‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-58

bowசஞ்சயன் இரு விழிகள் மேல் பதிந்த நான்கு விழிகளால் நோக்கு பெருகி ஒவ்வொன்றையும் தொட்டும் அனைத்தையும் தொகுத்தும் குருக்ஷேத்ரப் பெருங்களத்தை நோக்கி சொல்பொழிந்துகொண்டிருந்தான். “கௌரவர்களிடம் என்ன நிகழ்ந்ததென்று தெரியவில்லை. அவர்கள் இதுவரை உள்ளூர சற்று அஞ்சிக்கொண்டிருந்தனர். அந்த அச்சத்திலிருந்து எதனாலோ அவர்கள் விடுபட்டனர். தளைச்சரடுகள் ஒவ்வொன்றாக அறுபட்டு கைகளிலும் கால்களிலும் நெஞ்சிலும் விடுதலையை உணர்ந்தனர். வீறிட்டுக்கூவியபடி கதைகளை சுழற்றிக்கொண்டு அவர்கள் களமெழுந்தனர்.”

தன்னுயிர் பிரிவதைப்பற்றிய அச்சமல்ல அது. தங்களில் ஒருவர் வீழ்வதைப்பற்றிய அச்சம். அது இரும்புக்குண்டுபோல் அவர்களின் கால்களில் தடுக்கியது. அவர்கள் அத்தனை எளிதாக கொல்லப்பட அதுவே வழிவகுத்தது. அந்த அச்சத்தை வெல்ல அவர்கள் மிகையாக வெறியூட்டிக்கொண்டனர். அவ்வெறியில் விழிசெவி துலங்காது முன்னால் பாய்ந்தனர். அதனாலேயே அம்புகள் முன் சென்று நின்று தலைகொடுத்தனர்.

கொக்கிக்கம்பிகளில் இழுத்தெடுக்கப்பட்ட கௌரவர்களின் உடல்களை காணும்போதெல்லாம் அவர்கள் அகம் துடித்தது. அந்தக் கொக்கி தசையில் சிக்கி இழுபடுவதுபோல் முகம்சுளித்து உடல்துள்ளினர். உடல்களைக் கண்டவர்கள் பாறையில் தலையுடைத்துக்கொள்ள வெறியெழுந்தவர்களாக எழுந்து பாய்ந்தனர். கதையால் நெஞ்சுடைந்து களம்வீழ்கையில் அவர்கள் உரியது நிகழ்ந்தது என்னும் நிறைவை அடைந்தனர். அவர்களின் இறந்த முகங்களிலெல்லாம் புன்னகை எஞ்சியிருந்தது. அவர்களின் கைகள் முழுமையாக விரிந்து அனைத்துப் பிடிகளையும் விட்டிருந்தன.

அரசே, அக்களத்தில் இறந்தவர்கள் அனைவரும் எதையேனும் பற்றியிருந்தனர். படைக்கலங்களை, தங்கள் ஆடையை, அல்லது அருகிருக்கும் உடைந்த தேர்த்துண்டுகளை. பலர் உடனிறந்தவர்களின் கைகளையோ கால்களையோ பிடித்திருந்தனர். நிலத்தை அள்ளிப்பற்றி விழுந்தவர்களும் உண்டு. அரிதாகவே இரு கைகளும் விரல்விரியவிட்டுக் கிடந்தவர்கள் இருந்தனர். அவர்கள் அனைவர் முகங்களிலும் அந்தப் புன்னகை இருந்தது. அது தார்த்தராஷ்டிரர் அனைவரிடமும் இருந்தது என்பதை அங்கே படையினர் கண்டனர். கௌரவப் படைப்பிரிவுகளில் அதைப்பற்றி பேசி வியந்துகொண்டனர்.

கௌரவர்கள் இன்று ஏன் அச்சமிழந்தனர்? இன்றும் அதோ இறந்த கௌரவர்களின் உடல்களை வண்டிகளில் அடுக்கி கொண்டுசெல்கிறார்கள். இன்றும் துரியோதனரும் துச்சாதனரும் பெருந்துயரால் எடைமிகுந்த உடலுடன், தள்ளாடும் கால்களுடன், விழிநீர் வழியும் முகத்துடன் தேர்த்தட்டில் நின்றிருக்கிறார்கள். வீழ்ந்தவர்களின் பெயர்சொல்லி முழவுகள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. ”கௌரவர்கள் விண்புகுக!” என படைவீரர் வாள்களையும் வேல்களையும் தூக்கி வாழ்த்தொலி எழுப்புகிறார்கள்.

