பீமனும் துரியோதனனும் புரிந்த போரை மிக மெல்ல அனைவரும் அசைவிழந்து கதைகள் நிலம்தாழ நின்று நோக்கலாயினர். அவர்கள் ஓர் ஆற்றின் இரு கரைகளெனத் தோன்றினர். ஒருவர் பிறிதொருவர் என இடம் மாறினர். ஒருவர் உடலின் அசைவே பிறிதொன்றிலும் உருவாகியது. மிக மெல்ல பஞ்சென, மலரென காலடி எடுத்து வைத்து மூக்கு நீட்டி மயிர்சிலிர்த்து அணுகி நிலமறைந்து ஓசையெழுப்பியபடி பாய்ந்து ஒன்றோடொன்று அறைந்தும் தழுவியும் விழுந்து புரண்டு எழுந்து மீண்டும் அறைந்து போரிடும் வேங்கைகளின் போரென்றிருந்தது அது. பின்னர் செவி முன்மடித்து விரைந்து பின்னடைந்து துதிசுழற்றி வெள்ளம்போல் வருவதறியாமல் பாய்ந்து அணைந்து மத்தகம் முட்டி உடலதிர்ந்து பிளிறி துதிக்கைபற்றி முறுக்கிச் சுழற்றி சுற்றிவந்து உதறிவிலகி மீண்டும் ஆயம்கொள்ளும் களிற்றுப்போர் என ஆயிற்று.
சுதசோமன் தேரை நிறுத்தி அவர்களின் களமாடலை பார்த்துக்கொண்டிருந்த அத்தனை வீரர்களையும் விழியொடு விழிதொட்டு நோக்கினான். இரு இணைவீரர் தோள் கோத்துக்கொள்கையில் போர் பிறிதொன்றாகிவிடுகிறது. அதுவரை அத்தனை படைவீரர்களிலும் எழுந்து தங்கள் ஆற்றலை நிகர் நோக்கிக்கொண்டிருந்த தெய்வங்கள் இரு முனையிலென குவிந்துவிடுகின்றன. அங்கிருந்த அனைவரும் உள்ளத்தால் எழுந்து இருவருடனும் அமைந்துவிட்டிருந்தனர்.
தேர்ந்த மல்லர்களின் போர் என தோன்றியது அது. வஞ்சமற்ற, சினமற்ற, வெற்றிவிழைவுமற்ற மோதல். தசைகள் மட்டுமே ஈடுபடும் பூசல். தசைகள் மண்போல், நீர்போல், காற்றுபோல் இருப்பொன்றே இயல்வதென்றானவை. அப்பாலற்றவை. ஆழமில்லாதவை. முட்டிமோதி அதிர்ந்து விலகி மீண்டும் மோதித்தெறித்துக்கொண்டிருந்த கதை மீளமீள ஒற்றைச் சொல்லையே உரைத்தது. அச்சொல் பொருளற்றதாக, விண்ணிலிருந்து விழுந்துகிடக்கும் அறியாத் தெய்வம்போல தோன்றியது. ஆனால் நோக்க நோக்க அதன் முழுமைகூடிய அசைவுகளுக்குள் இருந்த வஞ்சத்தையும் சினத்தையும் உணரமுடிந்தது. அத்தனை அமிழ்ந்தமையால் அத்தனை அழுந்தியமையால், அத்தனை எரிகொண்டமையால் வைரமென்றாகிவிட்டவை அவை. அனைத்து அணுக்களும் கூர்கொண்டு எழுந்தவை.
நீக்கிலாப் பெருவஞ்சத்தின் விசையை ஒவ்வொரு அறையிலும் உணர்ந்து அவன் உடல் விதிர்த்தபடியே இருந்தது. மறு எல்லையில் அவனுடைய போர்க்கலை பயின்ற அகம் ஒவ்வொரு அசைவையும் அடையாளம் கண்டது. ஒவ்வொன்றும் உச்சமுழுமையில் அங்கே நிகழ்ந்தன. நின்று இருபுறமும் சீர்நிலைகொண்டு செம்மைக்காலடியில் முன்செல்லும் ஓதிரம். எதிரடியை இருபுறமும் தடுத்து நடுவில் நிலைநிறுத்தி எழுந்தமையும் கடகம். காற்றை உதைத்து விசைகொண்டெழும் பனந்தத்தையின் பாய்ச்சலென சடுலம். நிலைக்கால் ஊன்றி வரும் அடி காத்து அழுத்தி எழும் மண்டிலம். அரைவட்டமெனச் சுழலும் விருத்தசக்ரம். அலையலையென எழும் சுகங்காளம். அறைந்து சுழன்றெடுக்கும் விஜயம்.
