மணவுறவு மீறல் குற்றமா?
மணவுறவுமீறல் -கடிதம்
ஆசிரியருக்கு ,
எனது கடிதத்தை முற்றிலும் தவறாக படித்து விட்டீர்கள். ஒரு எழுத்தாளரின் நேரத்தை அவ்வளவு எளிதில் நான் வீணாக்க மாட்டேன் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இல்லை போலும். அதே போல வெறும் மூளைவிளையாட்டாக தான் நான் அறவியல் பிரச்சனைகளை அணுகுகிறேன் பிறரையும் இதற்குள் இழுத்து விடுகிறேன் என எண்ணுகிறீர்கள், அவ்வாறல்ல என உறுதி கூறுகிறேன்.
ஒழுக்கம் அறம் விழுமியம் குறித்து ஒரு நிலைப்பாடெடுத்தலும் தான் சரி என எண்ணுவதை இந்த சமூகத்திற்கு அறிவிப்பதும் ஒரு பெரும் எழுத்தாளரிடம் வாசகர்கள் எதிர்பார்ப்பது, ஜெயகாந்தன் இது குறித்தது பேசியுள்ளதை நான் கண்டுள்ளேன்.
ஏற்கனவே எனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி கணவன் அல்லாத பிறரால் அல்லது காவல் துறையால் ஒரு ஆண் மீது தகாத உறவு புகார் அளிக்க இயலாது, கணவன் அப்புகாரை அளித்தாலும் தனது மனைவி மீது இப்புகாரை அளிக்க முடியாது , இத் தடையை கு வி மு ச பிரிவு 198 ( https://indiankanoon.org/doc/854390/ ) ஏற்படுத்துகிறது. எந்நிலையிலும் ஒரு பெண் மீது வழக்கு பதிய முடியாது.
ஆக தகாத உறவு வைத்துள்ள ஒரு பெண்ணையும் அவரின் இணையையும் சேர்த்து போலீசாரால் தன்னிச்சையாக ஒரு வழக்கு போட இயலாது. ஆனால் ” பிராத்தல் கேஸ் ” (http://www.hyderabadpolice.gov.in/acts/immoraltraffic.pdf ) போட்டு விடுவேன் என முன்பும் இத்தீர்ப்பிற்கு பிறகும் மிரட்டலாம், பணம் பிடுங்கலாம். ஆனால் அவ்வாறு ஒரு திரிக்கப் பட்ட விபச்சார வழக்கு பதிவு செய்வது கிட்டத்தட்ட இயலாத ஒன்று, எனது அனுபவத்தில் இதுவரை நிகழ்ந்து நான் பார்த்ததில்லை.
நான் பதில் தேடும் கேள்வி :
இது தனி நபர்களுக்கு இடையே ஆன சங்கதி என்றாலும்,
- சமூகத்தில் வரம்பு மீறிய பாலியல் நடத்தை மற்றும் இணக்க உறவு திருமணத்திற்கு முன்பும் பின்பும் எந்த அளவில் உள்ளது ?
- ஒரு எழுத்தாளராக இது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன ?
- பாலியல் ஒழுக்கம் தவறுதல் எப்போது அற மீறல் ஆகும் ?
