ஜரேட் டைமண்ட்டுடன் சந்திப்பு- ராஜன் சோமசுந்தரம்

Jared.Diamond-1

வரலாற்றின் பரிணாமவிதிகள்

அன்பு ஜெமோ,

நலந்தானே ?

ஒரு பெரிய நிறுவனத்தின் தொழில்நுட்ப  மாநாட்டிற்கு சென்றிருந்தேன். ஒவ்வொரு வருடமும் ஒரு எழுத்தாளரை அழைப்பது வழக்கம். இந்த வருடம் புவியியல், வரலாற்று ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் ஜாரெட் டைமண்ட் அவர்களை அழைத்திருந்தார்கள். அவருடைய புகழ்பெற்ற புத்தகமான ‘துப்பாக்கிகள், கிருமிகள், எஃகு’ படித்திருக்கிறேன். அதைப்பற்றி உங்கள் தளத்தில் சில கட்டுரைகளையும்.

அவர் அரங்குக்குள் வரும்போது ஜுராசிக் பார்க் திரைப்படத்தின் இசையை ஒலிக்கவிட்டார்கள்! அவர் அணிந்திருந்த டையில் டயனோசார்கள் படம், வண்ணங்கள் மாறும் ஒளியமைப்பு என்று நிறுவனத்தார் கவனமாக ஒருங்கிணைத்திருந்தனர்.  பெரிய புன்னகையுடன்  அரங்கில் நுழைந்தார். கசங்கிய உடை, சற்றே மெதுவான நடை.

ஆனால், உரையாடல் என்றால் மற்றதெல்லாவற்றையும் மறந்துவிடுவது, பேசுவதில் இருக்கும் அதே அக்கறையை  கேட்பதிலும் காட்டுவது, பேசும்போது வந்துகொண்டே இருக்கும் புதிய திறப்புக்கள் என எனக்குப் பிடித்த இன்னொரு எழுத்தாளரை நினைவூட்டிக்கொண்டே இருந்தார் :-)

‘தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் பேசினார். ஆராய்ச்சி செய்பவர்கள், அதன் பயன்பாட்டைப் பற்றி சிந்திக்கவே கூடாது;  அது பல நேரங்களில் அவர்களின் ஆராய்ச்சியின் வீச்சை குறைத்துவிடும் என்றார். கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் ‘பைசா பெறாத’ ஆராய்ச்சிகள் எப்படி உலகத்தையே மாற்றியமைத்தன என்று ஒரு பட்டியல் தந்தார். தொலைபேசி, ஒலிப்பதிவு, வானொலி என்று நீளமான பட்டியல்.

அதற்கு நேரெதிர் திசையில் சென்று ஆராய்ச்சியிலிந்து எப்படி ‘கண்டுபிடிப்புகள்’  வேறுபடுகின்றன என்று விளக்கினார்- பயன்பாட்டின் தேவையில் இருந்து முகிழ்த்து வரும் கண்டுபிடிப்புகள். இவ்விரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை விவரித்தார்.

Picture1_004__13451_std

எனக்கு மிகவும் ஆர்வமூட்டியது கொரிய எழுத்துமுறை ‘கண்டுபிடிக்கப்பட்டது’  பற்றி அவர் சொன்னதுதான்.

15ம் நூற்றாண்டு வரையில் கொரிய மொழிக்கென்று எழுத்துக்கள் இல்லை. சீன எழுத்துக்களையே பயன்படுத்தினர். சிக்கல் என்னவென்றால், சீன எழுத்துக்கள் பெரும்பாலும் வார்த்தைகள்! உச்சரிப்பும் கடினம். இந்த மொழிக் குழப்பத்தால் கொரியாவில் கற்பதும், படிப்பதும் மிகச்சிறு வட்டத்துள் நிகழும் செயலாயிற்று. பெரும்பான்மை மக்களுக்கு படிப்பறிவில்லை. அதன் தாக்கம் நாட்டின் எல்லா செயல்பாடுகளையும் பாதிப்பதை உணர்ந்த மாமன்னர் செஜாங், கொரிய மொழிக்காக ஒரு நவீன எழுத்துமுறையை உருவாக்க செயலில் இறங்கினார்.

அம்முயற்சியின் விளைவாக, இதுவரை உலகில் உள்ளவற்றிலேயே சிறந்த, நவீனமான, எல்லாவகையிலும் தர்க்கபூர்வமான எழுத்துமுறையை கொரிய மொழிக்கு உருவாக்கினார்.

