மூதன்னை மடி- ஐசக் பாஷவிஸ் சிங்கரின் சோஷா

singer_isaac_b_WD

நம்மில் அனைவருக்கும் இளமையில் ஒரு காலகட்டம் வந்திருக்கும். அதுவரை நம்மிடம் வந்து சேர்ந்த மதிப்பீடுகளை, விழுமியங்களை பரிசீலிக்கும் காலகட்டம். நதியின் போக்கில் ஏற்படும் திருப்பம் போல. ஏறத்தாள அது பெரும்பாலும் நம் கல்லூரிப் பருவமாக இருக்கும். அப்போது தான் குடும்பத்தின் நிழலிலிருந்து வெளிவந்து கல்லூரி விடுதியில் இரவும் பகலும் தனியாக இருந்து நம் வேலையை முழுக்க நாமே செய்யவேண்டடிய நிலையிருக்கும். கல்லூரி முடிந்து மாலை வேளைகளில் நண்பர்களுடன் அரட்டை அடித்து கொண்டிருக்கும் வேளைகளில் இயல்பாக சில விவாதப்பொருட்கள் மேலேழும். முதன்மையாக காதல் மற்றும் ஆண், பெண் உறவுகள் குறித்து.

அப்போது விகடனில் சுஜாதா எழுதியதை படித்து அதன் கிரக்கத்தில் நானிருந்த காலம். ஓரிடத்தில் காதல் என்பது வெறும் ஹார்மோன்களின் விளையாட்டு அல்லாமல் வேறெதுவுமில்லை என்ற அவரின் வரியை தருணம் கிடைக்கும்போதெல்லாம் உபயோகித்துக் கொண்டிருந்தேன். அது எனக்கு ஒரு முற்போக்கு, அறிவுஜீவிக்களையை கொடுத்தது. அது அப்படியே நீட்சி பெற்று பெண்களிடம் காதலல்லாமல் நட்புடன் பழகவே முடியாது என்றும் காதல் திருமணமன‌த்தின் சிக்கல்கள் என நீண்டு செல்லும். அனைத்திலும் பொதுசரியின் நிலைப்படுகளிலிருந்து சற்று விலகியிருப்பதே நம்மை சிந்திப்பவர்களாகக் காட்டியது. அதே சமயம் பல்வேறு சகமாணவர்களின் கருத்துக்களும் சேர்ந்து அந்த விவாதப்பொருள் சார்ந்த அனைத்துத் தரப்புகளும் கேட்கும் வாய்ப்பும் இருந்தது.

ஆனால் அங்கிருந்து கிளம்பி அவ்வபோது என் வீட்டிற்கோ அல்லது என் பூர்வீக கிராமத்திற்கோ செல்லும் ஒவ்வொரு தடவையும் அவர்களிடம் எனக்கிருந்த விலக்கம் கூடியபடியே இருந்தது. ஒவ்வொரு முறையும் நான் வளர்ந்து வருவாதகவும் என் சொந்தங்களோ தேங்கியிருப்பதாகவும் நினைத்தேன். சடங்குகள் சார்ந்த பழங்குடி மனநிலையில் அவர்களிருப்பதாக எண்ணிக்கொள்வேன். அப்போது நான் நம்பியதெல்லாம் நிரூபணவாத அறிவியல் தரப்பை மட்டுமே. அல்லது அனைத்து செயல்களுக்கும் ஒரு புறவயக்காரணம் இருந்தால் மட்டுமே அது சரியென்றும் தேவையென்றும் பட்டது. இப்போது நினைக்கையில் பின்நவீனத்துவத்தின் அறிமுகத்திற்கு பின்பு அறிவியலின் பீடமான தர்க்கமும் பெருங்கதையாடலின் ஒரு தரப்பு மட்டுமே என்றும் ஒன்றை கட்டியெழுப்பும் போதே வசதியாக அதன் முரண்களை மறைக்கிறோம் என்பதும் தெரிவதற்கு முன்பான மனநிலையது என்று தோன்றுகிறது.

இந்த நவீன சிந்தனைகள் அனைத்தும் நம் மேல் மனம் சார்ந்தது மட்டும் தானா? ஒரு நெருக்கடி நிலையில் நம் மனம் என்ன செய்யும்? என் மரபுப் பிண்ணனியிலிருக்கும் அந்தசடங்குத்தன்மை சார்ந்த நிலைப்பாட்டைத் தான் எடுக்குமா?

