ஆனந்தியின் அப்பா[சிறுகதை]

chilks

 [ 1 ]

திரைப்படத்தை படத்தொகுப்பு செய்யும் வாய்ப்பு என்று நினைத்துத்தான் வந்தேன். என்னை வரவேற்ற வேலைக்காரர்  “சின்னவர் உங்கள பாக்கணும்னு சொன்னார்” என்றபோது “சின்னவர்னா?” என்றேன். “ஆனந்தி அம்மாவோட மகன்… அமெரிக்காவிலே டாக்டரா இருக்கார்” என்றர். படத்தயாரிப்புக்காக இல்லை போலும் என்ற ஐயத்தை அடைந்தேன். வேறெதற்காக என்று ஊகிக்கமுடியவில்லை

 

வரவேற்பறையில் ஸ்ரீராம் நடித்த படங்களில் இருந்து எடுக்கப்பட்ட நிலைப்படங்கள் பெரிதாக சட்டமிடப்பட்டு மாட்டப்பட்டிருந்தன. அனைத்துமே கருப்புவெள்ளை படங்கள். வண்ணப்படங்களைக்கூட கருப்புவெள்ளையாக ஆக்கியிருந்தனர், காட்சி ஒருமைக்காக.ஸ்ரீராம்  அக்காலத்தில் சாக்லேட்பாய் என அறியப்பட்டவர். அக்காலத்தைய சாக்லேட்பையன்கள் கொழுவிய கன்னங்களுடன், கோடுமீசையுடன், குண்டாக இருந்தனர். கோட்டுபோட்டிருந்தனர். ஸ்ரீராம்  இறுக்கமான கால்சட்டையுடன் ஒசிந்து நின்றார். ஓபல் ஆஸ்ட்ரா திறந்த காரை ஓட்டினார். சிரித்தபடி திரும்பி பார்த்தார். கையில் சிகரெட்டுடன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். மலையுச்சியில் நிழலுருவாகத் தெரிந்தார்

 

கண்ணாடிக் கதவு திறந்து இளைஞன் உள்ளே வந்தபோது எழுந்தேன். “வணக்கம், கொஞ்சம் லேட். ஒரு எதிர்பாராத கெஸ்ட். ஸாரி” என்றபடி அமர்ந்தான். உயர்குடியினருக்குரிய மின்னும் பட்டுத்தோல். செக்கச்சிவந்த உதடுகள். பணிவும் தன்னம்பிக்கையும் கொண்ட சிரிப்பு. “நான் மாதவ்” என கைநீட்டினான். மென்மையான கைகள். “கோதண்டம்…” என்றேன். “ஃபில்ம் எடிட்டர் இல்லை?”என்றான். “ஆமா” என்றேன். “இப்ப ரெண்டுபடம் பண்றேன்…”

 

“நான் சினிமா விஷயமா கூப்பிடலை.வேற ஒரு வேலை” என்றான். என் உள்ளத்தைக் கணித்து, “ஆனா சினிமாவுக்குச் சமானமான சம்பளத்தை நான் குடுக்கமுடியும்”. எனக்கு உண்மையில் அது ஆறுதலாக இருந்தது. இருந்தாலும் “ஆனா என்ன வேலைன்னு தெரியாம…” என்று இழுத்தேன். “இதுவும் சினிமா எடிட்டிங் வேலைதான். ரெண்டே ரெண்டு வித்தியாசம். ஒண்ணு, ஏற்கனவே எடுக்கப்பட்ட சினிமாக்களிலே இருந்து நீங்க ஒரு சினிமாவை எடிட் பண்ணணும். இன்னொண்ணு, இந்த சினிமாவுக்கு ஒரே பார்வையாளர்தான்”என்றான்

 

நான் ஆர்வமானேன். “புரியலை” என்றேன். அவன் திரும்பி ஸ்ரீராமின் படங்களைப்பார்த்தான். “அவர் என்னோட தாத்தா…” என்றான். “சொன்னாங்க” என்றேன். “அவரோட படங்களைப் பாத்திருப்பீங்க. ஒரு கிளப்லே அவர் ராக் அண்ட் ரோல் ஆடுறதைப்பாத்து அவருக்கு சினிமா சான்ஸ் வந்தது.  அந்தக்காலத்திலே எல்லாருக்கும் புடிச்ச சின்னப்பையன் கேரக்டர் நிறைய பண்ணியிருக்கார். மொத்தம் 69 படம். ஹீரோவா நடிச்சது முப்பத்திரெண்டு படம். அதெல்லாமே ரொம்பச் சின்னப்படங்கள்தான். பெரிய ஹீரோக்கள் ஹெவிரோல் பண்றப்ப கூடவே வந்து லவர்பாய் ரோல் பண்ணுவார். எல்லா படங்களிலுமே க்யூட் லிட்டில் பாய்தான்”

 

“ஆமா, காத்திருந்த மங்கை, என்றும் அன்புடன், உலகமே நாடகம் மூணுபடத்திலே மட்டும்தான் கொஞ்சம் துக்கமான ஆளா நடிச்சிருப்பார். உலகமே நாடகம் படத்திலே கடைசியிலே குடிச்சு செத்திருவார்” என்றேன். அவன் சிரித்து “நடிக்கவே தெரியாது. சும்மா வருவார், ஸ்டைலா நிப்பார், அழகா சிரிப்பார். குரலிலே கொஞ்சம் மழலைநெடி அடிக்கும். ஆனா எல்லாருக்கும் புடிச்சிருந்தது” என்றான். “எல்லாருக்கும் இல்ல. பெண்களுக்கு. ஏன்னா காதல்காட்சிகளிலே உண்மையாக ஈடுபட்டு நடிப்பார். கண்ணு மூக்கு உதடு எல்லா இடத்திலேயும் ரொமான்ஸ் இருக்கும். உடம்பே எட்டுவயசு பையன் மாதிரி துள்ளும்…” என்றேன்

 

