விண்விளி- கிறிஸ்துவின் இறுதிச்சபலம்

judas-jesus-hulton-getty

கிறிஸ்துமஸ் எப்போதும் எனக்கு அந்த காட்சியை நினைவுபடுத்தும். ஒரு ஏழெட்டு வயது இருக்கும். பள்ளி நண்பன் அந்த திருவிழாவிற்கு அழைத்து போனான். அது தாழ்த்தப்பட்டோர் வாழும் சேரியென அப்போது தெரிந்திருக்கவில்லை. தேவாலயம் முழுக்க சீரியல் விள‌க்குகளால் அலங்கரிக்க பட்டிருந்தது. உள்ளே ஒரு குள்ளமான கரிய மனிதர் கத்தி போன்று விறைத்து நின்றிருக்கும் பேண்ட், சட்டைக்குளிருந்து தன் தடித்த கண்ணாடியணித விழிகளால் நோக்கியபடி தன் கிட்டாரை சரிசெய்து கொண்டிருந்தார்.

சுற்றியிருக்கும் தேவாலயத்தின் உட்புறத்தை அதிர்ச்சியும், கிளர்ச்சியுமாக பார்த்துக் கொன்டிருந்தேன். அந்த சூழல் உருவாக்கும் புதிய மனோநிலையில் லயித்து கொண்டிருந்தபோது சட்டென கிட்டாரின் பல தந்திகள் அதிர்ந்து உருவாக்கிய சப்தத்தின் பிண்ணணியில் அவர் பாட ஆரம்பித்தார். தமிழும், ஆங்கிலமுமாக பாடல்கள் அடுத்து அடுத்து வந்துகொன்டேயிருந்தன. பாடியபடியே இடையிடையில் ஆடிக்கொண்டு குழந்தைகளையும் இழுத்து ஆடவைத்தபடியே இருந்தார். மெல்ல சூழல் நெகிழ்ந்து அனைத்து குழைந்தைகளிடமும் ஒரு உற்சாக மனநிலை வந்து அனைவரும் ஆட்டத்திலிணைந்தனர். இயல்பாகவே மிகுந்த கூச்ச சுபாவம் கொண்ட நான் என்னை சுற்றி ஆடிக்கொண்டிருந்த அந்த பிள்ளைகளின் நடனத்தைக் கண்டுகொண்டிருந்தேன். கரிய முகங்களின் பற்கள் ஒளிவிட நாற்புறமும் நிகழும் நடனச்சுழல் அடிக்கடி என் நினைவிலெழும் ஒன்று.

அதுவரை குடும்பச் சூழலில் இருந்து வந்த பண்டிகைகள் பெரும்பாலும் அனைவரும் இணைந்து கொண்டாடுவது. பூஜைகள், கோயிலுக்கு செல்லுதல், பட்டாசு வெடித்தலென எதோவொரு வகையில் ஒரு வரையறை, சடன்குத்தன்மை கொண்டிருந்தது. ஆனால் இதுவோ முற்றிலும் குழந்தைகளை மட்டும் முன்னிறுத்தி எந்த வரையரையுமின்றி கொண்டாட்டம் மட்டுமேயென நிகழ்ந்தவொன்று.

LastTemptation

நிகாஸ் கஸாண்ட்காஸிஸ் எழுதிய ‘கிறுஸ்துவின் இறுதி சபலம்’ நாவலை வாசித்தபின் இக்காட்சியின் மேலும் அந்தரங்கமாகிவுள்ளது. இதில் வரும் கிறிஸ்து அதிமானுடர் இல்லை. பெரிய அறிஞரோ, தத்துவவாதியோ கிடையாது. எளிய மனிதர். தன் பதின் பருவத்தில் அனைவரையும் போல எளிய, இனிய குடும்ப வாழ்க்கையை விரும்பியவர். இம்மணிண் பற்றில், அதன் கததப்பில் வாழ நினைத்தவர். ஆனால் விண்ணின் திட்டங்களோ வேறாக இருந்தன. இந்த இரண்டிற்குமான ஆடலே இந்த நாவலின் மைய நீரோட்டம்.

இந்நாவல் கிறிஸ்துவின் வாழ்க்கையை, அதன் காலகட்டத்தை இந்த உலக யதார்த்ததிலிருந்து மீறாமல் சித்தரிக்கிறது. சுவிசேஷங்கள் ஏற்றி வைத்த புனித படிவங்களை, அதிமானுடத் தன்மைகளைத் தவிர்த்து, ஆனால் அதில் வரும் மையமான சம்பவங்களை பின்பற்றி அதை மானுட இயல்பிலிருந்து முடிந்தவரை விலகாமல் சித்தரிக்க முயல்கிறது. சுவிசேஷங்களில் வரும் இயேசுவின் பலவகையான குரல்களைக்கிடையே ஒரு தொடர்ச்சியை உருவாக்கி, அதன் மூலம் ஒரு மாற்று வரலாறை முன்வைக்கிறது. இதில் தெளிந்து வரும் கிறிஸ்து நமக்கு மேலும் அணுக்கமானவர். நம்மை போலவே சஞ்சலங்களாலும், பலவீனக்களாலும் அலைக்ககளிக்கப்படுபவர். நம்மில் ஒருவர். அதனாலேயே நம்மில் இருக்கும் கிறிஸ்துவை அவரால் சுட்டிக்காட்ட முடிகிறது.

எளிய தச்சனாக நாவலில் இயேசு அறிமுகமாகிறார். நொய்மையான உடலுடன், எப்போதும் மனரீதியான‌ பலவீனத்துடனே இருக்கிறார். எப்போதெல்லாம் உலக இச்சைகளின் திசைக்கு அவர் திரும்புகிறாரோ அப்போது பேருருவக் கழுகு தன் கூருகிர்களால் அவர் தலையைப் பற்றுகிறது. தன் தோலைக் கடந்து, மண்டையோடு, மூளைச்சதையை ஊடுருவி எலும்புகள் வரை வலி படர்ந்திறங்குகிறது. தன் அன்னையின் சகோதரனாகிய சைமனின் மகளாகிய மேரி மக்தலீனை பெண் பார்க்க செல்லும் போதும் இதே வலி வந்து வாயில் நுரை தள்ள சரிகிறார்.

nikas

அவருக்கு தெரிந்திருக்கிறது இந்த வலி விண்ணால் அளிக்கப்படுகிறதென. எளிய உலகியலின் பால் அவர் சாய்ந்து விடக்கூடாதென்பதற்காகவென. ஆனாலும் அவர் இறைஞ்சுகிறார். தன் சக்திக்கு மீறிய எடையை தன் மேல் எற்றி வைக்க வேண்டாமெனவும் தன்னை விட்டுவிடும்படியும் விண்ணின் இறைவனிடம் மன்றாடுகிறார். அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல துணிகிறார்.

