குளிர்ப் பொழிவுகள் -1
குளிர்ப்பொழிவுகள் – 2
குளிர்ப்பொழிவுகள் – 3
பயணத்தின் கடைசிநாள். எங்கள் பயணங்களில் வழக்கமாக உள்ள விதிகளில் ஒன்று காலை 6 மணிக்கே கிளம்பிவிடுவது. அது இப்பயணத்தில் பெரும்பாலும் நிகழவில்லை. பயணிகளின் எண்ணிக்கை மிகுதியாகும்தோறும் அது இயல்வதில்லை. அத்துடன் பெரும்பாலான நாட்களில் நாங்கள் செல்லவேண்டிய இடம் சற்றுத்தொலைவிலேயே இருந்தது. ஆகவே பொதுவாக எட்டுமணிக்குத்தான் கிளம்பிக்கொண்டிருந்தோம். இன்று ஆறுமணிக்கு கிளம்பியாகவேண்டும் என்று கிருஷ்ணன் அடம்பிடித்தார். ஆறரை மணிக்கு கிளம்பிவிட்டோம்
எல்லாப்பூரில் ஒரு விடுதியில் தங்கியிருந்தோம். இத்தகைய கடினமான பயணங்கலில் நாம் எளிதில் நன்றாகத் தூங்கிவிடுவோம். கனவுகள் இல்லாத விழிப்பு நிகழாத துயில். காலையில் கண்கள் தெளிந்து உள்ளம் மலர்ந்திருக்கும். மூளை உழைப்புக்குப்பின் வரும் துயிலுக்குப்பின் விழிக்கையில் அந்த மூளையுழைப்பின் சோர்வு நீடிப்பதும் உடலுழைப்பின் துயில் உள்ளத்தையும் புத்துணர்ச்சிகொள்ளச் செய்வதும் மிக விந்தையானது.
முதலில் ஷிர்லே அருவிக்குச் சென்றோம். யெல்லாப்பூரில் இருந்து 22 கிமீ தொலைவில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி ஒரு சுற்றுலாத்தலம் அல்ல. சாகசப்பயணிகளுக்குரிய இடம். மலைச்சரிவில் சற்றுதொலைவு வரை கார்கள் செல்லும். அதன்பின் வழியே கொஞ்சம் சிக்கல்தான். குழம்பி நின்று கண்டுபிடித்து காட்டுக்குள் ஒற்றையடிப்பாதையில் மூன்று கிலோமீட்டர் ஏறியும் இறங்கியும் செல்லவேண்டும். ஆற்றுக்குக் குறுக்காக கமுகுமரங்களைப்போட்டு கம்பி கட்டி உருவாக்கப்பட்ட பாலம் வழியாக கடந்து சென்று சீமைக்குடைப் பனைகள் மண்டிய ஈரமான சரிவில் இறங்கிச் சென்றால் அருவி தெரியவரும்
சாலமாலா ஆறு இங்கே நின்றிருக்கிறது. 60அடி உயரமான நான்கு நீர்ச்சரிவுகள். பொதுவாக நிறைய நீர் இருக்கும். ஆனால் அருகே செல்லமுடியாது. வழுக்கும் பாறைகளின் வெளி. எவரும் குளிக்கும் வழக்கம் இல்லை. கீழே செல்லும் சிறிய பொழிவுகளில் நீராடலாம். மைய அருவியை அணுகுவது கடினம். அங்கே வார இறுதியில் வரும் தோள்சுமைப் பயணியர் அன்றி எவரும் செல்வதில்லை. ஒரு பள்ளத்துக்குள் பீர்புட்டிகள் நிறைந்து கிடந்தன.
காலையில் குளிர்ந்து கொட்டிக்கொண்டிருந்த அருவியைப்பார்த்துக்கொண்டு நின்றோம். சற்றுநேரத்திலேயே என்னருகே நின்றிருந்த செந்தில் வெண்ணிறமாக நரைத்து ஒளிர்ந்துகொண்டிருந்தார். முடியிழைகள் அனைத்தும் நுண்ணிய நீர்த்துளியைச் சூடியிருந்தன. என் கை வெள்ளிமணிகளால் ஆன உறை ஒன்றை அணிந்ததுபோலிருந்ந்தது. சாரலிலேயே நீராடிவிட்டோம்.