வாய்விட்டுச் சிரித்து, “நல்லா பாத்திருக்கீங்க” என்றான். “எங்க அம்மா அவரோட பெரிய ரசிகை… சொல்லிட்டே இருப்பாங்க” என்றேன். “பழைய சினிமா வந்தா விடமாட்டாங்க”. அவன் விழிகள் மாற “ஷி இஸ்…” என்றான். “நோ மோர்” என்றேன். “அயாம் ஸாரி” என்றான். “இட் இஸ் ஓக்கே” என்றேன். அவன் தன் நகங்களைப் பார்த்துக்கொண்டு “இந்தப்படம்கூட என்னோட அம்மாவுக்காகத்தான்…. அவங்க மட்டும் பாக்கிறதுக்காகத்தான்” என்றான். “தாத்தா நடிச்ச அத்தனை படங்களிலே இருந்தும் அவர் நடிச்ச காட்சிகளை மட்டும் வெட்டி ஒட்டி ஒண்ணா ஒரு சினிமா மாதிரி ஆக்கிக்குடுக்கணும். அதுக்காகத்தான் உங்களைக் கூப்பிட்டேன்”

 

“உங்க அம்மாவுக்கா?” என்றேன். “எங்கம்மா பேரு ஆனந்தி. அம்மா பேரிலேதான் தாத்தா சினிமாக்கம்பெனி ஆரம்பிச்சார். ஆனந்தி சினி கம்பைன்ஸ். அந்த பேனர்லே பதிமூணு படம் எடுத்திருக்கார். ஒருபடம்தான் ஃப்ளாப். உண்மையிலே சினிமாவிலே அவர் வாங்கின சம்பளம் கம்மிதான். சம்பாரிச்சது முழுக்க தயாரிப்பாளராத்தான். அவர் போனபிறகு படக்கம்பெனிய மூடிட்டாங்க. மாமா ஷேர்மார்க்கெட் பக்கமா போனார்” என்றான் மாதவ் “அம்மா தாத்தாவோட பெட். ஒவ்வொருநாளும் வெளியே கூட்டிட்டுப்போவார். எவ்ளவு லேட்டா வந்தாலும் சரி, நள்ளிரவானால்கூட கார்லே பீச் வரை ஒரு ரவுண்ட் கூட்டிட்டுப்போகணும்… சின்னவயசிலே தாத்தாவை ஆட்டிப்படைச்சிருக்காங்க”

 

நான் ஒருவாறாக அனைத்தையும் புரிந்துகொண்டேன். ஒன்று மட்டும் எஞ்சியிருந்தது. அதை எப்படிக் கேட்பதென்று தெரியவில்லை. ஆனால் அவன் மிகநுட்பமானவன். ஆகவே புரிந்துகொண்டு “அம்மாவுக்கு கொஞ்சமா அல்ஷைமர் தொடங்கியிருக்கு. ஏற்கனவே ரெண்டு மூட்டு ஆபரேஷன் செஞ்சிருக்காங்க. அதிலே சில பிரச்சினைகள் வந்ததனாலே நடக்க முடியாது. வீல்சேர்தான். வீட்டிலேயேதான் இருக்காங்க. துணைக்கு தங்கச்சி இருக்கா” என்றான்.

 

நான் ”ஸாரி” என்ற பின் “செஞ்சிரலாம்” என்றேன். “ஒரு சின்ன டீம் போட்டு இப்ப அவெய்லபிளா இருக்கிற மொத்தப்படத்தையும் காப்பி எடுத்திட்டேன். ஒருபடம்தான் மிஸ்ஸிங். பெரும்பாலான படங்களுக்கு புரடியூசர் யார்னே தெரியலை. இனிமே தேடிப்பிடிக்கவும் முடியாது” என்றான். “ஆமா, அவர் நடிச்சதெல்லாம் சின்னப்படங்கள்… அவங்க அந்த ஜெனரேஷன் முடிஞ்சதும் அப்டியே காணாம ஆயிடுவாங்க” என்றேன். “அதனால காப்பிரைட் பிரச்சினை உண்டு. பிரைவேட்டா இதைப் பண்ணணும். அம்மாவுக்காக மட்டும்” என்றான்

 

“அதிலே பிரச்சினை இல்லை” என்றேன். அவன் “இப்ப ஒரு சினிமாவுக்கு நீங்க என்ன வாங்கிறீங்களோ அதை அப்டியே குடுத்திருவோம்…நோ பார்கெயின்… ஏன்னா இது ஒரு பெரிய உதவி” என்றான். நான் “நோ நோ, எனக்கே திரில்லாத்தான் இருக்கு…” என்றேன். “அம்மாவை நீங்க பாக்கலாம்…வாங்க” என்று எழுந்துகொண்டான்

 

பக்கத்து அறையில் அந்த அம்மாள் இருந்தாள். சக்கரநாற்காலியில் கால்களை கோணலாக வைத்திருந்தபடி உடல் ஒடுங்கி மங்கலான விழிகளுடன் அமர்ந்திருந்த முதியவள் ஒருகாலத்தில் தந்தையைப் படுத்தி எடுத்த செல்லக்குழந்தையாக இருந்திருக்கிறாள் என்பதை கற்பனைசெய்யவே கடினமாக இருந்தது. என்னை அடையாளமறியாத கண்களால் பார்த்தாள். “அம்மா, எப்டி இருக்கே?” என்றான் மாதவ். “இவன் யாரு? டிவி ரிப்பேர் பண்ண வந்திருக்கானா?” என்றாள். “ஆமா” என்றான் மாதவ்.‘டிவியிலே ஒரு மண்ணும் தெரியமாட்டேங்குது” என்றாள்.