பொதுவாக பெரும்பான்மையான செவ்விலக்கியங்களின் ஆரம்பமும் முடிவும் நிதானமாகவும், பெரிய உச்சங்களோ, நாடகத் தருணங்களோ அற்றவையாகவே இருக்கும். ஆனால் இந்நாவலின் ஆரம்பமும் முடிவும் பெரும் கொந்தளிப்பானவை. நாவலின் ஆரம்பப் பகுதி ஒரு வாலிபனான இயேசுவின் கனவுடன் தொடங்குகிறது. பல்வேறு உதிரிக் காட்சிகளினூடாக இஸ்ரேல் மக்களின் வேதனைகளும் மண்ணில் உதிக்க வேண்டிய தேவதூதனுக்கான மன்றாட்டுக் குரல்களும் கேட்கிறது. அப்போது மறுபடியும் அவன் இல்லக்கதவு பயங்கரமாக தட்டப்படுகிறது. திறக்காமல் எவ்வளவு மறுத்த போதும் பல காலங்களாக தொடர்ந்து தட்டப்படுகிறது. தன்னுடைய தச்சு வேலைகள் செய்யும் மேசை, கருவிகள், கடைசியாக தான் செய்த சிலுவை என அனைத்தையும் கதவிற்கு முட்டுக் கொடுக்கிறான். சற்று நேரத்தில் கதவு வெடிப்போசையுடன் திறக்க, கருவிகளும், சிலையும் பறந்து சிதற அதன் பின்னே வாசலில் ஒரு செந்தாடிக்காரன் உரக்க சிரித்தவண்ணம் நிற்கிறானென அப்பகுதி நிறைவடைகிறது.

இதில் வரும் இயேசு தன் கடமையை சுமையாக நினைக்கிறார். தேவன் தன்னை நிராகரிக்க வேண்டுமென தன் எல்லக்களை மீறுகிறார். இஸ்ரேலில் ரோம அரசுக்கெதிராக எழும் புரட்சியாளர்களை கைது செய்து சிலுவையேற்றுவது வழக்கம். அப்படி ஒரு புரட்சியாளரை தண்டிப்பதற்கான சிலுவையை செய்து தருகிறார். ஒவ்வொரு புரட்சியாளர் தோன்றும் போதும் இவரே நமது மீட்பராக இருப்பவர் என நம்புவதைப் போலவே இவரையும் நம்புகின்றனர். அங்கு வேறெவரும் சிலுவை செய்ய முன்வராத நிலையில் இயேசு அதை செய்கிறார். இத்தகைய பாவச் செயல் மூலம் தேவனின் ‘பிடியில்’ இருந்து விடுபட்டு விடலாமென நினைக்கிறார்.

அங்கு ஆரம்பிக்கும் அவரது பயணம் அவரை எப்படி அவரது சிலுவை நோக்கி கொண்டு செல்கிறது என்பதை பேசுவதே இந்நாவல். அதன் மூலம் அவரது குணநலன்கள் எப்படி மாறுகிறது என்பதையும் சுவிசேஷங்கள் கூறும் சம்பவங்களின் துணை கொண்டு சித்தரிக்கிறது. தான் செய்த சிலுவையில் மரித்த உயிரைக் கண்டு அதன் உதிரத்தில் தோய்ந்த துணியை தன் தலையில் கட்டிக் கொண்டு தன் வீட்டிலிருந்து கிளம்புகிறார்.

முதலில் தூரத்து பாலைவனத்திலிருக்கும் மடாலயத்தில் சேர்ந்து துறவியாவதே தன் நோக்கமாக அவருக்கு இருக்கிறது. அனைவரின் பார்வையிலிருந்தும் விடுபட்டு ஒரு தனித்த வாழ்கையை வாழவே தன் பயணத்தை துவக்குகிறார். ஆனால் பயணத்தினூடே அவரது இயல்பில் ஏற்படும் நுண்ணிய மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கின்றன.

Rembrandt_Temptation_of_Christ_700

தன் பயணத்தை துவக்கியதும் அருகிலிரும் மாக்தலா ஊரில் வாழும் மேரி மாக்தலீனாவை காண நேர்கிறது. அங்கு ஒரு வேசியாக தன் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறாள். இயேசுவின் ஸ்பரிசத்தை ஏங்கும் தன் மனதின் உடலின் தவிப்பை நூறு நூறு உடல்களைத் தழுவதன் மூலம் அழிக்க முற்படுகிறாள். இயேசு அவளைக் கண்டு மன்னிப்புக் கோருகிறான். தன்னால் தான் அவளுக்கு இந்த நிலமையெனவும் தன்னை மன்னிக்கும் படியும் கூறுகிறான். அப்போது முதல் அடி அவனுக்கு விழுகிறது. அந்த நிலையிலும் தன் மேலிருக்கும் ஈர்ப்பை சொல்லி ஒப்புக் கொள்ள முடியாமல் வசதியாக அவன் கொள்ளும் பெருந்தன்மைத் தோற்றத்தை கடைப்பிடிப்பதை அவனின் முகத்திற்கெதிரே உரைக்கிறாள். அவனுடைய அந்த செயலுக்குப் பின்னலுள்ள கோழைத்தனத்தை முன்னெடுத்துக் காட்டுகிறாள்.

