தமிழகப்பொருளியல்- கடிதங்கள்

kalai

குஜராத் – தமிழ்நாடு – வளர்ச்சியும் முன்னேற்றமும் – ஓர் ஒப்பீடு.

கலையரசனின் கட்டுரை- பாலா

அன்புள்ள ஜெ

 

கலையரசனின் கட்டுரையை சமீபகாலமாக தேசிய ஊடங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் திராவிட இயக்க ஆதரவு கட்டுரைச் சமையல்களில் ஒன்றாகவே சொல்லமுடியும். புள்ளிவிவரங்களைக் கொண்டு வெவ்வேறுவகையாகச் சமைக்கப்படும் இத்தகைய கட்டுரைகளுக்கு வெவ்வேறு அரசியல் விவாதங்களுக்கு மட்டுமே பயன். மற்றபடி எவ்வகையிலும் உண்மைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. திரு பாலா அவர்கள் ஒரு திராவிட ஆதரவாளர், அல்லது சப்பைக்கட்டாளர் என்ற வகையில் அவருடைய அயராத முயற்சியைப் பாராட்டலாம்

 

இந்தக்கட்டுரையின் சிறப்பு என்னவென்றால் இதை எந்த திராவிடக்கட்சியும் உடனடியாகச் சுட்டிக்காட்டாது என்பதுதான். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆட்சிகள் இரண்டுமே பெரிய அழிவைச் செய்தவை. அவை திராவிட ஆட்சியே அல்ல. திராவிட ஆட்சியின் சாதனைகள் எல்லாமே மு.கருணாநிதியால் நிகழ்த்தப்பட்டவை என்பார்கள் இவர்கள். ஆனால் அவர் மிகக்குறைவான ஆண்டுகளே பதவியிலிருந்தார். அவருடைய தனிப்பட்ட சாதனைகள் என்பவை கூவத்தைச் சுத்தப்படுத்தும் முயற்சி, வீராணம் நீரை சென்னைக்குக் கொண்டுவரும் முயற்சி போன்றவை அரைகுறையாகவே முடிந்துவிட்டவை. உழவர்சந்தை, சமத்துவபுரம் போன்ற முயற்சிகள்கூட பெரிய தோல்விகளே என கண்கூடாகக் காணலாம்

 

ஆனால் இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டும் தனிப்பெரும் சாதனைகள் பல [கிராமக் கர்ணம் பதவிகள் ஒழிக்கப்பட்டது, சத்துணவு, ஆங்கிலவழி கல்விவளர்ச்சி] எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது கொண்டுவரப்பட்டவை. ஆகவே அவர்கள் இக்கட்டுரையைச் சுட்டிக்காட்டத் தயங்குவார்கள். அல்லது ஒட்டுமொத்தமாக திராவிட இயக்கத்தின் சாதனைகள் என்று சொல்லிவிட்டு கடந்துசெல்வார்கள்.

 

தமிழகத்திலே வளர்ச்சி உண்டா? உண்டு, ஆனால் அது இங்குள்ள அரசியலால் உருவான வளர்ச்சி அல்ல. அரசியலை மீறி வளர்ந்த வளர்ச்சி. இங்கே உருவான கோவை, ஈரோடு,ஓசூர், நாமக்கல், கரூர், சிவகாசி, விருதுநகர் போன்ற தொழில்வட்டங்கள் அறுபதாண்டுகளாகவே மெல்லமெல்ல உருவானவை. புதியபொருளியல்கொள்கையின் வாய்ப்புகளைப் பயன்படுத்தி அவை கொஞ்சம் வளர்ந்தன. இப்போது மோடியின் தனிப்பட்ட சாதனையால் திகைத்து வழியில்லாமல் நிற்கின்றன.

 

தமிழகத்தின் வாழ்க்கைத்தர வளர்ச்சியின் காரணம் ஆரம்பத்திலேயே, ஆம் காமராஜர் காலத்திலேயே, இங்கே உருவான கல்வி. கல்வியே ஆரோக்கியம் பற்றிய பிரக்ஞையாக மாறுகிறது. அதையெல்லாமே அரசின் சாதனையாக சொல்பவர்கள் சென்ற ஐம்பதாண்டுகளில் தமிழகத்தின் நீர்நிலைகள் கைவிடப்பட்டமை. சூழியல் அழிவு எதற்கும் அரசைச் சுட்டிக்காட்டமாட்டார்கள்.