கிருஷ்ணன்
***
அன்புள்ள கிருஷ்ணன்
முதலில் மீண்டும் தெளிவுறச் சொல்லிவிடுகிறேன், ‘அடல்ட்ரி என்பதற்கு ஐந்தாண்டுச் சிறைத்தண்டனை’ என்னும் ஒற்றைவரியே இதுவரை போலீஸ் மிரட்டல்களுக்கு அடிப்படை. அவர்களால் தன்னிச்சையாக வழக்கு பதிய முடியாது என பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. ஆனால் போலீஸார் ஒரு ஆண்பெண் இணையிடம் இங்கே குற்றம்நடக்கிறது என சந்தேகமாக இருக்கிறது, ஆதாரங்கள் கொடுங்கள், பெண்ணின் கணவனிடம் பேசவேண்டும் என மிரட்டமுடியும். மிரட்டுகிறார்கள் என்பதே நடைமுறை. பிராத்தல்வழக்கு போடுவதாகப் பொதுவாகச் சொல்லமாட்டார்கள். அது ஒரு உச்சகட்டநிலை என பலருக்கும் தெரியும். மணநீக்க வழக்குகளில் அந்த சட்டநடவடிக்கையை ‘எழுதிவாங்கிக்கொண்டு’ இன்றும் போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
பொதுவாக ஒழுக்கம்சார்ந்த வினாக்களும் சரி, அதன் இக்கட்டுகளும் சரி மேலான இலக்கியவாதிகளை கவர்வதில்லை. ஏனென்றால் ஒழுக்கம் மாறிக்கொண்டே இருக்கிறது என அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆகவே மாறாத மானுடவினாக்கள், இக்கட்டுகளை நோக்கியே அவர்கள் செல்கிறார்கள். ஒழுக்கம் என்பது அறத்தின் நடைமுறைநெறிகளின் தொகுதி. எழுத்தாளர்கள் அறத்தைப்பற்றிப் பேசவே விழைவார்கள்.
நாம் பரவலாக நினைப்பதுபோல ஒழுக்கம் என்பது காலமாற்றத்தில் ‘கட்டுதளர்ந்தபடியே’ செல்வது அல்ல. அந்தக் கருத்து ஒரு ‘பாட்டாபாட்டி’ உளநிலையிலிருந்து எழுவது. நேர்மாறான மாற்றங்களும் சமூகத்தில் உண்டு. உதாரணமாக, சென்ற தலைமுறை வரை தமிழ்ச்சமூகத்தில் பாலியல் ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டும்தான். ஆண்களுக்கு பலதாரம், தாசி உறவு எல்லாமே அனுமதிக்கப்பட்டிருந்தது. சங்ககாலம் முதல் அது ஆண்மையின் அடையாளம் என்றே கருதப்பட்டது. ஆண்களுக்கு இத்தனை ஒழுக்கநெறிகளும் கண்காணிப்புகளும் அனேகமாகத் தமிழ்ச்சமூகத்தின் ஈராயிரம் ஆண்டுக்கால வரலாற்றில் இப்போதுதான் உருவாகியிருக்கின்றன.
ஆகவே ஒழுக்கரீதியாக இப்படிச் செய்வது சரியா, இதற்கு என்ன செய்வது என்ற கேள்விகளுக்கு இலக்கியவாதிகள் பதிலளிக்க முடியாது, பதிலளிக்கவும் கூடாது. கண்டிப்பாக அது இலக்கியவாதியின் வேலை அல்ல. அது சட்டவல்லுநர், அறவியலாளர்களின் பணி மட்டுமே. இலக்கியவாதியின் தேடல் அதன் பின்புலமாக உள்ள அறக்கேள்வி சார்ந்தே இருக்கவேண்டும். ஒழுக்கம் அறம் விழுமியம் ஆகியவற்றைப்பற்றி எழுத்தாளன் எந்நிலையில் பேசவேண்டும்? அறமும் விழுமியமும் அவன் பேசுபொருட்கள். அவற்றைப் பேசும்போது அவற்றின் பகுதியாக ஒழுக்கம் பற்றிப் பேசலாம். அவ்வாறு நான் பல்வேறு ஒழுக்கப்பிரச்சினைகளைப்பற்றி சொன்னவை இத்தளத்தில் உள்ளன.அவை சரி தவறு சார்ந்த விவாதங்கள் அல்ல, அறவியல் சார்ந்த விவாதங்கள்.
இலக்கியவாதி முதன்மையாக அறவியல் சார்ந்த அந்த வினாக்களை படைப்புக்குள் தன் வாசகர்களின் ஆழுளம் சார்ந்தே எழுப்பிக்கொள்ளவேண்டும். என்னைப்போல வாசகர்களுடன் நேரடியாகப் பேசும் எழுத்தாளன் இன்னும் கொஞ்சம் அதைப்பற்றி உரையாடலாம். ஆனால் அந்த வாசகர்கள் ‘பொதுமக்கள்’ அல்ல.தெரிவுசெய்யப்பட்ட சிலர். அதாவது இலக்கியம் என்னும் அறிவார்ந்த வட்டத்துக்குள் வந்துவிட்டவர்கள் மட்டுமே. இலக்கியவாசகர்கள் அல்லாதவர்களிடம் பேசவோ வழிகாட்டவோ எழுத்தாளன் முயலக்கூடாது.