மீண்டும் பின்னகர்ந்து நிலைகொண்டு நோக்கி உணர்ந்து சுவடுக்குச் சுவடும் தோள்விரிவுக்கு விரிவும் கண்ணுக்குக் கண்ணும் இமைப்புக்கு இமைப்புமென சுழலும் விஸ்வமோகனம். கதைகள் தழுவிக்கொண்டு நிற்க தொடுத்துச்சுழலும் அன்யோன்யம். அறைந்து துள்ளிப்பின்னெழுந்து பாய்ந்தமையும் சுரஞ்சயம். அமர்ந்து உடல்நீட்டி சிறுத்தையென மண்ணுடன் வயிறமைய முன்னகர்ந்து பாயும் சௌபத்ரம். கால்நடுவே கால்புகுத்தி வீழ்த்தும் பாடலம். விலாநோக்கி விலாவால் பாயும் புரஞ்சயம். உடலே விழியென உணர்ந்து கதையொழியும் காயவிருத்தி. கணமொழியாது அறைந்தறைந்து பின்னால் கொண்டுசெல்லும் சிலாகண்டம். எழுந்து காற்றில் காலுதைத்து மேலேறி நடுத்தலையில் அறையும் சிரோகதம். நெஞ்சைத் தாக்கும் அனுத்தமம். கதையால் சூழ்ந்துகொள்ளும் கதாயகட்டம்.
துரியோதனனிடமிருந்து முதல்முறையாக ஓர் உறுமல் எழுந்தது. மறுமொழி என பீமன் பிளிறலோசை எழுப்பினான். அவ்வொலி சூழ்ந்திருந்தோரை திகைக்கவைத்தது. அவர்கள் விழித்தெழுந்தவர்கள்போல் கூச்சலிட்டபடி தாக்கத் தொடங்கினர். சர்வதனை மகாபாகுவும் சித்ராங்கனும் சித்ரகுண்டலனும் பீமவேகனும் பீமபலனும் சூழ்ந்துகொண்டார்கள். தனுர்த்தரனும் அலோலுபனும் அபயனும் திருதகர்மனும் அப்ரமாதியும் தீர்க்கரோமனும் சுவீரியவானும் சுதசோமனை சூழ்ந்தனர். கதையால் அவர்களை அறைந்து பின்னடையச்செய்து பீமனின் பின்பக்கத்தை காத்தான் சுதசோமன். மேலும் மேலும் கௌரவர்கள் வந்துகொண்டிருந்தனர். பெருகிச்சுழன்று நதிச்சுழல் என்றாயினர். நடுவே பீமன் சுழிவிசையில் என சுழன்றபடி கதையால் அவர்களைத் தாக்கி தடுத்தான்.
எதிர்பாராக் கணமொன்றில் பீமன் எழுந்து பாய்ந்து சேனானியின் தலையை அறைந்து உடைத்தான். ஒருகணம் அனைத்தும் உறைந்து மீண்டதுபோல சுதசோமன் நெஞ்சு நடுங்கினான். கௌரவர்கள் நடுவே அதிர்ச்சிக்கூச்சல்கள் எழுந்தன. துரியோதனன் என்ன நிகழ்ந்தது என உணராதவன்போல திகைத்து நின்றான். அந்த கணத் தேக்கத்தில் புகுந்து ஜலகந்தனை நெஞ்சிலறைந்து வீழ்த்தினான். கௌரவர்கள் திரளென்று நின்று போர்புரிகையில் ஒற்றை உளம் கொண்டிருந்தார்கள். ஒருவரோடொருவர் நன்கு கோத்துக்கொள்ளும்படி அனைத்து உடல்களும் நிகரென்று அமையும் தன்மை கொண்டிருந்தன. ஆனால் முதல் கணங்களிலேயே அவர்களில் இருவரை பீமன் வீழ்த்தியது அனைவரையும் கால்தளரச் செய்திருந்தது. அந்தச் சிறு தளர்வின் ஒத்திசைவின்மையே அவர்களின் கதை சுழற்றலில் சிறு பிழையென எழ அதனூடாக நுழைந்து பீமன் அவர்களை அறைந்தான்.
