புரவிகள் பெருநடையிட தன் படையணிக்குச் செல்லும்போது லட்சுமணன் நிறைவுற்றிருந்தான். துருமசேனன் “முதலில் அவர்களை சந்திக்கவேண்டாமே என எண்ணினேன். உங்கள் உளம் விழைந்ததனால் சென்றேன். ஆனால் நீங்கள் அவர்களை சந்தித்தது நன்று என இப்போது தோன்றுகிறது, மூத்தவரே” என்றான். லட்சுமணன் திரும்பி நோக்க “அவர்கள் நம்பிக்கையிழந்திருந்தனர். முகங்கள் உயிரிழந்தவை போலிருந்தன. திரும்பிச்செல்கையில் ஒவ்வொருவரும் மீண்டிருப்பதை கண்டேன்” என்றான். லட்சுமணன் “நானும் மீண்டுள்ளேன்” என்றான்.
“அவர்களுக்கு வேண்டியிருந்தது உங்கள் தொடுகை… உங்கள் கை அவர்கள்மேல் பட்டபோதே சுடரேற்றப்பட்ட விளக்குகள்போல ஆகிவிட்டார்கள்” என்றான். லட்சுமணன் புன்னகைத்தான். “தந்தையரின் தொடுகை ஏன் மைந்தருக்கு தேவைப்படுகிறது என எண்ணிக்கொண்டேன்” என்று துருமசேனன் சொன்னான். “அது நம்மிடம் நீ இருக்கிறாய் என்று சொல்கிறதா? இரு என வாழ்த்துகிறதா?” லட்சுமணன் “நான் தந்தையை தொட விழைகிறேன். இருமுறை அவர் அருகே சென்றேன். அவர் இயல்பாக என என் தோள்மேல் கைவைப்பதுண்டு. ஆனால் போர் தொடங்கியபின் ஒருமுறைகூட தொடவில்லை. கை நீள்கிறது. அஞ்சியதுபோல் அகல்கிறது” என்றான்.
துருமசேனன் “ஏன்?” என்றான். லட்சுமணன் அதற்கு மறுமொழி சொல்லவில்லை. அவர்கள் படைகளின் நடுவே எண்ணத்தில் மூழ்கியவர்களாக புரவிகளில் சென்றனர். “தேர்கள் ஒருங்கியிருக்கும்” என துருமசேனன் பொதுவாக சொன்னான். அதற்கு லட்சுமணன் ஒன்றும் சொல்லவில்லை. “அங்கே சிறிய தந்தை பீமசேனரின் மைந்தர் போர்முகப்புக்கு வந்திருக்கிறார். பெருமல்லர் என்றார்கள். தம்பியர் அவரைப்பற்றி உள்ளக்கிளர்ச்சியுடன் பேசிக்கொண்டார்கள்” என்றான் துருமசேனன். லட்சுமணன் “நம் படைகளில் ஓர் பேருருவ அரக்கன் உளன் என்றார்களே?” என்றான். “ஆம், அவன் பெயர் அலம்புஷன்…” என்றான் துருமசேனன். “உண்மையில் நானும் இன்னமும் அவனை பார்க்கவில்லை.”
“அவனை நான் பார்க்க விழைகிறேன்” என்றான் லட்சுமணன். “அவனை நம் வழியில் வந்து சந்திக்க ஆணையிடுகிறேன்” என்றபடி துருமசேனன் அருகிருந்த முரசுமாடம் நோக்கி சென்றான். அங்கே விந்தையான சிறிய முரசு ஒன்று நாய்க்குரைப்பின் ஓசையில் முழங்கத் தொடங்கியது. லட்சுமணனுடன் வந்து சேர்ந்துகொண்ட துருமசேனன் “அவன் மிகச் சிறிய படையுடன் வந்துள்ளான். ஆனால் விந்தையான பேருருக் கொண்டவர்கள் அவர்கள் என்றனர்” என்றான். லட்சுமணன் “இன்றைய போரில் கடோத்கஜன் தடுத்து நிறுத்தப்படவேண்டும், இளையோனே” என்றான். துருமசேனன் ஒன்றும் சொல்லவில்லை. லட்சுமணன் “நம் இளையோருக்காக” என்றான்.
