(அ.கலையரசன், உதவிப்பேராசிரியர், சென்னை வளர்ச்சியியல் கழகம்) -தமிழில் பாலா
பொருளியல் அறிஞர்கள், ஜக்தீஷ் பக்வதி மற்றும் அர்விந்த் பனகாரியா, “வளர்ச்சி ஏன் முக்கியம்? (Why Growth Matters?) என்னும் தங்களது புத்தகத்தை 2013 ஆம் ஆண்டு வெளியிட்டார்கள். அதில் அவர்கள் பொருளாதாரச் சீர்திருத்தங்களை இரண்டு பாக வழிமுறை எனப் பிரிக்கிறாரகள். முதல் பாகத்தில், அதிக வளர்ச்சியைத் தூண்டும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் இருக்கும். அதையடுத்த இரண்டாம் பாகத்தில், அந்த அதிக வளர்ச்சியினால் வரும் நிதியைக் கொண்டு செய்யப்படும் மக்கள் நலத் திட்டங்கள் இருக்கும். தெளிவாக, வளர்ச்சி முதலிலும், முன்னேற்றம் அதைத் தொடர்ந்தும் வரும் என்பதும், முன்னேற்றம், வளர்ச்சியின் மூலம் கிடைக்கும் நிதியை நம்பியிருக்கும் என்பதும் இதன் விளக்கம்.
அவர்கள் வார்த்தைகளிலேயே சொல்வதெனில்,
“Growth would create more jobs and opportunities for gainful employment in income, directly pulling more of the poor above poverty line and additionally would allow the government to pull in more revenues, which would enable the government to spend more on healthcare, education and other programs to further help the poor (Bhagwati and Panagariya, 2013:27)
1991 ஆம் ஆண்டு துவங்கி, 20 வருடங்களாக நிகழ்ந்த பொருளாதாரச் சீர்திருத்தங்கள், இந்தியாவில், குறிப்பாக, குஜராத்தில் அதிக பொருளாதார வளர்ச்சியையும், மேலான சமூக முன்னேற்றத்தையும் கொண்டு வந்துள்ளது என்பது அவர்கள் வாதம். அதிக பொருளாதார வளர்ச்சி, மிக வேகமாக வறுமையைக் குறைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள். இது, பொருளாதார வளர்ச்சியினால், மக்கள் தங்கள் வறுமை நிலையில் இருந்து மேல் இழுக்கப்படும் உத்தி; வழக்கமாக, அரசு மக்கள் நலனுக்காகச் செலவிடுவதால், மேலிருந்து (அரசு) கீழ் (மக்கள்) நோக்கிச் செல்லும் முன்னேற்றமல்ல என்கிறார்கள். இந்த மாதிரியினால், சமூகத்தின் கீழ்நிலையில் இருக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் சிறுபான்மை மக்களின் வாழ்க்கையில் தொடர்ந்த முன்னேற்றம் காணப்பட்டது எனவும் வாதிடுகிறார்கள்.
அதே ஆண்டில், பொருளியல் அறிஞர்கள் அமர்த்தியா சென் மற்றும் ஜீன் ட்ரீஸ் வெளியிட்ட, ”நிச்சயமற்ற பெருமிதம் – இந்தியாவும், அதன் முரண்பாடுகளும்” (An Uncertain Glory: India and its contradictions) என்னும் புத்தகம், பகவதி மற்றும் பனகாரியாவின் புத்தகத்தில் வைக்கப்படும் வாதங்களுக்கு எதிர்வாதங்களை முன்வைக்கிறது. அவர்கள், பொருளாதார வளர்ச்சி என்பது தன்னளவில் முற்றுப் பெரும் ஒரு குறிக்கோளல்ல; அது மக்கள் முன்னேற்றத்தை அடையும் ஒரு வழிதான் என்கிறார்கள். சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளான கல்வி மற்றும் சுகாதாரத்தில், அரசுக்குப் பெரும்பங்கை உருவகிக்கும் அவர்கள், இந்தத் துறைகளில், அரசின் வலுவான தலையீட்டையும் பரிந்துரைக்கிறார்கள். இருபது ஆண்டுகளாக இருந்த தொடர் பொருளாதார வளர்ச்சி, குறிப்பாக குஜராத்தில், அதே அளவில் சமூக முன்னேற்ற வளர்ச்சியைக் கொண்டு வரவில்லை என்பதை அவர்கள் முன்வைக்கிறார்கள். இந்தக் காரணங்களுக்காக குஜராத் மாதிரி என்பது ஒரு பலவீனமான ஒன்று என்பது அவர்கள் வாதம். இதே ரீதியில், ஹிர்வே (2013) மற்றும் சூத் (2012) போன்றவர்களும், 1990 களில் குஜராத்தில் துவங்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள், அனைத்து மக்களையும் ஒன்றிணைத்த ஒரு சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்தியதா? என்னும் கேள்வியை முன்வைக்கிறார்கள்.
தங்களது வாதத்துக்கு, ஆதாரமாக அமர்த்திய சென், கேரள மாநிலத்தை முன்வைக்கிறார். ஆனால், பகவதியும்/பனகாரியாவும், கேரளம் வரலாற்று ரீதியாகவே, சமூக முன்னேற்றத்தில் பலபடிகள் முன்னின்ற மாநிலம். எனவே, கேரளத்தையும், குஜராத்தையும் ஒப்பிடுதல் சரியல்ல என்கிறார்கள். முன்னேற்றக் குறியீடுகளை ஒப்பிடாமல், முன்னேற்ற வளர்ச்சி விகிதத்தை ஒப்பிடுதலே சரி என்பது அவர்கள் வாதம். அப்படி, முன்னேற்ற வளர்ச்சி விகிதத்தில், குஜராத், கேரளாவை விட சில முன்னேற்றக் குறியீடுகளில் வேகமாக வளர்ந்துள்ளது என்பது அவர்கள் தரப்பு.