ததும்பிய உடல்கள் நடுவே அலையில் நெற்றுகளென கௌரவர் தலைகள் எழுந்தமைந்தன. பீமன் ஒருவனின் இடையில் மிதித்து மேலேறி எழுந்து சுழற்றி அறைந்த கதையால் சுஷேணனை தலைசிதற குப்புறச் சரித்தான். கௌரவர்களின் சுழிவளையம் விரிந்து அகல அவனைச் சூழ்ந்து உருவான வெற்றிடத்தில் கௌரவர் மூவரும் வாயிலும் மூக்கிலும் குருதிக்குமிழிகள் கொப்பளிக்க கிடந்துநெளிந்தனர். துரியோதனனுக்கு காப்பெனக் கருதி பாய்ந்து அவனைச் சூழ்ந்திருந்த கௌரவர்கள் அவ்விசையால் அவனை கால்தடுமாறச் செய்து பின்னால் கொண்டுசென்றனர். வெறிக்கூச்சலுடன் அவர்களை கைகளால் அறைந்து விலக்கி பற்கள் நெரித்து உடல்தசைகள் இழுபட்டு அதிர துரியோதனன் பீமனை நோக்கி பாய்ந்தான். பீமன் பின்னடைந்து கதையால் அவனைத் தடுத்து மேலும் பின்னடைந்து பக்கவாட்டில் தாவி வீரபாகுவின் தலையை கவசத்துடன் அறைந்து உடைத்தான்.
திகைத்து ஒருகணம் செயலற்று நின்ற பின்னர் துரியோதனன் பீமன் மேல் பாய்ந்தான். துர்மதனும் துச்சலனும் துச்சகனும் அவனுடன் இணைந்தனர். பீமன் அவர்களை முற்றாகத் தவிர்த்து விட்டிலென பின்னால் தாவித்தாவி அகன்று விலகிச் சென்றுகொண்டிருந்த சுலோசனனின் தலையை அறைந்து வீழ்த்தினான். அவன் நெஞ்சில் மிதித்துக் குனிந்து இடைவாளை உருவி அவன் தலையைத் துணித்து குழல்கற்றையைப்பற்றித் தூக்கி அவனை நோக்கி கதையுடன் ஓடிவந்த துரியோதனன் மேல் வீசினான். தன் நெஞ்சிலறைந்து விழுந்த இளையோனின் தலையால் விதிர்ப்புற்று மெய் துள்ள துரியோதனன் கால்தளர்ந்து அமரப்போனான். பாய்ந்து அவன் தலையை அறைந்த பீமனின் கதையை துச்சலனின் கதை தடுத்தது. அவன் அதை எடுப்பதற்குள் பீமன் துச்சலனின் தலையை அறைந்தான். தலைகுனித்து தப்பிய துச்சலனின் தோளை அறைந்து கவசங்களை உடைத்து தூக்கி வீசியது கதை. துர்மதன் துரியோதனனை இழுத்து அப்பால் கொண்டுசெல்ல துச்சகன் வெறிகூவியபடி கதை சுழற்றி பீமனை அறைந்தான்.
தாவி பின்னகர்ந்த பீமன் விழுந்துகிடந்த தேர்ச்சகடம் ஒன்றின் மேல் ஏறி புரவி ஒன்றை தாவிக்கடந்து அப்பால் நின்றிருந்த கௌரவ இளையவன் பீமபலனை அறைந்து வீழ்த்தினான். அருகே நின்றிருந்த பீமவேகனின் முகத்தில் குருதியும் வெண் தலைச்சேறும் தெறிக்க அவன் உள்ளமும் உடலும் செயலிழந்து அசைவற்று நின்றான். அவன் தலையை வாளால் வெட்டி நிலத்திலிட்டான் பீமன். துரியோதனன் தீ பட்ட யானை என வீறிட்டபடி கதை சுழற்றி பாய்ந்தெழுந்தபோது கீழிருந்த பீமவேகனின் தலையை எடுத்து இடக்கையில் தூக்கி பிடித்தான் பீமன். கதையை நழுவவிட்டு அலறியழுதபடி துரியோதனன் மயங்கி விழுந்தான். அத்தலையை துச்சகன் மேல் வீசி அவன் நிலைகுலைந்த கணம் ஓங்கி அறைந்தான். தேர்ந்த பயிற்சியால் அவன் தலையொழிந்தான். அவன் புரள்வதற்குள் விலாவை அறைந்தது பீமனின் கதை.
