துரியோதனனின் சொல்சூழ் அவையில் அரசர்கள் ஒவ்வொருவராக வந்து அமர்ந்துகொண்டிருந்தனர். அவர்களின் ஒற்றைச் சொற்களும் ஆடையசைவின் ஒலிகளும் கலந்து கேட்டுக்கொண்டிருந்தன. பிருஹத்பலன் கைகூப்பியபடி உள்ளே நுழைந்து அவையை ஒருமுறை விழிசுழற்றி நோக்கியபின் கூர்ஜர அரசர் சக்ரதனுஸை நோக்கி தலை அசைத்தான். அவர் மெல்லிய புன்னகை பூத்து தலையசைத்தார். அவன் தன் பீடத்தில் அமர்ந்து அருகிலிருந்த அனுவிந்தனிடம் பேசுவதற்காக திரும்பி, உடனே திகைத்து அதை உடனே மறைத்து இன்சொல் எடுத்தான். அருகே இருந்த காரூஷநாட்டு க்ஷேமதூர்த்தி “நன்று, கோசலரே” என்றார்.
அவனிலிருந்த திகைப்பை புரிந்துகொண்டு க்ஷேமதூர்த்தி “அவந்தியின் படைகளை நான்காக பிரித்து புளிந்தர்களுடன் இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். காரூஷப் படைகளும் புளிந்தர்களுடன் நின்றுள்ளன” என்றார். “நன்று” என்று பிருஹத்பலன் சொன்னான். க்ஷேமதூர்த்தி “படைகள் குறைந்துகொண்டே இருக்கின்றன. ஒருவரை ஒருவர் முன்பறியாதவர்கள் இணைந்து நிற்கவேண்டியிருக்கிறது. என்ன துயரென்றால் முன்னரே போரிட்டுக்கொண்ட படையினர்கூட சேர்ந்து நிற்கவேண்டியிருக்கிறது. புளிந்தர்களுடன் இணைந்துள்ளனர் அஸ்மாகநாட்டுப் படையினர். அவர்களுக்கும் அவந்தியினருக்கும் நூறாண்டுகளாக போர் நிகழ்ந்துள்ளது” என்றார்.
கொம்பொலி எழுந்ததும் கைகூப்பியபடி துரியோதனன் அவைக்குள் நுழைந்து பீடத்தில் அமர்ந்தான். நிமித்திகன் அவை கூடும் நோக்கத்தை உரைத்து முடித்ததும் பூரிசிரவஸ் எழுந்து முகமன்கள் ஏதுமில்லாமல் “வெற்றி திகழ்க!” என வாழ்த்தி தொடங்கினான். “அவையினரே, இந்த எட்டு நாள் போரில் நாம் பாண்டவப் படைகளின் பெரும்பகுதியை அழித்துவிட்டிருக்கிறோம். நமது திறல்மிக்க படைத்தலைவர்களாகிய பீஷ்மரும் துரோணரும் கிருபரும் ஜயத்ரதரும் சல்யரும் அஸ்வத்தாமரும் தங்கள் முழு செயலூக்கத்துடன் களம் நின்றிருக்கிறார்கள். ஆம், வெற்றி எளிதல்ல என்று தெரிந்தது. ஆனால் அணுக அரிதல்ல என்றும் தெளிவாக இருக்கிறது. நாம் வெல்வோம் என்னும் உறுதி அமைந்துள்ளது” என்றான்.
“இன்னும் ஓர் அடிதான். உடைந்து சரிவதற்கு முன்வரை கற்கோட்டைகள் உடைவதற்கு வாய்ப்பே அற்றவை என்றே தோன்றும். அதன் அடித்தளத்தில் விரிசல் விழுந்திருப்பதை அதனுடன் மோதும்போது மட்டுமே நாம் புரிந்துகொள்ள இயலும். அவையீரே, நான் உணர்கிறேன் பாண்டவப் படையின் அடித்தளம் சரிந்துவிட்டது என்று. ஒருகணம், இன்னும் ஒருகணம், அது முழுமையாகவே சரிந்து சிதறும். அந்தக் கணம் வரை நாம் நின்று பொருதியாக வேண்டும். அதற்கு முந்தைய கணம் வரை நம்பிக்கை இழக்கவும் பின்னடையவும் வாய்ப்பிருக்கிறது. நாம் பொருத வேண்டியது நம்முள் நம்பிக்கையின்மையாகவும் சோர்வாகவும் வெளிப்படும் அந்த இருள்தெய்வங்களுடன் மட்டுமே. தவம் கனியும்தோறும் எதிர்விசைகள் உச்சம் கொள்ளும். வழிபடு தெய்வம் எழுவதற்கு முன்னர் இருள்தெய்வங்கள் தவம் கலைக்க திரண்டு எழும். நாம் வெல்வோம். வென்றாகவேண்டும். நாம் உளம்தளராது முன்சென்றால் முன்னோர் நமக்கென ஒருக்கிய கனிகளை கொய்வோம். ஆம், அவ்வாறே ஆகுக!”
