சுபிட்ச முருகன், மின்னூல், கடிதம்

supi

திரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன்

 

பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

 

 

சரவணன் சந்திரனின் “சுபிட்ச முருகன்” நாவல் குறித்து தாங்கள் எழுதிய பதிவை வாசித்தேன். இந்த நாவலை உடனே வாசிக்க வேண்டும் என்ற மனநிலையில், மின் புத்தகமாக வாங்கலாம் என்று எண்ணி கிண்டிலில் தேடினேன். ஆனால் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

 

இதைப்போன்று நீங்கள் முன்னரும் எழுதிய குறிப்புகளை வைத்து பல நாவல்களை படிக்க எண்ணி தேடியிருக்கிறேன். உதாரணம் சூல், ஆப்பிளுக்கு முன், ஒளிரும் நிழல், உப்பு வேலி, சுசிலாவின் அசடன், குற்றமும் தண்டனையும்,  போன வருடம் விஷ்ணுபுரம் விருது பெற்ற முத்துசாமியின் புத்தகங்கள் மற்றும் இந்த வருடம் விஷ்ணுபுரம் விருது பெறவிருக்கும் ராஜ் கவுதமனின் புத்தகங்கள் என்ற எதையும் என்னால் மின் புத்தகமாக வாங்க முடியவில்லையே! ஏன்?

 

 

எனக்கு சரியாக இணையத்தில் தேட தெரியவில்லை என்றால், நீங்கள் எழுதும் குறிப்புகளில் புத்தகமாக வாங்க என்பதுடன் புத்தகத்தின் கிண்டில் பக்கத்தையும் இணைக்க வேண்டி தங்களை வலியுறுத்தி வேண்டுகிறேன் அல்லது  கூகிளில் தேடினால் கிடைக்க கூடிய “குறி சொற்கள்” (keywords) வேண்டும் . தமிழில் புத்தகத்தின் தலைப்பை வைத்து கூகுளை அணுகினால் ஒன்றும் தேற மாட்டேன் என்கிறது. ஆங்கிலத்தில் தலைப்பை எழுதலாம் என்றால் ஸ்பெல்லிங் எப்படி எழுதலாம் என்பது ஒரே குழப்பமாக உள்ளது. உதாரணமாக சுபிட்ச முருகன் ஐ subitcha, subisa, subitsa, subitsha, subisha என்று பலவாறாக முயற்சி செய்து தோற்றுவிட்டேன்.

 

 

புத்தகம் வெளியாகும் போதே மின் புத்தகமும் வெளியாகும் என்றே வாசகனாக நம்புகிறேன். மின் புத்தகமாக வெளியாவதில் ஏதேனும் பிரச்னை இருக்குமா என்ன?, இருந்தால் தெளிவு படுத்தவும்.

 

 

பாண்டியன் சதீஷ்குமார்

 

அன்புள்ள சதீஷ்குமார்

 

அ. நூல்வெளியாகும்போதே மின்னூலும் வெளியாகும் வழக்கம் அனேகமாக இல்லை. மிக அரிதாகவே நூல்கள் அவ்வாறு வெளியாகின்றன.

 

ஆ. கிழக்கு போன்ற பதிப்பகத்தின் நூல்களை உடனுக்குடன் மின்னூலாக வாங்கிவிடமுடியும்.

 

இ. நூல்களை தமிழிலேயே அடித்து தேடலாம். அல்லது வெட்டி ஒட்டியும் தேடலாம். அனேகமாக வந்துவிடுகிறது. ஆங்கிலத்தில் தேடும்போது எழுத்துப்பிரச்சினை உள்ளது

 

உ நான் பெரும்பாலும் நூலை வாங்குவதற்கான இணைப்புகளை அளித்துவிடுகிறேன். மின்னூல் கிடைக்குமென்றால் அச்செய்தியையும் அளிக்கிறேன்.

 

ஊ சுபிட்ச முருகன் இன்னும் மின்னூலாக வெளிவரவில்லை. நூல் வெளிவந்தே சிலநாட்கள்தான் ஆகின்றன. மின்னூல் ஓரிரு மாதங்களில் வெளிவரக்கூடும்.

 

எ. சுபிட்ச முருகன் என தேடினால் இணையத்தில் அச்சுநூல் வாங்கும் கடைகளின் இணைப்புகள் கிடைக்கின்றன

 

ஜெ

 

சுபிட்சமுருகன் டிஸ்கவரி

சுபிட்ச முருகன்  விக்கேன் ஷாப்பிங்க்

 

 

முந்தைய கட்டுரைகாடு- வாசிப்பனுபவம்
அடுத்த கட்டுரைசேலத்தில் ஒரு நாள்