சோஷலிசம், மாவோயிசம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
” உண்மையில் அவர்களின் வறிய, கைவிடப்பட்ட நிலையை பயன்படுத்திக்கொண்டு அன்னியக்கும்பல் ஒன்று அவர்களை முன்னிறுத்தி இந்தியாவுக்கு எதிரான ஒருபோரை நிகழ்த்துகிறது” – உங்களின் இந்த பார்வை சரிதான்.
ஆனால், அவர்கள் இவ்வாறான வறிய, கைவிடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு, யாரைக் குற்றம் சொல்வது?
அரசிற்கும், இந்த எளியோர்க்கும் இதன் உண்மை நிலையை உணர்த்துவது எவருடைய வேலை?
செவிமடுக்க இவ்விருவரில் எவரேனும் தயார் நிலையில் உள்ளனரா?
அன்புடன்,
ஜீவன்.

ஜீவன்

நான் எழுதிய மாவோயிசம் பற்றிய கட்டுரையை வாசியுங்கள். விரிவான பதில் உள்ளது

ஒரு ஜனநாயகம் அம்மக்களுக்கு ஒருங்கிணைந்துபோராடவும் தங்கள் பிரதிநிதிகளை தாங்களே தேர்வுசெய்யவும் அனைத்து வாய்ப்புகளையும் அளிக்கிறது. அதைச்செய்ய முடியாத அளவுக்கு ஒருங்கிணைவு இல்லாமல் கல்வி இல்லாமல் தன்னுணர்வு இல்லாமல் இருக்கும் சமூகங்கள் அதன் விளைவை அனுபவிக்கின்றன. ஜனநாயகத்தில் மக்களின் தோல்விகளுக்கு மக்களே காரணம்

ஜெ

அன்புள்ள ஜெ.,

நான் சீனா குறித்த என் கருத்துக்களை பெரும்பாலும் பொருளாதார வல்லுனர்களிடம் இருந்தே அறிகிறேன்

குறைபாடு உள்ளதாயினும், கொஞ்சமேனும் உண்மை இல்லாமல் அவர்களால் பேச முடியாது.

கம்போடியா, சோவித்-கும சீனாவுக்கும் ஒரு பெரும் வேறுபாடு உள்ளது.

உலகம் முழுதும் பெரும் முதலாளிகள் சீனாவில் முதலீடு செய்துள்ளனர்; சிறிதேனும் உண்மைகளைக் காட்டாமல் சீனாவால், அவர்களைத்தக்க வைக்க முடியாது.

இன்று தகவல் தொழில் நுட்பத்தின் பாய்ச்சல், அபாரமானது; சீனாவால் அதைத துண்டு போட்டு முழுவதும் மறைக்க முடியுமா என்று தெரியவில்லை.

நீங்கள் சொல்வதில் உள்ள உண்மை எனக்குப் புரிகிறது. அதுவே முழுமுதல் உண்மையாக இருப்பின் மிகவும் மகிழ்பவர்களில், பொருளாதார ரீதியாகப் பலன் அடைபவர்களில் நானும் ஒருவன்.

நன்றி
ரத்தன்

அன்புள்ள ரத்தன்

உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நல்லது

பொருளியல் நிபுணர்கள் போல்பாட் வீழ்ச்சிஅ டையும் வரை கம்போடியா பற்றி என்ன சொன்னார்கள் என்று இணையத்திலேயே தேடிப் பாருங்கள்.

சீனா தொழில்நுட்பத்தை துண்டு போட்டு மறைப்பதைப்பற்றிய ஒரு ஐம்பதாயிரம் கட்டுரைகளை இணையம் அளிக்கிறது

பெருமுதலாளிகள் எங்கே தடையற்ற சர்வாதிகாரம் உள்ளதோ அங்கேதான் அதிகம் முதலீடு செய்கிறார்கள். எங்கே தொழிற்சங்க உரிமை உண்டோ அங்கே செல்வதில்லை. இந்தோனேஷியாவே உதாரணம்

ஜெ

திரு ஜெமோ அவர்களுக்கு,
தங்களுடைய சமீபத்திய சில கட்டுரைகளைப் பார்த்தால் (ராஜாஜி..), சோஷலிசம் தவறு என்றும் முதலாளித்துவம் சிறந்தது என்றும் நீங்கள் கருதுவது போல இருக்கிறதே. அல்லது நான் சரியாக வாசிக்கவில்லையோ? இல்லையென்றால், அமெரிக்காவின் முதலாளித்துவம் செய்யும் கண்ணைக்கட்டும் ஊழலும், அது உலகெங்கும் நிகழ்த்தும் பேரழிவுகளும் மூச்சை முட்டுகிறதே. ஒரே நாளில் ஒரு நடுத்தரக் குடும்பத்தை நடுத்தெருவுக்குத் துரத்திவிடும் இவர்களின் ‘சேவை’யை விட சோஷலிச ஊழல் எவ்வளவோ பரவாயில்லை என்பேன்.
In case I didn’t read your article in correct light, please ignore this mail.
— Baski, Austin, TX.

அன்புள்ள பாஸ்கி

சோஷலிசம் என்றால் என்ன என்று நாம் வரையறுத்துக்கொள்கிறோம் என்பதை பொறுத்தது. இந்தியா சோஷலிசத்தை உற்பத்தி மீதான அரசின் கட்டுப்பாடு என்று புரிந்துகொண்டது. அரசு என்பது அதிகார வர்க்கம். ஆகவே அது ஊழலாக ஆகியது

சோஷலிசத்தை மக்கள் நலம்நாடும் அரசு, வினியோகம் மீதான அரசின் வெளிப்படையான கட்டுப்பாடு என்று புரிந்துகொண்டால் நான் சோஷலிசத்தை ஆதரிப்பவனே. மக்கள்நலத்திட்டங்களை தனியார்போட்டிக்கு விடுவதும், வினியோகத்தை கட்டில்லாமல் இயங்கவிடுவதும் முதலாளித்துவத்தை மனிதாபிமானம் அற்றதாக ஆக்கிவிடும் என்றே நினைக்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைபிரம்மானந்தன் கடிதம்
அடுத்த கட்டுரைஈவேரா: கடிதம்