“ஆம்! ஆம்! ஆம்!” என்று அவை ஓசையிட்டது. “இன்றைய போருக்கென படைசூழ்கையை வகுத்துள்ளேன். அவற்றை ஓலைகளாக்கி அரசருக்கும் படைத்தலைவர்களுக்கும் அளித்துள்ளேன். நீங்கள் அனைவரும் அதற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்” என்றான் பூரிசிரவஸ். “இந்தப் படைசூழ்கை நேற்றே பிதாமகர் பீஷ்மரால் எனக்கு அறிவிக்கப்பட்டது. நான் அதை பகுத்து வரைந்தெழுப்பினேன். சர்வதோபத்திரம் என்று நூல்களில் சொல்லப்படுவது இது. பன்னிரு ராசிக்களத்தின் வடிவில் அமைந்தது. இதன் மையம் என சகுனி அமைவார். பன்னிரு களங்களில் பன்னிரு போர்த்தலைவர்கள் தலைமைகொள்வார்கள். துரியோதனர் தன் இளையோருடன் ஒரு களத்திலமைவார். பீஷ்ம பிதாமகரும் ஜயத்ரதரும் சல்யரும் அஸ்வத்தாமரும் நானும் கிருபரும் துரோணரும் பால்ஹிகரும் பகதத்தரும் மாளவரும் கூர்ஜரரும் பிற களங்களில் அமைவோம். இது விடாது சுழன்றுகொண்டிருக்கும் சகடம். தேவைக்கேற்ப களத்தில் சுழன்று சுழன்று சென்று தாக்கும் வல்லமைகொண்டது.”
சல்யர் “பிதாமகர் பீஷ்மருக்கு நேர்பின்னால் துரோணர் அமையும்படி வகுக்கப்பட்டிருக்கவேண்டும்” என்றார். பூரிசிரவஸ் “ஆம், அப்படியே அமைந்துள்ளது” என்றான். “ஒருமுறை இச்சகடம் தன்னை சுற்றிக்கொள்ள என்ன பொழுதாகும்?” என்று ஜயத்ரதன் கேட்டான். “முழுப் படையும் சுற்றிவர அரைநாழிகைப் பொழுதாகும்… விளிம்பில் புரவிகளும் பின்னர் தேர்களும் அப்பால் காலாள்படையும் நின்றிருப்பதனால் சுற்றுதல் எளிது” என்றான் பூரிசிரவஸ். “ஓலைகள் அனைவருக்கும் செல்லட்டும்” என்றார் துரோணர். அஸ்வத்தாமன் “அவர்களின் படைசூழ்கை என்னவென்று தெரிந்ததா?” என்றான். “நம் படைசூழ்கையை ஒட்டியே அவர்களுடையது அமையும்… ஒற்றர்களை அனுப்பியிருக்கிறேன்” என்று துச்சாதனன் சொன்னான்.
படைசூழ்கைகள் பற்றிய சொல்லாடல்கள் சென்றுகொண்டிருப்பதை பிருஹத்பலன் நோக்கிக் கொண்டிருந்தான். அவர்கள் எவருக்கும் பெரிய ஆர்வமிருப்பதாக தெரியவில்லை. கிருபர் மேலும் சில ஐயங்களை கேட்டார். பூரிசிரவஸ் அவற்றை விளக்கினான். எதிர்பாராத தருணத்தில் சல்யர் எழுந்து “நான் ஒன்றை கேட்க விழைகிறேன். நாம் வகுக்கும் படைசூழ்கைகள் எவையேனும் அவற்றின் இயல்பான வெற்றியை அடைந்துள்ளனவா? ஒவ்வொரு படைசூழ்கையும் இணையான படைசூழ்கையால் எதிர்க்கப்படுமெனில் இவ்வாறு எண்ணி எண்ணி அமைப்பதற்கு என்ன பொருள்?” என்றார். “இதென்ன வினா?” என்று ஜயத்ரதன் திகைத்தான். “இது எளிய மலைமகனின் ஐயம் என்றே கொள்க… சொல்லுங்கள்” என்றார் சல்யர்.