மேற்சொன்ன விவாதத்தின் பிண்ணணியில், இந்தக் கட்டுரை, தமிழகம் மற்றும் குஜராத் மாநிலங்களின் சாதனைகளை ஒப்பீடு செய்ய முயல்கிறது. இரண்டு மாநிலங்களுமே சந்தை மயப் பொருளாதாரக் கொள்கைகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்தன. (பகவதி / பனகாரியா சொன்ன முதல் பாக பொருளாதாரச் சீர்திருத்தங்கள்). இரண்டு மாநிலங்களுமே, இந்திய தேசிய சராசரிப் பொருளாதார வளர்ச்சியை விட வேகமாக வளர்ந்தவை. இரண்டு மாநிலங்களுமே அதிக நகர்மயமானவை. வளர்ந்த தொழில் மாநிலங்கள். கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மாநிலங்கள்.
ஆனால், வறுமை குறைப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக முன்னேற்றத் தளங்களில், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் துவங்கிய இருபது ஆண்டுகளில், தமிழகம், குஜராத்தை விட மிக நன்றாக செயல்புரிந்துள்ளது. வெறும் குறியீடுகளில் மட்டுமல்ல, குறியீட்டு வளர்ச்சி விகிதத்திலும், தமிழகம் குஜராத்தை விட சிறந்து விளங்குகிறது. (இவை பகவதி, பனகாரியா சொன்ன அதே அளவீட்டு அலகுகள்தாம்). கேரளா போல, சமூக வளர்ச்சித் தளங்களில், தமிழகம், துவக்கத்தில் குஜராத்தை விட மேம்பட்டிருக்கவில்லை. குஜராத், தமிழகம் இரண்டுமே கிட்டத்தட்ட சம அளவு வளர்ச்சியில் தான் துவங்கின. சொல்லப்போனால், சில குறியீடுகளில், குஜ்ராத், தமிழகத்தை விட முன்னே இருந்தது.
இந்தக் கட்டுரையின் முதல் பகுதி, இரண்டு மாநிலங்களுக்கிடையேயான துறை வாரியான பொருளாதார வளர்ச்சி விகிதம், ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி முதலியவற்றைப் பேசுகிறது. இரண்டாவது பகுதி, சமூக வளர்ச்சி, வளர்ச்சி விகிதம் முதலியவற்றை பேசுகிறது. இறுதிப் பகுதி, தமிழகத்தின் இந்த சமூகப் பொருளாதார முன்னேற்றங்களுக்கான காரணங்களை ஆய்வு செய்கிறது.
- பொருளாதார வளர்ச்சியின் இயங்கியல் ( Dynamics of Economic Growth):
தமிழகம், குஜராத் –இரண்டும் மாநிலங்களுமே தொடர்ச்சியான அதி பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ள மாநிலங்கள். 1990 களில் துவங்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களே இதன் காரணி எனச் சொல்லப்படுகிறது. இரண்டு மாநிலங்களுமே, மிகத் தெளிவாகப் பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகளை முன்னெடுத்தவை. தனியார் துறைக்குப் பெரும் வரிச்சலுகைகளை அளித்தவை (தத்தா, 2009; விஜயபாஸ்கர் 2010; ஹிராவே 2013).
தமிழகம் மற்றும் குஜராத் மாநிலங்களின் துறைவாரியான பொருளாதார வளர்ச்சிப் புள்ளி விவரங்கள், கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
தமிழகம் | குஜராத் | |||||||||||
துறை | 1991-2001 % | % | 2001-2012 % | % | 1991-2012 % | % | 1991-2001 % | % | 2001-2012 % | % | 1991-2012 % | % |
வேளாண்மை | 2.4 | 8.1 | 5 | 4.8 | 2.6 | 5.5 | 1.4 | 4.7 | 5.5 | 9.9 | 4.7 | 10.5 |
உற்பத்தி | 5.4 | 18.6 | 8.5 | 21 | 6.7 | 19.6 | 9.2 | 36 | 10.2 | 30.8 | 9.7 | 30.7 |
கட்டுமானம் | 8 | 8.3 | 10 | 11.1 | 9.6 | 10.5 | 5.4 | 4.6 | 13.2 | 7.2 | 8.5 | 6.1 |
தொழில்துறை | 6.2 | 30.7 | 8.1 | 31.6 | 7.1 | 29.8 | 8.6 | 47.2 | 9.9 | 40.8 | 9.3 | 40.7 |
சேவை | 7.5 | 61.2 | 8.4 | 63.6 | 8.4 | 64.7 | 7.5 | 48.1 | 10 | 49.4 | 9.2 | 48.9 |
மாநில GSDP | 6 | 100 | 7.9 | 100 | 7 | 100 | 6.5 | 100 | 9.2 | 100 | 8.3 | 100 |
- ஆண்டுகளுக்கு கீழ் உள்ள எண்கள் சராசரி பொருளாதார வளர்ச்சி. எடுத்துக்காட்டாக, வேளாண்மைத் துறை, தமிழகத்தில் 1991-2001 வரை, சராசரியாக4 சதம் வளர்ந்துள்ளது.
- % என்பது, மொத்த மாநிலப் பொருளாதாரத்தில், ஒரு துறையின் பங்கு எவ்வளவு சதவீதம் எனக் குறிப்பதாகும். எடுத்துக்காட்டாக, வேளாண்மைத் துறை, 1991-2001 ஆண்டுகளில், தமிழக மொத்தப் பொருளாதாரத்தில்1% ஆகும்.