ஐசக் பாஸ்விஷ் சிங்கரின் “சோஷா” நாவலை படிக்கும் போது இந்தக் கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தது. சிங்கரின் படைப்புகளில் அதிக சுயசரிதைத்தன்மை வாய்ந்த படைப்பிது எனக் கூறப்படுகிறது. நாவலின் கதைசொல்லி ஆரோன் தன் குழந்தைப் பருவத்தில் குடியிருக்குப்பது சிங்கர் வாழ்ந்த வீடுதான் (முகவரி உட்பட). நாவலின் ஆரம்ப வரியே நம்மை தூக்கியெறியும் அதிர்ச்சித்தன்மை வாய்ந்தது. இப்படி ஆரம்பிக்கிறது நாவல். “நான் மூன்று இறந்த மொழிகளில் வளர்க்கப் பட்டேன். ஹீப்ரூ, அராமிக், யிட்டிஷ் (இந்த மூன்றாவதை சிலர் மொழியாகவே கருதுவதில்லை).” யூதனான ஆரோன் வாழும் சூழலும் அவ்வாறே. அவன் கற்கும் பள்ளியில்(cheddar) எந்த நவீன பாடமுமில்லை. அவர்களின் மதசடங்கு சம்பந்தமான ஆரம்பக்கல்வி மட்டுமே. கிட்டத்தட்ட ஆறேழு நூற்றாண்டுகளுக்கு முன்பே வார்ஸாவில் குடிபெயர்ந்த அந்த சமூகம் கண்ணறியா வேலிக்குள் அடைந்து கிடக்கும் சித்திரத்துடன் நாவல் துவங்குகிறது.

sosh

நாவலின் கட்டமைப்பு என்பது அவன் வாழ்வில் சந்திக்கும் 5 பெண்கள் மற்றும் 1 ஆண் மூலம் நடக்கும் சம்பவங்ககளின் கோர்வையாக ஒரே நேர்கோட்டில் பயணிப்பது. அதன் மூலம் அவன் அகச்சிக்கலும் அவனை சுற்றிய சமூகத்தின் வாழ்க்கைப்பாடுகளையும் சொல்லிச்செல்கிறது.

நாவலின் மையம் என்பது வரலாறு முழுக்க நெருக்கடிகளுக்கும் தொடர்ந்த புலம்பெயர்தல்களுக்கும் உள்ளான ஒரு சமூகத்தின் சிறிய துண்டு மற்றுமொரு நெருக்கடியை எப்படி எதிர்கொள்கிறது என்பதை சில கதாப்பாத்திரங்களின் வாழ்வோட்டத்தின் மூலம் காட்டுகிறது. ஆனால் சிங்கர் இந்த நாவலைப் பற்றி கூறும் போது இது எவ்வகையிலும் மொத்த யூதசமூகத்தைப் பற்றிய கதையல்ல. அந்த சமூகத்திலிருக்கும் ஒரு ‘சில’ மனிதர்களின் கதையிது எனக் கூறுகிறார். ஆனால் நாவலின் ஓட்டம் அவ்வாறில்லை. இதில் வரும் கதாப்பாத்திரங்களிற்கிடையிலான உரையாடல் யூதசமூகத்தின் பொது உளவியலைப் பற்றி அதிகம் விவாதிக்கிறது. அந்த மதத்தின் பின்னுள்ள சிக்கல்களையும் அதற்கும் கிறித்துவத்திற்குமிடையிலான உரசல்களையும் தொட்டுச்செல்கிறது. அனைத்திற்கும் மேலாக இத்தனை போராட்டங்களுக்கிடையேயும் அது நீடித்து வாழ்வதற்குப் பின்னுள்ள காரணத்தை நோக்கிய தேடலையும் அது நிகழ்த்துகிறது. ஆகவே என்னளவில் ஆசிரியின் இந்தக் கூற்றை சற்று புறக்கணித்துவிட்டுதான் நாவல் மீதான என் பார்வையை உருவாக்கிக்கொண்டேன்.

