துரியோதனன் அவைக்குள் நுழைவதுவரை கலைந்த சொற்களின் முழக்கம் அங்கு நிறைந்திருந்தது. கைகளை கூப்பியபடி அவன் முதல் வாயிலினூடாக உள்ளே நுழைந்து தன் பீடத்தை நோக்கி செல்ல அவையினர் வாழ்த்தொலி எழுப்பினர். பீடத்தில் அமர்ந்து களைப்புடன் உடலை நீட்டிக்கொண்டு அருகே வந்து தலைவணங்கிய விகர்ணனிடம் தாழ்ந்த குரலில் சில ஆணைகளை பிறப்பித்துவிட்டு அவையை சிவந்த கண்களால் நோக்கினான். ஒருகணம் அவன் விழி வந்து தன்னை தொட்டுச்செல்வதைக் கண்டு லட்சுமணன் உளம் இறுகி மீண்டான். அவ்வப்போது அவனை அவையிலும் பொதுவிலும் துரியோதனனின் விழிகள் வந்து தொட்டுச்செல்வது அண்மைக்கால வழக்கமாகிவிட்டிருந்தது. முன்பெல்லாம் துரியோதனன் அவன் இருப்பதையே அறியாதவன் போலிருப்பான். அரிதாகவே விழிதொடுவான். அவனை அதுவரை மிகச் சில முறையே உடல்தொட்டிருக்கிறான்.
லட்சுமணன் தந்தையை நோக்கியபடி அவையை முற்றிலும் மறந்து அமர்ந்திருந்தான். துரியோதனன் மிகவும் உடல் தளர்ந்திருப்பதாக அவனுக்கு தோன்றியது. முந்தைய நாளிரவு அவன் இயல்பான துயிலை அடைந்திருக்க வாய்ப்பில்லை. நெடுநாட்களாகவே நற்துயில் இல்லாமை அவனது கண்களைச் சுற்றி கருமையையும் தோல்சுருக்கத்தையும் உருவாக்கியிருந்தது. இமைகள் தடித்து உதடுகள் கருகியிருந்தன. பிறர் பேசிக்கொண்டிருக்கையில் அவன் விரல்கள் பொறுமையிழந்து அசைந்துகொண்டிருப்பதை, காற்றில் எதையோ எழுதி அழிப்பதை லட்சுமணன் கண்டான். துர்மதன் துரியோதனனை அணுகி ஏதோ சொல்ல முகம் சுளித்து வேண்டாம் என்று தலையசைத்து விலகிச்செல்லும்படி கைகாட்டினான். அமைச்சர் அவை தொடங்கலாமா என விழிகளால் வினவ துச்சாதனன் ஆம் என தலையசைக்க அமைச்சர் வாழ்த்துரையுடன் அவை தொடங்கவிருப்பதை அறிவித்தார்.
அவை அமைதியாகவே இருந்தது. துச்சாதனன் பூரிசிரவஸை நோக்கி விழிகளால் பேசத்தொடங்கும்படி கோரினான். மேலாடையை இரண்டுமுறை சீரமைத்தபடி பூரிசிரவஸ் எழுந்து “அரசே, இன்றைய படைசூழ்கையை ஆசிரியர் துரோணர் வகுத்துள்ளார். இன்றும் பருந்துச்சூழ்கையே உகந்ததென்பது அவரது எண்ணம். ஒற்றை வீரரை முன் நிறுத்தி முழுப் படையும் போரிடுவதற்கு உகந்த வடிவம் அது. இன்றும் நமது முதன்மை படைக்கலம் பீஷ்ம பிதாமகரே. அவரை வெல்ல அவர்களில் எவராலும் இயலாதென்பது இரு நாட்களில் நிறுவப்பட்டுவிட்டது” என்றான். “அவர்களும் இன்று நாரைச் சூழ்கையை அமைக்கக்கூடும் என்றனர்” என்றார் சல்யர். பூரிசிரவஸ் “ஆம், அவர்களுக்கும் அர்ஜுனனே முதன்மை படைக்கலம்” என்றான்.
