கண்ணீரைப் பின்தொடர்தல் வாங்க
உங்களுடைய ‘கண்ணீரைப் பின்தொடர்தல்’ நூல் குறித்து நாங்கள் நடத்தும் ‘ வாசிப்போம்; தமிழ்.இலக்கியம் வளர்ப்போம் ‘ குழுவில் நான் எழுதிய ஒரு சிறிய பதிவு.
மந்திரமூர்த்தி அழகு
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘கண்ணீரைப் பின்தொடர்தல்’ என்ற நூலை 3 நாட்களாக வாசித்து இன்றுதான் முடித்தேன். ஜெமோ பிற இந்திய மொழிகளில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட நாவல்களில் சிறந்ததாக 22 இந்திய நாவல்களைத் தேர்ந்து எடுத்து அவற்றைப் பதிவு செய்துள்ளார். அந்த நாவல்களைப் பற்றிய சுருக்கமான கதை, கதைகளின் முக்கியத்துவம், கதைகள் வாசகருக்கு உணர்த்தி நிற்கும் செய்திகள் என ஜெமோ பல்வேறு கூறுகளையும் வாசகருக்குச் சாறாக பிழிந்து தருகிறார். 22 நாவல்களில் 5 கன்னடக் கதைகள், தலா 4 கதைகள் மலையாளம் & வங்கம், தலா 2 கதைகள் மராத்தி & இந்தி, தலா 1 கதை குஜராத்தி, அசாமி, பஞ்சாபி, தெலுங்கு & உருது என்ற வகையில் நூலில் இடம் பெறுகிறது.
குமுதம் நிறுவனம் ‘தீராநதி’யை ஓர் இணைய இதழாக நடத்திய தொடக்க நாட்களில் அதன் துணை ஆசிரியராக இருந்த தளவாய் சுந்தரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஜெமோ ‘தமிழில் மொழிபெயர்ப்பு நாவல்கள்’ என்ற தலைப்பில் இதனை எழுதியதாக முன்னுரையில் குறிப்பிடுகிறார். இந்த நூலின் முதல் பதிப்பு 2௦௦6 ஆம் ஆண்டு உயிர்மை வெளியீடாக வந்துள்ளது.
தமிழுக்கு மேலான இலக்கியங்களைக் கொண்டுவருவதை தங்கள் வாழ்நாள் பணியாகச் செய்துகொண்டு இருக்கின்ற மதிப்பிற்குரியவர்கள் என்று நூலில் துளசிராமன், சு.கிருஷ்ணமூர்த்தி, பா.பாலசுப்ரமணியம், இளம்பாரதி, டி.பி.சித்தலிங்கையா ஆகியோரைக் குறிப்பிட்டுப் பாராட்டுகிறார் ஜெமோ. தமிழ் வாசகர்கள் அனைவரும் இவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
இந்தக் குறிப்பிட்டுள்ள நாவல்கள் குறித்து ஜெமோ-வே கீழே உள்ளவாறு குறிப்பிடுகிறார்.
// இந்த நாவல்கள் எல்லாமே மானுட துக்கத்தின் கதைகளே.வீழ்ச்சியின், இழப்பின் சித்திரங்கள்..இலக்கியத்துக்கு எப்போதுமே துயரமே கருப் பொருளாகிறது. துயரக்கடலில் எழும் உதயமே மானுடச் சாரமாகக் கண்டடையப்படுகிறது…………இந்திய இலக்கியத்துக்கு என ஏதேனும் தனித்தன்மை இருக்கமுடியுமெனில் அது இதுதான்-மண்ணளவு பொறுமையும், கருணையும் கொண்ட பெண்கள். ……. ….எல்லா இந்தியப் படைப்பாளிகளின் நெஞ்சிலும் அவர்கள் அன்னையின் சித்திரம் அழியா ஓவியமாக உள்ளது. அவளுடைய பெரும் தியாகத்தால் உருவானவர்களாக அவர்கள் தங்களை உணர்கிறார்கள். அவர்களின் மிகச்சிறந்த பாத்திரமாக அவளே பேரருளுடன் வெளிப்படுகிறாள்.//
வங்கக் கதையில் முதலாவதாக வருவது தாராசங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’ என்ற அற்புதமான நாவல். நாவல் என்றால் என்ன? என்பதைப் பற்றி நுட்பமாகக் கூறுகிறார் ஜெமோ.
