ஸ்டெல்லா புரூஸ் -கடிதங்கள்

Stella Purus

 

ஸ்டெல்லா புரூஸின் அப்பா

 

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

 

வணக்கம்.

 

நீங்கள் ஸ்டெல்லா புரூஸ் பற்றி எழுதியதைப் படித்தவுடன் எனக்குத் திகைப்பாகப் போய்விட்டது.  ஒரு எளிமையான மனிதர் தேவையில்லாமல் தற்கொலை செய்து கொண்டு விட்டாரே என்ற வருத்தம் எனக்கு எப்போதும் இருந்துகொண்டிருக்கும்.  ஸ்டெல்லா புரூஸ் மரணத்தைப் போல் எனக்கு வருத்தம் தந்த இன்னொரு மரணம் பிரமிள் மரணம்.  ஆனால் நீங்கள் குறிப்பிடுவதுபோல் வறுமை ஒரு காரணம் இல்லை அவர் மரணத்திற்கு.

 

எளிமையான வாழ்க்கை முறையால் அவருக்குத் தேவையானது மட்டும் தேடிக்கொண்டு வாழ்ந்து விடுவார்.   ஆரம்பத்தில் அவருடைய தந்தையின் தொழிலை நடத்தி வந்தார்.பின்னால் அது சரிப்பட்டு வராது என்று தோன்றவே குடும்பத்திடமிருந்து பிரிந்து அவருடைய பங்கை தனியாக எடுத்துக்கொண்டு வந்து விட்டார்.

 

வங்கியில் அவருடைய சேமிப்புகளை வைத்துக்கொண்டு எளிமையாக வாழ்ந்தவர்.ஹேமாவுடன் இருந்தபோது அவருடைய சகோதரர் இடத்தைத்தான் வாடகை எதுவும் கொடுக்காமல் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

 

உண்மையில் ஹேமா இல்லாதத் தருணத்தில் அவர் அந்த இடத்தை விட்டு காலி செய்து தனியாகப் போயிருக்க வேண்டும். ஹேமா போய் ஆறுமாதக் காலத்தில் அவர் மன அளவில் மிகவும் பாதிகக்பட்டிருந்தார்.  ஆன்மிகம் மூலம் சரி செய்து விடலாம் என்று அவர் கடைசி வரை நம்பியிருந்தார்.  இந்த நம்பிக்கûதான் அவரை வீழ்த்தி விட்டது.  அவருடைய சகோதரி குடும்பத்துடன் இருந்திருக்கலாம்.  அல்லது முன்புபோல் தனி அறை வாடகை எடுத்துக்கொண்டு தங்கியிருக்கலாம்.  அவர் எதையும் செய்யவில்லை. அவர் மனைவியின் நகைகளை திருப்பதி உண்டியில் போட நெருக்கமான நண்பரிடம் கொடுத்துவிட்டார்.  அந்தத் தருணத்தில் அவர் பித்த நிலையில் செயல்பட்டதாகத் தோன்றியது.

 

அவருக்கு ஞானக்கூத்தன், ஆன்ந்த், ராஜகோபால், வைத்தியநாதன் என்று பல நண்பர்கள் உண்டு.  ஆனந்தவிகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவரிடம் மிகுந்த  அன்பு கொண்டவர்.  வயது அதிகமாக ஆக நட்பு என்பது கேள்விக்குரியாக மாறி விடுகிறது.  ஒருவரை ஒருவர் சந்திப்பது குறைந்து விடுகிறது.  ஸ்டெல்லாபுரூஸ் விஷயத்தில் அப்படி நடந்து விட்டது.  ஆனால் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற விதியை யாரால் மாற்ற முடியும்

 

 

அன்புடன்

அழகியசிங்கர்

 

அன்புள்ள அழகிய சிங்கர்

 

அவர் பணநெருக்கடியில் இருந்ததாக அவர் இறந்தபோது வந்த செய்திகளில் சொல்லப்பட்டிருந்தது. இருக்கலாம் என நினைத்துக்கொண்டேன். ஏனென்றால் நான் சினிமாச்சூழலிலேயே அவரைச் சந்தித்தேன். அவருக்கு மிகக்குறைவான தொகையே அளிக்கப்பட்டது, அவருக்குக் கேட்கத்தெரியவில்லை என்று அறிந்தேன். அவர் சில படங்களின் வெற்றிக்குக் காரணமான எழுத்தாளர். ஆனால் அன்றையச்சூழலில் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே அவருக்கு அளிக்கப்பட்டது. அவருடைய பெயரும் தவிர்க்கப்பட்டது.

