இரண்டு காடுகளின் நடுவே- மலைக்காடு

c.muthusami

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

நியூயார்க் நகரத்திற்குச் சென்றிருந்தபோது ஒரே இடத்தில் இரண்டு மகத்தான நினைவுச்சின்னங்களைக் காணமுடிந்தது. எல்லிஸ் தீவில் அமைந்திருக்கும் குடியேற்ற அருங்காட்சியகம். அதன் தலைமேல் என எழுந்து நின்றிருக்கும் சுதந்திரதேவியின் சிலை. கிட்டத்தட்ட இருநூறாண்டுகளாக அமெரிக்காவின் மண்ணில் குடியேறிக்கொண்டிருந்த ஐரோப்பியர்கள் கப்பலில் வந்திறங்கும் முதல் காலடிநிலம் அது. மதநம்பிக்கையால் துரத்தப்பட்டவர்கள், வெவ்வேறு அரசுகளால் வேட்டையாடப்பட்டவர்கள், அயர்லாந்தின் உருளைக்கிழங்குப் பஞ்சம் போன்ற செயற்கை பஞ்சங்களால் பிழைப்புதேடி வந்தவர்கள், புதிய வாழ்க்கையைத்தேடி கப்பலேறியவர்கள்…

எல்லிஸ் தீவிலுள்ள புகைப்படங்கள் வழியாக ஒரு வாழ்க்கை கண்முன் விரிகிறது. துயருற்ற முகங்கள், நைந்த உடைகளை அணிந்த மெலிந்த உடல்கள். குழந்தைகளை அணைத்த அன்னையர். குழந்தைவிழிகளிலுள்ள திகைப்பு. அவர்கள் வைத்திருக்கும் வெவ்வேறுவகையான பெட்டிகள். அடையாளங்கள் அழிந்து வெறும் கும்பலாக ஆகிவிட்டவர்கள். வரிசையில் நின்று எண்களாக மாறுகிறார்கள். நம்பிக்கையுடன் கனவுடன் வெளியே விரிந்துள்ள அறியாநிலம் நோக்கிச் செல்கிறார்கள்.

எல்லிஸ் தீவின் நெஞ்சை அடைக்கும் அனுபவம் மீண்டும் வெளிவந்து கையில் ஒளிச்சுடருடன் எழுந்து நின்றிருக்கும் விடுதலையரசியின் பெருஞ்சிலையை பார்க்கையில் மறைகிறது. சற்றுநேரத்திலேயே உள்ளம் பறக்கத் தொடங்கிவிடும். உலக வரலாற்றில் அந்தச் சிலை ஓர் அருநிகழ்வு என எப்போதும் நான் உணர்ந்ததுண்டு. ஒருபோதும் வருபவர்களை நோக்கி “இது உங்கள் நிலமும்கூட” என அழைக்கும் அத்தனைபெரிய வரவேற்பு எந்நாட்டிலும் அளிக்கப்பட்டதில்லை. ஒரு நாட்டின் இலட்சியவாதமே சிலையென எழுந்து நின்றிருப்பதையும் கண்டதில்லை. நவீனக் காலகட்டம் உருவாக்கிய முதன்மையான தெய்வம் அந்த வெண்கலச்சிலைதான்

winston-churchill

[ 2 ]

முதல்முறையாக மலேசியாவின் பினாங்கு நகருக்குச் சென்றபோது அமெரிக்காவின் எல்லிஸ் தீவை எண்ணிக்கொண்டேன். என் இளமைக்காலம் முதலே ‘பெனாங்குக்குப் போவது’ என்னும் சொல்லாட்சியைக் கேள்விப்பட்டிருந்தேன். குமரிமாவட்டத்தையும் கேரளத்தையும் பொறுத்தவரை அது வீட்டில் சண்டைபோட்டுக்கொண்டோ, ஏதேனும் குற்றத்தை இழைத்து தண்டனைக்குத் தப்பியோ, பொருளீட்டுவதற்காகவோ செல்லும் ஓர் அறியாநிலம். சிங்கப்பூர் உட்பட அனைத்து வெளிநாடுகளையும் பெனாங்கு என்றே உள்ளூரில் சொல்லிவந்தார்கள். எழுபதுகளில் வளைகுடா நாட்டுக்குச் செல்லத் தொடங்கியபோதும் முதியவர்கள் அதை பெனாங்கு என்றே சொன்னார்கள்