பூரிசிரவஸ் “மாத்ரரே, இணையான படைசூழ்கையால் எதிர்க்கப்படுவதனால்தான் நாம் எளிதில் வெற்றியடையாமல் இருக்கிறோம். நாம் படைசூழ்கை அமைக்காது சென்றிருந்தால் இத்தருணத்தில் நாம் அனைவரும் விண்ணுலகிலிருந்திருப்போம்” என்றான். துச்சாதனன் “ஆம், கவசங்கள் அணிந்தே செல்கிறோம். ஆயினும் அவை உடைக்கப்படுகின்றன. ஆகவே கவசமணியாமல் களம்நிற்போமா?” என்றான். “படைசூழ்கை அமைக்காது செல்வதைவிட படைசூழ்கையை அமைத்துச் செல்வது மேல்” என்றான். அவன் இளிவரலாக சொல்கிறானா என்பது முகத்திலிருந்து தெரியவில்லை. பூரிசிரவஸ் “நாம் படைசூழ்கைகளை அமைப்பது வெல்லும் பொருட்டே. களத்தில் அச்சூழ்கைகள் தோற்கடிக்கப்படலாம். ஆனால் என்றேனும் ஒருமுறை நமது படைசூழ்கை அவர்களின் படைசூழ்கையைவிட ஆற்றல் மிகுந்ததாக அமையும். அத்தருணத்தில் நாம் வெல்வோம். அந்த வெற்றி நோக்கியே ஒவ்வொரு படைசூழ்கையும் அமைக்கப்படுகின்றது” என்றான்.
பிருஹத்பலன் கனைத்துக்கொண்டு எழுந்ததுமே சக்ரதனுஸ் தானும் எழுந்தார். பிருஹத்பலன் “இந்தப் போர் நீங்கள் எண்ணுவதுபோல் வெற்றி நோக்கித்தான் செல்கிறது என்பதற்கு என்ன சான்று உள்ளது? கௌரவர்கள் ஒவ்வொரு நாளும் இறந்துகொண்டிருக்கிறார்கள். கௌரவ மைந்தர் பாதிக்குமேல் கொல்லப்பட்டுவிட்டனர். இத்தருணம்வரை மறுதரப்பில் கொல்லப்பட்ட பெருந்திறலுடையவர் எவர்? சங்கனையும் ஸ்வேதனையும் சொல்வீர்கள் என்று நான் எண்ணவில்லை” என்றபோது அவையில் சிரிப்பொலி எழுந்தது. “நான் இளிவரலாடவில்லை. சொல்க, பாண்டவர்களில் ஒருவருக்கேனும் சிறு புண்ணாவது இதுவரை நிகழ்ந்துளதா? படைத்தலைமைகொள்ளும் திருஷ்டத்யும்னனோ சாத்யகியோ துருபதரோ கொல்லப்பட்டிருக்கிறார்களா?”
அவையில் ஓசைகள் எழுந்தன. “ஒவ்வொருநாளும் இங்கே வெற்றியென சொல்லெடுக்கப்படுகிறது. மெய்யாகவே கேட்கிறேன், எவருக்காக நாம் இச்சொற்களை இங்கு கூறுகிறோம்?” என்றான் பிருஹத்பலன். ஜயத்ரதன் “அவர்களை கொல்வோம். ஐயம் தேவையில்லை” என்றான். பிருஹத்பலன் “நாம் இந்த வஞ்சினங்களை உரைக்கத்தொடங்கி எட்டு நாட்களாகின்றன. கணம் கணமென நிகழும் இப்போரில் எட்டு நாட்களென்பது நெடும்பொழுது. இருதரப்பிலும் ஷத்ரியர்கள் கொன்றும் கொல்லப்பட்டும் அழிந்துகொண்டிருக்கிறோம். இந்தப் பொருளின்மையை இதற்குமேல் நாம் நீட்டிக்க வேண்டுமா?” என்றான்.
சக்ரதனுஸ் “ஆம், நான் கேட்க விழைவதும் இதுவே. இங்கே பொருளிலாத சாவுதான் நிகழ்கிறது. போர் என்பது எவர் மேல் என்பதை முடிவுசெய்யும் களநிகழ்வுதான். அதுவே நூல்கள் சொல்வது. மதம்கொண்ட களிறுகள்கூட மத்தகம்முட்டிக்கொண்டு வலுவறிந்ததும் போரை நிறுத்திக்கொள்கின்றன. ஆற்றலுடையதை அல்லது பணிகிறது. இருசாராரும் நிகர் என்றால் அதை எண்ணி போரை நிறுத்திக்கொள்வோம். இருசாராரும் முற்றழிவதுவரை போரிடுவோம் எனில் அது போரே அல்ல. எந்தப் போர்நூலும் அதை சொல்வதில்லை. காட்டில்கூட எந்த விலங்கும் அவ்வாறு போரிட்டுக்கொள்வதில்லை” என்றார்.
