அன்புள்ள ஜெ,
இன்றைய தினமணியில் கோமல் தியேட்டர்ஸ் விளம்பரம் ஒன்று பார்த்தேன். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், சூடாமணி, தி .ஜானகிராமன், புதுமைப்பித்தன் கதைகள் நாடகமாக நடத்துகிறார்கள்.
இது போன்ற முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றே தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன?
தொலைக்காட்சி வந்த போது எழுத்தாளர்களின் கதைகளை நாடகமாக்குவது நிகழ்ந்தது. அகிலன் அவர்களின் நாவல் நெஞ்சினலைகள் என்ற பெயரில் தொடராக வந்தது. நன்றாகவே எடுத்திருந்தார்கள்.
பிறகு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று ஒரு இயக்குனர் பெயர் வருவதே வழக்கமாகி விட்டது.
K tv யில் கூட நூல் அறிமுகம் என்று வாரந்தோறும் ஒரு எழுத்தாளர் பேட்டியும் நூல்கள் விமர்சனமும் அறிமுகமும் வந்தது..பிறகு சினிமா தவிர ஏதுமில்லை என்றாகிவிட்டது.
பகவதி
அன்புள்ள பகவதி,
பொதுவாக இலக்கியம் பிற அறிவுத்துறைகளுடனும் பிறகலைகளுடனும் இணைந்து செயல்படும்போதே முழுமை அடைகிறது. பிற அறிவுத்துறைகளான வரலாறு, தத்துவம், சமூகவியல்,உளவியல், அரசியல்கோட்பாடு போன்றவை இலக்கியத்தை ஆராயும்போதுதான் இலக்கியவிமர்சனம் வளர்ச்சி அடைகிறது. பிற கலைகளான இசை, நாடகம், ஓவியம்,மேடைப்பேச்சு போன்றவை இலக்கியத்தைக் கையாள்கையில் இலக்கியத்தின் வெவ்வேறு முகங்கள் வெளிப்படுகின்றன. அது மேலும் மக்களை நோக்கிச் செல்கிறது. ஓர் இயக்கமாக ஆகிறது.
தமிழில் அவ்வாறு பிற அறிவுத்துறைகளோ பிறகலைகளோ இலக்கியத்தைச் சந்திப்பது மிக அரிது. சந்தித்தாலும்கூட பெரும்பாலும் அது மரபிலக்கியம் சார்ந்தேயாகும். உதாரணமாக, மேடைப்பேச்சு என்பது இலக்கியத்துடன் இணைந்த கலை. சொல்லப்போனால் இலக்கியத்தின் ஒரு பகுதியாகச் செயல்படவேண்டியது அது. உலகமெங்கும் அப்படித்தான். எண்ணிப்பாருங்கள், தமிழில் இன்று புகழ்பெற்ற மேடைப்பேச்சாளர்களில் இலக்கியத்துடன் அணுக்கமான உறவுள்ளவர்கள் எத்தனைபேர்? மிகச்சிலரே உங்கள் எண்ணத்துக்கு வருவார்கள். நவீன இலக்கியத்தையும் அறிந்தவர்கள் அதனினும் சிலர்.
