வேலைபூதம்

images (8)

ஜெ,

நலமா? நீண்ட நாட்களாயிற்று உங்களுக்கு கடிதம் எழுதி.   சில சந்தேகங்களை உங்களிடம் கேட்கவேண்டும்போல் தோன்றியது.  வாழ்வதற்கு போதுமான அளவுக்கு ஊதியம் கிடைக்கும் மனதுக்கு பிடித்த வேலை, வாழ்க்கையில் நல்ல சம்பாத்தியம் தரும், ஆடம்பரமாக வாழ உதவும் அலுப்பூட்டும் வேலை, இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது உங்கள் பார்வையில் சரியானது?

மனதுக்குப் பிடிக்காத 10 To 6 வேலைக்கு செல்லும் ஒருவன், தினந்தோறும் காலையில் எழுதல், அலுவலகம் செல்தல், திரும்ப வருதல், தூங்குதல், மீண்டும் காலையில் எழுதல் என்கிற ஒழுங்கை பல ஆண்டுகளுக்கு செய்யவேண்டியிருக்கிறது. இதனை செய்யும் ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க பொருளாதாரமும் கணிசமாக உயரும். இந்த ஒழுங்கைப் பின்பற்றி 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிசெய்துகொண்டிருக்கும் மனிதர்கள்கூட இருக்கிறார்கள். ஆனால் 30 நாட்கள்கூட என்னால் இந்த ஒழுங்கைப் பின்பற்ற முடியவில்லை. இன்னும் பல ஆண்டுகள் இப்படியே இயங்கவேண்டும் என்பது பிரம்மிப்பாக இருக்கிறது (எரிச்சலாகவும் இருக்கிறது).

இந்த ஒழுங்கை வாழ்க்கையில் கடைபிடிப்பதற்கான மனநிலையை எப்படிப் பெறுவது?  10 ஆண்டுகளுக்குப் பிறகு பொருளாதார சூழல் மிகச்சிறப்பாக இருக்கும், கைநிறைய சம்பளம் கிடைக்கும் போன்ற காரணங்களுக்காக  கொஞ்சமும் விருப்பம் இல்லாத வேலைக்கு   செல்லும் ஒருவன் கொஞ்சம்கூட எரிச்சல் அடையாமல் காலையில் அலுவலகம் கிளம்பமுடியுமா? முடியும் என்றால் அந்த மனநிலையை எப்படி உருவாக்கியெடுப்பது?  இவைதான் என்முன்னுள்ள சந்தேகங்கள்.

கடைசியாக இன்னொரு சந்தேகமும், வெகுஜன பத்திரிகையில் வேலை செய்தால் அது நம்முடைய இலக்கிய மொழியை பாதிக்கும் என்பதில் உண்மையுண்டா?

அன்புடன்,

அகில் குமார்.

***

அன்புள்ள அகில்குமார்

வேலை என்பது எதுவானாலும் கற்பனை கொண்ட ஒருவனுக்கு கொஞ்சம் கடினமானதாகவே இருக்கும். ஞானக்கூத்தனின் கவிதை ஒன்று

விடுமுறை தரும் பூதம்

ஞாயிறு தோறும் தலைமறை வாகும்
வேலை என்னும் ஒரு பூதம்
திங்கள் விடிந்தால் காதைத் திருகி
இழுத்துக் கொண்டு போகிறது
ஒருநாள் நீங்கள் போகலை என்றால்
ஆளை அனுப்பிக் கொல்கிறது
மறுநாள் போனால் தீக்கனலாகக்
கண்ணை உருட்டிப் பார்க்கிறது
வயிற்றுப் போக்கு தலைவலி காய்ச்சல்
வீட்டில் ஒருவர் நலமில்லை
என்னும் பற்பல காரணம் சொன்னால்
ஏற்றுக் கொள்ள மறுக்கிறது
வாரம் முழுதும் பூதத்துடனே
பழகிப் போன சிலபேர்கள்
தாமும் குட்டிப் பூதங்களாகிப்
பயங்கள் காட்டி மகிழ்கின்றார்
தட்டுப் பொறியின் மந்திரகீதம்
கேட்டுக் கேட்டு வெறியேறி
மனிதர் பேச்சை ஒருபொருட் டாக
மதியாதிந்தப் பெரும்பூதம்
உறைந்து போன இரத்தம் போன்ற
அரக்கை ஒட்டி உறை அனுப்பும்
‘வயிற்றில் உன்னை அடிப்பேனெ’ன்னும்
இந்தப் பேச்சை அது கேட்டால்

உலகம் முழுக்க இந்தப் பூதத்துக்கு கொஞ்சம் குருதியை அளித்துவிட்டுத்தான் கவிஞர்களும் கலைஞர்களும் வாழ்கிறார்கள். கலையை கொஞ்சம் வெட்டிக்கொடுப்பதை விட குருதியைக் கொடுப்பது மேல் என்றுதான் நான் சொல்வேன். இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொருநாளுமென வந்து மோதும் தேவைகளில் நாம் வேறொரு தெரிவை கொள்ளவே வழியில்லை.

