கடிதங்கள்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் கடவுள் மற்றும் அங்காடித்தெரு இரு அற்புத படைப்புகளை தந்ததற்கு என் வாழ்த்துகள்.

ஈசன், ஒரு குத்துப்பாட்டு எனும் தலைப்பில் தங்கள் தளத்தில் ஒரு கட்டுரை கண்டேன். படம் பார்க்கையில் என்னை வெறுப்பேற்றிய காட்சி, அந்த பெண் பாடியதும் அழும் அந்த சில நொடிகள்தான். தங்களுக்கு பிடித்துள்ளதாக கூறியுள்ளீர்கள். விபசாரம் செய்வது கேவலம் என்பது தெரிந்தும் இத்தகைய புல்லரிப்பு காட்சிகளுக்கு ஆதரவு தரலாமா? ரஜினி கூட ஒரு மேடையில்“விபச்சாரிகள் வயிற்று பிழைப்பிற்காக செய்கிறார்கள்” என்று பேசியது மட்டமாக இருந்தது. ஒழுங்காய் வாழ உலகில் தொழில் இல்லையா. ஒரு குறிப்பிட்டஎண்ணிக்கையில் உள்ள பெண்கள் வேண்டுமானால் தெரியாமல் அந்த வலையில்விழுந்து சசிகுமார் படத்தில் வருவது போல கண்ணீர் விடலாம். ஆனால் வயிற்றுபிழைப்பிற்காக விட, உடல் அரிப்பிற்கு அலையும் மேல்தட்டு பெண்கள்,உழைக்காமல் சுகம் கண்டு அதையே பணமாக்கும் பெண்கள்தான் அதிகம் என்பதைமறுக்கிறீர்களா??

உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. இப்படியும் சிலர் உள்ளனர் எனநீங்கள் சொல்லலாம். ஆனால், நான் கடவுள், அங்காடித்தெரு போன்ற சமூகபொறுப்புள்ள படங்களை தந்த தங்களிடம் இருந்து இந்த மாதிரி காட்சிகளுக்குஆதரவு வருவது வருத்தமாக உள்ளது. நான் வெகு சில புத்தகங்களையும், மனிதர்களையும் மட்டுமே படித்தவன்/கண்டவன். தாங்கள் நன்றாக உணர்ந்தே அக்கட்டுரையை எழுதி இருப்பீர்கள் என்பதை அறிவேன்.

இருந்தும்…மனது உறுத்துகிறது..!!!!

தவறு இருப்பின் மன்னிக்க.

உங்கள் ரசிகன்,
சிவகுமார்.

அன்புள்ள சிவகுமார்

அது உங்கள் பார்வை.

நான் அப்படி ஒட்டுமொத்தமாக மனிதர்களை பற்றி ஓர் இறுதி முடிவை வைத்துக்கொள்ள விரும்புபவன் அல்ல. வாழ்க்கை மனிதர்களை ஒவ்வொரு விதமாக கொண்டுசெல்கிறது

அந்தப்பாடலில் அந்தக்காட்சி நன்றாக இருந்தது. அதன் மேல் என் முடிவை நான் போடவும் மாட்டேன்

ஜெ

அன்புடன் ஜெமோ,

வணக்கம்,எப்படி இருக்கீங்க? திரு.நாஞ்சில்நாடன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அளித்ததன் மூலமாக தன்னை கவுரவப்படுதிக் கொண்டது அகாடமி. என்னைப் பொறுத்தவரை இது ஒரு வகையான கண் துடைப்பு சமாச்சாரம். மீண்டும் அடுத்த வருடம் வேறு எதேனும் ஒரு தகுதியற்ற பிரகிருதியின் புத்தகத்துக்கு,(அரசியல் தலையீடுகளால்)
வழங்கப்படும், மீண்டும் அதற்கு ஒரு எதிர்ப்பு அலை தீவிர இலக்கியவாதிகளிடம் இருந்து கிளம்பும். சரி,சரி….உங்களை சமாதானிக்க
ஆ.மாதவனுக்கு வழங்குகிறோம் என்பார்கள் அகாடமியினர்.
முடிந்தால் திரு.நாஞ்சில்நாடன் போன்றவர்கள் ”நீ யார் எனக்கு விருந்தளிக்க? கோமாளிக்கூட்டமே!! “ என்று இந்த விருதை நிராகரித்தால் கூட நலமே. சங்கப்புலவர்களும் பரிசுகளை நிராகரித்திருக்கலாம், எனக்கு தெரியவில்லை. ஆனால் ழீன் பால் சார்த்தர் நோபல் பரிசை நிராகரித்ததை வாசித்ததுண்டு.