- உற்பத்தி மற்றும் கட்டுமானம் இரண்டும் தொழில்துறையின் உப துறைகளாகும்.
மேற்கண்ட அட்டவணையில் இருந்து நாம் தெரிந்து கொள்வது, 1991 ஆம் ஆண்டு முதல் 2012 வரை, கட்டுமானத் துறை தவிர மற்ற எல்லாத் துறைகளிலும், குஜராத் மாநிலம், தமிழகத்தை விட வேகமாக வளர்ந்திருக்கிறது என்பதே. குறிப்பாக, வேளாண் வளர்ச்சி தமிழகத்தை விட குஜராத்தில் அதிகம்.
- வறுமை அளவுகள், 1994 முதல் 2012 வரை:
இரண்டு மாநிலங்களில், வறுமையின் அளவை நிர்ணயிக்க, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேசிய மாதிரிக் கணிப்பு அலுவலகம் (National Sample Survey Office (NSSO)) நடத்தும் நுகர்வுச் செலவு கணிப்பு (Consumption Expenditure Survey (CES)) மூலம் கிடைக்கும் புள்ளிவிவரங்கள் அலசப்படுகின்றன. இந்தக் கட்டுரை, வறுமைக்கோட்டை நிர்ணயிக்க, டெண்டுல்கர் கமிட்டி பரிந்துரைத்த வழிமுறைகளையும், திட்டக் கமிஷன் கொடுத்துள்ல வறுமைக்கோட்டு அலகுகளையும் உபயோகித்து, இரண்டு மாநிலங்களின் வறுமை அளவை மதிப்பீடு செய்ய முயல்கிறது.
- ஊரக வறுமை:
1993-94 ஆம் ஆண்டுகளில், ஊரக ஏழைகள் தமிழகத்தில் 51.2% ஆகும். அதே ஆண்டில், குஜ்ராத்தில் 43.3%. குஜராத்தை விட, தமிழகத்தில் ஊரக ஏழ்மை அதிகமாக இருந்திருக்கிறது. ஆனால், 2011-12 ஆண்டில், தமிழகத்தில் ஊரக ஏழைகள் 15.8% ஆகக் குறைந்துள்ளனர். ஆனால், குஜராத்திலோ 21.5%
ஊரக வறுமை சதவீதம் | ||
வருடம் | தமிழகம் | குஜராத் |
1993-94 | 51.2 | 43.3 |
2004-05 | 37.5 | 39.1 |
2011-12 | 15.8 | 21.5 |
மேற்கண்ட தகவல் சொல்வது யாதெனில், 1990 களில், ஊரக வறுமை அளவில் குஜராத் தமிழகத்தை விடக் குறைவாக இருந்தது. ஆனால், அடுத்த இருபதாண்டுகளில், தமிழகத்தில் வறுமை 34% குறைந்திருக்கிறது. குஜராத்தில் 22%. குஜராத்தை விட, வறுமைக் குறைப்பில் தமிழகம் 12% அதிகம் செயல்புரிந்திருக்கிறது.
2.1.1: ஊரக சமூக மற்றும் மதக் குழுக்கள் இடையே வறுமை அளவு:
1993-94 | 2004-05 | 20011-12 | 1993-2012 சராசரி குறைப்பு | ||||||
வ.எண் | சமூகக் குழு | தமிழகம் | குஜராத் | தமிழகம் | குஜராத் | தமிழகம் | குஜராத் | தமிழகம் | குஜராத் |
1 | தாழ்த்தப்பட்ட /பழங்குடியினர் | 65.8 | 54.4 | 51.2 | 54.3 | 24.0 | 33.8 | 2.3 | 1.1 |
2 | பிற்படுத்தப்பட்ட | 32.6 | 41.7 | 13.0 | 18.9 | ||||
3 | பொது | 45.6 | 37.4 | 22.2 | 13.7 | 1.0 | 6.1 | 2.5 | 1.7 |
4 | இந்து | 51.3 | 43.4 | 38.0 | 39.9 | 16.2 | 22.7 | 1.9 | 1.1 |
5 | முஸ்லீம் | 37.3 | 36.4 | 18.0 | 31.0 | 1.6 | 7.7 | 2.0 | 1.6 |
6 | மற்ற சிறுபான்மை | 57.0 | 59.1 | 36.1 | 22.1 | 13.9 | 15.2 | 2.4 | 2.4 |
7 | மொத்தம் | 51.2 | 43.3 | 37.5 | 39.1 | 15.8 | 21.5 | 2.0 | 1.2 |
- அட்டவணையில் உள்ள புள்ளி விவரங்கள், வறுமை அளவு சதவீதமாகும்.
இந்த அட்டவணையில், 1993 முதல் 2012 வரையிலான சராசரி வறுமைக் குறைப்பு, தமிழகத்தில் 2% ஆகவும், குஜ்ராத்தில் 1.2% ஆகவும் இருக்கிறது. இந்த அட்டவணையை மேலும் ஆராய்ந்தால், வறுமை அளவுகள் மிக அதிகமாக 2004-5 ஆண்டு முதல் 2011-12 ஆண்டு காலகட்டத்தில் குறைந்திருக்கிறது என்பதையும் காணலாம். மிக முக்கியமாக, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினரிடையேயான வறுமை, தமிழகத்தில், மிக அதிகமாக 27.2% குறைந்திருக்கிறது. மொத்த இந்துக்களின் வறுமை அளவு 21.8% குறைந்திருக்கிறது. இதே காலகட்டத்தில், குஜ்ராத்தில், தாழ்த்தப்பட்டவர்களிடையேயான வறுமை அளவு 20.5% ஆகவும், மொத்த இந்துக்களின் வறுமை அளவு 17.2% ஆகவும் குறைந்திருக்கிறது.