ஏதோ நிகழ்ந்தது. என்னவென்று அறியமுடியாத ஒன்று. அவர்கள் அனைவரிலும் அது ஒரே தருணத்தில் பரவியது. அவர்களின் முகங்கள் மலர்ந்தன. உடல்கள் கொந்தளித்தன. ”வெற்றி! வெற்றி! வெற்றி!” என்று கூச்சலிட்டபடி அவர்கள் வில்களையும் வேல்களையும் கதாயுதங்களையும் எடுத்துக்கொண்டு படைமுனைக்கு சென்றார்கள். அங்கே ஆமையின் ஓட்டுக்காப்பு பல இடங்களில் உடைந்திருந்தது. ஆமையால் நாற்கரம் சிதைந்து பொருளில்லாத வளையமாக ஆகி ஆமைமேல் அலையடித்துக்கொண்டிருந்தது.

கௌரவர்கள் பீமசேனரை சூழ்ந்துகொண்டார்கள். அவர்களின் அம்புகள் பீமனை அறைந்து அப்பாலிட்டன. அவருடைய கவசங்கள் உடைந்தன. தொடையிலும் விலாவிலும் அம்புகள் பாய்ந்தன. அவர் அவர்கள் மாறிவந்திருப்பதை அப்போதே புரிந்துகொண்டார். அவருடைய கையசைவுக்கேற்ப கொடிகளும் முழவுகளும் ஆணையிட்டன. சுருதகீர்த்தியும் சுருதசேனரும் சதானீகரும் சுதசோமரும் சர்வதரும் அம்புகளை தொடுத்தபடி வந்து கௌரவர்களை எதிர்த்தனர். கௌரவர்கள் பின்னுச்சிப் பொழுதின் மெல்லிய ஒளியில் பொன்னெழில் கொண்டிருப்பதை அவர்கள் கண்டார்கள். அவர்களின் விழிகளுடன் கைகள் ஒத்திசைந்தன. அவர்களின் அம்புகள் திசையழியவில்லை.

தாம்ரலிப்தியின் படைத்தலைவன் சங்கஹஸ்தனை நிஷங்கியின் அம்பு வீழ்த்தியது. விரஜஸால் தித்திரநாட்டு இளவரசர்கள் சங்குவும் சுதாகரனும் கொல்லப்பட்டார்கள். திருதரதாசிரயர் தண்டகநாட்டு இளவரசர்களான ஆகுகனையும் அஜயனையும் ஆர்ஜவனையும் கொன்று வீழ்த்தினார். கௌரவர்களான காஞ்சனதுவஜரும் சுபாகுவும் துர்பிரதர்ஷணரும் திருதக்ஷத்ரரும் இணைந்து சர்வதரையும் சதானீகரையும் அம்புகளால் அறைந்து பின்செலுத்தினர். கௌரவ வீரர்களாகிய நிஷங்கியும் துச்சலனும் துச்சகனும் இணைந்து சுருதகீர்த்தியை அறைந்து தேரிலிருந்து தெறிக்கச்செய்தார்கள்.

பீமனை கௌரவர்கள் மேலும் மேலும் பின்னடையச் செய்தார்கள். அவருடைய கவசங்கள் முற்றாகவே உடைந்து விழுந்தன. குருதிவழியும் உடலுடன் தேரிலிருந்து பாய்ந்து படைகள் நடுவே மறைந்த பீமசேனரை நோக்கி கௌரவர்களின் அம்புகள் சீறிவந்தன. பாண்டவர்களின் படைகளிலிருந்து வில்லவர்கள் கௌரவ அம்புகளால் சரிந்துகொண்டே இருந்தார்கள். தசார்ணத்தின் இளவரசர்கள் ஊர்ஜனும் உத்கீதனும் வீழ்ந்தனர். படாச்சார அரசர் சூரர் தன் மைந்தர் சுதீபனுடன் களம்பட்டார். சர்வதர் கவசம் உடைந்து நெஞ்சில் அம்புபட்டு தேரில் வீழ அவரை பின்கொண்டுசென்றான் தேர்ப்பாகன். சுருதசேனரின் தோளில் அம்புகள் தைத்தன. அவரை காக்கும்பொருட்டு சென்ற சதானீகரும் தேர்த்தட்டில் அம்புபட்டு வீழ்ந்தார்.

பாண்டியப் படையும் பிஷச்சர்களின் படையுமே கௌரவர்களை எதிர்கொண்டு நின்றிருந்தன. பிஷச்சர்களின் அரசர் கமலநாபர் வீழ்ந்ததும் அவர்களும் பின்னடையலாயினர். அப்போது பின்னணியிலிருந்து புரவிகளின் கனைப்போசை கேட்டது. உரசி பழுக்கச்செய்யப்பட்ட அம்புகளால் மலவாயில் சூடுவைக்கப்பட்ட புரவிகள் தறிகெட்டு கனைத்தபடி பாய்ந்து களத்தில் தெறித்துச் சிதறிப்பரந்தன. அவற்றிலொன்றின்மேல் காலூன்றி பீமன் ஏவப்பட்ட அம்புபோல களத்திற்கு வந்தார். அவ்விசையிலேயே விருந்தாரகனை தலையை அறைந்து கொன்றார். நிஷங்கியும் விரஜஸும் மறுகணமே களம்பட்டார்கள்.