 

கலையரசனின் பாலாவின் கட்டுரையின் பாணியில்தான் இந்துத்துவர்களும் சென்ற ஐந்தாண்டுகளில் இயல்பாக உருவான எல்லா வளர்ச்சியும் மோடியால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை என்கிறார்கள். எல்லா பின்தங்கிய நிலையும் மக்களின் குறைபாடு என்கிறார்கள். இங்கே இந்தவகையான பொருளியல்நிபுணர்கள் என்பவர்கள் தங்கள் கோணத்துக்கு ஏற்ப உலகைத் திரித்துக்காட்டி நம்மை நம்பவைப்பவர்கள் மட்டுமே

 

 

ஜெயராமன்

 

 

இனிய ஜெயம்

 

கட்டுரைகள் சிறப்பு . ஆனால் வடிவேலு சொல்வதைப்போல பில்டிங் ஸ்டாங்கு ,பேஸ்மென்ட்டு வீக்கு கதைதான் . நிர்வாக ரீதியாக ”பெரும் மாறுதல்களை ”நிகழ்த்தினார்களாம்.என்ன ஒரு அறிய பெரிய செயல்திட்டம் . அரசு என்றால்  என்ன என்ற ஆனா ஆவன்னா கூட தெரியாத ஒரு கழகம்,ஆட்சியை பிடிக்கும் வரலாற்று பிழை நேர்கிறது .அதை தக்க வைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தார்கள் . இதற்க்கு எதற்கு சமூக நீதி எனும் குச்சி மிட்டாய் காரணம் ?

 

கிராம நிர்வாக அலுவலர் எனும் பதவி வழியே சாதி ஒடுக்குமறை ஒழித்தார்களாம். இவ்வளவு பெரிய புரட்சியை சத்தமே இல்லாமல் செய்து விட்டு ,மேடையில் கூட இதை பேசாமல் அமைதி காக்கும் அளவு , தன்னடக்கம் கொண்ட கழக்கத்தின் பண்பு இரும்பூதி எய்த வைக்கிறது .

 

அட்ரஸ் இல்லாத ஆட்கள் அதிகாரத்துக்குள் வரும் போது முதலில் செய்வது , புறம்போக்கு நிலத்தை பட்டா போடுவது .  திராவிடம் நீர் மேலாண்மையில் தூங்கி வழியும் காரணம் ,பல நீர் வழி பாதைகளின் இன்றைய ஆண்டைகள் திராவிட தொண்டர்கள் என்பதே .  அதற்காக செய்யப்பட்ட நிர்வாக மாற்றத்தை இப்படியும் சொல்லல்லாம் என்பதே நமது திராவிட அறிவியக்க கொடை.

 

எம்ஜியார் சத்துணவு திட்டத்துக்கு ஒதுக்கிய கோடிகள் அளவே ,சத்துணவு ஊழியர்களும் சேர்க்கப்பட்டனர் .அது அதற்க்கு முந்திய திராவிட சாதனையான ஆசிரியர்கள் கூட்டம் எனும் ஓட்டு பொதி கணக்கை  சமன் செய்யவே என்பதை இப்போதுதான் பருப்புஞ்சாவுக்கு மாறிய பாப்பா கூட அறியும் . தமிழகம் கல்வியில் சிறக்க ,வெளி நாட்டில் இருந்து ,  நலத்திட்ட உதவிகள் வழியே உள்ளே , செயல்வழிக் கற்றல்எனும் தலைப்பில் பல கோடிகள் வந்தது . வந்த அத்தனை காசும் எங்கே போனது ?  நிர்வாகத்தில் சமூக நீதி காக்கும்  கழக த்யாகிகள்  தானே இருந்தது ?

 

தமிழ் செம்மொழி மாநாடு , உலகத் தமிழ் மாநாடு எல்லாவற்றுக்கும் ஒதுக்கிய காசு யாருக்கு ?  அங்கிருக்கும் யாருக்கும் சுந்தர சன்முகனாரை தெரியாது ஆனால் குஷ்பூவை தெரியும் .  தமிழ் நாட்டில் தமிழ் ”விருப்ப பாடம்” மட்டுமே .முனிசிபல் அலுவலகம் மேலே தமிழ் வாழ்க பல்பு அணைத்து போய் கிடக்கிறது , தமிழில் பெயர் வைத்தால் சினிமாக்களுக்கு வரியில் சலுகை  இதுதான் திராவிடம் கண்ட தமிழ் வளர்ச்சி .

 

இன்று மண்ணைக் காத்து , அந்த தியாக வாழ்வில் தன்னை எரித்து கோடிகளில் புரண்டு கொண்டிருக்கும் ஒரு கழக தியாகி ,பஸ்டாண்டில் பழம் விற்றுக் கொண்டிருந்தவர் .  இவைதான் இந்த புள்ளி விவர உண்மைகள் வந்து தீண்டாத ,அரசியல் அறியாத ,என் போன்ற சாமானியன் அவன் கண் முன்னால் காணும் உண்மை .

 

கன்யாகுமரியில் துவங்கிய எருமை நடந்து நடந்தே அறுபது ஆண்டுகளில் இமயமலை போய்விட்ட்து என்பதனால் ,அது செய்தது புனிதப் பயணம் என்று சொல்லி அதற்க்கு ஒரு மாலை போட்டு மரியாதை செய்தால் , அது செய்பவர் உரிமை… .அதை அவ்வாறே நம்புக என்று  சாமான்யனை சொல்ல கூடாது :)

 

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைதேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் இந்தியத் தத்துவ இயல்
அடுத்த கட்டுரைஒரு தத்தளிப்பு, கடிதங்களும் பதிலும்