சம்பத்தின் இடைவெளி பற்றி

sambath_thumb3

அன்புள்ள ஜெ…வணக்கம்.

சம்பத்தின் “இடைவெளி”யை சி.மோகன் புகழ்ந்து தள்ளுகிறாரே…நானும் படித்துத்தான் பார்த்தேன். சதா ஒருவன் சாவைப்பற்றியே நினைத்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பதும், உடன் இருப்பவர்களைச் சங்கடப்படுத்திக் கொண்டும் எரிச்சலூட்டிக் கொண்டும், தத்துவ விசாரம் என்கின்ற பெயரில் தன் மனதைத் தானே சுணக்கிக் கொண்டும், முடங்கிக் கொண்டும், தானும் கெட்டு சுற்றியிருப்பவர்களையும் கெடுத்து சூழலையே குழப்பத்திற்குள்ளாக்கியும் நாவல் என்கின்ற பெயரில் ஒன்றை எழுதித் தள்ளியிருப்பது இலக்கியத்திற்குப் பெருமை சேர்க்கக் கூடியதாய் நீங்கள் நினைக்கிறீர்களா?

எனக்கென்னவோ இடைவெளி அத்தனை மகத்தானதாய்த் தோன்றவில்லை.நிச்சயம் சொல்லுவேன்…சாவுபற்றிப் பேச வந்து என்னதான் முன் வைக்கிறார் என்று யாராலும் தெளிவாகச் சொல்ல முடியாது என்பதுதான் இந்த நாவலைப் படித்து முடித்தபோது எனக்குப் புலப்பட்ட ஒன்று. எது சரி? என் புரிதல் தவறா?

முடிந்தால் உங்கள் வலைத்தளத்தில் எழுதுங்கள். ஏற்கனவே எழுதியிருந்தால் தயவுசெய்து லிங்க் கொடுங்கள். நேரமில்லை என்றால் விடுங்கள். நன்றி

உஷாதீபன்

idaiveli-10004438-550x600

அன்புள்ள உஷாதீபன்,

நான் ஏற்கனவே இந்நாவலைப்பற்றி எழுதியிருக்கிறேன். நான் சம்பத்தின் இருகுறுநாவல்களையும் [சாமியார் ஜூவுக்குப் போகிறார், இடைவெளி] தமிழின் முதன்மையான இலக்கிய ஆக்கங்களாக நினைக்கவில்லை. ஆனால் நீங்கள் எண்ணுவதுபோல தவிர்க்கப்படவேண்டியவை என்றோ, குறைபட்டவை என்றோ நினைக்கவுமில்லை. அவை ஒரு காலகட்டத்தின் உளநிலையை இயல்பான மொழியில் நுட்பமான நகைச்சுவையுடன் உளவியல் அவதானிப்புகளுடன் கூறுபவை. ஆகவே தமிழுக்கு முக்கியமான இலக்கியப்படைப்புகள். இதுவே என் மதிப்பீடு

சம்பத்தின் புனைவுகள் வெளிப்படுத்தும் அந்த உளநிலை இருத்தலியல் ஓங்கியிருந்த காலகட்டத்தில் உலகமெங்கும் இருந்தது. வெறுமே ததும்பும் எண்ணங்களுடன், இருத்தல் சார்ந்த தத்தளிப்புடன் செயலின்றி அலையும் கதைமாந்தரின் நாட்களைச் சொல்லும் கதைகள் அன்று எல்லா மொழிகளிலும் எழுதப்பட்டன. நான் மலையாளத்தில் கே.பி.நிர்மல்குமார் எழுதிய அத்தகைய பல கதைகளை வாசித்தபின்னரே சம்பத்தை வந்தடைந்தேன். பார்வை,கூறுமுறை, இலக்கியவடிவம் ஆகியவற்றில் சம்பத்துக்குச் சமானமான எழுத்தாளர்களை இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் எழுபதுகளில் கண்டடைய முடியும்.