நிற்க,விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் திரு.நாஞ்சில்நாடன் அவர்களுக்கு ஏற்பாடு செய்துள்ள பாராட்டுவிழா அவதானிக்கதக்கது.
திரு.ஆ.மாதவன் அவர்களுக்கு பாராட்டுவிழா நடத்தியதும் அவ்வாறானதே.உங்கள் முயற்சிக்கும்,உழைப்பிற்கும் வாழ்த்துக்கள்.
எற்கனவே,ஒரு மெயில் அனுப்பினேன்,வாசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

கவிதைப்பணி சற்றே தொய்வடைந்துள்ளது.கண்டிப்பாக வரும் கோடையில் இரண்டாம் கவிதை தொகுதியை வெளிக்கொணர்ந்துவிடுவேன்.உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். குவைத் கிளம்புகையில் உங்களை தொடர்புகொள்ள முயன்றேன். அப்போது,நீங்கள் ஊரில் இல்லையென எண்ணுகிறேன்.
உங்கள் குடும்பத்தினருக்கும்,உங்களுக்கும் எனதுகுடும்பத்தினரின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நன்றி,வணக்கம்
பாம்பாட்டிச்சித்தன்(குவைத்திலிருந்து)

அன்புள்ள பாம்பாட்டி சித்தன்

நன்றி

தொடர்ந்து மூத்த எழுத்தாளர்களைப்பற்றி சில கருத்தரங்குகள் மற்றும் சந்திப்புகளை நடத்தலாமென எண்ணிக்கொண்டிருக்கிறோம். பார்க்கலாம்

ஜெ

*********

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

என்னுடைய http://www.agnikuyil.blogspot.com என்ற தளத்தில் உங்களைப்பற்றிய ஒரு பதிவு எழுதியுள்ளேன். அதையும் மற்ற பதிவுகளையும் நேரம் இருந்தால் படிக்கவும். உங்கள் கருத்துக்கள் கிடைத்தால் சந்தோஷப்படுவேன்

அன்புடன்

ராமகிருஷ்ணன்

அன்புள்ள ராமகிருஷ்ணன்,

வாசித்தேன். உங்கள் நடை பயில்முறைத்தன்மை கொண்டதாக இருந்தாலும் கருத்துக்களை தெளிவாகவே முன்வைத்திருக்கிறீர்கள். நன்றி

நாவல்களைப்பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு என் விளக்கம் ஒன்றே. நாவல் என்ற கலைவடிவம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவது. ஒட்டுமொத்தமாக அதில் இரு காலகட்டங்கள் அல்லது இரு மனநிலைகள் உண்டு எனலாம். கதையோட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து ‘ஆற்றோட்டமாக’ செல்லும் நாவல்கள் முதல் காலகட்டம். அவை வாசகனை தாங்களே இழுத்துச்செல்லக்கூடியவை. நாவலுக்குள் இருந்தாலே போதுமானது. கதை, கதைமாந்தர், தருணங்கள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவமளிப்பவை.

வாசகனுக்கு வாசிப்பை ஒரு சவாலாக ஆக்கி, அவனுடைய கற்பனை மற்றும் சிந்தனையின் பங்களிப்பை பெற்றுக்கொண்டு, மேலே செல்லும் நாவல்கள் இரண்டாம் வகை. அவற்றில் கதை மற்றும் படிமங்களின் பின்னலே முதன்மையானது. இரண்டாம்வகை நாவல்களில் உங்களுக்குப் பழக்கமில்லை. அதைவிட முதல்வகை நாவல்களே சிறந்தவை என்ற மனநிலையில் நின்றுவிட்டிருக்கிறீர்கள். அப்படி பலரை நான் தொடர்ந்து கண்டுவருகிறேன். அனெகமாக கொஞ்சம் வயதானவர்கள். விஷ்ணுபுரமும் பின் தொடரும் நிழலின் குரலும் கொற்றவையும் இரண்டாம் வகையைச் சேர்ந்தவை. வரலாறாகவும் தத்துவமாகவும் விரியும் தன்மை கொண்டவை

பரவாயில்லை. உங்கள் வாசிப்பு உங்களுடைய இயல்பின் அடையாளமும்கூட , இல்லையா?

ஜெ

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

நிறைய வேலை நெருக்கடிக்கு இடையிலும் பதில் அனுப்பியதற்கு நன்றி. உங்கள் நாவல்களைப்பற்றி கொஞ்சம் எதிர்மறையாக எழுதியபோதும் பொறுமையுடன் பதிலளித்த உங்கள் பண்பு என்னை கவர்ந்தது. ஒரு சிறு விளக்கம். நான் முதல் வகை நாவல்களே சிறந்தவை என்று எண்ணவில்லை. அவைகளே எனக்கு பிடிக்கிறது என்றுதான் சொன்னேன். ஆனால் எங்கும் நின்று விடும் உத்தேசமில்லை எனக்கு. முன்னகரவே விரும்புகிறேன். ஆகவே இந்த நாவல்களை மீண்டும் மீண்டும் மறுவாசிப்பு செய்வேன். ஒருவேளை மீண்டும் படிக்கும்போது புதிய அழகுகள் புலனாக கூடும். 46 வயது நின்று விடும் வயதல்ல என்றே நினைக்கிறேன். .