பினாங்கு வாழ்க்கையின் சித்திரத்தை நான் முதலில் அடைந்தது மலையாள நாடக ஆசிரியரும் நடிகருமான என்.என்.பிள்ளை எழுதிய ஞான் என்னும் தன்வரலாற்றில்தான். 1940 களின் வாழ்க்கையின் நுண்ணிய சித்தரிப்பு ஒன்றை அதில் உருவாக்க அவரால் இயன்றது. அதன்பின் அகிலனின் பால்மரக்காட்டிலே, நெஞ்சின் அலைகள் என்னும் இரு நாவல்களில். அகிலனின் நாவல்கள் பாடப்புத்தகத்தன்மை கொண்ட சித்தரிப்புகள் வழியாகச் சோர்வூட்டும் வாசிப்பை அளித்தன. ஆனாலும் அந்த நிலம் மீதான ஈடுபாடு என் கனவில் அதை வளரச்செய்தது. மேலும் நெடுங்காலம் கழித்தே மலேசிய எழுத்துக்கள் அறிமுகமாயின. லங்காட்நதிக்கரை [அ.ரெங்கசாமி] சயாம் மரணரயில் [சண்முகம்] போன்ற நாவல்கள்.

ஆனால் பினாங்கில் நின்றிருந்தபோது என் மூதாதையர் அங்கே வந்தமைக்கான தடையமாக ஏதேனும் எஞ்சியிருக்கிறதா என்ற ஆவலும் இல்லை என அறிந்தபோது ஏமாற்றமும்தான் ஏற்பட்டது. புகைப்படங்களோ, அரசு ஆவணங்களோ இல்லை. நினைவுக்குறிப்புகளும் இல்லை. ஏனென்றால் அங்கே சென்றவர்கள் இங்குள்ள சமூகத்தால் குப்பையில் என தூக்கி வீசப்பட்டவர்கள். இந்தியாவை உலுக்கிய இரு பெரும்பஞ்சங்களிலிருந்து உயிர்தப்பியவர்கள். இங்கு அப்பஞ்சங்களின் வரலாறே எழுதப்படவில்லை. செத்துக்குவிந்த மக்களைப்பற்றிய நினைவே நம் பண்பாட்டில் இல்லை. குடிபெயர்ந்தோர் முற்றிலும் மறக்கப்பட்டவர்கள்.

சென்ற ஐநூறாண்டுகளாக இந்தியர்களே வரலாறற்றவர்கள் எனலாம். தற்செயலாகப் பதிவான வரலாறுகளும் வென்றவர்கள் எழுதிய வரலாறுகளுமன்றி நம்மைப்பற்றி நாம் பதிவுசெய்தவை மிகமிகக்குறைவு. வரலாறற்ற சமூகத்தின் அடித்தளம் வரலாற்றின் நிழல்கூட விழாதது. இருந்ததற்கும் மறைந்தமைக்கும் தடையமே இல்லாமல் காலத்தில் மறைந்தது.

உலகில் எந்த ஒரு மானுட இனத்திற்கும் நிகழ்ந்த கூட்டுப்பேரழிவுக்கு நிகரானது 1970களிலும் 1880 களிலும் தமிழகத்தில் நிகழ்ந்த பெரும்பஞ்சங்கள். அதன்பின் உலகப்போரில் சயாம் மரணரயில் உருவாக்கத்தில் நிகழ்ந்த பலிகள். ஆனால் இங்கே மொழிவழிப்பதிவுகள் மிகமிககுறைவு. உலகின் அத்தனை சமூகங்களும் தங்கள் அழிவுகளை மீள மீளப்பேசிப் பதிவுசெய்கின்றன. தங்கள் தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்ள, தங்கள் பிழைகளை திருத்திக்கொள்ள. நாம் நம் பொற்காலங்களைத் தேடி நூல்களில் அலைகிறோம். உலகமே நம்மால் ஆளப்பட்டது என்னும் பகற்கனவில் திளைக்கிறோம்.

coolie-women

[ 3 ]