ஆகவே சம்பத்தை மிக எளிதாக உலகளாவிய அப்பொதுப்போக்கில் வைத்து நோக்கி மதிப்பிட்டேன். அவரைச்சூழ்ந்து அன்றைய வாசகர்களிடமிருந்த மிகைமதிப்பீடு என்னுள் உருவாகவில்லை. ஆனால் அவருடைய உள்ளத்தையும் சென்றடைய முடிந்தது. முழுமையடையாதுபோன பயணம்தான் அவருடைய இலக்கிய வாழ்க்கை. அவருடைய படைப்புகளும் முழுமையடையாதுபோனவையே.

சம்பத் உருவாக்கும் அந்த உளநிலை இலக்கியத்தின் பேசுபொருள்தான். ஆனால் அது ஒரு முழுமையான வாழ்க்கைச்சித்திரத்தின் ஒருபகுதியாகவே நான் மதிக்கும் படைப்புக்குள் இடம்பெற முடியும். அதை மானுடநிலையின் உச்சம் என என்னால் எண்ணமுடியாது. அவ்வாறு உச்சமாக்கி முன்வைப்பதனால், அந்தத் தத்தளிப்பன்றி வேறேதுமே புனைவுக்குள் இல்லாமலிருப்பதனால், அந்தத் தத்தளிப்புக்கு உகந்தமுறையில் கதைமாந்தர் சற்றே செயற்கையாகப் புனையப்பட்டிருப்பதனால், அப்படைப்பு என் நோக்கில் ஒரு குறிப்பிட்ட நோக்கை வெளிப்படுத்தும், ஒரு குறிப்பிட்ட காலகட்ட எல்லைக்குள் மட்டுமே நின்றுவிடும் படைப்பாக ஆகிவிடுகிறது.

இவ்வடிவில் வெற்றிகரமான சிறுகதைகளை தமிழில் அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். மிகச்சிறந்த உதாரணம்  ‘காலமும் ஐந்துகுழந்தைகளும்’.அதில் அவ்வடிவமும் மொழியும் பகடியும் தரிசனமும் சரியாகக் கலந்துள்ளன. சொல்லப்பட்ட தளம் விட்டு மேலெழுவதனால் அக்காலகட்டத்தையும் கடந்துவந்து இன்றும் முக்கியமான கதையாக நின்றிருக்கிறது.

சம்பத்தின் கதையிலுள்ள அவ்வுளநிலை அன்று ஒருவகை உச்சநிலையாகக் கொண்டாடப்பட்டுள்ளது. உதாரணமாக தர்கோவ்ஸ்கியின் சாக்ரிஃபைஸ் சினிமாவின் கதாநாயகன் இருப்பது அந்த உளநிலையில்தான்.  அவ்வாறு நிறைய கதைமாந்தரை இலக்கியத்திலும் சினிமாக்களிலும் காணமுடியும். தங்களுக்கென ஓர் ஆளுமையைப் புனைந்துகொண்டு அதில் திளைப்பவர்கள் இவர்கள். இன்றைய நோக்கில் தன்மைய நோக்கை ஆளுமையாக கட்டமைத்துக்கொண்டவர்கள். இந்த காலகட்டத்தின் உளநிலையை இது தொடங்குவதற்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே எழுதிய நாவல் ஹெர்மன் ஹெஸ்ஸியின் ஸ்டெப்பன் வுல்ஃப். அந்நாவல் அக்காலகட்டத்தைக் கடந்து சிந்திப்பவனின் தனிமையைச் சொல்வதாக மேலும் வளர்ந்து இன்றும் நிலைகொள்கிறது.