2.1.2 ஊரக வாழ்வியல் குழுக்கள் இடையே வறுமை:
1993-94 | 2004-05 | 20011-12 | 1993-2012 சராசரி குறைப்பு | ||||||
வ.எண் | வாழ்வியல் குழு | தமிழகம் | குஜராத் | தமிழகம் | குஜராத் | தமிழகம் | குஜராத் | தமிழகம் | குஜராத் |
1 | SENA | 37.2 | 33.1 | 24.6 | 28.0 | 7.7 | 7.6 | 1.6 | 1.4 |
2 | AGLA | 69.5 | 61.1 | 54.3 | 57.8 | 25.5 | 31.0 | 2.4 | 1.7 |
3 | OLAH | 44.0 | 46.4 | 34.2 | 45.9 | 10.0 | 28.9 | 1.9 | 1.0 |
4 | SEAG | 42.7 | 34.1 | 23.8 | 27.3 | 17.5 | 22.5 | 1.4 | 0.6 |
5 | OTHER | 24.2 | 17.2 | 17.1 | 18.4 | 6.4 | 9.2 | 1.0 | 0.4 |
6 | TOTAL | 51.2 | 43.3 | 37.5 | 39.1 | 15.8 | 21.5 | 2.0 | 1.2 |
- அட்டவணையில் உள்ள புள்ளி விவரங்கள் வறுமை அளவு சதவீதமாகும்.
SENA – வேளாண்மை தவிர்த்த மற்ற சுயதொழில் செய்பவர்கள்
AGLA – வேளாண்மைத் தொழிலாளர்கள்
OLAH – வேளாண்மை தவிர்த்த மற்ற தொழிலாளர்கள்
SEAG – வேளாண்மைத் துறையில் சுயதொழில் செய்பவர்கள்
இந்த வாழ்வியல் குழுக்கள் அனைத்திலுமே, தமிழகத்தில் 1993-94 முதல் 2011-12 வரையிலான காலகட்ட்த்தில், குஜராத்தை விட வேகமாக வறுமை குறைந்துள்ளதைக் காணலாம். குறிப்பாக, 1993-94 ல், குஜராத்தை விட தமிழகத்தில், வேளாண்மைத் தொழிலாளர்களிடையே வறுமை அதிகம் இருந்தது. ஆனால், அது கிட்டத்தட்ட 44% குறைந்து, 2011-12 ல் 25.5% ஆனது குறிப்பிடத்தக்கது. அதே காலகட்டத்தில், குஜ்ராத்தில் வறுமை 30.1% ஆக மட்டுமே குறைந்துள்ளது.
அதே போல, வேளாண்மையில் சுய தொழில் செய்பவர்களின் குழுவில், 1993-94 ல், தமிழகத்தில் (42.7%), குஜராத்தை (34.1%) விட வறுமை அதிக இருந்தது. அது, 2011-12, தமிழகத்தில் 17.5% ஆகவும், குஜரத்தில் 22.5% ஆகவும் குறைந்துள்ளது.
1991 துவங்கி 2011-12 காலகட்டத்தில், தமிழக வேளாண்மைத் துறை 2.6% வளர்ந்தது; குஜராத், 4.7% வளர்ந்தது. அந்த இருபதாண்டுகளில், குஜராத் வேளாண்மைத் துறை சராசரியாக 80% தமிழகத்தை விட அதிகம் வளர்ந்துள்ளது. ஆனால் வேளாண்மையில் ஈடுபடும் தொழிலாளிகள் மற்றும் சுயதொழில் புரிவோரிடையே, வறுமை, தமிழகத்தில் தான் அதிகம் குறைந்துள்ளது. இதன் காரணங்கள் என்ன என்பதை ஆராய்வது மிக முக்கியம்.
- கல்வியறிவு சதவீதம்
கல்வியறிவு விகிதம் என்பது, (6 வயதுக்கு மேலானவர்களில்), கற்றலின் வெளிப்பாடு. கீழ்க்காணும் அட்டவணை, தமிழகம் மற்றும் குஜராத் மாநில மக்களிடையே நிலவும் கல்வியறிவு பற்றிய புள்ளிவிவரமாகும். 1993 ஆம் ஆண்டு 67% ஆக இருந்த கல்வியறிவு, 2011-12 ஆம் ஆண்டு 81.1% ஆக உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில், குஜராத்தின் கல்வியறிவு 64.6% லிருந்து 77.9% ஆக உயர்ந்துள்ளது. இங்கே கவனிக்கப் பட வேண்டிய விஷயம், 1993 ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வியறிவு சதவீதம் தமிழகத்தில், குஜராத்தை விடக் குறைவாக இருந்தது. இது 2011-12 ஆம் ஆண்டில், குஜராத்தை விட அதிகரித்து உள்ளது. 1993 லிருந்து 2011-12 காலகட்டத்தில், தமிழகத்தில், தாழ்த்தப்பட்டவர்களிடையே கல்வியறிவு 23% உயர்ந்திருக்க, குஜ்ராத்தில் அது 15% ஆக உயர்ந்திருக்கிறது
- உழைக்கும் வர்க்கத்தின் கல்வித் தகுதி:
கல்விபெற்ற உழைக்கும் வர்க்கம், பொருளாதாரத்தின் செயல்திறனை மேம்படுத்தும் ஒரு முக்கிய காரணி. இந்த்த் தளத்தில் தமிழகம், குஜராத்தை விட அதிக செயல்திறனை அடைந்துள்ளது. 1993-94 ஆம் ஆண்டு, கல்வியறிவற்ற உழைக்கும் சமூகம், 40% ஆக இருந்த்து. இது 2011-12 ல், 20.4% ஆக்க் குறைந்துவிட்டது. குஜரத்தில், இதே காலகட்ட்த்தில், 41.6% லிருந்து, 24% ஆக்க் குறைந்துள்ளது. அதேபோல, உழைக்கும் சமூகத்தில் பட்டதாரிகள் 1993-94 ஆம் ஆண்டு 4.2% ஆக இருந்தார்கள். அந்த விகிதம், 2011-12 ஆம் ஆண்டு 14.3% ஆக உயர்ந்தது. குஜ்ராத்தில், பட்டதாரிகள் சதவீதம் 4.8% லிருந்து, 10 ஆக உயர்ந்தது. இந்தக் காலகட்ட்டத்தில், குஜராத்தை விட, தமிழகம் தன் உழைக்கும் சமூகத்தை அதிகம் படித்தவர்களாக மாற்றியிருக்கிறது. இந்த மாற்றத்தைத் தமிழகம், தாழ்த்தப்பட்ட மக்களிடையே மிக வேகமாக நிகழ்த்தியிருக்கிறது.
