வேட்டியை மடித்துக்கட்டியபடி “எத்தன தேங்காலே இருக்கு?” என்று ஆசான் கேட்டார். நான் எண்ணிமுடித்திருக்கவில்லை. “நாநூறுக்கு பக்கத்துல இருக்கும்னு தோணுது” என்றேன். அவர் அங்கிருந்து வந்து இடையில் கை வைத்து கண்சுழற்றிப் பார்த்து “ஐநூற்றி முப்பது இருக்கும்” என்றார். நான் குவியலைப் பார்த்துவிட்டு அவரை பார்த்தேன்.”கொஞ்சம் சின்ன தேங்காயாக்கும். எண்ணிப்பாத்துட்டு சொல்லு. அறுநூறு இருந்தா சவுரியம். அம்பது இருந்தா கூடுதல் நல்லது. கொஞ்சம் கூடுதலாட்டு பாலிருக்க்கிறது வேணும்” என்றார். “ஏன்?” என்றேன். “ஏலே,அடைய தொட்டு பாத்தல்ல, கொஞ்சம் கனமாட்டு விழுந்திருக்கு. பாலு குடிக்கும்” என்றபடி அவர் திரும்பிச் சென்றார்.
நானும் மணியனும் சேர்ந்து தேங்காய்களை எண்ணி முடித்தோம். மிகச்சரியாக அறுநூற்று முப்பது இருந்தது. “தலைக்குள்ள என்னலே வச்சிருக்காரு, கணக்கு போடுத மிசினா?” என்றார் மணியன். நான் “எல்லாத்தையும் கணக்காத்தான் பாக்காரு” என்றேன். “அதுவேறமாதிரி தலயாக்கும். இந்த அடுக்கள சோலின்னா என்ன நெனச்சே? அது கணக்குல்லா?” என்றார் மணியன் “கணக்குதான் ருசி. ஆனா கணக்கத்தாண்டுத ஒண்ணுண்டு அதாக்கும் தெய்வம். சாப்பாட்டிலே தெய்வம் வரணும்…அந்த ருசி வேற”
நான் ஆசான் ஒவ்வொரு பொருளாக நின்று பார்த்து ஆணைகளை இட்டுக்கொண்டு அப்பால் செல்வதைப் பார்த்தேன். அவர் எந்தப் பொருளையும் கையால் தொட்டு பார்ப்பதில்லை. கண்ணாலும் மூக்காலும் மட்டும்தான் மதிப்பிடுவது. தேங்காய் என்றால் இரண்டு தேங்காய்களை எடுத்து ஒன்றோடொன்று தட்டிப்பார்க்கச் சொல்லி,”மூப்பு குறவு ,பாலுக்கு எடுத்து வை” என்று சொல்வார். ஆனால் இரண்டு வெல்லக்கட்டிகளை ஒன்றுடன் ஒன்று தட்டச் சொல்லி “சுண்ணாம்பு சேத்திருக்கான். தூக்கி அந்தால வை. வேற வெல்லம் வேணும்னு குமரேசபிள்ளை கிட்ட போய் சொல்லு” என்று சொன்னபோது நான் திகைப்படைந்தேன்.
இரும்பு நிறத்தில் குவிக்கப்பட்டிருந்த வெல்ல மண்டைகளில் எனக்கு எந்தக் குறைபாடும் தெரியவில்லை. “சுண்ணாம்பா?” என்றேன். “சுண்ணாம்பு சேத்து வெல்லம் காச்சியிருக்கான். கொஞ்சம் வெளுத்து வரும், இறுகி நிக்கும். ஆனா பாகு கிண்டும்போது கொணத்த காட்டிப்போடும் ஆற்றுநோற்று பெத்தெடுத்த பிள்ளைக்காக்கும் மோட்டார்காரரு கல்யாணம் வெச்சிருக்காரு. விருந்தில பாயசமும் திருவிழாவுல ஆனையும் தலமூப்புணாக்கும் சொல்லு. வேற என்ன சரியா இருந்தாலும் இதுல கொற இருந்தா நெறவிருக்காது.போய்ச்சொல்லு” என்றார் ஆசான்.
நான் மணியனை உதவிக்கு அழைக்கலாமா என்று பார்த்தேன் ஆசான் அவனிடம் “டேய் நீ புளியம்வெறகு இருக்கான்னு பாரு. மூணில ஒண்ணு உலர்ந்த விறகு போதும், மிச்சவெறகெல்லாம் பச்சயா இருக்கணும் பாத்துக்கோ” என்றபின் என்னிடம் “போ போய்ச்சொல்லு” என்றார். மணியன் அந்தப்பக்கம் சென்றபோது நான் தயங்கியபடி கலவறைப் பகுதிக்குள் சென்றேன். அங்கு நின்றிருந்த சுப்பு பிள்ளை என்னிடம் “என்னலே?” என்றார் . “வெல்லத்த மாத்திக் கொண்டுவரணும்னு ஆசான் சொல்லுதாரு” என்றேன்.
அவர் முகம் சுருங்கியது “மாத்துததுக்கா ரூவா குடுத்து கொண்டு வந்து எறக்கியிருக்கு? உள்ளத வச்சு செஞ்சா போதும். போடே” என்றார். “அத நான் ஆசான்கிட்டச் சொல்ல முடியாது .நீங்க வேணுமானா அவர்ட்ட போய்ச் சொல்லுங்க” என்றேன். சுப்புபிள்ளை “முடியாதுன்னு நான் சொன்னேன்னு போய்ச்சொல்லு…போடா” என்றார். “உங்ககிட்ட சொல்ல ஆசான் சொல்லல. ஓனர்கிட்ட சொல்லவாக்கும் சொல்லி அனுப்பியிருக்காரு” என்றேன். “ஓனர்கிட்டயா? ஒனக்க வெல்லக் கணக்குக்குல்ல அங்க இருக்காரு மொதலாளி? செருப்ப கழட்டி அடிப்பாரு. போலே “என்று அவர் சொன்னார்.
நான் அவரை ஒரு முறை பார்த்துவிட்டு வீட்டுக்குள் நுழைய அவர் என் பின்னால் வந்து “எலே சொன்னாக்கேளுலே” என்றார். அவர் எதைப்பயப்படுகிறார் என்று எனக்கு புரிந்தது. “அப்ப நீராக்கும் வெல்லம் வாங்கினது , இல்லியா?”என்றேன். “நான் எங்க வாங்கினேன் ?நான் மொத்தமா …” என்றார் சுப்புபிள்ளை. பின்னர் சோர்ந்து “என்ன எழவாம் செய். அவன் குடுத்தான் நான் வாங்கிட்டு வந்தேன். எனக்கென்ன தெரியும்?” என்றார். நான் உள்ளே செல்ல அவர் “பிள்ளே லே நில்லுலே மக்கா” என பின்னால் வந்தார். அதற்குள் நான் பெண்களறைக்குள் நுழைந்துவிட்டேன்.
அங்கே பலவகையான வண்ணங்கள் அசைந்துகொண்டிருப்பதை ஒரே பார்வையில் பார்த்தேன். இத்தனை நிறங்களில் பட்டுப்புடவைகள் உண்டென்றும், இவ்வளவு நகைகளை பெண்கள் போடுவார்கள் என்றும் நான் எண்ணிப்பார்த்ததே இல்லை. இவ்வளவுக்கும் ஆசானுடன் கல்யாணச் சமையலுக்கு வரத்தொடங்கி மூன்றாண்டுகள் ஆகின்றன பதினெட்டு கல்யாணங்களுக்கு சமைத்திருக்கிறேன். ஆசானைக் கூப்பிடுவதென்றாலே முந்நூறு பவுனுக்கு மேல் நகைபோட்டு ஏழடுக்கு பந்தல்கட்டி பெண்ணைக் கட்டிக்கொடுப்பவர்களால்தான் முடியும்.