 

 

ஜெ

 

 

அன்புள்ள ஜெ.,

 

 

வழக்கம்போல் அருமையான விரிவான பதில். விருட்சம் வெளியீடான அந்தக் கட்டுரைத் தொகுப்பின் முன்னுரையில் அழகியசிங்கர் சொல்கிறார் “அவர் கடைசி காலத்தில் வறுமையில் கஷ்டப்படவில்லை. அவருக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தன. ஹேமாவின் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை தன் நண்பரிடம் கொடுத்து திருப்பதி உண்டியலில் போடக் கொடுத்தது தனக்குத் தெரியும்” என்று. நகைகளைப் பொதுவாக நாம் சாப்பாடு முதலிய லௌகீக காரணங்களுக்காகப் பிரிவதில்லை. விதிவிலக்குகள் தவிர.

 

 

என்  செட்டிநாட்டு நண்பர் பெரியகருப்பன் சொல்லுவார் அங்கு ஒரே ஒரு வேளை சாப்பிடும் வறியவர்களிடமும் நூறு பவுன் தங்கமாவது இருக்கும் என்று. பரம்பரை பரம்பரையாகக் கடத்தப் படுபவை. உயிரே போனாலும் விற்கப்படாதவை. “குந்தித் தின்றால் குன்றும் மாளும்” என்பார்கள். அதோடு நோய்களும் சேர்ந்துகொண்டால்… வறுமையில் கஷ்டப்பட்டிருக்கவோ, அல்லது அதை மறைக்க பெரிதாகக் கடன் பட்டிருக்கவோ மட்டுமே வாய்ப்புகள் அதிகம்.  “மேன்ஷன்” வாழ்க்கையை ஒட்டி அவர் படைத்த “அறை நண்பர்” போன்ற ஆக்கங்கள் நான் ரசித்தவை. தன் தோல்வியுற்ற பம்பாய் வாழ்க்கையையும், தன் மனைவி ஹேமாவின் வறுமை நிறைந்த இளமை வாழ்க்கையையும் என்றாவது எழுதவேண்டும் என்றிருந்தார். கை கூடவில்லை.  நீங்கள் காட்டும் சித்திரம் மிகப்பெரியது மிக நுண்ணியதும் கூட. நன்றிகள்.

 

அன்புள்ள,

 

கிருஷ்ணன் சங்கரன்

 

அன்புள்ள ஜெ

 

ஸ்டெல்லா புரூஸ் பற்றிய கட்டுரை வியக்கச் செய்தது. நான் அவருடைய நாவல்களின் தீவிர வாசகனாக இருந்தேன். அவருக்கு நிறைய  கடிதங்களும் போட்டிருந்தேன். என் அடலஸன்ட் வயசின் ஒரு பகுதியாக அவர் இருந்தார். காதல் என்ற உணர்வை தித்திப்பாக அவரால் ஆக்கமுடிந்தது என்பதே அவருடைய வெற்றி

 

ஆனால் அவருடைய இன்னொரு முகம் இப்போது நீங்கள் காட்டுவது. இத்தனை தீவிரமான வாசகராகவும் ஆன்மிக ஈடுபாடுகள் கொண்டவராகவும் அவர் இருந்திருக்கிறார் என்பது ஆச்சரியமானது. அவருடைய எழுத்துக்களில் இந்த அம்சம் இல்லை. ஒருவர் தன் எழுத்துக்களில் தன் ஆளுமையை வெளிப்படுத்தவில்லை என்பது, அதற்கான வாய்ப்பே அமையவில்லை என்பது எவ்வளவு சோகமானது

 

 

சந்திரசேகர்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-32
அடுத்த கட்டுரைகுடும்பத்திலிருந்து விடுமுறை -கடிதம்