“நாம் என்ன செய்யவேண்டும் என தாங்கள் எண்ணுகிறீர்கள், கோசலரே?” என்று கிருபர் கேட்டார். “என்ன செய்யவேண்டுமென மூத்தோர் முடிவெடுங்கள். இங்கே ஷத்ரிய குலம் அழிந்துகொண்டிருக்கிறது. வேதங்களுக்கு வேலியாக முனிவர்களால் அமைக்கப்பட்டது இக்குலம். இப்போது களத்தில் இது முற்றழியுமெனில் நாளை வேதப்பயிர் இங்கு எவ்வாறு செழிக்கும்? இங்கு இந்த நெறிகள் அனைத்தும் எத்தகைய பெரும் குருதிச்சேற்றிலிருந்து முளைத்தெழுந்தவை என்று உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை. ஆயிரம் ஆண்டுகாலம் நெறியின்மையே திகழ்ந்த நிலத்தில் ரிஷிகள் இயற்றிய பெருந்தவத்தால் விளைந்தது இது. இங்கு வேதம் மழையென இறங்கியதால்தான் ஞானம் பொலிகிறது, செல்வம் நிறைகிறது” என்றான் பிருஹத்பலன்.
“வேதத்தின் பொருட்டே நாம் களம் நிற்கிறோம்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “ஆம், ஆனால் இப்போர் செல்லும் திசை நோக்கினால் வேதத்தின் காவலர்கள் முற்றழிவார்கள் என்றே தோன்றுகிறது. காவலை அழித்து வேதத்தை நிலைநிறுத்தவியலுமா? சூழ நிறைந்துள்ள வேதஎதிரிகள் முன் வேலியின்றி வேதத்தை திறந்திட்டு நீங்கள் அடையப்போவதென்ன?” என்று பிருஹத்பலன் கேட்டான். “சரி, நாம் என்ன செய்யவேண்டும்?” என்று துர்மதன் கேட்டான். கையை தூக்கி முன்னகர்ந்து “போரை நிறுத்தவேண்டுமென்கிறீர்களா? அது நிகழாது. எங்கள் உடன்குருதியினரின் பழிக்காக வேறு எவர் அகன்றாலும் நாங்கள் களம் நிற்போம்” என்று கூச்சலிட்டான்.
“உயிர்கொடுப்பது உங்கள் விழைவு” என்றான் பிருஹத்பலன். “நாங்கள் எந்த வஞ்சத்திற்காகவும் இங்கு வரவில்லை. வேதம் காக்கவே வந்தோம். வேதம் செழிக்கவேண்டுமெனில் ஷத்ரியக்குருதி எஞ்சியிருக்கவேண்டும். ஆகவே இப்போரிலிருந்து விலக எண்ணுகிறோம்.” எழுந்து கூர்ந்து நோக்கி தணிந்த குரலில் “போரிலிருந்து விலக எவருக்கும் ஒப்புதல் இல்லை” என்று துரோணர் சொன்னார். “விலகினால் என்ன செய்வீர்கள்? எங்களை கட்டுப்படுத்தும் விசை உங்களிடம் என்ன உள்ளது?” என்று பிருஹத்பலன் கூவினான். “வில் உள்ளது!” என்று துரோணர் சொன்னார். “ஐயமே வேண்டியதில்லை, இக்களத்திலிருந்து படையுடன் விலகிச்செல்லும் ஒவ்வொரு ஷத்ரியரும் எங்கள் எதிரிகளே. இப்போர் முடிந்து அவர்களை தேடி வருவோம் என்று எண்ண வேண்டியதில்லை, இப்போர்க்களத்திலேயே அவர்களை கொன்றழிக்கவும் துணிவோம்” என்றார்.
துரோணரின் முகத்தை பார்த்தபின் சக்ரதனுஸ் அமர்ந்துகொண்டார். பிருஹத்பலன் மெல்ல கைகள் நடுங்க சொல்லிழந்து தவித்து “அதற்கு உங்களுக்கு உரிமையில்லை” என்றான். “வெல்வதற்கான உரிமை ஒவ்வொரு ஷத்ரியனுக்கும் உள்ளது. வெல்வதன் பொருட்டே இங்கு களம் எழுந்துள்ளோம். போர்க்களத்தில் கைவிட்டு விலகுதல் கோழையின் செயல் மட்டுமல்ல அது பின்னின்று குத்தும் வஞ்சகமும்கூட. வஞ்சகரை கொல்வதற்கு அரசனுக்கு உரிமையுள்ளது” என்றார் துரோணர். “வென்றபின் சிறுபழிகளை தெய்வங்களுக்கு பலிகொடுத்து அழித்துக்கொள்வோம். அறமே வெல்லும், வெல்வதே அறம். வெல்லாதொழிந்தால் எந்த அறமும் பொருளற்றதே.” பிருஹத்பலன் மேலும் சொல்ல நாவெடுக்க கூரிய குரலில் “கோசலனே, வாள்பழி கொள்ளவேண்டியதில்லை. அமர்க!” என்றார் துரோணர்.
