முதல்தொகுதியுடன் அறிமுகமாகும் எழுத்தாளர்களில் இருவகையினரைப் பார்க்கிறேன். முதல்வகையினர், இவர்களே பெரும்பான்மையினர், ஏற்கனவே வணிகஇதழ்களில் எழுதப்பட்டிருக்கும் படைப்புகளில் ஊறியவர்கள். அந்தச் சூழல் உருவாக்கும் புனைவுமொழிக்குள் அவர்களின் கதைகள் எழுதப்பட்டிருக்கும். இரண்டாம் வகையினர் தங்களுக்கென எழுதுவதற்கு மெலிதாகவேனும் ஓர் அனுபவமண்டலத்தைக் கொண்டவர்கள். அதைவெளிப்படுத்துவதற்கான மொழியையும் வடிவையும் தேடித் தத்தளிப்பவர்கள். இலக்கியமுன்னோடிகளில் சிலருடைய மொழியையும் வடிவையும் தங்களுக்கு அணுக்கமானதாக உணர்ந்து அவர்களைப் பின் தொடர்கிறார்கள்.
முதல்வகையினர் பெரும்பாலும் ஏற்கனவே சொல்லப்பட்ட கதைக்கருக்களை ஆர்வமூட்டும் கதைக்கட்டுமானத்துடன் சற்றே வேறான கோணத்தில் சொல்பவர்களாக இருப்பார்கள். ஒழுக்குள்ள நடையும் ஏறத்தாழ சரியான வடிவமும் அமைந்திருக்கும். ஆனால் அந்த வடிவம் சூழலில் ஏற்கனவே சொல்லிச்சொல்லி நிலைகொண்டதாக இருக்கும்.
இரண்டாமவர்களின் ஆக்கங்களில் மூன்றுவகைப் படைப்புகள் இடம்பெற்றிருக்கும். தனக்குரிய மொழியையும் வடிவையும் அடையாமையால் முதிராக்கதைசொல்லலாக நின்றுவிடும் ஆக்கங்கள். இலக்கியமுன்னோடி ஒருவரின் நடையையும் மொழியையும் அணுக்கமாகப் பின்பற்றி அதனூடாக வெற்றியடைந்த ஆக்கங்கள். தனக்கான தனித்துவத்தை சற்றே வெளிப்படுத்தி நின்றிருக்கும் ஆக்கங்கள்.
இரண்டாம்வகையினரே தமிழில் பின்னாளில் அழுத்தமான செல்வாக்கைச் செலுத்தும் முதன்மைப்படைப்பாளிகளாக ஆகிறார்கள். அவர்கள் தங்கள் முன்னோடியின் நடையை ஊர்தியாகக்கொண்டு மேலெழுகிறார்கள். ஏதோ ஒருகட்டத்தில் அவருக்கும் தனக்குமான வேறுபாட்டை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். எழுதி எழுதி அதை விரிவாக்கி தனது நடையையும் வடிவையும் கண்டடைகிறார்கள். காலத்தில் நிலைகொள்கிறார்கள்.
மாறாக வணிகக்கேளிக்கை எழுத்துச்சூழலின் பொதுநடையிலிருந்து கிளைத்தவர்கள் அந்த எல்லையை மீறுவது மிகமிக அரிது. அவர்கள் எடுத்த எடுப்பிலேயே சுவாரசியங்களை உருவாக்குவார்கள். ஆனால் சுவாரசியம் எனும் எல்லையை கடக்கவேமுடியாதவர்களாக நீடிப்பார்கள். தமிழிலக்கியத்தில் எண்பதுகளில் அறிமுகமான சில எழுத்தாளர்களைக்கொண்டு இதை நான் அவதானித்திருக்கிறேன்.
