லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டு

leena

அக்டோபர் பதிமூன்றாம் தேதி கிளம்பி குடும்பத்துடன் தர்மஸ்தலா, மூடுபித்ரி,கர்க்களா, சிருங்கேரி, உடுப்பி சென்றுவிட்டு இன்று [18-10-2018] மாலைதான் திரும்பினேன். நாளைக்கான வெண்முரசு இனிமேல்தான் எழுதவேண்டும். ஐந்துநாள் தமிழகம் தொடர்பில் இல்லை. செய்திகளுக்குள் புகுந்தபோது metoo இயக்கம் தமிழிலக்கியச் சூழலில் வெடித்திருப்பதை அறிந்தேன்.

லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டு பற்றிய செய்தியை வாசித்தபோது அதில் நான் முக்கியமாகச் சொல்லவேண்டிய ஒன்று உண்டு என்று பட்டது. லீனா குறிப்பிட்டிருக்கும் இந்நிகழ்ச்சியை அவர் என்னிடம் முன்னரே சொல்லியிருக்கிறார். இணையத்திலும் பதிவுசெய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் என்னிடம் இதை முன்னரே சொன்னது இத்தருணத்தில் முக்கியமான ஒரு தகவல் என்பதனால் அதை நான் குறிப்பிடவேண்டியிருக்கிறது.

லீனா மணிமேகலை 2004 முதல் கவிஞராகவும் திரைச்செயல்பாட்டாளராகவும் எனக்கு அறிமுகமானவர். அன்று அவர் இதழியலாளர். அவர் இன்னொரு பெண்மணியுடன் இணைந்து தொடங்கவிருந்த ஒரு சூழியல் பத்திரிகைக்காக என்னை ஒரு பேட்டி எடுத்தார்.அவ்விதழ் வெளியாகவில்லை.

2005 ல் என் ஆசிரியருள் ஒருவரான லோகித் தாஸ் கஸ்தூரிமான் என்ற சினிமாவை எடுத்து வெளியிட்டு நஷ்டமடைந்து அதை தொலைக்காட்சிக்கு விற்கவியலாமல் இருந்தபோது ஊடகவியலாளராக இருந்த  லீனாவின் உதவியை நாடினேன். லீனா அதை சிரமேற்கொண்டு அவருக்கு தொடர்பிருந்த தொலைக்காட்சிக்கு விற்க உதவினார். அதை பதிவுசெய்திருக்கிறேன்.

லீனாவின் அரசியல் மேல் எனக்கு மதிப்பில்லை. எனக்கு முதிரா முற்போக்கும், எதிர்நிலை கொண்ட  பெண்ணியமும் ஒவ்வாதன என்பதை நாடறியும். லீனாவின் கருத்துக்களை மறுத்து மிகக்கடுமையாகவே அவ்வப்போது எதிர்வினையாற்றியிருக்கிறேன். லீனாவும் என்னை எதிர்த்துக் கடுமையாக எழுதியதுண்டு.

ஆனால் லீனா நல்ல கவிதைகள் எழுதியிருக்கிறார் என்பது என் எண்ணம். துணிச்சலான பெண் என்றும், ஓர் உளப்பதிவு.லீனாவை அவ்வப்போது இலக்கியநிகழ்ச்சிகளில் சந்திப்பதுண்டு. லீனா ஒரு சினிமா எடுக்கும் எண்ணம் கொண்டிருந்தார். அதன் திரைக்கதையில் நான் உதவிசெய்திருக்கிறேன். அந்தப்படம் நடைபெறவில்லை.அரசியல் முரண்பாடுகளுக்கு அப்பால் ஒர் இலக்கியநட்பாக அதை நான் கருதுகிறேன்.