சென்ற நிலப்பிரபுத்துவ யுகத்தில் உடுக்க ஒரு துணி உண்ண நாழி உணவு போதும் என இருந்துவிட முடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைகளைப் பெருக்கி அதன்பொருட்டு ஒவ்வொருமனிதனும் கடும் உழைப்பைச் செலுத்தியாகவேண்டும் என்னும் நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது இன்றைய பொருளியல் –சமூகக் கட்டுமானம். நான் சிங்கப்பூர், அமெரிக்கா சென்றபோது அங்குள்ள வாழ்க்கைக்கு இங்குள்ளது மேல் என்ற உணர்வை அடைந்தேன். அங்கே சமூகத்தின் அளவுகோல்கள் பெரியவை. ஆகவே ஒவ்வொருவருக்கும் தேவைகள் மேலும் கூடுதல். ஆகவே மேலும் உழைப்பு. ஆனால் நமக்கும் அவர்களுக்கும் காலம் அளித்துள்ள பொழுது ஒன்றுதான்.

இன்றையசூழலில் குறைவான நேரத்தில் போதுமான அளவுக்கு பொருளீட்ட உதவும் ஒரு துறையே உகந்தது. போதுமான என்பதை நாம் முடிவுசெய்யவேண்டும். முழுக்கமுழுக்க சுற்றாரும் சமூகமும் அதை முடிவுசெய்ய விட்டுவிடக் கூடாது. அது நம்மை பொருளியல்நுகங்களில் கட்டிவிடும். விழைவதைச் செய்யமுடியாதவர்களாக, பொதிசுமந்து தளரும் வாழ்க்கை கொண்டவர்களாக ஆகிவிடுவோம்

உண்மையில் நாம் உழைத்து ‘ஈட்டிக்கொள்ளும்’ இந்த அரிய பொழுதின் மதிப்பை நாம் உணர்வதில்லை. ஆறுநாள் உழைத்து ஏழாம்நாள் ஈட்டும் விடுமுறைநாள் என்பது ஒரு செல்வம். ஆனால் அதை இளைப்பாறுகிறோம் என்றபேரில் குப்பையில் வீசிவிட்டு மறுநாள் சோர்வுடன் அலுவலுக்கு மீள்கிறோம். தன் தனிப்பட்ட பொழுதுகள் வீணாவதனால், அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியாத இயலாமையின் குற்றவுணர்ச்சியால் வேலைமேல் சலிபப்டைகிறோம் என்பதுதான் நடைமுறை. வேலையை நம் தோல்விகளுக்கான காரணமாகச் சொல்லி நாம் தப்பித்துக்கொள்கிறோம்

நாம் ஈட்டிக்கொள்ளும் நாளை மிகமிக அரிதென நாம் நினைக்கும் செயலைச் செய்ய, நம்முடைய படைப்பூக்கம் முற்றாக வெளிப்படுவனற்றை இயற்ற செலவழிப்போம் என்றால் நாம் நிறைவடைவோம். தனக்கென்று ஆன பொழுதுகளை தான் நிறைவுகொள்ளும்படிச் செலவிடுபவர்களுக்கு வேலைப்பொழுது என்பது வீண் என்றோ சோர்வூட்டுவது என்றோ தோன்றாது. அது அந்தப் பொழுதை ஈட்டிக்கொள்வதற்கான உழைப்பு என்றவகையில் இனிதாகவேகூடத் தோன்றும்

பத்திரிகையில் வேலைசெய்தால் இலக்கியமொழி பாதிக்கப்படுமா என்றால் ஓரளவு ஆம் என்றே சொல்வேன். ஆனால் அதிலிருந்து விடுபடவும் இயலும். பத்திரிகை எழுத்திலிருந்து அந்தரங்கமாக தனிமொழி ஒன்றை பிரித்து வைத்துக்கொள்வது நம் கவனம், திறன் சார்ந்தது

ஜெ

முந்தைய கட்டுரைஜெயசூர்யா -மம்மூட்டி- மோகன்லால்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-61