கட்டண உரை- கடிதங்கள்

jeya

 

கட்டண உரை -ஓர் எண்ணம்

 

அன்பிற்குரிய ஆசிரியருக்கு,

 

தங்களது நீண்ட நாள் வாசகன் நான். அதிகம் உங்களிடம் கடித தொடர்பு இல்லையென்றாலும், உங்களுடன், உங்களை பற்றிய உரையாடல் இல்லாமல் என் நாட்கள் நகர்ந்தது இல்லை. உங்கள் எழுத்துக்களை போலவே, உங்கள் மேடை பேச்சையும், பேட்டிகளையும் தொடர்ந்து கவனித்து வருகிறேன். தற்போது கட்டண உரை பற்றிய அறிவிப்பை பார்த்தேன், மிகுந்த மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாய் நடக்க வேண்டும். மேலும் பல நல்ல பேச்சாளர்களை ஒருங்கிணைத்து இது ஒரு தொடர் நிகழ்வாக வளர வேண்டும் என விரும்புகிறேன். தாங்கள் இந்த முறை தேர்ந்து எடுத்த தலைப்பும் மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. சிந்தனையை பற்றி பல இடங்களில் நீங்கள் குறிப்பிட்டு இருந்தாலும், இந்த பத்தி என் மனதில் மிக ஆழமாக பதிந்து உள்ளது.

 

“ஆனால் மானுட அனுபவங்கள் மட்டுமே மனிதனை மேம்படுத்துமா? மகத்தான அனுபவங்கள் வழியாகச் சென்ற பின்னும் காலியான டப்பாக்களாக இருக்கும் பலரைக் கண்டிருக்கிறேன்.  அனுபவங்களை ஒருவனின் அகம் சந்திக்க வேண்டும். உள்ளே இழுத்துக் கொண்டு அக அனுபவங்களாக ஆக்க வேண்டும். செரித்துக் கொள்ள வேண்டும். சாதாரணமான அனுபவங்களில் இருந்தே தீவிரமான ஆளுமை வளர்ச்சியைப் பெற்றவர்களும் உண்டு.

 

அனுபவங்களை உள் வாங்கிக் கொள்ளக் கூடிய, ஆராயக் கூடிய, சாராம்சப் படுத்தி தன்னுடையதாக ஆக்கிக் கொள்ளக் கூடிய அந்த அகச் செயல் பாட்டைத் தான் சிந்தனை என்கிறோம். அனுபவங்களை சிந்தனை இணையான வேகத்துடன் சந்திக்கும் போது சிறந்த ஆளுமை உருவாக்கம் நிகழ்கிறது எனலாம்”

 

என்னை போல் நேரில் வர வாய்ப்பில்லாது, வெளி ஊர்களிலும், நாடுகளிலும் வசிப்போருக்கு இந்தஉரையை கேட்க நீங்கள் ஆலோசிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். தாங்கள் பேசிய பின் அதன் காணொளியையோ, அல்லது குறைந்தபட்சம் ஒளிப்பதிவு செய்தோ, கட்டணம் கட்டுவோருக்கு அனுப்பினால் மகிழ்ச்சி. இதில் உள்ள சிக்கல், அது இணையத்தில் இலவசமாக வெளியிடபடும் அபாயம் இருப்பது புரிகிறது. ஆனால், இதனால் பயன் அடைபவர்கள் அதிகம் என நினைக்கிறன்.

 

அன்புடன்,

மதன்.எஸ்

 

 

அன்புள்ள மதன்,

 

காணொளி இலவசமாக வரும் என்றால் கட்டணக்கூட்டத்துக்கு வரும் பத்துபேரும் வராமலாகிவிடுவார்கள் அல்லவா?

