1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-3, பாலா

download (2)

1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா

 

2004 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்று, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்னும் பெயரில் ஆட்சியமைத்தன. 1991 ஆம் ஆண்டு, நரசிம்மராவ் ஆட்சியில், பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் துவங்கி வைத்து, நிதியமைச்சராகவும், வர்த்தக அமைச்சராகவும் இருந்த மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும், முறையே பிரதமராகவும், நிதியமைச்சராகவும் பதவியேற்றனர். இதே கூட்டணி, மீண்டும், 2009 ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று, தொடர்ந்து பத்தாண்டுகள் (2004-2014), ஆட்சி நடத்தியது.  தங்கள் ஆட்சியை வழிநடத்த, கூட்டணிக் கட்சிகள் இணைந்து,  குறைந்தபட்சச் செயல் திட்டம் ஒன்றை வகுத்தார்கள்.

குறைந்தபட்சச் செயல்திட்டம்: (Common Minimum Program) 

இந்தத் திட்டத்தின் நோக்கங்கள்:

  • சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் அடிப்படைவாத மற்றும் பிற்போக்குவாத சக்திகளுக்கு இடம் தராமல், சமூக நல்லிணக்கத்தைப் பேணுவது.
  • குறைந்த பட்சம் ஒரு வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்னும் வகையில் பொருளாதார வளர்ச்சியை (7-8%) உருவாக்குவது.
  • உழவர்கள், தொழிலாளர்கள் (குறிப்பாக, முறைசாரா அமைப்புகளில் பணியாற்றுபவர்கள்) நலன்களை மேம்படுத்தி, அவர்கள் எதிர்காலத்தை பாதுகாப்பது
  • கல்வி, அரசியல், பொருளாதார சட்டத் தளங்களில், மகளிருக்கு அதிக அதிகாரம் அளிப்பது
  • பட்டியலினம், பட்டியலினப் பழங்குடிகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மதச் சிறுபான்மையினருக்கு, சமூகத்தில் சமத்துவப் பங்களிப்பை உறுதி செய்வது.
  • தொழில் முனைவோர், வணிகர், விஞ்ஞானிகள், பொறியியலர் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் அனைவரையும் ஆக்கபூர்வமான வழிகளில் ஊக்குவித்தல்.

இந்த நோக்கங்களை நிறைவேற்றும் செயல்திட்டங்கள், 2004 ஆம் ஆண்டில், ஐ.மு கூட்டணியின் முதல் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன.

இந்த குறைந்த பட்ச செயல்திட்டத்தை நிறைவேற்ற பிரதமருக்கு உதவியாக தேசிய ஆலோசனைக் குழு (National Advisory Council) ஒன்று அமைக்கப்பட்டது.  இதில் திட்டக் கமிஷன் உறுப்பினர்கள், பொருளாதார வல்லுநர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள், வேளாண் விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், சூழியல் அறிஞர்கள் எனப் பல்வேறு தரப்பட்ட அறிஞர்கள் பங்குபெற்றார்கள். இந்தக் குழுவின் மிக முக்கியமான சாதனைகள் – மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புச் சட்டம், தகவலறியும் சட்டம், அடிப்படைக் கல்வி உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் முதலியன ஆகும்.

பாரத் நிர்மாண்: 

தில்லியின் அதிகாரத் தாழ்வாரங்களில், “பாரத்” என்பது ஊரக இந்தியாவைக் குறிக்கும்.  வெற்றி பெற்றதும், பிரதமர் மன்மோகன் சிங், இந்த ஆட்சி, உழவர்களுக்கு, ஊரக இந்தியாவிற்கு ஒரு புதிய திட்டத்தைக் (New Deal) கொண்டுவரும் எனக் கூறியிருந்தார். அதன் படி, அரசுத் திட்டங்களில், உழவு, மக்கள் நலன் போன்றவற்றில் அதிக முதலீடு செய்ய முடிவெடுக்கப்பட்டது.

பாரத் நிர்மான் என்னும் இந்தத் திட்டம், ஊரகக் கட்டமைப்பில், ஏற்கனவே இருந்த திட்டங்களை ஒன்றிணைத்து, முதலீட்டை அதிகம் செலுத்தி, விரைவில் மக்களுக்கு அதன் பலன்கள் சென்று சேர வழிவகுப்பதாகும்.