ஜயத்ரதன் “அல்ல, நேற்றைய போரில் பீமன் காட்டிய பெருவிசையையும் நிலைபெயரா உறுதியையும் அர்ஜுனன் வெளிப்படுத்தவில்லை. இன்னமும்கூட படைமுகப்பில் சற்றே கைதளர்பவனாகவே அவன் இருக்கிறான்” என்றான். “ஏன்?” என்று கிருதவர்மன் கேட்டான். “நேற்று பிதாமகரிடம் அவர் புரிந்த போரை நானும் பார்த்தேன். எவ்வகையிலும் கைத்தளர்வும் உளச்சோர்வும் தென்படவில்லை.” ஜயத்ரதன் புன்னகைத்து “கைகளிலோ அம்புகளிலோ அத்தளர்வு தென்படாது. அது உள்ளத்தின் ஆழத்தில் இருப்பது. மிக அகன்றிருந்து நோக்கினால் அது தெரியும். அம்புக்கு கைசெல்வதில், நாண் இழுப்பதில் தெரியும் மிகுவிரைவு தொடுப்பதற்கு முன் அரைக்கணம், அரைக்கணத்தில் ஆயிரத்திலொரு அளவு தயங்குவதை காணலாம். அதைக்கூட முகவிழியால் அல்ல மெய்விழியால்தான் காண இயலும்” என்றான்.
அவை ஜயத்ரதனை நோக்கியது. சல்யர் “அது வெறும் உளமயக்கு” என்றார். “அகன்றிருப்பவனுக்கு உளமயக்கும் விழிமயக்கும் ஏற்படுவதில்லை” என்ற ஜயத்ரதன் “அவ்வாறென்றால்கூட தாழ்வில்லை. பீஷ்ம பிதாமகரை ஏன் அர்ஜுனன் வெல்ல இயலவில்லை என்பதற்கான விளக்கம் இதுவே” என்றான். “சொல்க!” என்றான் துரியோதனன். “அரசே, இன்னமும் அர்ஜுனன் போரில் அருங்கொலை எதையும் செய்யவில்லை” என்றான் ஜயத்ரதன். பூரிசிரவஸ் “அவர் கொன்று குவித்த நம் படைவீரர்களின் எண்ணிக்கை…” என சொல்ல ஜயத்ரதன் கைகாட்டி தடுத்து “அவர்கள் முகமில்லாதவர்கள். போரில் இறப்பதற்கென்றே பிறவி கொள்ளும் படைவீரர்கள். எதிர்த்து வரும் படைக்கலங்களேந்திய கைகள் மட்டுமே போரில் நம் விழிக்கு தெரியும். எதிரிவீரனின் விழிகளை எவரும் நோக்குவதில்லை” என்றான்.
“ஆம், படைவீரனை போரில் கொல்வதில் எந்த உளத்தடையும் ஏற்படுவதில்லை” என்றான் கிருதவர்மன். “போரில் மெய்யாகவே ஓர் அருங்கொலை நிகழ்வது கொல்பவன் தன்னாலும் பொறுத்துக்கொள்ள இயலாத ஒன்றை நிகழ்த்துகையில்தான்” என்றான் ஜயத்ரதன். “தன் அனைத்து எல்லைகளையும் மீறிச்சென்று அதை அவன் ஆற்றவேண்டும். அத்தருணத்தில் அவனுள் ஏதோ ஒன்று உடைவதை காண்கிறான். பிறகு ஒருபோதும் திரும்பிச்செல்ல முடியாத இடத்திற்கு வந்துவிட்டதை திகைப்புடன் திரும்பிப்பார்க்கிறான். அதை அவன் மீண்டும் எண்ணிப்பார்க்க விரும்புவதில்லை. அது இயல்பாக எழுந்துவரும்போது உடலும் உள்ளமும் தவிக்கிறான். அதை வெல்ல ஒரே வழிதான் உள்ளது, மேலும் மேலுமென அதையே செய்து உள்ளத்தை அதற்கு பழக்கப்படுத்துதல். அவ்வழியே நெடுந்தொலைவு சென்று மேலும் மேலும் நிகழ்வுகளால் முதற்கணத்தை மூடி புதைத்துவிடுதல்.”