தொலைவில் அவர்களை எதிர்கொள்ளும் கையசைவு எழுந்தது. அங்கே நின்றிருந்த காவலனை நோக்கி துருமசேனன் கையசைத்த பின் “வந்துள்ளான்” என்றான். பாதையின் வலப்பக்கம் இரும்புக் கவசங்கள் அணிந்த ஒருவன் அவர்களுக்காக காத்திருந்தான். முதலில் அவன் எதன் மேலோ அமர்ந்திருப்பதாகத்தான் லட்சுமணனுக்கு தோன்றியது. மீண்டும் விழிகூர்ந்தபோதுதான் அவன் நின்றிருப்பவன், உயரமற்றவன் என்பதனால் அத்தோற்றம் என்று தெரிந்தது. அவன் கால்கள் ஆமைக்கால்கள்போல பருத்து குறுகி இருபக்கமும் வளைந்து பெரிய நகங்களுடன் தெரிந்தன. ஆனால் பருத்த உடலும் நீண்ட பெருந்தோள்களும் கொண்டிருந்தான்.
“அவனா?” என்றான் லட்சுமணன். “ஆம், மூத்தவரே. அவன் பெயர் சாலகண்டகன், அலம்புஷர்கள் என்னும் அரக்கர்குலத்தை சேர்ந்தவன்” என்றான் துருமசேனன். அவனருகே அவனைப்போலவே உடல்கொண்ட நால்வர் நின்றிருந்தனர். இரும்புக்கவசங்களில் படையின் அசைவுகள் நீரலைகளென நெளிய சிறுசுனை என தெரிந்தனர். “விந்தையான உடல்கள்” என்றான் லட்சுமணன். “தேள்போன்ற தோள்கள் கொண்டவர்கள் என்பதனால் இவர்களை துரூணர்கள் என்றும் அழைக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவென்றாலும் காடுகளில் இவர்களை மிக அஞ்சுகிறார்கள் என்று காவலன் சொன்னான்.”
அவர்கள் அருகே சென்றதும் அலம்புஷன் தலைவணங்கி “சுயோதனரின் மைந்தரும் அஸ்தினபுரியின் இளவரசருமான லட்சுமணரை வாழ்த்துகிறேன். தங்கள் ஆணைப்படி வந்துள்ளேன்” என்றான். லட்சுமணன் “நலம்பெறுக!” என்றபின் அவன் அருகே நின்றிருந்தவர்களை பார்த்தான். அவன் திரும்பி நோக்கிய பின் “என் குடியினர் நாற்பத்தெட்டுபேர் என்னுடன் வந்துள்ளனர்” என்றான். லட்சுமணன் “நீ புரவியூர்வாயா? வில்பயின்றுள்ளாயா?” என்றான். “இல்லை, என் படைக்கலங்கள் பாசமும் கதையும்தான்” என அவன் தரையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த சுருள்கயிற்றையும் கல்லால் ஆன பெரிய கதையையும் காட்டினான்.
“இக்கயிற்றை எளிதில் வாளால் அறுத்துவிட முடியுமே?” என்றான் லட்சுமணன். “இல்லை அரசே, இது இரும்புக் கம்பிகளுடன் சேர்த்து முறுக்கப்பட்டது. இதைக்கொண்டு யானையைக் கட்டி இழுப்பேன். கோடரியாலும் இதை வெட்ட முடியாது” என்றான் அலம்புஷன். “இதன் முனையிலுள்ள இரும்புக்கூர் எடைமிக்கது. இதை நாங்கள் நாகப்பல் என்கிறோம். பறந்துசென்று அம்பெனத் தாக்கும்.” அந்தக் கூர்முனை ஒளியுடனிருந்தது. அதற்குக் கீழே நான்கு இரும்புக் கொக்கிகள் இருந்தன. “முன்பு கழுகின் நகத்தால் இதை செய்திருந்தனர் என் முன்னோர். இப்போது உருக்கி கரியுடன் சேர்த்து சிறுகச்சிறுக ஓராண்டு குளிரச்செய்த இரும்பால் செய்கிறோம்.”