மேற்தளத்தில் நாவலின் மைய்ய முடிச்சென்பது பல்வேறு பெண்களுக்கு மத்தியிலும் ஆரோன் சோஷாவிடம் ஏன் சேர்கிறான் என்பதுதான். கட்டுப்பெட்டியான சூழலில் பிறந்தாலும் ஆரோன் தன் சுயவுந்துதலால் ஜெர்மன், போலிஷ் போன்ற மொழிகளைக் கற்றுக்கொண்டு அதன்மூலம் அறிவியல், தத்துவம் போன்ற துறைகளில் தேர்ந்து மெல்ல தன் பார்வையை விசாலமாக்கிக் கொள்கிறான். ஒரு எழுத்தாளராகி பத்திரிக்கைகளுக்கு தன் படைப்புகளை அனுப்பி தன் வாழ்வை நகர்த்துகிறான். ஆரம்ப காலங்களிலிருந்தே பல பெண்களுடன் உறவு வைத்துக் கொள்கிறான். கிட்டத்தட்ட அவனுடன் பழக நேரிடும் அனைத்து பெண்களையும் ஈர்க்கும் வல்லமை கொண்டவன். பொருளாதாரத்திலும் அறிவிலும் மேலான பல பெண்களைக் கடந்தாலும் தன் இளவயது சினேகிதியான சற்று அறிவுவளர்ச்சி குன்றிய சோஷாவுடன் வாழமுற்படுவதற்கு பின்னுள்ள மனநிலை இப்படைப்பின் மையங்களில் ஒன்று.

இரண்டாம் உலகயுத்தத்தில் ஹிட்லர் முன்னேறி வார்ஸா நோக்கி வந்துகொண்டிருக்கும் தருணமது. பேரழிவின் கர்ஜனை தெருமுனை வரை வந்துவிடுகிறது. அப்போது அவனுடைய தோழியும் நாடக நடிகையுமான பெட்டி(Betty) தன்னை மணந்து கொண்டு தன்னுடன் அமெரிக்கா வந்துவிடுமாறு கூறுகிறாள். வேண்டுமானால் அவர்களது வீட்டின் பணிப்பெண்ணிற்கானவள் எனக் கூறி சிறிது காலத்திற்காவது சோஷாவையும் கூட்டிச் சென்று அவளுக்கு அங்கு மருத்துவமும் பார்க்கலாமென யோசனைசொல்கிறாள். ஆனால் ஆரோன் மறுத்து விடுகிறான். இன்னொரு பெண்ணை மணப்பதை சோஷாவால் ஏற்றுக் கொள்ள முடியாது அப்போதே அவள் இறந்து விடுவாள் என்கிறான். நீங்கள் இங்கு இருந்தால் தான் இறப்பு உறுதி, அமெரிக்கா வந்தால் அனைவரின் வாழ்வும் நன்றாக இருக்குமென பல வகையில் சமாதானம்செய்ய முயல்கிறாள். அவனோ விடாப்பிடியாக முடியாதென்கிறான்.

பல தருணங்களில் இக்கேள்வி அவனை நோக்கி வந்து கோண்டேயிருக்கிறது. அதற்குப் பின்னுள்ள மனநிலையை அக்கேள்வியைக் கேட்பவர்களால் தொடமுடியவில்லை. ஒவ்வொரு முறையும் வெவ்வேறாக பதிலளிக்கிறான். ஏனென்று தனக்கு தெரியாதென ஒருமுறை. மற்றொரு முறை வாழ்க்கையில் நாம் அனைத்தையும் காரண காரியங்களோடு செய்வதில்லை என. உண்மையில் அவனுக்கும் தெரியாதுதான். கடைசியாக ஒருமுறை தாளமுடியாமல் “அவளை மட்டுமே நம்ப முடியும்” என்கிறான். அந்த பதில் பெட்டியை திருப்திப்படுத்துகிறது. தான் அதுவரை உறவு கொண்ட அத்தனை பெண்களுக்கும் அவன் முதல் நபர் அல்ல. சில உறவுகள் அவர்களின் கணவர்களுக்கு தெரியாமல் நடந்திருக்கிறது. அல்லது அதற்கு முன்னர் அப்பெண்களுக்கு வேறு காதலர்கள் இருந்துள்ளனர். அவன் முதல் நபர் இல்லையென்பதால் கடைசியாகவும் இருப்பதற்கான உத்திரவாதமில்லை என அவன் நினைப்பதால்தான் எதுவும் தெரியாத அப்பாவியான சோஷாவை திருமணம் செய்துகொள்கிறான் என நினைத்துக்கொள்கிறாள். தன் கீழ்மை மற்றொரு கீழ்மையின் சாத்தியத்தைதான் ஏற்றி திருப்தியடைகிறது.