ஒரு நோக்கும் ஓர் உளநிலையும் மட்டும் வெளிப்படும் வடிவம் சிறுகதை.  சிறுகதை என்பதைக் கடந்து ‘சாமியார் ஜூவுக்குச் செல்கிறார்’  ‘இடைவெளி’ ஆகிய கதைகள் விரியும்போது ஏற்படும் குறைவுகள் இரண்டு. ஒன்று அவை வரலாற்றை, சூழலை, பிறரை முழுமையாகவே தவிர்த்து ஒரு தனிமனிதனின் அக உச்சத்தினூடாகவே அலைகின்றன. இரண்டு, அவை கண்டடைபவற்றுக்கு தர்க்கபூர்வ மதிப்பு ஏதுமில்லை, அவற்றை கவித்துவப் படிமமாக அவை முன்வைக்குமென்றால் அப்படிமம் இலக்கியமதிப்பு பெறும். இல்லையென்றால் அக்கண்டடைதல் அக்கதாபாத்திரத்தின் உளநிலையின் ஒருவெளிப்பாடாக மட்டுமே நின்றுவிடும். இடைவெளியில் கவித்துவக்கூறுகள் இல்லை. பகடிகலந்த யதார்த்தச்சித்தரிப்புக்குள் கவித்துவத்துக்கான இடமும் அமையவில்லை

அதைமீறி அக்கதையை இலக்கியப் படைப்பாக ஆக்குவது அதில் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கும் கதைமாந்தரின் இயல்புகளும், ஒழுக்குள்ள உரையாடல்கள் மற்றும் உளச்செயல்கள் வழியாக விரியும் சித்தரிப்பும்தான். அது ஏதோ ஆழ்ந்த உண்மையை நோக்கிச் செல்லும் ஆக்கம் என எண்ணாமல் ஒரு குறிப்பிட்ட உளநிலையின் அலைக்கழிப்பை முன்வைப்பது என்று எண்ணி வாசித்தால் அதை உங்களால் ரசிக்கமுடியும். இன்றைய காலகட்டத்தில் சம்பத்தின் நாவல் முன்வைக்கும் உளநிலை காலத்தால் பழையதாகி பொருளிழந்துவிட்டிருப்பதனால் ஏற்படும் அகல்வு உங்களுடையது. அந்த ஒவ்வாமை உங்களுடைய பிரச்சினை. அதைக் கடந்துசென்று அந்த உளநிலையை, அதன் சூழலை புரிந்துகொண்டு வாசிக்கவேண்டும்.

அறுபது எழுபதுகள் உலகளாவிய சோர்வுநிலை ஒன்றை சிந்திக்கும் அனைவரும் பகிர்ந்துகொண்டனர். தத்துவம் உருவாக்கியப் புத்துலகக் கனவுகளும் அதையொட்டிய அரசியல்திட்டங்களும் அர்த்தமிழந்தன. தனிமனிதன் வரலாற்றில் இடமற்றவனாகவும் தனியனாகவும் தன்னை உணர்ந்தான். பிறப்பு காமம் இறப்பு என்னும் மூன்றுகூறுகள் மட்டுமே எந்நிலையிலும் மாறாத உண்மைகள் என்றும் பிற அனைத்துமே வகைவகையான உளமயக்கங்கள் என்றும் எண்ணத்தலைப்பட்டான். அந்தச் சோர்வுநிலையின் தத்துவமே இருத்தலியல். அதன் விளக்கமாக அமையும் படைப்பு இடைவெளி. அவ்வகையில் தமிழில் ஒருகாலகட்டத்தின் இலக்கியவெற்றி அது.

இடைவெளி ஒரு அழுத்தமான நாவலாக ஆகாமல் முன்னரே நின்றுவிட்ட படைப்பு. அழுத்தமான நாவலாக ஆகியிருக்கக்கூடும் என்ற வாய்ப்பு அதிலிருப்பதனால் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆக்கம் என நான் சுருக்கி வகுத்துக்கொள்வேன்.

ஜெ

முந்தைய கட்டுரைபேராசிரியர் சுந்தரனார் விருது கலாபிரியாவுக்கு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-34