ஈவேரா: கடிதம்

அன்புள்ள ஜெ

கீழ்க்கண்ட கட்டுரையை உங்கள் கருத்துக்குக் கொண்டு வருகிறேன். பெரியார் யாருக்குப் பெரியார்?. இதில் பெரியார் ஈவேரா தலித்துக்களுக்காக போராடவில்லை, பிற்படுத்தப்பட்டோருக்காகவே போராடினார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. உங்கள் எண்ணம் என்ன?

அனந்தநாராயணன்
சென்னை

அன்புள்ள அனந்தநாராயணன்,

அந்தக்கட்டுரையின் மையக்கருத்துக்கள் பெரும்பாலும் மார்க்ஸிய ஆய்வாளர் கோ.கேசவனால் முன்வைக்கப்பட்டவை. பின்னர் பல தலித் ஆய்வாளர்களால் விரிவாக கூறப்பட்டவை. இந்த இணையதளத்திலேயே சிலகட்டுரைகள் உள்ளன.

ஈவேராவின் இயக்கம் தமிழில் ஏற்கனவே வலுவாக உருவாகிவந்திருந்த தலித்தியக்கத்தை மறைக்கும்தன்மை கொண்டிருந்தது. பிற்படுத்தப்பட்டோரின் குரலை முன்னெடுத்த்தது. விளைவாக தலித் விடுதலையை பிற்படுத்தப்பட்டோரின் கருணைக்கு விட்டது. இன்றும் தலித்துக்களுக்கு எதிரான கொடுமைகள் திராவிட இயக்கம் மேலோங்கிய பிற்படுத்தப்பட்டோர் கிராமங்களிலேயே நிகழ்கின்றன. தலித்துக்களின் விடுதலை இன்று வேறுவழியில்லாமல் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றி வைத்திருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரானதாக ஆகிவிட்டிருக்கிறது.

ஆனால் ஈவேரா அவர்கள் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் குரல் மட்டுமே என நான் கூறமாட்டேன். அவரது இலக்கு அது மட்டும் அல்ல என்றே நினைக்கிறேன்.அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. இந்து சமூகத்தில் ஓங்கியிருந்த சாதிய நோக்குக்கு எதிரான எழுச்சியின் பெரும்குரல். அவரது பணி இந்து சமூகத்தை சமத்துவம் என்ற கருதுகோளை நோக்கி தள்ளியது என்றே எனக்கு படுகிறது

இந்துமதக்கட்டுமானத்திற்குள்ளேயே என்றும் இருந்த நாத்திகவாதத்தின் குரல் ஈவேரா . ஆகவே அவர் மதச்சீர்திருத்தவாதியும்கூட.பக்திமரபால் ஒற்றைப்படையாக்கப்பட்ட இந்துமதநோக்குகள் இன்று தத்துவார்த்தமான தேடல்களை நோக்கிச் செல்ல அவர் ஒரு முக்கியமான காரணம்.

தமிழ்ச்சிந்தனையில் அவரது பங்களிப்பு முக்கியமானது. பொதுவாக எந்தவகையான கலகமும் ஓர் அசைவை உருவாக்கும். முன்னகர்வை சாத்தியமாக்கும்.ஆரம்பகாலத்தில் அவர்மேல் எனக்கிருந்த எதிர்மறை நோக்கு இன்றில்லை. அவரை ஓர் ஆக்கசக்தியாகவே எண்ணுகிறேன்

ஆகவே வெங்கடேசனின் இக்கட்டுரையும் சரி, அவரது நூலும் சரி, வரலாற்று நோக்கைவிட பூசல்நோக்கை மட்டுமே முன்னிறுத்துகின்றன என்று படுகிறது. ஆகவே அதனுடன் எனக்கு உடன்பாடில்லை.

ஈவேரா அவர்களிடம் இன்றும் நான் காணும் குறை தனிப்பட்ட வெறுப்புகளை அவர் சமூகக்காழ்ப்புகளாக முன்வைத்தார் என்பது. ஈவேராவின் நண்பரான கோவை அய்யாமுத்து அவர்களின் சுயசரிதையில் காணும் ஈவேராவின் சித்திரம் அவர் அவ்வாறு சட்டென்று தீவிரமுடிவுகளுக்குச் செல்லும் எளிய ஆளுமை என்றே காட்டுகிறது.

