அன்புள்ள ஜெயமோகன்,
அண்மையில் தஞ்சைப் பயணம் சென்றிருந்தேன். உங்கள் தஞ்சைப் பயணம் குறித்த கட்டுரைகளால் உந்தப்பட்டது ஒரு முக்கிய காரணம். நீங்கள் சென்ற இடங்கள் அனைத்திற்கும் செல்ல இயலவில்லை எனினும், நாங்கள் சென்றவை அனைத்தும் நீங்கள் சுட்டிக்காட்டியவை. குடுமியான்மலை, தாராசுரம், கொடும்பாளூர் ஆகிய அற்புதமான இடங்களுக்குச் செல்ல ஆர்வமூட்டியதற்கு என் நன்றிகள்.
மூன்று ஆண்டுகளாய் உங்கள் பதிவுகளைத் தொடர்வதன் விளைவாய், இந்த வருடம் நான் வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிற பல புத்தகங்களும், நீங்கள் அடையாளம் காட்டியவை…நாஞ்சில் நாடன், ஆ.மாதவன், சுகுமாரன், வண்ணநிலவன் போன்றோர் எழுதியவை. சக எழுத்தாளர்கள் மீதும் வெளிச்சம் போட்டுக்காட்டுவது, ஓர் அரிய பங்களிப்பு.
தஞ்சைப் பயணம் குறித்த என் ஆங்கிலப்பதிவு இங்கே. தமிழறியாத என் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் எழுதியது.
நான் ‘திசைகளின் நடுவே’ குறித்து எழுதிய கடிதம் உங்கள் கவனித்தில் பட்டதா எனத்தெரியவில்லை. எனவே அந்த மடலின் தொடர்ச்சியாகவே இதையும் இணைத்திருக்கிறேன்.
அன்புடன்
த.கண்ணன்
http://urakkacholven.wordpress.com/
அன்புள்ள கண்ணன்
பதிவைக் கண்டேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
பொதுவாக நாம் நம்முடைய பண்பாட்டு மூலங்களைப்பற்றி இன்னும் விரிவாக தொடர்ச்சியாகப் பேசுவது அவசியம் என்று நினைக்கிறேன். தமிழின் சொத்துக்கள் எனச் சொல்லப்படும் பல கோயில்கள் பற்றி மிகக்குறைவாகவே பொதுவெளியில் பேசப்பட்டிருக்கின்றன
ஜெ
========================
அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
மலேசியாவிற்கு தாங்கள் 2006ஆம் வந்திருந்த போது, தங்களின் இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் ஒரு பார்வையாளனாக கலந்து கொண்டேன். அந்நிகழ்விற்குப் பிறகு தங்களின் எழுத்துக்களை வாசித்து வருகிறேன். சமீப காலமாக, தங்களின் வலைத்தளத்தையும் வாசித்து வருகிறேன்.
அதன் பிறகு, 2008இல், மதுரை தமுக்கத்தில் நடந்த புத்தக திருவிழாவில், உங்களுடன் சிறிது நேரம் பேசினேன்.
என்னுடன் எனது அப்பாவும் வந்திருந்தார். அவரை தங்களிடம் அறிமுகம் செய்து வைத்தேன்.
எனது அப்பாவிற்கு, இலக்கிய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டு.
உங்களிடம் பேசியது, என் அப்பாவிற்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
(என் அப்பா, சென்ற ஆகஸ்டு மாதம் காலமாகி விட்டார்).
இது வரையிலும், தங்களுக்கு கடிதம் எழுத நினைத்து, எழுத முடியவில்லை. தங்களுக்கு எப்படி, எதைக் குறித்து எழுதுவது என்று இதுவரை தெரியவில்லை. இது தவிர, இப்பொழுதுதான் வலைத்தளத்தில் தமிழில், டைப் செய்ய பழகியுள்ளளேன்.
தங்களுக்கு கடிதம் எழுத இந்த புத்தாண்டு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
இனிமேல், அடிக்கடி கடிதம் எழுதுவேன் என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
ஜீவன்.