கௌரவர்கள் அணிசிதைந்து ஒருவரோடொருவர் முட்டியபடி தத்தளித்து உடல்ததும்பினர். பீமன் உறுமலோசையுடன் அவர்களை நோக்கி பாய “மூத்தவரே” என்று அலறியபடி அவர்கள் சிதறியோடினர். கால்தவறி கீழே விழுந்த சுவர்மன் “மூத்தவரே! மூத்தவரே!” என்று கூவினான். பீமன் அவன் நெஞ்சை உதைத்து மண்ணில் வீழ்த்தி தன் வாளால் அவன் தலையை வெட்டி குடுமியைப்பற்றித் தூக்கி காட்டியபடி வெறிநகையாடினான். கௌரவர்கள் முட்டி மோதி அகன்றுவிட அவனைச்சுற்றி எவருமிருக்கவில்லை. உடைந்த குடமென கொழுங்குருதி வழிந்த தலையைத் தூக்கி தன் முகத்தின்மேல் அதை ஊற்றினான். காலால் தரையை ஓங்கி அறைந்து “குலமகள் பழிசூடிய வீணர்கள்! இனி தொண்ணூற்றி இருவர்! எஞ்சியோர் வருக! வருக, கீழ்மக்களே! வருக, இழிசினரே! எவருள்ளனர் இங்கே? இக்களத்தில் ஒவ்வொருவரையும் நெஞ்சுபிளந்து குருதியுண்பேன்! அறிக தெய்வங்கள்! அறிக மூதாதையர்!” என்று கூச்சலிட்டான்.
அவன் விழிகளை அரைக்கணம் கண்ட சுதசோமன் நெஞ்சு நடுங்க பின்னடைந்தான். அவன் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. “கௌரவர்கள். எண்மர் வீழ்ந்துவிட்டார்கள், இளவரசே! அவர்கள் எழுந்து படைசூழக்கூடும்!” என்று சுதசோமனின் தேர்ப்பாகன் கூவினான். கௌரவர்களின் படையிலிருந்து முரசுகள் வெறிகொண்டவைபோல முழங்கி ஆணையிட்டுக்கொண்டிருந்தன. புயல்காற்றில் மலர்க்கிளைகள் என கொடிகள் சுழன்றன. பிரக்ஜ்யோதிஷத்தின் கொடி எழுந்து அணுகுவதை சுதசோமன் கண்டான். சங்கொலி எழுப்பியபடி யானைமேல் அமர்ந்தவராக பகதத்தன் படைமுகப்பில் வந்தார். யானை விரைந்து வர அவ்விசை குறையாமலேயே கதையுடன் பாய்ந்திறங்கினார். பீமன் குருதி சொட்டும் உடலுடன் போர்க்கூச்சலெழுப்பியபடி பகதத்தனை எதிர்கொண்டான்.
பிரக்ஜ்யோதிஷத்தின் படைவீரர்கள் பீமனை சூழ்ந்துகொண்டார்கள். படைத்தலைவனாகிய பேருருவன் வியாஹ்ரஹஸ்தன் பீமனை அணுகாமல் சுதசோமன் தடுத்தான். மறுபக்கம் இன்னொரு அணுக்கவீரனாகிய உக்ரவிரதனை சர்வதன் செறுத்தான். ஒவ்வொரு அடியிலும் வியாஹ்ரஹஸ்தனின் பேராற்றலை உணரமுடிந்தது. ஒவ்வொரு அடிக்கும் அவன் கதை மோதித் தெறித்தது. அவ்விசையையே தோளுக்குப் பின் சுழற்றி தன் உடலுக்கு கொண்டுவந்து துள்ளி விலகுவதற்கான சிறகசைவாகவும் அவன் பயன்படுத்திக்கொண்டதனால் எதிர்நின்று போரிட இயன்றது. ஆனால் அந்தப் போர் நெடும்பொழுது நீளாது என அறிந்திருந்தான். “துணையெழுக!” என அவன் கையசைத்து ஆணையிட்டான். தேர்வீரனால் கொம்போசையாக அது மாற மிக அப்பால் “பீமசேனருக்கு துணையெழுக! பீமசேனருக்கு துணையெழுக!” என்று ஆணைமுரசு முழங்கியது.