பிறகு சற்று நேரத்தில் இயல்பாகி அவனுடன் உரையாடுகிறாள். வெளியே பலத்த மழையினால் அன்றிரவு அங்கு தங்க நேரிடுகிறது. ஒரு தாயைப் போல அவல் காட்டும் பரிவு மனிதர்கள் கணங்களில் கொள்ளும் மேன்மையை அவனுக்கு காட்டுகிறது.அங்கிருந்து கிளம்பும் இயேசுவின் இயல்பில் மெல்லிய மாற்றம் நிகழ்கிறது. அதுவரை மனிதர்களை தவிர்த்து வந்த அவன் பயணம், மெல்ல சக மனிதர்கர்களிடம் காட்டும் பிரியத்திற்கு அவனை நகர்த்துகிறது.

வழியில் தன் பயிர்களை இழந்து தவிக்கும் பெண்களுக்கு நல்வார்த்தை கூறுகிறான். அவன் வார்த்தைகள் அவர்களுக்கு பெரிய ஆசுவாசத்தை அளிக்கின்றன. தன் பயணத்தை தொடர்ந்து மடாலயத்தை அடைகிறான்.

அடுத்த மாற்றம் நிகழ்வது மடாலயத்தில் சைமனுடன் உரையாடிய பிறகு. அங்கு அவரிடம் தன் மனக்குமுறலை, தன் இயலாமையை, தன் சஞ்சலங்ளைத் தெரிவிக்கிறான். ஒரு சமயம் தன் இயலாமையையும், கடவுள் தன்னைத் துன்புறுத்துவதாகவும், மறு சமயம் தான் கடவுளின் மைந்தன் என்ற நினைப்பு சாத்தான் உருவாக்குவதெனவும் கூறுகிறான். இந்த இரு முனைகளில் அவனுக்கு நிகழும் துன்பம் கண்டு அவர் ஒரு கேள்வி எழுப்புகிறார். ‘மக்களை சந்திக்கும் போது உனக்கு என்ன நிகழ்கிறது?’ அதற்கு இயேசு ‘அவர்களது நிலையை நினைத்து துயர் அடைகிறேன்’என்கிறான். சைமன் ‘அப்படியென்றால், நீ அவர்களிடம் செல். நீ இருக்கவேண்டியது அவர்கள் மத்தியில். நீ பேசினால் அவர்களின் துயரத்தின் கணம் விடுபடும். அதை நீ எடுத்துக்கொள்வதால்’ என பதிலளிக்கிறார். உடனே இயேசு “என்ன பேசவேண்டும். என்னிடம் வார்த்தைகள் இல்லை”எனக் கூற, சைமன் புன்னகைத்து ‘நீ வாயைத்  திறந்தல்ல் போதும். கடவுள் உன் வழியாக பேசுவார்’ என்கிறார்.

இந்நாலின் மையப்பார்வை இதுதான். கிறிஸ்து தன்னை விட பெரிய சக்தியால் கொண்டு செல்ல பட்டவர். அவர் ஒரு ஊடகமாகவே இருக்கிறார். அவரை சிலுவையை நோக்கி கொண்டு சென்று தன் நோக்கத்தை அது நிறைவேற்றிக் கொள்கிறது. மதத்தில் இருப்பவர்கள் அதை தேவன் என்கின்றனர். இறை மறுப்பாளர்கள் அதை இயற்கை எனலாம். மார்க்சியவாதிகள் அதை வரலாற்றின் விசை என்பர்.

அதே அளவுக்கு அதன் எதிர் பக்கம் நின்று பார்க்கும் வாய்ப்பையும் நாவல் தருகிறது. அறியமுடியாமைக்கு எதிராக மானுடனின் தவிப்பு என இந்நாவலை வாசிக்கலாம். தூரத்திலிருந்து கேட்கும் குரல் கடவுளா, சாத்தானா என அறிய முடியாத ஞானதாகியின் துயரம் அது. தன் சமகால மனநிலைகளின் குரல்களிடையில் காலாதிதமான விளியைக் கண்டுகொள்ள முற்படுபவனின் மன அலைச்சலது. இறுதியில் அவரால் செய்யக் கூடியவை அந்தப் புயலுக்கு தன்னை ஒப்புக் கொடுப்பது மட்டுமே.

threetemptations (1)

இன்றைய காலகட்டத்திலிருந்து பார்த்தால் அது வரலாற்றின் சுழிப்பு நிகழ்ந்த தருணம். அதுவரை இறையம்சம் என்பது பேராற்றலுடன் தொடர்புடையது. வலிமையே அதன் இயல்பு. மோசசும், ஜெஹோவாவும் அவர்களது முன்னோர்கள். ஆனால் தேவகுமாரனின் வருகைக்கு பிறகு அது கண்ணீராலும், தியாகத்தாலும் நிறைந்தது. அதற்கு வலிமையும், அறிவுத்தன்மையும் இரண்டாம் பட்சமே. அது அன்பையும், ஞானத்தையும் முன்னிறுத்துவது. அனைத்தாலும் கைவிடப்பட்டோருக்கானது. நோயாளிகளுக்கும், வறுமையிலுள்ளோருக்கும், பாவம் இழைத்தோருக்குமான வெளிச்சமது. அது வரவேண்டிய‌து இயேசு மாதிரியான ஒரு எளிய தச்சனிடமிருந்து தான். தன்னால் மீட்கப்படுபவர்களின் அதே துயரிலிருந்தும் வாதைகளிருந்தும் பலவீனங்களிருந்தும் தானவர்களுக்கான தேவன் எழ முடியும்.

மடாலயத்திலிருந்து கிளம்பி அவர் பயணம் மக்களை நோக்கி நகர்கிறது. தன் அத்தனை பலவீனங்களையும் வெளிப்படையாக கூறியதினாலேயே அது தன் வீரியத்தை இழந்து மனம் இலகுவாவதை உணர்கிறான். இப்போது அவன் மனதில் மக்களை நோக்கிய பரிவும், அன்பும் மட்டுமே நிரம்பியிருக்கிறது.