சிதறிப்பரவிய புரவிகளில் சர்வதரும் சுதசோமரும் எழுந்துவந்தனர். அவை ஒன்றுடன் ஒன்று முட்டித்ததும்பி துள்ளி அகன்று காலுதறிச் சரிந்து உருண்டு எழுந்து கனைத்து பிடரி சிலிர்த்துப் பாய்ந்து அம்புபட்டுச் சரிந்து துடித்தெழுந்து மீண்டும் சரிந்து துள்ளி தசைக்குவியல்களென அதிர்ந்த கொப்பளிப்பின் மேல் அவர்கள் அலைபாயும் புதர்ப்பரப்பின் மேல் சிட்டுகளும் வண்ணத்துப்பூச்சிகளும்போல் துள்ளி அலைந்தனர். எதிர்பாராத இடங்களில் தோன்றி கௌரவர்களை அறைந்து வீழ்த்தினர். சர்வதர் கௌரவ மைந்தர்களாகிய கௌஷிகியையும் கோமதரையும் சுமந்தரையும் வீழ்த்தினார். சுதசோமர் கௌரவ மைந்தர்களாகிய ஹிமரையும் பத்மரையும் ஜலசாயியையும் பத்ரசாயியையும் கொன்றார்.

பீமனின் கையிலிருந்த கொக்கிக்கயிறு வந்து காஞ்சனதுவஜரை இழுத்து சென்றது. அவர் பீமசேனரின் காலடியில் சென்று விழுந்து அவர் கதையால் தலையுடந்து குதிரைகளின் குளம்புகளுக்குக் கீழே விழுந்தார். துர்பிரதர்ஷணரும் திருதக்ஷத்ரரும் பீமசேனரின் பெருவேலால் நெஞ்சு துளைக்கப்பட்டு தேர்த்தட்டிலிருந்து விழுந்தார்கள். பீமசேனர் தன் தோள்களை ஓங்கி அறைந்துகொண்டு உரக்க நகைத்து ”எழுக! கௌரவர்கள் எழுக! இன்றைய வேட்டை எஞ்சியிருக்கிறது!” என்று கூவினார். அவரைச் சூழ்ந்து சிறகுகள் அலையப் பறந்த நாற்பத்தொன்பது மருத்துக்கள் தங்கள் கைகளிலிருந்த முழவுகளை முழக்கி ”எழுக! எதிர்க்கவிருப்போர் எழுக!” என்று கூச்சலிட்டனர்.

திருதராஷ்டிரர் திகைத்து ”என்ன சொல்கிறாய், அறிவிலி?” என்றார். சஞ்சயன் கனவிலோ கள்மயக்கிலோ இருப்பது போலிருந்தான். ”தட்சப்பிரஜாபதியின் மகளும் தர்மதேவனின் மனைவியுமான மருத்வதியின் மைந்தர்கள் அவர்கள். காற்றுகளின் மைந்தனைத் துணைக்க அவர்கள் எழுந்திருக்கிறார்கள். அவர்களால் வழிநடத்தப்படும் முந்நூற்றறுபது மருத்துக்களின் படைகள் குருக்ஷேத்ரத்தை நிறைத்து கொப்பளிக்கின்றன” என்றான். ”என்ன சொல்கிறாய்? மூடா! நீ எதை பார்க்கிறாய்?” என்று திருதராஷ்டிரர் கூவினார்.

சஞ்சயன் வெறிகொண்டவன்போல் சொன்னான். ”அதோ மருத்துக்கள்! நீர்வண்ணமும் வெள்ளிவண்ணமும் பொன்வண்ணமும் கொண்ட சிறகுகள் அலைப்பவை. கூரிய அலகுகொண்ட பறவைகள் போன்றவர்கள் சிலர். பறக்கும் புரவிகள் போன்றவர்கள் சிலர். சிலர் வண்டுகள். சிலர் தும்பிகள். அரசே, சிலர் கூரிய நோக்கு கொண்ட கரிய வௌவால்கள். அதோ சுழன்றடிக்கும் பிரவாகன், சுழிக்கும் ஆவகன், அலைகொள்ளும் உத்வகன், நிலைகொள்ளும் சம்வகன், இரண்டாகப் பிளந்த விவகன், கூரிய பர்வகன், நீரை அள்ளிச்செல்லும் வாககன், மூலையை காக்கும் இஷான்கிருத், தழலுடன் விளையாடும் துனயன், புழுதியள்ளிச் சுழற்றும் ரிஷதன்ஷ், கூச்சலிடும் தூதயன், ஓங்கியறைந்து ஓலமிடும் பரீஜயன்.”