சுப்பு பிள்ளையின் மனைவி என்னை நோக்கி வந்து “என்னலே?” என்றாள். “மொதலாளிய பாக்கணும்” என்றேன். “மொதலாளிய இப்ப பாக்கமுடியாது. வக்கீலுக வந்திருக்காங்க. அங்க இருந்து பேசிட்டிருக்காரு” என்றாள். “வெல்லம் வேற வேணும். இந்த வெல்லத்துல சுண்ணாம்பு இருக்குன்னு ஆசான் சொல்லுதாரு” என்றேன். அவள் முகம் மாறியது. “இப்ப அதப்போய் சொல்லவேண்டாம் . நான் ஆருகிட்டாயாவது சொல்லி அத மாத்தித் தரச்சொல்லுதேன்” என்றாள்.
“இல்ல ஓனர் கிட்ட சொல்லணும்னு ஆசான் சொன்னாரு. அத நான் சொல்லணும்” என்றேன். ” இந்த எளவெடுத்தவன் என்ன செஞ்சு வெச்சிருக்கானோ. இது மொதலாளி காது வரைக்கும் போனா செருப்பாலே அடிப்பாரே. நீ நில்லு பிள்ள, நான் சரக்குக்காரன்கிட்ட பேசி எப்படியாவது நல்ல வெல்லம் கொண்டு வரச்சொல்லுதேன்” என்றாள். என் கையைப்பிடித்து “இரு… என்ன அவசரம். இந்தா ஒரு நிமிசம் ” என்றாள். எனக்கு என்ன செய்யவேண்டுமென்று தெரியவில்லை.
அவள் என் கையைப்பற்றி இழுத்து “உள்ள வா” என்றாள். “இல்லை” என்றேன் . “என்ன புதுப்பொண்ணு மாறி நாணம் காட்டுதே… உள்ள வா” என்று அழைத்துச்சென்றாள். “இரு” என்று சொல்லி நான் “வேண்டாம்” என்று தயங்கியபோது என்னைப்பிடித்து அங்கிருந்த ஒரு மரநாற்காலியில் அமரவைத்தாள். உள்ளே சென்று ஒரு தட்டில் ஒரு லட்டு பருப்புவடை எடுத்துக்கொண்டு வந்து நீட்டி “சாப்பிடு” என்றாள். “இல்ல. சாப்பிடல்ல”என்றேன். “ஏலே சாப்பிடுலே” என்று என் தலையைத் தட்டினாள்.
நான் லட்டை எடுத்து கடித்தபடி “வெல்லம் ஒண்ணாந்தரமா இருக்கணும். ஆசான ஆரும் ஏமாற்ற முடியாது” என்றேன். “நீ தின்னுட்டிரு. நான் இப்போ கடைக்காரன்கிட்ட சொல்லி வேற நல்ல வெல்லம் கொண்டு வர சொல்லுதேன்” என்றபடி அவள் வெளியே சென்றாள். அறைக்குள் நான் தனியாக ஆனேன். ஏதேதோ பொருட்கள் நிறைந்திருந்த அறை. பித்தளைப் பாத்திரங்கள், பலவகை மரப்பெட்டிகள். ஒரு பனைநார்க்கூடை நிறைய பூ. பன்னீர் மணம் வந்தது
நான் வடையைத் தின்றுகொண்டிருந்தபோது அறைக்குள் ஒரு பெண் வந்தாள். என்னைப்பார்த்து புருவம் சுளித்து “யாரு?” என்றாள். நான் எழுந்து நின்று “இல்ல, ஆசான், வெல்லம்…”என்றேன். “ஓ அரிவப்பு செட்டா?” என்றபின் “அம்மா இங்க வந்தாங்களா?” என்றாள். “அம்மாவா?” என்று கேட்டேன். “ஆமா எனக்க அம்மா” என்றாள். நான் “ஆரு ?”என்றபோது “ஏண்டி இங்க நிக்க?” என்று கேட்டுக்கொண்டு மாம்பழநிறப் பட்டுப்புடவையும் சிவப்புக்கல் வைத்த அட்டிகையும் அணிந்த நடுவயதுப் பெண்மணி உள்ளே வந்தாள் .
அந்தச்சின்னப்பெண் “உன்னதான் தேடிட்டிருந்தேன். அங்கே எல்லாரும் நீலா எங்கேன்னு கேக்கறாங்க” என்றாள்.அவள் தோளில் கைவைத்து “இது யாரு பையன்?” என்றாள். “நான் இங்க அரிவைப்புக்கு வந்தேன்…அடுக்களைல” என்றேன். “ஆரு அரிவைப்பு?” என்றாள். “ஆசான்” என்றேன். “ஆசான்னா ?” என்றபோது அவள் கண்கள் சற்று சுருங்கின. “வேலுஆசான். திற்பரப்புல நாகமூட்டு வீட்டுலே…” என்றேன்
அவள் முகம் ஏன் அந்த மாற்றத்தை அடைந்தது என்று எனக்குப்புரியவில்லை . “ஓ “என்றாள். பிறகு அந்தப்பெண்ணின் தோளில் தட்டி “அம்மா வந்திட்டிருக்கேன்னு சொல்லு போ” என்றாள். அவள் குஞ்சலம் வைத்த சடையை எடுத்து வீசி பின்னால் போட்டுக்கொண்டு பட்டுப்பாவாடைக்குள் தொடைகள் அசைய கொலுசுகள் ஒலிக்க உள்ளே சென்றாள்.
அந்த மாமி என்னிடம் “ஆசானுக்க மகனா நீ?” என்றாள். “இல்ல நான் ஆசானுக்க கூட வந்தவன்” என்றேன். “ஆசானுக்கு எத்தன பிள்ளையள்?” என்றாள் . “ஆசானுக்கு கல்யாணம் ஆகல்லியே” என்றேன். அவள் “கல்யாணம் ஆகல்லியா?” என்றாள். “ஆமாம். ஆசான் அனுமார் விரதம் உள்ள ஆளாக்கும். கல்யாணம் பண்ணிக்கல” என்றேன். “ஓ “என்றபின் “சரி சாப்பிடு” என்றாள். ஆனால் என் முன்னாலேயே அங்கிருந்த முக்காலியில் அமர்ந்தாள்.
அந்த ஆடையின் நுனியை அவள் இருகைகளாலும் ஏன் அப்படி கசக்கி பிரிக்கிறாள் என்று எனக்குத்தெரியவில்லை. பட்டுப்புடவையின் நுனி சிறிய குஞ்சலங்களாக முடிச்சிடப்பட்டிருந்தது அவள் அவற்றை பிரித்து எடுக்க விரும்புபவள் போலிருந்தாள். என் விழி அவள் விழியைச் சந்தித்தபோது புன்னகைத்தாள். “எப்ப வந்திங்க?” என்றாள். நான் வடையைத் தின்று முடித்து தட்டை எங்கு வைப்பது என்று தெரியாமல் தேடிக்கொண்டிருக்க அக்கேள்வியால் திடுக்கிட்டு “யாரு?” என்றேன். “நீங்க” என்றாள்.
“நாங்க இன்னிக்கு காலம்பற வந்தோம். சரக்கெல்லாம் எடுத்து வெச்சோம். ஆசான் இப்ப மத்தியான்னம்தான் வந்தார். எங்க வேன் நிக்கிது பாத்தேள்ல? ஸ்ரீசித்ரா நளபாகம், திற்பரப்புன்னு எழுதியிருக்கு” என்றேன். “ஆமாம்” என்று அவள் சொன்னாள். “மட்டடோர்” என்றேன். அந்த வார்த்தையை நினைவு வைத்துச் சொல்வது என் வழக்கம்.
சுப்பு பிள்ளையின் மனைவி உள்ளே வந்து “அந்த வெல்லத்த எடுத்துட்டுப் போயிட்டு நல்ல வெல்லம் இப்ப கொண்டு வருவாக. சொல்லியாச்சு .ஒனக்க ஆசான் அள்ளித்திங்கட்டும்” என்றாள். நான் தலையசைத்துவிட்டு வெளியே சென்றேன்.