வினோத், பாரி,மணவாளன் மூவரும் எங்கும் நீராடத்துணிபவர்கள். அவர்கள் நீராடினர். குளிரில் நடுங்கியபடி வந்த வினோத் உள்ளே போய் நீராட முயன்றார். பாரியையும் மணவாளனையும் மைய அருவி நோக்கி அனுப்ப கிருஷ்ணன் கடுமையாக முயன்றார், அவர்கள் அறிவாளிகள் என நிறுவிக்கொண்டார்கள்.
காலை ஒன்பதரை மணிக்குள்முதல் அருவியை பார்த்துவிட்டோம். காலைநடை எளிதாக இருந்தது. முதல்நாளிருந்த மூச்சுச்சிடுக்கும் தத்தளிப்பும் இல்லை. அதற்குள் கடுமையான வாழ்க்கைக்கு உடல்பழகிவிட்டிருந்தது. நீண்ட பயணங்களில் சிலநாட்களுக்குப்பின் காலையில் பதினைந்துகிலோமிட்டர் மலையேற்றமே எளிதாகத்தெரியும்.
மீண்டும் எல்லாப்பூர் வந்து காலையுணர்வு. அடுத்தது, ஷத்தோடி அருவி. எல்லாப்பூரிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலிருந்தது அது. மையச் சாலையிலிருந்து பிரிந்து அருவி முகப்புவரைச் செல்லலாம். கட்டணம் உண்டு. உள்ளே நீண்ட கான்கிரீட் நடைபாலம் ஒன்று காட்டுக்குமேல், மலைச்சரிவின் விளிம்பு வழியாக நம்மை அருவிக்கு இட்டுச்செல்லும். மேலிருந்து பிளந்து விழுந்து குவிந்த பெரும்பாறைகள் நடுவே அருவி கொட்டிக்கொண்டிருக்கிறது.
மலைக்குமேல் ஊறிவரும் நான்கு சிற்றாறுகளின் நீர் பாறைமுனையில் இருந்து கொட்டி காளி நதியில் அமைந்துள்ள கொடசாலி நீர்த்தேக்கம் நோக்கிச் செல்லும்போது இந்த அருவி உருவாகிறது. 62 அடி உயரமான ஒற்றைப்பெரும் பாளமாக நீர் வளைந்து பொழிகிறது. அருகே செல்ல வழி இல்லை. பாறைகள் மேல் தாவியும் தொற்றியும் சென்று ஓரளவு அருகே சென்று நீர்ச்சரிவை நோக்கி நிற்கலாம். நயாகராவின் கைக்குழந்தை போன்ற தோற்றம். மேலிருந்து பார்த்தால் லாடவடிவில் நீர் சரியும்.
அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதனால் கல்லூரிமாணவர்களும் மாணவிகளும் நிறையபேர் வந்திருந்தார்கள். நம்மூர் அளவுக்கு குப்பைபோடவோ கூச்சலிட்டு ரகளை செய்யவோ இல்லை என்றாலும் அவர்கள் ஒரு வகையில் அந்த இடத்தின் அமைதிக்கு மாறானவர்களாகவே தெரிந்தார்கள்.
மீண்டும் மீண்டும் அருவிகளை அப்பால் நின்று பார்ப்பது ஓரு விந்தையான அனுபவமாக இருந்தது. நீராடும்போது அருவி நம் அருகே வந்துவிடுகிறது. நாம் அதனுடன் பேச, உறவாடத் தொடங்கிவிடுகிறோம். அப்பாலிருக்கும் அருவி நமக்குத்தெரியாத மொழியில் முழங்கிக்கொண்டே இருக்கும் விந்தையான பேரிருப்பு. இப்புடவியின் பொருளற்ற, அல்லது நமக்கு அப்பாலுள்ள பெரும்பொருள் கொண்ட நிகழ்வொழுக்கின் துளி.