செல்லும் இடங்களில் மக்களுக்கு நல்வார்த்தைகள் சிறிய கதைவடிவில் கூறுகிறார். மலையுச்சியில் நடைபெறும் அவருடைய முதல் நல்லுபதேச நிகழ்வு பெரும் மனயெழுச்சியுடன் சித்தரிக்கப்பட்டிருக்கும். கூடிய அனைவரும் பசியாலும், நோயாலும் வாடிக்கொண்டிருக்கும் எளியர்கள். அவருடைய இனிய வார்த்தைகளுக்காக காத்துக்கொண்டிருப்பவர்கள். கிறிஸ்து தன்னுள் எழும் குரலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். தூரத்தில் சூரியன் உருவக்கும் ஒளியிருள் முயக்கத்தைக் கண்டு லயித்திருக்கும் அவரிடமிருந்து முதல் வார்த்தை பிறக்கிறது. ‘அன்பு’. அவ்வார்த்தை நேரடியாக இயற்கையின் ஆடல் என்றான ஒன்று அவருக்கு தருகிறது. கருத்தாக அல்ல கவித்துவத்தின், எளிமையின் வெளிச்சத்தில் அது தன்னை வந்தடைகிறது. அங்கிருந்து தனது முதல் நல்லுபதேசத்தைக் கூறுகிறார்.

தனது உபதேசங்களை கூறி மக்களிடம் உறையாடிக்கொண்டிருக்கையில் தூரத்திலிருக்கும் அந்த செந்தாடிக்காரனைக் கண்டதும் துணுக்குறுகிறான். யூதாசு என்ற பெயர் கொண்ட அவனைக் காணும்போதெல்லாம் தன் ஆழம் துணுக்குறுவதைக் கண்டு வியப்புறுகிறார். தான் செய்த அந்த முதல் சிலுவையிலிருந்து அவர்களுக்கான உறவு ஆரம்பமாகிறது. புரட்சியையும் அடுக்குமுறைக்கெதிறான ஆற்றலையும் நம்பும் யூதாசு இயேசுவை மிரட்டுகிறான். ஆனால் இயேசுவின் கண்ணில் அவன் காணும் அந்த சிலுவையும், சமயங்களில் அவன் உடல் கொள்ளும் ஒளியும் இஸ்ரேல் மக்களுக்கு விடுதலையைக் கொண்டுவரும் தூதன் இவனோ என சந்தேகமும் கொள்கிறான். மடாலயத்தில் ஒருமுறை இயேசுவைக் கொல்ல முயன்று முடியாமல் அவனை வெறுத்து அங்கிருந்து வெளியேறுகிறான்.

ஆனால் உள்ளூர ஒரு நம்பிக்கை ஒளி அவனுள் இருந்துகொண்டேயுள்ளது. ஒருநாள் இயேசுவின் இந்த பூஞ்சையான சுபாவம் மாறும் எனவும் இதற்கு முன் மண்நிகழ்ந்தவர்களைப் போல ஆற்றலும், வார்த்தைகளில் கணலும் தெறிக்குமென நினைக்கிறான். இயேசுவின் சீடர்களில் ஒருவனாக இணையும் யூதாசு சமயங்களில் இயேசுவோடு தனக்கு அன்புவழியிலிருக்கும் அவநம்பிக்கையை சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறான்.

ஒரு நாளிரவு வாக்குவாத்ததின் முடிவில் ஞானஸ்நானகரான ஜானிடம் செல்லலாமென முடிவெடுக்கின்றனர். ஜான் உக்கிரமான போதகர். தான் உபதேசிக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் கனலை பொழிபவர். இயேசு அவரை சந்திக்கும் போது ரௌத்திரமே கடைப்பிடிக்க வேண்டிய வழியெனவும் கோடாரியே முதலில் பயன்படுத்தப்பட வேண்டிய ஆயுதம் எனவும் கூறுகிறார்.

கருணை மிகுந்த இயற்கை தான் பேரழிவுகளையும் நிகழ்த்துகிறது. தீமை எல்லை கடக்கும் போது நீதி அழிவை ஆயுதமாக எடுக்கிறது என்கிறார். முடிவெடுக்க முடியாமல் குழப்பத்துடன் வெளிவரும் இயேசு பாலைவனத்தை நோக்கி  கடவுளின் செய்தியை கேட்க தனியே பயணிக்கிறார்.

jesus_

பாலைவனத்தில் அவருக்கு நிகழும் அனுபவங்களை விவரிக்கும் அந்தப் பக்கங்கள் மீண்டும் மீண்டும் வாசித்து நுணுக்கமாக புரிந்து கொள்ள வேண்டியது. அவருடைய சஞ்சலங்கள் ஒவ்வொன்றாக அங்கு அனுபவித்து தன் எல்லைகளை உணர்கிறார். உடலிச்சை சர்ப்பத்தின் வடிவிலும், அதிகார விருப்பம் சிம்மத்தின் வடிவிலும், நித்தியத்துவத்தின் ஆசை தேவதூதன் வடிவிலும் வந்து உரையாடுகிறது.

அங்கிருந்து வெளிவரும் அவர் அனைத்தையும் காணும் நோக்கு இப்போது மாறிவிடுவது உணார்த்தப்படுகிறது. இயற்கையின் தண்டிக்கும் போக்கை அவர் உள்ளம் ஏற்கொண்டுவிட்டது. அதுவும் விண்ணின் ஒரு பகுதிதான் என உணருகிறார். அதைக் காணும் அவரது பின்பற்றாளர்கள் ஜானும் அவரில் கலந்து விட்டதாகவும் ஒரு உடலில் இருவர் குடிகொண்டிருப்பதாகவும் அவரில் சமயத்தில் ஜானின் தோற்றம் தோன்றி மறைவதாகவும் கூறுகின்றனர்.

அதிலிருந்து அவர் உபதேசங்களில் இறைவன் உலகத்தை அழிக்க இருப்பதாகவும் அவர்கள் அழிவிலிருந்து மீட்க தன்பின் தொடருமாறும் கூறுகிறார். பேச்சில் புதிய அனல் தோன்ற யூதாசு மகிழ்கிறான். மெல்ல இயேசுவின் இயல்பு மாறுவதாக நினைக்கிறான். ஆனால் கூடவே அவர் பேச்சில் இன்னும் அன்பைப் பற்றிய பிதற்றல்கள் இருப்பதாகவும் எண்ணி இருவித உணர்வுகளிலும் அவன் உழல்கிறான். உண்மையான விடுதலை ஆத்மாவிலிருந்து விடுபடுவதுதானெனவும் அது அன்பு மூலமே சாத்தியமெனவும் கூறுகிறார். பதிலுக்கு யூதாசு விடுதலை முதலில் உடலிலிருந்து தொடங்க வேண்டும் உடல்தான் அடிப்படை என வாதிடுகிறான்.