அவனுடைய முகம் பேருடல் ஒன்றுக்குமேல் அமையவேண்டியது என லட்சுமணன் எண்ணினான். கண்கள், மூக்கு, உதடுகள் அனைத்துமே மானுடரைவிட இருமடங்கு பெரியவையாக இருந்தன. மிகப் பெரிய பற்கள் மிக வெண்மையாக, சீரான நிரையாக வெளித்தெரிய அவன் பேசும்போதே சிரிப்பவன்போல தோன்றியது. “நீ எதில் ஊர்வாய்? உன் கால்கள் மிகச் சிறியவை” என்றான் லட்சுமணன். “ஆம், ஆனால் மிக வலுவானவை. என்னால் யானைக்கு நிகராக எதிர்விசை அளிக்கவியலும்” என்றான் அலம்புஷன். “நான் தனியாக ஊர்திகளில் ஏறுவதில்லை. என் பாசக்கயிற்றில் சிக்கும் விலங்குகளும் தேர்களுமே எனக்கான விசையை அளிக்கும்.” அவன் புன்னகைத்து “நம்புங்கள் என்னை. என்னை களத்தில் பார்க்கையில் நான் மறுபக்கத்தில் இல்லை என்பதற்காக மகிழ்ச்சிகொள்வீர்கள்” என்றான்.
“அதையே நானும் எண்ணினேன். நீ ஏன் இங்கு வந்தாய்? மறுநிரையில் அல்லவா உன் குலத்தோர் அனைவரும் நின்றுள்ளனர்?” என்றான் லட்சுமணன். “ஆம். ஆனால் என் குலத்தைவிட பெரிது என் வஞ்சம்” என்றான் அலம்புஷன். லட்சுமணன் விழிசுருக்கி நோக்க அவன் “இளவரசே, முன்பு உசிநாரத்தின் எல்லைக்குள் அமைந்த சிருங்கபுரிக்கு அருகே கிருஷ்ணசிலை மலைச்சாரலில் ஊஷரர்கள் என்னும் நூறு அரக்கர்குடியினர் வாழ்ந்தனர். வறுநிலத்தோர் என்று அச்சொல்லுக்கு பொருள். ஆற்றலற்ற கால்களும் மங்கலான விழிகளும் கொண்டிருந்தவர்கள் அம்மக்கள். அடர்காடுகளுக்குள் குகைகளில் வாழ்ந்தனர். கைக்கு சிக்கும் அனைத்தையும் உண்டனர். ஒவ்வொருநாளும் உசிநாரத்தின் நிலம் விரிந்து காட்டை உண்டு உடலாக்கிக்கொண்டது. காட்டுக்குள் ஊடுருவிய யாதவர்களாலும் அவர்களுக்குத் துணைவந்த ஷத்ரியர்களாலும் ஊஷரர் வேட்டையாடப்பட்டு புழுக்களைப்போல கொன்று அழிக்கப்பட்டனர்” என்றான்.
“அக்குடியில் குலத்தலைவராகிய தூமருக்கும் அவர் துணைவியாகிய யமிக்கும் பிறந்த பன்னிரண்டு மைந்தர்களில் இளையவர் என் மூத்தவராகிய பகன். யமியின் தங்கை சூர்ணையின் எட்டு மைந்தர்களில் இளையவன் நான். நாங்கள் தொல்லரக்கர் குடியினர். பெரும்புகழ்கொண்ட ராவணப்பிரபுவின் குருதியினர். ராகவகுலத்து ராமனால் எங்கள் குலம் அழிந்தது. சிதறுண்டு காடுகளுக்குள் பரவி உளம் தேங்கி உடல் நலிந்து சிறுகுடியினரானோம். விலங்குக்கும் கீழென்று அமைந்தோம்” என்றான் அலம்புஷன். விழிகள் சிவக்க, கன்னத்தசைகள் இழுபட்டு அசைய அவன் கனல்கொண்டான். அவ்வுணர்ச்சியாலேயே அவன் உயர்ந்தெழுவதுபோல் உளமயக்கு எழுந்தது.