மேடைப்பேச்சு நேரடியாகவே கேட்பவரை நோக்கிச் செல்வது. அங்கே ஒருவர் கண்முன் நிற்கிறார் என்பதே பாதிவேலையைச் செய்துவிடுகிறது. ஒரு சினிமா இரண்டுமணிநேரம் சுவாரசியமாகச் செல்லவேண்டுமென்றால் அது எத்தனை விரைவாக, எத்தனை செறிவாக இருக்கவேண்டுமென எதிர்பார்க்கிறோம். ஒரு மேடைப்பேச்சு சற்றே ஆர்வமூட்டினாலும் இரண்டுமணிநேரம் அமர்ந்து கேட்கிறோம். இது மானுட இயல்பு. இந்த அம்சமே மக்களிடம் மேடைப்பேச்சு பெரும்புகழ்பெறக் காரணம். அத்துடன் மக்களில் கணிசமானவர்களுக்கு மூளையின் அமைப்பாலேயே செவிப்புலன்ரசனை மிகுதி. வாசிப்பதைவிட கேட்பது அவர்களுக்கு எளிது. பிறசூழல்களைவிட தமிழகத்தில் செவிநுண்ணுணர்வு கொண்டவர்கள் மிகுதி என நினைக்கிறேன்
ஆகவே மேடைப்பேச்சு தமிழகத்தின் முதன்மைக்கலையாக ஆகியது. ஆன்மிகம், மரபிலக்கியம், அரசியல் சார்ந்து பெரும்பேச்சாளர்கள் இங்கே இருந்தனர். இன்றும் பலர் பெரும்புகழுடன் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் மிகச்சிலரே நவீன இலக்கியத்துடனோ இன்றைய சிந்தனைகளுடனோ அறிமுகம் கொண்டவர்கள். இன்று எழுதும் ஓர் எழுத்தாளனை அவர்கள் மேடையில் அறிமுகம் செய்வதோ, ஒரு புதிய சிந்தனைப்போக்கை முன்வைப்பதோ மிகமிகக்குறைவாகவே நிகழ்கிறது. இன்று தமிழகத்தின் மையப்போக்கு மேடைப்பேச்சு என்பது வெறுமே நகைச்சுவை உதிர்ப்பாக ஆகிவிட்டிருக்கிறது.மற்றமொழிகளில் இந்நிலை இல்லை. மலையாளத்திலும் கன்னடத்திலும் நவீன இலக்கியம், நவீன சிந்தனை சார்ந்து பேசும் பெரும்பேச்சாளர்கள் உள்ளனர். கல்பற்றா நாராயணன் போன்றவர்கள் அவர்களே மாபெரும் பேச்சாளர்கள்.
மேடைப்பேச்சுக்கு நிகரானது மேடைக்கதைநிகழ்வு. கதாப்பிரசங்கம் என இவ்வடிவம் கேரளத்தில் மையப்போக்கான கலையாக இருந்தது. பேரிலக்கியங்களை உணர்ச்சிகரமான கதைவடிவில் மக்களிடையே கொண்டுசேர்க்கிறது அது. இளமையிலேயே நல்ல கதைகளுக்கு வாசகன் அறிமுகமாகிறான். அதிலிருந்தே அவன் ரசனை உருவாகிவளர்கிறது. இன்று தமிழில் பவா செல்லத்துரை மட்டுமே கதைகளைச் சொல்லும் நிகழ்வுகளை நடத்திவருகிறார். அதற்கிருக்கும் வரவேற்பு வியப்பூட்டுவது. சற்று குரல்நடிப்பும், தனிநபர் நடிப்பும் கொண்டவர்கள் மேடையில் நல்ல கதைகளை முன்வைப்பார்கள் என்றால் அதைப்போல கதைகளை கொண்டுசெல்லும் வழி பிறிதில்லை. அதற்கு இலக்கியவடிவில் இருந்து மேடைக்காக கதையை திரும்ப எழுதிக்கொள்ளவேண்டும். விரிவாக்கியும் சுருக்கியும். அந்தவடிவை நன்கு பயின்று முன்வைக்கவேண்டும்.
இத்தகைய விடுபடல் நாடகத்திலும் உள்ளது. நான் வெளிநாடுகளில் பார்த்த நாடகங்கள் அங்குள்ள இலக்கிய ஆசிரியர்களால் எழுதப்பட்டவை. அல்லது புகழ்பெற்ற கதைகளின் நாடக வடிவங்கள். நாடக இயக்குநரே தனக்கான நாடகப்பிரதியை தோன்றியவாறு எழுதிக்கொள்வது கிடையாது. இலக்கியம் வேறு நாடகம் வேறு என்ற அறிதல் கொண்ட ஒருவர், நாடகம் என்னும் ஊடகத்தை அறிந்த ஒருவர், இலக்கிய ஆக்கத்தை நாடகமாக உருமாற்றம் செய்ய முடியும். நாடகம் தனக்கான உருவகங்களையும் படிமங்களையும் பயன்படுத்த முடியும்.