இந்நாவலில் சித்தரிக்கப்படும் இயேசுவின் சீடர்கள் ஒரு சாதாரண லௌகீக மனநிலையிலிருந்து எந்த வகையிலும் மேலானதாக இல்லை. ஜானும் ஆண்ட்ரூவும் மட்டும் இயேசுவை தொடர்வதற்கு முன்பே இறையியல் நாட்டம் கொண்டு மடாலயங்களில் இருந்துள்ளதால் கொஞ்சம் விடுதலை நாட்டம் கொண்டிருக்கிறார்கள். மத்தேயூ ஒரு அரசூழியனாக இருந்து இயேசுவின் அழைப்பின் பேரில் இணைகிறான். ஆனால் முற்றிலும் வேறொரு வகையில் அவனுக்கு ஒரு திறப்பு நிகழ்கிறது. இயேசுவின் நல்வார்த்தைகளை கேட்டு அதை ஆவணப்படுத்த எண்ணுகிறான். அதை எழுத தன் எழுதுகோலை தொட்டவுடன் ஒரு தேவதூதன் வந்து அவனை வழிநடத்துகிறது. இயேசுவின் மேலான உண்மையை சொல்ல இவ்வுலக வறட்டு உண்மை தடையாக உள்ளது எனக்கண்டு அவனுடய உள்ளம் வேறொரு பாதையை துணைக்கிறது. அதில் இயேசு தேவனின் மகன். மூன்று தேவதைகளால் ஆசிகளால் பூமிக்கு அருளப்பட்டவன். அவனுடைய அன்னை ஒரு கன்னி. இயேசுவின் வாழ்க்கையை சொல்ல முனைந்து ஹீப்ரூ மக்களின் ஆதியிலிருந்து தொடங்குகிறான்.

எழுத்தில் எழும் தேவன் அவனை முழுதாக ஆட்கொள்கிறான். ஒரு கட்டத்தில் இயேசுவே அவனது எழுத்தைப் படித்து இந்த அற்புதங்களெல்லாம் எனதல்ல என கூறும் போதும் அதை அவன் விடவில்லை. சிதறிய தாள்களை மீண்டும் எடுத்து நெஙஞ்சோடு அணைத்துக் கொள்கிறான். அக்கணத்தில் இயேசுவே அவனை நீங்கும்படி வற்புறுத்தியிருந்தாலும் அவ்வெழுத்திலிருந்து ஒரு இயேசுவை தொடர்ந்து கட்டி எழுப்பியிருப்பான். இறுதி அவருடனே இருந்து அவன் எழுதியதே புதிய எற்பாட்டிலிருக்கும் ‘மத்தேயுவின் பார்வையில் சுவிசேஷம்’ (Gospel according to St.Matthew).

சீடர்களில் ஒருவன் மட்டுமே இலட்சியவாத உந்துத‌ல் கொண்ட மேலான வாழ்வை நோக்கிய கணவு கொண்டவன். அவன் யூதாசு. கிட்டத்தட்ட இயேசுவிற்கு சமானமானவன். இயேசுவிற்காவது தேவனின் விளி இருந்து அவனை தொடர்ந்து செலுத்தியது. அத்தனை சஞ்சலங்களுடன் அவரின் வெளிச்சத்தில் தன் சிலுவையை நோக்கி சென்றார். இந்நாவலில் வரும் யூதாசோ தன் இலக்கின் மேல் சஞ்சலமற்ற தீரா வேட்கை கொண்டவன். தன் இலக்கையே தவம் செய்தவன். ஒருவேளை இயேசுவை விட ஒரு படி மேலானவன். நாவலில் ஒரிடத்தில் அதை இயேசுவே சொல்கிறார்.

ஜெருசெலேத்தின் மையக் கோவிலில் நின்று கொண்டு மக்களிடம் பெரும் ஆவேசத்துடன் கூறுகிறார். இந்த அரசும் அதன் அதிகாரத்தின் முகமான இந்த கோவிலும் தரைமட்ட்மாகுமென. அதைக்கேட்ட அரசு ஆதரவாளர்கள் இயேசுவை சிலுவையேற்ற வேண்டுமென ‍‍‍‍பிளாட்டேவிற்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் இறைவனின் குரலுக்கேற்ப தன் உயிரைக் அர்ப்பணமாக்கி தன் செய்தியை நிலைநிறுத்த எண்ணுகிறார். அதை யூதாசிடம் கூறி தானிருக்கும் இடத்தை ரோமக் காவல் படையிடம் காட்டிக் கொடுக்க சொல்கிறார். சீற்றத்துடனும் கண்ணீருடனும் ‘ஏன் நான்?’ எனக் கேட்கிறான். அதற்கு இயேசு ஏனென்றால் அது உன்னால் தான் முடியும் என்கிறார். உடனே யூதாசு நீங்கள் அவ்விடத்திலிருந்தால் செய்வீர்களா என வினவ இயேசு மெல்லிய சவலை தோய்ந்த குரலில் தலையசைத்து என்னால் முடியாது என்கிறார்.

இந்த இடத்தில் யூதாசுவின் பாத்திரம் கொள்ளும் உயர்வு தன்னிகரில்லாதது. கிட்டத்தட்ட அவனும் ஒரு இயேசு தான். கண்ணுக்குத் தெரியாத சிலுவையை சுமப்பவன். இயேசுவின் சிலுவை இன்று ஒவ்வொரு தேவாலயத்திலும் உள்ளது. அவரது தியாகம் மீண்டும் மீண்டும் கண்ணீருடன் நினைவு கூறப்படுகிறது. ஆனால் யூதாசு முற்றிலும் வரலாற்றின் இருட்டுக்குள் தள்ளப்படுகிறான். அவனுடைய அர்ப்பணிப்புக்கும் தியாகத்திற்கும் வெறுப்பும் தூற்றலும் மட்டுமே எதிர்வினையாகிறது.