// நாவல் காலம் மாறுவதைப் பற்றிப்பேசும் ஓர் இலக்கிய வடிவம் என்பது பொத்தாம்பொதுவான ஒரு கூற்று. ஆனால் வியப்பூட்டும் அளவுக்கு சரியானதும் கூட. உலக இலக்கியத்தின் மகத்தான ஆக்கங்கள் பலவும் காலமாறுதலை விரிவாகச் சொல்வதையே கருவாகக் கொண்டுள்ளன. காலம் மாறுவது எதன் ஊடாகத் தெரியவருகிறது? வாழ்க்கைமாறுவதன் ஊடாக. ஆகவே அது வாழ்க்கையின் இயக்கத்தைப் பற்றிப்பேசும் கலை. வாழ்க்கை மாறும்போது மதிப்பீடுகள் மாறுகின்றன. ஆகவே நாவல் மதிப்பீடுகளின் உண்மையான சாரம் பற்றி விவாதிக்கும் கலை.
மதிப்பீடுகள் மாறும்போது ஏற்படுவது ஆழமான உணர்ச்சிக் கொந்தளிப்பு. ஆகவே நாவல் மானுட உணர்ச்சிகளைத் தொட்டுக்காட்டும் ஓர் இலக்கிய வடிவம். ஆகவே மானுட உணர்ச்சிகளின் நிலைக்களமாகிய மானுட மனத்தைப் பற்றிய ,அதன் ஆழத்தைப் பற்றிய கலையே நாவல். மானுட ஆழம் என்பது பண்பாட்டின் ஆழமே. ஆகவே நாவல் என்பது பண்பாட்டைப் பற்றிய அவதானிப்பு.//
ஆரோக்கிய நிகேதனமும் வாழ்க்கையின் பல கூறுகளைப் பேசுகிறது. ஜெமோ 2 முதல் 3 பக்கங்களில் கூறியுள்ள கதைச்சுருக்கமே நமக்கு நாவலை வாசித்த நிறைவைத்தருகிறது. இந்திய நாவல்களில் மிகுந்த கவித்துவ நுட்பம் கொண்ட நாவலாக இதனைக் கூறுகிறார் ஜெமோ. அதேசமயம் மிக யதார்த்தமான மொழி மற்றும் சித்தரிப்புக் கொண்ட நாவலாகவும் இருக்கிறது என்பதனையும் நாம் அறிய முடிகிறது.
ஜெமோ கூறியுள்ள கதையை நான்கு வரிகளில் கதையின் மையத்தைத் தொட்டுச் சொல்கிறேன். ஜீவன் மஷாய் என்ற மையக் கதாபாத்திரத்தின் இளமை முதல் இறப்பு வரை இந்த நாவல் பேசுகிறது. நாயகன் ஜீவன், மஞ்சரியின் மீது கொள்ளும் காதல், மஞ்சரி ஜீவனை மறுத்து மேற்படிப்பு படிக்கும் அவனுடைய பரம விரோதி போஸை மணப்பது, ஜீவனுக்கு காதல் தோல்வியில் ஏற்படும் நெஞ்சின் கனல், பின் அவன்(ர்) குடும்பத் தொழிலான ஆயுர்வேத மருத்துத்தில் தேர்ச்சி பெற்றவராவது, ஆத்தர்பௌ உடன் திருமண வாழ்க்கை, மகனின் இறப்பு, முதுமையில் நோயுற்ற மஞ்சரியை ஆயுர்வேத மருத்துவராகச் சந்திப்பது என்று கதை செல்கிறது. அல்லோபதி, ஆயர்வேத மருத்துவ முறைகளின் தன்மைகளைப் பற்றியும் நாவலின் ஊடுகளமாக்கி அற்புதமான நாவலாக தாராசங்கர் பானர்ஜி படைத்திருப்பதை நாம் ஜெமோ மூலம் வாசித்து அறிய முடிகிறது.