“அதோ வருபவன் மரங்களை அள்ளிச்சுழற்றும் மகிஷாசன், இலைகளை அள்ளிக்கூட்டும் சுதானவன், மின்னலை சூடிக்கொண்ட ஆஃப்யவன், பொன்னிறமான சித்ரஃபானவன், ஊளையிடும் மஞ்சினன், அறைகளுக்குள் சுழலும் ஸ்வத்வாசன், எழுந்தமையும் ரகுஷ்யாத், மலைகளை தழுவிச்சுழலும் கிரீசன், பாறைகளை முட்டி உருட்டும் ஹஸ்தின், மான்களைப்போல் காட்டுக்குள் ஓடும் மிருகைவன், ஒளிகொண்ட பிரசேதஸ், நடுங்கச்செய்யும் குளிர்கொண்ட சுபிஷ், உலுக்கும் சபத், முகில்களை சுமந்துசெல்லும் அஹிமான்யவன், வேள்வித்தீயை வளர்க்கும் ருஷ்திஃபி, வேள்விப்புகையை பரப்பும் பிருஷ்திஃபி, விண்ணளாவ விரியும் விஸ்வதேவன், சினம்கொண்ட ருத்ரஸ்யன், அனைத்தையும் பிளக்கும் யுவனன், பசிகொண்ட ஆபோக்யன். அவர்கள் சாட்டைகளை படைக்கலங்களாக கொண்டிருக்கிறார்கள். அவற்றை சுழற்றிச்சுழற்றி வீசியறைந்து போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.”

“அதோ வருபவன் புரவிகளை ஆளும் அதிக்ரேவன், சிம்மங்களின் பிடரிகளில் திகழும் அஜ்ரன், தழலென ஒலிக்கும் ருத்ரன், சந்திரசூரியர்களை நடத்தும் விவாக்ஷு, அலையடித்து விளையாடும் ருஷ்தயன், எதிர்பாராமல் வந்தறையும் சித்ரேயன், அடுமனையில் அனலோம்பும் நரன், உலைகளில் தங்கத்தை ஊதி சிவக்கச்செய்யும் அஜ்ஜோஃபி, நெஞ்சில் பொன்னணிந்த வக்ஷஸி, விண்மீன்களின் ஒளியை அதிரச்செய்யும் திவன், ஒவ்வொன்றையும் தொட்டெண்ணி காலம் சமைக்கும் நிமிமுக்‌ஷு, வேள்விநிறைவு செய்யும் ஹிரண்யேயன்” என்று சஞ்சயன் கூவினான். “அவர்களுடன் இணைந்துள்ளனர் மூச்சுவடிவ மருத்துக்கள். விழும் அபானன், எழும் உதானன், நிலைகொள்ளும் சமானன், அவர்கள் மேல் ஏறிய பிராணன். அங்கே புரவிக்கால்களில், யானைச்செவிகளில், அம்புச்சிறகுகளில் அவர்கள் நிறைந்திருக்கிறார்கள்.”

அவர்களை எதிர்த்துப் போரிட வந்துள்ளனர் மூன்று பெருந்தழல்கள். காற்றை ஊர்தியாகக்கொண்டு எழும் சூசி இளநீல நிறமானவன். விண்ணிலெழும் பாவகன் வெண்ணிறம் கொண்டவன். அன்னத்திலெழும் பவமானன் செந்நிறத்தோன். அவர்கள் ஆயிரம் பல்லாயிரமென கணம்தோறும் பெருகும் சிறகு கொண்டவர்கள். அம்புமுனைகளில் மின்னுகிறார்கள். தேர்ச்சகடங்களில் பொறிகளாகி தெறிக்கிறார்கள். கேடயங்களை வெம்மைகொள்ளச் செய்கிறார்கள்.

அங்கிருக்கிறார்கள் அனலோனின் அனைத்துத் தோற்றங்களும். விண்நிறைக்கும் அக்னி, பசிவடிவான வைஸ்வாநரன், காற்றிலூரும் வஹ்னி, ஆகுதிகளை வாங்கும் விதிஹோத்ரன், பொன்னிலுறையும் தனஞ்சயன், நீரிலுறையும் கிருபீதயோனி, மின்னுவனவற்றில் எழும் ஜ்வலனன், அறிவிலெழும் ஜாதவேதன், மூச்சிலுறையும் தனுனபாத், கனலும் பார்ஹி, தளிர்களில் வாழும் சுஷமன், கரும்புகை வடிவான கிருஷ்ணவர்த்தன், தழலை முடியெனக்கொண்ட சோசிகேசன், புலரியிலெழும் உஷர்ஃபு, அனைத்தையும் அள்ளிப்பற்றும் அஸ்ரஸ்யன், அனைத்தையும் ஒளிரச்செய்யும் பிருஹத்பானு.

