மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் ஊடகத்துறையில் வேலை பார்க்கிறேன். இன்று எங்கள் அலுவலகத்தில் இந்த செய்தியை விவாதித்துக்கொண்டிருந்தோம் – https://www.thenewsminute.com/article/indian-medias-metoo-begins-women-journos-call-out-sexual-harassers-newsrooms-89548. இப்போது மேலைநாடுகளில் எல்லா துறைப்பெண்களும் பாலியல் தொந்தரவுகளை பற்றி ‘மீ டூ’ (#metoo) என்ற பெயரில் பேசத்தொடங்கியிருக்கிறார்கள். இந்தியாவில் அதன் அலை தொடங்கியுள்ளதாக இந்தச்செய்தி குறிப்பிடுகிறது.
இந்த செய்தியில் பல பெண்கள் பதிவுசெய்த இடர்களை என் வேலையிடத்தில் நானும் சந்தித்திருக்கிறேன். அந்த வகையில் இப்படிப்பட்ட செய்திகள் வெளியாவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விவகாரங்களை பற்றி பொதுவில் பேசமுடியாத சூழலில் பல பெண்கள் இருக்கிறார்கள். குறிப்பாக பாலியல் தொந்தரவு கொடுப்பது மேலதிகாரியாகவே இருந்தால் வேலை பறிபோகும் அபாயம் இருக்கிறது.
இன்னொன்று, இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பலர் கலை, இலக்கியம் போன்ற துறைகளில் செயல்படுபவர்கள். இவர்கள் உலகியல் அனுபவம் இல்லாத இளம்பெண்களை குறிவைத்து பொது நிகழ்வுகளில் மற்றும் தனிப்பட்ட உரையாடல்களில் பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்கள். இந்தத்துறைகளில் பொதுவாக நிலைப்படுத்தப்பட்ட அமைப்புகள் ஏதும் இருப்பதில்லை. புகார் கொடுக்க அமைப்புகள் இல்லாததால் இதைப்பற்றி மற்ற பெண்களிடம் பேசுவதைத்தவிர இத்துறைகளில் இயங்குபவர்களால் வேறெதுவும் செய்யமுடிவதில்லை. இப்போது சமூக வலைத்தளங்களில் இவர்களின் பெயர்களை வெளியிடத்தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் ஊடகத்தில், சினிமாவில், கலை-இலக்கிய உலகில் இப்படி ஒரு அலை வர சாத்தியம் உள்ளதா என்று தெரியவில்லை.
ஆனாலும் பொதுவில் விவாதித்த போது சில கேள்விகள் எழுந்தன. இது ஒரு விதத்தில் பெண்களுக்கு தைரியம் அளிக்கும் செயல்பாடுதான் என்றாலும் இதன் மூலம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன? நீதியா? இனிமேல் இபப்டிச்செய்தால் இது தான் கதி என்று பயம்காட்டலா? அல்லது பழிவாங்கலா? உடனடியாக புகார்கொடுத்து சட்டம் வழியான தீர்வுகளை பெண்கள் ஏன் தேர்ந்தெடுப்பதில்லை? அப்படியென்றால் பெண்களுக்கு சட்டம் மூலம் நீதி கிடைப்பது இங்கே அவ்வளவு கடினமானதா?
மேலும் மீ டூ போன்ற இயக்கங்களில் பெண்கள் தங்களை பலியாட்களாக சித்தரித்துக்கொள்ளும் போக்கு உள்ளது. அதுவே அவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கக்கூடும். அலுவலகத்தில் பல ஆண் நண்பர்கள் இந்த விவகாரங்களில் பொய்ப்புகாருக்கு பயப்படுவதாக சொன்னார்கள். இனி பெண் ஊழியர்களுடன் எந்த சந்தர்ப்பத்திலும் தனியே இருக்கப்போவதில்லை என்று ஒரு நண்பர் சொன்னார். எங்கள் ஊடகத்துறையில் இது சாத்தியம் இல்லை. இதனால் நடைமுறையில் பெண்களின் வாய்ப்புகள் பறிபோகும். இப்படி எல்லா துறைகளிலும் பெண்களை வெளியேற்றும் மனப்பான்மை வளர்ந்தால் அது ஆற்றல் கொண்ட பெண்களையே பாதிக்கும்.
அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள் ஏன் தொடர்ந்து பாலியல் தொந்தரவுகள் செய்கிறார்கள் என்ற பேச்சும் வந்தது. அவர்களுடைய பெற்றோர் அவர்களை சரியாக வளர்க்கவில்லை என்று நினைப்பதாக பல தோழிகள் சொல்கிறார்கள். சக மனிதர்களை துன்புறுத்தக்கூடாது என்பது ஓர் அடிப்படை விஷயம், இதைக்கூடவா சொல்லித்தரவேண்டும் என்கிறார்கள். சுற்றியிருக்கும் மற்ற ஆண்கள் இப்படி செய்பவர்களை கண்டிக்கவேண்டும் என்றார்கள். கூட வேலைசெய்யும் மூத்தவயது பெண்கள் சொல்வது வேறு. எல்லா ஆண்களும் அடிப்படையில் மிருக சுபாவம் கொண்டவர்கள், யாரையும் நம்ப முடியாது. ஆகவே பொதுவில் புழங்கும் பெண் தான் கவனமாக இருக்கவேண்டும் என்கிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து உங்களுடைய நிலைப்பாடு என்ன? ஆண்கள் பாலியல் துன்புறுத்தல்கள் செய்யாமல் இருக்க வழி என்ன? இந்த நிகழ்வுகளை பெண்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? வேலையிடத்தில் இருபாலரும் சுமூகமாக இயங்க வழி என்ன?
பா. ஜென்னிபர் பிரியா
அன்புள்ள ஜென்னிபர் பிரியா,
வழக்கம்போல என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்தே எழுதுகிறேன். கல்வித்துறையில் பெண்களிடம் பாலியல்தொல்லைகளில் ஈடுபட்டவர்களின் பெயர்களை பெண்கள் வெளிப்படுத்திய me-too இயக்கத்தின்போது தமிழகத்திலிருந்து அதிலிருந்த பெயர்களில் ஒன்று திராவிட அரசியல் பற்றி நிறைய எழுதிய டெல்லிவாழ் பேராசிரியர் ஒருவருடையது. [வேறு ஒருவர் பெயர் இடம்பெற்றிருக்குமென்றால் இங்கே தாண்டிக்குதித்து ரகளை செய்திருக்கும் வாய்ப்புள்ளவர்கள் அச்செய்தியைக் கேட்டபின் ஆழ்ந்த அமைதிக்குச் சென்றுவிட்டார்கள் ] ஆனால் அதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்னரே அவரைப்பற்றி பலர் அவ்வண்ணம் சொல்லி நான் கேள்விப்பட்டிருந்தேன்.
அன்று அது ஒரு கிசுகிசு அவ்வளவுதான். அதைப்பற்றிப் பேசுவதும் பரப்புவதும் ஒருவகை கீழ்மையாகவே தோன்றியது. தமிழகத்தின் புகழ்பெற்ற பல பேராசிரியர்களைப்பற்றி அவ்வண்ணம் இப்போதும் கிசுகிசுக்கப்படுகிறது. அவ்வியக்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தி அவர் பெயரைச் சொல்லும்போது அது கிசுகிசு அல்லாமலாகிறது. செய்தியாக மாறுகிறது. இதுதான் அவ்வியக்கத்தின் சாதனை.
தமிழகத்தின் புகழ்பெற்ற சமூகப்போராளி ஒருவரைப்பற்றி கிருபா முனுசாமி என்னும் வழக்கறிஞர் இணையத்தில் இதேவகையான குற்றச்சாட்டுக்களை பதிவுசெய்திருந்தார். நான் அந்த சமூகப்போராளி ஒருமுறை கைதுசெய்யப்பட்டபோது ஆதரித்து எழுதியிருந்தேன். பின்னர் கிருபா முனுசாமி கவிதா சொர்ணவல்லியுடன் வந்து என்னைச் சந்தித்தார். அச்சந்திப்பு நான் அந்த நபரைப்பற்றி எத்தனை தவறான புரிதலில் இருந்தேன் என தெளிவாக்கியது. அக்கட்டுரைகளுக்காக, அந்த மனிதரை ஆதரித்தமைக்காக, இன்னமும் வெட்குகிறேன். ஆனால் நான் எழுதிய கட்டுரைகள் என்பதனால் அவற்றை நீக்கவில்லை
ஊடகத்துறையில் இருந்த ஒரு பெண் கவிஞர் தமிழகத்தில் புகழுடன் இருந்த ஒரு சினிமா இயக்குநர் அவரிடம் நடந்துகொண்ட முறையை என்னிடம் சொன்னார்.நேரடியான அப்பட்டமான பாலியல் வன்முறை அது. துணிச்சலானவராக, கூடவே கையில் சிறுகத்தி ஒன்று வைத்திருந்தவராக இருந்தமையால் அவர் தப்பினார். உண்மையில் அதிர்ச்சியாக இருந்தது அதைக்கேட்டபோது.