நோக்க நோக்க உள்ளம் அப்பொருளின்மையை அல்லது அறியமுடியாமையைச் சென்று தொட்டுத் திரும்புகிறது. ஆனால் சலிப்பும் அச்சமும் துயரும் உருவாவதில்லை. தனிமையும் அமைதியும் நிறைவுமே எஞ்சுகிறது
எல்லாப்பூரிலிருந்து நேராக பெங்களூர் என்று திட்டம். இரவு 915க்கு கல்லடா பேருந்தில் நாகர்கோயிலுக்கு படுக்கை முன்பதிவுசெய்திருந்தேன். அங்கிருந்து ஏறத்தாழ 450 கிமி. பன்னிரண்டுமணிக்குக் கிளம்பினால் ஆறுமணிக்கெல்லாம் சென்றுவிடலாம் என்பது கிருஷ்ணனின் திட்டம். வழக்கம்போல அது குளறுபடியானது. நாங்கள் அருவியைப் பார்த்துவிட்டு வரவே இரண்டுமணிநேரம் ஆகிவிட்டது. காலையில் ஷிர்லே அருவியில் அத்தனைதூரம் கான்நடை தேவையாகுமென எண்ணியிருக்கவில்லை.
எல்லாப்பூரில் ஒரு மானுடவியல் நிகழ்வு கவனத்துக்குரியது. கர்நாடகத்தின் வடகனரா பகுதியில் எல்லாப்பூர், ஷிர்சி வட்டாரத்தில் சித்தி என்னும் கறுப்பின மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டுவரை தென்கிழக்கு ஆப்ரிக்காவிலிருந்து போர்ச்சுக்கீசியர்களால் கோவா பகுதிக்கு அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட பன்து இன மக்கள்.
சித்தி என்னும் சொல் அவர்கள் தங்கள் மூத்தவர்களைக் குறிக்கப் பயன்படுத்துவது. அவர்களுக்கும் அது பொதுப்பெயரானது. இவர்கள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நிலப்பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டவர்கள். தங்கள் பொதுத்தன்மையை தாங்களே உணர்ந்துகொண்டு தங்களை அதனடிப்படையில் தொகுத்து இப்பெயரை தாங்களே சூட்டிக்கொண்டனர். பிறரும் அவ்வாறே அழைக்கலாயினர்
பன்து என்ற சொல் உறவு என்னும் சொல்லுக்கு நிகரானது. பந்து என அதேபொருளில் ஒலிக்கும் சம்ஸ்கிருதச் சொல் நினைவுக்கு வந்தது. பன்து என்றால் தென்கிழக்கு ஆப்ரிக்காவில் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இனக்குழுக்களைக் குறிக்கும். பொதுத்தன்மை கொண்ட மொழியால் இவர்கள் ஒரே குழுவாக தங்களைத் தொகுத்துக்கொண்டிருக்கிறார்கள். பன்து மொழிகளே அறுநூறுக்கும் மேல் உள்ளன. இவர்களுக்குள் அரசியல் ரீதியான ஒருங்கிணைவு ஏதுமில்லை. வழிபாட்டுப்பொதுத்தன்மை, பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகியவை மட்டுமே காணப்படுகிறது.
சித்தி கறுப்பின மக்கள் இஸ்லாம், கத்தோலிக்கக் கிறித்தவம் ஆகிய மதங்களுக்கு மாற்றப்பட்டவர்கள். அவர்களின் பொது மதம் ஹலியால் எனப்படும் மூதாதை வழிபாடுதான். கூடவே பல்வேறுவகை ஆவிச்சடங்குகளும் நோய்தீர்ப்புச் சடங்குகளும் நோன்புகளும் உண்டு.மதம் மாறியபின்னரும் இந்த வழிபாட்டைக் கைவிட அவர்கள் பிடிவாதமாக மறுத்துவந்தமையால் அவர்கள் பெருந்துன்பத்தை அடைந்தனர்.
