நூல்களை அனுப்புதல்…
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். நலம் அறிய ஆவல். உங்களுக்கு இருக்கும் எழுத்து வேலையில் இது நினைவில் இல்லாமல் இருக்கலாம். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன், தங்களின் ‘அறம்’ நூலை வாங்கி பதினைந்து பேருக்கு அன்பளிப்பாக கொடுத்ததாக கடிதம் எழுதினேன். நீங்களும் எனக்குப்பதில் எழுதியிருந்தீர்கள். எனக்கு நீண்ட நாட்களாக,யார் யார் எப்படி படித்தார்கள், என்னவிதமான விமர்சனம் செய்தார்கள் என்று எழுதவேண்டும் என்று நினைப்பேன். அப்படி இப்படி என்று நாட்கள் ஓடி விடுகிறது. இன்று, எழுத்தாளர்கள் நண்பர்களுக்கு நூல் அனுப்புதலைப்பற்றிய கட்டுரையை தங்கள் பக்கத்தில் வாசித்ததும், ஒரு தூண்டுதலில் இதை எழுதுகிறேன். அதுவும் உங்களின் இந்த வாக்கியம் என்னை மிகவும் ஆதர்சமாகத் தொட்டது. “அது ஓர் அன்புப்பரிசு, ஓர் அறிவுப்பரிமாற்றம். பல தருணங்களில் அதைவிடவும் மேல். அதை எவருக்கு எப்படி அளிக்கவேண்டும் என்பது உங்கள் அகத்தால் நீங்கள் முடிவுசெய்யவேண்டியது.”
நான், அறம் நூலை அன்பளிப்பாக கொடுக்க தேர்வு செய்த அனைவருமே ஒருவகையில்வாசிப்பவர்கள் என்ற அனுமானத்தில்தான் கொடுத்தேன். அறம் முழு புத்தகத்தையும் படித்தவர்கள் என்று பார்த்தால், எட்டு நபர்கள் தான். அறம் புத்தகத்தை என்னிடம் அன்பளிப்பாக பெற்ற சில நண்பர்களின் பெற்றோர்கள் அமெரிக்காவிற்கு வந்திருந்தபொழுது , அவர்களும் வாசித்தார்கள். ஆதலால், அறம், நான் நினைத்ததைவிட அதிக நபர்களால் வாசிக்கப்பட்டது/ வாசிக்கப்படுகிறது. முழுப் புத்தகத்தை வாசிக்காத நண்பர்கள்கூட, யானை டாக்டர் கதையை வாசித்தார்கள். படித்ததை பற்றி விஸ்தாரமாக பேசினார்கள். அதை பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு , பாடமாக வைத்துள்ளார்கள் என்று கூடுதலாக ஒரு தகவல் சொல்லுவேன். அப்படியா, பரவாயில்லை பாடமாக வைக்க வேண்டிய கதைதான் என்று சொல்வார்கள். அதில் சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கும் சுற்றப்புற சூழல்விழிப்புணர்வு எல்லோருக்கும் பிடித்திருந்தது. டாக்டரின் ஆளுமையும் அனைவரையும் கவர்ந்தது. எதையும் புல்லட் பாயிண்டில் படிக்கும் நண்பன் ஒருவன் , வர்ணனைகளையெல்லாம் எடுத்துவிட்டு , இன்னும் கொஞ்சம் சுருக்குமாக, யானை டாக்டர் இருந்திருக்கலாம் என்றான். தனது வாழ்நாளில், பாட நூல் அல்லாது, அவன் முழுதாக வாசித்த நூல் இதுவே. அவனது இந்த விமர்சனத்தை கொஞ்சம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். டாலஸ் நகரில் வசிக்கும் குணமொழி என்னும் சகோதரி மட்டும், அவரது எண்ணங்களை எனக்கு உடனுக்குடன் டெக்ஸ்ட் மெசேஜ் செய்த வண்ணம் இருந்தார். நான் அவருக்கு, அறம் புத்தகத்தை அன்பளிப்பாக கொடுத்தது, நவம்பர் 4, 2017. எங்கள் கருத்து பரிமாற்றம் நடந்தது, ஆங்கிலத்தில். தமிழில் மொழிபெயர்த்துக் கொடுக்கிறேன்.
செவ்வாய் , நவம்பர் 7, 2017 7:31 AM
குணா: அண்ணா, ஒரு நாளைக்கு ஒரு கதை வீதமாக , இதுவரை மூன்று கதைகள் படித்துவிட்டேன் – சோற்றுக்கணக்கு, அறம், வணங்கான். இதுவரை படித்ததில், எனக்குப் பிடித்தது என்று வகைப்படுத்தினால், வணங்கான் முதல், அப்புறம் அறம், அதற்கு அப்புறம் சோற்றுக்கணக்கு :)
நான் : நல்ல வாசிப்பு. கருத்துக்களை பரிமாறியதற்கு நன்றி.
புதன் , நவம்பர் 8, 2017 11:39 PM
குணா: அண்ணா, நேற்றே தாயார் பாதம் படித்துவிட்டேன். இன்று, யானை டாக்டர். படித்து முடிக்கும்பொழுது நிரம்பவும் நேரமாகிவிட்டது. இது ஒரு நீண்ட கதை. ஆனால், படித்துமுடிக்காமல் , என்னால் தூங்க முடியவில்லை. எவ்வளவு விஷயங்கள். எவ்வளவு உணர்வுகள். இப்பொழுதுதான் வாசித்து முடித்தேன்.