 

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

 

 

வணக்கம் .தங்களின் கட்டண உரை – ஒரு எண்ணம் படித்தேன் .இந்த முயற்சி மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஓன்று .இது குறித்த என் எண்ணங்களை உங்களிடம் பகிர விரும்புகிறேன்

 

 

ஏறத்தாழ இருபத்திஐந்து  வருடங்கள் உயர் கல்வி நிறுவனங்களில் (பொறியியல் ) ஆசிரியர் பணி என்ற அனுபவத்தில் இந்த கருத்துக்களை பதிவு செய்கிறேன் .முதலாவதாக ஒரு பொருளுக்கு மதிப்பு அதன் விலையை பொறுத்ததே .பெரும்பாலான மக்கள் அதன் தரத்தை விலையை வைத்து தான் மதிப்பிடுகிறார்கள் .உதாரணமாக எனக்கு வரதட்சணை வேண்டாம் என யாராவது சொல்லி பெண் தேடினால் ,அவனுக்கு என்ன குறையோ என்று தான் நினைப்பார்கள் .அவன் அப்பழுக்கில்லாத உத்தமன் என்றாலும் அவனை யாரும் நம்புவதில்லை.ஆதலால் இதை வணிக நோக்கு என்று பார்ப்பதை விட தரம் உயர்த்த ஒரு வழியாக கொண்டால் நன்று .இரண்டாவதாக இத்தகைய உரை நிகழ்த்தும் கூட்டம் நடத்த விரும்புவார்கள் – தங்களின் நண்பர்களை போல – தமிழ் இலக்கியத்தில் பற்றுள்ளவர்களாக சமூக மேம்பாடு நோக்கம் உள்ளவர்களாக தான் இதனை முன்வைப்பார்கள் .அத்தகைய கூட்டங்கள் நடத்தப்பட தேவைப்படும் பணம் தான் Registration fee என ஈட்டப்படுகிறது .நவீன கால கட்டத்தில் இத்தகைய முயற்சிகள் பணம் இன்றி சாதிக்க இயலாது என்பது தான் நிதர்சனம் .

 

 

மேலும் எந்த ஒரு கல்லூரியிலும் மாணவர்களின் திறன் /அறிவு மேம்பாட்டு பட்டறைகள் ( SKILLS/KNOWLEDGE ENHANCEMENT WORKSHOPS) நடத்தப்பட்டாலும் பதிவு கட்டணம் உண்டு .மேலும் அதனை கட்டணமில்லா பட்டறை என்றால் மாணவர்கள் அதனை தரமற்றதாக கருதவும் இடமுண்டு .மேலும் பட்டறையில் பங்கு கொள்பவர்களும் ஓசியில் தான் பங்கேற்பு என சிரத்தையின்றி இருப்பதை காணலாம் .ஆதலால் கட்டணம் என்றால் தான் மாணவர்களிடமும் சரி ,ஆசிரியர்களிடமும் சரி ஒரு பற்றுதல் /ஒரு ஈடுபாடு வருவது தவிர்க்க இயலாதது .நான் COURSERA ,NPTEL முதலிய  ONLINE PLATFORM களில் கோர்ஸ் செய்திருக்கிறேன் .மிகப்பெரும்பாலானவை கட்டணத்துடன் கூடியவை தான் .உங்களின் வெண்முரசு முயற்சி இத்தகைய MOOC (Massive Open Online Courses) முயற்சிகளை விட பெரியது .ஏனென்றால் வெண்முரசு படிப்பதால் ஏற்படும் அறிவு விரிவையும் /அறிவு விசாலத்தையும் வேறு எதனாலும் பெற்றுவிட முடியாது என்பது எனது நிலைப்பாடு .ஆனாலும் வெண்முரசு அறிமுகம் /உங்களின் இலக்கிய திறன் இன்னும் அதிக எண்ணிக்கையில் மக்களிடம் சேர வேண்டும் .அதனால் நல்லதொரு இலக்கிய பார்வைகள் கொண்ட வாசகர்கள் வட்டம் அதன் ஆரங்களை நீட்டிக்க வேண்டும் .அதற்க்கு கட்டண உரை சால சிறந்தது .

 

 

தமிழகத்தில் பள்ளிகளில் /கல்லூரிகளில் உள்ள தமிழாசிரியர்கள் தங்களின் உரையை கவனித்து பின்பு தங்களுடன் உரையாடினாலே போதும் .அதன் மூலம் தமிழக இலக்கியங்கள் குறித்த அவர்களின் எண்ணங்கள் விரிவடையும் /பார்வைக்கோணம் மாறும் என்பது எனது நம்பிக்கை .மேலும் தமிழகத்தில்  ஒன்றும் அறியாதவர்கள் கூட EDUCATION CONSULTANCY என்ற பெயரில் EDUPRENEURS ஆக பணத்தை சம்பாதிக்கும் போது,அதனை நீங்கள் ஏன் குறைந்த செலவில் எடுத்து செய்யக்கூடாது என்பது தான் எனது தாழ்மையான கருத்து.இதனால் பலன் அடைய போவது வருங்கால சமுதாயம் தான் இதில் எனக்கு துளி கூட ஐயம் இல்லை .என்னை பொறுத்தவரை உரைகள் மூலமும் /எழுத்துக்கள் மூலமும் வாசகர்களின் மனதில் ஊடுருவும் சாதனை திறன் உள்ளவர் நீங்கள் தான் .நான் அதிகம் படித்தவன் அல்ல .சாண்டில்யன் கதைகள் தான் என் உச்சம் .