- அடிப்படை மக்கள் நலக் (சுகாதார) குறியீடுகள்:
- சாதியும் மக்கள் நலக் குறியீடுகளும்:
மொத்தப் பொதுநலக் குறியீட்டில் மட்டுமல்ல, சாதி வாரியான குறியீடுகளிலும், தமிழகம், குஜராத்தை விட, இருபதாண்டு காலத்தில் மேம்பட்டிருக்கிறது.
எடுத்துக்காட்டாக, குழந்தை இறப்பு விகிதம், தமிழகத்தில், தாழ்த்தப்பட்டவர்களிடையே 90 என்னும் அளவில் இருந்து 37 ஆகக் குறைந்திருக்கிறது. இது 53 அலகுகள் குறைவாகும். இதே காலகட்டத்தில் குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்டவர்களிடையே, இறப்பு 70 லிருந்து 65 ஆக, வெறும் 5 அலகுகளே குறைந்திருக்கிறது. அதே போல், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மரண விகித்த்திலும், தாழ்த்தப்பட்ட சாதியினரிடையே, தமிழக முன்னேற்றம், குஜராத்தை விட மிக அதிகம். அதேபோல், ஊட்டச் சத்துக் குறைபாடு, தடுப்பூசி சதவீதம், பிரசவத்துக்குப் பின் மருத்துவ வசதி போன்ற அலகுகளில், தமிழகத்தில், இந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த முன்னேற்றம் குஜராத்தை விட அதிகம். தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட மக்களிடையே ஏற்பட்ட முன்னேற்றம், 2011 ஆண்டில், அவர்களை, குஜராத்தின் முற்படுத்தப் பட்ட சாதியினரை விட மேல்நிலையில் இருத்தியிருப்பதைத் தரவுகள் சொல்கின்றன.
- இந்த வளர்ச்சி முரண்பாடுகளுக்கான காரணங்கள் என்ன?
பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நிகழ்ந்த 20 ஆண்டுகளில், குஜராத், தமிழகம் – இரண்டு மாநிலங்களுமே, பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்த மாநிலங்கள். ஆனால், மக்கள் நலக் குறியீடுகளில், தமிழகம் குஜராத்தை விட மேம்பட்ட முன்னேற்றத்தைத் தந்திருக்கிறது. இந்த நிகழ்வுக்கான சாத்தியமான காரணங்களை இந்தப் பகுதி ஆய்கிறது.
மக்களுக்கான அடிப்படைச் சேவையை அளிப்பதில், தமிழகத்தின் இந்த ஒப்பு நோக்கிய வெற்றிக்குப் பின்னால், இதை அளிப்பதில், அரசின் தலையீட்டின் தன்மைதான் இருக்கிறது என, பொருளியல் நிபுணர்கள் அமர்த்தியா சென் மற்றும் ஜீன் ட்ரீஸ் கணிக்கிறார்கள். அவர்கள் வார்த்தைகளில்,
“Less well known, but no less significant, is the gradual emergence and consolidation of universalistic social policies in Tamilnadu.. Tamilnadu, unlike most other states, also has an extensive network of lively and effective healthcare centres, where people from all social brackgrounds can get reasonably good healthcare, free of cost (2011)”
இதன் பிண்ணனியில், இலவச மதிய உணவுத் திட்டம், இலவச அரசு சுகாதார (மருத்துவ)க் கட்டமைப்பு, அனைவருக்குமான பொது வினியோக (ரேஷன்) அமைப்பு, மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் என்பவை இருக்கின்றன.
தமிழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்துக்கு ஒரு நெடிய வரலாறு உள்ளது. 1956 ஆம் ஆண்டு, “வகுப்பறையில் பசியை ஒழிப்போம்” (ராஜீவன், 2006) எனத்துவங்கப்பட்டது இது. இது ஏழைக் குழந்தைகள், குறிப்பாக கீழ்த்தட்ட்டு சாதிக் குழந்தைகள் பள்ளியை விட்டு நீங்குவதைக் குறைத்தது. இது, 1982 ஆம் ஆண்டு முதல், மாநிலமெங்கும், அனைத்துக் குழந்தைகளுக்கும் என விரிவாக்கப்பட்டது.