ஆனால் ஆரோனின் வாழ்வைத் தொடரும் நமக்கு ஏன் என்ற கேள்வியே எழுவதில்லை. அதுதான் அவனுடைய இயல்பான முடிவாக நமக்குப் படுகிறது. அதுவரை அவன் சந்தித்த பெண்களனைவரும் எதோவகையில் வளர்ந்தவர்கள். முதிர்ச்சியடைந்த மனிதர்களின் மனக்கணக்குகள் கொண்டவர்கள். வெளிவரும் வார்த்தைகள் அனைத்தின் பின்னாலும் சிறிய அளவிலேனும் ஒரு மதிப்பீடு இருக்கும். அது அவர்கள் அதுவரை சமூகதிற்கு காட்டிய முகத்தோடு ஒத்துயிருக்கவேண்டியதை சரிபார்த்துக் கொள்வார்கள். ஆனால் சோஷா மனவளர்ச்சி ‘குன்றி’யவள். உள்ளிருப்பதை அப்படியே எந்த கணக்குகளுக்கும் உட்படுத்தாமல் வெளிவைப்பவள். அது ஆரோனுக்கு எல்லையற்ற ஆசுவாசத்தை தருகிறது. கிட்டத்தட்ட தன் சமூகத்தின் ஒரு தொல்மனதின் அருகிலிருக்கும் நிறைவு அது.

இன்னொன்று அவள் மடிசேர்வது விட்டுவந்த தன் பால்யகாலத்திற்கு மீண்டும் திரும்பவதைப் போன்றது அது. அவன் எங்கிருந்து உருவாகினானோ அந்த ஆதியின் அருகிலிருப்பது. ஆறேழு வயதில் சோஷாவுடன் உரையாடும் போதுதான் அவனுளிருந்த அந்த கற்பனையாளன் வெளிவந்தான். தான் படித்த நூல்களிருந்த கதைகளை அவளுக்கு ஏற்ற்படி தன் கற்பனையையும் கலந்து கூறும்போதுதான் தன்னை கண்டடைகிறான். அவளுடன் சேர்வதென்பது தன் ஊற்றுக்கு செல்வது போன்றதுதான்.

மேலும் முக்கியமான ஒன்று அவன் வாழும் காலகட்டம். அழிவு அவன் இல்லக்கதவை தட்ட நெருங்கும் தருணம். பெட்டி தான் அவனுடைய கடைசி பிடிப்பு. அதை விட்டுவிட்டால் பெரும்பாலும் அங்கிருந்து வெளிச்செல்லமுடியாத மரணம் தான். எந்த ‘புத்திசாலி’யும் அங்கிருந்து செல்லத்தான் முடிவெடுப்பான். ஆனால் அவன் சோஷாவுடன் தங்குகிறான். பெட்டியுடன் தன் முடிவை தெரிவிக்கும் போதும் உள்ளுக்குள் தன்னையே கடிந்து கொள்கிறான். தெரிந்தே அழிவுப் பாதையை தேர்ந்தெடுப்ப்பதாக. இவ்விடத்தில் சோஷாவின் கதாப்பாத்திரத்தின் குணாதிசயத்தை பொருத்திப் பார்ப்பது ஒரு தெளிவைத் தரும்.

முற்கூறியதைப் போல சோஷா அனைவரையும் போல் ஒரு சராசரியான பெண் அல்ல. கிட்டத்தட்ட தன் குழந்தைப்பருவ வளர்ச்சியிலேயே நின்றுவிட்டவள். நாவல் முழுக்க அவள் பேசும் உரையாடல்களை இரு பிரிவுகளில் சுருக்கிவிடலாம். முதலாவது ஆரோனிடமும் அவள் அன்னையிடமும் வைத்திருக்கும் பிடிப்பு. பிடிப்பென்றால் குழந்தையின் பிடிப்பைப்போன்றது. அவர்களின் நலனுக்கினையாக தன் நலனும் அதில் சம அளவில் கலந்திருப்பது. இன்னொன்று இறந்துபோன தன் தங்கையை அடிக்கடி அவள் காண நேர்வது. கிட்டத்தட்ட இன்னொரு தூல இருப்பு போல. ஒரு தடவை தன்னுடைய அறிவுஜீவிக் குழுமத்தில் வசியத்தில் தேர்ந்த‌ ஒருவர் அவளைக் கண்டவுடன் இவள் ஒரு சிறந்த ஊடகமாக இருக்கக்கூடும் என சரியாக கணிக்கிறார். ஒரு சோதனையில் சில நொடிகளிலேயே அவள் ஆழ்ந்து உறங்கி இறந்தவர்களின் ஊடகமாகி விடுகிறாள். அதிலிருந்து அவளை எழுப்புவது தான் சற்று சிரமமாகிவிடுகிறது.