ஆகவே முதல்கதைத்தொகுதியில் முதிரா ஆக்கங்கள் இருப்பது ஒரு நல்ல அடையாளம். தனக்குரிய பட்டறிவுமண்டலத்தை நம்பி அதை எழுத அவ்வெழுத்தாளர் முயல்வதன் சான்று அது. ஏற்கனவே வணிகச்சூழலில் எழுதப்பட்ட கதைக்களத்தில், கதைக்கருக்களில், மொழியில் ஓர் அறிமுக எழுத்தாளர் படைப்புகள் எழுதியிருந்தால் மிக வலுவான அடிகள் வழியாக அவர் தன் ஆளுமையை உடைத்து மீண்டும் வார்த்தாலொழிய இலக்கியப்படைப்புச்சூழலுக்குள் நுழையவியலாது. இலக்கியவிமர்சகர்கள் புதுமை, தனித்தன்மை ஆகியவற்றை மட்டுமே அளவீடாகக் கொள்வார்கள். தேர்ச்சி என்பதை அல்ல, அது பின்னாளில் நிகழ்வது.
வணிக எழுத்துக்குள்ள ஒரு சிறப்பியல்பால் இந்த நிலை உருவாகிறது. வணிகச்சூழலில் எழுதும் அத்தனை எழுத்தாளர்களும் சேர்ந்து ஒரு பொதுவான புனைவுமொழியைத்தான் உருவாக்குகிறார்கள். உதாரணமாக, சுஜாதாவின் மொழி தனித்துவம் கொண்டது. ஆனால் அதை சற்றே உள்ளடங்கியவடிவில் பாலகுமாரனில் காணமுடியும். இந்துமதி, வாசந்தி, புஷ்பாதங்கத்துரை ஸ்டெல்லா புரூஸ் அனைவரிலும் காணமுடியும்.
ஏனென்றால் அதை வாசிக்கும் வாசகச்சூழல் பொதுவானது. அவர்கள் எழுத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுப்பவர்கள் அல்ல, எழுத்தை தன்னை நோக்கி இழுப்பவர்கள். வணிக எழுத்து உடனடியாக வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்னும் கட்டாயம் உள்ளது. ஆகவே வாசகரசனைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டே இருப்பது. இதனால் ஒருதலைமுறை வாசகர்களுக்கு பொதுவாக ஒரு புனைவுமொழி அமைகிறது. அனைத்து எழுத்துக்களும் அதன் ஒரு பகுதியில் சென்றமைகின்றன.
நான் என் வாசிப்பில் இன்று எழுதவரும் எழுத்தாளர் ஒருவரிடம் மிகமிக எதிர்ச்சுவையாகக் கருதுவது சமகால வணிக எழுத்தின் சாயல் இருப்பதைத்தான். பிற இயல்புகள் என்னென்ன இருந்தாலும் சரி, அது அப்படைப்பை கீழிறக்கிவிடுகிறது. எழுத்தாளனின் வாழ்க்கைநோக்கு மாறிக்கொண்டே இருக்கும். நடை என்பது கையசைவுகள், பேச்சுமுறைபோல. உருவானபின் மாற்றுவது மிகக்கடினம்
அனோஜன் பாலகிருஷ்ணனின் இரண்டாவது தொகுப்பான பச்சைநரம்புதான் என் வாசிப்பில் அவருடைய முதல் தொகுதி. இத்தொகுதியின் மிகச்சிறப்பான கூறு என நான் நினைப்பது தமிழ் வணிக எழுத்தின் சாயல் சற்றுமில்லாததாக இது உள்ளது என்பது. நடை, மொழி அனைத்துமே அந்தப் பொதுச்சூழலில் இருந்து முற்றிலும் அயலானதாக உள்ளது. மொத்தத் தொகுப்பிலும் வணிகஎழுத்திலிருந்து பெற்ற தேய்வழக்குகள் ஒன்றுகூட இல்லை. மீண்டும் மீண்டும் பக்கங்களைப்புரட்டி அதற்காகவே தேடினேன். ஒன்றையும் காணாதபோது ஓர் உவகை எழுந்தது. தனித்தன்மைகொண்ட நடையுடன் தமிழிலக்கியத்தில் ஓர் முதன்மை ஆளுமையாக வருங்காலத்தில் திகழவிருக்கும் படைப்பாளி ஒருவரை வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்னும் எண்ணத்தை அடைந்தேன்.