“ 1982 ஜூலை மாதம் முதல், கிராமப்புற பால்வாடிகள், மற்றும் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் 38 லட்சம் குழந்தைகளுக்கு, தினமும் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது. பின்னர் இது, நகர்ப்புற குழந்தைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு, கூடுதலாக 65 லட்சம் குழந்தைகள் பயன்பெற்றார்கள். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இலவச பல்பொடி வழங்கப்பட்டது. 1983 ஜனவரி முதல், முதியோர் பென்ஷன் பெறுபவர்கள் (1.9 லட்சம்), அதற்கு அடுத்த ஆண்டு, ராணுவ வீர்ர்களின் விதவைகள் என இது மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது” (ஹாரிஸ், 1984:4)
பின் வந்த வருடங்களில், இந்தத் திட்டம், ஊட்டச் சத்துக் குறைபாட்டை நீக்கும் அரசின் மற்ற திட்டங்களோடு இணைக்கப்பட்டது. இத்துடன், அரசு, 8 வகுப்பு வரை, மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகமும், மதிய உணவு பெறும் மாணவ்ர்களுக்கு இலவசச் சீருடையும் வழங்குகிறது. இவையனைத்தும் இணைந்து, ஆரம்ப / உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை / வருகையை அதிகரித்துள்ளது.
குஜராத் மாநிலமும், மற்ற மாநிலங்களுக்கு முன்பாக பள்ளி மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், பயனாளிகளைச் சென்றடைதல், செயல்திறன் போன்ற அலகுகளில், தமிழகம் மேம்பட்டிருக்கிறது. 44% ஊரக ஏழைக்குடும்பங்களில் இருக்கும் மாணவ்ர்களுக்கு, தமிழகத்தில் சத்துணவு சென்று சேர்கிறது. குஜராத்தில் அது, வெறும் 7.3% மட்டுமே. நகர்ப்புரங்களில், தமிழகத்தில் இது 28% ஆக இருக்கிறது. குஜராத்தில் வெறும் 5% மட்டும்தான் (விஸ்வநாதன், 2006).
அதே போல, சுகாதார, மக்கள் நல அலகுகளில், தமிழகம் மேம்பட்டிருப்பதற்குக் காரணம், அரசு, சுகாதாரக் கட்டமைப்பு, மிக விரிவாக, மாநிலமெங்கும், அனைத்துச் சாதியினரும் எளிதில் அணுகும் வண்ணம் அமைத்திருப்பது மிக முக்கியமான காரணம். அது மட்டுமல்லாமல், தமிழக அரசு, ஒரு நபருக்குச் சராசரியாக, 2005-06 முதல் 2009-10 வரை, ஆண்டுக்கும் ரூபாய் 382 செலவு செய்திருக்கிறது. அதே காலகட்டத்தில், குஜராத் அரசு செலவு செய்தது, ரூபாய் 265. இதைவிட முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், இந்த இலவசக் கட்டமைப்பு, எப்படி அனைத்து தரப்பு எளிதில் அணுகும் படி இருக்கிறது, அது எவ்வாறு பொதுமக்களால் உபயோகித்துக் கொள்ளப்படுகிறது என்பதே. எடுத்துக்காட்டாக, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக உள் நோயாளிகளாக (admitted patients) அனுமதிக்கப்படும் நோயாளிகள் செய்யும் செலவு, ஊரகங்களில் ரூ.934 ஆகவும், நகர்ப்புறங்களில் ரூ.1666 ஆகவும் இருக்கிறது தமிழகத்தில். ஆனால், குஜராத்தில், இது, ஊரகத்தில் ரூ.2253 ஆகவும், நகர்ப்புறத்தில் ரூ 4185 ஆகவும் இருக்கிறது. (ஷர்மா, 2012). அரசு மருத்துவக் கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்ள மக்கள் செய்யும் தனிச் செலவு, மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் மிக்க் குறைவு என்பதை அமர்த்தியா சென்னும், ட்ரீஸும் உறுதி செய்கிறார்கள். இதே மருத்துவக் கட்டமைப்பில், வெளிநோயாளிகளாக (outpatients), பயன் பெறும் ஊரகப் பொதுமக்கள், சேவையை முற்றிலும் இலவசமாகப் பெறுகிறார்கள். அதேபோல, அரசு மருத்துவக் கட்டமைப்பை, தமிழகப் பொதுமக்கள், குஜராத்திகளை விட அதிகம் உபயோகிக்கிறார்கள்.
தமிழக மருத்துவக் கட்டமைப்பின் இந்த மேம்பட்ட செயல்திறனுக்கு, கட்டமைப்பின் நிர்வாகிகள், மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப்ப் பணியாளர்களிடையே நிலவும் ஒரு நல்லிணக்கமும், ஒன்றிணைந்து செயல்படுதலும் எனச் சொல்லப்படுகிறது. அது மிக முக்கிய காரணமெனினும், இன்னும் வேறு முக்கிய காரணங்களும் உள்ளன. அது, கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் எழுந்த சமூக இயக்கங்களின் பங்களிப்பு என்கிறார் மெஹ்ரோத்ரா (2006). இந்த வாதத்தை உறுதி செய்யும் வகையில், சின்ஹா (2012), தமிழகத்தில் உருவான சாதி வாரியான இட ஒதுக்கீடு, மருத்துவக் கல்வியை, கிராமப்புறங்களில் வாழும் இடைநிலைச் சாதிகளுக்கும், வகுப்புகளுக்கும் கொண்டு சேர்த்தது என்கிறார். இதன் விளைவாக, கிராமப்புறங்களிலும், சிறுநகரங்களிலும் இருந்து, ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரிய முன்வரும் மருத்துவர்கள் என ஒரு குழு உருவாகியது என்பது அவரது கருத்து.