சல்யர் சீற்றத்துடன் “அவர்களுக்கு அதை சொல்ல உரிமையுண்டு, துரோணரே. நாம் அவர்களுக்கு எந்தச் சொல்லையும் அளித்து இந்தப் போருக்கு அழைத்து வரவில்லை. அவர்களே வஞ்சினம் உரைத்து வந்தார்கள். ஆகவே அவர்களுக்கு விலகிச்செல்ல உரிமை உள்ளது” என்றார். துரோணர் “அந்த நெறிகளை அவர்களின் சிதைகளுக்கு முன்னால் நின்று பேசி முடிவெடுப்போம். இங்கு வெற்றியொன்றே இலக்கு. ஐயம் தேவையில்லை, இப்படையிலிருந்து விலக முயலும் எவரும் அக்கணமே கௌரவப் படைகளால் கொன்றழிக்கப்படுவார்கள்” என்று துரோணர் சொன்னார். “அது மாத்ரர்களுக்கும் பொருந்தும்.”
சல்யர் “என்ன சொன்னாய், அறிவிலி!” என கூவியபடி எழுந்தார். “அமர்க, ஒரு சொல் இனி உன் நாவிலெழுந்தால் உன் தலை மண்ணில் கிடக்கும்! எனக்கு அதற்கு வில்லோ அம்போ தேவையில்லை” என்றார் துரோணர். கைகள் பதற தலைநடுங்க நின்று வாய்திறந்துமூடிய சல்யர் விழுவதுபோல் பீடத்தில் அமர்ந்தார். துரோணர் “இப்போர் தொடரட்டும். நாம் வெல்வோம். பிற எண்ணங்கள் அனைத்தும் அரசவஞ்சகம்” என்றார். ஜயத்ரதன் எழுந்து “அதை சிந்து நாட்டின் படைகள் வழிமொழிகின்றன” என்றான். ஷத்ரியர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் நோக்கியபடி அமைதியாக இருக்க பிருஹத்பலன் “நான் பின்னடைவதைப்பற்றி பேசவில்லை. பேரழிவைப்பற்றி பேசுகிறேன். அதை குறைப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை நீங்களே முடிவெடுங்கள். அதற்கு நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” என்றபின் கைகளை விரித்து தலைகுலுக்கி பீடத்தில் அமர்ந்தான்.
துரியோதனன் அங்கு நிகழ்ந்த சொற்களை கேட்காதவன்போல் அமர்ந்திருந்தான். அவையில் நிகழ்ந்த அமைதியை அவனுடைய மெல்லிய அசைவு கலைத்து அனைத்து விழிகளையும் ஈர்த்தது. “அவையினரே, இந்தப் போர் முற்றிலும் நிகர்நிலையில் நின்றுள்ளது என்பதே உண்மை” என தாழ்ந்த குரலில் அவன் சொன்னான். “ஓர் அணுவிடைகூட அவர்களோ நாமோ முன்னகரவில்லை. நாம் முன்னகர்ந்து வெல்ல வழி ஒன்றே. நம் தரப்பில் பெருவீரன் ஒருவனை உள்ளே கொண்டுவருவது. கர்ணன் போருக்கு இறங்கட்டும். இப்பொழுதேனும் பிதாமகர் பீஷ்மர் அதற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்” என்றான்.
பீஷ்மர் அதை கேட்கவில்லை. தாடியை நீவியபடி அரைவிழி சரித்து எங்கோ நோக்கி அமர்ந்திருந்தார். துரோணரின் முகம் சுருங்கியது. அவர் “கர்ணன் களமிறங்குவதனால் பெரிய மாற்றம் எதுவும் நிகழப்போவதில்லை” என்றார். “அவன் வெற்றியை ஈட்டி நம் கையில் அளிப்பான் என்று நான் சொல்ல வரவில்லை. ஆசிரியரையும் பிதாமகரையும்விட பெருவீரன் அவன் என்றும் நான் கூறவில்லை. ஆனால் அவனுக்கு இப்போரில் பெருந்திறலுடன் களம் நிற்கும் வீரம் உண்டென்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். முற்றிலும் நிகர்நிலையில் துலாவின் இரு தட்டுகளும் நின்றிருப்பதனால் அவன் ஒருவன் இப்பகுதியில் வரும்போது போரின் கணக்குகள் அனைத்தும் மாறத்தொடங்கும்” என்றான்.