அனோஜன் பாலகிருஷ்ணன் இலங்கைத் தமிழ் எழுத்தாளர். அனைத்துக்கதைகளுமே இலங்கையைக் களமாகக்கொண்டவை. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தின் இறுதிநாட்களையும் அதன்பின்னான காலகட்டத்தையும் சித்தரிப்பவை. ஆனால் இவை போராட்டத்தின் கதைகள் அல்ல. போராட்டத்தைப்பற்றிய நாளிதழ்ச்செய்திகளை வைத்துக்கொண்டு மிகையுணர்ச்சி கொண்டு எகிறிக்குதிக்கும் ஆக்கங்களையே இங்கே வாசகரகள் பெரும்பாலும் வாசிக்கநேர்கிறது. பழைய முற்போக்குப் பிரச்சார எழுத்தின் மறுவடிவங்கள் அவை. இலக்கியவாசிப்பாளன், தனக்கு உவப்பான அரசியல்நிலைபாடுகள் கொண்டிருந்தாலும்கூட, அவற்றை கலை அல்ல என நிராகரிப்பான்.
அனோஜனின் இக்கதைகள் இலக்கியத்திற்குரிய அடிப்படைத் தகுதிகள் இரண்டைக் கொண்டிருக்கின்றன. ஒன்று, அனுபவநேர்மை. இன்னொன்று, உணர்வுச்சமநிலை. இவை பெரும்பாலும் போரால் பாதிக்கப்பட்டு அச்சமும் ஐயமும் கொந்தளிப்புமாக அந்தக் காலகட்டத்தைக் கடந்துவரும் எளிய நடுத்தரவர்க்கத்து இளைஞர்களின் உலகைச் சார்ந்தவையாக உள்ளன. அவர்களை அலைக்கழிப்பது அரசியலோ கொள்கைகளோ அல்ல. அன்றாட யதார்த்தமாக உள்ள வன்முறையும் கண்காணிப்பும்தான்.
அனோஜனின் இத்தொகுதியிலுள்ள கதைகளின் பொதுத்தன்மையைக் கொண்டு ஒரு ‘வயதடைதல்’ [Coming of age ] நாவலின் தனி அத்தியாயங்களாக இவற்றை வாசிக்கமுடியும். பெரும்பாலான கதைகள் வளரிளம்பருவத்துச் சிறுவனொருவனின் வாழ்க்கைப்புலத்தையும் நோக்கையும் கொண்டுள்ளன. அவன் எதிர்கொள்வன இரண்டு உலகங்கள். அரசியல்வன்முறையின் சூழல் ஒன்று. காமம் இன்னொன்று.
இவ்விரண்டில் அரசியல்வன்முறையின் சூழலில் அனோஜனின் அவதானிப்புகளும் அவற்றை மிகையின்றி, நுட்பமாகச் சொல்லியிருக்கும் நேர்த்தியும் அக்கதைகளை முக்கியமான கலைப்படைப்புகளாக ஆக்குகின்றன. காமத்தை பெரும்பாலும் பகற்கனவுகளினூடாகவே கதைசொல்லி எதிர்கொள்கிறார் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
காமத்தைப்பற்றி மரபான கதைச்சூழல்களில் சொல்லப்பட்டிருப்பதன் விரிவாக்கங்களாக, பொதுவான நம்பிக்கைகளின் நீட்சிகளாக அக்கதைகள் உள்ளன. அவை நுட்பமான ஒழுக்குள்ள கதைசொல்லலின் ஊடாக வாசிக்கத்தக்க கதைகளாக அமைந்திருந்தாலும் இலக்கியவாசகன் கதையில்தேடும் ‘பிறிதொன்றிலாததன்மை’ கொண்டவை அல்ல. முழுமைநோக்கோ, மாற்றுநோக்கோ வெளிப்படுவனவும் அல்ல. ஆகவே அவை ஆழமான ஊடுருவல் எதையும் நிகழ்த்தாமலேயே அக்கதைகள் கடந்துசென்றுவிடுகின்றன.