ஆனால் இன்று நின்று யோசிக்கையில் கிறித்துவத்தில் இயேசுவுடன் இணைந்து நினைவுக்கு வரும் பெயர் யூதாசு. இந்நாவலைப் படித்து முடித்தவுடன் ஒரு விசித்திர எண்ணம் தோன்றியது. இயேசுவின் தடுமாற்றங்களும் சங்சலங்களும் இருளென மாறி யூதாசுவுடன் இணைந்து கொண்டது என. தராசுவின் மறுபக்கத்தையும் யாரவது தாங்க வேண்டும் தானே! இயேசுவின் புகழ் இருக்கும் வரை அவ‌ருடய மறுபக்கத்தின், மானுடனாக பிறந்ததாலேயே அவரால் மீற இயல்லாதவற்றின் சிலுவையை சுமப்பவனாக யூதாசு இருந்துகொன்டே இருப்பான். தேவாலய‌ங்களின் ஒளியில் பல்லாயிர துதிகளின் துதிபாடல்களின் நடுவே இயேசு இருக்கையில் அங்கிருக்கும் மனித அக இருளின் ஒரு மௌன இருப்பாக யூதாசுவும் இருப்பான். ஒன்றின் இருபக்கங்கள் அவர்கள்.

நாவலில் ஒரு இடம் வரும். வழக்கம் போல் இரவு முழுக்க இயேசுவுக்கும் யூதாசுவுக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும். அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் ஜான் சப்தம் கேட்டு அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள் என அறிய அவர்களறியாமல் வர எண்ணுவான். சப்தம் கேட்டு யாரென யூதாசு வினவ இயேசு ஜானை திரும்பிப் போய் உறங்கச் சொல்வார். மறுநாள் அதிகாலை வந்து பார்க்கும் போது அந்த இளங்காலைப்பாலையில் மரத்தடியில் ஒருவர் கையில் மற்றொவர் தலை வைத்து துயின்று கொண்டிருப்பார்கள். இந்நாவலில் முக்கிய படிமங்களில் ஒன்று இது. அன்று மட்டுமல்ல அவர்கள் சந்தித்த நாள் முதல் மேற்பரப்பில் எப்போதும் உரசிக் கொண்டேயிருந்த இரு உள்ளங்கள். ஆழத்தில் ஒன்றாகி கண்மயங்கியுள்ள இச்சித்திரம் தரும் திறப்பு மிகவீரியமானது. இருவரை இயக்கும் அடிப்படை விசை ஒன்றுதான். ஒரு இயேசு உருவாக ஒரு யூதாசு தேவைதான் போலும். ஒன்று இரண்டாகி ஆடும் ஆடலது.

ஆரம்பத்தில் கூறியதுபோல இந்நாவலின் இறுதி பகுதியின் கலைத்தன்மையும் அதன் நிகழ்வுகள் உருவாக்கும் மனத்திறப்புகளின் பல்வேறு சாத்தியங்களும் பெரும் வியப்பளிப்பது. தான் மலையுச்சியில் சிலுவையேற்றப் பட்டு கைகால்களில் ஆணிகள் அறைப்பட்டு உச்சகட்ட வலியில் விழிநோக்கு மங்க சட்டென கண்விழித்துக் கொள்கிறார். அருகில் ஒரு தேவதூதன் இருக்கிறான். என்ன நிகழ்ந்தது என அவனிடம் வினவ அவன் தன்னை விடுவித்துவிட்டதாகவும் இனி அவருக்கு வலியில்லை என்கிறான். விடுதலை என்பது இவ்வுலக அழகிலும் களிப்பிலும் கனிவிலும் திளைத்து வாழ்ந்து நிறைவதே என்கிறார்.

அதற்கேற்ப அவர் மாக்தலீனாவுடன் இணைந்து வாழ்கிறார். வாழ்க்கை ஒவ்வொரு கணுவும் தித்திக்கிறது. எதிர்பாரா ஒரு சம்பவத்தில் அவள் முந்தைய நடத்தைகளால் ஆத்திரமடைந்த மக்களால் தாக்கப்படுகிறார். சால்(Saul) என்ற ஒரு கூனனால் கல்லெறிபட்டு மரணமடைகிறாள். இச்சம்பவத்தால் துயறுரும் இயேசுவிற்கு அந்த தேவதூதன் ஆறுதலளிக்கிறான். இவ்வுலகிலுள்ள அனைத்து பெண்களிலும் இருப்பது மாக்தலீனவின் முகமே.  மாக்தலீனவில் குடியுள்ளதே அனைத்து பெண்ணழகுகளிலும் உறைந்துள்ளது எனக் கூறி அவனை தேற்றி அவனது பின்பற்றாளர்களான மேரி மற்றும் மார்த்தாவின் இல்லத்திற்கு அழைத்துத் செல்கிறான். விசித்திரமாக இருக்கக் கூடாதென்பதற்காக ஒரு கறுப்பின சிறுவனாக அந்த தூதன் உடன்வருகிறான்.

je

அந்த இரு பெண்களையும் மணந்து குழந்தைகள் பெற்றுப் பெருகி வாழ்ந்து கொண்டிருக்கும் இயேசுவிற்கு தன் இறுதி காலத்தில் அடுத்தடுத்து மூன்று அதிர்ச்சிகள் நிகழ்கின்றன.

தான் சிலுவையில் அறையப்பட்டுருந்தால் உருவாகும் விளைவுகள் அதன் மூலம் சொல்லப்படுகின்றன. முதல் விளைவு தன்னை சிலுவையேற்றத்திற்கு ஆனையிட்டவன் தன்னை வதைத்துக் கொண்டு தனக்கு முட்கிரீடம் சூட்டிக்கொள்கிறான். இறுதியில் சிலுவையிலறையப்படுகிறான். அதைத் தொடர்ந்து சிலுவையேறிய இயேசு மூன்றாம் நாள் மீண்டும் உயிர்தெழுகிறார்.

அடுத்தது, தனக்கு கிடைத்த இறைவனின் ஆணையைப் போல, சாலுக்கு இயேசுவின் விளி கிடைக்கிறது. அதிலிருந்து தான் இயேசுவின் சீடனாகி உலகெங்கும் அவரின் சொற்களை பறப்பப்போவதாக கூறுகிறான்.