மேற்சொன்ன காரணிகளுடன், தமிழகத்தில், வறுமை குறைவதில், மக்களுக்கான உணவுப்பாதுகாப்பை உறுதிசெய்வதில், தமிழகத்தின் பொது விநியோகக் கட்டமைப்பு (public distribution system) மிக முக்கியப் பங்காற்றியுள்ளது. தமிழகத்தின் பொது விநியோக முறை, மிகச் செயல் திறன் மிக்கது. அது அனைத்து மக்களையும் அணைத்துச் செல்லும் கட்டமைப்பு (Universal) என, அமர்த்தியா சென்னும், ட்ரீஸூம் (2011) பதிவு செய்கிறார்கள்.
1997 ஆம் ஆண்டு முதல், குஜராத் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள மக்களுக்கு மட்டும் (Targeted Public Distribution system) எனப் பொது விநியோக முறையைச் சுருக்கிக் கொள்ள, தமிழகம் தொடர்ந்து அனைத்து மக்களுக்கான பொது வினியோக முறை (Universal Public Distribution system) யைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
பயனாளிகளின் தொடர்ந்த அழுத்தம் காரணமாக, தமிழகத்தின் பொது விநியோக முறை அதிகச் செயல்திறனுடனும், வெளிப்படையாகவும் இயங்கி வருகிறது. இந்தக் கட்டமைப்பில், பொருள் திருட்டு (leakage) மற்றும் ஊழல் மிகக் குறைவாக இருக்கிறது. (Srinivasan, 2010). சமீபத்தில், கேரா (2011b) என்பவர், தமிழக பொது விநியோகத் துறை, “ நிர்வாக ஒழுங்கு, வினியோக்க்கப்படும் பொருட்களின் தரம், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகே அமைந்திருத்தல், நம்பகத்தன்மை, பதிவேடுகள் பராமரிப்பு, அனைத்து மக்களுக்குமான சேவை” போன்ற அலகுகளில், தமிழகம், இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட மிகச் சிறப்பாகச் செயல்படுவதாக, தன் ஆய்வில் கண்டறிந்து வெளியிட்டுள்ளார். பொது விநியோகத்துறை, “அந்த்யோதயா அன்ன யோஜனா” என்னும் மத்திய அரசுத் திட்ட்த்தின் கீழ் வருபவர்களுக்கு மாதம் 35 கிலோ அரிசியும், மற்றவர்களுகு 20 கிலோ அரிசியும் இலவசமாக 2011 முதல் வழங்கிவருகிறது. (அலமு, 2011)
தமிழகம் போலில்லாமல், குஜராத் மாநில பொது விநியோக அமைப்பு, செயல் திறன் குறைந்தது; அனைத்து மக்களையும் அணைத்துச் செல்லாத முறை (exclusionary) என்கிறார் கேரா (2011 a) குஜராத்தில், தனி நபர் வாங்கும் தானிய அளவு குறைவு அதுவும், குறைந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் தனி நபர் வாங்கும் தானிய அளவு இந்தியாவிலேயே அதிகம். அதே சமயத்தில், தமிழகத்தில், பொது விநியோக முறையில் வழங்கப்படும் தானியம், பயனாளிகளுக்கு அல்லாமல், வெளியே செல்வது (Diversion), மிகக் குறைவு, (4.4%). இது குஜராத்தில் மிக அதிகம் (63%). சரியான விநியோக முறையில்லாததாலும், அதன் மக்களை அனைத்துச் செல்லும் முறையின்மையாலும், குஜரத்தின் ஏழைகளில் பாதிக்கு மேற்பட்டோர், இந்த அமைப்பிலிருந்து தானியங்களைப் பெறுவதில்லை. தமிழகத்தில் பொது விநியோக முறை அனைத்து மக்களுக்குமாக இருப்பதாலும் (universal), விநியோகக்கட்டமைப்பு மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் இருப்பதாலும், ஏழைகள், தங்களுக்கான உரிமைகளை, மிக எளிதாகப் பெற முடிகிறது. அரசியல் உறுதியும் மக்களின் ஒருங்கிணைந்த அழுத்தமும் இணைந்ததால், இந்தப் பொது விநியோகமுறை, தமிழகத்தில் மிக வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
ஊரக வறுமை குறைந்ததில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் செயல்பாடு மிக முக்கியமானது. இது ஊரக மக்களுக்கு, குறைந்த பட்ச வேலை வாய்ப்பை உறுதிசெய்கிறது. இதன் மூலம், ஊரகச் சமூகத்திற்கு தேவைப்படும் கட்டமைப்புகளை உருவாக்குகிறது. இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தை, தமிழகம் மிக நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டுள்ளது. ப்ரின்சிடன் பல்கலைக்கழகத்தின், உட்ரோ வில்சன் பள்ளியின் ஆய்வில் (2012), இந்தியாவிலேயே மிக அதிக அளவில், தமிழகத்தில் பெண்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெற்றார்கள் எனத் தெரியவருகிறது. சமீபத்தில் நடந்த கள ஆய்வில், தமிழகத்தில், 40% ஊரக்க் குடும்பங்கள், சராசரியாக 60 நாட்களுக்கு மேல் வேலைவாய்ப்பைப் பெற்றார்கள் எனத் தெரியவருகிறது. குஜராத்தில் இது19% மட்டுமே.
இந்தத் திட்டத்தில், தாழ்த்தப்பட்ட (46%) குடும்பங்கள் சராசரியாக 60 நாட்களுக்கு மேல் பயன்பெற்றிருக்கிறார்கள். குஜராத்தில் இது 26% மட்டுமே. பிற்படுத்தப்பட்ட மக்கள் 39% பயன் பெற்றிருக்கிறார்கள். குஜராத்தில் இது 10% மட்டுமே. எனவே, இந்த்த் திட்டம், தமிழக ஊரக மக்களுக்கு மிகப் பெரும் வாழ்வியல் ஆதாரமாக இருக்கிறது. இந்த வேலைவாய்ப்புத் திட்டமும், பொது விநியோக முறையின் இலவச உணவு தானியமும் இணைந்து, ஊரக நிலமில்லா வேளாண் கூலிகளுக்கு ஒரு புது விடுதலையை அளித்திருக்கிறது என்கிறார் விஜய்பாஸ்கர் (2011).