மணியன் என்னிடம் வந்து “முக்காப்பங்கு பச்ச வெறகா இருக்கணும்னு சொல்லுதாரு .ஏம்லே?” என்றான். “ஈரவிறகு ரெண்டாம் அடுக்கு. அதுதான் நின்னு எரியும் . பச்சை வெறகு சருகு போல எரிஞ்சு போயிடும்ல?” என்றேன். “ஓ “என்றபின் அவன் என்னை ஓரக்கண்ணால் பார்த்து “அப்ப இதான் ஒனக்குத் தொழிலுன்னு நீ முடிவு பண்ணியாச்சு இல்ல?” என்றான். நான் “எனக்குப் படிப்பு வரல்ல” என்றேன். “திங்க வருதுல்ல?” என்றபடி மணியன் விறகை நோக்கிச் சென்றான்.
நான் ஆசானிடம் சென்று “இப்பவே வெல்லத்தை எடுத்துட்டுப்போக ஆளு வருதுன்னு சொன்னா” என்றேன். “ஆரு?” என்றார். “சுப்புப்பிள்ளையின் வீட்டுக்காரி” என்றேன். “அப்ப அவனுக்க வேலதானா இது? நாறப்பய. ஆயிரம் தடவ சொன்னாலும் கைய வெப்பானுங்க .எல்லாத்தையும் ஒரு தடவ பாக்கலேன்னா கெட்ட பேரு நமக்கு” என்றார். பின்னர் முருகேசனிடம் “ஏலே சேர் எடுத்துக்கொண்டு போடுலே” என்றார்.
ஆசான் வைப்பு அறையில் அமர்வதற்கென்று ஒரு நாடா நாற்காலி வைத்திருந்தார். எங்கு போனாலும் அதை அவரே வேனில் போட்டுக்கொண்டு வருவார். முருகேசன் அதைத் தூக்கிக்கொண்டு வந்து போட அதில் அமர்ந்து அதன் கைப்பிடிகள் மேல் காலைத்தூக்கி வைத்துக்கொண்டார். ஆசான் பொதுவாக எவரிடமும் பேசுவதில்லை. பேசினால் அது வசையும் திட்டும்தான். ஆசான் சிரித்து நான் பார்த்ததே இல்லை. “பூதகணமாக்கும். பண்டு சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம் நடந்தப்ப சமையல் செய்த பன்னிரண்டாயிரம் பூதகணங்களிலே ஒண்ணு. மண்ணிலே இப்டி பிறந்திருக்கு” என்று மணியன் சொல்வதுண்டு
மனோகரனும் சிவராமனும் முத்துசாமியுமாக மளிகைப் பொருட்களை ஆசான் பார்க்க தனித்தனியாக எடுத்து பிரித்து வைக்கத் தொடங்கினார்கள். அவர் அங்கிருந்து “தேங்காய்களை ஒடச்சு துருவு. பாலு எடுக்குது கொஞ்சம் பிந்திப்போதும். கறிகாய் வெட்டு முடிஞ்சாச்சான்னு பாத்துட்டு வா” என்று என்னிடம் சொன்னார்.
இதில் எதை முதலில் செய்ய வேண்டும் என்று எண்ணியபின் நான் கறிகாய் வெட்டும் இடத்திற்கு சென்றேன். ஊதா நிறத்தில் விளக்கொளியில் பளபளத்த கத்திரிக்காய்களும் பச்சை பூமுள் கொண்ட வெண்டைக்காய்களும் மொந்தைவாழைக்காய்களும் குவிக்கப்பட்டிருந்தன. கறிகாய் வெட்டுபவர்கள் தங்கள் நீண்ட கத்திகளுடன் பலகைகளை எடுத்து வைத்துக்கொண்டு அப்போதுதான் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் வெற்றிலைபோட்டுக்கொண்டிருந்தார்கள்
“வெட்டத் தொடங்கலியான்னு ஆசான் கேட்டார்” என்றேன் . “தொடங்கியாச்சுன்னு போய் சொல்லுலே” என்றார் நமச்சிவாயம். “இவனாக்கும் வாரிசு” என்றார் உமையொருபாகன். நான் அவர்களின் கண்களைத் தவிர்த்து தேங்காய்கள் குவிக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றேன்.மேலும் நூறு தேங்காய்கள் தனியாக கொண்டு வந்து மூட்டையில் வைக்கப்பட்டிருந்தன. அருணாச்சலமும் சண்முகமும் தேங்காய்களை உடைக்கத் தொடங்கியிருந்தார்கள். பெரிய குட்டுவம் தேங்காய்நீரைப் பிடிப்பதற்காக கொண்டு வைக்கப்பட்டிருந்தது.
முதல் தேங்காய் சிறிய ஓலைவெடி போல டப் என்று வெடித்து உடைந்து தண்ண்ணீர் கொட்டியபோது எப்போதும் போல ஒரு மெல்லிய கிளச்சியை நான் அடைந்தேன். அருணாச்சலம் தேங்காயை ஒருபோதும் ஒரு வெட்டுக்கு மேல் வெட்டியதில்லை. அது வெட்டுவது கூட அல்ல, அரிவாளால் மெல்ல முட்டுவதுதான். என்னால் மூன்று நான்கு முறை வெட்டாமல் தேங்காயை உடைக்க முடிந்ததில்லை. “ஒரு முட்டுல தேங்கா ஒடைக்கத் தெரியும்போதுதான் நீ சமையல்னா என்னன்னு தெரிஞ்சுக்கத் தொடங்குவே கேட்டியா ?”என்று அருணாச்சலம் சொல்வதுண்டு.
முருகேசன் “அதொண்ணும் பெரிய ராஜ வித்தையில்ல கேட்டுக்கோ. தேங்காய்க்குமேலே அந்த மடக்கிருக்குல்ல அதுக்கு மேல, வளைவுக்கு ஒத்த நடுக்குல, தட்டணும். ஓங்கி அடிக்கப்பிடாது. பக்கத்துல கத்தியக்கொண்டுபோய் பெலமாத் தட்டணும். ஆனா அதுல கையிலே நல்ல சக்தி இருக்கணும்” என்றான். ஆனால் என் கைகளுக்கு நடுக்கமில்லாத அந்த உறுதி வரவேயில்லை.
அருணாச்சலத்தின் கைகளில் தேங்காய்கள் எதையே கேட்டு வெடித்துச் சிரிப்பவை போல பிளந்து வெள்ளைப் பருப்பைக்காட்டி இரண்டாகி அப்பால் விழுந்துகொண்டிருந்தன. “தேஙகாவெள்ளம் குடிக்கிறயாலே?” என்று அருணாச்சலம் கேட்டான். நான் இல்லையென்று தலையசைத்தேன். “திருவலக்குற்றிகள் எவ்வளவு இருக்குன்னு பாரு” என்றான்.
தேங்காய்த் துருவிகளை நாங்களே கொண்டு வருவது வழக்கம். பெரும்பாலும் வீட்டுச் சமையலறைகளில் இருக்கும் தேங்காய்த் துருவிகளை விட அவை மூன்று மடங்கு பெரிதாக இருக்கும். அவை ஆண்களுக்கு உரியவை. வீட்டு சமையலறையிலிருக்கும் தேங்காய்த் துருவிகள் பெண்கள். சாக்கு மூட்டைக்குள்ளிருந்த தேங்காய்த் துருவிகளை எடுத்துப்பார்த்தேன். “பதினொண்ணு இருக்கு” என்றேன் “பத்தாதே. நாலஞ்சு அங்க விட்டுட்டு வந்திட்டம்போல. இங்க இருக்குத திருவலக்குற்றிகளிலே நாலஞ்சு எடுத்துட்டு வா” என்றான்
“இங்க பொம்புளத் துருவியில்லா இருக்கும்?” என்றேன். “போரும்லே. ஒரு நாலஞ்சு பேரு இருந்து துருவினாத்தான் சரியாகும் பாத்துக்கோ. அறுநூறு தேங்காவையும் துருவி எடுக்க வேண்டாமா ?”என்றான் அருணாச்சலம்.