 

மாதவ் என்னிடம் “டிவியை போடச்சொல்றது. போட்டா சானல் மாத்திட்டே இருக்கணும். அத்தனை சேனல்களையும் புரட்டிப்புரட்டி தேடிட்டே இருப்பாங்க. தாத்தாவோட முகம் எங்கியாவது இருந்தா அப்டியே கண்ணு நின்னிரும். அவர மட்டும்தான் பாத்திட்டிருப்பாங்க. பெரும்பாலும் பழைய பாட்டா இருக்கும். பாட்டு முடிஞ்சதும் உடனே சேனல் மாத்துன்னு சொல்லி ரகளை. நர்ஸுகள்லாம்கூட சலிச்சுப்போய் ஓடிட்டாங்க. அதான் டிவி ரிப்பேர்னு சொல்லி வச்சிருக்கு”

 

முதியவள் என்னைப்பார்த்து “டிவி ரிப்பேருக்கு ஆள் வரான்னு சொன்னியே?” என்றாள். “வந்திட்டிருக்காங்க” என்றேன். “டிவியிலே ஒரு மண்ணும் இல்லை” என்றாள். நான் மாதவிடம் “நான் அப்பப்ப வந்து பாக்கலாமா?” என்றேன். “ஏன்?” என்றான். “இல்லே, செய்றத திருத்தமாச் செய்யலாமேன்னு. இந்தப்படம் எதுக்குன்னு இப்ப புரியுது. இவங்களோட மனசு ஈடுபடுற ஒரு விஷயத்தை நான் செய்யணும்… இவங்கள கொஞ்சம் நெருக்கமா புரிஞ்சுகிட்டா சரியாச் செய்யலாமேன்னு படுது” என்றேன்.

 

“அல்ஷைமர்ஸ்லே மூளை நியூரான்ஸ் அழிஞ்சிட்டிருக்கு. தாத்தாவோட முகம் மட்டும்தான் மூளைய தூண்டுது…. அவங்க மகிழ்ச்சியா இருக்கிறது அப்ப மட்டும்தான். மத்தபடி எப்பவுமே பதற்றம்தான். கடைசிவரைக்கும் அவங்க அந்த மகிழ்ச்சியிலேயே இருக்கட்டும்னு நினைச்சேன்… ஒரு கனவை உருவாக்கி அவங்கள அதுக்குள்ள உக்கார வச்சிரணும்…” நான்  “செஞ்சிரலாம்” என்றேன்

ch

[ 2 ]

 

தொடர்ந்து ஆனந்தியைச் சந்திக்கச் சென்றேன். மாதவ் அமெரிக்கா சென்றுவிட்டான். அவன் தங்கை அருணாவுக்கு நான்கு பெண்கள். அவர்களும் அந்தவீட்டிலேயே இருந்தார்கள். அவர்கள் கல்லூரிகளில் படித்தார்கள். அருணா ஓர் ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்திவந்தாள். காலை பத்துமணிக்குமேல் ஆனந்தியும் வேலைக்காரர்களும் ஒரு நர்ஸும் மட்டும்தான் இருப்பார்கள். எனக்கு அவர்களின் வீட்டிலிருந்த எல்லா புகைப்படங்களையும் காணொளிகளையும் பார்க்க வாய்ப்புகிடைத்தது. மாதவ் நான்கு உதவியாளர்களை நியமித்து கூடுமானவரை எல்லாவற்றையுமே சேகரித்திருந்தான்.

 

ஆனந்தியின் புகைப்படங்கள் வழியாக அவர் வாழ்க்கையை நான் தொகுத்துக்கொண்டேன். பெரும்பாலான புகைப்படங்களில் ஸ்ரீராம்  இருந்தார். அவள் பிறந்தநாளுக்கு கேக் ஊட்டிவிட்டார். தோளில் ஏற்றி வைத்துக்கொண்டு, காரில் அருகே அமரச்செய்து, குதிரைமேல் முன்னால் உட்காரச் செய்து, டென்னிஸ் பேட்டுடன் என பல புகைப்படங்கள். சினிமா நடிகர்களுடன் ஒரு படம்கூட இல்லை.சினிமாச்சூழலில்கூட ஒரு படம் இல்லை. அருணாவிடம் அதைப்பற்றிக் கேட்டேன்.

 

“அம்மா ஷூட்டிங் போனதே இல்லை… சின்னப்பெண்ணா இருக்கிறப்ப ஒருவாட்டி தாத்தா கூட்டிட்டுப் போயிருக்கார். யானைமலைத் திருடன்ங்கிற படம். ஹீரோயின்கூட தாத்தா டூயட் பாடுறதப்பாத்து கொதிச்சிட்டாங்க. சூடான டீய எடுத்து ஹீரோயின் மேலே வீசி கீழே விழுந்து அழுது புரண்டு ரகளை… ஃபிட்ஸே வந்திட்டுதுன்னு சொன்னாங்க. அதுக்குப்பிறகு ஷூட்டிங்குக்கே கூட்டிட்டுப் போனதில்லை. சினிமா ஃபங்ஷன்ஸ், பார்ட்டி எதுக்குமே கூட்டிட்டுப் போனதில்லை” என்றார் அருணா

 

”உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? அம்மா ரொம்பநாள் தாத்தா நடிச்ச ஒருபடத்தைக்கூட பாத்ததில்லை. அப்பல்லாம் தியேட்டர் போயித்தானே படம் பாக்கணும்? அம்மாவுக்கு தமிழ் சினிமாவே பிடிக்காது. எல்லாமே இங்கிலீஷ்படம்தான். பழைய கிரிகரி பெக், காரி கிராண்ட், ஜேம்ஸ் டீன் மாதிரி ஆக்டர்ஸை பிடிக்கும். தாத்தாவும் இங்கிலீஷ் பட ரசிகர். பாரகன், ஓடியன், கேசினோன்னு போய்ட்டே இருப்பாங்க. ஆனா ஒரு தமிழ்ப்படம்கூட பாத்ததில்லை… சொல்லப்போனா தாத்தாவ சின்னவயசிலே ஸ்கிரீன்லே பாத்திருப்பாங்களான்னே சந்தேகம்தான்”

 