“அறிக, பிரம்மனிலிருந்து பிறந்த ஹேதியும் பிரஹேதியும் எங்கள் முதல் மூதாதையர்! அவர்களின் கொடிவழியில் வந்த சுகேசருக்கும் தேவவதிக்கும் மூன்று மைந்தர்கள் பிறந்தார்கள். மாலி, சுமாலி, மால்யவான். அவர்களில் சுமாலி கேதுமதியை மணந்து பெற்ற பகைதேவி எங்கள் மூதன்னை. அன்னை பெயரால்தான் என் மூத்தவர் பகன் என்று பெயர் பெற்றார். அன்னை பெற்ற பன்னிரு குடிகளில் இருந்து பிறந்தவர்கள் ஊஷரர்களின் கொடிவழியினர்” என்றபோது அவன் பிறிதொருவனாக இருந்தான். “அக்குருதிவழியில் வந்த அன்னை கைகசியை விஸ்ரவஸ் என்னும் முனிவர் மணந்து ஈன்ற மைந்தரே அசுரகுலத்துப் பேரரசர் ராவண மகாபிரபு. அவரை அழித்தவர் ராகவகுலத்து ராமன். வென்றவனைவிட தோற்றவன் பெரும்புகழ்கொண்டு பன்னிரண்டாயிரம் தொல்குடிக்கு தெய்வமென்று அமர்ந்தான்.”
“இளவரசே, அஸ்வத்தாமரால் ஊஷரர் குடி அழிக்கப்பட்டது. எஞ்சிய குடிகளுடன் ஏகசக்ரபுரிக்குச் சென்று அங்கே ஒரு சிற்றூர் அமைத்து தங்கிய என் மூத்தவராகிய பகனை கொன்றவர் இளைய பாண்டவராகிய பீமசேனர். பிறந்த நாள்முதல் அவர் கொல்லப்பட்ட கதைகேட்டு வளர்ந்தவன் நான். கைவளர கால்வளர என் பகையும் வளர்ந்தது. ஒருநாள் பீமசேனரின் குருதிகொள்வேன் என எங்கள் குடிமூதன்னை பகைதேவியின் கிடைக்கல் அருகே குருதிதொட்டு வஞ்சினம் உரைத்தேன்” என்றான் அலம்புஷன்.
லட்சுமணன் “அது எங்கள் குடிக்கு எதிரான வஞ்சம்” என்றான். “ஆம், இன்று அவர்கள் உங்கள் எதிரணியில் நின்றிருக்கிறார்கள். என்னால் தனியனென அவரை எதிர்கொண்டு கொல்லவியலாது. இப்பெரும்போரில் அவர் சூழப்படுகையில் என் வஞ்சத்துடன் எதிர்கொண்டு செல்வேன். என் பாசத்தால் அவரை வளைப்பேன். கதையால் தலைபிளப்பேன். அக்குருதியில் ஒரு துணிச்சுருளை முக்கிச் சுருட்டி எடுத்து என் படைவீரன் ஒருவனிடம் அளித்து காட்டில் நடுகல்லென நின்றிருக்கும் என் மூத்தவர் பகனுக்கு படைக்கச் சொல்வேன்” என்றான் அலம்புஷன். “அரசே, இறந்த நாள் முதல் இன்றுவரை என் மூத்தவர் எந்தப் பலியையும் ஏற்றதில்லை. ஆண்டுதோறும் அவர் வீழ்ந்த நாளில் நாங்கள் அந்நடுகல்லுக்கு குருதியும் அன்னமும் கள்ளும் மலரும் படைத்து வணங்குவோம். ஒருமுறைகூட காகமென்றோ காட்டுநாய் என்றோ உருக்கொண்டு அவர் பலிச்சோறு கொள்ள வந்ததில்லை.”