லட்சுமணன் ஏனென்றே தெரியாமல் மெய்க்கூச்சம் அடைந்தான். உடல் தவிக்க கைகளை இறுகப்பற்றிக்கொண்டு தலைதாழ்த்தி பற்களை நெரித்தான். அங்கிருந்து எழுந்து ஓடிவிடவேண்டும் என்றே அகம் தவித்தது. ஜயத்ரதன் இவற்றை ஏன் சொல்கிறான்? அவன் அவ்வெல்லையை கடப்பதைப் பற்றி எண்ணி எண்ணி உளம்உருட்டிக்கொண்டிருக்கிறான். அவன் அவ்வெல்லையை உறுதியாக கடப்பான். பெரும்பழி ஒன்றை செய்வதற்கு முன் மானுடர் உளம்கிளர்கிறார்கள். அவர்களின் அகம் கொண்ட சலிப்பு முற்றாக விலகிவிடுகிறது. அதை அஞ்சித்தயங்கும் ஆழமே அவர்களை கொந்தளிக்கச் செய்து அதை அருநிகழ்வாக ஆக்கிவிடுகிறது. பெரும்பழிகளைச் செய்தவர்கள் தங்கள் கட்டுகளை மீறிவிட்டதாக, ஆற்றல்பெற்றுவிட்டதாக உணர்கிறார்கள். தெய்வங்களால் அறைபட்டு விழும்வரை தருக்கி நின்றிருக்கிறார்கள்.
“போர்க்களத்தில் முதல் அருங்கொலையை செய்த பின்னரே வெல்ல முடியாதவனாக இயலும். நேற்று பீமன் அதை செய்துவிட்டான்” என்று ஜயத்ரதன் சொன்னான். “தன் கைகளால் தன் குருதிமைந்தர் எண்பத்தைந்து பேரை தலையறைந்து கொன்றான். அக்குருதியை அள்ளி தன் முகத்தில் பூசி வெறியாடினான். எங்ஙனம் அவன் திரும்பி தன் பாடிவீட்டுக்குச் சென்றான் என்பதை என்னால் உய்த்துணர இயலவில்லை. குற்றஉணர்வும் தன்கசப்பும் கொண்டு தனிமையில் ஆழ்ந்து சென்றிருக்கலாம். அல்லது இதுநாள்வரை தன்னை கட்டி வைத்திருந்த பெருந்தளையொன்றிலிருந்து விடுபட்டதன் கொண்டாட்டத்தை உணர்ந்திருக்கலாம். அல்லது இவ்விரு உணர்வுகளுக்குமிடையே இடைவிடா ஊசலாட்டமாகி நேற்றிரவை கழித்திருக்கலாம்.” தன் எண்ணங்களே சொற்களென ஒலிப்பதைக் கண்டு திடுக்கிட்டான்.
“ஆனால் அவன் நெடுந்தொலைவு வந்துவிட்டான்” என ஜயத்ரதன் தொடர்ந்தான். “அர்ஜுனன் இன்னமும் கிளம்பவே இல்லை. ஆகவே சொட்டுவதற்கு முந்தைய துளி என ததும்பிக்கொண்டிருக்கிறான்.” புன்னகைத்து “ஆனால் இது பெருங்களம். இது கடல். துளிகளனைத்தையும் இழுத்து தன்னில் சேர்த்துக்கொள்வதே கடலின் பேராற்றல். அவன் மீறி எழுவான். ஏனென்றால் ஒவ்வொரு கணமும் அவன் அகம்சீண்டப்படுகிறான். சிறுத்து ஆணவம் அழிந்து மறைந்துகொண்டே இருக்கிறான். நான் நான் என அவனுள் நின்று திமிறும் ஒன்று அவ்வில்லை ஏந்தவேண்டும். அது நிகழ்ந்தே தீரும். எப்போது எங்கு என்பதே நம் வினா” என்றான்.
சுபாகு “நாம் எதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்?” என்றான். அதுவரை ஜயத்ரதனின் சொற்களில் ஒழுகிச்சென்றுகொண்டிருந்த அவை திகைப்புடன் கலைவுகொள்ள துச்சாதனன் “ஆம், நாம் செய்யவேண்டியதென்ன என்று பேசவந்தோம்” என்றான். “அவர்கள் இனிமேல் எந்த தனி வீரரையும் முன்னிறுத்தமாட்டார்கள். ஆகவே நாரைச்சூழ்கையோ அன்றி பிற அலகுள்ள வடிவுகளையோ தெரிவுசெய்ய மாட்டார்கள். பீஷ்மரை சூழவும் சேர்ந்து அழிக்கவும்தான் முயல்வார்கள். பெரும்பாலும் நண்டு அல்லது தேள்சூழ்கை… அதையே நான் எதிர்பார்க்கிறேன்.”