இறுதியாக அவருடனிருந்த சீடர்களை பார்க்கிறான். அனைவரும் அதிகாரத்தால், வறுமையால் ஒடுக்கப்பட்டு இழிந்த நிலையிலுக்க. யூதாசு மட்டும் அருகில் வராமல் ஒதுங்கி இருக்கிறான். அவனிடம் போய் பேச முற்பட யுதாசு சீறி எழுகிறான். ஆற்றாமையுடன் ‘ நீ சிலுவை ஏந்தியிருக்க வேண்டும். அதற்காகவே நீ வந்துள்ளாய். உன் சிறிய வாழ்வின் இச்சைக்காக நீ அடகு வைதுள்ளது எதைத் தெரியுமா’ என பொங்குகிறான். அவன் தன் வார்த்தைகளை அவர் உணர உணர கைகளிலும் கால்களிலும் ஆணி அறைந்த இடத்தில் ரத்த ஊற்றுகள் எழுகின்றன. கால்கள் மண்ணை விலக்கி மேலெழுகிறது. நெஞ்சில் உதிரம் வடிய மீண்டும் கண்விழிக்கிறார். அதே மலையுச்சியில் தான் சிலுவையிலுருப்பதை அறிந்து நிறைவுடன் ‘ நான் கடந்துவிட்டேன்’ எனக் கூறி தன் உயிரை அர்பணிக்கிறார். நாவல் முடிகிறது.

அக்கனவில் அவருடனே வரும் அந்ததூதன் உண்மையில் ஒரு சாத்தான் அல்ல. முழுக்க முழுக்க இம்மண்ணின் நிறைவுகளை, அருளப்பட்டவையை விரும்பும் உள்ளத்தின் தேவவடிவம் அவன். அதில் வாழ்ந்து நிறைவதும் முழுமையானதுதான். ஆனால் அது தனிமனிதனுக்கானது. தன் நிறைவை மட்டுமே இலக்காக கொண்டது. இயேசு இதுவரை நேர் நோக்காமல் தவிர்த்துவந்தவைகளின் தொகுப்பு அவன். அவன் மூலம் அந்த அனைத்து இன்பங்களையும் உள்ளார்ந்து வழ்ந்து கடந்து முழு விடுதலையுடன் சிலுவையேறுகிறார். முழு விடுபட்டவானாக. தலைமுறைதோறும் பெறப்போகும் துதிகளுக்கும், அவர் நோக்கி சிந்தப்படும் கண்ணீர்களுக்கும், இறைஞ்சல்களுக்கும் தகுதியுள்ளவராக உயிர்நீக்கிறார்.

Paradise_Lost_10

அதே சமயம் அவர் காணும் அக்கனவு மூலம் அவர் தாண்டி நிகழும் பிரம்மாண்டமான விளைவுகள் உணர்த்தப்படுகிறது. அவருக்கு வரும் அந்த விளியின் ஆதிஊற்று மிகத் தொன்மையானது. அதற்கு இயேசுவும் ஒரு குமிழியே. அவருக்கானது மட்டுமல்ல. இங்கு மனித குலம் செழித்து வாழ தன் அடுத்த கட்டத்தை அடைய எழுந்து வருவது அது. பூமியின் ஆதி காலத்திலிருந்து தொடர்ந்து வரும் பெருக்கு அது. கிருஷ்ணனுக்கும் புத்தருக்கும் வெவ்வேறு வகையில் அதன் அழைப்பிருந்துருக்கும். அந்த தொடர் வரைகோட்டில் இயேசுவும் ஒரு நிலைப்புள்ளி.

எந்த ஒரு சிறந்த படைப்பையும் போல இந்நாவலும் மையத்துடன் சேர்த்து விளிம்புகளையும் சித்தரிக்கிறது. இயேசுவின் ஆன்மீகத் தேடல்களுக்கு நடுவே அது அதற்கு நேரெதிரான கொண்டாட்டமும் களியாட்டமும் நிறைந்த மது விடுதி நடத்தும் சிமோனையும் இணைத்துப் பேசுகிறது. இயேசு அலைந்து தவிக்கும் விடுதலை மனநிலை சிமோனுக்கு இயல்பாக தன் வாழ்வில் வாய்க்கிறது. கிட்டத்தட்ட ஒரு குட்டி ஸோர்பா அவன்.

அதே போல் உயர்ந்த லட்சியமெனும் யானையால் நசுக்கப்படும் எறும்புகளின் துயரத்தையும் அது காட்டுகிறது. தன் மகங்களான ஆண்ட்ரூவும் பீட்டரும் இயேசுவின் ஈர்ப்பில் அவருடன் சீடர்களாக சென்றது அறியாமல் வீட்டில் உணவை சமைத்து வைத்துவிட்டு தன் மீன்வலையின் சிடுக்குகளை விடுவித்துக் கொண்டு காத்திருக்கும் தந்தையின் துயரமும் சேர்த்ததுதான் இந்நாவல்.

இன்னொரு சுவாரஸ்யமான கதாபாத்திரம் ஜெபீதீ. வினயமான வணிகபுத்தி கொண்டவர். தன்னிடம் வேலை செய்யும் ஆட்களிடம் ஒரு ரூபாய் விரயமாகாமல் வேலை வாங்குபவர். தன் மகன்கள் துறவு பூண்டு செல்லும்போதும் பெரிதாக கவலை கொள்ளாதவர். அப்படியென்றால் அவர் சேர்த்து வைக்கும் பணம் தன் வாரிசுகளுக்காக அல்ல. சேர்த்துவைக்கும் அந்த செயலுக்காக மட்டுமே. அண்டை வீட்டுக்காரர் கடனில் மூழ்கும் சமயம் வரை காத்திருந்து அவரது மொத்த நிலத்தையும் வீட்டையும் அபகரிக்க எண்ணுபவர். ஆனாலும் மாக்தலீனை அனைவரும் கல்லாலடிக்க வருகையில் அவர்களுக்கெதிராக இயேசுவோடு நிற்கும் ஒரே மனிதர். மனிதனின் இயல்பான சாம்பல் தன்மையுடன் சித்தரிக்கப்பட்டிருக்கும் பாத்திரம் ஜெபீதீ.