“இக்குருதியே முதற்பலி… அவர் நிறைவுற்று வந்து இதை ஏற்றுக்கொள்வார். எங்கள் கொடிவழியினர் அவருக்கு அன்னமூட்டி மண்ணுக்கு அடியில் வேர்வெளியென விரிந்துள்ள எங்கள் மூதாதையருடன் நிலைநிறுத்துவார்கள்” என்றான் அலம்புஷன். “என் பிறவிநோக்கமே இதுதான் போலும். அஸ்வத்தாமரால் அழிக்கப்பட்ட குடியில் எஞ்சிய என் அன்னையும் ஏழு ஊஷரகுடியினரும் பன்னிரு மைந்தருடன் வடக்கே மலையேறிச்சென்று திரிகர்த்தத்தின் ஆழ்காட்டுக்குள் குடியேறினர். அங்கே என் அன்னை அளித்த இவ்வஞ்சத்தையே ஆற்றலெனக் கொண்டு நான் வளர்ந்தேன். என் உடலின் அனைத்து விசைகளும் அப்பழியால் ஊறி எழுபவையே. அவரை கொல்லும்பொருட்டே இப்படையில் சேர்ந்திருக்கிறேன்.”
துருமசேனன் “ஆனால் உன் குடியின் முதல் வஞ்சம் அஸ்வத்தாமருடன் அல்லவா?” என்றான். “ஆம், ஆகவேதான் நூற்றெட்டு ஊஷரகுடியினரும் மறுபக்கம் பாண்டவர்களுடன் சேர்ந்து நின்றுள்ளனர். என் வஞ்சம் இளைய பாண்டவர் பீமசேனரிடம் மட்டும்தான்” என்றான் அலம்புஷன். லட்சுமணன் புன்னகைக்க அலம்புஷன் “எங்களை உங்களால் புரிந்துகொள்ள முடியாது, ஷத்ரியரே. இங்கே எங்கள் குலத்தான் பிறிதொருவன் வந்திருக்கிறான். அவன் தந்தை மறுபக்கம் நின்று போரிடுகிறான், அவன் இங்கு வந்துள்ளான்” என்றான். லட்சுமணன் “யார் அவன்?” என்றான். “இடும்ப குலத்தவன், அவன் தந்தை இளைய பாண்டவர் பீமசேனரின் மைந்தன். அவன் பெயர் பார்பாரிகன்” என்றான் அலம்புஷன்.
லட்சுமணன் திரும்பி துருமசேனனை நோக்கி “இங்கு வந்துள்ளானா?” என்றான். “தெரியவில்லை, மூத்தவரே” என்றான் அவன். “எங்குள்ளான்?” என்று அலம்புஷனிடம் லட்சுமணன் கேட்டான். “இங்குதான். மிக இளையவன், ஆனால் பேருருவன். தாங்கள் விரும்பினால் அவனை வரச்சொல்கிறேன்” என்று தன்னருகே நின்றிருந்தவனிடம் முழவொலிக்கும் மொழியில் ஆணையிட்டான். அவன் தன் கையிலிருந்த கதையைச் சுழற்றி ஊன்றி அதன் விசையில் தவளைபோல எழுந்து தாவி காலூன்றி மீண்டும் சுழற்றித் தாவி விரைந்து அகன்றான். “சகடம்போல் உருள்கிறான்” என்றான் துருமசேனன். அலம்புஷன் நகைத்து “அது எங்கள் வழிமுறை” என்றான். “நாங்கள் புரவிகளையே கடந்து விரைவோம்… மரங்களில் என்றால் குரங்குகள் எங்களிடம் பிந்தும்.”
துருமசேனன் அவன் கைகளை நோக்கி “விந்தையான கைகள்” என்றான். அவன் விரல்கள் உள்ளங்கையிலிருந்து மிக நீண்டு காக்கையலகு போன்ற கரிய நகங்களுடன் இருந்தன. அவன் தன் கைகளைக் காட்டி “ஆம், இக்கைகளால் எங்களால் மரக்கிளைகளை நன்கு வளைத்துக்கொள்ள முடியும். அலம்புஷர்கள் என்றால் நீள்விரலர் என்று பொருள்” என்றான். “இவை கழுகுக்கால்கள் போன்றவை என்பதனால் எங்களுக்கு ஃபாசர்கள் என்றும் பெயருண்டு.”