“ஆம், இன்று பீமனும் திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் அர்ஜுனனுக்கு இணையான வீரத்துடன் களத்தில் நின்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இணைந்தமையும் சூழ்கைக்கே வாய்ப்பு” என்றார் சல்யர். சகுனி மெல்லிய கனைப்போசை எழுப்ப அவர்கள் அனைவரும் திரும்பி அவரை நோக்கினர். “அவர்கள் பிறைச்சூழ்கை அமைக்கிறார்கள். ஒற்றுச்செய்தி நான் கிளம்பும்போது வந்தது” என்றார். அவை மெல்லிய ஓசையுடன் எளிதானது. “அவர்கள் பீஷ்ம பிதாமகரை முழுப் படையாலும் சூழ எண்ணுகிறார்கள். அவர்களின் பெருவீரர்கள் அனைவருமே இணைநிரையென படைமுகம் நிற்பார்கள்.” துரியோதனன் “ம்ம்” என முனகி தன் கைகளால் இருக்கையின் பிடியை நெருடினான்.
“அத்துடன் நேற்று அந்தியில் பீமனின் மைந்தன் கடோத்கஜன் வந்து அவர்களுடன் இணைந்திருக்கிறான். இன்றைய போரில் அவன் ஆற்றவிருப்பதென்ன என்பதை இனிமேல்தான் பார்க்கவிருக்கிறோம்” என்றான் ஜயத்ரதன். “வெறும் காட்டுமனிதன். இத்தகைய பெரும்போரை முன்னர் பார்த்திருக்க மாட்டான். இங்கே நிகழ்வதென்ன என்று அவன் உணர்ந்துகொள்வதற்குள் நெஞ்சை பிளந்துபோட இயலும்” என்றான் கிருதவர்மன். அஸ்வத்தாமன் “அல்ல யாதவரே, அவன் நாம் அனைவரும் கொண்டிருக்கும் அந்த உளத்தடைகள் எதுவும் இல்லாதவனாக இருக்கலாம். இயல்பிலேயே நாம் சற்று முன் பேசிய அனைத்து உளத்தடைகளையும் கடந்தவனாக இருக்கலாம்” என்றான்.
சல்யர் “ஆம், போர்க்களங்களில் அரக்கர்கள் பேரழிவை உருவாக்குகிறார்கள். அவர்களிடமிருந்து வெளிவரும் குருதி வெறிகொண்ட தொல்விலங்கொன்று எளிதில் வெல்லப்பட இயலாதது” என்றார். சலன் “நம்மிடமும் ஆற்றல் மிக்க அரக்கர்கள் இருக்கிறார்கள். அவனை எதிர்கொள்ள அலம்புஷனை அனுப்புவோம்” என்றான். ஜயத்ரதன் “அலம்புஷன் வெறும் அரக்கன். அவனிடமிருப்பது கண்மூடி எழும் காற்றுவிசை மட்டுமே. கடோத்கஜன் அரக்கனின் குருதியில் ஷத்ரியன் முளைத்தெழுந்தவன். அவனை எதிர்கொள்வது மேலும் கடினம்” என்றான். சகுனி “அவர்கள் விந்தையான திறன்கள் கொண்டவர்கள் என்று ஒற்றர்கள் சொல்கிறார்கள். இடும்பவனத்திலிருந்து எந்த ஊர்திகளும் இன்றி கிளம்பி ஓரிரவில் குருக்ஷேத்ரம் வந்திருக்கிறார்கள்” என்றார்.