மறுபடியும் நான் கலவறைக்குள் போனபோது சுப்பு பிள்ளை “இப்ப என்னலே, பெருங்காயத்துல பூனைப்பீ நாறுதோ ?” என்றார். “திருவலக்குற்றி வேணும்” என்றேன். “ஏன் சமைக்க்க வாறப்ப தேங்காத் துருவி கொண்டு வர மாட்டேளா? இனி செரைக்குதவன் வந்து கத்தி வேணும்னு நம்ம கிட்ட கேப்பான் போல இருக்கு” என்றார்.
நான் உள்ளே சென்ற போது அந்த அட்டிகையிட்ட மாமி உள்ளே வந்தாள் “என்னடே ?”என்றாள். “திருவலக்குற்றி வேணும்” என்றேன். “தேங்காத் துருவியா? இங்க இருக்குமாண்ணு பாக்கேன்” என்றபடி அவள் அடுக்களையை ஒட்டிய சாய்ப்புக்குள் நுழைந்தாள். அங்கு பூக்களை அள்ளி சிறிய பெட்டிகளில் வைத்துக்கொண்டிருந்த சுப்பு பிள்ளையின் மனைவியிடம் “தேங்காத்துருவி கேக்கான்” என்றாள். “திருவலக்குத்தியா? இங்க ஒண்ணு வேணும். வேற ரெண்டு கெடக்கு” என்றாள்.
ஒரு பனைநார் பெட்டியைத் திறந்து நான்கு திருவலக்குற்றிகளை எடுத்து வெளியே வைத்து “இது போதுமாலே ?”என்றாள். நான் அதன் வாய் அரத்தை தொட்டுப்பார்த்து “மழுங்கியிருக்கு” என்றேன். “இதுதான் இருக்கு” என்று அவள் சொன்னாள். மாமி என்னிடம் “அரம் வெச்சுத் தேச்சா செரியாயிடும்லே” என்றாள். எங்களிடம் எப்போதும் அரம் இருக்கும் என்பதை நினைவு வைத்து “ஆமா ” என்று சொல்லி அவற்றை எடுத்துக்கொண்டேன். தனித்தனியாக அவை சரிந்தன.
கீழே வைத்து சுற்றும் முற்றும் பார்த்து அங்கிருந்த வாழைத்தண்டை எடுத்து சேர்த்துக்கட்டி எடுத்துக்கொண்டேன். அப்போதும் ஒன்று உருவிச் சரிந்தது.”கொண்டா ,நான் எடுத்துக்கிடுதேன்” என்று அவள் சொன்னாள். “இல்லை” என்று நான் சொன்னேன். “கொண்டாலே” என்று அவள் சொல்லி அதை எடுத்துக்கொண்டு என்னுடன் வந்தாள்.
திருவலக்குற்றிகளைக் கொண்டு சென்று தேங்காய்ப்புரையில் வைத்தேன். அருணாச்சலம் “நாலுதானா கிட்டிச்சு?” என்றபின் அவளை அடையாளம் கண்டு கொண்டு “ஆரு அம்மிணியா? இங்கயா இருக்கீயள்?” என்றான் . அவள் “நான் காலம்பற வந்தேன்” என்று தாழ்ந்த குரலில் சொன்னாள்.
“மோட்டார்கார மொதலாளிக்கு எப்படி, சொந்தமா?” என்றான் அருணாச்சலம். “அவ்வோ வீட்டு வழி சொந்தம். அவ்வோ தங்கச்சிய இவுங்க மருமகனுக்குத்தான் குடுத்திருக்கு” என்றாள். “அப்படி வருதா? செரி…” என்று அருணாச்சலம் சொன்னான். “வரட்டா?” என்று அவள் தாழ்ந்த குரலில் கேட்டுவிட்டு திரும்பியபோது அருணாச்சலம் அவளுக்குப் பின்னால் “அங்க அடுப்பு பக்கத்தில இருக்காரு” என்றான்.
அவள் திரும்பி அவனை ஒருமுறைபார்த்துவிட்டு உள்ளே சென்றாள். நான் அருணாச்சலத்தை பார்க்க அவன் புன்னகைத்தான். அந்த மாமி சற்று பருத்து உருண்ட முகமும், வாழைத்தளிர்போல பளிச்சிடும் தோள்களூம் கொண்டிருந்தாள். நல்ல வெண்ணிறம். ஆகவே அவளுக்கு சற்றே பூனை மயிர் போல் மீசையிருப்பது தெரிந்தது. நன்றாக பூசியது போன்ற மார்பில் பொன்னால் வரையப்பட்டது போல அட்டிகை பதிந்திருந்தது.
முருகேசன் தாழ்ந்த குரலில் “என்ன நடை! ஆனை நடயில்ல! கஜராஜ விராஜிதம்னு சொல்லுவாகளே” என்றான். நான் அங்கிருப்பதை அருணாச்சலம் கண்ணால் காட்ட என்னை பார்த்து காவிப்பற்களால் சிரித்தான்
நான் அவளுக்குப் பின்னால் சென்றேன் அவள் அடுப்பு வரிசைக்கு செல்வதற்கு முன் தயங்கி நின்றாள். இடுப்பில் கைவைத்து பெருமூச்சுவிட்டாள். திரும்பிப் பார்த்துவிடுவாளோ என்று சந்தேகப்பட்டு நான் சற்று நின்று வலப்பக்கமாக திரும்பி வாழையிலைச் சுருள்கள் போடப்பட்டிருந்த இடத்தை அணுகி குனிந்து உருண்டு கிடந்த ஒன்றிரண்டு கட்டுகளைத் தூக்கி மேலே வைத்தேன்.
அவள் சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தாள். திரும்பிப் பார்க்கவில்லை. சூழலை உணர்ந்ததாகவே தெரியவில்லை. சிறிய வாசலினூடாக அப்பால் அடுக்களைப்புரையில் செங்கல் அடுக்கிக் அமைக்கப்பட்டிருந்த பெரிய களரியடுப்பு வரிசைகளை பார்த்துக்கொண்டிருந்தாள்.
என்ன பார்க்கிறாள் என்று நான் எட்டிப் பார்த்தேன். ஆசான் முதல் அடுப்பு அருகே நின்றிருந்தார். பாஸ்கரனும் கருணாகரனும் சாணிமெழுகப்பட்ட அடுப்பில் விறகை அடுக்கிக்கொண்டிருந்தார்கள். முதலில் சிற்றுருளியை வைத்து, அதில் நெய் ஊற்றி கொதிக்கவைத்து , பச்சை மிளகாய் நறுக்கல்களைப் போட்டு வறுத்து, வெட்டிய இஞ்சிவில்லைகளை போட்டு இஞ்சித் தொடுகறி வைப்பதுதான் வழக்கம். இஞ்சி தொட்டு எண்ணுக என்று சாஸ்திரம்.
பனைநார்க் கடவத்தில் பச்சைமிளகாயும் இஞ்சியும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு சிறு வெல்ல உருண்டை. இஞ்சிக்கறியில் வெல்லம் அளவோடு கலந்தால்தான் சுவை. நெய்டப்பாவை இருபக்கமும் கட்டப்பட்ட கயிறுகளில் பற்றித்தூக்கியபடி குமாரும் மாதேவனும் கொண்டு வந்து வைத்தார்கள். ஆசான் குனிந்து நெய்யை ஒருமுறை பார்த்தார். சற்று மஞ்சள் நிறமான மணல் போல தெரிந்தது.
விறகுகளை சரியாக அடுக்கிவிட்டு பாஸ்கரன் ஆசானைப்பார்க்க ஆசான் சிறிய கரண்டியால் நெய்யை மெல்லத் தோண்டி எடுத்து விறகின்மேல் வைத்தார். கரண்டி நெய்ப்பரப்பை வருடிச் சென்றதை அங்கிருந்து பார்த்தபோதே எனக்குப் புல்லரித்தது. அந்த மென்மையான குழியைப்பார்க்கப் பார்க்க உள்ளம் குழைந்தபடியே வந்தது. ஆசான் நெய்யையோ வெண்ணெயையோ அள்ளும்போது மிக மெல்ல, இறகால் வருடி எடுப்பது போலத் தோன்றும்.