“நீ இன்று களத்தில் கடோத்கஜனை எதிர்கொள்” என்றான் லட்சுமணன். “நானும் உடனிருப்பேன். என் இளையோரை நாம் அவரிடமிருந்து காக்கவேண்டும்.” அலம்புஷன் “அது என் கடமை” என்றான். “என்னால் அவரை எதிர்கொள்ள முடியும். ஊழிருப்பின் கொல்லவும் கூடும்.” லட்சுமணன் “நன்று. போரில் என் அருகே நீ எப்போதுமிருக்கவேண்டும்” என்றான். அலம்புஷன் “உண்மையில் சற்றுமுன் அதைப்பற்றி நான் பார்பாரிகனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவன் தந்தையை களத்தில் எதிர்கொள்ளப்போவதைப்பற்றி” என்றான்.
துருமசேனன் அப்பால் நோக்கி “அவனா?” என்றான். அலம்புஷன் “ஆம், அவனே. அவனை எவரும் விழிதவற இயலாது” என்றான். தொலைவில் பார்பாரிகன் வருவதை லட்சுமணன் கண்டான். கைகளை நிலத்தில் ஊன்றி நடந்து வருகிறானா என்ற ஐயம் ஏற்பட்டது. பின்னர்தான் அவன் கால்களும் நீளம் குறைவானவை என்று தெரிந்தது. ஆனால் அலம்புஷனின் கால்களைப்போல அவை தடித்திருக்கவில்லை. குரங்குக்கால்களைப்போல பக்கவாட்டில் வளைந்திருந்தன.
அணுகுந்தோறும் பார்பாரிகனின் உருவம் அகன்று பெரிதாகிக்கொண்டே இருந்தது. பெரிய தோள்களும், தசையுருளைகள்போல நீண்ட கைகளும், உந்திச்சரிந்த வயிறும், இரு உருளைகளாக அசைந்த மார்புகளும் கொண்டிருந்தான். அவன் அருகணைந்தபோது விலங்குகளிலிருந்து எழும் மயிர்மணம் எழுந்தது. அவனுடைய பெரிய முகத்திலிருந்தும் கொழுத்து விரிந்த தோள்களிலிருந்தும் வியர்வை வழிந்தது. லட்சுமணன் அருகே வந்து மூச்சுவாங்க நின்று அரசர்களை வீரர் வணங்கும் முறைப்படி தலைதாழ்த்தி “இடும்பர் குடியினனாகிய பார்பாரிகன் நான். கௌரவ இளவரசரை வணங்குகிறேன்” என்றான்.
லட்சுமணன் அவனிடம் சினத்துடன் “என் கால்தொட்டு வணங்கு, அறிவிலி. நீ என் குருதியினன், எனக்கு மகன் முறையானவன்” என்றான். அவன் அச்சொற்கள் புரியாமல் தத்தளித்து ஒருமுறை அலம்புஷனை நோக்கியபின் “ஆம், ஆனால்” என்றான். அலம்புஷன் நகைத்து “அவர் உன் தந்தையின் குலமைந்தர்” என்றான். “ஆம்” என்றபின் பார்பாரிகன் நீள்மூச்செறிந்து முன்னால் வந்து எடைமிக்க உடலை மூச்சொலிக்க வளைத்து லட்சுமணனின் கால்களைத் தொட்டு வணங்கினான். “நீள்வாழ்வும் புகழும் செல்வங்களும் அமைக!” என லட்சுமணன் அவன் தலைதொட்டு வாழ்த்தினான்.
