அன்புள்ள ஜெ.,
சொல்வனத்தில் உள்ள “சிறுகதை எழுதுவது எப்படி?” என்ற இந்தக் கட்டுரையில் தி ஜானகிராமன் சிறுகதைக்கான இலக்கணங்களைச் சொல்லிச் செல்கிறார். கட்டுரை வரைந்த வருடம் 1969. அவருடைய முக்கியமான சிறுகதைகளெல்லாம் அநேகமாக அதற்கு முன்னாலேயே வந்து விட்டன. ஒரு ஐம்பது வருடங்களுக்கு முந்திய எழுத்தாளர் அவர். இந்த இலக்கணங்களுக்கான வயது ஐம்பது என்ற வகையிலே இன்றும் இதே இலக்கணங்கள் செல்லுபடியாகுமா? உங்கள் சிறுகதைகள் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியவை. நீங்கள் இன்று இதே கட்டுரையை எழுதினால் எதைக் கொள்ளுவீர்கள், எதைத் தள்ளுவீர்கள்?
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
சிறுகதைபற்றி தி ஜானகிராமன்
சிறுகதை போன்ற இலக்கியவடிவங்களைப் பற்றி இரண்டு வகையாகப் பேசலாம். ஒன்று புறவயமாக அதன் வடிவ ஒழுங்கு, மொழி, குறிப்புணர்த்தும் தன்மை ஆகிய அம்சங்களைப்பற்றிய விவரிப்பு. இவையே ஒரு பயிற்சி முகாமில் சொல்லப்படவேண்டியவை. பொதுவாக இளம் வாசகனுக்கு உதவியானவை, எழுத்தாளனுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டியவை. இவையே புறவயமானவை
ஓர் எழுத்தாளன் இதைப்பற்றிப் பேசுவான் என்றால் அந்த பொதுவான வடிவிலிருந்து தான் எப்படி வேறுபடுகிறான் அல்லது எவற்றை ஏற்றுக்கொள்கிறான் என்றும் சொல்லலாம். அந்த வடிவை ஒட்டியும் மீறியும் தான் எழுதிய கதைகள், அவற்றை எழுதத்தேவையாக இருந்த தருணங்கள் ஆகியவற்றை விவரிக்கலாம்.
ஆனால் இந்தக்கட்டுரையில் தி.ஜானகிராமன் அவருடைய சிறுகதை எழுதும் அனுபவங்களை மட்டும் பேசுகிறார். அரிதாக பயிற்சிவகுப்புகளிலேயே எழுத்தாளர்கள் ‘சிறுகதை என்பது ஆழமான உணர்ச்சியின் ஒருதுளி’ ‘அனுபவத்தின் துண்டு’ ‘;நல்ல சிறுகதை உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரவேண்டும்’ என்பது போன்ற வரிகளைச் சொல்வதுண்டு. அது சிறுகதையை அவர்கள் புறவயமாக மதிப்பிட்டு யோசிக்கவில்லை என்பதற்கான சான்று மட்டுமே. கணிசமான எழுத்தாளர்கள் தங்கள் இலக்கியவடிவங்களை விமர்சன- இலக்கண நோக்கில் பார்த்திருப்பதில்லை. இத்தகைய கூற்றுகளால் பெரிய பயன் ஏதுமில்லை
சிறுகதையை எப்படி எழுதுகிறோம் என எந்தச் சிறுகதையாசிரியன் சொல்லிவிடமுடியும்? அவன் ஒவ்வொரு சிறுகதையையும் ஒவ்வொரு வகையில் எழுதியிருப்பான். மிக எளிதாக எழுதியவை இருக்கும். சொல் சொல்லாக யோசித்து குழம்பியவையும் இருக்கும். உணர்ச்சிவேகத்துடனும் எழுதியிருப்பான். விலக்கத்துடனும் எழுதியிருப்பான். ஆகவே சிறுகதையின் அகவடிவை, அதை எழுதிய நிலையைப்பற்றிய பேச்சுக்களுக்கு வாசகர்களிடம் எந்தப்பொருளும் இல்லை. அதை ஓர் எழுத்தாளன் வேண்டுமென்றால் கொஞ்சம் புரிந்துகொள்வான்
மற்றபடி ஜானகிராமன் இதில் உத்தேசிப்பது சிறுகதையின் செவ்வியல்வடிவை. அதன் ஒருங்கமைவுள்ள உடல், இறுதிமுடிச்சு, இடமும்காலமும் எல்லைக்குட்பட்டிருக்கும் தன்மை ஆகியவற்றை. நான் அவற்றையே எப்போதும் வலியுறுத்துகிறேன். அந்தச் செவ்வியல்வடிவை மீறிச்செல்லவேண்டும் என்றால் சிறுகதையின் அந்தக்கருவு அதற்கான தேவையை உருவாக்கவேண்டும். அந்தச்சிறுகதை அந்த மீறல் வழியாக செவ்வியல் வடிவில் சாதிக்கமுடியாத எதையேனும் சாதித்திருக்கவேண்டும்
அதாவது சிறுகதையின் செவ்வியல்வடிவமே அது. மீறல்கள் படைப்பூக்கம் வழியாக மட்டுமே பொருள்கொள்பவை
ஜெ