குமரேசன் பித்தளை அகல் விளக்கில் அகல் சுடர் கொண்டு வந்து ஆசான் அருகே நீட்டினான். அவர்கள் அவரை மறைக்க அவள் அறியாமல் நடையை விட்டு உள்ளே சென்றபோது கைகள் தாழ கொத்தாக அணிந்திருந்த தங்க வளையல்கள் ஒன்றோடொன்று மோதி விழுந்தன. அந்த ஓசைகேட்டு ஆசான் திரும்பி அவளைப்பார்த்தார். வாய் சற்றே திறந்து கண்கள் நிலைத்தன. பின்னர் திரும்பி குமரேசன் கையிலிருந்த சுடரை தொட்டு “அம்மே, மகாமாயே, தேவி!” என்று சொல்லி வணங்கினார்
மெல்லிய கைநடுக்கத்துடன் குமரேசனின் தட்டில் இருந்த சூடத்திலிருந்து இரண்டு மூன்று வில்லைகளை எடுத்தார். நெய் வைக்கப்பட்ட விறகின் அடியில் சூடத்தை வைத்து ஒரு சூடத்தை கொளுத்தி உள்ளே வைத்தார் .அவை திக்கென்று பற்றிக்கொள்ள நெய் அதை அள்ளி தழலாக மாற்றி மேலே செலுத்தியது .இளநீல நிறத்தில் எழுந்த சுடர் ருசி கண்ட நாக்கு போல வளைந்து நெளிந்தது.
ஆசான் உருளியைத்தூக்கி அடுப்பின்மேல் வைக்க குமரேசனும் பாஸ்கரனும் கையால் வாய் பொத்தி குரவையோசையிட்டனர். ஆசான் உருளியில் மூன்று அகப்பை நெய்யை குழைவாக அள்ளி மெல்லக் கவிழ்த்து விட்டார். அது உருகி உருளிக்குள் ஓடித்தத்தளித்து கரையத்தொடங்கியதும் அவர் திரும்பிப் பார்க்க தட்டில் சீராக நறுக்கப்பட்ட பச்சை மிளகாயை எடுத்துக்கொண்டுவந்து பாஸ்கரன் நின்றான். அவர் இரண்டு முறை கையால் அள்ளி சுறுசுறுவென்று கொதித்து வெடித்துக்கொண்டிருந்த நெய்யில் பச்சை மிளகாய்களைப்போட்டார். கைகூப்பி “தாயே! தேவீ!”என்றபின் பெருமூச்சுடன் அவர்களிடம் கைகாட்டிவிட்டு திரும்பி தன் நாற்காலியை நோக்கி சென்றார்.
பாஸ்கரன் பித்தளைக்கரண்டியால் பச்சைமிளகாயை புரட்டத் தொடங்கினான். நெய்யில் புரண்ட பச்சை மிளகாய் அடுக்களை முழுக்க மணத்தை நிரப்பியது. முதல் அடுப்பிலிருந்து நெருப்பெடுத்து அடுத்த அடுப்புகளை பற்றவைக்கத் தொடங்கினார்கள். முதலில் தொடுகறிகள்தான். நார்த்தங்காய், நெல்லிக்காய், புளிச்சிக்காய் என ஏழு தொடுகறிகள். அதன் பிறகு வற்றக்குழம்புகள், பயறு பருப்பிட்ட கூட்டுகறிகள். நள்ளிரவில் தான் சாம்பார். தேங்காய் அரைத்த குழம்புகள் பின்னிரவில். விடியும்போது பிரதமனுக்கான உருளிகள் அடுப்பிலேறும்.
பிரதமன் கொதித்துச் சுண்டிய உருளிகள் இறக்கி வைக்கப்பட்ட பிறகு அதே அடுப்பில் நிலவாய்களை ஏற்றி வைத்து விறகுகளை முற்றாக எடுத்துவிடுவார்கள். அதுவரை எரிந்த அடுப்புகளின் கனலில் உருளித்தண்ணீர் பார்த்து நிற்கவே கொப்பளிக்கத் தொடங்கும் .அரிசியை போட்டு மூடி சற்று நேரத்திலேயே சோறு வெந்து பொங்கி நுரை போல நிலவாய்க்கு வெளியே மறிந்து நிற்கும். சல்லரிகளால் கோரி பாயில் குவித்து நீவி சீர்படுத்தி மேலே வாழை இலை அடுக்கி அதற்கு மேல் பாய் மூடிப்போட்டால் பந்திக்கு பாய் போடும் வரை உமித்தீ போல உள்ளிருந்து வெந்துகொண்டே இருக்கும்.
அடுக்களையில் முதலில் எரிந்து நிறைவது உப்புபுளியுடன் இணைந்த தொடுகறிகளின் மணம். தேங்காயும் பருப்பும் எழுப்பும் மணங்கள் அதன்பின்பு. அவற்றை மீறி நிறையும் பாயசத்தின் முதல் மணம் எழும்போது பிற மணங்கள் அனைத்தும் விலகும். உருகும் வெல்லமும் சுண்டிய தேங்காய்ப்பாலும் வெந்துக்கனிந்த பச்சரிசி அடையும் இணைந்து எழும் அந்த மணம் பித்தெழச் செய்வது. அடுக்களையில் வெவ்வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் அமைதியாகிவிடுவார்கள். அம்மன்கோயிலில் நள்ளிரவு பூசையில் உறுமியும் மகுடமும் முழவும் கைமணியும் ஒலித்துக்கொண்டே இருக்க திடீரென்று பூசாரியில் தேவி எழுவதைப்போல. உறுமலும் நடுக்கமும் எழுவதற்குள்ளாகவே விழிகள் மாறிவிட்டிருக்கும்.
அவள் ஆசான் அருகே சென்று நின்றாள். வளையோசை எழுந்தாது. ஆசான் இயல்பாகத் திரும்பிப்பார்த்தார். “இங்கதான் இருக்கியன்னு சொன்னாக” என்றாள். ஆசான் அவளைப் பார்க்காமல் “ஆமாம்” என்றார். “நல்லாருக்கியா?” என்று கேட்டபடி திரும்பி அப்பால் நின்ற பாஸ்கரனிடம் கைகாட்டினார். அவன் வெற்றிலை சுருளை எடுத்துக்கொண்டு நீட்ட அதை வாங்கி வாய்க்குள் அடக்கியபடி “வீட்டுக்காரரெல்லாம் வந்திருக்காகளா? என்றார். “எல்லாரும் உண்டு. பையன் மெட்ராஸுல படிக்கிறான். அவன் வரல. மகள கூட்டிட்டு வந்திருக்கேன்” என்றாள்
அவர் ஒன்றும் சொல்லவில்லை. “அவ்வோ வந்திருக்கா. அவுங்க தம்பி, அண்ணா ,அம்மா எல்லாரும் வந்திருக்காக” என்று அவளே சொன்னாள். “ஆமாம் சொந்தம்னு கேள்விப்பட்டேன் “என்றார் ஆசான். “நல்ல சொந்தந்தான்” என்றாள் அவள். “பாத்து கொஞ்சகாலம் இருக்கும்ல?” என்று அவர் கேட்டார். “ஆமாம், அந்தப்பக்கம் ஒண்ணும் வாரதில்லயே? “என்று அவள் சொன்னாள். “அங்க என்ன வாரதுக்கு? நாகர்கோயில் பக்கம் நம்ம சமையலுக்கு ருசி கெடயாதுல்லா? நம்ம ஏரியா இங்க கேரளாப் பக்கமாக்கும். நம்ம சமையலைத் தின்னா மட்டை அரிசிச்சோறு, தேங்காக் குழம்புன்னு சொல்லி பாண்டிக்காரன் குத்தம் சொல்லுதான்” என்றார் ஆசான்
“இதுக்க ருசி ஒண்ணு வேறல்லா?” என்றாள். ஆசான் ஒன்றும் சொல்லவில்லை. “உள்ளது சொன்னா நான் மனசறிஞ்ச நல்ல விருந்துஸத்யை சாப்பிட்டு பதினஞ்சு வருஷமாச்சு” என்றாள். “ஏன் ?அங்க ஒண்ணும் போறதில்லயா?” என்றார். “அங்க வேற சமையலுல்லா?” என்றாள். ஆசான் “ஆமா, அங்க பிரதமன் இல்ல. பருப்புப் பாயசம்தான் வெப்பாக. நமக்கிங்க எல்லாம் தேங்காயிலே” என்றார். “ஆமா, தேங்கா இல்லாம என்ன ருசி?” என்றாள்.