ஒவ்வொருநாளும் இத்தகைய செய்திகள் காதில்விழுகின்றன. சட்டநடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதற்குக் கடுமையான போராட்டம் தேவை. முதலில் அதை குடும்பத்திலிருந்து தொடங்கவேண்டும். இந்திய நீதிமன்றங்கள், காவலர்கள், அலுவலகநிர்வாகிகள், அரசு பொதுவாக செல்வாக்குள்ளவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதில்லை. செல்வாக்குள்ளவர்களே இதில் பெரிதும் ஈடுபடுகிறார்கள். சட்டரீதியாக என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்றுகூட பொதுவாக நமக்குத் தெரிந்திருப்பதில்லை..
Me too இயக்கம் அவதூறு ஆக மாறிவிடும் அபாயம் உண்டு. மிரட்டுவதற்கும் உளவியல் தொல்லை கொடுத்து வீழ்த்துவதற்கும் அதைப் பயன்படுத்தலாம். அவ்வாறு சில வழக்குகள் சுட்டப்படுகின்றன என்பதும் உண்மை. ஆனால் நம் சமூகத்தில் இப்பிரச்சினை இத்தனை பெரிய அளவில் உள்ளது என்பதை இந்த இயக்கம்தான் வெளியே கொண்டுவந்தது. தங்கள் மனைவியை, மகளை வேலைக்கும் படிக்கவும் அனுப்பிக்கொண்டிருக்கும் நடுத்தரவர்க்கத்தின் உணர்ச்சிகளை அதுதான் அசைத்துப்பார்த்தது. இன்று அதுகுறித்து எழுந்துள்ள விழிப்புணர்ச்சியும் அதன் கொடையே
ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல. சட்டநடவடிக்கை, அதற்கான உதவிஅமைப்புகள், கண்காணிப்புகள் ஆகியவையே நிரந்தரமான வழி. ஆனால் ஒரு எச்சரிக்கை மணி என்ற அளவில் அது முக்கியமான ஓர் இயக்கம் என்றே நினைக்கிறேன்
இதில் ஈடுபடுபவர்கள் பற்றி முன்னரும் எழுதியிருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு புகழ்பெற்ற இதழாளர் –நாவலாசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டபோது. இதில் ஈடுபடுபவர்கள் ‘கெட்டவர்கள்’ ‘மோசமான வளர்ப்புகொண்டவர்கள்’ அல்ல. அப்படி எண்ணினால் ‘நல்லவர்கள் என நம்பி’ ஏமாறவேண்டியிருக்கும். அவர்கள் ஆண்கள், அவ்வளவுதான்.
ஆண்களின் இயல்பான உயிரியல்பழக்கம் பெண்கள் மீதான ஆக்ரமிப்பு. படிப்பு, குடும்பப் பண்பாடு, சூழலின் கண்காணிப்பு, சட்டத்தின் மீதான அச்சம் என பல்வேறு காரணிகளால் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வேலிகள் உடையும் தருணங்கள் பல உண்டு. பெண் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என உணர்கையில். சட்டமோ சமூகமோ தன்னை தண்டிக்காது என்ற எண்ணம் எழுகையில், தற்கட்டுபாடுகள் இல்லாமலாகும் சூழல்கள் அமைகையில். மதுவருந்தும்போதும் தனியான இடங்களிலும்தான் இவை மிகுதியாக நிகழ்கின்றன. ஆண்களின் இயல்பு இது என்று கொள்வதே ஒப்புநோக்க தர்க்கபூர்வமானது
என் அவதானிப்பில் இருவகை ஆண்கள் இதில் ஈடுபடுகிறார்கள். Alpha male எனப்படும் முதன்மை ஆண்கள். குரங்குகள் உட்பட அனைத்து உயிர்களிலும் உள்ள வழக்கம் இது. பெண்ணை தன் உடைமை என நினைப்பது,வெல்லவிழைவது, அடக்கி ஆளமுயல்வது இவர்களின் இயல்பு. பெண்களை பணம் அதிகாரம் ஆகியவற்றைக்கொண்டு மிரட்டுவதும் அவர்களுக்கு காவலர்களாகத் தங்களை அமைத்துக்கொள்வதும் இவர்களின் இயல்பு.
இன்னொருவகையினர் பல்வேறு காரணங்களால் அடக்கப்பட்ட பாலுணர்வு கொண்டவர்கள். தோற்றம், சூழல் என பல காரணங்களால் பாலியல்வறுமை கொண்டு அதையே எண்ணிக்கொண்டிருப்பவர்கள். அதை உள்ளே அடக்கிக்கொண்டு வேறொரு தோற்றம்பூண்டவர்கள். சர்வசாதாரணமானவர்களாகவே இவர்கள் இருப்பார்கள். நம்பகமான தோற்றத்தையும் அளிப்பார்கள்.