ஒருவகையில் இலக்கியம் என்பது வரலாறற்றவர்களின் வரலாறு. இலக்கிய ஆசிரியன் நாவற்றவர்களின் நா. வரலாற்றின் தத்துவத்தின் மெய்யியலின் இடைவெளிகளை நிரப்பிப் பரவும் நீரே இலக்கியம். அது நிகர்வாழ்க்கை, ஆகவே நிகர்வரலாறும்கூட. அவ்வகையில் சீ.முத்துசாமியின் மலைக்காடு மலாய மக்களின் வரலாறு. வரலாறுகளினூடாகக் கொடிபோலப் படர்ந்து அவற்றை ஒருங்கிணைப்பது. அவற்றை மெல்ல கவ்வி இறுக்கி தானெழுந்து நின்றிருப்பது. சமீபத்தில் கம்போடியா சென்றிருந்தபோது இடிந்த பேராலயங்களுக்குமேல் பெருமரங்கள் எழுந்து நின்றிருப்பதைக் கண்டேன். அவற்றின் வேர்களால் கல் ஆலயங்கள் கவ்விநெரிக்கப்பட்டிருந்தன. இந்நாவல் அத்தகைய பசுமரங்களில் ஒன்று.

அலெக்ஸ் ஹேலியின்  ‘ரூட்ஸ்’ என்னும் தன்வரலாற்று நூலை நினைவுறுத்தும் பயணச் சித்திரத்துடன் தொடங்குகிறது சீ.முத்துசாமியின் இந்நாவல். தமிழகத்தில் தருமபுரியிலிருந்து தன் மகன் உண்ணாமுலையுடன் பஞ்சம்பிழைக்கக் கிளம்பும் மாரியின் கதை. புழுத்த கஞ்சியை ஒருவேளை உண்டு கப்பலின் கொட்டடியில் மலம்கழித்து மலத்துக்குள்ளேயே அமர்ந்துகொண்டு இருட்டுக்குள் மூச்சுக்காற்றில்லாமல் திணறி பினாங்கு நோக்கிச் செல்கிறார்கள். வழியில் காலரா. பிணங்களைத் தூக்கி கடலில் வீசுகிறார்கள். நோய்கண்டவர்களையும் நோய் உண்டா என ஐயத்துக்கு ஆளாகிறவர்களையும் தூக்கி கடலில் போடுகிறார்கள்.

வரண்டு உலர்ந்த முட்புழுதிக் காட்டிலிருந்து மலாயாவின் வானளாவிய மலைக்காட்டுக்கு. மலைக்காட்டின் பேருருவை சீ.முத்துசாமி ஒருவகையான பேய்த்தோற்றமாகவே வர்ணிக்கிறார். ஊரில் மழையின்றி வரண்ட பாலையிலிருந்து வருபவர்களுக்கு அங்கிருந்து சொல்வழியாக அறிகையில் அது விண்ணுலகின் ஒளிகொண்டதாக இருக்கிறது. ஆனால் நேரில் அது அரக்கருலகு.

“சட்டெனத் திரும்பி அண்ணாந்து காட்டைப் பார்த்தார். மனம் பகீரென்றது. அவர் இதுவரை கண்டிராத பிரமாண்ட காடு. வான் நோக்கி எழுந்து போகும் ராட்சச மரங்கள். அதில் படர்ந்து ஏறும் பசுங்கொடிகள். சடைபின்னி இறங்கும் ஆலமர விழுதுகள் போன்ற பெரும் விழுதுகள். மனிதர்கள் கால் வைத்து நடக்கவோ, அரூபக் காற்றும் நுழைந்து நடமாடவோ இடைவெளியின்றி அடர்ந்து நிறையும் பசுமைச் செடிகொடிகள். பறவைகளின் ஆரவாரக் கூச்சல். சூழ்ந்து ஒலிக்கும் ஏதேதோ பெயர் தெரியாத நூற்றுக்கணக்கான மிருகங்களின் நடுங்குற வைக்கும் பெருங் கூச்சலுமாய், காடு பேருரு கொண்டெழுந்து அவரைப் பயமுறுத்தியது”

என்ற வர்ணனையில் இந்நாவலைச் சுருக்கிக் கொள்ளலாம். பாலைநிலத்து மக்கள் பசுநிலத்தில் வதைபட்டுச் சாவதிலுள்ள ஊழின் அங்கதமே இந்நாவலைக் கட்டமைக்கிறது. அவர்களின் உள்ளார்ந்த அனலின் உறுமலாக பறை உடனிருக்கிறது. அவர்கள் காட்டை அழித்து தோட்டங்களை உருவாக்கும் வெள்ளையர்களுக்குக் கீழே, அவர்களின் அடிமைகளாகவும் அடிமைகளின் ஆண்டைகளாகவும் இருமுகம் கொண்ட கங்காணிகளின் சவுக்கடி பட்டு, பொந்துபோன்ற லாயங்களில் தங்கள் தீயூழின் அடுத்தபகுதியை நோக்கிச் செல்கிறார்கள்.