 

ஆதலால் தங்கள் நடத்தும் கட்டண உரைகள் ஒரே நாளில் மூன்று பேர் (90 minutes each ) என்ற அளவில் நடத்தி ,அதில் ஒரே ஒரு உரையாவது பள்ளி /கல்லூரி அளவிலான பாடத்திட்டத்தில் இருந்தாலே போதுமானது ( திருக்குறளில் இருந்து சங்க இலக்கியம் அகநானூறு ,கம்பராமாயணம் ,திருப்புராணம் என யாவும் இதில் அடக்கமே ). உங்களால் எத்தகைய preparation இன்றியும் இது குறித்து நாள் கணக்கில் எடுக்கமுடியும் என்பதை நான் அறிந்திருக்கிறேன் .ஆதலால் இத்தகைய கட்டண உரைகள் ஒரு நாள்  அல்லது குறைந்தது ஐந்து நாட்கள் என்ற அளவில் நடந்து ,அதற்க்கு பதிவு கட்டணம் கட்டி பயில/கேட்க  வருபவர்களிடம் அதற்க்கான Certificate of Participation என்றால் அது கூடுதல் மகிழ்வை தான் தரும் .அறிவு விசாலத்தை இத்தகைய  Certificate of Participation  தான் பிற தரமதிப்பீட்டாளர்களிடம் /அங்கீகார அதிகார அமைப்பினரிடமும் விளக்க முடியும் ( Directorate of School Education ,Directorate of Collegiate Education  ,DOTE,UGC,AICTE ,NAAC ,NBA MHRD etc).எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே தாங்கள் இதற்க்கு மிகவும் பொருத்தமானவர் என்பதனாலே தான் இத்தகைய விளக்கம் .

 

நூலாய்ந்து ,சொல்லாய்ந்து ,மரபாய்ந்து ,நெறியாய்ந்து ,அறமாய்ந்து (தங்களின் சொல்லாட்சி தான் ) பேசும் உரைகளை மட்டுமே கட்டண உரையில் தாங்கள் இடம் பெற செய்விர்கள் .அதன் மூலம் அது எந்த அளவுக்கு சில ஆண்டுகளில் விரிவடையும் என்பதனை என் மனக்கண்ணில் கண்டுள்ளேன் .அது வருமாறு  – பள்ளி /கல்லூரி ஆசிரியர்கள் தங்களின் அறிவை பட்டை தீட்டிக்கொள்ள தங்களின் கட்டண உரை பட்டறைகளையே நாடுவார்கள் .( Example – For affiliated engg college faculty attending workshops at IITs,NITs like) .இரண்டாவது தங்களின் வெண்முரசுவில் வந்தது போல வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54  ‘மைத்ரியக்காட்டில் பேசப்படாத செய்தி’ என்ற சொல்லாட்சியே உருவாகி புழக்கத்திலிருந்தது.ஆம் அது போல எழுத்தாளர் ஜெயமோகன்  நடத்தும் கட்டண உரை பட்டறையில் பேசப்படாத செய்தி என்ற சொல்லாட்சி உருவாகும் .உங்களால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் /தமிழ் ஆர்வலர்கள் தங்களின் இலக்கிய தாகம் தீர்த்த சுனையை கண்டறிந்திருப்பார்கள் .