நான் இப்போது U .P -யில் இருக்கிறேன். கொற்றவை வாங்கி அனுப்ப சொல்லியிருக்கிறேன். படித்து விட்டு எழுதுவேன். இதே வரிசையில் நான் படிக்க ஏதேனும் நல்ல நாவல்கள் ஆங்கிலத்திலும் , தமிழிலும் சொல்லுங்களேன் . எனக்கு ஆற்றோட்டமான கதைகள்தான் பிடிக்கும் என்றில்லை. எனக்கு ரொம்பவும் பிடித்த புத்தகங்களான ஜே. ஜே. சில குறிப்புகள் , THE OUTSIDER போன்றவை அப்படியில்லையே?

எனக்கு இரண்டு சந்தேகம். 1 . இரண்டாம் வகை நாவல்கள் தான் சிறந்தவை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 2 . என் நடையை பயில்முறைதன்மை கொண்டது என்று சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு புரியவில்லை. கொஞ்சம் விளக்கமுடியுமா? என் நடையை மேம்படுத்த உண்மையாகவே விரும்புகிறேன். உங்கள் ஆலோசனைகள் எனக்கு உதவியாகவிருக்கும். உங்கள் வேலைபளுவைப்பற்றி நான் அறிவேன். மீண்டும் நான் தொந்தரவு செய்ய மாட்டேன். இந்த கடிதத்திற்கு மட்டும் பதில் அளிக்கவும்.

அன்புடன்

ராமகிருஷ்ணன்

அன்புள்ள ராமகிருஷ்ணன்

நான் அப்படி நினைக்கவில்லை. நான் போற்றும் தஸ்தயேவ்ஸ்கியும் தல்ஸ்தோயும் முதல்வகை நாவல்களை எழுதியவர்களே

ஆனால் இன்றைய நாவல் அவர்களின் வளர்ச்சி. அவர்களில் இருந்து முன்னால் செல்வது. இது வாசகனின் அறிவார்ந்த பங்களிப்பை கோருகிறது. அதை அளிக்காதபோது பழையவாசகர்களில் இருந்து விலகிச்செல்கிறது. நான் சொன்னது
அதையே.

ஜேஜே சிலகுறிப்புகள் உங்களுக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சி. பிற
நாவல்களில் நீங்கள் கண்டுகொண்ட சிறப்புகள் அதில் இல்லை என்பதை
கவனித்திருப்பீகள். வந்தபோது அது புரியாமல் , அன்னியமாக இருந்தது. பிறகு உள்வாங்கப்பட்டது

உங்கள் நடை சீராக கருத்துக்களை வைப்பதாக இல்லை. சிந்தித்தபின்னர் எழுதும் தன்மையுடன், அதைச் சொன்னேன். பொதுவாக பெரிய நாவல்களை வாசிப்பவர்களின் நடை
எளிதில் பண்பட்டுவிடும்

ஜெ

வணக்கம், உங்களுடைய இணைய தளத்தை பல முறை பார்த்திருக்கிறேன். ஆனால் முதல் முறையாக உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். நீங்கள் செல்வது போல் இன்று இணையம் அபார வளர்ச்சி அடைந்தாலும், சில நேரங்களில் நாமக்கு முழுமையாக பயனளிப்பதில்லை. இணையத்தில் கிடைக்காத தகவல்களே இல்லை என்று ஒரு சிலர் கூறுவதுண்டு. எடுத்துக்காட்டாக, சென்னை அண்ணா சாலையில் உள்ள ரிச்சி ஸ்ரீட் கேள்விபட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அங்கு சென்றால் கிடைக்காத எலக்ட்ரானிக் பொருட்களே இல்லை என்பார்கள். ஆனால் சிலருக்கு சில பொருட்களே கிடைக்காது. இப்படித்தான், நீங்கள் பார்த்த வீடியோ காட்சியும்.

செல்வம்

அன்புள்ள செல்வம்

இணையம் ஒரு பொது ஊடகம். ஆகவே அதில் பொதுமக்களின் பொதுவான விருப்பங்கள் இடம்பெறும். தனிப்பட்ட ரசனைகள் தேவைகள் அல்ல

ஜெ

முந்தைய கட்டுரைநாஞ்சில்நாடன் கூட்டம் மக்கள் தொலைக்காட்சியில்…
அடுத்த கட்டுரைபாழி, ஒருகடிதம்