உதாரணமாக தலைப்புக்கதையாகிய பச்சைநரம்பு. தன் பாலியலின் நுண்ணிய தளம் ஒன்றைக் கண்டடையும் கதைசொல்லியின் தருணம் அக்கதையின் உச்சம். தன் வயதான ஒருத்தியிடமும் தன்னைவிட மூத்த ஒருத்தியிடமும் கண்டடையும் அந்தப் பச்சைநரம்பு. ஆனால் அக்கண்டடைதல் இலக்கியவாசகனுக்கு எவ்வகையிலும் புதியது அல்ல. இத்தகைய வளரிளம்பருவத்துக் காமத்தில் ஊடாடிச்செல்லும் இழைதான் அது என அவன் ஏற்கனவே அறிந்திருப்பான்.
இச்சை கதை இதேபோன்று காமத்தின் இன்னொரு பக்கம். அழுத்தப்பட்ட விழைவு அந்த விசையாலேயே பக்கவாட்டில் கண்டடையும் விரிசல்கள். அது அக்காலத்தை மிக இயல்பாகக் கடந்துசெல்வதிலுள்ள விந்தை. ஆயினும் அக்கதையும் புதியது அல்ல. வெளிதல் போன்ற கதைகளை ஜி.நாகராஜன், ராஜேந்திரசோழன் எழுபதுகளிலேயே எழுதிவிட்டார். ஜெயகாந்தன், வண்ணதாசன் கதைகளில்கூட இதே உலகு வெளிப்பட்டுள்ளது. பாலியல்தொழிலாளியின் உலகினூடாகச் செல்லும் இக்கதை நாம் நன்கறிந்த அதே பாலியல்தொழிலாளிதான். அவளுடைய அந்தக்காதலனும் வழக்கமானவன்தான். அவன் பேசும் தத்துவம்கூட ஏற்கனவே இலக்கியத்தில் கேட்டதுபோல் உள்ளது.
இக்கதைகளின் சிறப்பு என்னவென்றால் அனோஜனின் இக்கதைகள் முன்னோடிகள் எழுதிய கதைகளுக்குப்பின்னால் தேர்ச்சியின்றித் தொடர்வனபோல் இல்லை. அவர்கள் எழுதிய இடத்திற்கு மிக எளிதாக வந்து நின்றிருப்பவையாக உள்ளன. இதனாலேயே இவை தமிழ்ச்சூழலில் பெரிதும் ரசிக்கப்படுவனாக இருக்கலாம். ஆனால் இலக்கியவாசகனுக்கு அவை எந்த அளவுக்கு முன்னகர்ந்துள்ளன என்பதே முதல்வினாவாக இருக்கும்.
அனோஜனின் இத்தொகுதியிலுள்ள கதைகளில் முக்கியமானவை போரும் அடக்குமுறையும் கண்காணிப்பும் மிகுந்திருக்கும் சூழலில் வளரும் இளைஞனின் மெய்யான உணர்ச்சிகளை, அவன் அதற்குள் செயல்படும் விசைகளை கண்டடையும் தருணங்களைச் சொல்லும் படைப்புகள்தான். அவ்வகையில் தமிழுக்கு முக்கியமான தொகுதி இது.
தன்னை புரட்சியாளனாகவோ கலகக்காரனாகவோ எல்லாம் கற்பனை செய்துகொள்வதுதான் இந்த வயதில் எழுதவரும் படைப்பாளி சென்று சேரும் படுகுழி. அந்தப்பொய்மையை மேலும் மேலும் ஊக்கி அதை தொடர்ந்து நடிக்கும்படி அவனை உந்தும் அரசியல்வாதிகள் இலக்கியத்துள் புகுந்து கூச்சலிடுவது என்றுமே இங்கு மிகுதி. அக்கூச்சலால் அழிக்கப்பட்ட எழுத்தாளர்களின் ஒரு பட்டியலே என்னிடம் உள்ளது. அனோஜன் இயல்பாக, மிகச்சரியாக, தன்னை வரலாற்றுப்பெருக்கின் ஒரு துளியாக உருவகித்துக்கொள்கிறார். அந்த நேர்மையாலேயே கைகூடும் கலையமைதி இக்கதைகளில் மீளமீளக் காணக்கிடைக்கிறது.