இது போலவே தொகுப்பில் உள்ள பிற 21 நாவல்களுக்கும் அற்புதமாக அந்த நாவலின் முக்கியத்துவம் குறித்துப் பேசுகிறார். வரலாற்று நாவல், நவீனதத்துவ இருத்தலிய இலக்கியம் குறித்தும் ஜெமோ பேசுகிறார். நவீனத்துவ இருத்தலிய இலக்கிய நாவலுக்கு சிறந்த உதாரணமாக ஜெமோ யு.ஆர்.அனந்தமூர்த்தியின் கன்னட நாவலான ‘சம்ஸ்காரா’ வைக் கூறுகிறார். ‘சம்ஸ்காரா’ எதிர் கொண்ட பிரச்சனைகளைப் பேசும் நாவல்களாக தாகூரின் ‘கோரா’ வையும், கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பாவின் வம்ச விருக்ஷா பற்றியும் கூறுகிறார். இந்தியாவில் சிறந்த வரலாற்று நாவலுக்கு உதாரணமாக கன்னடத்தில் ஸ்ரீரங்கத் தமிழரான மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் எழுதிய நாவலான ‘சிக்க வீர ராஜேந்திரன்’ பற்றிக் கூறுகிறார். பொன்னியின் செல்வன் நாவலை தமிழில் சிறந்த வரலாற்றுப் புனைவு நாவலாகக் கூறலாமே தவிர அது வரலாற்று நாவல் அல்ல. அந்த வகையில் எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதியுள்ள 1.மானுடம் வெல்லும் 2.வானம் வசப்படும் ஆகிய இரண்டு கதைகளையும் தமிழ் மொழியில் வந்த வரலாற்று நாவல்கள் என்று கூறலாம் என்கிறார் ஜெமோ. அதுபோல சமகால வரலாற்று நாவலில் குறிப்பிடத்தக்கதாக மலையாளத்தில் வெளியான தகழி சிவசங்கரப் பிள்ளையின் ‘ஏணிப்படிகள்’ நாவலைக் குறிப்பிடுகிறார். தமிழில் இந்த வரிசையில் உடனடியாக நினைவு வருவதாக பொன்னீலனின் ‘புதிய தரிசனங்கள்’ ராஜம் கிருஷ்ணனின் கரிப்புமணிகள், மண்ணகத்துப் பூந்துளிகள், குறிஞ்சித்தேன், வளைக்கரம், பாதையில் படிந்த அடிகள் வாஸந்தியின் ‘நிற்க நிழல் வேண்டும்’, ‘மௌனப்புயல்’ கெ.முத்தையாவின் உலைக்களம், விளைநிலம் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார் ஜெமோ.
ஆக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த 22 நாவல்களின் கதைச்சுருக்கம், அதன் சிறப்புகள் பற்றி மட்டுமல்ல. நாவல் இலக்கியத்தின் அனைத்துக் கூறுகளையும் இந்த ‘கண்ணீரைப் பின் தொடர்தல்’ என்ற கட்டுரை நூலில் ஆழ்ந்த ஆய்வு செய்கிறார் ஜெமோ. ஜெயமோகனின் ‘கண்ணீரைப் பின் தொடர்தல்’ – வாசகர்களை வாசிப்பில் உயர்த்தி எடுத்துச் செல்லும் நூல் என்பது தெளிவு.
மந்திரமூர்த்தி அழகு