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “அப்றம் எப்ப பாக்க ஆரம்பிச்சாங்க?” என்றேன். “கல்யாணத்துக்கு அப்றம் அம்மா அப்பாகூட கலிஃபோர்னியா போய்ட்டாங்க. யோசிச்சுப்பாத்தா ஒரு இருபத்தஞ்சுவருஷம் அம்மா அவங்கப்பாவ சுத்தமா மறந்திட்டாங்கன்னே தோணுது… இருபத்தஞ்சு வருஷத்திலே ஆறேவாட்டித்தான் மெட்ராஸ் வந்திருக்காங்க. வந்தா ஒரு ஒரு பத்துநாள் இங்க இருப்பாங்க. ஆனா அப்ப தாத்தா ரொம்ப பிஸி. நடிப்ப நிப்பாட்டிட்டு சினிமாத் தயாரிப்பிலே எறங்கிட்டார். ஒரேசமயம் ரெண்டுபடம்கூட போய்ட்டிருந்தது. சாயங்காலம் வர்ரப்ப பாக்கிறதோட சரி. அதோட அப்ப தாத்தாவுக்கு குடிப்பழக்கம் ஆரம்பிச்சு ரொம்ப ஜாஸ்தியா போய்ட்டிருந்தது. கனகாராணிகூட உள்ள பழக்கமும் எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். குடிப்பழக்கம்  அங்கேருந்து வந்ததுதான். அம்மா அவரை அப்ப தனியாச் சந்திச்சு பேசுறதே இல்லேன்னு பாட்டி சொல்லியிருக்காங்க”

 

“உங்க அப்பா எப்ப இறந்தார்?” என்றேன். “நான் அங்க மெட்ரிகுலேஷன் முடிச்சதும் இங்க பாட்டிகூட வந்திட்டேன்.  இங்க வைஷ்ணவிலே டிகிரி படிச்சேன். இங்கேயே கல்யாணமாயிட்டுது. மாதவ் அங்கியே படிச்சு அங்கியே கல்யாணமும் பண்ணிக்கிட்டான்…யூ நோ அவனோட முதல் வைஃப் எல்லி அந்த ஊர்க்காரி. இப்ப இருக்கிறவ கடப்பாக்காரி. எங்களுக்கு ரெண்டுபேர்கூடவும் நல்ல ரிலேஷன் இல்ல… பாட்டி செத்துப்போனப்ப அம்மா வந்திட்டுப்போனா. அப்பதான் எல்லி விட்டுட்டுப்போய் மாதவ் கொஞ்சம் டிப்ரஷன்லே இருந்தான். அம்மா கூட இருக்கவேண்டியிருந்தது. அப்பா அங்கதான் இறந்தார். இங்க கொண்டுவந்து அவரோட ஊரிலேயே காரியம் பண்ணினோம். அம்மா அதுக்கப்ப்றம் திரும்பிப்போகலை. எங்கூடவே இருந்திட்டாங்க. அப்ப தாத்தாவுக்கும் உடம்பு சரியில்லை”

 

“தாத்தாவக் கவனிச்சுக்கிடணும்னு தங்கிட்டாங்களா?” என்றேன். “அப்டிச் சொல்லலாம். ஆனா அது உண்மை இல்லை. தாத்தாவை தேவைப்படுறப்பல்லாம் நர்ஸுங்கதான் கவனிச்சுகிட்டாங்க. கடைசிவரை அவர் நடமாடிட்டுதான் இருந்தார். பாதிநாள் அந்தக்குடும்பத்தோடத்தான். அம்மாவுக்கும் தாத்தாவுக்கும் பெரிய அளவிலே பேச்சுவார்த்தை ஒண்ணும் இருந்தது மாதிரி தெரியலை…தேவைன்னா பேசிக்குவாங்க. திடீர்னு அங்கே இருந்து கனகாராணியோட மகன் செல்வன் வந்து சொன்னான் ஆஸ்பத்திரியிலே சேத்திருக்குன்னு. போறதுக்குள்ள இறந்துட்டார்… அவங்களுக்கும் கொஞ்சம் சொத்து எழுதிவச்சிருந்தார். மிச்சமெல்லாம் அம்மாவுக்குத்தான்…”

 

“ஓ” என்றேன். “தாத்தா செத்துப்போனபிறகுதான் அம்மா அவரோட சினிமாக்களை பாக்க ஆரம்பிச்சா. தினம் ஒருபடம். எவ்வளவு வேலை இருந்தாலும் சரி ஒரு படம் பாக்காமத் தூங்குறதில்லை.ரெண்டு மாசத்திலே படமெல்லாம் முடிஞ்சிரும். மறுபடி ஒரு சுத்து. வருசத்திலே எல்லா படத்தையும் ஆறுவாட்டி பாத்திருவா. அப்டியே இருபது வருசம்… “. நான்  “அவங்களோட ஃபேவரைட் படம் என்ன?” என்றேன். “அதான் இல்ல. எல்லா படமும் அம்மாவுக்கு ஒண்ணுதான். அவங்க படம்பாக்கிறாங்களான்னே சந்தேகமா இருக்கும். சும்மா முழிச்சு பாத்துக்கிட்டே இருக்கிறது”

 

“அழுவாங்களா?” என்றேன். “இல்லை, சிரிக்கிறதுமில்லை. ஒண்ணுமே சொல்றதில்லை. கண்ணு மட்டும் மின்னிட்டே இருக்கும். இப்ப மட்டுமில்லை, அப்பவேகூட அப்டித்தான்.  அப்பதான் டேப் வர ஆரம்பிச்சுது. வாங்கிட்டுவா வாங்கிட்டுவான்னு சொல்லி சிட்டி முழுக்க அனுப்பி ஒவ்வொரு படமா சேத்துவச்சுக்கிட்டாங்க. நாலஞ்சுதடவ பாத்தா டேப் கிழிஞ்சிரும்னு எட்டுபத்து டேப் வாங்கிக்குவா. டெக் போட்டு பாத்துட்டிருக்கிறது. ராத்திரியிலே அவங்க ரூமிலே கதவிடுக்கு வழியா வெளிச்சம் கோடு மாதிரி அலையலையா நெளியும். சவுண்ட் ம்யூட் பண்ணிட்டு பாத்திட்டே இருப்பாங்க”

 