காற்றுத்தெய்வங்களை அனல்தேவர்கள் தாக்குகிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் ஆள்கிறார்கள். முடிவிலாதது என நிகழ்ந்துகொண்டிருக்கிறது அந்தப் போர். அவர்களின் நடுவே ஓடித்தவிக்கிறான் காற்றுகளுக்கும் அனல்களுக்கும் அன்னைவடிவமான மாதரிஸ்வான். அங்கிருக்கிறார்கள் அனைத்து தேவர்களும். அருள்வடிவான அஸ்வினிதேவர்கள் இரட்டைப்புரவிகளாக களம்வந்துள்ளனர்.

அரசே, அங்கெழுந்துள்ளனர் பதினொரு ருத்ரர்கள். அனலுருவான அஜர், அடிமரமென ஒற்றைக்காலூன்றி எழுந்த ஏகபாதர், நான்கு தலைகள்கொண்ட அக்னிபுத்திரர், எரிகுளமென விழியெழுந்த விரூபாட்சர், மலைமுடியென ஓங்கிய ரைவதர், கொலைக்கரம் நூறுகொண்ட ஹரர், பன்னிரு முகம் எழுந்த பகுரூபர், மூன்றுவிழியரான த்ரியம்பகர், காட்டாளத் தோற்றம்கொண்ட அசுரேசர், பொன்னொளிகொண்ட சாவித்ரர், மின்படைகொண்ட சயந்தர். அவர்களின் சினத்தால் அதிர்ந்துகொண்டிருக்கிறது குருக்ஷேத்ரத்தின் வான்வெளி.

அரசே, அங்கே கதையும் மின்கொடியும் ஏந்திய மித்ரனை கண்டேன். பறக்கும் முதலைமேல் பாசக்கயிற்றுடன் வருணன். மானுட உருக்கொண்ட வேதாளத்தின் மேல் கதாயுதத்துடன் குற்றுருவனாகிய குபேரன், எருமைமீதூரும் எமன். தழலெனப் பறக்கும் முடிக்கற்றைகள் கொண்ட செவ்வாட்டின் மீது அனலோன், மின்சுழலை படைக்கலமாகக் கொண்ட நிருதி. பொற்குளம்புள்ள கலைமான் மீதூரும் வாயு, வெண்முகில்மேல் தேயுஸ், வெண்களிறு வடிவில் பிருத்வி, ஆமையின்மேல் ஊரும் ஆபன், அரசே, அங்கே அத்தனை தெய்வங்களும் போரிட்டுக்கொண்டிருக்கின்றன.

எட்டு திசையானைகள் களத்திலுள்ளன. ஐராவதம், புண்டரீகன், வாமனன், குமுதன், அஞ்சனன், புஷ்பதந்தன், சார்வபௌமன், சம்பிரதீகன். முகில்குவைகளைப்போல எடையற்றவை அவை. ஆனால் துதிக்கையால் அறைகையில் மட்டும் மலைபெயரும் எடைகொண்டவை. திசைகளை நிறைத்துச் சுழல்கின்றன. மத்தகங்கள் முட்டிப்போரிடுகின்றன. அவற்றின் வெண்கொம்புகள் குருதிகொண்டு சிவந்துள்ளன.

அதிதியின் மைந்தர்களான ஆதித்யர்கள் அங்குள்ளனர். தாதா, மித்ரன், ஆரியமா, ருத்ரன், வருணன், சூரியன், பகன், விவஸ்வான், பூஷா, சவிதா, த்வஷ்டா, விஷ்ணு ஆகியோர் ஒளிகொண்டு நின்றிருக்கின்றனர். அவர்களுக்கு தங்கள் ஒளிக்கதிர்களே படைக்கலங்கள். அரசே, அவர்களுக்கு உடலே விழியுமாகும். திதியின் மைந்தர்களாகிய தைத்யர்கள் அங்குள்ளனர். ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன் இருவரும் போரிடுகின்றனர். மைந்தர்கள் அனுஹ்ளதன், ஹ்ளதன் ஆகியோர் உடனுள்ளனர். சூரசேனன், சிம்மவக்த்ரன், வாயுவேகன், மனோதரன், பானுகோபன், வஜ்ரமுகன், அக்னிமுகன், வஜ்ரபாகு, ஹிரண்யன், சம்பரன், சகுனி, திரிமூர்த்தா, சங்கு, அஸ்வன் என அசுரர்களின் முடிவிலா நிரை நின்றிருக்கிறது.