பீமன் ஒரு கையில் கதையும் மறுகையில் அங்குசமும் கொண்டு உடலெல்லாம் குருதி வழிய செங்கதுப்புபோல தோள்தசைகளும் நெஞ்சுத்தசைகளும் இறுகி நெளிந்து அசைய “வருக! இன்று குருதியாடுகிறேன்… வருக!” என வஞ்சினம் கூவியபடி போரிட்டான். “வருக! இன்று உடன்பிறந்தோர் குருதியிலாடியே மீள்வேன் என்று எழுந்து வந்தேன்!” என்றான். பித்தன்போல நகைத்தபடியும் காலால் நிலத்தை மிதித்து பொருளிலாக் கூச்சலிட்டபடியும் போரிட்டான். தன் தலையை நோக்கி வந்த பகதத்தனின் கதையை பிறிதொரு அறையால் தடுத்து அவ்விசையடங்குவதற்குள் அப்பால் நின்ற கதைவீரனை அங்குசத்தால் இழுத்து தன் முன் இட்டு அவன் தலையை அறைந்துடைத்து முன் சென்றான். அவன் கதைவீச்சின் விசை மெல்ல மெல்ல பகதத்தனை பின்னால் தள்ளியது.
“பிதாமகர் பால்ஹிகர்! எழுக பிதாமகர்! பால்ஹிகர் எழுக!” என்று சகுனியின் முரசு அறைகூவுவதை சுதசோமன் கேட்டான். கௌரவர்கள் உக்ரசாயியும் கவசீயும் கிருதனனும் கண்டியும் பீமவிக்ரனும் தனுர்த்தரனும் அலோலுபனும் அபயனும் சூழ துச்சாதனன் போர்ச்சங்கூதியபடி தேரில் களமெழுந்து வந்தான். சுதசோமன் தன் தேரில் பாய்ந்தேறி அதை முன்செலுத்தி அவர்களை தடுத்தான். அவர்களைச் சூழ்ந்து கௌரவர்களின் தேர்வீரர்கள் வந்தனர். சுதசோமனின் அம்புபட்டு இருவர் தேர்த்தட்டில் விழுந்தனர். துச்சாதனனின் கதை தேரிலிருந்து பறந்தெழுவதை கண்டான். பாய்ந்து அவன் நிலத்தில் விழ கதையால் அறைபட்டு அவன் தேர் உடைந்து தெறித்தது. கதையுடன் பாய்ந்தணைந்த கிருதனனின் நெஞ்சில் ஓங்கி அறைந்து அவன் நிலைதடுமாறிய கணம் பிறிதொரு அறையால் அவனை வீழ்த்தினான் சுதசோமன். கையூன்றி புரண்டெழுந்து உடலை பின்னிழுத்து விலக்கி அப்பால் சென்ற கிருதனனின் தோளை அறைந்தது சுதசோமனின் கதை.
மறுபுறம் உக்ரசேனனையும் துஷ்பராஜயனையும் அபராஜிதனையும் எதிர்த்து பின்செலுத்திக்கொண்டிருந்த சர்வதன் “மூத்தவரே, இச்சூழ்கையை இரண்டாக உடைப்போம். எஞ்சியதை தந்தை பார்த்துக்கொள்வார்” என்றான். போர் செல்லும் திசை விழிக்கு தெரியத்தொடங்கியது. கௌரவர்களும் பிரக்ஜ்யோதிஷத்தவரும் பிதாமகர் பால்ஹிகர் களம்புகுவது வரை பீமனை தடுத்து நிறுத்த மட்டுமே விழைந்தனர். நெஞ்சில் அறைபட்டு மூக்கிலும் காதிலும் குருதி வழிய விழுந்து இருமுறை இருமி குருதிச்சேறை உமிழ்ந்து நிலத்தில் விழுந்து துடித்த கௌரவ மைந்தர்களான சுஜனனையும் கிரந்தனையும் கபந்தனையும் காலகனையும் உக்ரவேகனையும் உஜ்வலனையும் கடந்து தாவி வீழ்ந்த யானையொன்றின் நெஞ்சை மிதித்தேறி சக்ரனையும் சுதீரனையும் அறைந்து வீழ்த்தித் தாவி பின்னால் சென்று விழுந்த குர்மிதன் கையூன்றி எழுவதற்குள் ஓங்கி அறைந்து முதுகெலும்பை முறித்தான் பீமன்.