  • துரித நீர்ப்பாசன மேம்பாட்டுத் திட்டம்: 1996-97 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த்த் திட்டத்தை, மேலும் துரிதப்படுத்தி,  1 கோடி ஹெக்டர் நிலத்திற்கான பாசன வசதித் திட்டங்களில் ஐந்தாண்டுகளில் முதலீடு செய்து, உற்பத்தியைப் பெருக்குவது. 2004-5 ஆண்டிலிருந்து கூடுதலாக, 25% மத்திய அரசின் நிதி உதவி சேர்க்கப்பட்டது.
  • கிராமப்புறச் சாலைகள்: வாஜ்பேயி காலத்தில் துவங்கப்பட்ட இந்தத் திட்டத்தைத் துரிதமாக முடித்தல். 2004 துவக்கத்தில், 51511 கிலோ மீட்டர்களாக இருந்த இந்தக் கட்டமைப்பு, 10 ஆண்டுகளில், 3.89 லட்சம் கிலோ மீட்டர்களாக உயர்ந்தது.
  • இந்திரா ஊரக வீடுகள் திட்டம்: ஏழை மக்களுக்கான, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகள் கட்டும் திட்டம். முதல் ஐந்தாண்டுகளில், 71 லட்சம் வீடுகளும், அடுத்த ஐந்தாண்டுகளில் 1.2 கோடி வீடுகளும் கட்டப்பட்டன. 2004 ஆம் ஆண்டு துவக்கத்தில் 2500 கோடி அளவில் இருந்த முதலீடு, 2014 ஆம் ஆண்டு 10000 கோடியாக உயர்ந்தது.
  • கிராமப்புறக் குடிநீர்த் திட்டம்: 74000 கிராமங்களுக்கு, பாதுகாப்பான குடிநீர் வழங்கும் திட்டம்.
  • கிராமப்புற மின்சார இணைப்பு வழங்கும் திட்டம்: 25 லட்சம் கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம்.  இதில் கிட்டத்தட்ட  0.95 லட்சம் கிராமங்கள் 2014 ஆண்டு வரை மின் இணைப்புப் பெற்றுள்ளன.
  • கிராமப்புறத் தொலைபேசி இணைப்பு: 67 ஆயிரம் கிராமங்களுக்குத் தொலைபேசி இணைப்பு.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்: 

2005 ஆண்டு இந்தத் திட்டம், வருடத்துக்கு 100 நாட்கள் ஊரக மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதை ஒரு சட்ட பூர்வமான உரிமையாக்க, உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய அம்சங்கள்:

  • இது கிராமப் பஞ்சாயத்துகள் மூலமாக நிறைவேற்றப்படவேண்டும்.
  • கட்டமைப்புகளை (ஏரி, குளம், கிணறு, மழை நீர் சேகரிப்பு போன்றவை) உருவாக்க இது பயன்படுத்தப் படவேண்டும்.
  • தனியார் ஒப்பந்ததாரர்கள் (காண்ட்ராக்டர்கள்) இதில் ஈடுபடுத்தப்பட மட்டார்கள்
  • குறைந்தது 30% வேலைகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
  • 33% வேலைகள் தாழ்த்தப்பட்டவர்கள் / பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட வேண்டும்
  • ஆண்/பெண் இருவருக்கும் ஒரே அளவு ஊதியம்.

2012 ஆம் ஆண்டு. இத்திட்டத்தை மீள் ஆய்வு செய்த, ஊரக முன்னேற்றத் துறை அமைச்சர் திரு.ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்து கொண்ட முக்கியச் சாதனைகள் பின்வருமாறு:

  • 2006 ஆம் ஆண்டிலிருந்து 2011 வரை, 1.10 லட்சம் கோடி நிதி, இத்திட்டத்திற்குச் செலவழிக்கப்பட்டிருக்கிறது. 1200 கோடி மனித நாட்கள் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. சராசரியாக வருடம் 5 கோடி மக்கள் பயன் பெறுகிறார்கள்.
  • 80% பயனாளிகள் வங்கிக் (தபால் அலுவலகக்) கணக்கு மூலம் கூலி பெற்றிருக்கிறார்கள்.
  • இதில் 51% தாழ்த்தப்பட்ட/பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். 47% பெண்கள். (கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் 70% க்கும் அதிகமான பெண்கள் பயன்பெற்றார்கள்)
  • 46 கோடி சிறு கட்டமைப்பு வேலைகள் துவங்கப்பட்டு, அவற்றுள் 60% முடிக்கப்பட்டு விட்டன.
  • 2011 ஆம் ஆண்டிலிருந்து, தகவல்கள் தினமும் திரட்டுப்பட்டு அமைச்சக வலைதளத்தில் வெளியிடப்படுகிறது.

இந்தத் திட்ட உருவாக்கத்தில் மிக முக்கியப் பங்காற்றியவர்கள் இருவர். ஜீன் ட்ரீஸ் (Jean Dreaze) என்னும் புகழ்பெற்ற பொருளாதார அறிஞர். இன்னொருவர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும்,  மஜ்தூர் கிஸான் சக்தி சங்கடன் (MKSS) என்னும் மக்கள் நல இயக்கத்தை உருவாக்கியவருமான அருணா ராய்.

இது, 7-17% ஊரக ஏழைமக்களின் வருவாயை அதிகரித்திருக்கிறது என ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. இந்த கூடுதல் வருவாய், பெரும்பாலும் உணவுக்கு (50%), செலவிடப்படுகிறது. அதன் பின் உடை, கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு உதவுகின்றன.  இன்னொரு மிக முக்கியமான விளைவாக, ஊரக வேளாண் கூலிகள் உயர்ந்தன.  1999-2005 ஆண்டுகளில், சராசரியாக வருடம், 2.7% உயர்ந்த வேளாண் கூலி, 2006-2009 ஆண்டுகளில், சராசரியாக 9.7% ஆக உயர்ந்தது.

vajpayee-PVN

வேளாண் பொருளாதார உதவித் திட்டங்கள்: 

  • வேளாண்மைக்கான வங்கி நிதி உதவி 2003-4 ஆம் ஆண்டு 87000 கோடியாக இருந்த்து. இது, 2014-15 ஆம் ஆண்டு 8 லட்சம் கோடியாக உயர்ந்தது.
  • தேசிய தோட்டக்கலைத் துறைக்கான திட்டங்கள் (National Horticulture Mission)மற்றும் நிதி உதவிகள், 2004-5 ஆண்டு, 184 மில்லியன் ஹெக்டர் நிலப் பரப்பில் இருந்து, 2014-15 234 மில்லியன் ஹெக்டராக உயர்ந்தது. அதேபோல், உற்பத்தி, 166 மில்லியன் டன்னில் இருந்து, 281 மில்லியன் டன்னாக உயர்ந்தது. உற்பத்தித் திறன் 0.9 டன்னில் இருந்து 1.2 டன்னாக உயர்ந்தது.
  • உணவு உற்பத்திக்கான நில அளவு குறைந்தும், உணவு உற்பத்தி, 2003-4 ஆம் ஆண்டில் 213 மில்லியன் டன்னில் இருந்து, 2013-14 ஆம் ஆண்டு 255 மில்லியன் டன்னாக உயர்ந்தது.
  • உற்பத்திக்குச் சரியான ஆதரவு விலை (minimum support price) – எடுத்துக்காட்டாக, நெல்லுக்கு 2003-4 ல் குவிண்டாலுக்கு 550 ஆக இருந்த ஆதரவு விலை, 2008-9 ல் 900 ஆக உயர்த்தப்பட்டது. கோதுமைக்கு அதே போல், 630 லிருந்து, 1080 ஆக உயர்த்தப்பட்டது.
  • வேளாண் பொருளாதாரம், முதல் ஐந்தாண்டுகளில் 3.7% மும், அடுத்த ஐந்தாண்டுகளில் 4% மும் உயர்ந்தது.

இந்த அணுகுமுறையின் பத்தாண்டுகளில், ஊரக வறுமை வேகமாகக் குறைந்தது. 14 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டிற்கு மேலே வந்தார்கள்.