பார்பாரிகன் எழுந்தபோது மேலும் வியர்வை வழிந்தது. மழைபெய்யும் பாறைச்சரிவுபோல இருந்தது அவன் உடல். மயிரற்ற கரிய தோல்பரப்பு ஈரமாக மின்னியது. “இவன் உன் சிறிய தந்தை துருமசேனன்” என்றான் லட்சுமணன். “ஆம்” என்றபின் பார்பாரிகன் துருமசேனனின் கால்களையும் தொட்டு வணங்கி வாழ்த்துகொண்டான். முகம் மலர பார்பாரிகனின் தோள்களை பற்றிக்கொண்ட துருமசேனன் “பேருடலன்… ஆனால் கால்கள்தான் விந்தையானவை” என்றான். “எங்கள் குலத்தின் கால்கள் இவ்வாறுதான் அமைந்துள்ளன” என்றான் பார்பாரிகன்.
அலம்புஷன் “அவர்கள் மரங்களுக்குமேல் மீன் என நீந்துபவர்கள்” என்றான். “நீ எப்போது வந்தாய்?” என்றான் லட்சுமணன். “நான் நேற்று மாலையே வந்துவிட்டேன், தந்தையே. இளைய கௌரவர் துர்மதர் என்னை வரவேற்றார். இளைய கௌரவராகிய சுபாகுவிடம் அழைத்துச்சென்றார்.” லட்சுமணன் “என்ன சொல்கிறாய்? அவர்கள் உன் தாதையர்” என்றான். பார்பாரிகன் “ஆம், தாதையர்” என மெல்ல சொன்னான். துருமசேனன் “பலமுறை தாதையர் என உள்ளத்திற்குள் சொல்லிக்கொள்” என்று புன்னகையுடன் சொல்ல பார்பாரிகன் “ஆம், தாதையர்” என்றான். அவனுடைய கொழுத்த பேருடலில் வியர்வை வழிந்து ஓடைகளாக இறங்கியது.
லட்சுமணன் பரிவுடன் அவன் தோளில் கைவைத்து “சொல்” என்றான். “என்ன சொல்ல?” என்றான் பார்பாரிகன். லட்சுமணன் சிரித்துவிட்டான். துருமசேனன் “நீ என்ன செய்கிறாய் என்று சொல்” என்றான். “நான் ஒன்றுமே செய்யவில்லை. காலையில் உணவருந்தினேன்” என்றான் பார்பாரிகன். “அதை நீ சொல்லவேண்டிய தேவையே இல்லை” என்றான் லட்சுமணன். துருமசேனன் “நீங்கள் எத்தனைபேர் வந்தீர்கள்?” என்றான். “நாங்கள் பாதிப்பேர் இங்கு வந்துள்ளோம். எஞ்சியோர் அங்கு சென்றனர்” என்றான் பார்பாரிகன். “நான் போரிடவேண்டிய படைப்பிரிவு எதுவென்று இன்று கூறுவதாக சொன்னார் இளைய கௌரவர் சுபாகு” என்றபின் குரல் தாழ்த்தி “தாதை” என்றான்.
லட்சுமணன் “நீங்கள் எத்தனைபேர்?” என்றான். பார்பாரிகன் “நாங்கள் இருநூறுபேர் வந்துள்ளோம். இன்று காலைதான் முகப்புப்படையில் கழுகின் கழுத்தென அமையும்படி ஆணை வந்தது. போருக்கெழ ஒருங்கிக்கொண்டிருந்தேன்” என்றான். பேருருக்கொண்ட அரக்கர்களின் குலத்தில் பிறந்த கைக்குழந்தை அவன் என லட்சுமணன் நினைத்துக்கொண்டான். “நீ ஏன் இங்கே போர்புரிய வந்தாய்? உன் தந்தை அங்குள்ளார். பீமசேனர் உன் குருதித்தாதை” என்றான் துருமசேனன்.
“ஆம், எங்கள் நாட்டுக்கு முதலில் ஆதரவளித்தவர் கௌரவப் பேரரசர் துரியோதனர். எங்கள் நகருக்கு துச்சாதனர் வந்து என் தந்தைக்கு மணம்புரிந்து வைத்தார். நாங்கள் அரசமுறைப்படி அஸ்தினபுரிக்கு கடமைப்பட்டிருக்கிறோம்” என்ற பார்பாரிகன். “எங்கு போருக்குச் செல்வது என்ற வினா எழுந்தபோது இதை நான் அவையில் சொன்னேன். எங்கள் குடிமூத்தார் நான் சொன்னது உண்மை என ஏற்றனர். ஆகவே நாங்கள் இங்கே வந்தோம்” என்றான் பார்பாரிகன். “நான் என் தந்தையிடம் ஒப்புதலும் வாழ்த்தும் பெற்றேன்.”