உங்கள் வினாவையே நேரடியாக எடுத்துக்கொள்கிறேன். இந்தச்சட்டம் சரியா தவறா, இது எப்படி இருக்கவேண்டும் என்று நான் ஆராயமாட்டேன். இது நடைமுறையில் ஏற்புக்குரியது என முன்னர் சொல்லிவிட்டேன். ஏன் இது இவ்வாறு மாறுகிறது என ஆராய்கிறேன். அதுவே என் பணி.
ஒழுக்கம் என்பது அறத்தின் நெறித்தொகை. அறம் என்பது வாழ்க்கை பற்றிய தத்துவதரிசனத்தின் வெளிப்பாடு. அந்த தத்துவதரிசனத்தில் மிகப்பெரிய மாறுதல் ஒன்று மெல்லமெல்ல நிகழ்ந்துவருகிறது. அது பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொடங்கியது. உலகெங்கும் பரவியது. இருநூறாண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ஒழுக்கவினாவிலும், அறச்சிக்கலிலும் அந்த தத்துவதரிசனமே உண்மையான பேசுபொருளாகிறது. அந்த விவாதம் வழியாக அது மெல்லமெல்ல ஏற்றுக்கொள்ளப்படுகிறது
இப்படி அதை வகுக்கிறேன். தனிமனிதன் –சமூகம் குறித்த முந்தைய தத்துவதரிசனம் என்பது ‘சமூகத்தின் துளியே தனிமனிதன்’ என்றுதான். அதை சமூகமையநோக்கு எனலாம். இன்றைய தத்துவதரிசனம் என்பது ‘தனிமனிதர்களின் தொகுப்பே சமூகம்’ என்பது. இதை தனிமனிதமையநோக்கு எனலாம். இந்த மையமாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்க அதற்கேற்ப அறமும் ஒழுக்கமும் மெல்ல மாற்றி வரையறைசெய்யப்படுகின்றன. சென்ற இருநூறாண்டுகளில் நடந்த மதச்சீர்திருத்தங்கள், சமூகசீர்திருத்தங்கள், அரசியல் வளர்ச்சி, ஒழுக்கநெறிகளின் மாற்றங்கள் அனைத்தும் இந்த அடிப்படை சார்ந்தவையே
முன்பு ஒருவனின் ஒழுக்கநெறி அவன் எவ்வண்ணம் சமூகத்துடன் ஒத்துப்போவான் என்னும் அடிப்படையிலேயே அமைந்தது. ஊரோடு ஒத்துவாழ் என்னும் முதுமொழியே மையநெறி. ஆகவே அனைத்து மையஒழுக்குகளும் ஏற்கப்பட்டன. அனைத்துப் பிறழ்வுகளும் ஒடுக்கப்பட்டன. இன்று ஒருவனின் ஒழுக்கநெறி அவன் தன்னளவில் சுதந்திரமானவனாக, மகிழ்ச்சியானவனாக, நிறைவைநாடிச்செல்லும் வாய்ப்புகொண்டவனாக இருக்கிறதா என்ற அடிப்படையிலேயே வகுக்கப்படுகிறது. அல்ல என்றால் அது பிழை என கருதப்படுகிறது. அந்தத் தனிமனித நெறி இன்னொரு தனிமனிதனின் உரிமைக்கோ, சமூகத்தின் ஒட்டுமொத்த நலனுக்கோ எதிராக இருக்கும்போது மட்டுமே தடுக்கப்படுகிறது. சமூக அமைப்பு தனிமனித உரிமைகளுக்கு கூடுமானவரை எதிராக இல்லாதபடி தொடர்ச்சியாக மாற்றப்படுகிறது. இந்தச் சட்டம் உட்பட எல்லா ஒழுக்கவிவாதங்களும் செய்வது அதைத்தான்
இன்று நிகழ்ந்துவரும் அத்தனை மாற்றங்களையும் இப்படியே நாம் பார்க்கலாம். சென்ற நூற்றாண்டில் இங்கே நிலஅடிமைக்கு உரிமைகள் ஏதும் இல்லை. பெண்களுக்கு உரிமைகள் இல்லை. மாறுபட்ட பாலியல்பு கொண்டவர்களுக்கு உரிமைகள் இல்லை. இவை ஒவ்வொன்றாக இன்றைய ஒழுக்கவியலால் அளிக்கப்படுகின்றன. நேற்றைய கல்விக்கூடத்தையும் இன்றையக் கல்விக்கூடத்தையும் கூர்ந்துபாருங்கள். மாணவனின் தனிமனித உரிமை பற்றி இன்றுபேசிக்கொண்டிருக்கிறோம். நாம் படிக்கும் காலத்தில் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது.