ஒவ்வொரு எழுத்தும் அதை எப்படி உச்சரிப்பது என்ற குறிப்பையும் கொண்டிருக்கும்! உச்சரிக்கும் போது நாக்கு அல்லது உதடு எப்படி இருக்கும் என்பதே எழுத்தின் வடிவம். மேலும் இரண்டு விஷயங்களை சேர்த்தார். சீன மொழிப்படி மேலிருந்து கீழாக எழுதத் தொடங்குவது, ஆனால் அந்த வார்த்தை முடிந்த பிறகு, அடுத்தவார்த்தையை வலப்பக்கத்தில் தொடங்குவது. இதுபோல், ஒரே சமயத்தில் மேல் கீழாகவும், இட வலமாகவும் எழுதுவதால், கொரிய மொழியில் மிக வேகமாக படிக்க முடியும்.

14 மெய்யெழுத்துக்கள், 10 உயிரெழுத்துக்கள் என மொத்தமே 24 எழுத்துக்கள். இன்று மிக விரைவில் கற்றுக்கொள்ளக் கூடிய மொழி கொரிய மொழிதான். மொத்தமே அரைமணி நேரத்தில் எல்லா எழுத்துக்களையும் கற்றுக்கொண்டு மெதுவாக படிக்கவும் ஆரம்பித்து விடலாம்! அரை மனதோடு முயன்று பார்த்தேன்- அரை மணிக்குள் எல்லா எழுத்துக்களையும் தெரிந்து கொள்ளலாம் என்பது உண்மைதான்!

With-Jared.Diamond

ஒரு மணி நேர உரைக்குப்பிறகு கலந்துரையாடல்.  பல சுவாரஸ்யமான வினாக்கள் வந்தன. ஒரு செந்தலையம்மணி  ‘அமெரிக்காவின் மிகப்பெரிய பிரச்சனை தற்போது என்ன?’ என்று கேட்டார். ஜாரெட் ‘தகவல்களை புறவயமாக அலசி ஒரு முடிவுக்கு வருவது எல்லா மக்களாட்சிக்கும் தேவையான ஒன்று. ஆனால், மக்கள் சிலசமயம் அவசரப்பட்டு குறுக்குவழிகளை நாடி, உணர்ச்சியைத் தூண்டும் தலைவர்களை கொண்டு வந்துவிட்டால், அப்பட்டமாக நேர்மையற்ற, உரத்த மனிதர்கள் உள்ளே வந்து நேர்மையானவர்களை, மென்மையாகப் பேசுபவர்களை வெளியே தள்ளி விடுவார்கள். அதன்பின், அந்நிலையை சரிசெய்ய சில பத்தாண்டுகளோ, தலைமுறைகளோ ஆகலாம். என் பதில் உங்களுக்கு யாரையாவது நினைவூட்டினால், நான் அவர்களைத்தான் சொல்கிறேன்!’ என்றார்.

நானும் ஒரு கேள்வி கேட்டேன். ஒரு பக்கம் தானியங்கி இயந்திரங்களைக்கொண்டு அதிவேகத்தில் உற்பத்தி செய்கிறோம்; உற்பத்திக்கு ஆகும் செலவும் குறைந்துகொண்டே வருகிறது.  ஆனால், மறு பக்கம் அதனால் வேலையிழந்தவர்கள் நுகரும் திறன் குறைகிறது (இவர்களையும் நம்பித்தான் தேவைக்கதிகமான உற்பத்தி நடக்கிறது). வருங்காலத்தில் இது எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்று கேட்டேன். ஜாரெட் ‘இது சிக்கலான பிரச்சனைதான், மக்கள்தொகை குறைந்த நாடுகளே இதை முதலில் உணரும். பின்னர் பல மாற்றங்களுக்குப் பிறகே சமநிலை வரும் என்றார்.

ஏறத்தாழ 250 பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில்,  இரண்டே ‘தேசிகள்’. ஆனால், மற்ற தொழில்நுட்ப அரங்குகளில் நாலில் ஒருவர் இந்தியர். இது மட்டும் இன்னும் மாறவில்லை. இன்னும் சில வருடங்கள் ஆகலாம் என்று நினைக்கிறேன்.

அன்புடன்,

ராஜன் சோமசுந்தரம்

***

துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு ஜாரெட் டயமண்ட்
ஐரோப்பாவின் கண்களில்…
மூதாதையர் குரல்
இனங்களும் மரபணுவும்
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-57
அடுத்த கட்டுரைதேவதச்சனுக்கு வாழ்த்துக்கள்!