அம்மக்களின் போராட்டத்தின் கதை இந்நாவல். இதன் முதன்மையான சிறப்பு என்பது எந்த அரசியல் கோட்பாட்டுக்கு உட்பட்டும் அந்தவாழ்க்கையைச் சொல்ல சீ.முத்துசாமி முயலவில்லை என்பதுதான். ஆகவே வாழ்க்கை ஒருவகையான அப்பட்டத்தன்மையுடன் விரிகிறது. ஆசிரியர் தன்னியல்பற்ற கதைசொல்லியாக நம்முடன் வருகிறார். இந்த நேரடித்தன்மையால் இக்கதையை அடுக்குகளற்றதாக வாசித்துவிடும் இடர் உண்டு. இத்தகைய ஆக்கங்களை உண்மையாகவே ஒருவாழ்க்கை விவரிப்பை எப்படி சமூகம் சார்ந்த, ஆழுளம் சார்ந்த குறிப்புகளைக் கருத்தில்கொண்டு வாசிப்போமோ அப்படி வாசிக்கையில் அடுக்குகள் பெருகும்

ஓர் எடுத்துக்காட்டு, இதில் தோட்ட உரிமையாளரான ஜேம்ஸ் கோனெல்லியின் புரவி. அவர் கன்னங்கருமையாக பளபளக்கும் புரவியை வைத்திருக்கிறார். அந்தப்புரவி அம்மக்கள் அனைவருக்குமே பேரழகு கொண்டதாகத் தெரிகிறது. பிளேக்பியூட்டி என்னும் அக்குதிரையுடன் ஆண்டைக்கும் அடிமைக்குமான உறவு ஒரு கீற்றென வந்துசென்றாலும் முக்கியமான ஒரு குறியீடு.

இன்னொரு எடுத்துக்காட்டு, அந்தத் தோட்டத்தில் எழும் முதல் எதிர்ப்புக்குரல். அது காட்டில் ஊறிவரும் கலங்கல் குடிநீரை தெளியவைத்து உண்ணும்நிலையில் இருக்கும் அம்மக்கள் துரைக்குக் குடிப்பதற்காகக் கொண்டுசெல்லப்படும் நீர்தொட்டி வண்டியை தடுத்து நிறுத்தி கடத்திக்கொண்டுசெல்வதில் தொடங்குகிறது. மிகமிக அடிப்படையான ஒன்றுக்கான போராட்டம். ஆகவேதான் அதற்கு பெண்களே முன்னின்று இறங்குகிறார்கள். வீரம்மா போன்ற ஒரு பெண்ணில் எழும் அறச்சீற்றம் அது எளிய குடிநீர் என்பதனால்தான். காந்தியின் உப்புசத்யாக்கிரகத்துடன் இதை இணைத்து நோக்கும்போது ஓரு வரலாற்றுநோக்கு உருவாகும். உப்புக்கும் நீருக்குமே முதல் எதிர்க்குரல் எழமுடியும். அந்த இடத்தில் இயல்பாக காந்தி பற்றிய ஒரு குறிப்பு எழுந்து வந்து அதை வரலாற்றில் பொருத்துகிறது. ‘அந்த வக்கீலை தென்னாப்ரிக்காவில் அவர் போராடத்தொடங்கியபோதே கிள்ளி எறிந்திருக்கவேண்டும்’ என்று துரை சொல்கிறார்.

மிக எளிமையான சித்திரங்கள் வழியாகவும் இந்நாவல் வாழ்க்கை நோக்கிய நுட்பமான திறப்புகளைக் கொண்டுள்ளது. இரு உதாரணங்கள்.   ‘தமிழர் கட்சி தலைவர் இங்கிலீஸ் மணியம்’ என்னும் சொல்லாட்சி இயல்பாக மின்னிச்செல்கிறது. அதற்குக் காரணமானது ஒரு சினிமாக்காட்சி. அதில் சிவாஜி ’போடா, யூ கண்ட்ரி ஃபூல்’ என்று சொல்லும் வசனத்தால் ஆழமாக பாதிக்கப்படுகிறார். அதை அவர் அதேபோலச் சிரித்தபடி பிறரிடம் சொல்ல்ல ஆரம்பிக்கிறார். அவருக்கு இங்கிலீஷ் என்னும் அடைமொழி அமைகிறது.