எட்டு வசுக்களான தரனும் துருவனும் சோமனும் அனிலனும் அனலனும் ஆபனும் பிரபாசனும் பிரத்தியூடனும் தங்கள் படைக்கலங்களுடன் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் அவர்களின் மைந்தர்களும் களம் நின்றிருக்கிறார்கள். வைதண்டன், சிரமன், சாந்தன், த்வனி ஆகியோர் தங்கள் தந்தையாகிய ஆபனுக்கு உடன்நின்றுள்ளனர். துருவனுடன் மைந்தனாகிய காலன் நின்றுள்ளான். சோமனுடன் அவன் மைந்தன் வர்ச்சஸ் நின்றிருக்கிறான். அவன் மைந்தன் தர்மனுடன் அவன் மைந்தர்களாகிய திரவிணன், ஹுதஹவிவயஹன், சிரிரன், பிராணன், வருணன் ஆகியோர் படைக்கலமேந்தி போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். அனிலனுடன் மனோஜவன், அவிக்ஞாதகதி ஆகியோர் நின்றிருக்கிறார்கள். அனலனின் மைந்தன் குமாரனும் அவன் மைந்தர்களான சாகன், விசாகன், நைகமேயன் ஆகியோர் படைகொண்டிருக்கிறார்கள். பிரபாசனுடன் நின்றிருப்பவர் விஸ்வகர்மன். அவர் மைந்தர்களான அஜைகபாத், அவிர்புத்தன்யன், த்வஷ்டா ஆகியோர் அவருடனிருக்கிறார்கள்.

அங்கெழுந்துள்ளனர் பெருநாகங்கள். வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், சங்கன், குளிகன், பத்மன், மகாபத்மன், அனந்தன். அவர்களுடன் இணைந்து எழுந்துள்ளது பாதாளநாகங்களின் பெரும்படை. வாசுகியின் மைந்தர்களான கோடிசன், மானசன், பூர்ணன், சலன், பாலன், ஹலீமகன், பிச்சலன், கௌணபன், சக்ரன், காலவேகன், பிரகாலனன், ஹிரண்யபாகு, சரணன், கக்ஷகன், காலதந்தகன் ஆகியோர். விண்ணில் நீரிலென நீந்தும் ஆற்றல்கொண்ட கரிய பேருடலர்கள் அவர்கள்.

தட்சகனின் மைந்தர்களான புச்சாண்டகன், மண்டலகன், பிண்டசேக்தா, ரபேணகன், உச்சோசிகன், சரபன், பங்கன், பில்வதேஜஸ், விரோஹணன், சிலி, சலகரன், மூகன், சுகுமாரன், பிரவேபனன், முத்கரன், சிசுரோமன், சுரோமன், மஹாஹனு ஆகியோர் அதோ மழைமுகில்களென சூழ்ந்துள்ளனர். கீழே ஐராவதனின் மைந்தர்களான பாராவதன், பாரிஜாதன், பாண்டரன், ஹரிணன், கிருசன், விஹங்கன், சரபன், மேதன், பிரமோதன், சௌஹதாபனன் ஆகியோர் சேற்றுப்பரப்பென நிலம் நிறைத்துள்ளனர்.

கௌரவ்ய குலத்தில் பிறந்த பாம்புகளாகிய ஏரகன், குண்டலன், வேணி, வேணிஸ்கந்தன், குமாரகன், பாகுகன், சிருங்கபேரன், துர்த்தகன், பிராதரன், அஸ்தகன் ஆகியோர் பிற வடிவங்களின் நிழல்களென நெளிந்தனர். திருதராஷ்டிர குலத்தில் பிறந்த சங்குகர்ணன், பிடரகன், குடாரமுகன், சுகணன், சேசகன், பூர்ணாங்கதன், பூர்ணமுகன், பிரஹாசன், சகுனி, தரி, அமாஹடன், குமடகன், சுஷேணன், அவியயன், பைரவன், முண்டவேதாங்கன், பிசங்கன், உத்ரபாரகன், ரிஷபன், வேகவத், பிண்டாரகன், ரக்தாங்கன், சர்வசாரங்கன், சம்ருத்தன், படவாசன், வராஹகன், வீரணகன், சுசித்ரன், சித்ரவேதிகன், பராசரன், தருணகன், மணிஸ்கந்தன், ஆருணி என்னும் நாகங்கள் பிற நாகங்களின் நிழல்களாகி அங்கே நிறைந்திருந்தன.

இவையனைத்தையும் ஒரு பக்கமென்றாக்கி பேருருக்கொண்டு களம்நிறைந்திருக்கின்றனர் அன்னையர். கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதை, சிந்து, காவேரி என நூற்றெட்டு நீரன்னையர். துளசி, மானசி, தேவசேனை, மங்கள சண்டிகை, தரித்ரி என்னும் தேவியர். பலிகொள்ளும் ஸ்வாகா, ஏற்றுக்கொள்ளும் தட்சிணை, நெறிவடிவான தீக்‌ஷை, உண்ணும் ஸ்வாதா, காற்றை ஆளும் ஸ்வஸ்தி, வளம்நிறைக்கும் புஷ்டி, நஞ்சுவடிவான துஷ்டி, ஈசானத்தை ஆளும் ஸம்பத்தி, நாகினியாகிய த்ருதி, அனலையான சதி, அளிவடிவான தயை, நிலைகொள்பவளான பிரதிஷ்டை, தவவடிவான ஸித்தி, அருள்வடிவான கீர்த்தி, செயல்கொண்ட கிரியை, விழிமயக்கும் மித்யை, அமைதிவடிவாகிய சாந்தி, இளமகளான லஜ்ஜை ஆகியோரை அங்கே போர்க்கோலத்தில் காண்கிறேன்.