துரோணர் ஏற்காமல் தலையசைத்தார். “அவன் பொருட்டு பிதாமகர் பீஷ்மர் கொண்டுள்ள ஒவ்வாமை நீங்குமெனில் நாம் வெற்றிநோக்கி செல்ல இயலும்” என்றான் துரியோதனன். “பிதாமகரிடம் நான் கனிந்து மன்றாடுகிறேன். பிதாமகர் பீஷ்மர் இக்கொடையை எனக்கு அளிக்க வேண்டும். என் விழைவுக்காகவோ வஞ்சத்துக்காகவோ அல்ல, இறந்த என் உடன்பிறந்தாரின் குருதிப்பழிக்காக” என்று சொல்லி கைகூப்பினான். பீஷ்மரின் அருகே குனிந்த கிருபர் என்ன நிகழ்ந்ததென்று சொல்ல அவர் உடல் நடுங்க எழுந்து “இல்லை! இல்லை!” என்று முதிய குரலில் கூவினார். “நான் இருக்கும் வரையில் இப்படையில் ஒருபோதும் சூதன் படைத்தலைமை கொள்ளமட்டான்” என்றார்.
“படைத்தலைமை கொள்ள வேண்டியதில்லை. இப்போரில் அவன் இறங்கட்டுமே என்றே சொன்னேன்” என்றான் துரியோதனன். “இங்கு அரக்கர்களும் நிஷாதர்களும் கிராதர்களும்கூட படை நின்றிருக்கிறார்கள் அல்லவா?” பீஷ்மர் “ஆம், அவர்களில் ஒருவனாக அவன் களம் நிற்கட்டும். ஆனால் அங்க நாட்டுப் படையுடன் அவன் வரக்கூடாது. அவன் கொடி கொண்டோ முடி கொண்டோ களத்தில் நிற்கக்கூடாது” என்றார். “அதை நாம் எப்படி சொல்ல முடியும்?” என்று துரியோதனன் சொன்னான். “நான் சொல்கிறேன். அவன் ஷத்ரியனாக உருக்கொண்டு இங்கு நின்றிருக்கக்கூடாது. நீ சொல்வதுபோல் விழைந்தால் கிராதனாக வரட்டும், நிஷாதனாக வரட்டும்” என்றார் பீஷ்மர்.
“தாங்கள் என் மேல் வஞ்சம் கொண்டு பேசுவதுபோல் உள்ளது” என்றான் துரியோதனன். பீஷ்மர் சினத்துடன் “வஞ்சம் கொண்டு பேசுகிறேன் என்றால் இதுநாள் வரை உனக்காக களத்தில் நின்றிருக்கமாட்டேன். இந்தப் போர் எங்கு வென்றாலும் எனக்கொன்றுமில்லை. இத்தனை ஆண்டுகள் மண்ணில் கடுநோன்புகள் கொண்டு நான் ஈட்டிய அனைத்தையும் இந்தக் களத்தில் நெறிபிறழ்வதனூடாக இழந்துகொண்டிருக்கிறேன். என்னில் குடியேறிய எட்டு வசுக்களில் எழுவரை இழந்துள்ளேன். எஞ்சியுள்ளவன் என் நாள்தேவனாகிய பிரபாசன் மட்டுமே. அவ்விழப்புகள் அனைத்தும் உனக்காகவே. இன்னும் நூறு பிறவிகள் வழியாக நான் ஈட்டி நிகர்செய்யவேண்டியவை அவ்விழப்புகள்” என்றார்.
“தாங்கள் எங்களுக்காக களம் நிற்கவில்லை என்றோ இழக்கவில்லை என்றோ சொல்லவில்லை. பிதாமகரே, வெற்றிக்கான ஒரு வழி திறந்திருக்கையில் தங்கள் தனிப்பட்ட ஒவ்வாமையால் அதை தவிர்க்க வேண்டாம் என்று மட்டுமே கோரினேன்” என்று துரியோதனன் சொன்னான். “அது வெற்றிக்கான வழி அல்ல, பேரிழிவுக்கான வழி. மானுடர் இப்புவியில் அடைவனவற்றின் பொருட்டு வாழக்கூடாது, விண்ணில் ஈட்டப்படுவனவும் அவர்களின் கணக்குகளில் இருந்தாகவேண்டும். இங்கு வென்று, அங்கு பெரும்பழி ஈட்டி நீ அமைவாய் என்றால் அதை உன் தந்தையாக நான் ஒருபோதும் ஒப்ப இயலாது” என்றார் பீஷ்மர்.