ஆசான் அவளை ஏறிட்டு நோக்கி “உள்ளதச் சொன்னா ருசீன்னு அப்படி ஒண்ணும் இல்ல. மனசுக்க பழக்கமாக்கும் ருசி” என்றார். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “நினைச்சா மனசைப் பழக்கி எடுக்கலாம். பழக்கி எடுக்கணும்னு நெனக்கணும் .அல்லாம ஒத்த ருசியில நின்னா பலதும் நமக்கு இல்லாம ஆகும். இந்த உலகம் ருசிகள் கொண்டு நிறைஞ்சதாக்கும். இந்தா மாவேலிக்கரையிலிருந்து தக்கலை வரைக்கும் தெக்கந்திருவிதாங்கூர். இந்த ஏரியாக்குள்ள மட்டும்தான் நம்ம சமையலுக்கு மதிப்பு. ஒலகம் விரிஞ்சு கெடக்குல்லா! அமெரிக்காகாரன் என்னத்தச் சாப்புடுகான். ஆப்பிரிக்கால என்னத்த திங்கான்! எல்லாரும் ருசிச்சுதான் திங்குதாக”
“அதனால் எல்லா ருசியும் நம்ம ருசியாயிடாதில்ல?” என்று அவள் சொன்னாள். “எல்லா ருசியும் ருசிதான் .நாக்க மனசு பிடிச்சு நடத்தப்படாது. நாக்க அதுபாட்டுக்கு விட்டா அது எல்லா ருசியும் கண்டுகிடும்” என்றார் ஆசான். அவள் “எல்லாம் சொல்ல நல்லாத்தான் இருக்கு” என்றாள். “ஏன்?” என்று அவர் கேட்டார். “ஒண்ணுமில்ல” என்றபின் “நான் வாரேன்” என்றாள். “செரி ,எனக்கு சோலி கெடக்கு” என்று ஆசான் சொன்னார். அவள் அப்படியே நின்றாள். “செரி, உனக்க மகளுக்க கல்யாணத்துக்கு வாறேன். மணக்க மணக்க பிரதமன் வச்சு வெளம்புதேன்… என்ன?” என்றார் ஆசான். அவள் ஒன்றும் சொல்லாமல் திரும்பிச்சென்றாள்
ஆசான் திரும்பியபோது என்னைப் பார்த்தார். “ஏலே கறிகாய் வெட்டு ஆச்சான்னு போய் பாத்துட்டு வா. தேங்கா துருவத்தொடங்கணும்” என்றார். அவள் போவதை பார்த்தபின் நான் ஆசானிடம் “அவுகளுக்கு ஒரு பொண்ணு இருக்கா” என்றேன். “ஏன் பொறத்தால மோந்துட்டு போனியோ?” என்றார் ஆசான் .நான் இல்லை என்று தலைய்சைத்தபின் காய்கறி வெட்டுமிடத்துக்குச் சென்றேன்
நுழையும்போதே வெட்டப்பட்ட காய்கறிகளின் கலவையான கறைமணம் என்னை அறைந்தது. வெண்டைக்காய்களும் கத்திரிக்காய்களும் சீரான துண்டுகளாக குவிந்துகொண்டிருர்ந்தன. கறிகாய் வெட்டுபவர்கள் கைகள் தங்கள் இயல்பில் வெட்டிக்கொண்டிருக்க மாறி மாறி கேலி செய்து விளையாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தார்கள். “இவரு ஆரு, அரிவைப்பு ஆசானுக்க வாலாவே? மேற்பார்வை போட வந்திருக்காரு?” என்றார் மாதவன் பாட்டா. நான் அவர்கள் பேசிக்கொண்டதை முற்றாகத் தவிர்த்து அமர்ந்து காய்கறிகளைப் பார்த்தேன். ஒருமணி நேரத்திற்குள் அனைத்தும் முடிந்துவிடும் என்று தோன்றியது.
தேங்காய் துருவுமிடத்திற்கு வந்தபோது வாழையிலைகள் பரப்பப்பட்டு துருவிகளை வைத்து அவற்றின் மேல் ஒற்றைக்கால் மடித்து அமர்ந்து துருவிக்கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கான புறாக்கள் குறுகும் ஒலியில் தேங்காய்கள் வெள்ளைநுரைபோல மாறி குவிந்தன. நானும் ஒரு துருவியை எடுத்து அமர்ந்தேன். தேங்காய் துருவுவதற்கு ஓரளவு கற்றுக்கொண்டிருந்தேன். உடைந்த பருப்பின் கூரிய மடிப்பு முனை ஒன்றை துருவியின் பல்லில் வைத்து மூன்று முறை சுரண்டியபின் சுழற்றி சுழற்றி வருடி எடுக்கவேண்டும். அதற்கொரு தாளம் அமைந்துவிட்டதென்றால் மிக எளிதாக வேலை நிகழும்.
தாளம்தான் எந்த வேலையையும் மிகச்சரியாக நிகழ்த்துகிறது தாளம் சரியாக அமைய வேண்டுமென்றால் அந்த தாளத்தை பற்றி நினைக்கவே கூடாது. கைகளிலும் கண்களிலும் எல்லாம் தாளம் இருக்கிறது. தாளத்திற்குள் நம் மனம் போனால்தான் தாளம் தவறுகிறது .வேகமாகத் தேங்காய் துருவுகையில் ஒருமுறை தாளம் தவறினால் போதும், துருவியின் முள் கையில் பாய்ந்துவிடும். அரிவாள்மணை பாய்வதைவிட அது வலிகொண்டது. ஆறுவதற்கும் நெடுநாள் ஆகும். அதற்கு பூனையிடம் அடி வாங்குவதென்று சமையல்கட்டில் சொல்வார்கள். “பூனை பிராண்டியாச்சா ?ஒரு பத்து நாளைக்கு நல்ல நேரம் போகும்” என்பார்கள். பூனைக்கால் அடியின் தழும்பு எப்போதுமே போகாது.