அன்புள்ள ஜீவன்
தொடர்ந்து எழுதுங்கள்
பயணங்களில் நான் மின்னஞ்சல் பார்ப்பதில்லை. ஆகவே பலசமயம் பதில்கள் தாமதமாகலாம். ஆனாலும் தொடர்பு நல்லதே
ஜெ
=============================
அன்புள்ள ஜெயமோகன் சார்,
இந்த கட்டுரையின் இறுதி பத்திகளில் வரும் கன்னியாகுமரி விடுதி அறை, அழகான பெண் என்ற வார்த்தைகளை படித்தவுடன் எனக்கு கன்னியாகுமரி நாவல் நினைவு வந்துவிட்டது. மின்னல் கீற்றுபோல ஒரு ஒற்றை உண்மை நிழல்வை வைத்து நீங்கள் தொடுத்த அழகான மாலை கன்னியாகுமரி. அன்றாட வாழ்க்கையே ஒரு படைப்பாளிக்கு கலையை
உண்டாக்குவதற்கான சுரங்கம். அல்லது ஒரு படைபாளிக்குதான் தன் வாழ்விலிருந்து கலையை தோண்டிஎடுக்கத் தெரிந்திருக்கிறது.
அன்புடன்
குரு
அன்புள்ள குருமூர்த்தி பழனிவேல்
நைஜீரியா எப்படி இருக்கிறது?
நான் பாபுநந்தன்கோடு பற்றிய தகவல்களை இப்போதுதான் வாசிக்கிறேன். ஆனால் கன்யாகுமரியில் ஓர் இளமை நினைவில் இருந்து மீட்டெடுத்து கிட்டத்தட்ட சரியாகவே அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறேன்
பாபு துறவியாக எங்கோ போய்விட்டார் என்று என்னிடம் ‘ஏர்முனை’ அருண்மொழி சொன்னார்
ஜெ
==========================
அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு.,
நலம். நலமறிய ஆவல். திரு. ஆ.மாதவன் அவர்களுக்கு விருது வழங்கிய விழா கட்டுரையும், போட்டோக்களும் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. உங்கள் முயற்சிக்கும், நடத்திய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். அரங்கசாமிக்கும் எழுதியுள்ளேன். இதுவும், திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கான பாராட்டு விழாவும் ஒரு பெருந்தொடரின் நல்ல ஆரம்பம் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்தியாவிலிருந்து “சங்கச்சித்திரங்கள்” வாங்கி வரச்சொல்லி இப்போதுதான் படித்து முடித்தேன். அற்புதமான அனுபவம்.
வழக்கம் போல் ஒவ்வொரு பகுதியையும் படித்து முடிக்கும் போதும் மனதில் அதன் அனுபவம், சாராம்சம் ஒரு காட்சியாய் வரும். உதாரணம், “மணலாறு” படித்ததும் வைகை மணலில் ஒரு கணவன் – மனைவி உட்கார்ந்து பேசுவது போல, காயல் கரையின் தென்னை மரத்தில் சாய்ந்து நிற்கும் “மாயக்கணம்” பெண்ணின் பார்வை, “பாலை மழை” பெண்ணை பிரியும் தாய் போன்றவை. ( இது தொடராக வந்த போது இதோடு ஓவியங்கள் வந்ததா? )
ஆனால் பல பகுதிகள் ஒரே படத்துக்குள் வருவதில்லை, ஒரு தொடர் காட்சியின் ஒரு silent observer ஆக இருந்து அனுபவிக்கவைக்கிறது . “சூனியத்தில் ஓர் இடம்”, “அருவியும் ஆறும்”, “இருளின் பெருமூச்சு” “இயல்பு உணர்தல்” போன்றவை. முழு பகுதியுமே ஒரு பெரும் வாழ்கை தருணமாய் உள்ளது. அருமை.
ஒரு பகுதி உண்மையில் எனக்கு வாழ்கையில் நேரடியாய் உதவியது என்றால் நம்புவீர்களா? இவ்வருடம் இந்தியா வரும்போது, உங்களுக்கு முடிந்தால் கண்டிப்பாய் நேரில் சந்திக்கிறேன். அப்போது விபரமாய் சொல்லுகிறேன்.
“பின்தொடரும் நிழலின் குரல்” பாதி படித்திருக்கிறேன். முழுமையாய் படிப்பதற்கு,புரிவதற்கு கொஞ்சம் pre-read செய்ய வேண்டும் என நினைக்கிறேன். படித்தபின் கடிதம் எழுதுகிறேன்.
நேரம் கிடைக்கும்போது பதில் போடவும்.
அன்புடன்.,
பாலாஜி சீனிவாசன்
அன்புள்ள ‘’ஆனந்தகோனார்’
டல்லாஸுக்கு என் நண்பரும் பாடகருமான ராமச்சந்திர ஷர்மா வருகிறார். மின்னஞ்சல் கொடுத்திருக்கிறேன்
நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?
ஜெ