கவிதைகள் கடிதங்கள்

kala

முகுந்த் நாகராஜனின் குழந்தைகள்

தற்குறிப்பேற்றம்

அன்புள்ள ஜெ

 

சமீபத்தில் உங்கள் தளத்தில் வெளிவந்த சில கவிதைகளும் அவற்றைப்பற்றிய குறிப்பும் அருமையாக இருந்தன. கலாப்ரியாவின் கவிதைகளை நான் நேரடியாக ஒரு வர்ணனையாகவே வாசித்தேன். அவற்றை தற்குறிப்பேற்ற அணி என்று வாசிக்கமுடியும் என்பதும் அதுக்கு நவீனக்கவிதையிலே இடமுண்டு என்பதும் ஆச்சரியமானவையாக இருந்தன.

 

தற்குறிப்பேற்றம் என்றால் ஆசிரியரின் உள்ளக்குறிப்பை இயற்கைமேல் ஏற்றிச்சொல்வது. அதற்கு என்ன காரணம் என்றால் இயற்கையில் அவ்வாறு உள்ளடக்கம் என்று ஒன்றும் இல்லை என்பதுதான் என்று சொல்கிறீர்கள். ஆனால் இயற்கையில் உள்ள அர்த்தங்களில் ஒரு துளி அந்தத் தருணத்திலே அந்தக்கவிஞனை அவ்வாறு வந்தடைந்தது என்று எடுத்துக்கொள்வதுதானே சரியாக இருக்கும்?

 

அன்புடன்

சங்கர்

mukundjpg

 

அன்புள்ள ஜெ

 

உங்கள் தளத்தில் வெளிவந்த கவிதைகளில் முகுந்த் நாகராஜனின் கவிதைகள் அற்புதமானவை. அதிலும் வீட்டை இரண்டாகப்பிளக்கும் அந்தக்குழந்தை ஓர் அற்புதம். என் அம்மா ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். என் பையன் இதேபோல வீட்டை இரண்டாகப்பிரித்து  கொண்டு ஓடினான். அம்மா பார்த்து சிரித்தபடி ‘கிருஷ்ண பாதம் தெரியறதே. இன்னிக்கு கண்ணன்பிறப்பா?” என்றார்கள். கிருஷ்ண ஜயந்தி அன்றைக்கு கோலமாவில் கால்வைத்து கிருஷ்ணனின் கால்களை வீட்டுக்குள் வைப்பதை அவர்கள் ஒப்பிட்டது அற்புதமாக இருந்தது. இப்படி நம் பேச்சிலே எப்போதும் கவிதை வந்துகொண்டேதான் இருக்கிறது. அந்தக்கவிதையை ஒரு கவிதைக்குள் பார்ப்பது பெரிய அனுபவமாக அமைந்தது

 

ராஜி

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-58
அடுத்த கட்டுரைகடைசி முகலாயன்: ஒரு மதிப்புரை