சிலுவைராஜ் சரித்திரம் பற்றி

13680734_107015609737013_1372278891558513257_n

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

மதத்தின் போதாமையைக் கண்டு அதனை விட்டுவிட்டவர்களின் உள்ளம் மீண்டும் எதையும் எழுதுவதற்கு தயாரான தூய பலகையைப் போல் ஆகிவிடுகின்றது. சிலுவைக்கு மேலதிகமாக எப்படி போனாலும் அவனது சாதியின் அடையாளம் விடாமல் தொக்கி நிற்கிறது. தொமினிக் சாவியோவின் மீது மிகுந்த பக்தி கொண்டு விரதங்களை கடுமையாக அனுசரிக்கும் சிலுவை தனக்கு விருப்பமான விளையாட்டைக் கூட துறக்கிறான். மதரீதியாக ஒருவன் போய்விடும் போது அதுவும் பதின்ம வயதில் அதன் எல்லைக்கே போய்விடுகிறார்கள். துணுக்குறும் சப் வார்டன் ஃபாதர் சிலுவையின் தீவிரத்தை உடைக்க எண்ணுகிறார் அவனை கிரவுண்டிற்கு இட்டுச் சென்று மீண்டும் விளையாட்டில் ஈடுபட வைக்கிறார். சிலுவைக்கு இதெல்லாம் சாத்தானின் வேலையாகவே தெரிகிறது. ஒரு மரபார்ந்த மனம் அதற்கு நேர் எதிர் திசையில் பாயும் ஒரு தருணம் தனிமையில் இருந்து ஸ்டேடியம் நோக்கி சிலுவைப் போவது. இது மிகுந்த அங்கதத்துடன் கூறப்பட்டுள்ளது. தனிமையில் இருக்கையில் ஏழு எழுபது சாத்தான்களை எதிர்த்து சிலுவை ஒத்தயில் என்ன செய்ய முடியும் காகம் மீன் அணில் இலை எல்லாம் அதனதன் இஷ்டம் போல் இருக்கையில் தன் சுய இருப்பின் அபத்தத்தை உணர்கிறான் சிலுவை.

அப்போது எழுந்து வரும் திராவிட இயக்கத்தின் மீது பற்று இருந்தாலும் தன் கிராமத்தில் நடக்கும் சாதிக் கலவரம் காரணமாக அந்த நம்பிக்கை தளர்வதும் எஞ்சியிருக்கும் ஒரே நம்பிக்கையாக கம்யூனிசம் நோக்கிப் போகிறான் சிலுவை.
தண்டிக்கும் தந்தைக் கடவுளையும் சொந்த தந்தையையும் ஒன்றே போல் வெறுக்கும் சிலுவை அதன் உச்சமாக வேலையில்லா போது கம்யூனிஸ்ட் கூட்டங்களுக்கு போய் வந்ததற்காக வீட்டிலிருந்து விரட்டப்படுகிறான். அடியாத மாடு படியாது என்பது தான் தந்தையின் குணம். ஆனால் இந்த சாதாரண மன நிலைக்கும் அப்பால் ஒரு மூர்கத்தனம் அவரிடம் தெளிவாகவே வெளிப்படுகிறது. வேலையில்லாதவனாக எதற்கும் உதவாதவனாக கைவிடப்பட்டவனாக கடவுள் மத நம்பிக்கையும் அற்றவனாக திரிகிறான் சிலுவை . பலருக்கும் இதில் ஒரு சில அனுபவங்களோ அல்லது மொத்தமாகவோ கூட இருக்கும் ஆனால் சிலுவை வேறுபடுவது அவன் சாதி சார்ந்த சுமையினாலும் இது ஒரு கூரிய முள் போல் தைத்துக் கொண்டே இருக்கிறது. குருசாமி டெய்லருடன் சக்கிலியர் வீட்டில் சாப்பிட போகும் காட்சி மேட்டுக்குடி சாதிய மனப்பான்மை கொண்டவர்கள் கூனிக் குறுக வேண்டிய ஒரு தருணம். குருசாமி டெய்லர் மாதிரி பிள்ளைமார் சாதிக்காரர் சக்கிலியர் போல் இருப்பது அவருக்கு புரட்சி மாதிரி தெரியலாம் ஆனால் சிலுவை அப்படி இருந்தால் அது அவனது இயற்கை என்றுதானே நினைப்பார்கள் அத்தகைய புரட்சியும் வேண்டாம் ஒரு மயிரும் வேண்டாம் என்று நினைக்கிறான் சிலுவை.

நாவலில் வரும் பல பாத்திரங்களில் தற்போது அருகிவிட்ட உயிரினங்களான புரட்சிக்குமார் போன்றோர் முக்கியமானவர்கள். இந்த பெயரே   சிரிப்பை வரவழைக்கிறது. ஒரு குறுநகையுடன் தான் புரட்சிக்குமார் பற்றி படிக்க முடிகிறது. நாவலில் நம்மை மிகவும் ஆசுவாசப்படுத்தும் பகுதிகள் இவை.

