மனைமாட்சி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட ஜெயகாந்தனின் கதைகள் ஒரு காலகட்டத்தை பிரதிபலித்தது. சமகால சமூக சூழலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு பெண்ணின் உடல் வேட்கை குறித்து தீர்மானிப்பவள் அவள் மட்டும் தானா அல்லது அவள் குடும்பம் முதல் சமூகம் வரை அனைத்தும் அதில் மூக்கை நுழைக்குமா தனி மனித சுதந்திரம் என்பது பெண்ணை பொறுத்தவரை ஆணைக் காட்டிலும் அதிகமான வரையறைக்கு உட்பட்டது தானா அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டியவள் என்னும் பெரும் பொறுப்பு அவள் பாலியல் வேட்கைக்கும் விடுதலைக்கும் தடையா முப்பதாண்டுகளுக்கு பிறகு நம் தற்கால சூழலில் இவற்றுக்கெல்லாம் ஒரு அதிர்ச்சி மதிப்பீடு உண்டா நாம் எதுவரை வந்து சேர்ந்திருக்கிறோம் இப்போதைய சூழல் என்ன என்பதை அதனை பிரதிபலிக்கும் ஒரு புனைவைக் கொண்டே அணுகலாம்.
மூன்று பகுதிகளாக வரும் கதைகளில் எந்த வித சமரசமும் இல்லாத மரபார்ந்த மனதிற்கு ஏற்பின்மையை ஏற்படுத்தக் கூடிய மூன்று பெண்கள்(சாந்தி மதுமதி வாணி) அவர்களை தங்கள் இயல்பின் படி டீல் செய்யும் பல் வேறு ஆண்கள். இவர்களோடு இன்னும் மரபுச் சூழலில் இருந்து வெளி வராத ஆனால் திறந்த மற்றும் வெளிப்படையான மனம் கொண்ட பெண்கள்(ராஜம் மங்கை வினோதினி)
சாந்தி கோபமும் ஆத்திரமும் கட்டற்று போகக்கூடியவள். அதற்காக கணவனையும் உடல் மன ரீதியாக தண்டித்து ஆசுவாசம் அடைபவள். அவளது இந்த குணத்திற்கான காரணம் அவள் கசப்பான குழந்தை பருவத்தில் இருக்கிறது. ராஜம் பொறுமையே வடிவானவள் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக புகுந்த வீட்டாரால் விரட்டப்பட்டு கணவனின் நினைவுடன் மெஸ் வைத்து நடத்துபவள். இரண்டாம் மணம் புரியும் கணவனுக்கு 30 ஆண்டுகள் கழித்து அவளுடன் தொடர்பு ஏற்படுகிறது. சாந்தியின் மனநிலை புறக்கணிப்பு கொண்ட ஒரு சிறுமி வளர்ந்து பெரியவளாகி தனக்கென ஒரு துணையை தேடிக் கொள்ளும் போது அவர் மீதே வன்முறை வெறியாட்டத்தை திருப்புகிறது. அவள் ஒரு பைத்தியம் அவளை கல்யாணம் பண்ணிக்காதீங்க என்று பெற்றோரே காதலனான தியாகுவிடம் கூறுகிறார்கள். அவன் அதனை புறக்கணித்து அவளை மணக்கிறான். ஒரு கட்டத்திற்கு மேல் அவள் சைக்கோதனம் தாங்காமல் குழந்தைகளுடன் வெளியேறி பாடம் புகட்டுகிறான். கடும் மன உளைச்சலில் இருக்கும் பெண்கள் சாமியார்களிடம் அடைக்கலமாக போவதன் உளவியல் இதில் துல்லியமாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. செளராஷ்டிரர் மற்றும் தேவாங்கர் வழக்கினை ஒரு நாவலில் வாசிப்பது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது
இரண்டாம் கதை வெகுளியான சாப்பாட்டு ராமனான கணவனை மணமுடித்து மறுநாளே பிரிந்து வந்து விடுகிறாள் மதுமதி. இவளுடைய உறவுகள் மிக நுட்பமாக தற்கால உறவுகளையும் அதில் உள்ள ஒரு அலட்சிய போக்கையும் சொல்கிறது. ராஜம் ஒரு லட்சியப் பெண்மணி என்றால் மதுமதி ஒரு அலட்சியப் பெண்மணி. மதுமதியின் சிக்கலும் குழந்தைப் பருவம் சார்ந்தது தான். சில நேரங்களில் சில மனிதர்களில் இருந்து இலக்கியம் உறவுகளைப் பேசிப் பேசி வந்தடைந்திருக்கும் இடம் மலைப்பைத் தருகிறது. மங்கையினால் சலனமடந்து மகாதேவனை வெறுக்கும் சோமு வாத்தியார் மற்றும் பாகவதர் மதுமதிக்கு நேர் எதிரான மங்கையின் பாத்திரப் படைப்பு என திருச்சிற்றம்பலப் பகுதி ஆண் பெண் உறவுகளின் அதன் ஆழ்மன விழைவுகளின் ஆடலாக இருக்கிறது
கன்னட(அல்லது தெலுங்கா என தெரியவில்லை) தேவாங்கரின் பிண்ணனியில் ஒரு கதையை படிப்பது இதுவே முதல்முறை. ஒரு பெரும் பயங்கரத்துடன் தொடங்கும் கதை வினோதினியின் அக உணர்வுகளை அவள் தவிப்பை நுட்பமாக சொல்லிச் செல்கிறது. கண்ணன்-கலைவாணி உறவென்பது மிகத் துல்லியமாக தற்போது 30 வயதிற்க்குட்பட்டவர்களின் காஷூவலாக அதேசமயம் முந்தைய தலைமுறைகளைக் காட்டிலும் ரொம்பவே மெச்சூர்டாக உறவை அணுகும் விதத்தை காட்டுகிறது. கலைவாணியின் பாத்திரம் தற்போதைய பெண்ணின் ஒரு மாதிரி அனால் கண்ணபிரான் அளவுக்கு ஆண்கள் இன்னும் பெரிதாக நம் சமூகத்தில் மெச்சூர்ட் ஆகவில்லை. கண்ணனின் பாத்திரப் படைப்பு நிலப்பிரபுத்துவ மனநிலை சார்ந்த உறவு முறைகளை அனுகும் அவன் பெற்றோரிடம் இருந்து தாராளமய மய உலகிற்கு நிகழும் ஒரு பாய்ச்சல். அதற்கு பெங்களூரின் பிண்ணனி மிகச்சரியாகவே ஆசிரியரால் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று கதைகளிலும் வரும் பெரிய நகரம் இதுவே.
இந்த நாவலை பரிந்துரைத்த வளரும் எழுத்தாளர் காளிக்கு நன்றி
சிவக்குமார்
சென்னை