இந்த அடிப்படையில் பாலியல் ஒழுக்கத்தைப்பற்றி யோசித்தால் இன்றைய மாறுதல்களைப் புரிந்துகொள்ளமுடியும். முந்தைய பாலியலொழுக்கநெறிகள் சமூகக்கட்டமைப்பைப் பேணும் நோக்கம் கொண்டவை. இன்றைய பாலியலொழுக்கநெறிகள் தனிமனித சுதந்திரத்தை பேணும் நோக்கம் கொண்டவை. ஆகவேதான் இன்றைய பாலியலொழுக்கநெறிகளைப்பற்றி விமர்சிப்பவர்கள் அனைவருமே தவறாமல் இதனால் ‘சமூகக்கட்டமைப்பு அழியும்’ என்று சொல்கிறார்கள்.
ஆகவே இன்றைய ஒழுக்கநெறி குறித்துப்பேசும்போது அது தனிமனித உரிமைக்கு எதிராக உள்ளதா ஆதரவாக உள்ளதா என்பதுதான் முதல்வினா. எதிரானது என்றால் அது களையப்படவேண்டியதே. ஒருவரின் பாலியல் நடத்தை இன்னொருவருக்கு தீங்கிழைக்காதபடி, அவர் உரிமையைப் பறிக்காதபடி, சமூகத்தின் ஒட்டுமொத்த அமைதியை குலைக்காதபடி இருந்தால் அதில் அரசோ சமூகமோ தலையிடவேண்டியதில்லை. தலையிட்டால் அது மீறல்.
இன்னொருவரின் உரிமையை அது பாதிக்கும் என்றால் அது குற்றம். அது தண்டிக்கப்படவேண்டும். அந்த நடத்தையைப்பற்றி சமூகம் பொதுவாக என்ன எண்ணம் கொண்டிருக்கிறது, அதன்மூலம் சமூகத்தின் பொதுப்போக்கில் ஏதேனும் மாறுதல் ஏற்படுமா என்பது இன்று முக்கியமே அல்ல. இந்தக் கோணம் இன்றைய நோக்கில் முக்கியமான ஒன்று என்றே நான் நினைக்கிறேன். இதை நோக்கி வர ஐரோப்பாவுக்கு நாநூறாண்டுகள் ஆகியிருக்கின்றன. இது இன்றைய மானுடம் ஈட்டிக்கொண்ட ஒரு முக்கியமான விழுமியம்.