அருணாவுக்கு அதைப்பற்றி சொல்ல பிடித்திருந்தது. ஏனென்றால் அவரே கண்டெடுத்த பல நுண்செய்திகள் இருந்தன. “ஆச்சரியம் என்னன்னா படத்தைப்பத்தியோ தாத்தா பத்தியோ ஒருவார்த்தை கூட அம்மா சொல்றதில்லை. நாங்க ஏதாவது சொன்னாக்கூட செவிகுடுக்கிறதில்லை. தொடர்ச்சியா பேசினா எரிச்சலோட வெட்டி விட்டிருவாங்க.  என்னதான் நினைக்கிறாங்கன்னே தெரியாது. சரி எப்டியோ சந்தோஷமா இருக்கிறாங்கன்னா விட்டுடுவோம்னு நாங்களும் அதைக் கண்டுக்கலை. வெளியே போறதில்லை. கோயில் குளம் எதிலேயும் ஆர்வமில்லை. சினிமா பாக்கிறது, இல்லேன்னா பால்கனியிலே சும்மா உக்காந்திருக்கிறது.கிட்டத்தட்ட அம்மாவ மறந்தேபோய்ட்டோம்னு சொல்லணும்”

 

“அப்பவே அல்ஷைமர் ஆரம்பிச்சிருக்குன்னு மாதவ் சொல்றான். நாங்க கண்டுபிடிக்கிறது ரொம்ப பின்னாடி… அதாவது அம்மாவோட நடத்தையெல்லாம் ரொம்ப வித்தியாசமா தெரிய ஆரம்பிச்சதுக்கு அப்றம்” நான் புன்னகையுடன் “ஒருவகையிலே நல்லது. ஒரு சினிமாவ எத்தனை முறைவேணும்னாலும் புதிசா பாக்கலாம்” என்றேன். அவள் குழப்பமாக பார்க்க “இல்லை, ஞாபகம்னா பெரிய சுமைல்ல. அன்னன்னிக்கு வாழ்ந்தா காலம்னு ஒண்ணு இல்லை… அதைச்சொன்னேன்” என்றேன். அவள் மேலும் விழிசுருக்கி நோக்கிவிட்டு புரியாமலேயே புன்னகைத்தாள்.

ch2

[ 3 ]

 

அந்தச் சினிமாவை எப்படி அமைப்பது என்று திட்டமிடத் தொடங்கினேன். முதலில் நான் நினைத்தது ஸ்ரீராம் வரும் காட்சிகளை வெட்டி இணைத்து எந்தப்படம், எந்த ஆண்டு என அடிக்குறிப்பு கொடுத்து ஒரு தொகுப்பாக அளிப்பதைப் பற்றித்தான். ஆனால் ஆனந்திக்குத் தேவையானது கடந்தகாலம் அல்ல என்று தெரிந்துகொண்டபின் அவ்வெண்ணத்தை மாற்றிக்கொண்டேன். ஸ்ரீராம்  நடித்த படங்களிலிருந்து அவர் வரும் காட்சிகளை மட்டும் வெட்டி எடுத்தேன். அதில் அவர் இருக்கும் காட்சிச் சட்டகங்களை மட்டும் தொகுத்துக்கொண்டேன். அவற்றை மட்டுமே கொண்டு ஒரு காட்சியமைப்பை உருவாக்க முடியுமா என்று முயன்றேன்.

 

முதலில் அது ஒரு விடியற்காலையில் தோன்றிய பித்துக்குளித்தனமான எண்ணமாக இருந்தது. ஆனால் அதை கைபோனபடிச் செய்ய தொடங்கியதும்தான் அதன் சாத்தியங்கள் கணம்தோறும் விரிந்து திகைக்கச் செய்தன. உண்மையில் முன்னரே திரைக்கதை எழுதப்பட்டு எடுக்கப்பட்ட காட்சிகளைத் தொகுப்பதில் படத்தொகுப்பு என்பதற்கு பெரிய இடமில்லை எனத் தெரிந்தது. படத்தொகுப்பே சினிமாவின் மெய்யான கலை. ஒரு காட்சிச்சட்டகம் முன்னரும் பின்னரும் அதனுடன் இணைக்கப்படும் காட்சிகள் வழியாக பொருள்மாறுபாடு கொண்டது. ஸ்ரீராம்  நோக்கும் திசையில் இன்னொரு படச்சட்டகத்தில் ஒருவர் இருந்தால் அவர் அவருடன் பேசினார். சுவரோ கடலோ இருந்தால் அவை தன்னுரையாடல்களாக ஆயின. ஸ்ரீராமே இருந்தால் திகைப்பூட்டும்படி ஓர் அர்த்தமின்மையை அடைந்தது அந்த காட்சி.

 

மீண்டும் இருமுறை சென்று ஆனந்தியைச் சந்தித்தபோது அவர் ஸ்ரீராமின் குரலை பெரும்பாலும் அணைத்துவிட்டே படம் பார்த்தார் எனத் தெரிந்தது. அக்கால திரைப்பணியாளர்களிடம் கேட்டேன். ஸ்ரீராமின் குரல் கனத்தது. அது அவருடைய சிறுவனைப்போன்ற முகத்துக்கு ஒட்டவில்லை. ஆகவே ஜான் பிரின்ஸ் ராபின் என்ற ஆங்கிலோ இந்தியர்தான் அவருக்கு குரல்கொடுத்திருந்தார். அந்த மழலை ஆங்கிலோ இந்திய உச்சரிப்பால் வந்ததுதான். நான் படங்களிலிருந்து அத்தனை குரல்களையும் நீக்கினேன். ஓசைகளையும் முழுமையாக நீக்கியபோது உடன்நடித்தவர்கள் அனைவருமே வெறும் கனவுருக்களாக ஆனார்கள். மெல்லிய இசையைச் சேர்க்கலாமா என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் இசையினூடாக காட்சிகள் கோவையாகுமென்றால் அது படத்தொகுப்பாளனின் தோல்வி. அவை காட்சிகளாலேயே ஒழுக்கும் பொருளும் பெறவேண்டும்.

 

பலநாட்கள் நான் வேறெங்கும் செல்லவில்லை. காலையில் எழுந்ததுமே படத்தொகுப்பு மேஜை முன் அமர்ந்தேன். காட்சிகளை துண்டுகளாக்கும்தோறும் அவை காட்சிச் சட்டகங்களாக மட்டும் மாறின. கலந்து கலந்து செல்லச் செல்ல அவை நாம் சினிமா என்று நினைக்கும் எல்லா ஒழுங்கையும் இழந்தன. ஆடைகளும் சூழல்களும் தொடர்ச்சியறுந்தன. தனித்தனியாக அவை கொண்ட அர்த்தங்கள் மறைந்தபோது ஒற்றைக்காட்சியின் ஒழுக்காக மாறின. தனித்தனி படச்சட்டங்களாகக்கூட இல்லை. ஒரே வீச்சு. ஒரு மின்னல், பலநூறு கிலோமீட்டர் நீளமுள்ளது. ஒருகணம் மட்டுமே ஆனது.பிறருடன் அவர் வரும் காட்சிகளை எடுத்து பிறரை ‘மாஸ்க்’ செய்து நகல் எடுத்து அவர் மட்டுமே இருக்கும் சட்டங்களாக தொகுத்தேன்.