இப்படைப்பு மனிதர்களைப் பற்றி எவ்வளவு ஆழமாக பேசுகிறதோ அதே அளவு விரிவாக புற இயற்கைச்சூழழையும் படிமங்களையும் சித்தரிக்கிறது. நாவல் முழுக்க பாலைவனக் காற்றும் மழையும் சூரியனும் நட்சத்திரங்களும் விவரிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. சிலசமயம் மனிதமனவுணர்வுகளின் ஒரு பகுதியாக, சிலசமயம் அறியவொண்ணா பேரியர்கையின் இருப்பாக, சிலசமயம் எளியவர்களின் வாழ்வின் குறீயீடாக என வெவ்வேறு பகுதிகளில் வந்து அச்சம்பவங்களை அந்த காலயிடத் தளையிலிருந்து வெட்டி எக்காலகட்டதிற்கும் உரிய அடிப்படை கேள்விகளாக மாற்றுகிறது. உதாரணத்திற்கு இரு இடங்களை சொல்லலாம். இயேசு மக்தலீனாவுடன் தங்கும் அந்த இரவில் பெய்யும் மழை இவ்வாறு சொல்லப்படுகிறது. வானம் உடைந்து பெய்யும் கோடானுகோடித் துளிகளை பூமி தன் கிளுக்கல் சிரிப்புடன் தொடைவிரித்து வாங்கிக்கொள்கிறது. இன்னொரு இடத்தில் இயேசு தன் இறுதி நாட்களை நெருங்கும் வேளையில் இயற்கை தன் அளப்பரிய சௌந்தர்யதால் அவரை சீண்டிக் கொண்டேயிருக்கும்.

jesus

இந்த புற வர்ணனைகளுக்கு நிகராக நாவலின் முகமாக முக்கிய படிமங்களையும் தன்னுள் வைத்திருக்கிறது. முதன்மையாக கழுகு. இரண்டு விதமான குறீயீட்டுப் பொருள் அதற்கு கொடுக்கப்படுகிறது. ஒன்று அது இயேசுவைக் கட்டுப்படுத்தும் இயற்கையின் நெறியாக. அவர் வழிதவரும் போதெல்லாம் உறுத்து நோக்கும் விழியாகவும் தன் கூருகிர்களால் அவரை வதைக்கவும் செய்கிறது. அதேசமயம் அது அதிகாரத்தின் குறீயிடாகவும் வருகிறது. ரோமப் பேரரசின் கொடியிலும், தான் இல்லத்தைவிட்டு மடாலயம் நோக்கி கிளம்பும் போது தன் நிழலாகவும் உடன்வரும் உருவத்தின் தலையாகவும் அது வருகிறது. காட்டுமிராண்டித்தனமான பெண் உடலுடன் கால் நுணிமுதல் கழுத்துவரை கவசவுடையால் மூடப்பட்டு கழுகுத் தலையுடன் வாயில் ஒரு ஊண் துண்டுடன் அந்த உருவம் தொடர்கிறது, அதை தன்னுடைய சாபமென இயேசு ஓரிடத்தில் சொல்வதைத் தவிர எந்த குறிப்பும் அதை பற்றி தரப்படுவதில்லை. எனக்கு அவர் பாலைவனத்தில் தேவனின் சொல்வேண்டி காத்திருக்கையில் அவர் உணரும் தன் எல்லைகளின் குறீயீட்டு வடிவென நான் எடுத்துக் கொள்கிறேன்.

அதேபோல் மற்றொரு வலிமையான படிமம் பாலைவனத்தில் குடல் வெளிவந்து கழுத்தில் பல்வேறு பாவச்செய்திகளின் வளையங்களுடன் இறந்து கிடக்கும் ஆடு. இஸ்ரேலிய மக்கள் தாங்கள் செய்த பாவங்களை ஒரு ஆட்டில் வளையத்தில் கட்டி அதை பாலைவனத்திற்கு துரத்தி விடுவர். அந்த ஆடு அவர்கள் செய்த பாவத்திற்கான விளைவுகளைப் சுமந்து கொண்டு துளி நீரோ உணவோ இல்லாமல் பாலையில் தன் உயிரை விடும். நாவல் முழுக்க பல இடங்களில் இயேசு தன்னை அதனுடன் ஒப்பிட்டு கொள்வார்.

நாவலின் அழகியலில் கையாண்டுள்ள உத்தி மிக முன்னுதாரனமானது. இரண்டு வகையில் இதன் கூறுமுறை இயங்குகிறது. ஒரு கோணத்தில் இது ஒரு மனிதனின் ஆன்மீக அலைக்கழிப்புகளை கூறுவது. அதேசமயம் மற்றவர்களின் கண்கள் மூலம் அவரது புதிர்தன்மையும் கடவுள்தன்மையும் காட்டப்படுகிறது. இந்த இரண்டில் எது இல்லையென்றாலும் இந்நாவல் கீழிறங்கி விடும். ஒன்று இன்னொன்றுடன் சமமாக நிகர் செய்யப் பட்டுள்ளது.

இந்நாவலை படித்த பிறகு இயேசுவின் முகம் வேறொரு வடிவம் கொள்கிறது. அந்த முகம் எப்போதும் எளியவர்களின் பக்கமிருக்கும் முகம். கடையரிலும் கடையரோடு தன்னை பொருத்திக் கொள்ளும் முகம்.

நம்முடைய கீழ்மைகளையும் சஞ்சலங்களையும் நோக்கி முகம் சுழித்து அதை வெறுத்து மனதின் ஆழத்திற்குத் தள்ளாமல் அதை நேர்நோக்கும் வலிமையை இந்நாவல் தருகிறது. இந்த இயேசு நம்முடைய சிலுவையைக் கண்டுகொண்டு அதை சுமக்கும் தைரியத்தை நமக்கு தருகிறார்.

பாலாஜி பிருதிவிராஜ்

முந்தைய கட்டுரைகுளிர்ப்பொழிவுகள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைமாந்தளிரே!