தமிழிசை மேலும் ஒரு கடிதம்

 

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

திரு ஜெ

மீண்டும் நான.

உங்கள் பதிவையும் ராமச்சந்திர சர்மா வின் பதிவையும் படித்தேன். இரண்டையும் இணைத்து கோர்வை ஆக்கும் சில விஷயங்கள் இதோ.

தமிழில் இசை சம்பிரதாயம் பரிபாடலில் இருந்து (தெரிந்த கிடைத்த நூல்களில் ) தொடங்குகிறது. பரிபாடல் கடவுள் வாரியாக பாடல்களின் தொகுப்பு அல்ல. பண் வரிசையில் அமைந்தது. இந்த ஆச்சரியமான விஷயம் பெரும்பாலோர் அறியாதது. தேவாரப் பாடல்களும் பண் அமைப்பு கொண்டே உள்ளன. ஆனால் வெறும் பண்ணின் பெயர் போதாது. ஸ்வரம் வேண்டும். பாரதியார் பாடல்களும், அருணகிரிநாதரின் பாடல்களும் அப்படியே. ஸ்வரம் இல்லாமல் அவை கிடைத்துள்ளன. விளைவு ? ஓதுவார்கள் பெரும்பாலான தேவாரப் பாடல்களை மோகன ராகத்தில் தான் பாடுகிறார்கள் என்று என் இசை ஆசிரியர் சொல்கிறார்.

கர்நாடக இசை என்பது கன்னட மரபு சேர்ந்தது அல்ல. கர்ண என்றால் காது. காதுக்கினிய என்ற பொருளில் தான் அது உள்ளது. பனிரெண்டாம் நூற்றாண்டில் தொடங்கி தமிழ் மன்னர்கள் வீழ்ந்ததைத் தொடர்ந்து இசையும் வீழ்ந்தது. பின்னர் தியாகராஜா சுவாமிகள் முதலானவர்கள் மூலமாக திரும்ப வந்தது. அவர்களுக்கு முந்திய புரந்தர தாசர் கீர்த்தனைகளும் சொற்ப ராகங்களுக்குள் அடங்கி விட்டிருந்தன.மும்மூர்த்திகள் காலத்தில் ராகங்களுக்கு அடையாளம் இருந்தாலும் பாடல்கள் இல்லை. இசையிலும் மொழியிலும் வல்லவர் மட்டுமே இந்த அரும் பெரும் செயலைச் செய்ய முடியும். தியாகராஜரின் கீர்த்தனைகள் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருந்த ராகங்களுக்கு உயிரூட்டின. இதன் காரணத்தாலேயே அவர் கீர்த்தனைகள் சிரத்தையாக இன்றும் பாடப்படுகின்றன. அன்றியும் அவரது சிஷ்ய பரம்பரை அவருடைய பாடல்களுக்கு ஸ்வரம் எழுதி வைத்து இன்று வரை காப்பாற்றி வந்துள்ளனர்.

சென்ற நூற்றாண்டிலும் பாபநாசம் சிவன் நவீன தியாகராஜராக உலா வந்தார். ஊத்துக்காடு வேங்கடசுப்பையர், போன்றோர் தமிழில் அற்புதமான சாகித்தியங்கள் எழுதினர். (உ ம் – பால் வடியும் முகம் ) இன்று எத்தனை பேர் சாகித்தியம் எழுதினாலும், மூல வேரை பாடகர்களும் ஆசிரியர்களும் மறக்கவில்லை. தெலுங்கு இன்று பலருக்கும் தெரியாமல் இருந்தும் பிடிவாதமாக அர்த்தம் பண்ணிக் கொண்டு பாடுகின்றனர். கேரளத்தில் பெரும்பாலும் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட பாடல்களையே பாடுகின்றனர்.

இன்னொரு விஷயம் . இசை , அதுவும் பாரம்பரிய இசை இன்னும் சம்பிரதாயத்தில் தான் செல்கின்றது. மகாராஜ புரம் பாணி, செம்மங்குடி பாணி, பட்டம்மாள் பாடாந்திரம், போன்று பள்ளிகள் உள்ளன. அங்கே வழி வழியாக ஏறக்குறைய நூறு பாடல்களாவது தனி மரபில் தனி விசேஷங்களோடு சொல்லித் தரப்படும். என்ன தான் மாற்றம் தர அவர்களே விரும்பினாலும் மரபு அழியாது.

இன்னொரு விஷயம் : நாமெல்லாம் கர்நாடக இசையில் சொற்களை கவனிக்கிறோம். இசைஞர்களோ , வெறும் ஸ்வரத்தையும், தாளத்தையும் மட்டுமே கவனிக்கின்றனர். அவர்களுக்கு ‘வரவீணா ” என்றவுடன் ” க ம ப ப ” என்று தான் உள்ளே ஓடும். மொழி வெறும் தோல் அவ்வளவே. அதனால் தான் ஆறே அடியுள்ள கீர்த்தனையை அரை மணி நேரம் பாடுகின்றனர். அங்கே இசை பிரதானம். மொழி அல்ல.

ஆனாலும் அவர்கள் இந்த விஷயத்தை நாத்திகர்களிடம் எடுத்துச் சொல்லத் தெரியவில்லை. அதற்கும் இடக்குப் பதில் தான் கிடைத்திருக்கும். அலட்சியம் செய்தால் வழக்கமான ‘உயர் சாதி கொழுப்பு பார் ‘ புலம்பல். பதில் சொன்னாலோ , ‘ மழுப்பாதே. தமிழில் எழுதிப் பாடு ‘ என்று ஏளனம் வரும். catch 22.

வேங்கடசுப்ரமணியன்

அன்புள்ள வெங்கட சுப்ரமண்ியன்

உண்மை. இந்த விஷயத்தில் நுண்கலைகளுக்குரிய குருபரம்பரை முறைமைகள் போன்ற சில நுட்பமான கருத்துக்கள் கணக்கில்கொள்ளப்படாமல் மட்டையடி விமர்சனங்களே நிகழ்கின்றன

ஜெ

http://www.jeyamohan.in/?p=1497 தமிழிசை கடிதங்கள்

http://www.jeyamohan.in/?p=8968 காழ்ப்பே வரலாறாக

முந்தைய கட்டுரைசரித்திர நாவல்கள்
அடுத்த கட்டுரைபுதிய புத்தகங்கள்-கடிதங்கள்