மிகவும் அருமை!
இப்பொழுது , யானை டாக்டர்தான் எனக்குப் பிடித்த கதைகளில் முதல் இடம் வகிக்கிறது. தாயார் பாதம் கடைசி. மற்ற கதைகள் நேற்றுச் சொன்ன அதே வரிசைப்படி. :)
வியாழன், நவம்பர் 9, 2017 9:24 AM
நான் : உன்னை , சிறிதே அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். நான் நினைத்ததுபோல் உனது கருத்துக்களை சொல்கிறாய். யானை டாக்டர்-தான் நிறைய பேருக்கு பிடித்திருக்கிறது. ஆமாம், அது மற்ற கதைகளைவிட மூன்று மடங்கு பெரியது. உனது வாசிக்கும் ஆர்வத்தை பாராட்டுகிறேன்!
குணா: :)
வியாழன், நவம்பர் 9, 2017 11:14 PM
குணா: அண்ணா, நூறு நாற்காலிகள் வாசித்தேன்.
இது பழங்குடி இனத்தவரின் இன்னொரு பரிமாணம். நான். இதைப்போன்ற ஒரு அனுபவத்தை, IRS-ல் வேலை பார்த்த தோழியின் தந்தை மூலம் அறிந்திருக்கிறேன். ஜெமோ அவர்களின் விரிவான எழுத்து , அந்த வலியை மேலும் புரியும்படியாக செய்துவிட்டது.
இப்பொழுது நூறு நாற்காலிகள் முதலிடம் வகிக்கிறது. அப்புறம் யானை டாக்டர், வணங்கான், அறம், சோற்று கணக்கு, தாயார் பாதம்.
வெள்ளி, நவம்பர் 10, 2017 9:56 AM
நான்: நல்ல எதிர்வினை. யார் அந்த IRS அப்பா? இங்கு இருப்பவர்களில் ஒருவரா ?
குணா: நான் கல்லூரியில் படிக்கும்பொழுது ஒரு தோழி இருந்தாள். அவளது அப்பா வருவாய்த்துறையில் (நம் ஊர் IRS) வேலை பார்த்தார். அவர்கள் குடும்பம், திருச்சியில் இருந்த எங்களது குடும்பத்திற்கு மிகவும் தெரிந்தவர்கள். அவர்கள், தலித் இனத்தைச் சார்ந்தவர்கள். எனக்கு அந்த வலி புரிந்திருந்தது. அந்த குழந்தைகள், அந்த வலியுடனேயே இருந்தார்கள். நான் அடுத்தமுறை போனில் பேசும்பொழுது சொல்கிறேன். கதையில் உள்ளதுபோல்தான்.
இன்று காலை, அடுத்த கதையான பெரும் வலி வாசிக்க நேரம் ஒதுக்குகிறேன். வார இறுதிவந்துவிட்டது. இன்னொரு விரிவான கதை.
என்னுடைய தரவரிசையில் மாற்றம் எதுவும் இல்லை. இதுவும், தாயார் பாதமும் ஒரே தரத்தில்.
வெள்ளி, நவம்பர் 10, 2017 8:54 PM
நான்: சந்தோசம். பெருவலி-யில் யாரைப்பற்றி சொல்லியிருக்கிறார் என்று தெரிகிறதா ?
ஞாயிறு, நவம்பர் 12, 2017 3:11 PM
குணா: இப்பொழுதுதான் கொஞ்சம் தேடி கண்டுபிடித்து யார் என்று தெரிந்துகொண்டேன் – தண்ணீர் தண்ணீர் கோமல்.
அறம் புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டேன்.
இப்பொழுது எனது தர வரிசையில், நூறு நாற்காலிகளுக்கு முதலிடம். மற்ற கதைகள் இந்த வரிசையில் – யானை டாக்டர், வணங்கான், கோட்டி, அறம், சோற்றுக்கணக்கு, உலகம் யாவையும், தாயார் பாதம், பெருவலி, ஓலைச் சிலுவை, மத்துறு தயிர், மயில் கழுத்து.
—
சகோதரி குணாவிற்கு அறம் புத்தகம் கொடுத்த அதே நாள்தான் டாலஸ் மாநகரில் ஆனந்தசந்திரிகை எனும் பத்திரிகை நடத்தும் நண்பர் ராம்கி அவர்களுக்கும் கொடுத்தேன். ஜனவரி 29, 2018 அன்று அவரிடமிருந்து வந்த மின்னஞ்சல் இது. “தாங்கள் கொடுத்த ‘அறம்’ புத்தகம் படித்து முடித்து விட்டேன். மிகவும் ரசித்தேன். சில கதைகள் (சம்பவங்கள்) மனதை கலங்க வைப்பவைகளாக இருந்தன.”
எழுத்தாளர்கள் நண்பர்களுக்கு புத்தகங்கள் கொடுக்கலாமா என்று கேள்விகேட்டு ஆராய்வதைவிட, யாருக்கு யார் வேண்டுமானாலும், அவர்கள் வாசிப்பவர்கள் என்று தெரிந்தால் கொடுக்கலாம். நான் , புத்தகத்தை அன்பளிப்பாக கொடுப்பதை தொடர்ந்துகொண்டுதான் உள்ளேன்.
அன்புடன்,
வ. சௌந்தரராஜன்