இந்திய வரலாற்றின் மிக இருண்ட காலம் என்பது கோவா மதவிசாரணைகளின் காலகட்டம். கோவாவின் போர்ச்சுக்கீசிய அரசு ரோமாபுரி கத்தோலிக்க தலைமைப்பீடத்தின் ஆணையின்படி கோவாவை விடுதலைசெய்யப்பட்ட கத்தோலிக்க நிலமாக அறிவித்தது. இந்தியா உட்பட கீழைநாடுகளுக்கான மதவிசாரணைக்கான நிர்வாக மையம் ஹோலி ஆஃபீஸ் என அறிவிக்கப்பட்டது. ஏசு சபை பாதிரியார்கள் இந்த மாபெரும் சித்திரவதை- கொலைவெறியாட்டத்தை முன்னெடுத்தனர். மாற்று மதநம்பிக்கைகள் மூர்க்கமாக ஒடுக்கப்பட்டன.பெரும்பாலும் கோவாவின் முதன்மைமதமாக இருந்த இந்துக்களே இந்த விசாரணையில் பலியானார்கள்.கேரளத்திலும் கர்நாடகத்திலும் இன்றிருக்கும் கொங்கணி மக்கள் கோவா மதவிசாரணையில் தப்பி ஓடிவந்தவர்கள்தான்.
16 ஆம் நூற்றாண்டில் தொடங்கி 19 ஆம் நூற்றாண்டு முடிய நிகழ்ந்த கொடூரமான மதவிசாரணையில் மக்கள்செறிவுமிக்க கோவாவின் அன்றைய மக்கள்தொகையில் நான்கிலொன்று கொன்று அழிக்கப்பட்டது. அதே அளவு மக்கள் கோவாவிலிருந்து தப்பியோடி கர்நாடகப் பகுதிகளில் குடியேறினர். கத்தோலிக்கக் கிறித்தவத்துக்கு மாறியவர்கள் மட்டும் அங்கே நீடித்தனர்.
ஒருகட்டத்தில் மக்கள்தொகை மிகமிகக் குறைவாக ஆகவே வெளியே இருந்து மக்களைக் குடியேற்றும் பொருட்டே மதவிசாரணையை நிறுத்த கோவாவின் ஆட்சியாளர்கள் முடிவெடுக்கவேண்டியிருந்தது. இந்திய வரலாற்றாசிரியர்கள் கோவா மதவிசாரணைகளைப்பற்றி பெரும்பாலும் பேசுவதே இல்லை. ஆங்கில சீர்திருத்த கிறித்தவர்களான வரலாற்றாசிரியர்களே ஓரளவேனும் எழுதியுள்ளனர். கோவாவை போர்ச்சுக்கீசியர்கள் விட்டுச்சென்றபோது பெரும்பாலான ஆவணங்களை அழித்துவிட்டமையால் இந்த மதவிசாரணை பற்றிய முழுமையான செய்திகள் இன்றும் சேர்க்கப்படவில்லை. வால்ட்டேர் உட்பட மேலைநாட்டு அறிஞர்கள் கோவா மதவிசாரணை ஒர் உலகளாவிய மானுட அழிவு என எழுதியிருக்கிறார்கள். இந்தியச் சிந்தனையாளர்கள் பெரும்பாலும் பொருட்படுத்தும்படி எதுவும் எழுதியதில்லை – அம்பேத்கர் போன்ற சிலர் தவிர.
நவீன வரலாற்றாய்வுத்தளத்திலும் இந்த மௌனம் நீடிக்கிறது. கோவா மதவிசாரணைகளைப்பற்றிப் பேசுவது ஐரோப்பாவைச் சங்கடப்படுத்துவது என்பதனால் இங்குள்ள இடதுசாரிகளோ, சுதந்திரசிந்தனையாளர்களோ அதைப்பற்றி எழுதுவதில்லை. இந்திய வரலாற்றில் மதப்பூசல் இருந்துவந்தது. மிகச்சிறிய அளவில் வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்து, சமண, பௌத்த மதங்கள் பலநூற்றாண்டுக்காலம் ஒருங்கிணைந்து இங்கே வளர்ந்தன என்பதே எவராலும் மழுப்பமுடியாத வரலாறு. இஸ்லாம் இங்கே வந்தபோதுதான் மதம் அரசவன்முறையாக ஆகியது. ஆயினும் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் அணுகுமுறை பெரும்பாலும் அரசாட்சியையும் மதத்தையும் பிரித்துவைப்பதாகவே இருந்தது. அக்பர் போன்றவர்கள் மதநல்லிணக்கத்தின் உதாரணங்களாக இருந்தனர்.