அவையில் வியப்பு ஒலித்தது. சல்யர் “எப்படி வந்தனர்?” என்றார். “அவர்களால் பறக்கவியலும். பறக்கும் அரக்கர் என்றே அவர்கள் அழைக்கப்படுகிறார்கள்” என்றார் சகுனி. துர்மதன் “அவர்கள் மரங்களிலிருந்து மரங்களுக்கு தாவுவார்கள். குரங்குகள் பறப்பதுபோல காற்றில் செல்லும் அவர்களின் வடிவம் இன்னும் என் விழிகளில் உள்ளது” என்றான். “அவர்களின் உடல்களும் அதற்காகவே தெய்வங்களால் அருளப்பட்டவை. குரங்குபோல சிறிய எடையற்ற கால்கள் கொண்டவர்கள். நமக்கெல்லாம் உடலின் எடையில் பெரும்பகுதி இடையும் கீழும்தான் உள்ளது. அவர்களுக்கு அது உடலெடையின் ஐந்திலொன்று மட்டுமே.” துச்சாதனன் “இயல்புக்கு மாறான உடல்கொண்ட எவரும் படைகளில் குலைவையும் அழிவையும் உருவாக்குவார்கள்” என்றான். “நான் கடோத்கஜனுடன் மற்போரிட்டிருக்கிறேன். என்னால் அவன் தோள்களை நிலைகொண்ட பாறை என்று மட்டுமே உணர முடிந்தது.”
“நாம் இக்களத்தில் வெல்ல இயலாதென்பதையா பேசிக்கொண்டிருக்கிறோம்?” என்றான் ஜயத்ரதன் எரிச்சலுடன். “அனைத்தையும் பேசித்தான் ஆகவேண்டும்” என்று சீற்றத்துடன் துர்மதன் சொன்னான். “நாம் பருந்துச்சூழ்கையை அமைப்பது தவிர்க்க இயலாது. அவர்கள் நம்மை சூழ்ந்துகொள்ளாமலிருக்க என்ன செய்யவிருக்கிறோம்?” லட்சுமணன் மெல்ல அசைந்து “அவர்கள் அனைவரும் இணைந்து சூழ்ந்துகொண்டால் நாம் பிதாமகரை மட்டும் முன்னிறுத்துவது…” என்று மெல்ல தொடங்க துரோணர் “நாம் பருந்துச்சூழ்கையை முன்பு அமைத்ததுபோல் எளிமையாக அமைக்கவில்லை. இந்தச் சூழ்கையை போர்த்தருணத்திலேயே கலைத்து நண்டோ தேளோ நாகமோ ஆக மாற்றிக்கொள்ள நம்மால் இயலும். இம்முறை பருந்தின் சிறகுகளில் முட்களும் கால்களில் கூருகிர்களும் உள்ளன. அதன் அலகின் இருபுறமும் கால்கள் எப்போதுமிருக்கும்” என்றார். “அவர்கள் ஒற்றை வீரனை நம்பி இல்லை என்பதை உளம் கொள்வோம். நாம் ஒற்றை வீரரை முன் நிறுத்துகிறோம். அவர்கள் பலர் என்பதையும் மறக்காமலிருப்போம்” என்றார்.
“பிதாமகர் பீஷ்மர் வெல்ல முடியாத களவீரர் என்பதை எவரும் மறுக்கவில்லை. ஆனால் நம் தரப்பிலும் மாவீரர் பலர் உள்ளனர். சைந்தவர் இருக்கிறார். பால்ஹிகர் இருக்கிறார். நாம் ஏன் மீள மீள இச்சூழ்கையை அமைக்கிறோம்?” என்றார் சல்யர். “ஏனெனில் பிதாமகரை மட்டுமே அவர்கள் அஞ்சுகிறார்கள். பிதாமகரிடம் மட்டுமே அர்ஜுனனின் வில் ஒருகணமேனும் தாழ்கிறது. அவரை நிறுத்தியே நாம் இப்போரை முன்னெடுக்க இயலும்” என்றார் துரோணர். சல்யர் மேற்கொண்டு பேசவிரும்பவில்லை என்பதுபோல் கையசைத்தார்.