இன்று இதை சொன்னதுமே ‘அப்டீன்னா எப்டி வேணுமானாலும் இருக்கிறதா?” என்ற கேள்வியே இங்கே எழுகிறது. ஏனென்றால் இன்றும் நாம் பொதுவாக நிலப்பிரபுத்துவகால விழுமியங்களுடன் வாழ்பவர்கள். பழங்குடி மரபுகளில் உறைபவர்கள். ஒரு தனிநபரின் வாழ்க்கையை நம்மால் ஒட்டுமொத்த சமூகத்திலிருந்தும் குலத்திலிருந்தும் குடும்பத்திலிருந்தும் பிரித்துப்பார்க்க முடியவில்லை. இன்று நம்மைச்சூழ்ந்திருக்கும் நூறுபேரை அமரச்செய்து அவர்களின் வாழ்க்கையின் மிகப்பெரிய பிரச்சினை என்ன என்று கேட்டுப்பாருங்கள் அவர்கள் எதை விரும்புகிறார்களோ, எது அவர்களை நிறைவுறுத்தும் என நினைக்கிறார்களோ அதை சமூகமும் குடும்பமும் ஒத்துக்கொள்ளாத்தே தங்கள் முதன்மைப்பிரச்சினை என்று அவர்கள் சொல்வார்கள். ‘இந்தச் சமூகம் ஒத்துக்காது சார்’ ‘எங்க வீட்டிலே சம்மதிக்க மாட்டாங்க சார்’ ‘நாலுபேர் என்ன நினைப்பாங்க’ என்னும் வரிகள் நம் காதில் விழாத நாளே இங்கே கிடையாது. நம் ஒழுக்கத்தை முடிவுசெய்வனவாக இன்றுள்ளவை இவையே. இங்கே ஒரு சாதாரண வாழ்க்கைச் சுதந்திரத்தைக்கூட சமூகமும் குடும்பமும் அனுமதிப்பதில்லை. ஏன் இலக்கியம் வாசிப்பதையே ரகசியமாகச் செய்யவேண்டிய நிலையில் இருக்கிறார்கள் பலர்.
இங்கே நிகழும் கௌரவக்கொலைகளைப் பாருங்கள். தனிமனித உரிமை என்ற கருத்து சற்றேனும் உள்ளத்தில் குடியேறியிருப்பவர்கள் நோக்கில் அது குற்றம். ஆனால் அந்த எண்ணமே இல்லாதவர்களுக்கு, மனிதனை சாதியாக மதமாக இனமாக மட்டுமே பார்க்கும் கண்கள் கொண்டவர்களுக்கு அது மீறலுக்கு அளிக்கப்படும் தண்டனை. இந்தியா ஓர் எல்லையில் இன்னமும் தனிமனிதன் என்னும் கருத்துருவை வந்தடையவே இல்லை. இன்னொரு எல்லையில் ஐரோப்பியத் தாராளவாதத்தின் உள்ளுறையான தனிமனிதன் என்னும் கருத்தியலை தலைக்கொண்டிருக்கிறது. நம் நீதிமன்றங்கள் தனிமனிதனை அளவுகோலாகக் கொண்டு சட்டங்களைத் திருத்திக்கொண்டே இருக்க சமூகம் முட்டி மோதி, பூசலிட்டு, குழம்பி அதைத் தொடர்ந்து செல்கிறது.
ஆகவே ஒழுக்கமீறல் தவறா சரியா, அது எப்போது அறமீறல் ஆகும் என்பதுபோன்ற வினாக்களை எழுப்பி முழுமுற்றான பதில்களை இன்று சொல்லமுடியாது. பொதுவாகச் சொன்னால் நான் அதை தனிமனிதனின் சுதந்திரம், மகிழ்ச்சி, நிறைவு ஆகியவற்றைச் சார்ந்ததாகவே பார்ப்பேன். அது அவனுடைய மகிழ்ச்சிக்கும் நிறைவுக்கும் காரணமாக இருக்கும் என்றால், அதே சமயம் இன்னொருவரின் உரிமைகளை பறிக்காததாக, அவரைச் சுரண்டாததாக இருக்கும் என்றால் அது அறமீறல் அல்ல.