இந்திய வரலாற்றின் உச்சகட்ட மதவன்முறைகள் மூன்றுதான். டெல்லி சுல்தான் பக்தியார் கில்ஜி நாளந்தாவை சூறையாடி பௌத்த மதத்தை அழித்தது, சீக்கியர்களுக்கு எதிராக ஔரங்கசீப் நிகழ்த்திய வன்முறை. கோவா மதவிசாரணை. இவ்விரு மதவன்முறைகளும் அப்பட்டமான வரலாற்று உண்மையாக முன்னால் நிற்கையில் இவற்றை மழுப்பவும், நியாயப்படுத்தவும்தான் இங்குள்ள உள்நோக்கம் கொண்ட வரலாற்றாசிரியர்கள் இந்துமதத்துக்கும் பௌத்தமரபுகளுக்கும் நடுவே பெரும் வன்முறை இருந்ததாக ஆதாரங்களே இல்லாமல் ஊகங்களின் அடிப்படையில் வரலாற்றை உருவாக்குகிறார்கள். மதப்பூசல்களுக்கும் திட்டமிட்ட மத அழிப்புக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இல்லாமலாக்க வார்த்தைஜாலங்களில் ஈடுபடுகின்றனர். நவீன இந்திய வரலாற்றாய்வில் சென்ற ஐம்பதாண்டுகளில் நிகழ்ந்த மாபெரும் மோசடி இது.
இந்த வகையான மோசடிகள் வழியாக இங்குள்ள இடதுசாரி- தாராளவாத வரலாற்றாசிரியர்கள் தங்கள் நம்பகத்தன்மையை இழக்க அந்த இடைவெளியினூடாகவே இங்கே நவீன இந்துமதவெறி அரசியலின் காழ்ப்பு நிறைந்த பழைமைநோக்கு கொண்ட வரலாற்றெழுத்து ஓங்கி வளர்கிறது. இத்தகைய மோசடிகள் இங்கே மதச்சார்பின்மையை வளர்க்கும் என இவர்களில் ஒருசாரார் எண்ணுகிறார்கள். இத்தகைய மதவெறியின் அழிவுகளை காணாமல் திரும்பிக்கொள்வது ஒருவகை நவீன தாராளவாதப் பெருந்தன்மை என நம்புகிறார்கள்.மறுபக்கம் இந்துமதத்தின் அனைத்து இருண்டபக்கங்களையும் பலமடங்காக மிகைப்படுத்திபேசுவது இங்கே முற்போக்கு என கருதப்படுகிறது.
