வெயிலின் கவிதைகளுக்கு பிச்சமூர்த்தி முன்மொழிந்த மரபின் ஓர்மை உண்டு. அதன் சந்தங்களை நாட்டார்வழக்கின் சந்நதமாக அவர் கவிதையில் நிகழ்த்திக் காட்டுகிறார். நிகழ்வதற்கு வாய்ப்பற்ற ஒன்றைக் கவிதைக்குள் சிருஷ்டிப்பதன் மூலம் அவர் க.நா.சு.வின் விநோதத்தையும் கொண்டுவர முயல்கிறார். அவரது கவிதைகளுள் சில அலங்காரம், அசாதாரணம் ஆகிய இந்த இரு அம்சங்களையும் களைந்துவிட்டுப் பூரண சுதந்திரத்தையும் எய்திருக்கின்றன. வடிவ ரீதியில் வெய்யில் கவிதைகள் கொண்டுள்ள இந்த அம்சத்தால், அவை வரையறைக் கோட்பாட்டுக்குள்ளிருந்து திமிறுகின்றன.