கிறிஸ்துவின் இறுதிச் சபலம் -கடிதம்

jesus_

 

விண்விளி- கிறிஸ்துவின் இறுதிச்சபலம்

அன்புள்ள ஜெ,

 

பாலாஜி பிருதிவிராஜ் எழுதிய கிறிஸ்துவின் இறுதிச் சபலம் குறித்த கட்டுரை மிக நன்றாக இருந்தது. ஒரு விமர்சனக் கட்டுரை என்பது ஒரு படைப்பை அணுகி அறிய உதவுவதாக, வாசித்த ஒருவரின் கோணத்தை வாசித்தவர்களுக்கும், வாசிக்கப் போகிறவர்களுக்கும் கடத்துவதாக, படைப்பை முழுமையாகச் சுட்டிச் செல்வதாக அமைகையிலேயே அது பொருட்படுத்தக் கூடிய ஒன்றாகிறது. அவ்வகையில் இது முக்கியமான கட்டுரை. ஏசுவுக்கும், யூதாசுக்குமான உறவை நாவல் காட்டிய விதத்தைப் பகிர்ந்ததிலும், இயேசுவின் சிலுவையில் இருந்த மூன்று நாட்களின் வாதைகளைக் கனவுகளாக ஆசிரியர் உருவகித்திருந்ததை விவரித்த வகையிலும் அவரின் வாசிப்பு பாராட்டுக்குரியது. “அதே போல் உயர்ந்த லட்சியமெனும் யானையால் நசுக்கப்படும் எறும்புகளின் துயரத்தையும் அது காட்டுகிறது.” என்ற வரியை மிகவும் ரசித்தேன். எந்த மீமானுட அம்சமும் அதற்குரிய விலையைக் கோரிப் பெற்று, அம்மானுடனையும், அவனுடன் இருந்தவர்களையும் சக்கையாக உறிஞ்சி கைவிடுவது தானே!!!

 

 

வெண்முரசில் சொல்வளர்காட்டில் தனது தமையன் பிரிந்து சென்ற நிகழ்வுகளைச் சொல்லி வாடும் கிருஷ்ணன் “பெருஞ்செயல்களுக்காக நாம் எழும்போது சிறியவை நமக்கு எதிராகத் திரள்வதில்லை, அவை சிதறி விலகிவிடுகின்றன. பிற பெரியவையே நிகரான ஆற்றலுடன் எழுந்து வந்து வழி மறிக்கின்றன. பெருங்கனவுகளை காக்கின்றன இரக்கமற்ற தெய்வங்கள். அவை விழிநகைக்க கைசுட்டி கேட்கின்றன,நீ எதை ஈடுவைப்பாய்? எதையெல்லாம் இழப்பாய்? நம் கனவின் மதிப்பை அதன்பொருட்டு இழப்பவற்றைக்கொண்டே அறிகிறோம்” என்று கூறுவதோடு தன்னுள் எழுந்த விராட புருஷனுக்கு தானே ஒரு பொருட்டில்லை எனவும் கூறுவது தான் நினைவுக்கு வருகிறது. பெரும் மானுடர்கள் பெருந்துயரையும் சுமந்தாக வேண்டும் என்பது தான் இப்புடவியின் நெறி போலும். வாழ்த்துக்கள் பாலாஜி பிருதிவிராஜ்.

 

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்.

 

முந்தைய கட்டுரைபின்தொடரும் நிழலின் குரல் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைநரசிம்மராவ் -நடைமுறைவாதத்தின் அரசியல்