சிலுவையின் தாய் தந்தை நம் பெற்றோரையும் நம்மில் பலரையுமே பிரதிபலிக்கிறார்கள். குறிப்பாகச் சொன்னால் குழந்தைகள் மீதான இந்திய மனதின் மனோபாவத்தை வன்முறையை. நாம் குழந்தைகளை நம் உடைமைகளாக மட்டுமே கருதுகிறோம் அன்பிற்கும் உடைமை மனப்பான்மைக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் அல்லது தெரிந்தாலும் அப்படி இருக்கவே விரும்புகிறோம். சிலுவையை தூக்கி அடித்து உதைப்பது என்பது ஒரு வேண்டா பொருளை கடும் வெறுப்புடன் தூக்கி எறிவது போன்றது தானே.

// ம்‌… மார்க்சியத்தப்‌ படிச்சு எதையும்‌ சர்வ நிச்சயமா எதிர்கொள்ள
முடியும்னு நெனச்சோம்‌. அது எவ்வளவு பெரிய தப்புனு இப்பத்தாஞ்‌
தெரிஞ்சுகிட்டேன்‌. இல்ல. எங்கேயோ கோளாறு இருக்கு. எங்கன்னு
தெரியல. எல்லாத்தையும்‌ அறிஞ்சா மட்டும்‌ போதாது. மனுசங்க
அன்றாடம்‌ வாழ்கிற சாதாரணமான வாழ்க்கையில சந்திக்கிற
விவகாரங்கள்‌, உறவுகள்‌ , நம்பிக்கைகள்‌, உணர்ச்சிகள்பற்றி நம்மால
ஒரு நிச்சயத்துக்கு வரமுடியல. வெளியுலகத்தப்‌ புரிஞ்சுக்கிற மாதிரி
உள்‌ உலகத்தப்‌ புரிஞ்சுக்கிற முடியல. அதுல ஒரு தெளிவில்ல.
அறிவ வச்சு, வெறும்‌ தர்க்கத்த வச்சு மட்டும்‌ சரியா வாழ முடியும்னு
தோணல. நமக்குக்‌ கடவுள்‌ நம்பிக்கை கெடையாது. இருந்திருந்தா
அத்திகர்கள்‌ மாதிரி பாரத்த கடவுள்கிட்டப்‌ போடலாம்‌. கடவுள்‌
செத்துப்‌ போச்சுன்னு மேற்க ஒருத்தன்‌ சொல்லிட்டுப்‌ போய்ட்டாம்‌.
அந்த எடம்‌ காலியாவேயிருக்கு. அதப்பத்திப்‌ பழக்கப்பட்டுப்போன
நம்ம மனசும்‌ காலியாவேயிருக்கு. அந்த எடத்துல எத வைக்கிறது?
எப்பிடி மனம்‌ சம்பந்தப்பட்ட சிக்கல்களச்‌ சரிபண்றதுன்னு புரியல:
ஒன்னால அது முடியல… தற்கொலதாந்‌ தீர்வுன்னு நெனச்சுடட-
எனக்கு ஒண்ணும்‌ சொல்லத்‌ தெரியல. ஏதோ தத்துவம்‌ அது இதுனு
பேசுறோம்‌…” இப்பிடி என்னமோ சொல்லிக்கிட்டே வந்தவரு
அப்றம்‌ மெளனமாகிவிட்டார்‌. அவருக்குள்ளேயே இப்ப அநேகமா ர்‌்
தர்க்கம்‌ பண்ணிக்இட்டிருப்பார்‌. //

இருத்தலியல் தொடர்பான அனைத்து சிக்கல்களையும் எந்த ஒரு சித்தாந்தமும் தீர்க்காது என்னும் புரிதலை சிலுவை கண்டடையும் புள்ளி இது. கடும் தன்னிரக்கம் கொண்டு அவன் அழுது ஓய்ந்த நிலையில் அவனுக்கு பெங்களூரில் அடைக்கலம் தரும் பாட்டாளி வர்க்க புரட்சியை ஏற்படுத்தி விடலாம் என்று கனவு காணும் பல்லாயிரத்தில் ஒருவரான சார்லஸ் உதவ முடியா ஒரு கையறு நிலையில் சிலுவையிடம் கூறுகிறார். சற்றும் எதிர்பாராத ஒரு உச்சத்திற்கு எடுத்துச் சென்று நாவலை முடிக்கிறார்… அந்த நிகழ்வை முடிந்தவரை கலாய்க்கிறார். ஐஞ்சு ரூபா பணம் கட்டி ஸ்ரீலஸ்ரீ யின் ஆராய்ச்சி முடிவின்படி ஏசுவை நிராகரித்து சைவ சமயத்தை தழுவுகிறான்.. இறுதியில் அந்த கடும் உளநிலையில் எஞ்சி நிற்பது பிழைப்புக்கான போராட்டம் மட்டும் தான். நான் மிக அணுக்கமாக உணர்ந்த நாவல்களில் ஒன்று இது

சிவக்குமார்

சென்னை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-29
அடுத்த கட்டுரை1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-3, பாலா