so

இந்த மர்மத்தன்மைகள் தான் அவளை கலாச்சார தடயங்கள் அவள் மேல் படாத ஒரு ஆதிமனமாக அவளை எண்ணவைக்கிறது. வனத்திலிருக்கும் ஒரு முதிய ஆலமரம் போல. ஒரு மூதன்னை போல. ஆனால் ஆரோனோ அதற்கு நேர்மாறானவன். நவீன அறிவு உலகின் அத்தனை வளர்ச்சிகளையும் தன்னுள் கொண்டவன். சிறுவயதிலேயே மதமும், தத்துவமும் கற்றுத் தேர்ந்தவன். அவர்களின் குழுமத்தின் விவாத‌ங்களில் ஸ்பினோசாவும், காண்ட்டும், நீட்ஷேவும் அடிபடுவார்கள். யூத மதத்தின் பன்மைத்தன்மைகள் பற்றிய நிறைகுறைகள் அலசப்படும். அதேவேளையில் அனைவரும் தட்டி நிற்கும் இடமொன்று வரும். பெரும்பாலும் அது அமானுஷ்ய தருணங்களின் இடங்கள். அதை அவர்களால் கடக்கமுடிவதில்லை. அதை அலசி ஒரு தரப்பில் நிறுத்தமுடியவில்லை. தங்கள் தனியனுபவங்களைக் கூறி அதற்கு மேல் விளக்க வகைப்படுத்த திராணியற்று நின்றுவிடுகிறார்கள். இந்த தர்க்க எல்லை கடக்க முடியாத வெளியிலிருக்கிறாள் சோஷா. ஆரோன் கொள்ளும் ஈர்ப்பிற்கான காரணமாக இதைத்தான் எண்ணத்தோன்றுகிறது. அவன் உணர்ந்து எடுத்த முடிவாக அல்லாமல் அவன் ஆழம் எடுத்த இயல்பான முடிவாகத் தான் இது காட்டப்படுகிறது. விளக்கம் கேட்டால் அவனாலேயே சொல்ல முடியாதுதான்.

இந்த புதிர்த்தன்மை கொண்ட சோஷா அவள் சார்ந்த யூத மதத்தின் நீட்சியாக உருப்பெறுவதுதான் இந்த நாவலை தனித்த படைப்பாக்குகிறது. நாவலில் யூதமதத்தை சுட்டி விவாதிகப்படுவை பெரும்பாலும் மரணத்தை அது எப்படி எதிர் கொள்கிறது என்பதைப் பற்றி தான். ஓரிடத்தில் சோஷா தன் தங்கை எங்கிருப்பதாக கேட்கிறாள். அதற்கு ஆரோன் இங்கு தான். ஆனால் வேறு காலத்தில். இந்த உலகம் ஒரு புத்தகம் போல. இறந்தவர்களனைவரும் வாசித்துமுடித்த பக்கத்திலிருக்கின்றனர். பங்கங்களை நம்மால் பின்திருப்பமுடிந்தால் அவர்கள் இருப்பார்கள். எங்கும் மறைந்துவிடுவதில்லை என்கிறான்.

நாவலின் இறுதியில் ஆரோன் ஹிட்லரின் ஆக்கிரமிப்பின்போது வார்ஸாவிலிருந்து தப்பி அமெரிக்கா சென்று புகழ்பெற்ற எழுத்தாளனாகிறான். தன் பணி தொடர்பாக டெல் அவிவ் விற்கு வரும் போது தன் பழைய காதலியின் கணவணான ஹைமில்(Haiml) லை சந்திக்கிறான். இருவரும் தங்களது கடந்த காலங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆரோன் வார்ஸோவிலிருந்து வெளிவேறி சோஷாவுடன் ஒரு காட்டினூடானாக சென்று கொண்டிருக்கையில் அவள் இறந்து விட்டதாக கூறுகிறான். மாரடைப்பா என ஹைமில் கேட்க அதற்கு ஆரோன் அதெல்லாமில்லை. அவளுக்கு வாழ்ந்தது போதும் என தோன்றவே இறந்து விட்டாள் என்கிறான். வாழ்கை முழுக்க புதிராகவே வாழ்ந்த அவள் அதே விசித்திரத் தன்மையுடன் இறந்தும் விடுகிறாள். அதைதொடர்ந்து தான் ஷாங்காய் சென்று அங்கிருந்து அமெரிக்கா சென்று விட்டதாக கூறுகிறான்.