முதல்வகையானவர்கள் வன்முறையாளர்களாகவும் இரண்டாம் வகையானவர்கள் கோழைகளாகவும் இருப்பதைக் கண்டிருக்கிறேன். இரண்டாம்வகையினரே ஒப்புநோக்க ஆபத்தானவர்கள். அவர்களை எளிதில் கணிக்கமுடிவதில்லை. அவர்கள் பெண்கள்மேல் அவதூறுபரப்புதல் முதலிய உளவியல்தாக்குதல்களில் ஈடுபடுவார்கள். தங்கள் சிறுமையால் பெண்கள்மேல் தாக்குதல் தொடுப்பார்கள்.
பொதுவெளிக்குச் செல்லும் பெண் ஆண்களை நம்பக்கூடாது என்றெல்லாம் சொல்லமாட்டேன். நம்பாமல் எச்சரிக்கையுடன் எப்போதும் இருந்துகொண்டிருப்பது ஆளுமைத்திரிபையே உருவாக்கும். ஆனால் ஓர் எச்சரிக்கைஎல்லை வகுத்துக்கொள்ளப்பட்டிருக்கவேண்டும். எவருக்குமே வாய்ப்புகளை அளிக்கும் வகையில், எதிர்பார்ப்புகளையோ நம்பிக்கைகளையோ அளிக்கும் வகையில், ஈர்ப்புகளை உருவாக்கும் வகையில் செயல்படலாகாது. அதற்குரிய தற்கண்காணிப்பும் தேவை
கேரளத்தில் நடிகைகள் உருவாக்கியிருப்பதுபோல ஒவ்வொரு துறையிலும் பெண்கள் மட்டுமே பங்குகொள்ளும் அமைப்புகளை உருவாக்குவதே இதற்கான மிகச்சிறந்த வழி. அமைப்பு ஒரு பெண் தன்னை தனித்தவளாக, பாதுகாப்பானவளாக உணராதபடிச் செய்கிறது. பாதிக்கப்படும் பெண்ணுக்கு இங்கே குடும்பம் உதவுவது மிக அரிது. அப்பெண்மேலேயே பழியும் விழும். சட்டநடவடிக்கை உட்பட அனைத்திற்கும் உடன்நிற்கும் ஓர் அமைப்பு போல ஆற்றலை அளிப்பது வேறில்லை. நிதி, சட்டபூர்வ அங்கீகாரம் உட்பட அதற்கு அதிகாரமும் இருந்தால் பெரும்பாலும் பிரச்சினைகள் தடுக்கப்பட்டுவிடும். முட்டபூர்வமான ஓர்அப்படி ஓர் அமைப்பு உண்டு என்பதே பெரும் பாதுகாப்பு.
ஆனால் இதற்கென்றே ஓர் அமைப்பை உருவாக்கினால் அது சங்கடமூட்டுவதாக, ஒருவகையான அறிவிப்பாக அமையக்கூடும். பொதுவாக பெண்இதழாளர்க் கூட்டமைப்பு போல ஒன்றாகத் தொடங்கலாம். அதை பிற பெண்கள் சார்ந்த கூட்டமைப்புகளுடன் இணைத்துக்கொண்டு பெரிய அமைப்பாக ஆக்கலாம். ஆனால் அங்கும் சிக்கல்கள் எழும். முதலில் அரசியல் உள்ளே நுழையும். அமைப்பை ‘பொதுப்பிரச்சினைகளுக்குக் குரல்கொடுப்பதாக’ ஆக்கவேண்டும் என ஒரு குழு கிளம்பும். எந்தப்பிரச்சினைக்குக் குரல்கொடுப்பது என்ற விவாதம் எழுகையில் அமைப்பு அரசியல்ரீதியாக உடையும். அரசியல்கட்சிகள் அவற்றைக் கையில் எடுத்துக்கொள்ளும். அதன்பின் அரசியல்கட்சிகளின் ஆதரவில் உள்ளவர்களுக்கு எதிராக ஒன்றும் செய்ய இயலாது.
அரசியலற்ற, பெண்களின் பொதுப்பிரச்சினைகளுக்காக மட்டுமே செயல்படுகிற, கூடுமானவரை சட்ட உதவிகள் மற்றும் பின்னணி உதவிகளை மட்டுமே செய்கிற, குறைந்தபட்சச் செயல்பாடு மட்டுமே கொண்ட, குறிப்பிடத்தக்க பொதுநிதி கைவசம் வைத்திருக்கிற பொதுவான அமைப்பு ஒன்று உருவாவதுதான் உகந்தவழி
ஜெ
https://www.theguardian.com/commentisfree/2018/feb/04/metoophd-reveals-shocking-examples-of-academic-sexism