“தங்கள் சொற்கள் எனக்கு புரியவில்லை” என்றான் துரியோதனன். “இதற்கு அப்பால் எனக்கும் கூறுவதற்கு ஒன்றுமில்லை” என்று பீஷ்மர் சொன்னார். “நான் எண்ணுவது உனது பெருமையைக்குறித்து மட்டுமே. நீ இந்த அவையில் அவன் பெயரைச் சொன்னது எப்படி விளக்கினாலும் என் மேல் உள்ள நம்பிக்கை இழப்பையே காட்டுகிறது. என்னால் வெல்ல முடியாதென்று நீ சொல்கிறாய் என்றே அதை வரலாறு பொருள்கொள்ளும்” என்றார் பீஷ்மர். “அவ்வாறல்ல. பிதாமகரே, களத்தில் ஒருவரும் இதுவரை வெல்லவில்லை என்பதை நான் அறிவேன். தாங்கள் இருக்கும்வரை என்னை எவரும் தோற்கடிக்க இயலாதென்று உறுதி கொண்டுள்ளேன். ஆனால்…” என்று அவன் சொல்ல அவர் கைவீசி அதை தடுத்தார்.
“அந்த ஆனால் எனும் சொல்லே கர்ணனாக இங்கு வரவிருக்கிறது” என்று பீஷ்மர் கூவினார். அவருடைய உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. தன் மரவுரியாடையை இழுத்து தோளிலிட்டபடி கிளம்புவதுபோல் அசைந்தார். “இப்போரில் எட்டு நாட்களுக்குப் பின் அவன் களம் இறங்குவான் எனில் அது எனக்கு பெரும்பழியையே சேர்க்கும். ஒன்று செய்கிறேன், நான் வில் வைத்து பின்னடைகிறேன். காட்டுக்கு சென்றுவிடுகிறேன். என் பிழைகளுக்காக கடுநோன்பு கொண்டு அங்கு உயிர் துறக்கிறேன். கர்ணன் நின்று உன் படையை நடத்தட்டும். நீ விழையும் வெற்றியை உனக்கு அவன் ஈட்டி அளிக்கட்டும்” என்றார் பீஷ்மர்.
பதற்றத்துடன் துரியோதனன் எழுந்தான். “பிதாமகரே!” என்று அழைத்து கைநீட்டி முன்னால் வந்தான். “நான் சொல்வதை தாங்கள் புரிந்துகொள்ளவில்லை. அளிகூர்ந்து என் சொற்களை நோக்குக! முற்றிலும் நிகர்நிலையில் இன்று இரு படைகளும் நின்றிருக்கையில் அவன் நம் தரப்புக்கு வருவது சற்று முன்தூக்கம் அளிக்கும். அந்தச் சிறு வேறுபாடே நமக்கு வெற்றியை ஈட்டும். தாங்கள் அகன்று அவ்விடத்துக்கு அவன் வந்தால் நம்மில் இருக்கும் ஆற்றல் மேலும் குறையும். அது உறுதியாக என் தோல்விக்கே வழிவகுக்கும். பிதாமகரே, தங்களுக்கிணையான போர்வீரர் எவரும் இந்த பாரதவர்ஷத்தில் இல்லை என்பதை தாங்களே அறிவீர்கள்.”
“அந்தப் பேச்சை இனி பேசவேண்டியதில்லை. நாங்கள் இருவரும் இணைந்து ஒரு போர்க்களத்தில் நின்றிருப்பது ஒருபோதும் நிகழாது” என்றார் பீஷ்மர். கிருபர் “அவன் இப்போரில் கலந்துகொள்ள வேண்டியதில்லை என்றே நானும் எண்ணுகிறேன்” என்றார். அனைவரும் திரும்பி நோக்க “அவன் இப்போரில் கலந்துகொண்டால் என்ன நிகழுமென்பதை எண்ணி நோக்குக! ஷத்ரியர்கள் தோற்று சோர்ந்து பின்னடையும்போது சூதனொருவன் வந்து வேதத்தை காத்தான் என்று ஆகுமல்லவா? இன்று இந்த அவையில் பிருஹத்பலனும் இவனுடன் இணைந்த ஷத்ரியர்களும் சொன்ன சொற்களை காலத்தின் செவி கேட்டிருக்கும். சூதர் சொல்லில் அது வாழும். ஷத்ரியர் உரைக்கட்டும் சூதன் வந்து காக்க வேண்டுமா உங்கள் வேதங்களை?” என்றார் கிருபர்.