பூரிசிரவஸ் “ஒரு படைவீரருக்குப் பின் மொத்தப் படையும் தன் ஆற்றலை செலுத்துவதற்குரியது பறவைச்சூழ்கைகள். பிதாமகரை நேற்று பருந்தின் அலகுமுனையென நிறுத்தினோம். இன்று அலகுக்குக் காவலென உகிர்களாக ஜயத்ரதரும் பால்ஹிகரும் தாங்களும் நானும் நின்றிருப்போம். கூர்கொண்டு புகுந்து பாண்டவப் படைகளுக்குள் சென்று பிளந்து கிழித்து அழிப்போம். இன்றைய போரில் பாண்டவப் படை மூன்றிலொன்றாக குறையவேண்டும். அவர்கள் எண்ணி பெருமிதம் கொள்ளும் சிலரேனும் களம்பட்டாக வேண்டும்” என்றான்.
துரியோதனன் “இன்று நாம் நிகர்நிலையில் நின்றிருக்கிறோம். முதல்நாள் போர் நமக்கு உகந்ததாக முடிந்தது. இவ்விரண்டாம் நாள் போர் அவர்களுக்கு வெற்றியாகியது. மூன்றாம் நாள் போரில் நாம் வென்றாக வேண்டும். இன்று நம்மை பார்த்தனோ பாஞ்சாலனோ ஊடுருவுவான் என்றால் நமது படைகளின் உளவிசை அழியும். நாம் எழ இயலாது” என்றான். சகுனி “மருகனே, நேற்று நம்மை ஊடுருவி துண்டுபடுத்த பீமனால் இயன்றதென்பது உண்மை. ஆனால் பீஷ்மர் கொன்று குவித்த பாஞ்சாலர்களின் எண்ணிக்கையை இன்று காலைதான் அறிந்தேன். அவர்கள் படை எண்ணியிரா அழிவுகளை கண்டுவிட்டது. இன்றும் பிதாமகரின் விசை குறையாது தொடருமென்றால் பாண்டவப் படையில் பெரும்பகுதி அழிந்துவிட்டிருக்கும்” என்றார்.
வெளியே கலைவோசை கேட்டது. அணுக்கக் காவலன் உள்நுழைந்து “பிதாமகர் பீஷ்மர்!” என்றான். அவையினரும் துரியோதனனும் எழுந்து கைகூப்பியபடி நிற்க வணங்கியபடி பீஷ்மர் உள்ளே வந்தார். எவரையும் பார்க்காமல் துரோணரின் அருகிலிருந்த பீடத்தில் சென்று அமர்ந்து கால்களை மடித்து வைத்துக்கொண்டார். கைகள் தாடியை நீவத் தொடங்கின. விழிகள் தழைந்திருந்தன. அவருடைய தாடி குருதிச்செம்மை கொண்டு முடியிழைகள் தடித்து பொற்கம்பிச் சுருள்கள்போல் இருந்தது. தோளில் கிடந்த குழலும் செந்நிறச் சடைத்திரிகளாகத் தெரிந்தது.
அவை பீஷ்மருக்கு வாழ்த்தொலி எழுப்பி வணங்கி மீண்டும் அமர்ந்தது. பூரிசிரவஸ் தலைவணங்கி “பிதாமகரே, இன்றும் பருந்துச்சூழ்கை அமைத்துள்ளோம். அலகென தாங்கள் நின்றிருக்க வேண்டுமென்றும் பருந்து தன் அலகால் பாண்டவப் படைகளை கிழித்து துண்டுபடுத்தி அளிக்கவேண்டுமென்றும் ஆசிரியர் துரோணர் விழைகிறார். அவ்வழியே பருந்தின் கால் உட்புகும்” என்றான். “ஆகுக!” என்று பீஷ்மர் எந்த உணர்வும் இன்றி சொன்னார். ஜயத்ரதன் “பிதாமகர் இன்னும் தன் முழு உருவை கொண்டு போரிடத் தயங்குகிறார் என்று அவையிலோர் எண்ணம் உள்ளது” என்றான்.