துருமசேனன் “நீ உன் குடியுடன் போரிடுவாயா?” என்றான். “என் தந்தையுடனும் போரிடுவேன். எதிர்கொண்டு மோதினால் கொல்வேன். அது களநெறி” என்றான் பார்பாரிகன். “அவரை வெல்ல இவனால் எளிதில் இயலும்” என்று அலம்புஷன் நடுவே புகுந்தான். “இவன் நகரில் நிகழும் அனைத்துப் போர்களிலும் தன் தந்தையை கைக்குழவி என தூக்கி அறைந்திருக்கிறான். இவன் வல்லமை அவரைப்போல நால்வருக்கு நிகர்.” துருமசேனன் “மெய்யாகவா?” என்றான். “ஆம், தந்தையே. என்னால் எந்தையை மிக எளிதில் வெல்லமுடியும். தாதை பீமசேனரையும் இடரின்றி வெல்வேன். நேர்ப்போரில் என்னிடம் எதிர்நிற்கும் ஆற்றல் கொண்டவர் பால்ஹிகர் மட்டுமே. இளைய யாதவரும் அங்கநாட்டரசர் கர்ணனும் மட்டுமே என்னை வெல்லக்கூடும் என எந்தை சொன்னார்” என்றான் பார்பாரிகன்.
லட்சுமணன் முகம் சுளித்து தலையை திருப்பிக்கொண்டு “உன் அகவை என்ன?” என்றான். “பதின்மூன்று, ஆனால்…” என அவன் தொடங்க “நீ களம்புகலாகாது. இது என் ஆணை!” என்றான் லட்சுமணன். “தந்தையே, நான்…” என அவன் சொல்லத்தொடங்க “என் சொல்… அதை என் மைந்தர் மீறலாகாது” என்று லட்சுமணன் உரக்க சொன்னான். “நீ மேற்குமூலை காவல்மாடத்தில் அமர்ந்துகொள்க! அங்கிருந்து போரை நோக்கு. ஒவ்வொருநாளும் போரில் என்ன நிகழ்கிறதென்பதை உள்ளத்தில் பதித்து அன்று மாலை என்னிடம் வந்து விரிவாக சொல்.”
பார்பாரிகன் நிறைவின்மையுடன் உடலை அசைக்க அவன் தசைத்திரள்கள் நெளிந்தன. “என்ன?” என்றான் லட்சுமணன். “ஆணை” என்றான் பார்பாரிகன். லட்சுமணன் தன் புரவிமேல் ஏறிக்கொண்டு மறுசொல் இல்லாது அதை செலுத்தி முன்னால் சென்றான். துருமசேனன் பார்பாரிகனை நோக்கி புன்னகைத்து அவன் தலைமேல் கையை வைத்து “உன் மண்டை விந்தையானது… பெருங்குடம்போல” என்றான். பின்னர் “நன்று சூழ்க, மைந்தா!” என்றபின் லட்சுமணனை தொடர்ந்துசென்றான்.
லட்சுமணன் எதனாலோ துரத்தப்பட்டவன்போல புரவியை விரைவுகொள்ளச் செய்தான். துருமசேனன் அவனுக்குப் பின்னால் விரைந்தான். பின்னர் மூச்சிரைக்க கடிவாளம் தளர்த்தி குதிரையை பெருநடைக்கு இறக்கிய லட்சுமணன் பெருமூச்சுவிட்டான். துருமசேனன் அருகணைந்து மூச்சிரைக்க நின்றான். லட்சுமணன் அவனை திரும்பி நோக்கவில்லை. கண்கள் சுருங்க போர்முனையை நோக்கிக்கொண்டு புரவிமேல் நெடுநேரம் அமர்ந்திருந்தான். பின்னர் பெருமூச்சுடன் புரவியை செலுத்தினான்.