அனைத்துக்கும் அப்பால் ஒன்று உண்டு. ஓர் உரையாடலில் நித்யா சொன்னது. அவரிடம் தலைச்சேரி சித்தாசிரமத்தின் சித்தர் சொன்ன வரி அது. ‘இங்கே ஈ அமராத உணவை எவரும் உண்ணமுடியாது. ஈயின் காலில் ஒரு துளியினும் துளியாகவேனும் மலம் இருக்கும். ஆகவே கொஞ்சமாவது மலம் தின்னாத எவரும் இல்லை’ மலம் என்ற சொல்லுக்கு இந்திய சிந்தனையில் விரிவான பொருள் உண்டு. மீறல்களை மானுட உணர்ச்சிகளுடன், மானுடனின் தவிப்புகளுடன் இணைத்துப்பார்ப்பவர்களே இலக்கியவாதிகளாகவும் ஆன்மிகவாதிகளாகவும் இருக்கமுடியும். தண்டனைக்குரியதா அல்லவா என்று பார்ப்பது அவர்களின் பணி அல்ல
Pursuit of Happiness – மகிழ்ச்சிக்கான தேடல்கொண்டிருக்கும் உரிமை என அமெரிக்கா வகுத்திருக்கும் வரையறை ஐரோப்பா நிகழ்த்திய பலநூற்றாண்டு தத்துவ விவாதத்தின் வளர்ச்சியின் விளைவு. இந்த வரியுடன் இணைத்து வாசிக்கவேண்டிய நூல் பெர்ட்ரன்ட் ரஸ்ஸல் எழுதிய The Conquest of Happiness. ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியடைய உரிமையுள்ளது என்னும் அடிப்படையிலேயே சட்டங்களும் சமூகநெறிகளும் அமையவேண்டும் என்னும் கொள்கையை மூவாயிரமாண்டுக்கால சமூக உருவாக்கப் போக்கின் இறுதியாகவே மானுடம் வந்தடைந்தது.
அமெரிக்காவின் கொள்கையில் உள்ள Pursuit of Happiness என்பதை நான் pursuit of self fulfillment என்று மாற்றிக்கொள்ள விரும்புவேன். மகிழ்ச்சி என்னும்போது அது இயல்பாகவே புலனின்பத்தேடல் என்பதைக் குறிக்கிறது. மகிழ்ச்சி மேலும் மகிழ்ச்சி என்னும்போது எப்படியோ அது நுகர்வுவெறியை, தன்னலத்தை நோக்கிக் கொண்டுசெல்கிறது. ஒவ்வொருவருக்கும் தன் ஆன்மீக நிறைவை அடைவதற்கு முயலவேண்டிய உரிமை உள்ளது. அதை கடமை என்றும் சொல்லலாம். ஒரு சமூகம் அதற்குத் தடையாக எந்நிலையிலும் இருக்கவியலாது.
சென்றகாலங்களில் இந்தியமரபை நோக்கினால் எளிய மனிதர்களை சமூகத்தைக்கொண்டே அவர்கள் வரையறை செய்தார்கள். அவர்களுக்கான ஒழுக்கம் அவ்வாறே வகுக்கப்பட்டது. ஆனால் ஒருவன் ஆன்மிகமான நிறைவைத் தேடி இறங்கினான் என்றால், சமூகத்தைவிட்டு அதன்பொருட்டு கிளம்பினான் என்றால், அவனுக்கு அளவற்ற சுதந்திரத்தை இந்திய மரபு வழங்கியது. ‘சித்தம்போக்கு சிவம்போக்கு’ என வாழும் உரிமை. தாந்த்ரீகமுறை உட்பட அனைத்து வகையான தற்சோதனைகளையும் செய்துபார்க்கும் உரிமை. அனைத்து ஒழுக்கநெறிகளையும் கடந்து செல்லும் உரிமை. அதுவே இங்கே இத்தனை தனிப்போக்குகள் உருவாக வழியமைத்தது. இன்றுகூட இந்திய சமூகத்தில் அந்த உளநிலையே நீடிக்கிறது
அந்த உரிமையை ஒவ்வொருவருக்கும் அளிப்பதாக நம்மை நாம் மாற்றிக்கொள்ளவேண்டியிருக்கிறது. சமூகம் என்பது மகிழ்ச்சியும் நிறைவும் நோக்கிச் செல்லும் தனிமனிதர்கள் ஒருவரோடொருவர் ஒத்துப்போவதனூடாக உருவாக்கிக்கொள்ளும் ஓர் அமைப்பு மட்டுமே என்ற புரிந்தலை நோக்கிச் செல்லவேண்டியிருக்கிறது
ஜெ