இவர்களுடன் இங்குள்ள ‘நிதியாதரவு’ பெறும் வரலாற்றாசிரியர்களும் அவர்களுடன் இணைந்துகொள்ளும் இஸ்லாமிய கிறித்தவ மதவெறி அமைப்புகளும் சேர்ந்து இவர்கள் உருவாக்கும் வரலாற்றையே அர்த்தமற்றவையாக மோசடியாக ஆக்கிவிடுகின்றன. சென்ற இருபதாண்டுகளில் இந்த மோசடிகளைப் பொதுவெளியில் கிழித்து பரப்புவதில் இந்திய வலதுசாரிகள் பெருவெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் மேலும் உச்சத்துக்குச் சென்று இந்திய வரலாற்றாய்வில் இடதுசாரி – தாராளவாத அணுகுமுறை என்பதே கூலிப்படை எழுத்து, மோசடி எழுத்து என்னும் நிலைபாட்டை அடைந்துள்ளனர். இன்று அத்தரப்பு ஆழமாக வேரூன்றிவருகிறது
நம் இடதுசாரி- தாராளவாதச் சிந்தனையாளர்கள் இந்திய சிந்தனையில் உள்ள பொருள்முதல்வாதக்கூறுகளை முன்னெடுத்தவர்கள், இந்துமதத்தின் பல்வேறு இருண்ட பண்பாட்டுக்கூறுகளை வெளிப்படுத்தி மானுடநேயம் சார்ந்த மாற்றத்துக்கு வழிகோலியவர்கள், நவீன நோக்குகளை அறிமுகம் செய்து வரலாற்றாய்வை அறிவியல்முறைமைநோக்கி கொண்டுசென்றவர்கள் என்ற உண்மையும் இந்த அலையில் கூடவே அடித்துச் செல்லப்படுகிறது. இடதுசாரி – தாராளவாத வரலாற்றாய்வு பின்னகரும் இடத்தில் இன்று பொறுப்பான , ஆதாரபூர்வமான வரலாற்றெழுத்து வந்து அமரவில்லை. பழைமைவாத நோக்குள்ள வலதுசாரி வரலாறே எழுந்து வருகிறது. இன்னமும்கூட இடதுசாரிகள் -தாராளவாதிகள் தங்கள் பிழைகளை உணரவில்லை. மேலும் மூர்க்கமான எதிர்நிலைபாட்டை எடுத்து தங்கள் திரிபுகளை நியாயப்படுத்தவே முயல்கிறார்கள்.
அடிமைவணிகம் உச்சத்தில் இருந்தபோது தோட்டத்தொழிலுக்காகவும் கப்பல்பணிகளுக்காகவும் முக்கியமாக சுமைதூக்குவதற்காகவும் சித்தி மக்கள் கோவாவுக்கு கொண்டுவரப்பட்டனர். அவர்கள் போர்ச்சுக்கீசியர்களால் கத்தோலிக்க மதத்துக்கு மாற்றப்பட்டனர். ஆனால் பிடிவாதமாக அவர்கள் ஹலியால் சடங்குகளைச் செய்து வந்தனர். கோவா மதவிசாரணைகளின்போது இவர்கள் மிகப்பெரிய ஒடுக்குமுறையையும் சித்திரவதையையும் அனுபவித்தனர்.
கோவா மதவிசாரணைகளுக்குத் தப்ப மிகச்சிறந்த வழியாக இருந்தது காடுகள் வழியாக யெல்லாப்பூர்,சிர்சி பகுதிகளுக்குக் குடியேறுவது. மழைக்காலத்தில் அடர்காடுகள் வழியாக இங்கே வந்துவிடுவது சற்று கடினமானது என்றாலும் இயல்வதே. இங்கிருந்த மைசூர் அரசுகள் இம்மக்கள் காடுகளில் குடியேறுவதை ஆதரித்தன. காடுகளில் வேளாண்மைக்கு வாய்ப்பிருந்தது. பின்னர் அடிமைகள் விடுதலை செய்யப்பட்டபோது பலர் தங்கள் முன்னோடிகளுடன் வந்துசேர்ந்துகொள்ள சித்தி சமூகம் உருவானது.
சித்தி மக்கள் இன்று ஐம்பதாயிரம் பேர்கொண்ட சமூகம். இன்று இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். இஸ்லாமியர்களாக இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தேசப்பிரிவினையின்போது பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டனர். இந்து மையவழிபாட்டு முறைக்குள், இந்து சடங்குகளுக்குள் முற்றாக இணைந்துவிட்ட இவர்கள் பிற சாதியினருடனான திருமண உறவால் தங்கள் இன அடையாளத்தையும் வேகமாக இழந்து வருகிறார்கள். ஆனால் மூதாதை வழிபாடு மட்டும் இந்துச்சடங்குகளுடன் கலந்து ஒருவகை தனிச்சடங்காக நீடிக்கிறது
சித்தி இன மக்கள் பொருளியல் ரீதியாக இங்கே வலுவானவர்கள். காரணம் காப்பி பயிரிடுதல். பொருளியல் வளர்ச்சி அவர்களை நவீனமயமாக்குவதனால் இனக்குழு அடையாளங்கள் ஏதுமில்லை. செல்பேசிகளில் பேசியபடி இருசக்கர வண்டிகளில் செல்கிறார்கள். விதவிதமான கிராப்புகள், கிழிந்து தொங்கும் நவீன ஜீன்ஸ் ஆடைகள். ஆப்ரிக்க மொழி ஏதும் அவர்களிடமில்லை. வட்டாரக் கன்னட மொழி மட்டுமே. .சிலர் கொங்கணியும் பேசுகிறார்கள்.