போர்ச்சூழல் என்பது முதன்மையாக கருத்துக்கள் அனைத்துமே மிகையாக்கப்பட்டு பெருவிசையுடன் பிரச்சாரம் செய்யப்பட்டு தனிச்சிந்தனைகளுக்கு இடமே இல்லாமல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும் ஒரு களம். அங்கிருந்து இப்படி அனுபவங்களுக்கு உண்மையாக அமைந்து எழுத முழுச்சூழலையும் நெஞ்சுகொடுத்து எதிர்த்துநிற்கும் படைப்பாணவமும் அதிலிருந்து எழும் வற்றாத ஆற்றலும் தேவை. அது அனோஜனை இன்னும் நெடுங்காலம் கைவிடாதிருக்கட்டும்.
வெவ்வேறு களங்களின் நீள்கின்றன வன்முறையை எதிர்கொள்வதைக் குறித்த கதைகள். மனநிழல் கதையில் ‘வேந்தனைச் சுட்டுட்டாங்கடா’ என்னும் அலறலுடன் சூழல் விரிகிறது. தோழன் அரசுப்படைகளால் சுடப்படுகிறான். அதைத் தொடர்ந்த கண்காணிப்புகள், அதன் அச்சம் உறைந்து குளிரும் சூழல். அந்தப்பதற்றம் வழியாகச் செல்லும் கதையின் நுண்ணிய உச்சம் என்பது அங்கிருந்து கிளம்பி சுவிட்சர்லாந்தில் அகதியாக நுழையும்போது அந்தத் தோழன் சுடப்பட்ட செய்தியும் அவனுடன் இருக்கும் புகைப்படங்களுமே அகதிக்கோரிக்கைக்கான ஆவணமாக ஆவதுதான். தம்பி செத்ததும் மயங்கிவிழும் அக்காவுக்கும்கூட அதுவே முதலீடு. சுவிட்சர்லாந்தில் இருக்கும் வேந்தனின் அக்காவைச் சென்று பார்க்க அம்மா சொல்லும்போது அவன் சென்றமையும் அமைதியில் வரலாற்றின் அபத்தம் ஒன்று வெளிப்படுகிறது.
இணைகோடு போர்ச்சூழலில் சிங்களச் சிப்பாய் ஒருவனுடன் காதல்கொள்ளும் பெண்ணின் கதை. போர்முடிந்து ஒவ்வொன்றும் என்னவெல்லாமோ ஆக மாறியபின் அப்பெண்ணைச் சந்தித்து அவள் வழியாக அதிகாரவர்க்கத்துடன் ஒரு மெல்லிய தொடர்பை உருவாக்கிக் கொள்கையில் அவனுக்குப்புரிகிறது அப்பெண்ணைக் கவர்ந்து காதல்கொள்ளச் செய்த அந்த விசை என்ன என்று.
ஒவ்வொரு கதையும் இதுவரைச் சொல்லப்படாத ஒன்றைச் சொல்கின்றது. அவை புனைவிலக்கியத்தால் மட்டுமே சொல்லப்படத்தக்க, செய்தியாக எந்த மதிப்பும் அற்ற மிகச்சிறிய உண்மைகள், அதேசமயம் முழுமைநோக்கில் வாழ்க்கையையே முடிவுசெய்யும் ஆற்றல்கொண்டவை என்பதே இக்கதைகளை முக்கியமானவையாக ஆக்குகிறது.
இவற்றில் இருகதைகள் இரு எல்லையில் மானுடத்தின் இயல்புகளைச் சொல்வனவாக முக்கியமானவை. பலி கதையில் முதல் வெடிகுண்டுத் தாக்குதலில் ஏதுமறியாதவனும் தன் இனத்தைச் சேர்ந்தவனுமாகிய பத்துவயதுச் சிறுவன் ஒருவனைத் தவறாகக் கொல்கிறான் ஒர் இளைஞன். குண்டின் கந்தக மணம் ஆடையில் மாறாதிருக்க உளக்கொந்தளிப்பால் வதைபடுகிறான். அடுத்த முறை செல்பேசியை இயக்கி குண்டை வெடிக்கச்செய்ய ஆணையிடப்படுகையில் தவிக்கிறான். கட்டாயப்படுத்தப்பட்டமையால் அதைக் கடந்து அதைச் செய்கிறான். அது அவனை கொலைக்காரனாக்கிவிடுகிறது. பிறகு எந்த தயக்கமும் இல்லை.
