில் கணியாகுளத்தின் சிறிய டீக்கடையில் மண்ணெண்ணை அடுப்பு எரிகிறது. அந்தச் செந்தழல்கூடக் குளிர்ந்திருக்கிறது

f

தலைக்குடைகளுடன் விவசாயிகள் சென்றுகொண்டிருந்தார்கள். வயல்களில் தலைக்குடைகள் குனிந்திருந்தன. நீருக்குமேல் அலையெழுப்பியபடி நாரை ஒன்று சென்றது. கலப்பைமுனையை வைத்ததுபோன்ற கருங்கால் நாரை. கொக்குக்கூட்டங்கள். குளக்கோழிகள்.

மீண்டுமொரு மழை இருட்டத் தொடங்கியது. வானம் உறுமியது. தெற்கே மின்னல்கள் கிளைபிரிந்து நரம்புகளாக அதிர்ந்து அடங்கின. நான் திரும்புவதற்குள் பொழியத் தொடங்கிவிடும். என எண்ணிக்கொண்டிருக்கையிலேயே குடைமேல் மழை அறைந்தது. கம்பிகள் வளைய நீர்ப்பெருக்கு. தரையில் நீர் விழும்போது சிறுசிறு சேற்றுப்பூக்கள் துள்ளி துள்ளி மறைந்தன

g

எப்போதும் எனக்குப் பிரியமான வரிகளில் ஒன்று, தேவதேவனின் கொக்குபூத்த வயல். தேவதேவனின் அண்டைவீட்டாரான எழுத்தாளர் மோகனன் அந்த தலைப்பில் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். கொக்கு வயல்களில் ஆம்பல் போல பூத்திருக்கும். பறக்கும் மலர்கள்!

உழுபவருக்குப்பின்னால் கொக்குகள் செல்வதை பார்த்துக்கொன்டு நின்றபோது டோராவை நினைத்துக்கொன்டேன். நாம் வீட்டுக்கு வெளியே என்ன வேலை செய்தாலும் டோரா மகிழ்வாள். வாலட்டிக்கொன்டு பின்னாலேயே வருவாள். அவள் பிடித்து குதறிப்போட்டிருக்கும் ஓணான்கள் பல்லிகளை அள்ளி அப்பாலிடும்போது கடுப்பாக இருக்கும். ஆனால் ‘இதோ இன்னொண்ணு… இந்தா இங்கிணயும் ஒண்ணு. எல்லாம் நம்ம வேலைதான்’ என அவள் மகிழ்ச்சியாக கூடவே வருவாள்.

IMG_20181104_080314

விழிசெறிந்து முத்தாலம்மன் அமர்ந்திருந்தாள். அவள் கோபுரம் குளிர்ந்திருந்தது. அதன்மேல் பெய்தமழையின் எச்சமென இளஞ்சாரல் இறங்கியது. பச்சைவயல்களுக்கு அப்பால் ஷேக் ஔலியாவின் தர்கா தன்னந்தனிமையில் கிடந்தது  அவர் நாடிவந்த தனிமையை மழை மூடிக்காத்துக் கொண்டிருக்கிறது

வெண்முரசு எழுதுவதற்கு முன் வேண்டிக்கொள்வதற்காக சென்ற இடங்களில் ஒன்று பீர்முகமது அப்பா அவர்களின் தர்கா. ஆனால் அங்கு நின்றபோது இங்கு வரவேண்டுமெனத் தோன்றியது. ஆண்டில் ஐந்துநாட்களுக்கு மட்டுமே ஆளரவம் இருக்கும் ஷேக் அவர்களின் தர்காவில் பிரார்த்தனை செய்யும் ஒரே ஒருவன் நான் மட்டுமே. அவருடைய அபாரமான தனிமையிலிருந்து பெறும் சொற்களின் எடை மிக அதிகம்

l

காகங்களின் சிறகுகளுக்கு சற்றுமுன்  கழுவப்பட்டவை போல விழிமட்டுமே அறியும் ஓர் ஈரம் உண்டு. பாம்புகளுக்கும் அரணைகளுக்கும் அந்த ஈரம் உண்டு. ஆனால் கீரிகள் ஈரத்தால் படிந்த மென்மயிர்களுடன் செல்வதை இப்போதுதான் காணமுடியும்.

பூவரச இலைகளுக்கும் கைக்குழந்தை உடல்போல் மென்மையே ஈரமெனத்தெரியும் ஓர் ஒளி உண்டு. மழையில் அவை மடிந்து மடிந்து அசைந்துகொண்டிருந்தன. நூற்றுக்கணக்கான சேம்புகள் இலைகளை குட்டியானைச் செவிகளைப்போல் திருப்பியபடி காற்றில் திகழ்ந்தன

j

இந்த மண்ணின் விலங்கு என மழையை கரிய முதுகில் ஏற்று மெல்ல நடந்துசென்றது எருமை. நிரந்தரமாகவே ஒரு கரிய கூடாரத்துக்குள் குடியிருக்கிறது அது. எருமையின் கண்களுக்குத்தான் எத்தனை குளுமை. அது தன்மேல் ஏற்றுக்கொண்ட அத்தனை மழைகளிலும் இருந்து பெற்றுக்கொண்டதுபோலும்.

வீட்டுக்கு நடந்துவந்தபோது எண்ணிக்கொண்டேன். இரண்டுமணிநேர நடை. வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்குள் இயற்கையின் இத்தகைய மாபெரும் தோற்றம். தமிழ்நாட்டில் வேறு எந்த ஊரில் குடியிருந்தால் இது கிடைக்கும்?

h

வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். விழிகளினூடாக உளம் நிறைவதைப்போல் அரிய ஊழ்கம் பிறிதில்லை. இங்கிருக்கிறோம் என்னும் நிறைவு அது. இவையனைத்தையும் நம்மைச் சூழப்பரப்பி இன்னும் வேண்டுமா இவை போதுமா என கேட்கிறது இவையனைத்தும் ஆன அது. ஆம், இங்கிருக்கிறேன் என அதற்குச் சொல்கிறேன்

இந்த மண்ணில் பிறந்த மூதாதையருக்கு வணக்கம். இந்தம்மழையின் அழகறிந்த  அத்தனை கலைஞர்களுக்கும் வணக்கம். இந்த குளிர்ந்த எருமைகளுக்கு அடிபணிந்து வணக்கம்.

========================================================

பார்வதிபுரம் கணியாகுளம் பாறையடி ஓர் ஏக்கம்

கணியாகுளம்,பாறையடி…

கணியாகுளம்-ஆலம்பாறை:என் மாலைநடை வழி

ஆனைக்கல் துளிச்சொட்டு சாஸ்தா

குன்றுகள்,பாதைகள்

முதல் மழை

வரம்பெற்றாள்

இடவப்பாதி

குருகு

ஒருநாள்

வாசிப்பறை கடிதங்கள்

அம்மை

முந்தைய கட்டுரைகடைசி முகலாயன்: ஒரு மதிப்புரை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-59