வாழையிலையில் குவிந்த தேங்காய்த் துருவலை அள்ளி பனங்கடவத்தில் கொண்டு சென்று அப்பால் வைத்தோம். நாகுமாமாவும் பிறரும் பெரிய ஆட்டுக்கல்களில் அதைப்போட்டு அரைத்துக்கொண்டிருந்தார்கள். “மலையாளத்து சமையல்னா செக்கில வெச்சு தேங்கா அரைக்கணும்னு எங்க ஊர்ல சொல்வாங்க” என்றார் மணிமாமா. “இங்க எல்லாத்துலயும் தேங்கால்லா?” என்றான் குமாரன். “நீ என்னத்த கண்டே? மூலையம்வீட்டு பப்புத் தம்பி மகளுக்க கல்யாணத்தில் பாலுபுழிஞ்ச தேங்காச் சண்டு இருக்கே அது நாப்பது கடவமாக்கும். கொண்டு வந்து வாழைக்க அடியிலே குழியெடுத்து பொதச்சாக” என்றான் உண்ணாமுலை. ” மாட்டுக்கு குடுக்கலாமே?” என்றான் குமார். “ஏலே, அம்பிடு சண்டிய தின்னா மாடு பீச்சி அடிக்கும்ல” என்றார் உண்ணாமுலை
“நம்ம சமையலிலே தேங்காயாக்கும் எல்லாக்கறியும். ஆனா தேங்கா அதுக்க தனிக் கொணத்த அடையுதது நல்ல பிரதமன்ல நெய்யும் வெல்லமுமா நிண்ணு முறுகி வரும்போதாக்கும்” என்றார் சண்முகம்.”பிரதமன்னா அடைப்பிரதமன்தான். மத்த பிரதமன்லாம் அடைப்பிரதமனை நெனச்சுகிட்டு குடிக்கியது” என்றார் உண்ணாமுலை. “ஏன் பிரதமன்னு சொல்லுதாக? சொல்லு பாப்பம்” நான் “அதாக்கும் ஃபஸ்டு…” என்றேன். “ஆனால் அதையில்லா கடைசியிலே வெளம்புதாக?”என்றார். “கோயிலிலே கடைசியிலேதானே பிரதான சாமிக்கு பூசை?” என்றேன். “லே, பயலுக்கு அறிவுண்டுலே” என்ற உண்ணாமுலை “ஆயிரம் ருசியுண்டானாலும் ஒண்ணாம் ருசி பிரதமனாக்கும். நாட்டுக்குப் பிரதம மந்திரிமாதிரி” என்றான்.
“இப்போ நாகர்கோயில்ல எல்லாம் அடைய பாக்கெட்டிலே விக்குதான். கிளிச்சு தேங்காப்பால்ல இட்டு வேவிச்சு பாயசம் வெக்கலாம்” என்றான் குமார். “அது முழுக்க மைதால்லா? மழுக்கு மழுக்குன்னு இருக்கும். நல்ல அடைன்னா நயம் வெள்ளைப் பச்சரிசியில செய்யணும். ஆசான் ஒரு நாளைக்கும் அடைய வெலைக்கு வாங்குனது கெடயாது. அதுக்குண்டான மதிப்பு ஆசானுக்க பாயசத்துக்கு உண்டு” என்றார் சண்முகம்.
நான் “ஆசான் வீட்ல ஆளு வெச்சு அடை செய்யுதாரு” என்றேன். “நீ செய்யுதியோ ?”என்றார் சண்முகம். “ஆமாம் நாந்தான் நேத்தைக்கி அடை செய்ய கூட நிண்ணேன்” என்றேன். “எப்டிச் செய்வ?”என்று குமரேசன் கேட்டான். ஆசான் அடையை மட்டும் அவரேதான் செய்வார். நான் “பச்சரிசி மாவரச்சு வாழயிலையில் பரப்பி அத ஆவியிலே வேவிச்சு வெயில்ல போட்டு உணத்தி எடுக்காரு” என்றேன். “வெயில்ல போடணுமோ? ” என்றான் குமார். ” இல்லல்ல, நல்ல வெய்யில்ல போடப்படாது . காஞ்சா ஒடிஞ்சிரும்” என்றேன். “ஆனா புளிச்சிரப்பிடாது. ஒரு நாள்ல உலரணும் .இல்லேனா புளிச்சிரும்.”
” மெனக்கெட்ட வேல. அதுக்கு பேசாம பாக்கெட்டு அடைய வாங்கிப்போடலாம். இங்க பாயசம் குடிக்குததிலே ஆருக்கு வித்தியாசம் தெரியுது?” என்றார் சண்முகம். “அப்டி நினைக்கிறதனாலத்தான் நீரு இங்க தேங்கா அரைக்கீரு. அவரு அங்க சேரிலே உக்காந்திருக்காரு” என்றான் மணி. “ஆசான் நாவடக்கம் உள்ளவராக்கும். ஆயிரம் பிரதமன் வச்சிருப்பாரா? இன்னைக்குவரை ஒரு துள்ளி பாயசத்த நாக்கிலே விட்டு நான் பாத்ததில்லை”.நான் “அவருக்கு இனிப்பு தெரியும்” என்றேன்.
“பாயசம் கனிஞ்சு வாற நேரம் இருக்கே. அப்ப மட்டுமாக்கும் நான் ஆசானை குருவேண்ணு நினைச்சு கும்பிடுதது. இல்லேன்னா இந்த மூக்கில தீ வச்சிருக்கிற ஆளுகிட்ட எவன் நிண்ணு வேலை செய்வான்? ஒரு நல்ல வார்த்த உண்டா? ஒரு புஞ்சிரிப்பு உண்டா? கல்லுமூஞ்சியில்லா?” என்றார் சண்முகம்.
நான் தேங்காய் பிழிந்து முடித்த செய்தியை ஆசானிடம் சொல்வதற்காகச் சென்றேன். அவியல் மீது தேங்காயெண்ணை ஊற்றிக்கொண்டிருந்த நாராயணன் “பதம் வந்தாச்சான்னு போய்க் கேளுல” என்றார். நான் “பதம் வரலேண்ணா அவரே சொல்லுவார். மணம் போரும் அவருக்கு” என்றேன். அவியலை நீண்ட மரப்பிடி வைத்த சட்டுவத்தால் மெல்லக்கிளறி மேலும் சற்று தேங்காயெண்ணையை விட்டார். ஆசான் அங்கிருந்தே கனைக்கும் ஓசை எழுப்பினார். ‘பாத்தேளா” என்றேன். “அங்க இருந்து கிட்டு எல்லாருசியையும் பாக்காரு” என்றேன். “நாக்குதொடாம என்னத்த ருசிய அறிஞ்சாரு” என்றான் பக்கத்தில் நின்றிருந்த முருகன். அவன் கூட்டுகறியை கிண்டிக்கொண்டிருந்தான்.
எனக்கு வலப்பக்கம் நின்றிருந்த சுகுமார் அண்ணன் துவரனை புரட்டியபடி “அவர் ஏன் ஒண்ணயும் வாயில் வைக்கிறதில்ல?” என்றார். “வாயில வெச்சு ருசிபாத்தா ஒரு ருசி நாக்கிலே நிக்கும். வேற ஒரு ருசியும் தெரியாம ஆயிரும்…” என்றேன். “திங்கறவணுக்கு ருசியில்லன்னாக்கும் சொல்லு” என்றேன். “அப்ப நீ திங்குதில்லயா?” என்றார் மாணிக்கம். “நான் பாயசம் மட்டும் குடிப்பேன்” என்றேன். நாராயணன் “அது சரி. அப்ப பாயசம்குடிக்குத வயசாக்கும் இப்ப பயலுக்கு” என்றார்
அவர்கள் கூவிச் சிரித்தார்கள். ஆசான் கூடத்திலிருக்கும்போதே கூட எதை வேண்டுமாம்னாலும் பேசிக்கொள்ளலாம். ஆசான் காதே இல்லாதவர் .வாயும் கூடத்தான். பெரும்பாலும் கனைப்போசைகள்தான். நான் மீண்டும் தேங்காய்ப்பால் பிழியுமிடத்துக்குச் சென்றேன். புதியவேட்டியில் அரைத்த தேங்காய்விழுதை அள்ளி குவித்து இரு முனையையும் பிடித்து இறுக முறுக்கி பால்பிழிந்துகொண்டிருந்தனர்.
மீண்டும் அடுக்களைக்கே வந்தேன். அவியலும் கறிகளும் இறக்கி வைக்கப்பட்டன. நிலவாய்களின் காதுகளுக்குள் செலுத்தப்பட்ட மூங்கில்களில் கயிறுகட்டி இருபுறமும் பற்றித் தூக்கி கொண்டு சென்று வைப்பறைகளில் மணல்குவித்த மணைகளின் மேல் அமர்த்தி மேலே வெண்கலத்தாலங்களால் மூடினார்கள். குழம்புகளை இறக்குவதற்கு ஒரு பக்குவம் இருக்கிறது என்று சமையல் வேலைக்கு வந்து ஓராண்டுக்கு பின்தான் நான் அறிந்துகொண்டேன். நிலவாய்களில் அவை மேலும் சற்று நேரம் கொதித்துக்கொண்டிருக்கும். நன்றாகக்கொதித்து நாக்கில் சுவை அறிந்த பின் இறக்கி வைத்தால் மேலும் கொதித்து காய்கள் குழைந்து, பருப்பு வற்றி சுவை மாறிவிடும்.