மானுடனின் அறவுணர்ச்சி, இரக்கம் என்பதெல்லாம் எத்தனைமேலோட்டமான சூழல்சார்ந்த உளப்பழக்கங்கள், பழக்கம் மூலமே எத்தனை எளிதாக அவற்றைத் தாண்டமுடியும் எனச் சொல்லும் இக்கதை அனோஜனின் இயல்பை வெளிப்படுத்துவதும்கூட.பெரும்பாலான கதைகளில் மானுடமேன்மை எனச் சொல்லப்படும் அனைத்தையும் பொருளற்றவையாகவே காண்கிறான் கதைசொல்லி. காமத்தாலும் வன்முறையாலும் முடையப்பட்ட ஒன்றாகவே மானுட அகம் மீளமீளச் சித்தரிக்கப்படுகிறது.
இப்படைப்புகளில் குரூரமானது என்று தோன்றுவது உறுப்பு. ஈழப்போரின்போது பல்வேறுவகைகளில் ஆண்கள் உறுப்புகள் சிதைக்கப்படுவது நிகழ்ந்தது. அது வதை மட்டுமல்ல ஒருவகை குறியீட்டுச்செயல்பாடும்கூட. ஆண்மை என்பது தன்னிலை, ஆணவம், தாக்கும்தன்மை என்றெல்லாம் பொருள்கொள்வது. ‘நலமடித்தல்’ என்ற விந்தையான சொல் ஈழ வழக்கில் இதைச் சுட்டுகிறது.
உணர்வால், உடலால் நலமடிக்கப்பட்ட ஒருவனின் நுட்பமான மீட்சியைச் சொல்லும் இக்கதை பழிவாங்கலினூடாகவோ மேலெழுதலினூடாகவோ அதை சித்தரிக்கவில்லை. முற்றிலும் எதிர்பாராத இடமொன்றில் முற்றிலும் சாதாரணமான ஒரு செயல்வழியாக அதைக் காட்டுகிறது. ஒற்றைப்பருக்கை சீனியை நாவில் வைத்துக்கொண்டதுபோல் துளியினும் துளியான இனிமை. அது அளிக்கும் புத்துயிர்.
ஈழச்சூழலில் சமீபகாலத்தில் எழுதப்பட்ட கதைகளில் முதன்மையானது இது என்பேன். மீளமீள அரசியல்பிரக்ஞையால் மட்டுமே ஈழக்கதைகள் எழுதப்படுகின்றன. எத்தனை முதிர்ச்சியானதாக, எத்தனை முழுமையானதாக இருந்தாலும் அரசியல்பிரக்ஞை என்பது இலக்கியத்தில் ஒருபடி குறைவானதே. அதனால் கவித்துவத்தை அடையவியலாது. அது எப்போதும் ஆசிரியனின் குரலுடன் இணைந்தே வெளிப்படும். ஆசிரியனின் கருத்துநிலை இன்றி அது நிலைகொள்ள இயலாது. அதுவே அதன் மையமான கலைக்குறையாக எப்போதும் உடனிருக்கும். உச்சநிலையில் அதனால் இயல்வது கூரிய அங்கதம் மட்டுமே.
ஆனால் இலக்கியக்கலை இலக்காக்கும் வெற்றி என்பது கவித்துவத்தில், தரிசனத்தில் உள்ளது. அதை கதைக்குள் நிகழ்த்துவதென்பது ஆசிரியன் தன்னை உதிர்த்துச் சென்றடையும் ஒரு தருணம். அது நிகழ்ந்திருக்கும் இக்கதையால் அனோஜன் இச்சிறுகதைத் தொகுதியில் இலக்கிய ஆசிரியனாக வெளிப்படுகிறார்.