ஈவேரா அறிஞர் அல்ல. ஆய்வாளரும் அல்ல . அவரோ அவரை சூழ்ந்திருந்தவர்களோ சமகால சிந்தனைகளிலும் ஆய்வுமுறைகளிலும் அடிப்படைக்கல்வி கொண்டவர்கள் அல்ல. ஆகவே சமூக இயக்கத்தை எளிமையாக புரிந்துகொண்டு நிறைய ஒற்றைப்படை முடிவுகளுக்கு வந்து சேர்ந்தார். அவரது நோக்கு பலவகையான ஆழமான பிழைகளுக்கு இட்டுச் செல்வது

ஆகவே ஈவேரா அவர்களை புறவயமாக மதிப்பிடாமல் வழிபாட்டுணர்வுடன் அணுகி அவரை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தமிழ்ச் சமூகத்தையோ இந்தியசிந்தனையையோ புரிந்துகொள்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. காழ்ப்பும் ஒற்றைப்படைநோக்கும் இணைகையில் உருவாகும் எல்லா தவறுகளும் நிகழும்.

ஈவேரா முன்வைத்த பிராமணிய / புரோகித எதிர்ப்பு என்ற நோக்கு இந்து சிந்தனையில் ஆயிரக்கணக்கான வருடங்களாக இருந்து வந்த ஒன்றுதான். அதை அன்று உருவாகி வந்த பிற்படுத்தப்பட்டோர் அரசிய்லெழுச்சி தன் கருத்தியலாக கண்டுகொண்டது. விளைவாக ஈவேரா ஓர் ஆதரவுத்தளத்தை அடைந்தார். அதை தன் இருக்கையாகக் கொண்டு அதிலமர்ந்து அவர் பேசினார்

திராவிட இயக்கம் என்பது ஈவேராவை முன்னிறுத்தி சி.என்.அண்ணாத்துரையும் அவரது தம்பிகளும் அரசியலதிகாரம் நோக்கிச் சென்ற பயணம். அந்த மக்கள்செல்வாக்கின் மைய விசை எம்.ஜி.ஆர். அதில் அவர்கள் அன்று மக்கள்செல்வாக்கு பெற்றிருந்த தமிழியக்கத்தை சேர்த்துக்கொண்டனர். அந்த கருத்துக்களுடன் ஈவேராவுக்கு பெரிய உடன்பாடு இருக்கவில்லை.

திராவிட இயக்கம் ஓர் பரப்புவாத இயக்கம். அதற்கு கொள்கைகள் என ஏதுமில்லை. தமிழ்ச்சூழலில் இருந்துவந்த பல்வேறு பண்பாட்டு இயக்கங்களை அது தனக்கான கோஷங்களாக உருமாற்றிக்கொண்டது. அதன் வழியாக அவற்றை மழுங்கடித்தது. ஆகவே அதை நான் ஏற்கவில்லை. ஆனால் வரலாற்றின் போக்கில் அதன் பங்களிப்பு என்றும் சில உள்ளன. அவற்றை அங்கீகரிக்கிறேன்.

ஈவேரா பிற்படுத்தப்பட்டோர் அரசியலின் நாயகர் அல்ல. அவரது அரசியல் என்பது கலகநோக்கும் தனிப்பட்ட கோபங்களும் கலந்த ஒர் எதிர்ப்பு மட்டுமே. அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் அரசியல் மூலம் உருவான ஆதரவுத்தளம் அடிப்படையாக இருந்தது. அதை அவர் நிராகரிக்கவில்லை. அதன்மேல் அமர்ந்தபடி அவர் தலித்துக்களிடம் பேசுவதையே நாம் சு.வெங்கடேசன் அளித்துள்ள சுட்டிகளிலும் காண்கிறோம். பிற்படுத்தப்பட்டோரின் சாதிவெறியை நியாயப்படுத்தும்கோணத்தில் அவர் பேசியமைக்கும் அவர்கள் மேல் மென்மையான அணுகுமுறை கொண்டமைக்கும் அதுவே காரணம்.

ஆனால் பொதுவாக அரசியலை களமாகக் கொண்டவர்களுக்கு இவ்வாறு ஓர் ஆதரவுத்தளம் வரலாற்றுக்காரணங்களால் உருவாவதும் அவர்கள் அதன் எல்லைக்குள் சிக்கிக்கொள்வதும் எப்போதும் நிகழ்ந்தபடியேதான் இருக்கிறது.

ஒரு முன்னோடிச்சிந்தனையாளராக அவரது வழிமுறைகளை எடுத்துக்கொள்ளலாகாது என நினைக்கிறேன். ஒரு சமூகசீர்திருத்த முன்னோடியாக அவரை மதிப்பிடலாம்.

ஜெ


அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை


கல்வாழை
, 3 கல்வாழை 2 கல்வாழை கடிதம்

திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்?-1 2

எம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்

முந்தைய கட்டுரைசோஷலிசம், மாவோயிசம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபாளையில் ஒரு நூலகம்