 

கிட்டத்தட்ட இரண்டாயிரம் நிமிடம் ஓடும் ஒரு கனவாக அது ஆகியது. அக்கனவுக்குள் மட்டுமே பொருள்கொள்ளத்தக்கது. என் உதவியாளன் மகேஷிடம் அதன் முதல்வடிவை காட்டியபோது அவன் திகைத்துப்போனான். “என்னசார் இது!” என்றபோது அவனுக்குக் குரலே எழவில்லை. “ஏன்?” என்றேன். “கிறுக்குமாதிரி இருக்குசார்” என்றான். நான் புன்னகைத்தேன். “கண்டமானிக்கு வெட்டி ஒட்டியிருக்கு சார். அர்த்தமே இல்லை…” என்றான் அவன். ‘ஆமாம்” என்றேன். “ஒத்துக்க மாட்டாங்க சார்” என்றான். நான் புன்னகைத்தேன். அவன் மீண்டும்  “என்ன சார் இது?” என்றான். “கம்ப்யூட்டர் உளறுறது மாதிரி இருக்கு சார்” என்றான். அவனால் பேசவே முடியவில்லை. “என்ன சார் இது… இனிமே சினிமாவே பாக்கமுடியாதுன்னு தோணுதுசார்!” என்றான்.

 

மறுநாள் அவனே “சார் அதிலேருந்து வெளியே வரவே முடியலை சார். நேத்தெல்லாம் ஒரே கனவு. எந்த சினிமாவும் என்னைய இப்டி கிறுக்கா ஆக்கினதில்ல சார்” என்றான். நான் “அதேதான் நான் நினைக்கிறது. சினிமாவிலே பெரும்பகுதியை நம்ம கான்ஷியஸ் வடிகட்டிருது…நாலஞ்சு ஃப்ரேம்தான் கனவுக்குப் போகுது. மொத்த சினிமாவும் கனவுக்குள்ளே போயிடற மாதிரி ஒரு முயற்சி பண்ணலாம்னு நினைச்சேன்”. மகேஷ் “அதுக்குன்னு இப்டியா? இது ஒருமாதிரி இருக்கு சார்” என்றான். நான் அதில் திருத்தங்கள் செய்வதைப்பார்த்து “இதுக்கு என்ன சார் அர்த்தம்? இதிலே எப்டி  எதைச் சரிபண்றீங்க?” என்றான். “இதோட ஒழுக்கை மட்டும்தான் சரிபாக்கறேன்” என்றேன். “என்ன கருமமோ” என்றான்.

 

இரண்டு நாட்களுக்குள் மகேஷ் அதை நாலைந்து தடவை பார்த்துவிட்டான். “இதைப் பாக்கக் கூடாது சார். பத்துநிமிஷத்திலே நினைப்பே அழிஞ்சிருது… பாக்கக் கூடாதுன்னு நினைப்பேன். ஆனா நிப்பாட்டவும் முடியலை… சார் எனக்கு என்னமோ ஆயிட்டுது” என்றான். நான் சிரித்தேன். “இத கொஞ்சம் மாத்தி வெட்டி அடுக்கணும்னு தோணிட்டே இருக்குசார். சினிமா எடிட்டர் மட்டுமில்ல, எவன் பாத்தாலும் அதைத்தான் நினைப்பான்” என்றான் மகேஷ். “ஆமா, அதான் சினிமா. ஒவ்வொருத்தரும் அதிலே தங்களோட கனவை பாக்கணும்” என்றேன். அவன் என்னை வெறித்துப்பார்த்தான்.

 

நானும் அவனும் அதை மேலும் மேலும் கலைத்து கலைத்து அடுக்கிக்கொண்டே இருந்தோம். ஒவ்வொருநாளும் ஒரு புதிய படம் என்று அது மாறியது. ஸ்ரீராமின் கண்களில் ஒளி வளர்ந்தபடியே இருப்பதை நான் கண்டேன். முன்பு அண்மைக்காட்சியில் அவர் கருவிழிகள் நடுவே ஒளிமணி தெரியும்போதுகூட அவை சினிமாக்கண்களாகவே  இருந்தன. அவர் நம்மைநோக்கிப் பேசும்போதுகூட நடுவே காமிராவின் சுரங்கப்பாதை இருந்தது. மெல்ல மெல்ல அது மறையத் தொடங்கியது.அவர் என்னை நோக்கினார். மிகத்தெரிந்தவர் போல. என்னை மிக ஆழமாக அறிந்தவர்போல. பெரும்பாலும் துள்ளல்கொண்ட சிறுவனாகவே அவர் இருந்தார். மேஜைமேல் கையூன்றி தாவிக்குதித்தார். தொடையிலறைந்துகொண்டு நகைத்தார். சன்னல்கள் பால்கனிகள் வழியாக தாண்டிவந்தார். குதிரைகளிலும் பைக்குகளிலும் திறந்த கார்களிலும் பாய்தேறி விரைந்தார்.

 

அவர் எல்லா காட்சிகளிலும் என்னை நோக்கி வந்துகொண்டே இருக்கிறாரோ என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. அது என் பிரமை என நினைத்துக்கொண்டேன். இந்தக் காட்சியை என்னால் விரும்பியபடி மாற்றிக்கொள்ள முடியும். வேறொரு காட்சியை உடன் இணைத்துக்கொண்டால்போதும். படத்தொகுப்பு கடவுளுடன் விளையாடுதல். கடவுள் இங்கே ஒவ்வொன்றையும் இன்னொன்றுடன் இணைத்து இவ்வுலகை உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொன்றுக்கும் இன்னொன்றுடன் அதை இணைப்பதன் வழியாகவே அவர் அர்த்தத்தை உருவாக்கியிருக்கிறார்.நான் அதை உடைத்து வேறுவகை இணைப்புகளை உருவாக்குகிறேன். வேறொரு உலகை அமைக்கிறேன். ஆனால் இதை அனைவரும்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். அல்லது அதையும் கடவுள்தான் உள்ளே புகுந்து அமைக்கிறார்.