பின்புறம் கௌரவர்களின் மறைவை அறிவித்து முழங்கியது முரசு. கௌரவப் படையே உளம் தளர்வதை சுதசோமன் கண்டான். மீண்டுமொரு கௌரவ மைந்தன் அறைபட்டு ஓசையே இன்றி விழுந்தான். தழலை ஊதி அணைப்பதுபோல அத்தனை எளிதாக, அத்தனை அமைதியாக கௌரவ மைந்தர்கள் களம்பட்டனர். ஒருவரையொருவர் உடல் முட்டி ததும்பினர். ஒற்றை உடலென்றாகும் அவர்களின் இயல்பே சற்றே அணி சிதைந்தால் ஒன்றுடன் ஒன்று முட்டி வெற்றுத்திரளென்று மாறுவதை சுதசோமன் கண்டான். அவர்களின் கால்கள் பின்னிக்கொள்ள தோள்கள் ஒன்றையொன்று முட்ட ஒருவரையொருவர் நோக்கி நாய்கள்போல் பல்காட்டி சீறினர். “விலகு, மூடா!” என்று ஒருவன் கூவுவதற்குள் அவன் தலையுடைந்து குருதி பிறிதொருவன் முகத்திலறைந்தது. நால்வர் தோள் அறைபட்டு விழுந்தனர்.
மேலும் அஞ்சி கதையை தூக்கவும் உளம் துணியாது வெற்றுக்கூச்சலிட்டபடி அவர்கள் சிதறி விலக கௌரவப் படைக்கு அப்பால் முரசுகளும் கொம்புகளும் எழுந்தன. துச்சாதனன் தன் முன் நின்றிருந்த சுதசோமனின் கதையை அறைந்து தெறிக்கச்செய்து தன் கதையைச் சுழற்றி மேலே தூக்கி “பிதாமகர்! பிதாமகர் எழுந்துவிட்டார்! அணிதிரள்க! இக்குலாந்தகனை இங்கேயே கொன்றொழிப்போம்!” என்று கூவினான். பறந்து வருபவர்போல் பால்ஹிகர் படைகளுக்கு மேல் அசைவதை அவன் கண்டான். பாண்டவப் படைகளுக்குள் ஊடுருவி நெடுந்தொலைவு சென்றவர் அங்கிருந்து திரும்பி வளைந்து மீண்டு வந்துகொண்டிருந்தார். பெருங்கதை பறக்கும் களிறெனச் சுழன்று தேர்களை சிதறடித்தபடி வந்தது. மானுட உடல்கள் குருதித் துளிகள்போல் துமி சிதறிப்பரந்தன. தொடுத்த அம்பென அவர் நேராக பீமனை நோக்கி வந்தார்.
கௌரவர்கள் ஒருவருடன் ஒருவர் இணைந்து பீமனைச் சூழ்ந்து அவன் கதைவீச்சிலிருந்து விலகி பின்சென்றனர். பால்ஹிகருக்காக அவனை சிறைநிறுத்த அவர்கள் விழைந்தனர். பீமன் தன் தலையை சிலுப்பி முழுக்காட்டப்பட்டதுபோல் கூந்தலிலிருந்து வழிந்துகொண்டிருந்த குருதியை தெறிக்கவிட்டு மூச்சிழுத்து நெஞ்சை விடைத்தபடி பால்ஹிகரை நோக்கி சென்றான். பாண்டவத் தேர்வீரர்களை கொன்றபடி வந்த பால்ஹிகரைச் சூழ்ந்து நகரொன்றின் இடிபாடுபோல் உடல்களும் சிதைந்த தேர்களும் கிடந்தன. மத்தகம் உடைந்த யானைகள் ஏழு மண்ணில் கிடந்து கரிய உடல் கொப்பளித்துக்கொண்டிருந்தன.
பால்ஹிகர் வெண்சுண்ணத்தால் செய்த சிலை போலிருந்தார். அத்தனை பொழுது படைக்களத்தில் இருந்தபோதும்கூட அவர் உடலில் ஒரு துளி குருதியேனும் பட்டிருக்கவில்லை. அரிய உலோகமொன்றால் ஆன அவருடைய கதையும் குருதித்துளிகூட நில்லாமல் புதியதென தெரிந்தது. விண்ணிலிருந்து விளையாடும் தேவன். அந்தக் கதை ஒரு விழிமாயம். அது எவரையும் தொடுவதில்லை. சுதசோமன் அவரையே நோக்கிக்கொண்டிருந்தான். அவர் முகம் விளையாடும் மைந்தரை நோக்கும் தந்தைபோல் புன்னகை கொண்டிருந்தது.