கல்வி மற்றும் சுகாதாரம்:

  • கல்விக்கான ஒதுக்கீடு, 10,145 கோடியில் இருந்து (2003-04), 79451 கோடியாக (2103-14) உயர்ந்தது.
  • உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு 9 மடங்கு உயர்ந்தது. 15 மத்திய பல்கலைக் கழகங்கள், 8 இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (Indian Institute of Technology) துவங்கப்பட்டன.
  • இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science) போல் அடிப்படை அறிவியல் கல்விக்கான, 5 புதிய இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன (Indian Institute of Science Education and Research (IISER)).
  • 6 புதிய இந்திய மேலாண் கழகங்கள் அமைக்கப்பட்டன.
  • 6 அகில இந்திய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
  • 2004 ஆம் ஆண்டு 4500 கோடியாக இருந்த கல்விக்கடன், (3.2 லட்சம் பயனாளிகள்), 2014 ஆம் ஆண்டு, 75000 கோடியாக உயர்ந்தது (30 லட்சம் பயனாளிகள்). (கேரளம், தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டுமே நாட்டில் வழங்கப்பட்ட கடன்களில் 40% வாங்கியுள்ளன).
  • பொதுச்சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு, 2004 ல், 7248 கோடியில் இருந்து, 2014 ஆம் ஆண்டு, 36332 கோடியாக உயர்ந்தது.

நிர்வாக மற்றும் சமூகச் சீர்திருத்தச் சட்டங்கள்:

தகவலறியும் சட்டம்: (Right to Information Act)

1994 ஆம் ஆண்டு, ராஜஸ்தானில், அருணா ராய் தலைமையிலான மஜ்தூர் கிஸான் சக்தி சங்கடன் (உழைப்பாளர், உழவர் சக்தி), தகவலறியும் சட்டம் வேண்டும் என்பதை, மக்கள் போராட்டமாகத் துவங்கியது. இது ஊரக அரசுத் திட்டங்கள் பற்றிய தகவல்கள் பொதுவெளியில் வைக்கப்பட வேண்டும் என்பதற்கான போராட்டம்.

இந்தச் சட்டம் முதன்முதலாக, தமிழகத்தில் 1997 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் மற்ற மாநிலங்களில் வந்தது. இறுதியாக, இந்த ஆட்சியில், 2005 ஆம் ஆண்டு, இந்தச் சட்டம் மத்திய அரசிலும், நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இது, அரசின் திட்டங்களை, அதற்கு ஆகும் செலவினங்களை, குடிமகன் அறிந்து கொள்ள உதவும்.

லோக்பால் சட்டம்: 

இதன் சட்ட வரைவு, 2010 ஆம் ஆண்டு அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த வரைவை எதிர்த்து, அன்னா ஹசாரே தலைமையில், ஒரு பெரும் மக்களியக்கம் துவங்கியது. பின்னர், அரசின் சட்ட வரைவு, மக்களியக்கத்தின் பங்களிப்போடு மாற்றப்பட்டு, 2013 ஆம் ஆண்டு சட்டமாக நிறைவேறியது.

மத்திய அரசில், லோக்பால் எனவும், மாநில அரசில் லோக் ஆயுக்தா எனவும் அழைக்கப்படும் இந்த வடிவம், தேர்தல் கமிஷன் போல, அரசியல் சாசனத்தின் ஒரு அங்கமாக, அரசின் தலையீடுகள் இன்றி இயங்க வேண்டும். இதற்கான உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறையும் மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும். ஊழல்வாதிகளுக்குத் தண்டணை, ஊழலால் பாதிக்கப்படும் குடிமகன்களுக்கு நிவாரணம், ஊழல்களை வெளிக்கொணரும் குடிமகன்களுக்குப் (whistle Blowers) பாதுகாப்பு போன்றவை இதன் முக்கிய அம்சங்களாகும். இது இன்னும் மத்திய அரசிலும், பெரும்பாலான மாநில அரசுகளிலும் நடைமுறையில் இல்லை.