தமிழகத்தில், கிராம அளவில் செய்யப்பட்ட ஒரு விரிவான ஆராய்ச்சியில், கிராமப்புர தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் எழுச்சி, ஊரக அரசியல் சாதிக்கட்டமைப்பை மாற்றியிருக்கிறது. இது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலமாக, மக்கள் நலவாழ்வுத் திட்டங்கள், மக்களுக்குப் பயன்படும் வகையில் இயங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார் ஸ்ரீனிவாசன் (2010).
- முடிவுகள்:
இந்தக்கட்டுரையின் தரவுகள் மூலம், வேகமான பொருளாதார வளர்ச்சியுடன், மக்கள் நலக் குறியீடுகள் – கல்வி, சுகாதாரம் மற்றும் உணவுத் துறைகளில், தமிழகத்தின் முன்னேற்றம், குஜராத்தை விட மேம்பட்டதாக இருப்பது தெளிவாகிறது. கடந்த 20 ஆண்டுகளில், தமிழகத்தில் வறுமை நிலை, குஜராத்தை விடக் கணிசமாகக் குறைந்திருக்கிறது. பொருளாதார வளர்ச்சியின் பலன்கள், சாதி மத பேதமில்லாமல் அனைத்துத் தரப்பினர்களுடனும் பங்கிடப்பட்டிருக்கிறது. மக்கள் நலக் குறியீடுகளில், தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர், தமிழகத்தில், குஜராத்தை விட அதிகம் பலனடைந்திருக்கிறார்கள்.
1990 களின் துவக்கத்தில், பெரும்பாலான மக்கள் நலக் குறியீடுகளில், குஜராத் தமிழகத்தை விட மேலான நிலையில் இருந்தது. ஆனால், அடுத்த 20 ஆண்டுகளில், அனைத்து மக்கள் நலக் குறியீடுகளிலும், தமிழகம், குஜராத்தை விட மேம்பட்டு வளர்ந்திருக்கிறது. கேரளாவைப் போல, தமிழகத்திற்கு வரலாற்று சாதகங்கள் இல்லை. தமிழகமும், குஜராத்தும் ஒரே அளவு பொருளாதார வளர்ச்சி வேகத்தைக் கொண்டிருந்தாலும், தமிழகம் மக்கள் முன்னேற்றத்தில் மேம்பட்ட செயல்திறனை வெளிப்படுத்தியிருக்கிறது.
குஜராத் மாநிலத்தோடு ஒப்பிடுகையில், தமிழகம், முன்னேற்றக் குறியீடுகளின் அளவில் மட்டுமல்லாமல், வளர்ச்சி வேகத்திலும் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. இது பகவதி மற்றும் அர்விந்த் பனகாரியா பரிந்துரைத்த அதே அளவீட்டு முறையாகும்.
தமிழகம் அடைந்துள்ள இந்த ஒப்பீட்டு மேம்பாட்டிற்கு, பொது விநியோகம், மதிய உணவு மற்றும் சுகாதாரக் கட்டமைப்பு போன்ற, அனைத்து மக்களும் பயன் பெறுமாறு தமிழகம் அறிமுகம் செய்து இயக்கி வரும் மக்கள் நலத்திட்டங்கள்தான் முக்கியக் காரணம்.
ஜகதீஷ் பகவதி மற்றும் அர்விந்த பனகாரியா சொன்னது போல், முதலில் பொருளாதார வளர்ச்சி, அதன் பின்னர் மக்கள் நலன் என்னும் இரண்டு பாக பொருளாதார வழி அல்ல, தமிழகம் செய்தது. பொருளாதார வளர்ச்சி வரட்டும் எனக் காத்திருக்காமல், மக்கள் நலக் கொள்கைகளை வடிவமைத்து வெற்றிகரமாகச் செயல்படுத்தியதுதான் தமிழகத்தின் மேம்பட்ட முன்னேற்றத்துக்குக் காரணம்.
இந்தத் தளத்தில் எழுதப்பட்ட பல புத்தகங்கள் சொல்லும் இன்னொரு விஷயம் உண்டு. தமிழகத்தின் இந்த மேம்பாடு, வெறும் திட்டங்களால் மட்டும் வந்ததல்ல. மக்கள் தங்கள் உரிமைகளை உணர்ந்த ஒரு சமூகமாகத் திரண்டெழுந்த்தும் மிக முக்கிய காரணம். அது இல்லாமல், திட்டங்கள் வெற்றி பெற்றிருக்கும் வாய்ப்புகள் குறைவு. எடுத்துக்காட்டாக, ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அது தமிழகத்தில் வெற்றி பெற்றதற்குக் காரணம், ஊரக அளவில், பஞ்சாயத்துகளால் அது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதுதான்.
புதுமையான அரசு திட்டங்கள், மக்கள் நலன் உணர்ந்து செயல்படும் அரசு நிறுவனங்கள், மக்கள் ஒரு சமூகமாகத் திரண்டெழுதல், அவர்களின் அழுத்தம் இவை அனைத்தும் இணைகையில் திட்டங்கள் வெற்றியடைகின்றன. தமிழகத்தின், சமூக நலத்திட்டங்களின் வெற்றி நமக்குக் காட்டுவது இதுதான்.
தமிழில்: பாலா
பிற கட்டுரைகள்
இந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி! -பாலா
1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா
1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா
1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-3, பாலா