தன்னுள் எழுந்த ஒன்று அவர் வருகையை விழைவதை உணர்ந்த அவன் திடுக்கிட்டான். அவர் என் தந்தையை கொல்ல வேண்டுமென்று விழைகிறேனா என்று தனக்குள் கேட்டுக்கொண்டான். அக்கணமே இல்லை இல்லையென அகம் மறுத்தது. அதற்கப்பால் ஒன்று ஆம் என்றது. அவ்வாறே அது நிகழவேண்டும். நிகழ்ந்தே தீரும். அதுவே மானுடரை மண்ணில் இணைத்து நிறுத்தியிருக்கும் நெறியொன்றின் விளக்கம். பீமன் பாய்ந்து சென்று அங்கு நின்றிருந்த யானை ஒன்றின் மேல் ஏறி அதன் பாகனை தள்ளிவிட்டு மத்தகத்தில் அமர்ந்தான். அவன் கால்கள் காதுகளை உதைத்து ஆணையிட யானை அடுக்குக்கவசம் அணிந்த தன் துதிக்கையைச் சுழற்றி வீறிட்டபடி பால்ஹிகரை நோக்கி சென்றது. தன் கையில் சுற்றியிருந்த சங்கிலியை சுழற்றி மீட்டி கதையை பறக்கவிட்டபடி பீமன் பால்ஹிகரை அணுகினான். இரு கதைகளும் வானில் சுழன்றெழுந்து பெருவிசையுடன் முட்டிக்கொண்டன.
சுதசோமன் பால்ஹிகரின் மாபெரும் கதையின் விம்மலோசையை கேட்பதுபோல் உணர்ந்தான். பீமன் அதன் வீச்சிலிருந்து தன் யானையின் மத்தகத்தை காக்கும்பொருட்டு அதை மேலும் மேலும் பின்னடையச்செய்து இருபுறமும் தலைதிருப்பி அடிகளை ஒழிந்துகொண்டு நகர்ந்தான். பிதாமகரின் கதையை தன் கதையால் தடுக்க இயலாதென்று முதல் சில அறைகளிலேயே கற்றுக்கொண்டிருந்தமையால் எவ்வகையிலும் அதை எதிர்கொள்ளவில்லை. பால்ஹிகர் கதைப்பயிற்சி அற்றவர் போலிருந்தார். எண்ணற்கரிய தோள்விசையால் அப்பெருங்கதையை வானில் பறக்கவும் விட்டார். ஆனால் அது பீமனால் திறமையாக உடலொழிந்து தவிர்க்கப் படுகையில் அந்த அசைவின் ஒழுங்கை உய்த்துணர்ந்து அதற்கேற்ப தன் வீச்சின் முறைமையை மாற்றிக்கொள்ளவில்லை.
மீண்டும் மீண்டும் ஒரே சுழற்சியுடன் குன்றாத ஒரே வீச்சுடன் வந்துகொண்டிருந்தது பிதாமகரின் கதை. அதன் சுழல் உருவாக்கிய இரும்புக்கோட்டையில் உருவாகும் சிறுவிரிசல் திறப்பொன்றுக்காக தந்தை விழிகொண்டிருந்தார். ஒருகணம் அதனூடாக உள்நுழைந்து அவருடைய யானையின் மத்தகத்தை அறைந்துவிட்டாரெனில் பிதாமகரை வீழ்த்திவிடுவார் என்று சுதசோமன் எண்ணினான். அவ்வாறு நிகழலாகாதென்று அவன் உளம் ஏங்கியது. அதன்பின் இப்புவியில் எஞ்சுவதொன்றில்லை. யானை மேல் முகிலூரும் விண்ணவனென அமர்ந்து சிரித்தும் நகைத்தும் களித்தும் விளையாடிய அம்மூதாதையால் இவர் கொல்லப்படுவதே முறை.
தெய்வங்களே! நான் என்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன்! இத்தீயோன் எங்கிருந்து என்னுள் முளைத்தான்! ஏனிங்கு இவ்வண்ணம் தன்னை நடத்திக்கொள்கிறான்! தீயோர் மைந்தருள் எழும் தந்தையரே. அனைத்து விதைகளும் மரங்களே என்பதுபோல். நானும் அவரே. பிதாமகரே, இங்கு இதை நன்கு நிறைவுறச் செய்க! தங்கள் பெருங்கதையால் இதை முழுமை செய்க! அதன் பின் என் தலை சிதறடிக்கப்படட்டும். குருதிச் சேறென இக்களத்தில் கிடந்து நூறு கால்களால் மிதிபடுவேன் எனில் அனைத்தும் உரிய முழுமையை சென்றடைகிறது.