மெய்வடிவான புத்தி, மெய்கடந்த மேதா, விடுதலையளிக்கும் திருதி, விழிநிறை அழகுமகளான மூர்த்தி, அனைத்து மங்கலங்களும் கொண்ட ஸ்ரீ, துயிலரசி நித்ரை, இருள்வடிவான ராத்ரி, செம்மை சூடிய சந்தியை, வெள்ளிப்பெருக்கான திவை, பசிவடிவான ஜடரை, விடாய்வடிவான திரிஷை, நீர்வடிவான பிபஸை, ஒளிகொண்ட பிரபை, சுடரில் வாழும் தாஹிகை, சாவரசி மிருத்யூ, முதுமையின் தேவியான ஜரை, குருதிவெறிகொண்ட ருத்ரி, அனைத்தையும் மறக்கச்செய்யும் விஸ்மிருதி, அனைத்தையும் விரும்பச்செய்யும் ப்ரீதி, நினைவரசி சிரத்தை, பணிவின் தேவியான பக்தி ஆகியோரும் இக்களத்தில் நின்றுள்ளனர்.

விசாலாக்ஷி, லிங்கதாரிணி, குமுதை, காமுகி, கௌதமி, காமசாரிணி, மதோல்கடை, ஜயந்தி, கௌரி, ரம்பை, கீர்த்திமதி, விஸ்வேஸ்வரி, புரூகுதை, மந்தை, ருத்ரகர்ணிகை, பத்ரை, ஜயை, மாதவி, பவானி, ருத்ராணி, காளி, மாகாளி, குமாரி, அம்பிகை, திரயம்பிகை, மங்கலை, பாடலை, நாராயணி, ஏகவீரை, சந்திரிகை, சுகந்தை, திரிசந்தி, நந்தினி, ருக்மிணி, குந்தளை, ஔஷதி, பிரசண்டை, சண்டிகை, அபயை, நிதம்பை, தாரை, புஷ்டி, கோடி, கல்யாணி என நான் நோக்குந்தோறும் சீற்றம்கொண்டு ஒளிரும் படைக்கலங்களுடன் இங்கே களம்நிற்கும் அன்னையர் பெருகிக்கொண்டே செல்கிறார்கள்.

இருளுலகை ஆளும் தெய்வங்கள் ஊடுகலந்துள்ளன அங்கே. எட்டு கால்களில் வலைவீசிப்பறக்கும் ஜாலிகர் என்னும் பெரும்பூதங்கள். கைகளோ கால்களோ உடலோ தலையோ இன்றி வயிறும் வாயும் மட்டுமேயான கபந்தர்கள். ஒற்றைவிழியில் அனலெரிய சிறகுவீசிப் பறக்கும் ஜாதுகர்கள். நண்டுகளைப்போன்ற பெருங்கொடுக்குகளுடன் அசைந்து நடக்கும் கர்கடகர்கள், தவளைகள்போல் பின்காலில் எம்பிப்பறந்து நாநீட்டி கவர்ந்துண்ணும் மாண்டூக்யர்கள். ஒற்றைக்கை மட்டுமேயான ஹஸ்தர்கள். ஒற்றைக்கால் மட்டுமேயான பாதுகர்கள். ஒற்றை நாக்கு மட்டுமேயாகி புழுவென நெளிந்து வளைத்துண்ணும் ஜிஹ்வர்கள். பல்லாயிரம் நெளியும் புழுக்களாலான உடல்கொண்ட கீடர்கள். நோக்க நோக்க பெருகுகின்றன பூதங்களும் பேயுருக்களும். அவர்களின் முழக்கங்களை விழிகளால் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

ஒன்றையொன்று விழுங்குகின்றன. ஒன்றையொன்று கொன்று வெளிவருகின்றன. ஒன்றை ஒன்று உண்ணமுயன்று முடிவிலாது சுழல்கின்றன. ஒன்றுடன் ஒன்று இணைந்து ஓருடலாகி போருக்கெழுகின்றன. ஒன்று கிழிந்து பலவாகிப்பெருகிச் சூழ்கின்றன. நகங்களும் பற்களும் உகிர்களும் கொம்புகளும் வால்முனைகளும் செதில்களும் படைக்கலங்களாகின்றன. கைகளும் விரல்களும் நாக்குகளும் கொல்படையாகின்றன. நோக்குகளும் ஓசைகளும் மூச்சுச்சீறல்களும்கூட கொலைக்கருவியாகின்றன. நஞ்சும் அனலும் கொண்டவை. வஞ்சப்பெருங்குரல் எழுபவை. கொலைவெறிகொண்டு கூத்தாடுபவை. குருதியுண்பவை. குருதிச்சேற்றில் திளைத்து ஆடுபவை.