பீஷ்மர் சினத்துடன் “எவருக்கு அவ்வெண்ணம்?” என்றார். ஜயத்ரதன் “எனக்கு உள்ளதென்றே வைத்துக்கொள்ளுங்கள்” என்றான். “அறிவிலி” என்றபடி பீஷ்மர் கசப்புடன் முகம் திரும்பிக்கொண்டார். “நான் அறிவிலி என்பது இன்னொரு பக்கம் அமைக! பிதாமகரே, இந்த இரு நாட்களும் தாங்கள் ஆற்றல்மிக்க படைக்கருவிகளுடன் பொருதினீர்கள், பேரழிவை விளைவித்தீர்கள், ஐயமில்லை. ஆனால் நீங்கள் பயின்ற அரிய அம்புகள் எவையும் நேற்றும் முன்னாளும் களத்தில் எழவில்லை. உங்கள் நீண்ட வாழ்நாள் முழுக்க தேடியலைந்து ஈட்டிய அம்புகளெல்லாம் எங்கே? அனலெழுப்பவும் இடிமின்னல் உருவாக்கவும் ஒலியால் செவிதுளைக்கவும் விழியும் உளமும் மயங்கச்செய்யவும் ஆற்றல்கொண்ட அம்புகள் உங்களிடம் உள்ளன என்று கேட்டிருக்கிறேன்” என்றான்.
“அவையெல்லாம் வெறும் பேச்சுகள். அம்புவித்தைகள் பல உண்டு. அவை இத்தகைய அறப்போருக்குரியவை அல்ல. மாயங்கள் கோழைகளுக்குரியவை” என்றார் பீஷ்மர். துரியோதனன் பற்கள் நெரிபட, ஆனால் முகம் சிரிப்பென நீள “அறப்போரா? அது எங்கு நடக்கிறது, பிதாமகரே? இன்னும் அச்சொற்களை என் முன் உரைக்காதீர்கள்” என்றான். இரு கைகளாலும் பீடத்தின் கைப்பிடியை அறைந்து “என் இளமைந்தர் தலையறைந்து விழுவதை என் கண்ணால் கண்டேன். அவர்களின் குருதியை முகத்தில் பூசி நின்றாடிய வெறியனை நேற்றிரவெல்லாம் என் கனவில் கண்டு விழித்தெழுந்துகொண்டிருந்தேன். மதுவருந்தி மயக்கமருந்து உண்டு அவன் முகத்தை மறைக்க முயன்றேன்” என்றான். அவன் உளவிசையால் எழுந்துவிட்டான். “எது அறம்? இன்னும் நீங்கள் சொற்களால் உங்களை ஏன் தளையிட்டுக் கொள்கிறீர்கள்?” என்றான்.
பீஷ்மர் “நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும். உன் அவையில்தான் அந்தணர் வந்து ஆணையிட்டனர், நஞ்சும் நீரும் விழிசெவிச் சூழ்ச்சிகளும் உளமாயங்களும் இப்போரில் இடம்பெறலாகாது என்று. ஆம் என்று சொல்லளித்தவன் நீ” என்றார். “ஆம், ஆனால் அச்சொற்கள் அனைத்தும் நேற்றே இறந்தன. என் குடி மைந்தர் இறந்தபோதே அனைத்து நெறிகளும் அழிந்தன. இனி எதற்கும் நான் கட்டுப்பட்டவன் அல்ல. அந்தணர் அல்ல, தேவர்களும் கந்தர்வர்களும் அல்ல, புடவியாளும் மூன்று தெய்வங்களும் எழுந்து வந்தாலும் அவர்களிடம் சொல்ல எனக்கு இனி ஒன்றே உள்ளது. இனி எனக்கு நெறிகள் இல்லை. நஞ்செனில் நஞ்சு, நெருப்பெனில் நெருப்பு ,வென்று இக்களம்விட்டுச் செல்வதொன்றே என் இலக்கு” என்றான்.
பீஷ்மர் “நான் என் நெறிகளை நானே வகுத்துக்கொண்டவன்” என்றார். “அதைத்தான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நெறியென்ற பேரில் உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்கிறீர்கள். ஆகவே அவர்கள் எழவும் நம் மைந்தரை நம் கண்முன்னில் தலையுடைத்துக் கொல்லவும் வழிவகுக்கிறீர்கள். பிதாமகரே, நேற்று நம் களத்தில் நிகழ்ந்த அருங்கொலைகளுக்கு பொறுப்பேற்க வேண்டியவர் நீங்கள் மட்டுமே” என்றான். துரோணர் “என்ன பேச்சு இது?” என்றார். “பிதாமகர் அல்ல, இங்கே அவையமர்ந்திருப்பவர் நம் முதன்மை வீரர்.”