பின்னர் அவன் உணர்ந்தான். பால்ஹிகரின் அந்தப் பழுதற்ற கதைசுழற்றலில் ஒருபோதும் பிழை நிகழவில்லை என்று. அது மானுட உள்ளத்தால் ஏந்தி சுழற்றப்படும் கதையல்ல. விண்ணிலிருந்து சுழற்றப்படுவது. விண்ணென்பது மண்ணில் ஒருபோதும் நிகழாத முழுமைகளின் முடிவிலி. ஒவ்வொன்றும் தன் நிறைவை, அழகை, ஒழுங்கை எய்திவிட்ட இடம். பல்லாயிரம் யுகங்கள் இந்தப் பெருங்கதை இவ்வாறு சுழலக்கூடும். ஓர் அணுவிடைக்காலம்கூட அதில் பிழை நிகழப்போவதில்லை. அது ஒன்றென்றே முடிவிலி வரை நிகழும். மாற்றமில்லை என்பதனால் காலமில்லாதது. காலமின்மையில் எதுவும் வளர இயலாது. ஒரு கணம் கோடி யுகங்களாகும் இந்தப் பெருக்கில் இது இவ்வண்ணமே நின்றிருக்கும். வான்போல் அழிவிலாது.
அதை பீமன் உணர்ந்துகொண்டதுபோல் அவன் இடக்கையை தூக்க பின்புறம் முரசுகள் முழங்கின. கேடயங்களை ஏந்திய யானை நிரைகள் எழுந்து இருபுறமும் குவிந்து வந்து பீமனை பால்ஹிகரிடமிருந்து பிரித்தன. பால்ஹிகரின் பெருங்கதை அறைவால் கேடயமேந்திய யானைகள் பிளிறியபடி உடல் பின்னடைந்து நிலத்தில் விழுந்து கால்களை உதைத்துக்கொண்டு துதிக்கை சுழல துடித்தன. அவ்விடத்தை பிறிதொரு யானை நிரப்பிக்கொள்ள பால்ஹிகர் கேடயமேந்திய யானைகளின் கோட்டையால் முற்றிலும் சூழப்பட்டார். பீமன் மேலும் மேலுமென தன் தேரை பின் இழுத்து பாண்டவப் படைகளுக்குள் தன்னை உள்செலுத்திக்கொண்டான்.
“மத்தகம் தளர்கிறது! படைவீரர் அனைவரும் எழுக! அம்புகளால் பிதாமகரை சூழ்க! மத்தகம் தாழலாகாது!” என்று திருஷ்டத்யும்னனின் முரசுகள் அறைகூவின. சுதசோமன் தன் தேரை மேலும் பின்னிழுத்து பாண்டவப் படைகளுக்குள் செல்ல முயன்றான். கௌரவர்கள் நீர்த்துளிகள் ஒன்றிணைந்து பெருந்துளியாவதுபோல தங்களை தொகுத்துக்கொண்டு பின்னடைந்தனர். பால்ஹிகரின் வெற்றிக்கென முரசுகள் இயம்பியபோது அவர்கள் எவரும் கதைகளைத் தூக்கி வெற்றிக்கூச்சல் எழுப்பவில்லை. களத்திலிருந்து சிதைந்து விழுந்த கௌரவர்களின் உடல்களை கொக்கி வீசி கவ்வி இழுத்துத் திரட்டி தரையோடு தரையென கொண்டுசென்றனர் ஏவலர். கால்தளர்ந்து துச்சாதனன் போர்க்களத்தில் அமர்ந்தான். துர்விகாகன் கதைகளை நிலத்திலிட்டு இரு கைகளையும் விரித்து வான் நோக்கி கூச்சலிட்டு அழுதான்.
கௌரவப் படைகளின் மறுபுறம் முரசுகளும் கொம்புகளும் எழக்கேட்டு திரும்பியபோது சங்கின் பேரோசையுடன் பீஷ்மர் வருவதை பார்த்தான். நடுவிலிருந்த பாண்டவப் படை சிதறி அப்பால் சென்றது. பீஷ்மர் வில் அதிர அம்புவிட்டு படைவீரர்களை கொன்றுகொண்டே வந்தார். பால்ஹிகர் தன் கதையை நிலம்பதிய வைத்து யானை மேல் நிமிர்ந்து அமர்ந்து அவரை பார்த்தார். பீஷ்மர் பால்ஹிகரை சந்தித்த கணம் என்ன நிகழ்ந்ததென்று சுதசோமனால் உணரக்கூடவில்லை. அவரது வில் தழைந்தது. விழி திரும்ப தலை தாழ்த்தி ஒருகணம் நின்றபின் வில்லாலேயே பாகனை அறைந்து நேர் எதிர்த்திசைக்கு தன் தேரை திருப்பிக்கொண்டு செல்ல அவர் ஆணையிட்டார்.