கல்வி உரிமைச் சட்டம் (Right to Education Act): 

இது, 2009 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு, கட்டாய இலவசக் கல்வி என்பதும், தனியார் பள்ளிகள், 25% இடங்களை, இதற்காக ஒதுக்க வேண்டும் என்பதும் இதன் முக்கிய அம்சங்களாகும்.  இது நடைமுறையில் பெரும் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது

நிலக் கொள்முதலில், வெளிப்படைத்தன்மை, சரியான விலை மற்றும் நிவாரணச் சட்டம் (Right to transparency, fairprice, relief and rehabilitation act) 

அரசு திட்டங்களுக்காக, மக்களிடம் இருந்து நிலம் கொள்முதல் செய்யும் போது, அதன் தகவல்கள் வெளிப்படையாக இருப்பதில்லை. சரியான விலை கிடைப்பதில்லை. கொடுக்கப்படும் விலை, மக்களுக்கு உடனடியாகக் கிடைப்பதில்லை. மக்களுக்கான மறுவாழ்வு சரியான முறையில் அமைவதில்லை. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க, இந்தச் சட்டம் 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஆனால், இன்று, இது நடைமுறையில் இல்லை

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்: (National Food security Act). 

இது 2013 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட்து. ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும், மதிய சத்துணவுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றை, மக்களுக்கு சட்ட பூர்வமான உரிமையாக மாற்றியது இந்தச் சட்டம்.

தொழில்துறை: 

தில்லி மும்பை தொழிற் தாழ்வாரம் (Delhi Mumbai Industrial Corridor – DMIC) 

இந்தியத் தலைநகர் தில்லிக்கும், நிதித்தலைநகர் மும்பைக்கும் இடையே பெரும் தொழிற் கட்டமைப்பை ஏற்படுத்தும் திட்டம். இவ்வழியில், 24 தொழிற்பிராந்தியங்கள், 8 நவீன நகரங்கள் (smart cities), 2 பன்னாட்டு விமான நிலையங்கள், 5 பெரும் மின் திட்டங்கள், 2 மெட்ரோ ரயில் திட்டங்கள், 2 போக்குவரத்து முனையங்கள் ஏற்படுத்தப்படும்.  இவையனைத்தும், தில்லி-மும்பை வழியில், இதற்கெனவே தனியாக அமைக்கப்படும் சரக்கு ரயில் (dedicated freight corridor) வழி (1504 கிலோமீட்டர்) மூலம், மும்பை துறைமுகத்துடன் இணைக்கப்படும். 7லட்சம் கோடி செலவில் அமைக்கப்படும் இந்தத் திட்டம் நிறைவேறுகையில், உலகின் மிகப் பெரும் தொழிற்கட்டமைப்புகளில் ஒன்றாக இருக்கும்.

இந்த்த் திட்டத்தினால், இந்தப் பிராந்தியத்தின் தொழில் உற்பத்தி மூன்று மடங்கும், ஏற்றுமதி நான்கு மடங்கும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக 30 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பைப் பெறுவர்.

இந்தத் திட்டத்தினால் ராஜஸ்தான், குஜராத், மஹராஷ்ட்ரா மாநிலங்கள் பெரும்பயன் அடையும்.

கட்டமைப்புகள் மற்றும் சீர்திருத்தங்கள்: 

  • மின் உற்பத்திக் கொள்திறன், 112700 மெகாவாட்டில் இருந்து (2004-5), 234600 மெகாவாட்டாக உயர்ந்த்து (2014-15).
  • நிலக்கரி உற்பத்தி 361 மில்லியன் டன்னில் (2004-5), 554 மில்லியன் டன்னாக உயர்ந்தது.
  • 1956 ஆம் ஆண்டு நிறுவனச் சட்டங்கள் சீர்திருத்தப்பட்டன.

இத்துடன், வாஜ்பேயி காலத்தில் துவங்கப் பட்ட தங்க நாற்கரம், 4 வழிப்பாதையில் இருந்து 6 வழியாக மாற்றப்பட்டது. தொலைபேசி, மருந்து உற்பத்தி, வான் வழித் தொழில், மின் உற்பத்தி மற்றும் வணிகம், சில்லறை வணிகம் போன்ற துறைகளில், அன்னிய முதலீட்டுக் கொள்கைகள் தளர்த்தப்பட்டன.