இந்த வேடிக்கைக் கதைக்குப்பின்னாலுள்ளது ஆங்கிலம் அவர்களை அடக்கி ஆளும் மொழி என்பதுதான். அவர்களை இழித்துரைக்கும் சொல்லாட்சி அது. எப்போதேனும் துரையோ கங்காணியோ அதைச் சொல்லியிருக்கவும்கூடும். அது எப்படி அவர்களைக் கவர்கிறது? அது ‘அதிகாரம்’ ஆக ’அறிவு’ ஆக ‘ஸ்டைல்’ ஆக எப்படி அவர்களின் உள்ளத்துக்குள் உருமாறுகிறது? புங்கிட் செம்பிலான் என்னும் அந்தத் தோட்டம் ஒரு நாட்டின், சமூகத்தின் அடையாளமாக விரிகிறது.

பிறிதொரு கதை வேட்டைக்காரர் தன் கண்முன் புலி ஒன்று வேட்டையாடி கொன்று தூக்கிச் செல்வதைக் காணும் கணம். வேட்டைக்காரர் ஓரு கணத்தில் வேட்டையாடப்படுபவராகத் தன்னை உணர்கிறார். அதன்பின் அவருடைய வாழ்கையே பிறிதொன்றாக ஆகிவிடுகிறது. இத்தகைய நுண்குறிப்புகளினூடாக இந்த நேரடியான வாழ்க்கைச் சித்தரிப்பை கீழ்கீழென பல அடுக்குகள் கொண்டதாக நாம் வாசிக்கமுடியும் என்பதனால்தான் இது ஓர் இலக்கியப்படைப்பாக ஆகிறது

1520498252019-Credit_-National-Archives-of-Malaysia

[ 4 ]

மலாயாவின் வரலாறு ஆங்காங்கே தொடுத்துக்கொள்ளப்பட புங்கிட் செம்பிலான் தோட்டத்தின் போராட்டத்தின் கதையைச் சொல்கிறது மலைக்காடு. வரலாறுநிகழும் களங்கள் எங்கோ உள்ளன. புங்கிட் செம்பிலான் மக்கள் அனைத்திலிருந்தும் துண்டிக்கப்பட்டவர்கள். வானளாவிய மரங்களாலான பச்சைச்சிறைச்சாலை ஒன்றுக்குள் அகப்பட்டுக் கொண்டவர்கள். ஆனால் வரலாற்றின் அதிர்வுகள் அந்த சிறு சமூகத்தை உருமாற்றிக்கொண்டே இருக்கின்றன.

தன்னிச்சையான கிளர்ச்சிகளாக எதிர்ப்புகள் நிகழ்ந்து அவை கடுமையாக ஒடுக்கப்படும் தோட்டச்சூழலில் உலகப்போரின்போது மலாயாவை ஆக்ரமிக்கும் ஜப்பானுக்கு எதிராக போராடியவர்களுடன் சேர்ந்து பணியாற்றியவர்கள் போர் முடிந்து வந்துசேர்கிறார்கள். அவர்களின் ராணுவப்பயிற்சியும் உலக அறிவும் போராட்டத்தின் வடிவங்களை மாற்றுகின்றன. ஒவ்வொன்றும் மெல்லமெல்ல உருமாறிக்கொண்டே இருப்பதை சொல்லிச் செல்கிறது இந்நாவல்.

அந்த நேரடியான நடப்புண்மையுடன் அதன் தர்க்கம் மீறாதபடி ஒரு கனவை நெய்துசெல்கிறது. நாவலின் தொடக்கம் முதலே வந்துகொண்டிருக்கிறது ராஜநாகம். முதன்முதலாக மக்களிடம் எதிர்ப்பைக் கண்ட கங்காணி அதிலெழுந்த ராஜநாகத்தைத்தான் உண்மையில் காண்கிறார்.  “கித்தாக்காட்டு ஒத்தையடிப் பாதையில் ஒத்தையாய்ப் போக, சரசரயொலியுடன் புதருக்குள்ளிருந்து வெளிப்பட்டு எதிரில் ஆளுயரப் படமெடுத்து ஆடும் நாகத்தை முதல்முறை எதிர்கொண்டு மிரண்டு நிற்பவனின் கண்களில் தெறிக்கும் அதே அச்சத்தை அவரது கண்களிலும் கண்டார்” என்று நாவல் விவரிக்கிறது