“குழம்ப எறக்கி வைக்கிறது பன்னிரண்டு வயசு குட்டிய சினேகிக்கிறது மாதிரி. சினேகம் முத்தி கல்யாணம் வாறப்ப குட்டி பக்குவம் ஆவா” என்று முருகேசன் என்னிடம் சொன்னான். நான் பேசாமலிருக்க அவன் சிரித்து “பயலுக்கு நாணம்”என்றான். “இந்த உலகத்துல உள்ள முழுக்காரியங்களையும் அடுக்களைல நின்னு கத்துக்கலாம் பாத்துக்கோ .அண்ணன் கேக்கும்போ வெத்தில பாக்கு பீடி பொகையில வாங்கிட்டு வா .ஒண்ணொண்ணா சொல்ல்லித்தாரேன்” என்றான் முருகேசன்.
பிரதமனுக்கான பெரிய உருளியை நால்வர் தூக்கிக்கொண்டு வந்தனர். அலைகளின் மேல் படகு போல அது மெல்ல அசைந்தபடி வந்தது. ஆசான் அக்கறையில்லாத கண்களால் அதை பார்த்தார். கனல் நன்றாக இழுத்து தாழ்த்தப்பட்ட அடுப்பில் அதை இறக்கி வைத்தனர். ஆசான் அங்கிருந்து கைசுட்டி மேற்கு மூலையை ஒரு இஞ்ச் மேலே தூக்கும்படி கைகாட்டினார். நான் பார்த்தபோது எல்லாம் சரியாக அமைந்திருப்பது போலதான் தெரிந்தது. ஆனால் மிக மெல்ல மேற்கு மூலையை தூக்கியபோது மேலும் சரியாவதைப் பார்க்க முடிந்தது.
தேங்காய்ப்பால் நிறைக்கப்பட்ட தகரப் பீப்பாய்களை காவடி போல கட்டி தோளிலேற்றி கொண்டு வந்தார்கள். அவற்றை உருளியில் ஊற்றி நிறைத்த போது எப்போதுமே நான் அடையும் அந்த வார்த்தை மனதில் எழுந்தது, பாற்கடல். யாராவது அதை சொல்லவும் செய்வார்கள். “போரும்லே, இன்னும் விட்டா பெருமாள் வந்து படுத்துக்கெடக்க போறார்” என்று குமரேசன் சொன்னார். “அவரு படுக்கிறதுக்கு பாம்பையில்லா கூட்டிட்டு வருவாரு” என்று முருகன் சொன்னான். அவர்கள் சிரித்தார்கள். எப்போதுமே பாயசம் சமைக்கையில் ஓர் உல்லாசம் உருவாகிவிடுவதைக் கண்டிருக்கிறேன்.
தேங்காய்ப்பால் கொதித்து சுண்டத்தொடங்கியது .பசும்பால் கொதித்து சுண்டும்போது மெல்லிய மாமிச மணமும் உடனிருக்கும். தேங்காய்ப்பால் கொதிக்கும்போது இனிய தழைமணம். பின்னர் நெய்யுருகும் மணம். மேலும் நுண்மையான இனிப்புமணம் .அதை வாயில் விட்டால் இனிக்கும் என்று தோன்றும். ஆனல் சற்று புளிப்பும் நாவில் ஒட்டும் எண்ணைத்தன்மையும் தான் அதிலிருக்கும். மேலும் சுண்டியபின் அதை எடுத்து வெல்லம்போட்டு காப்பி போட்டு குடிப்பது முருகேசன் அண்ணாவின் வழக்கம்.
அடையை வெல்லப்பாகில் ஊறவைத்திருந்தனர். அவற்றை சல்லரிகளில் அள்ளி கொதிக்கும் தேங்காய்ப் பாலில் கொட்டி மெதுவாக இளக்கி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமலாக்கி தேங்காய்ப்பாலை வற்றச் செய்தார்கள். வற்ற வற்ற மேலும் தேங்காய்ப்பால் விட்டனர். வெல்லத்தை துணிபோட்டு மூடி ஆட்டுக்கல் குழவியால் அறைந்து உடைத்து சிறுதுண்டுகளாக்கி இன்னொரு உருளியிலிட்டு சற்றே நீரூற்றி கொதிக்க வைத்து நன்றாகக் கிண்டி பாகாக்கினர். அகப்பைகளால் மேலிருந்து பாகை வழித்தெடுத்து பெரிய பித்தளை சருவத்தில் நிறைத்தனர். வீடுகளில் பிரதமன் செய்யும்போது நேராகவே வெல்லத்தை தேங்காய்ப்பாலில் விடுவதுண்டு. ஆனால் பெரிய அளவில் வெல்லம் பாகாக்கும்போது அடியில் தங்கும் ஊறலில் நுண்ணிய மணல்பரு போல கசடு இருப்பதையும் அதன் சுவை முற்றிலும் வேறொன்றாக இருப்பதையும் பார்த்தபின் நான் வீட்டில் சமைக்கும்போதும் பாகு காய்ச்சாமல் இருப்பதில்லை.
தேங்காய்ப்பால் சுண்டி வெல்லப்பாகுடன் கலந்து இறுகி மெல்லிய படலமென்றாகி குமிழிகள் கொப்பளித்து உடைந்து தெறித்தது. அடியில் பிடிக்காமல் கிளறிக்கொண்டே இருந்தனர் முருகேசனும் குமரண்ணனும். அதுவரை பால்சுண்டும் மணமாகவும் வெல்லம் முறுகும் மணமாகவும் இருந்தது மெல்ல பாயசத்தின் மணத்தை நோக்கிச் செல்லத்தொங்கியது. ஆனால் அது பிரதமனின் தனிமணம் அல்ல.
அப்பால் சிற்றுருளியை அடுப்பில் வைத்து நெய்யுருளைகளை போட்டு உருக்கினர். புது நெய்யைக்கொண்டு வந்து சிறிது சிறிதாக உருளியில் குமிழி கொப்பளித்த பிரதமனுடன் கலந்து கிண்டிக்கொண்டிருந்தார்கள். அப்போதும் பிரதமனின் மணம் வரவில்லை. ஆசான் என்னிடம் தொண்டையால் கனைத்து விரல் சுட்டினார். நான் கோளாம்பியைக் கொண்டு அவரிடம் நீட்டினேன் அதில் துப்பி அருகிலிருந்த கூஜாவின் நீரை எடுத்து வாய் கொப்பளித்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டார்.
சமையலறை முழுக்க பெரும்பாலானவர்கள் தங்கள் வேலைகளை நிறுத்தி எரிந்த தீயை முழுமையாக அணைத்து கனல் சிவந்து முனகிய அடுப்பின் அருகே எழவிருக்கும் பிரதமனுக்காக காத்து நின்றிருந்தார்கள். கிண்டிக்கொண்டிருந்தவர்களின் கண்கள் உருளியிலிருந்தாலும் உடலால் செவியால் ஆசானைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சாய்வு நாற்காலி கிறீச் என்ற ஒலியை எழுப்பியது .அந்த ஓசை சமையலறை முழுக்க கேட்டது. ஆசான் எழுந்து கைநீட்டினார். முருகன் நீண்ட மரக்கைபிடி கொடுத்த சட்டுவத்தை அவர் கையில் கொடுத்துவிட்டு விலகிக்கொண்டான். அவர் உருளியை விளிம்பு வழியாகச் சுழற்றி கிண்டி உலோக ஓசை எழ உருளியின் குழிநடுவளைவுக்கு கொண்டு வந்து சற்றே புரட்டினார். சமையலறையை முழுதும் நிறைக்கும் பிரதமனின் மணம் எழுந்தது.
[ஓம்சக்தி தீபாவளி மலர்]