ஹைமில் தன் வெளியேற்றத்தைப் பற்றி கூறுகையில் அற்புதத்திலிருந்த தன் அவநம்பிக்கை இப்போது நீங்கி விட்டதாக கூறுகிறான். அதற்கு தன் வாழ்வே சாட்சி. யாராவது இத்தனை காலம் தான் வாழ்ந்திருக்கக் கூடும் எனக் கூறியிருந்தால் தானே நம்பியிருக்கமாட்டேன். யூதர்களாகிய நாமெல்லாம் புழுக்களைப் போல. அழிவிக்கால்களின் மிதி படாத இடங்களைத் தேர்ந்து செல்லும் லாவகம் கொண்ட புழுக்கள் நாம் என்கிறான். அதே சமயம் ஆத்மாக்களுக்கு அழிவில்லை என்ற தன் நிலைப்பாட்டைக் கூறுகிறான். பல்லாயிர பல‌லட்ச‌ வருடங்களாக இங்கு பாறைகளும், மண்ணும் இருக்குமாயின் ஆத்மாக்கள் மட்டும் ஏன் இருக்காது. தன் மனைவி செலியாவும் இங்குதான் இருப்பதாகவும், தான் அவளின் குரலைக் கேட்டுத் தான் மரியனாவை மணம் செய்து கொண்டதாகவும் கூறுகிறான்.

நாவல் முடிந்த‌வுடன் இரண்டு முக்கியமான வரிகள் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டே இருந்தது.

முதலாவது சோஷா ஆரோனிடம் கேட்பதாக வருவது.

சோஷா : கடவுள் அன்பானவரா?

ஆரோன் : நாம் நினைக்கும் வகையில் அல்ல.

சோஷா : கடவுள் நம்மிடம் பரிவுடன் இருக்கிறாரா?

ஆரோன் : நாம் புரிந்துகொள்ளும் வகையில் அல்ல.

இன்னொரு இடத்தில் ஆரோன் வெறுப்புற்று சொல்கிறான்.

ஞானமென்பது கடவுளென்றால், மூடத்தனம் எவ்வாறு இருக்க முடியும்.

வாழ்வென்பது கடவுளென்றால், இறப்பு எவ்வாறு இருக்க முடியும்.

நாவலின் முடிவில் ஒரு காட்சி வருகிறது. ஆரோன் ஒரு ஹோட்டலின் மொட்டை மாடியிலிருந்து எதிரிலுள்ள கடலை பார்கிறான். மக்கள் அந்த கடும் வெயிலுக்கு இதமாக கடலில் தன் குழந்தைகளுடன் விளையாடித் திளைத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த இடத்தில் ஒரு யூதன் கிழிசலாடைகளுடன் அவர்களிடம் பிச்சை கேட்டு ஒவ்வொருத்தினரிடமும் செல்கிறான். அதைப் பார்த்து ஆரோன் புன்னகைக்கிறான். எங்கு எடுத்தால் பணம் கிடைக்கும் என்பது கூட தெரியாத அவனது அறியாமையை எண்ணி. எனக்கு என்ன தோன்றியதென்றால் அந்த சிறு அசட்டுத்தனம் தான் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இவ்வளவு புலம்பெயர்தல்களுக்கு பின்பும் அவர்களை தாக்குப் பிடித்து நிலைக்க வைத்துள்ளதென்று. அனைவரிடமும் உள்ள அந்த சிறிதளவு சோஷாதான் அவர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறாள் என. எளியவர்களை கைவிடும் சுதந்திரம் இறைவனுக்கில்லை.