பிருஹத்பலன் “வேண்டியதில்லை! கர்ணன் களமிறங்க வேண்டியதில்லை” என்றான். சக்ரதனுஸ் “ஆம், ஷத்ரியர்கள் இக்களத்தில் இருக்கும்வரை சூதன் வில்லுடன் முன் நிற்க வேண்டியதில்லை. அதை ஒப்பமாட்டோம்” என்றார். மாளவ மன்னர் இந்திரசேனரும் காரூஷரான க்ஷேமதூர்த்தியும் “ஆம், அதுவே எங்கள் கருத்தும்” என்றனர். கிருபர் திரும்பி “வேறென்ன? இங்குள எவருக்கும் கர்ணன் களமிறங்குவதில் ஒப்புதல் இல்லை. எனவே இதை நாம் மீண்டும் பேச வேண்டியதில்லை என்றே எண்ணுகின்றேன்” என்றார். “ஆம்! ஆம்!” என அவை ஓசையிட்டது. பிருஹத்பலன் “எங்களுக்கு பிதாமகர் பீஷ்மர் மேல் முழு நம்பிக்கை உள்ளது. அவர்பொருட்டே நாங்கள் களம் நிற்கிறோம்” என்றான்.
துரியோதனன் பெருமூச்சுவிட்டு “இப்போர் இனிவரும் நாளிலேனும் வெற்றி நோக்கி செல்லும் என்று நான் எண்ணினேன்” என்றான். பீஷ்மர் “ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்க! இப்போர் வெற்றி நோக்கியே செல்லும் என்னும் சொல்லை நான் உனக்கு அளிக்கிறேன்” என்றார். “எட்டு நாட்களில் ஈட்டாத வெற்றி இனிவரும் நாளில் எவ்வாறு ஈட்டப்படும்? சொல்க, பிதாமகரே!” என்று துச்சாதனன் உரத்த குரலில் கேட்டான். “இந்த எட்டு நாட்களிலும் என்னை தளையிட்டிருந்தது என்னைச் சூழ்ந்திருந்த வசுக்களின் தூய்மை. அவர்களின் ஆற்றல் எனக்கு காவல் என்று எண்ணினேன். அவர்களின் நெறி எனக்கு தளை என்று இப்போது உணர்கிறேன். இன்று இறுதித் தளையையும் அறுக்கிறேன். அதன் பின்னர் கீழ்மகனாக, வெற்றிக்கென எதையும் செய்யத்துணியும் கிராதனாக களம் நிற்கிறேன். என்னை தடுக்க எவராலும் இயலாது” என்றார் பீஷ்மர்.
பிருஹத்பலன் மெய்ப்புகொண்டான். அவருடைய முகம் பெருவலியிலென சுளித்திருந்தது. தாடையை இறுக்கி மூச்சொலியென பீஷ்மர் சொன்னார். “ஆயிரம் ஆண்டுகள் கெடுநரகில் விழுவேன். என் மைந்தர் அளிக்கும் ஒருதுளி நீரோ அன்னமோ வந்தடையா இருள்வெளியில் உழல்வேன். அதன் பின் கோடி யுகங்கள் பருவெளியில் வீணாக அலைவேன். என் அன்னையால் பழிக்கப்படுவேன். எனை ஆக்கிய பிரம்மத்தால் ஒதுக்கப்படுவேன். அது நிகழட்டும். இக்களவெற்றி ஒன்றை ஈட்டி உனக்களித்துவிட்டு செல்கிறேன். இது என் ஆணை!” துரியோதனன் கைகூப்பி சொல்லடங்கி இருந்தான். துர்மதன் “பிதாமகரே!” என்றான். பீஷ்மர் கைநீட்டி அவனைத் தடுத்து “இறுதித் தளையையும் இன்று அறுப்பேன். இனி தேவவிரதனாக அல்ல, கீழ்மை மட்டுமே கொண்ட கிராதனாக என்னை பாடுக சூதர்!” என்றபின் அவையிலிருந்து வெளியே சென்றார்.
அவை ஒருவரை ஒருவர் நோக்கி சோர்ந்தமர்ந்திருந்தது. துரோணர் எழுந்து “இப்போர் தொடங்கிய முதற்கணம் முதலே நம் ஒவ்வொருவரையும் நெறிபிறழச் செய்துகொண்டிருக்கிறது. காற்றில் ஆடைகள் பறப்பதுபோல் நமது அறங்கள் அகல்கின்றன. இறுதியில் வெற்றுடலுடன் நின்று நாம் அனைவரும் போரிடப் போகிறோம். நன்று! விலங்குகளும் அவ்வாறுதானே போரிடுகின்றன? போர்களின் உச்சம் என்பது விலங்காதலே” என்றபின் கிருபரிடம் கைகாட்டிவிட்டு தானும் வெளியேறிச் சென்றார்.