பின்னர் கிருஷ்ணனை அழைத்துச்செல்லும் முனி அவனுக்கு அந்நாகத்தை காட்டிக்கொடுக்கிறது.  “ஆறடி உயரத்தில் வாலைத் தரையில் ஊன்றி நின்று படமெடுத்துச் சீற்றத்துடன் ஆடியது ராஜநாகம். இலை உதிர்த்து அம்மணமாய் நின்ற கித்தாமரங்களினூடாய் இறங்கிய சூரிய ஒளியில் மினுங்கும் உடலின் கருமை. நிலைகுத்திய பார்வையில் வைரக்கல் போன்ற அதன் கண்கள். நாவின் அச்சுறுத்தும் நடனம்” அதை ஆசிரியர் விளக்கவில்லை. அவர்களுடன் இந்தியாவிலிருந்து வந்து அந்த ரப்பர்காட்டில் குடிகொண்ட குடித்தெய்வம். அவர்களின் மூதாதையரின் வடிவம் அது

அவர்களைப்போலவே சீற்றம் கொண்டது. அவர்கள் நோக்கவியலாத மூன்றுகாலத்தையும் நோக்குவது. அவர்களைப்போலவே கையறுநிலையில் நின்றிருப்பது “அந்த நம்ம பூமிக்கு அடியில ஒரு அரக்கன் மொளச்சு… கொஞ்ச காலமா அத தின்ன நல்ல நேரம் பாத்து நாக்க சொழட்டி சப்புகொட்டி காத்திருக்காண்டா… அது அசுரனோட பசிடா … தின்ன தின்ன அடங்காம வளர்ற பசிடா அது கிருஷ்ணா… பேராச பசிடா… இங்க எல்லாமே தன்னோடங்கற ஆணவப் பசிடா…” என அது கதறுகிறது. தன் கையிலிருக்கும் வாளால் அந்த அரக்கனை வெல்லமுடியாது என்று கூறுகிறது.

போராட்டத்தின் சித்திரத்தினூடாகச் செல்கிறது நாவல். மீண்டும் மீண்டும் தோற்றும் மீண்டும் மீண்டும் நம்பிக்கை கொண்டும் செல்லும் பயணம். துரைக்கு பெண்பிடித்துக் கொண்டுபோக ஆணையிடப்பட்டு அறியாப்பெண்ணின் காலில் விழுந்து தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சி அவளால் புறக்கணிக்கப்பட்டு, வேறுவழியில்லை தன் மனைவியையே கொண்டுசெல்லவேண்டியதுதான் என துவளும் கங்காணியிலிருந்து ஆயுதப்பயிற்சி பெற்ற போராளிகள் வரை, சீனர்கள் இந்தோனேசியர்கள் என வெவ்வேறு முகங்களினூடாகச் செல்லும் கதையின் பரப்பில் வாசகன் சென்றடையும் முடிவுகளுக்கு பல வாயில்கள் உள்ளன

நான் முனி சொல்லும் இந்தப் படிமத்துக்கு மீண்டு இந்நாவலை முடித்தேன். “எதிரில் வானம் முட்ட எழுந்து நின்றிருந்தது காடு. அவன் தன் வாழ்நாளில் கண்டிராத காடு. வண்ணக்காடு. வானவில்லின் ஏழு வண்ணக்காடு. மரங்களும் செடிகளும் கொடிகளும் வண்ணங்கள் உருமாறியபடி ஒளிர்ந்தன. அவற்றின் தலைகளைத் தொட்டுத் தடவிக் கூவிச் சிறகடித்து வட்டமிட்டன ஏழு வண்ணப் பறவைகள்” அந்தக் காடு அவர்கள் தலைமுறைகளுக்கு முன்பு தேடிவந்தது. அவர்களின் கனவில் அழியாது வாழ்வது.

[கிழக்கு வெளியீடாக வெளிவரவிருக்கும் சீ முத்துசாமி அவர்களின் மலைக்காடு நாவலுக்கான முன்னுரை ]

அ.ரெங்கசாமி தமிழ் விக்கி

சீ.முத்துசாமி தமிழ் விக்கி 

முந்தைய கட்டுரைஇருந்தவர்கள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅஞ்சலி வடகரை வேலன்