ஆரோனின் வாழ்வோட்டத்தைப் பற்றி விவரிக்கும் போதே அதே அளவுக்கு அவனின் நண்பர்களுக்கிடையேயான விவாதங்களையும் விரிவாக சித்தரிக்கிறது. விவாதங்கள் பரந்த பார்வையில் இருவகையாக நிகழ்கிறது. ஒன்று வாழ்வின் அமானுஷ்யத்தன்மையை அதன் மர்மத்தை எப்படி புரிந்து கொள்வதென. இன்னொன்று மொத்த அறிவுப் பரப்பையும் ஒரு வகையான விளையாட்டாக பார்க்க முடியுமா என. நாவலில் அதிசுவாரஸ்யமான கதாப்பாத்திரம் ஒன்று வருகிறது. அவன் பெயர் மோரிஸ். கிட்டத்தட்ட அண்டத்தின் அனைத்தையும் பற்றி கருத்து வைத்திருப்பவன். அதனாலேயே அனைத்து கருத்துக்களையும் மறுப்பவன். அவனை பற்றி ஒரு வாசகம் வருகிறது. வழிதவறி தத்துவவாதியாக மாறிப் போன கலைஞன் அவன். தன் விளையாட்டுப் பொருளை வேண்டுமென்றே உடைத்து விட்டு, அது உடைந்தத‌ற்காக அழும் சிறுகுழந்தை போன்றவன். அவன் தன் வருங்காலத் திட்டமாக ஒரு கோயிலைக் கட்டவிருப்பதாக கூறுகிறான். அது முழுக்க முழுக்க ஹெடோனிஸ்ட்களுக்கான கோவில். அங்கு வருபவர்கள் தங்களை ஒரு விருப்ப ஆளுமையாக புனைந்து கொண்டு ஒரு சிறு வாழ்க்கையை வாழ்ந்து மீள்பவர்கள். வேட்கை மட்டுமே அதன் முதற்குறிக்கோள்.

அனைத்து வகையான கோட்பாடுகளும் நெறிகளும் விலகி நிற்கும் இடமது. துத்துவவாதிகள் அங்கு வெறும் விளையாட்டிற்காக மட்டுமே தங்கள் தரப்பை கட்டியெழுப்புவார்கள். ஒவ்வொருமுறையும் ஒரு தரப்பை எடுத்து அதன் களிப்பிற்காகவே அதை ஒட்டி தர்க்கங்களையும் கோட்பாடுகளையும் உருவாக்குபவர்கள். அத்தகைய ஒரு இடத்திற்கான கனவை மோரிஸ் கொண்டிருப்பான். அங்கு எதற்கும் முக்கியத்துவமில்லை. ஒன்றை செய்வதற்கான மகிழ்ச்சிக்கு மட்டுமே அங்கு இடம்.

கிட்டத்தட்ட மொத்த நாவலும் இந்த பார்வையையே தன் வெளிப்பாடாக வைத்துள்ளது. வரலாறு முழுக்க அழைக்கழிக்கப்படும் ஒரு சமூகத்தின் எள்ளல் அது. தன் வாழ்கை எந்த தர்க்க எல்லைக்குள் வைத்தும் பொருள் காண முடியாத போது அது கண்டடையும் ஒரு திறப்பு. அதன் மூலம் அந்த இக்கட்டை தாண்டிச் செல்கிறது.

இப்போது நினைத்துக் கொள்கிறேன். பெருநகரில் பன்னாட்டு நிறுவன வேலையின் பலத்தில் வாழும் ஒருவனுக்கு திடீரென கைமீறிய நிலையில் ஏதோ ஒரு புறச்சூழலால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அப்பணிச்சூழலையொட்டி அவன் மனம் பழக்கப்படுத்திவைத்திருக்கும் உணர்வுநிலை மாற்றங்கள் எங்கும் செல்லுபடியாகாத நிலை வருமாயின் என்ன செய்வானென்று. தன் சொந்த ஊரையும் அவன் பாட்டியையும் தேடித் தான் ஓடுவானோ? நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகள் உறைந்துள்ள அந்த சூழலில் தான் அவனை தாங்க ஒரு அமைப்பு உள்ளதோ? கட்டுப்பெட்டித்தனம் என நினைத்து வெளிவந்தவனுக்கு நவீன உலகின் இரும்பு விதிகள் அவனை சிதைக்குமாயின் அங்கு தான் மீண்டுசெல்வானோ? ஆரோன் சோஷாவிடம் சென்றதை போல.

பாலாஜி பிருத்விராஜ்

முந்தைய கட்டுரைகுடும்பத்திலிருந்து விடுமுறை -கடிதம்
அடுத்த கட்டுரைபுது வெள்ளம் (சிறுகதை)