மும்பையில் சென்ற மார்ச் 3 ,2016 அன்று கேட்வே லிட் ஃபெஸ்ட் என்னும் நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். லீனாவும் அந்த நிகழ்சியின் பங்கெடுப்பாளர்களில் ஒருவர். நண்பர் மதுபால் உட்பட பலர் கலந்துகொண்டனர். அன்று வெளியே பேசிக்கொண்டிருந்தபோது என் நண்பரின் மகள் இதழியலில் ஈடுபட விருப்பம் கொண்டிருப்பதைப்பற்றிச் சொன்னேன். லீனா இதழியலில் உள்ள சவால்களைச் சொல்ல ஆரம்பித்து இந்நிகழ்ச்சியை விவரித்தார். முதலில் சாதாரணமாக சிரித்தபடிச் சொல்ல தொடங்கி மெல்ல உணர்ச்சிவசப்பட்டு முகம் சிவந்து சீற்றம் கொண்டார்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.லீனாவின் அந்த முகம் நான் அறியாதது. அந்நிகழ்ச்சி கடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டிருக்கின்றன, ஆகவே அதை அவர் கடந்துவந்துவிடலாம் என்று மட்டும் சொன்னேன். அதை தானும் கடந்துவந்துவிட்டதாகவும் அது பெரிய விஷயம் அல்ல என்றும் அவர் சொன்னார். ஆனால் மீண்டும் அவர் அதை இணையத்தில் எழுதினார் என அறிந்தேன். அவரால் அதைக் கடந்து செல்ல முடியவில்லை என்று புரிந்தது.

உண்மையில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது இதுதான். ஏனென்றால் என் இளமைக்கால அலைச்சல் வாழ்க்கையில் ஒருபாலுறவினர், பிறழ்பாலுறவினர் பாலியல்ரீதியாக தாக்கிய பல நிகழ்ச்சிகள் உள்ளன. குவாலியரில் ஒருமுறை அடிதடி வரை சென்று சாலையில் கட்டிப்புரண்டிருக்கிறோம். திருடர்கள் வழிமறித்து அடித்து பணம்பிடுங்கிச் சென்ற நிகழ்வுகளும் உண்டு. எவையும் என்னை ஆழமாக பாதிக்கவில்லை. எவற்றையும் நான் இடைவிடாமல் எண்ணிக்கொண்டிருக்கவுமில்லை.

லீனா இன்று  உலகளாவ அறியப்பட்ட ஓரிரு தமிழ் ஆளுமைகளில் ஒருவர்.அவருடைய ஆவணப்படங்களும் திரைப்படங்களும் பரவலாக கவனம் பெற்றவை. சர்வதேச இலக்கிய, திரைவிழாக்களில் கலந்துகொள்கிறார். உலகநாடுகளில் பயணம்செய்திருக்கிறார். ஆயினும் இந்த விஷயம் அவரை இவ்வளவுதூரம் தொடர்ந்து துன்புறுத்துவதை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆண் உடலில் இருந்து தர்க்கபூர்வமாகப் பெண்ணைப் புரிந்துகொள்வது எளிதல்ல என்று படுகிறது. [ஒருவேளை புனைவுக்குள் நான் உருமாறி அதை எழுதிவிடவும்கூடும்] ஆணுக்கிருக்கும் இந்த புரிந்துகொள்ளமுடியாமையில் இருந்தே metoo போன்ற இயக்கங்கள் மேல் ஆண்கள் எழுப்பும் அசட்டு கேள்விகள் [இவ்வளவுநாள் ஏன் சொல்லலை? இப்ப மட்டும் என்ன வந்திச்சு? இது விளம்பரம்தானே? – போன்றவை ] எழுகின்றன என நினைக்கிறேன்.

லீனா இப்போது இதைச் சொல்வது அவருக்கு எவ்வகையிலும் உதவாது, மேலும் உளப்பாதிப்பையே அளிக்கும்  என்பது என் எண்ணம்.  அவர்அதை கடந்துசெல்வதே ஒரே வழி என்றே எனக்குப் படுகிறது. ஆயினும் இத்தருணத்தில் அவருடன் நிற்கிறேன்.

முந்தைய கட்டுரைமலேசிய இலக்கிய அரங்கு -மதுரையில்
அடுத்த கட்டுரைவெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல் அக்டோபர் 2018