 

மேலும் வரும்காலங்களில் தமிழின் புலமை குறித்த அரசு தேர்வுகளுக்கு வெண்முரசு மட்டுமே பாடத்திட்டமாக இருக்கும் .ஆம் வரும்காலங்களில் தமிழின் புலமை குறித்த அரசு தேர்வுகளுக்கு வெண்முரசு மட்டுமே பாடத்திட்டமாக இருக்கும் . ஏனென்றால் வெண்முரசு அறிந்தவன் தமிழை முற்றிலும் அறிந்தவன் என திரு உரு மாற்றம் கொள்வது உறுதி .தங்களின் கட்டண உரை முயற்சி தற்போது ஒரு விதை என எழுந்தெழ முயற்சிக்கிறது .அதனை பல நூறு மீட்டர் சுற்றளவு கொண்ட ஆலமரமாக பார்க்க விழைந்தது என் மனம் . பதிவு நீண்டதால் சிரமத்திற்கு மன்னிக்கவும் .IT COMPANY களில் ஒரு நாள் /இரு நாள் பட்டறைகளுக்கு லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பது சர்வ சாதாரணம் .தவிர்க்க முடியாததுவும் கூட .அது போன்றதொரு முயற்சியை தான் தங்களின் இந்த கட்டண உரையில் காண்கிறேன் .தங்களின் இலக்கிய அறிவு தற்போதைய ஆசிரிய சமுதாயத்திற்கும் அதன் மூலம் அவர்களிடம் படிக்கும் மாணவர்களிடமும் சேர வேண்டும் என்பதே என் விருப்பம் .“பெரும்பசிக்காக தவம்புரிகின்றன அடுமனைகள்.அதுபோல பெரும் அறிவு பசிக்காக தவம் இயற்றுகின்றன அறிவு சாலைகள் /கல்விசாலைகள் என்றோரு நிலைக்கு உயர தங்களின் பங்களிப்பு வேண்டும் .இது என்னுடைய வேண்டுகோள் .தவறு என்றால் பிழை பொறுத்திடுக

 

நன்றி ஜெயமோகன் அவர்களே

 

தி .செந்தில்

ஸ்ரீவில்லிபுத்தூர்

 

அன்புள்ள செந்தில்

 

நாங்கள் இதைப்பற்றிப் பேசியதுமே எழுந்துவந்த ஒரு குரல் இது கல்விக்கு உகந்ததாக இருந்தால் நன்று என்று. உடனே அதை தவிர்த்துவிட்டோம். கல்வி, வேலைவாய்ப்பு, பொது அறிவு சார்ந்து மட்டுமே எதையும் தெரிந்துகொள்ளவேண்டும், பிற அனைத்துமே தேவையற்றவை என்ற எண்ணம் இங்கே இன்று உண்டு. அந்த எண்ணத்தை தவிர்க்கவேண்டும். அறிதலின்பொருட்டே அறிவது என்பதே அறிவியக்கத்தை உருவாக்குவது. அதை நோக்கியே நம் இலக்கு இருக்கவேண்டும் என முடிவெடுத்தோம்

 

ஜெ

 

அன்புள்ள ஜெ…
15 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் ‘மனிதத்தேனீ ‘ சொக்கலிங்கம் அவர்கள் (கண்ணதாசன் மன்றத்தின் தலைவர்) இந்த முயற்சியை மேற்கொண்டார். மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நெல்லை கண்ணன், தமிழருவி மணியன் மற்றும் சாலமன் பாப்பையா ஆகியோர் பேச்சாளர்கள். கட்டணம் ரூ.50. அரங்கம் நிறையவில்லை எனினும் பெருவாரியாக மக்கள் வந்திருந்தனர். ஆனால் அந்த முயற்சிகள் ஏனோ தொடரவில்லை.
அன்புடன்
ஜெயசீலன்
அன்புள்ள ஜெயசீலன்
அவர்களைப்போன்ற நட்சத்திரப் பேச்சாளர்களுக்குரியதல்ல கட்டணக்கூட்டம். ஏனென்றால் அவர்கலுளுக்கு பெருந்திரளான கூட்டம் தேவை. அவர்கள் ஒருவகையான கட்டுப்பாடற்ற கூட்டம். நேரந்தவறாமல் வருவதும் சரி சரியாக கேட்பதும் சரி அவர்களால் இயலாது. எழுந்துசென்றபடி, தின்றபடி, குடித்தபடி, பேசியபடி இருப்பார்கள். அது திருவிழா மனநிலை கொண்ட கூட்டம்
ஜெ
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-33
அடுத்த கட்டுரைபேராசிரியர் சுந்தரனார் விருது கலாபிரியாவுக்கு