பாலாஜி பிருதிவிராஜ் -கடிதங்கள்

Froggi-sama
Froggi-sama

ஓநாயின் தனிமை

தாமஸ் மன்னின் புடன்புரூக்ஸ்

விண்விளி- கிறிஸ்துவின் இறுதிச்சபலம்

டாக்டர் ஷிவாகோ – பாலாஜி பிருத்விராஜ்

அன்புள்ள ஜெ

 

தமிழில் மிக அரிதாகவே உலக இலக்கியம் பற்றி காத்திரமாகக் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. பொதுவாக இங்கே எழுதப்படும் கட்டுரைகள் பெயர் உதிர்ப்புகள். அதைப்போல வருமா என்றவகையான மேட்டிமைப்பார்வைகள். கதைச்சுருக்கங்களைச் சிலர் எழுதுவதுண்டு. நம்பி கிருஷ்ணன் சொல்வனம் இதழில் எழுதிவரும் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. மற்றபடி பெரிதாக உலக இலக்கிய அறிமுகம் ஏதுமில்லை என்றுதான் சொல்வேன். முன்பு அசோகமித்திரன் அமெரிக்க, ஐரோப்பிய எழுத்தாளர்களை விரிவாக அறிமுகம் செய்து ஏராளமாக எழுதியிருக்கிறார்

 

இன்று அத்தகைய குறையை தீர்க்கும் ஒரு கட்டுரைத்தொடர் இந்தத்தளத்தில் திரு பாலாஜி பிருதிவிராஜ் அவர்கள் எழுதுவது. நாவலின் மொத்தவடிவையும் சுருக்கமாகச் சொல்லி அதன் முக்கியத்துவம், அதன் சாராம்சம் ஆகியவற்றையும் விளக்கி நாவலின் மீதான தன் விமர்சனத்தையும் முன்வைக்கிறார். இத்தகைய ஆழமான கட்டுரைகள் இங்கே வருவது மிகவும் அரிது. நிறையப் படிக்கிறவர்களால் விமர்சனரீதியாக ஏதும் சொல்லமுடியவில்லை. அவர்களுக்கு புத்தகத்தின் சுருக்கம் மட்டுமே சொல்லமுடிகிறது. பாலாஜியின் கருத்துக்களில் உங்கள் பார்வையின் தாக்கம் மிகுதியாக உள்ளது. ஆனாலும் அவருக்கே உரிய ஒரு பார்வையையும் விமர்சனத்தையும் அந்த நூல்கள்மேல் முன்வைக்கிறார். இது பெரிய விஷயம். அவருக்கு என் பாராட்டுக்கள்

 

எஸ்.சத்யா

 

 

அன்புள்ள ஜெ

 

பாலாஜி பிருதுவிராஜின் கட்டுரைத்தொடர் மிக முக்கியமான ஒன்று. ஒவ்வொரு கட்டுரையும் மிகவிரிவான வாசிப்புடன் ஆழமாக எழுதப்பட்டுள்ளது. தமிழில் இத்தகைய கட்டுரைகள் அபூர்வமாகவே வருகின்றன. அவருக்கு வாழ்த்துக்கள்

 

ஸ்டெப்பன் வுல்ஃப் எழுதப்பட்டபோது இருத்தலியல் உருவாகவில்லை. ஹைடெக்கர் போன்றவர்களால் இருத்தியலின் ஆரம்பகாலக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. ஆனால் ஹெஸியின் நாவல் அந்தச் சிந்தனைகளுக்கு ஆதாரமாக இருந்த அத்தனை மனநிலைகளையும் துல்லியமாகச் சொல்கிறது. பின்னர் அந்நாவலை வாசிக்கும்போது இருத்தலியல் சிந்தனைகளை எழுதிய நாவல்களில் ஒன்று என்று நினைப்போம். நானும் அதையே நினைத்தேன். ஆனால் அந்நாவல் வெளியான காலகட்டத்தை வைத்துப்பார்த்துதான் அந்த சிந்தனைகளுக்கே முன்னோடியாக அமைந்தது அந்நாவல்தான் என்று தெரிந்துகொண்டேன்

 

இரா. மாணிக்கவாசகம்

 

அன்புள்ள ஜெ

 

கிறிஸ்துவின் இறுதிச்சபலம் பற்றி நீங்கள் அவ்வப்போது எழுதிவந்திருக்கிறீர்கள். அந்நாவலின் சாராம்சத்தையும் அதன் உணர்ச்சிகளையும் மிக அழகாகத் தொகுத்தளித்திருக்கிறார் பாலாஜி பிரிதிவிராஜ். அந்நாவல் சுருக்கத்துடன் நீங்கள் அளித்துள்ள தி டெபுடி என்ற நாடகத்தின் சுருக்கத்தையும், மாஸ்டர் கிறிஸ்டியன் நாவலின் சுருக்கத்தையும் சேர்த்து வாசிக்கவேண்டும். மொத்தமான பார்வை ஒன்று கிடைக்கும். பாலாஜி பிருதிவிராஜின் கட்டுரைகள் ஆழமானவை. மிகச்சிறந்த வாசிப்பு அனுபவமாக ஆகின்றன

 

எஸ்.ராஜேந்திரன்

வண்ணக்கடல் பாலாஜி பிருத்விராஜ்

கிறிஸ்துவின் இறுதிச் சபலம் -கடிதம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-39
அடுத்த கட்டுரையானைடாக்டரின் நிலம்