 

எத்தனை காட்சிகளை மாற்றினாலும் ஸ்ரீராம்  மாறுவதே இல்லை என்று மெல்ல மெல்ல கண்டுபிடித்தேன். காட்சிகளை வெட்டி வெட்டிச் சுருக்கினேன். திரும்பத்திரும்ப வந்தவற்றை அகற்றினேன். இறுதியில் வெறும் எண்பது நிமிடங்கள் ஓடும் ஒரு படத்துணுக்காக அது இருந்தது. அதில் அவர் அசைவற்று நோக்கியபடி எதையோ சொல்வதுபோலிருந்தது. மேலும் வெட்டத்தொடங்கினால் படத்தையே வெட்டிவீசிவிடுவேன் என்று அஞ்சினேன். போதும் என ஒர் இடத்தில் நிறுத்திவிட்டு எழுந்துகொண்டேன். ஆனால் அந்தப் படங்களுக்குள் இருந்து ஸ்ரீராம் என்னை அழைத்தார். வற்புறுத்தினார். தன்னைச் செதுக்கும்படி. தான் சிக்கிக்கொண்டிருக்கும் எதிலோ இருந்து மீட்கும்படி.

 

நூறுமுறை முயன்றபின் உறுதிசெய்துகொண்டு நான் சிறிது தயக்கத்துடன்  மகேஷிடம் அதைச் சொன்னேன். அவன் மறுப்பான் என நினைத்தேன். அவன் “ஆமா சார். நானே பலவாட்டி டிரை பண்ணியாச்சு… அவர்தான் இதையெல்லாம் செய்றார்” என்றான். “எப்டி?” என மூச்சிரைக்க கேட்டேன். “சார், இது பேயோட வேலை. பேயில்லை ஆவி. அவருதான் உங்க கையிலே பூந்துகிட்டு இந்தவேலையை செஞ்சிருக்கார்” நான் சிரிக்கமுயன்றேன். பயனில்லாமல் உதடு வளைந்தது. “ஏன்?” என்றேன்.

 

“அவரு இப்ப இருக்கிற அந்த உலகத்த இங்க உருவாக்கிக்கிறதுக்கு… பாருங்க இந்த சினிமா, இது என்ன? இதுக்கும் இங்க இருக்கிற மனுஷ உலகத்துக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? இது வேற உலகம்சார்… அவங்க உலகத்தை அவரு நம்ம கையை வச்சே செஞ்சிருக்கார்” எனக்கு நெடுநேரம் சொல்லெழவில்லை. “இப்ப என்ன செய்றது?” என்றேன். “அப்டியே டிலிட் பண்ணிரவேண்டியதுதான். இதுக்கு இங்க வேலையே இல்ல… நம்மள கிறுக்கன்னு சொல்லுவாங்க. ஃபூட்டேஜ் இருக்குல்ல, அதை ஒழுங்கா ஒண்ணாச்சேத்து மியூசிக்க போட்டு கையிலே குடுத்திருவோம்” நான் “அழிச்சிடுறதா? ஆறுமாச வேலை” என்றேன். “அதுக்காக?” என்றான் மகேஷ். நான் ஒன்றும் சொல்லவில்லை. “அவங்களுக்கும் இது புடிக்காது… பணம் வராது” என்றான்.

 

சிலநாட்கள் அதைத் தொடவே இல்லை. ஆனால் அதைப்பற்றியே நினைவு ஓடியது. வீட்டுக்குள் ஒரு ரகசிய வாசல் இருப்பதுபோல. அது சுரங்கமொன்றின் தொடக்கம். அதை மூடிவைத்திருக்கிறேன். ஆனால் அதை அப்பாலிருந்து எவரேனும் திறந்துவிட முடிந்தால் என்ன செய்வது? அவ்வெண்ணமே திகிலூட்டியது. நானே  “நல்ல கற்பனை, நீ திரைக்கதை எழுதலாம்” என்று சொல்லி சிரித்து என்னை ஆற்றிக்கொண்டேன். ஆனால் அந்தக் கம்ப்யூட்டரைத் திறக்கவே இல்லை. மகேஷும் அப்பக்கம் செல்வதில்லை.

 

மாதவ் எனக்கு இரண்டுலட்சம் அட்வான்ஸ் தந்திருந்தான். அவன் கூப்பிட்டபோதுதான் அது நினைவுக்கே வந்தது. “அம்மாவுக்காக ஒரு ஹோம்தியேட்டரே ரெடிபண்ணியாச்சு. பெரிய ஸ்கிரீன். அரைவட்டமா இருக்கும்… பெர்ஃபெக்ட் சவுண்ட் சிஸ்டம்… சினிமா முடிஞ்சாச்சா?” என்றான். “முடிஞ்சாச்சு…” என்றேன். ஏன் அப்படிச் சொன்னேன் என்றே தெரியவில்லை. “பெர்ஃபெக்ட்… நாளைக்கே கொண்டுபோய் இன்ஸ்டால் பண்ணிடுங்க… அம்மா ஒரு சுவிட்சை தொட்டால் ஓட ஆரம்பிச்சிரணும்” நான் “கண்டிப்பா” என்றேன்

 

“என்ன சார் சொல்றீங்க? இதையா கொண்டுட்டுப்போய்?” என மகேஷ் சீறினான். ஆனால் என்னால் மீண்டும் அந்த ஃபூட்டேஜ்களைத் தொடமுடியும் எனத் தோன்றவில்லை. வரவிருக்கும் எட்டுலட்சம் தேவைப்பட்டது. மேலும் அல்ஷைமர் கொண்ட பெண்மணி. அவரால் எந்த குறையும் சொல்லமுடியாது. அவர் மகள் கேட்கலாம், அல்ஷைமருக்கு அப்படித்தான் இருக்கவேண்டும் படம் என்று சொன்னால் போயிற்று. மாதவ் வந்து பார்த்து குறைசொல்வதற்குள் பணம் கைக்கு வந்துவிடும். பிறகு வருவதை அப்போது பார்த்துக்கொள்ளலாம்.