அங்கே வெண்ணிறத் தேரிலெழுந்திருக்கிறான் இந்திரன். அவன் கையில் இருந்து மின்னிமின்னி அதிர்கிறது வான்படை. அவனை எதிர்த்து எழுபவன் சூரியன். அவன் தழலெழும் செந்நிறத்தேரில் அமர்ந்திருக்கிறான். சுழலும் மலர்ச்சகடத்தை படைக்கலமாக கொண்டிருக்கிறான். நாநீட்டிய காளிகைகளும், அனல்வாய் கொண்ட பைரவிகளும், குழல்நீண்டு பறக்கும் தீர்க்கசிகைகளும் அவர்களுக்குச் சுற்றும் குருதிதேடி கூத்திடுகின்றன.

நான் எதை காண்கிறேன்? அரசே, நான் காண்பது துளியினும் துளியினும் துளி. ஒரு விதைக்குள் எழுந்த காடு இது. இத்தகைய பல்லாயிரம்கோடித் துளிகளின் விரிவென ஒரு பெருங்கடல். அக்கடலே ஒருதுளியென இன்னொரு கடல். அக்கடலை ஒரு துளியெனக்கொண்டது அப்பாலொரு கடல். கடல் கடல் கடலெனச் சென்றமையும் முடிவிலா ஆழ்கடலின் ஒரு விழித்துளியசைவு இது. ஒரு கணம் நான் இமைத்தால் அனைத்தும் மாறிவிடுகிறது. ஆதித்யகோடிகள் முட்டிச்சுழல்கின்றன. இடியிடியிடியென வெடித்துச்சிதறி அணைந்தழிகிறது ஒரு புடவி. இருளுக்குள் மின்னிப்பெருகி வெடித்துச் சிதறி உருப்பெருக்கி விழிநிறைக்கப் பரவி நின்றிருக்கிறது புதுப்புடவி ஒன்று.

நான் எதை காண்கிறேன்! அரசே, என்னை பற்றிக்கொள்க! இந்தப் பெருக்கில் உதிர்ந்து கரைந்தழிவேன். எஞ்சுவதில்லை என்னுள் ஒரு சொல்லும். நான் காண்பதென்ன? இப்பெரும் போரை நிகழ்த்தும் இந்தத் தெய்வங்களின் முடிவின்மையின் பொருளென்று எச்சொல் நின்றிருக்கும்? எச்சொல்லின் விரிவென்று இம்முடிவின்மையை எடுத்துவைப்பேன்? அரசே, என்னை பற்றிக்கொள்க! என்னை இழுத்துச்செல்கிறது பேரொழுக்கு ஒன்று. அரசே, என் உடல் வெடித்துத் திறக்கிறது. என் அணுக்கள் ஒவ்வொன்றும் உடைந்து அகல்கின்றன. இன்மையென்றாவதன் இறுதிச்சொல்லில் நின்றுள்ளேன். நான் என்ற இச்சொல்லை இறுகப்பற்றிக்கொள்கிறேன். அரசே, நான் எனும் சொல்லில் துளியிலும் துளியென எஞ்சியிருக்கிறேன். இந்த சிறுமணற்பருவில் துளிப்பொன்பூச்சென இச்சொல்லில் சற்றே பொருள் எஞ்சியிருக்கிறது. நான் எனும் சொல். நான்! ஆம், நான்!

“அரசே!” என்ற அலறலுடன் சஞ்சயன் சரிந்து திருதராஷ்டிரரின் காலடியில் விழுந்தான். அவனுடைய சொற்குமுறலை கேட்டுக்கொண்டிருந்த அவர் அசையவில்லை. அவன் உடல் அங்கே கிடந்து கைகால்கள் இழுத்து இழுத்து அதிர்ந்து புளைந்தது. வாயோரம் எச்சில்நுரை வழிய, விழிகள் ஆழிமைகளுக்குள் சிக்கிச்சரிய, உதடுகளைக் கடித்த பற்கள் குருதியெழ ஆழப்பதிந்திருக்க, தொண்டைமுழை அதிர்ந்து அதிர்ந்து அடங்க, மெல்ல சஞ்சயன் அமைந்தான். அவனை அறியாதவர் போலிருந்த திருதராஷ்டிரரின் தாடை மட்டும் அசைந்துகொண்டிருந்ததை பீதன் கண்டான்.

முந்தைய கட்டுரைஇந்நாட்களில்…
அடுத்த கட்டுரைகவிதைகள் கடிதங்கள்