பீஷ்மர் அவரை கையமர்த்திவிட்டு “ஆம், நானே பொறுப்பு. அதை மேலும் மேலும் உணர்கிறேன். இவ்வழிவெல்லாம் என்னால்தான். ஆம், மெய்தான்” என்றார். அவர் குரலில் எவ்வுணர்வும் இருக்கவில்லை. “இப்போரில் நெறிநின்றமைக்காக பழி கொள்கிறேன் எனில் அவ்வாறே ஆகுக! நெறிக்குமேல் எழுவது ஷத்ரியனின் வீரம் என்று எண்ணியிருந்தேன் எனில் இப்போரே நிகழ்ந்திருக்காது. என் குருதிவழியினர் மோதி களம்படும் காட்சியைக் கண்டு இரவெலாம் துயிலழிந்து விண்மீன்களை நோக்கி வெறுமைகொண்டு நிற்கவும் நேரிட்டிருக்காது.”
கைகளைத் தூக்கி ஏதோ சொல்லவந்து சொல்சிக்காது உழன்று மீண்டு “இந்த மணிமுடி என்னிடம் வந்தபோது சௌனகரின் தந்தை காதரர் சொன்னார், ஷத்ரியனின் கடன் முடிகொள்வதே என்று. நல்லாட்சியே அனைத்தறம் என்று. எளிய மானுடரின் நெறிகளால் ஷத்ரியனின் தனியறத்தை மீறவேண்டாம் என்று. நான் என் தந்தைக்கும் தாய்க்கும் அளித்த சொல்லை கடக்கவில்லை. நான் காத்து நின்ற நெறியால்தான் இவையனைத்தும் நிகழ்கின்றன. நன்று, இத்தனை நாள் காத்த அந்நெறியை இனியும் காத்து நிற்கிறேன். அதன்பொருட்டு களம்படுவேன் என்றால் அதுவும் ஆகுக!” என்றார்.
சல்யர் “நாம் இவற்றைப் பற்றியெல்லாம் பேசி பொழுது கழிக்க வேண்டியதில்லை. இன்றைய படைசூழ்கையை முடிவு செய்வோம்” என்றார். “அதில் பேச ஒன்றுமில்லை. அந்த முடிவு எடுக்கப்பட்டுவிட்டது” என்று துரியோதனன் சொன்னான். “இன்னும் முடிவெடுக்க வேண்டியது பிதாமகர் பீஷ்மர் தன் அனைத்துத் தடைகளையும் கடந்து முழு விசையுடன் போரிடுவாரா என்பதொன்றைத்தான்.” பீஷ்மர் “இல்லை, எனது நெறிகளுக்குள் நின்றே போரிடுவேன்” என்றார். துரியோதனன் மேலும் பேசுவதற்குள் பூரிசிரவஸ் “தாங்கள் கொள்ளும் முழு விசை எங்களுக்கு உதவட்டும், பிதாமகரே. தங்களை நம்பி களம் வருகிறோம். எங்களுக்கு வெற்றி ஈட்டித் தருக!” என்றான். “நான் போரிடுகிறேன். வெற்றியும் தோல்வியும் தெய்வங்களின் முடிவு” என்றார் பீஷ்மர். அவர் மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தார்.
பூரிசிரவஸ் “இதுவே அவையின் ஆணை. இந்த அவையை இப்போதே முடிவு செய்வோம். இன்னும் அரைநாழிகைக்குள் புலரவிருக்கிறது” என்றான். பூரிசிரவஸ் கைகாட்ட அவை நிறைவை அறிவிக்கும்பொருட்டு அமைச்சர் எழுந்தார். அவையினர் தங்கள் வாள்களையும் வேல்களையும் தூக்கி வாழ்த்தொலி எழுப்பினர். துரியோதனன் எழுந்து தலைவணங்கி அவையிலிருந்து வெளியே சென்றான். பீஷ்மர் எழுந்துகொள்ள துரோணர் அவர் அருகே சென்று தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டு உடன் நடந்தார். லட்சுமணன் பெருமூச்சுடன் அவையை நோக்கி நின்றான். அவை மூலையிலிருந்து அவனை நோக்கி வந்த துருமசேனன் அவன் அருகே நின்றான். அவனை நோக்கிவிட்டு லட்சுமணன் வெளியே நடந்தான்.