 

நான் கிளம்பியபோது மகேஷ் உடன் வரத் தயங்கினான். “வாடா” என்று அதட்டியபோது “என்னமோ பயமா இருக்கு சார்” என்றபடி கூடவே வந்தான். அந்த ஃபைலை திறக்காமலேயே ஹார்ட் டிஸ்கில்  நகல் செய்துகொண்டோம். ஆனால் செல்லும் வழியெங்கும் அது இரும்புக்குண்டுபோல கனத்தது. எவரோ பைக்கில் என்னுடன் வருவதுபோல் இருந்தது. பின்னால் வந்த மகேஷ் முகம் வெளிறி கிறுக்கன் போலிருந்தான்

 

அவர்கள் வீட்டில் நல்லவேளையாக அருணாவோ மகள்களோ இல்லை. வேலைக்காரி காபி கொடுத்தாள். பத்தடிக்குப் பத்தடி அறையில் ஹோம்தியேட்டர் அமைக்கப்பட்டிருந்தது. மொத்தமாக ஒரு செட் ஆக வாங்கக்கிடைக்கும் அமைப்பு. ஆகவே அனைத்தும் சரியாகப் பொருந்தியிருந்தன.நான் திரையை நீல ஒளிகொள்ளச்செய்துவிட்டு ஹாட் டிஸ்கை இணைத்தேன். பிளேயரை ஆன் செய்வதற்கு முன் தயங்கி மகேஷிடம் “பாட்டிய கூட்டிட்டு வா” என்றேன். “நம ஒருவாட்டி பாத்துட்டு…” என்றான். எரிச்சலுடன் “கூட்டிட்டு வாடான்னா” என்றேன்

 

அவன் சென்று சொல்ல அந்த நர்ஸ் சக்கரநாற்காலியை தள்ளிக்கொண்டு வந்தாள். முதியவள் என்னிடம் “என்னடா? டிவிய எப்ப ரிப்பேர் செய்வே?” என்றாள். “ரிப்பேர் செஞ்சாச்சு… பாருங்க” என்றேன். அதை அவள் கேட்டதாகவே தெரியவில்லை. “டிவியிலே ஒரு மண்ணுமில்லை” என்றாள். மகேஷ் மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தான். அவளை சோஃபாவில் அமரச்செய்தேன். நர்ஸ் நின்றுகொண்டிருக்க “நீங்க போங்க” என்றேன். அவள் சென்றபின் கதவை மூடினேன்

 

என்ன ஆகும் என்ற பதற்றம் கலந்த ஆவல் எனக்கு ஏற்படத் தொடங்கியது. “ஆன் பண்ணுடா” என்றேன். மகேஷ் எழவில்லை. “டேய்” என்றேன். ஆனந்தி தொய்ந்த கண்களுடன் அமர்ந்திருந்தாள். நான் மகேஷை முறைத்தபின் எழுந்து சென்று பிளேயரை இயக்கினேன். திரை மின்னியது. எந்த எழுத்துக்களும் இல்லை. ஸ்ரீராமின் முகம் தோன்றியது. ஆனால் அது துயர்கொண்டிருந்தது. கண்களில் நனைந்து ஊறிய துக்கம். உதடுகள் ஏதோ துயர்ச்சொல்லை உச்சரிக்க முயல்வதுபோலிருந்தன

 

ஆனந்தியின் உடல் அதிர்ந்தது. கைகளை கும்பிடுவதுபோல நெஞ்சோடு சேர்த்து அணைத்து பார்த்துக்கொண்டே இருந்தாள். கண்கள் மின்னிக்கொண்டே இருந்தன. திரையில் ஸ்ரீராம்  நிகழ்ந்துகொண்டிருந்தார். சற்றுநேரத்தில் அது நான் பார்த்த படமே இல்லையே என அகம் திகைத்தது. படம் ஓட ஓட என் கொந்தளிப்பு அணைந்தது. நானும் முழுமையாகவே அதில் ஈடுபட்டேன்.அறைக்குள் ஓசையே இல்லாமல் ஒளிமட்டும் அலைததும்பிக்கொண்டிருந்தது

 

நெடுநேரம். ஐந்தாறு மணிநேரம் ஆகியிருக்குமா என நான் எப்போதோ ஒருமுறை வியப்படைந்தேன். ஆனால் படமே எண்பது நிமிடம்தான். மீண்டும் அமிழ்ந்து ஒழுகினேன். ஆனந்தி சக்கரநாற்காலியில் இருந்து எழுந்தபோது நான் வியப்பில்லா விழிகளுடன் நோக்கிக் கொண்டிருந்தேன்.  அது அப்படித்தான் ஆகுமென்று அறிந்திருந்தேன். எப்போதும் அது அவ்வாறுதான்.

 

அவள் கைகளை விரித்தபடி திரை நோக்கிச் சென்றாள். ஸ்ரீராம்  துயர் கனிந்த சிரிப்புடன் கைகளை நீட்டி அவளை அழைத்தார். அவள் ஒரு நடைபழகும் குழந்தை போலவும் அவர் பயிற்றுவிக்கும் தந்தைபோலவும். ஆனந்தியை அவர் இடுப்பில் பற்றி மேலே தூக்கிக்கொண்டார். குட்டை ஃபிராக்குடன் அவள் கால்களை உதைத்துச் சிரித்தாள். அவர் அவளை ஆடை பறக்க வட்டமாகச் சுழற்றி தூக்கி தோளில் வைத்துக்கொண்டு நடந்து சென்றார். கடல் அலையடித்துக்கொண்டிருந்தது. அவர்களின் காலடிகளை அலைகள் அழித்தன.

 

 

தினமணி தீபாவளி மலர் 2018

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்விழா சிறப்பு விருந்தினர் அனிதா அக்னிஹோத்ரி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-75