வானவில் -கடிதங்கள்

Rhia Janta-Cooper
Rhia Janta-Cooper

இழைபிரிக்கப்பட்ட வானவில்

அன்புடன் ஆசிரியருக்கு

 

இழைபிரிக்கப்பட்ட வானவில் வாசித்தபோது மகிழ்வாக உணர்ந்தேன். இரண்டு காரணங்கள். ஒன்று அந்தக் கவிதை எங்கு முடிகிறது என்று நான் எண்ணியிருந்தேனோ அடுத்தவரி இக்கவிதைக்குத் தேவையா என்று எங்கு மனம் சங்கடம் கொண்டதோ அதையே நீங்களும் குறிப்பிட்டிருப்பதால் ஏற்பட்ட மகிழ்ச்சி. மற்றொன்று அவ்வரியின் மானுடம் தழுவிய தன்மை.

எனது நகரத்தின்மேல்

அந்த வானவில்

முறிந்து விழுந்தால்

நாங்கள் அனைவரும் எத்தனை

வண்ணமுடையவர்களாகிவிடுவோம்

இவ்வரிகள் எனக்கு பிரார்த்தனை போல ஒலிக்கின்றன. அனைத்துமே கைவிட்ட ஒருவனிடமிருந்துதானே பிரார்த்தனை எழுகிறது. தனக்கு மேல் ஒன்றிருப்பதாக அது தன் மீது கனிவுடன் இருப்பதாக மனிதன் நம்புவதன் வெளிப்பாடுதானே பிரார்த்தனை. மழையை வேண்டி நிற்பவர்களாக காலத்தின் நிச்சயமின்மையின் முன் பணிந்து நிற்பவர்களாக ஏதோவொரு வகையில் ஏதோவொரு கணத்தில் நாம் பிரார்த்திக்கவே செய்கிறோம். இவ்வரிகளில் இருப்பது ஒரு உச்சமான பிரார்த்தனை. ஒருவேளை அந்த பிரார்த்தனை நிறைவேறினால். வானவில் முறிந்து விழுந்தால். எண்ணுவதற்கே எவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்கிறது!

ஆனால் அது நிறைவேற இயலாத ஒரு நிரந்தரப் பிரார்த்தனை எனும்போது இவ்வரிகள் எங்கோ சென்று அமர்ந்து கொள்கின்றன.

 

அன்புடன்

சுரேஷ் பிரதீப்

 

அன்புள்ள ஜெ

 

இழைபிரிக்கப்பட்ட வானவில் கவிதைபற்றிய ஓர் உரையாடல். அதுவே ஒரு கவிதை அனுபவமாக இருக்க முடியும் என்று பட்டது. ஒரு படைப்பு அளிக்கும் மிகச்சிறந்த கற்பனையை அடைந்த பின்னர்தான் வாசகனுக்கு அதன்மேல் விமர்சனத்தை வைக்கமுடியும் என்பது என் எண்ணம். அதை இந்த உரையாடலில் காணமுடிந்தது.

 

ஒரு கவிதையிலிருந்து நாம் நமக்குரிய ஒரு கவிதையை உருவாக்கிக் கொள்கிறோம். சிலசமயம் அந்தக்கவிதையை விட குறைவான ஒன்றை. சிலசமயம் அந்தக்கவிதையை விட மேலான ஒன்றை. அந்தக்கவிதையை விட மேலான ஒன்றை நாம் வாசிக்கையில் அதிலுள்ள சில குறிப்புகளை நாம் தவிர்க்க விரும்புகிறோம். அந்தக்கவிதை நம்மை மண்ணை நோக்கி இழுக்கக்கூடாது என நினைக்கிறோம்

 

அந்த வானவில்கவிதையின் கடைசிவரி எனக்கு வேறொரு அனுபவத்தை அளித்தது. அந்தக்கவிதையில் அது இல்லை. நான் ஒருமுறை விமானத்திலே வானவில்லைப் பார்த்தேன். விமானம் கிளம்பிக்கொண்டிருந்தபோது. விமானத்தின் சன்னலில் ஒட்டியிருந்த ஈரம்தான் அதைக் காட்டியது. அந்த அனுபவத்தை நினைவூட்டியதனால் எனக்கு அந்தக்கவிதை உறவின் கவிதையாகவே தோன்றியது

 

அருண் முகுந்த்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-65
அடுத்த கட்டுரைரயிலில்- கடிதங்கள்