சிறு/குறு தொழில்களுக்கான வங்கி நிதி உதவி, 2004 ஆம் ஆண்டு, 83500 கோடியில் இருந்து, 2014 ஆம் ஆண்டு 5.27 லட்சம் கோடியாக உயர்ந்தது.

photofeature17_121616101809

2008 அமெரிக்க நிதிச்சிக்கலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும்: 

2008 ஆம் ஆண்டு, அமெரிக்காவை பெரும் நிதிச் சிக்கல் உலுக்கியது. லெஹ்மான் ப்ரதர்ஸ் என்னும் பெரும் நிதி நிறுவனம் துவங்கி பல நிறுவனங்கள் திவாலாகின. இதன் விளைவாக, ஐரோப்பிய நாடுகளிலும் நிதி நெருக்கடி உருவாகி, சில ஆண்டுகளில், உலகப் பொருளாதார வளர்ச்சி குறையத் துவங்கியது.

இதே சமயத்தில், உலக எரிபொருள் விலைகளும் தாறுமாறாக ஏறத் துவங்கின. கச்சா எண்ணெய் பீப்பாய் 140 டாலருக்கும் அதிகமானது. 200 டாலரைத் தொடும் என வதந்திகள் பரவ, உலக ஏற்றுமதிச் சந்தை வீழ்ந்தது.

1990 களுக்கு முன்பு, பாரதம் எரிபொருளுக்கு மட்டும் தான் உலகோடு அதிகம் தொடர்பு வைத்திருந்த்து. ஆனால், 2008ல் அப்படியல்ல. பொருளாதாரத்தில் 35% வெளிநாட்டு வணிகம் (ஏற்றுமதி+இறக்குமதி). இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறையும் என உணர்ந்த, இந்திய அரசு, பல பொருளாதாரக் கொள்கை ஊக்கிகளை அறிவித்தது. முக்கியமான துறைகளில் கலால் வரிகள் 50% குறைக்கப்பட்டன. வேலைவாய்ப்புகள் அதிகம் துறை பொதுத்துறைத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது. மத்திய ரிசர்வ் வங்கி, தனது நிதிக் கொள்கைகளைத் தளர்த்தி, சந்தையில் அதிக நிதி இருக்கும்படிப் பார்த்துக் கொண்டது.

2008-9 ல், 6.72% ஆகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி, 2009-10 ல், 8.59% ஆக மீண்டது. ஆனால், 2009-10 துவங்கி உலகப் பொருளாதார வளர்ச்சி, அமெரிக்க நிதிச் சிக்கல்களில் இருந்து மீள முடியாமல்,  மீண்டும் குறைய, இந்தியப் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது.

இறுதியாக.. 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஐந்தாண்டுகளில், (2004-9), பொருளாதார வளர்ச்சி 8.4% ஆக இருந்தது. அடுத்த ஐந்தாண்டுகளில் (2009-14) 6.8% ஆகக் குறைந்தது.

மொத்தத்தில், 2004-2014 என்னும் பத்தாண்டுகளில், இந்தியப் பொருளாதாரத்தின், சராசரி வளர்ச்சி, 7.7% ஆகும்.

2004 ஆம் ஆண்டு 32 லட்சம் கோடியாக இருந்த இந்தியப் பொருளாதாரம், 2014 ஆம் ஆண்டு, 100 லட்சம் கோடியாக உயர்ந்தது.  இந்தக் காலகட்டத்தில், தனி நபர் வருமானம் சராசரியாக வருடம் 20% உயர்ந்தது.

பத்தாண்டுகளில், 14 கோடிக்கும் அதிகமான மக்கள், வறுமைக் கோட்டிற்கு மேலே வந்தார்கள்.  சுதந்திர இந்தியாவில், மிக அதிகமாக வறுமை குறைந்த காலகட்டம் இதுதான்.

2004 முதல் 2014 வரையிலான பத்து ஆண்டுகள், நவீன இந்தியப்பொருளாதார வரலாற்றில், மிக அதிகமான சராசரி வளர்ச்சிக்காலம்.

Reference:

முந்தைய கட்டுரைசிலுவைராஜ் சரித்திரம் பற்றி
அடுத்த கட்டுரைகுடும்பத்தில் இருந்து விடுமுறை