உதாரணமாக, என்னுடைய நூறுநாற்காலிகள் என்னும் நாடகம் மலையாளத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட குழுக்களால் ஐநூறுமுறைக்கு மேலாக அரங்கேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாடகப்பிரதி. ஒரு நாடகத்தில் ‘நாற்காலி’ ஒரு கதாபாத்திரம். அது ஒரு மனிதரால் சுமக்கப்பட்டு எப்போதும் கதாநாயகனின் அருகே மேடையில் இருந்துகொண்டே இருந்தது. அதன் நகர்வுகளின் வழியாக நாடக இயக்குநர் ஒரு கதையை முன்வைத்தார். கதாநாயகனின் மனைவி அமர்வதற்கு அது இடமளிக்க தயாராக இருந்தது. அவன் அம்மா வந்தபோது ஒதுங்கி அப்பால் சென்றது. தனியாக இருக்கையில் அவளை அச்சுறுத்தியது. ஆச்சரியமாக இருந்தது அந்த வாசிப்பு.
தமிழகத்தில் உள்ள பிரச்சினை இன்னொரு படைப்பை நாடகமாக ஆக்குமளவுக்கு நாடகம் அறிந்தவர்கள் இங்கில்லை. நாடகச்செயல்வாதிகளில் இலக்கியவாசிப்பு கொண்டவர்களும் குறைவு. ஆகவே நாடகப்பயிற்சிகளையே நாடகங்களாக நடத்துகிறார்கள். அதற்கான பிரதிகளை அவர்களே எழுதிக்கொள்கிறார்கள். இலக்கியத்துடன் தொடர்பில்லை என்பதே இங்குள்ள நாடகங்களையும் உள்ளீடற்றவையாக ஆக்கிவிட்டிருக்கிறது.
தமிழ் நாடகங்களில் பொதுவாக இன்றும் நினைவில் நிற்பவை இந்திரா பார்த்தசாரதி, அம்பை போன்ற இலக்கியவாதிகளால் எழுதப்பட்ட போர்வைபோர்த்திய உடல்கள், பயங்கள் போன்ற நாடகங்களே. அவை நாடகவடிவில் அழுத்தமானவையாக இருந்தன. நாடகமாக ஆக்கப்பட்ட இலக்கியப்படைப்புகள் இன்னொரு கலையால் அடிக்கோடிடப்படும்போது மேலும் ஆற்றல் கொண்டவையாக ஆகின்றன.
ஓவியத்தையே எடுத்துக்கொள்வோம்.நான் புகழ்மிக்க மேல்நாட்டு நாவல்களைப்பற்றித் தேடும்போது எத்தனைவிதமான ஓவியங்கள், காட்சிப்படுத்தல்கள் கிடைக்கின்றன என்பது பிரமிப்பூட்டுகிறது. ஓவியர்கள் நாவல்களை எந்தெந்த கோணங்களில் வாசித்திருக்கிறார்கள். அருவமான கருத்துருக்களைக்கூட ஓவியங்களாக்கியிருக்கிறார்கள். பல்வேறு கோணங்களில் எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். தமிழில் கதைகள் தொடராக வந்தால் வெளிவரும் ஓவியங்கள் மட்டுமே உள்ளன. ஓவியர்கள் இலக்கியத்துக்கு எதிர்வினையாற்றியிருப்பது மிகக்குறைவு
ஆகவே ஒட்டுமொத்தமாகவே அறிவியக்கம் சுருங்கிவிட்டிருக்கிறது. இலக்கியம் என்பது அனைத்து அறிவியக்கங்களையும் ஒன்றாக இணைக்கும் சுதந்திரம் கொண்டது. அனைத்துக்கலைகளும் இலக்கியம் வழியாகவே சிந்தனைகளுடன் உரையாடமுடியும். அது கலை சிந்தனையாகவும் சிந்தனை கருத்தாகவும் மாறுவதற்கான பாதை. அந்த வாய்ப்புகள் இங்கே பயன்படுத்தப்படவே இல்லை. அது இங்கே இலக்கியத்தை ஒரு மக்களியக்கமாக ஆகமுடியாமலாக்கும் கூறுகளின் ஒன்று
ஜெ