பொட்டுபோட்டு பூவைத்த ஆப்ரிக்க முகமுள்ள பெண்கள் விந்தையான ஓர் உணர்வை உருவாக்குகிறார்கள். எதுமாறினாலும் மாறாதது இவர்களின் நுரைபோன்ற முகம். ஆனால் அச்சு அசலாக இதே தோற்றம் கொண்ட பலர் நம்மிடையே இருப்பது நினைவுக்கு வருகிறது. இவர்களின் கருமை மாநிறமாக ஆகத் தொடங்கியிருக்கிறதுவேட்டிகட்டிய ஆப்ரிக்கமுகமுள்ள பெரியவர் நெற்றியில் குங்குமப்பொட்டுடன் வருவதைப் பார்க்கையில் என் உறவினரிலேயே இதேபோன்ற தோற்றம்கொண்ட சிலரை நினைவுகூர்ந்தேன். ஏன், மலையாளக் கவிஞர் டி.பி.ராஜீவன் இவர்களில் ஒருவர் என எவரும் சொல்லிவிடமுடியும்.
சமீப காலம்வரைக்கும்கூட இங்கே பெரும்பாலானவர்களுக்கு இவர்கள் ஆப்ரிக்க வம்சாவளியினர் என தெரியாது. உள்ளூர்க்காரர்கள் இவர்களை இப்படி அடையாளம் காண்பது எண்பதுகளில் மானுடவியலாளர்கள் வந்து இவர்களை ஆவணப்படுத்தி தொலைக்காட்சியில் காட்சியாக்கியபின்னர்தான். இவர்களில் இருக்கும் பழங்குடி அம்சம் உண்மையில் மானுடவியலார்களால் தேடிக்கண்டடைந்து முதன்மைப்படுத்தப்படும் புனைவு. இவர்களின் புதியதலைமுறை கல்வி, வேலை ஆகியவற்றில் அந்த அடையாளங்களை இழந்து மையப்பெருக்கில் கலந்துவிட்டிருக்கிறது.
வழியில் ஒரு கடையில் டீ சாப்பிட்டோம். அருகே ஒரு பல்பொருள் கடை. அதில் கரியதுணியில் பெரிய கண்களும் பற்களும்கொண்ட ‘வூடு’ பாணி பொம்மைகள் விற்பனைக்காக தொங்குவதைக் கண்டேன். இம்மக்கள் அவற்றை வாங்கி வீடுகளில் தொங்கவிடுகிறார்கள். இம்மக்களைப்பார்த்து உள்ளூரில் பிறரும் அதை ஒரு தெய்வமாக ஆக்கி வீட்டுமுகப்புகளில் கண்ணேறுக்காகத் தொங்கவிடுகிறார்கள். இன்னும் சில தலைமுறைகளில் அது சிவகணங்களில் ஒன்றாக ஆகிவிடலாம்.
பெங்களூர் வந்துசேர இரவு ஒரு மணி. மறுநாள் செல்ல ரயில் இருக்கை கிடைத்தமையால் நிம்மதி. ஆனால் பேருந்துக்கான செலவு வீணாகிவிட்டது. இளமழை இருந்தது. நண்பர் ஏ.வி. மணிகண்டனின் வீட்டுக்குச் சென்று இரவு தங்கினேன். மறுநாள் எழுந்து இதை எழுதத் தொடனக்கும்போது அருவி அளவுக்கே சித்தி முகங்களும் நினைவுக்கு முக்கியமானதாகத் தெரிவது விந்தையாக இருந்தது.
https://www.incrediblegoa.in/opinion/everything-know-goa-inquisition-colonial-era-story/